முதல் வாசகம்

இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 8: 4-6,9-12

வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்: `நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வு நாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக் கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக் காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்' என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா? தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: ``அந்நாளில் நண்பகலில் கதிரவனை மறையச் செய்து பட்டப்பகலில் உலகை இருள் சூழச் செய்வேன். உங்கள் திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்; எல்லாரும் இடுப்பில் சாக்கு உடை உடுத்தவும், அனைவரின் தலையும் மழிக்கப்படவும் செய்வேன். ஒரே பிள்ளையைப் பறிகொடுத்தோர் புலம்புவது போல நீங்களும் புலம்புமாறு செய்வேன்; அதன் முடிவு கசப்பு மிக்க நாளாய் இருக்கும்.'' தலைவராகிய ஆண்டவர் கூறுகின்றார்: ``இதோ! நாள்கள் வரப் போகின்றன! அப்போது நாட்டினுள் பஞ்சத்தை அனுப்புவேன்; அது உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது. ஒரு கடல் முதல் மறு கடல் வரை, வடதிசை முதல் கீழ்த்திசை வரை தேடிச் சென்று அங்குமிங்கும் தள்ளாடி அலைந்து ஆண்டவரின் வாக்கைத் தேடுவார்கள். ஆனால், அதைக் கண்டடைய மாட்டார்கள்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 119: 2,10. 20,30. 40,131 (பல்லவி: மத் 4: 4)

பல்லவி: மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, கடவுளின் சொல்லாலும் உயிர் வாழ்வர்.

2 அவர் தந்த ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்;
முழுமனத்தோடு அவரைத் தேடுவோர் பேறுபெற்றோர்.
10 முழுமனத்தோடு நான் உம்மைத் தேடுகின்றேன்;
உம் கட்டளைகளை விட்டு என்னை விலக விடாதேயும். -பல்லவி

20 எந்நேரமும் உம் நீதிநெறிகளை முன்னிட்டு என் உள்ளம் ஏங்கி உருகுகின்றது.
30 உண்மையின் பாதையை நான் தேர்ந்துகொண்டேன்;
உம் நீதிநெறிகளை என் கண்முன் நிறுத்தியுள்ளேன். -பல்லவி

40 உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்;
நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும்.
131 வாயை `ஆ'வெனத் திறக்கின்றேன்; பெருமூச்சு விடுகின்றேன்;
ஏனெனில், உம் கட்டளைகளுக்காக ஏங்குகின்றேன். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்து இருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மத்தேயு 9:9-13

ஆண்டின் பொதுக்காலம் 13 வாரம் வெள்ளிக்கிழமை


நற்செய்தி வாசகம்

பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 9-13

அக்காலத்தில் மத்தேயு என்பவர் சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்ததை இயேசு கண்டார்; அவரிடம், ``என்னைப் பின்பற்றி வா'' என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், ``உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?'' என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், ``நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

ஆமோஸ் 8: 4 – 6, 9 – 12
நீதியுள்ளவர்களாக வாழ்வோம்

ஓய்வுநாள் எப்போது நிறைவுறும்? என்று எதிர்பார்க்கிறவர்களை ஆமோஸ் இறைவாக்கினர் கடுமையாகச் சாடுகிறார், "கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடியும்?". ஓய்வுநாள் என்பது வெறுமனே வழிபாட்டிற்காக மட்டும் வைத்திருக்கவில்லை. மாறாக, அது சமுதாய நீதி சார்ந்து சிந்தித்தன் வாயிலாக ஏற்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை. அன்று, வீட்டு உரிமையாளருக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் பணி செய்யக்கூடிய பணியாளர்கள், விலங்குகள், அடிமைகள் என அனைவருக்கும் ஓய்வு தரக்கூடிய நாளாக இருந்தது,

இணைச்சட்டம் 5: 14 " ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை, மற்றெல்லாக்கால்நடைகளும், உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பது போல், உன் அடிமையும், அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்". ஆனால், வியாபாரிகள் எப்போது ஓய்வுநாள் முடியும்? என்று காத்திருந்தனர். அப்போதுதான், அவர்கள் தங்கள் பணியாளர்களையும், அடிமைகளையும், விலங்குகளையும் வேலை கொடுத்து வருந்தச் செய்ய முடியும். அவர்களைச் சுரண்டிப் பிழைக்க முடியும். தங்கள் ஏமாற்று வியாபாரத்தை தொடர்ந்து நடத்த முடியும் என்று ஓய்வுநாள் முடிவிற்காக காத்துக் கொண்டிருந்தனர். கோதுமைப் பதர்களை ஏழைகளுக்காக விட்டு விட வேண்டும் என்று சட்டம் சொன்னது. ஆனால், அதையும் விட்டு வைப்பவர் யாரும் கிடையாது. அதனையும், நிலத்தின் உரிமையாளர்கள் விற்று பொருள் சம்பாதிக்க பேராசை கொண்டனர். இப்படியாக, சட்டம் தருகிற உண்மையான பொருளை உணர்ந்து கொள்ளாமல், ஏழைகளையும், எளியவர்களையும் சட்டத்தின் துணைகொண்டு, சுரண்டிப்பிழைக்கிறவர்களுக்கு எதிராக, ஆமோஸ் இறைவாக்கினர் வெகுண்டு எழுகிறார்.

நம்முடைய வாழ்வில் நாமும் கூட, நமக்கு கீழாக இருப்பவர்களை சுரண்டிப் பிழைக்கிறவர்களாக இருக்கிறோம். அவர்களை மனிதர்களாக நாம் மதிப்பதற்கு தவறிவிடுகிறோம். அவர்களை ஒரு பொருட்டாக எண்ணாதவர்களாக இருக்கிறோம். எப்போதும், இறைவனுடைய பார்வையில் நல்லவர்களாக, உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டிய அருளுக்காக மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

நற்செய்தியாளர் மத்தேயு

மத்தேயுவின் இயற்பெயர் லேவி என்று அழைக்கப்படுகிறது. இதனுடைய அர்த்தம் “சேர்க்கை” என்பதாகும். எபிரேய மொழியில் மத்தேயு என்றால் “கடவுளின் கொடை“ என்று அர்த்தம் சொல்கிறார்கள். திருத்தூதர்களில் ஒருவரான அந்திரேயா வழியாக, இவர் அறிமுகமாகிறார். மற்ற திருத்தூதர்கள் சாதாரணமானவர்கள். ஆனால், அவர்களை விட செல்வத்திலும், அதிகாரத்திலும் உயா்ந்த வரிவசூலிக்கக்கூடியவராக மத்தேயு இருக்கிறார். கப்பாநாகும் அருகில் இருக்கிற கலிலேயா கடற்கரை அருகில் தான், வரிவசூலித்துக்கொண்டிருந்தார். உரோமையர்களுக்காகப் பணிசெய்து கொண்டிருந்ததாலும், வரிவசூலிக்கக்கூடிய தொழிலைச் செய்து வந்ததாலும், மக்களின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளானவர். ஆனாலும், இயேசுவின் அழைப்பை ஏற்று, அந்த மக்களுக்கே பணிபுரிவதற்கு முன்வருகிறார்.

இவர் எத்தியோப்பியா, பெர்ஷியா, பார்த்தியா, எகிப்து நாடுகளுக்குச் சென்று, வேதம் போதித்ததாக பாரம்பரியம் கூறுகிறது. எகிப்து நாட்டில் அரசாண்ட அரசனின் மகனை உயிருடன் எழுப்பினார். தொழுநோயால் தாக்கப்பட்ட அந்த நாட்டு இளவரசி இபிஜினாவையும் குணப்படுத்தினார். மத்தேயு தனது நற்செய்தியை யூதர்களுக்கு எழுதுகிறார். பழைய ஏற்பாடு நூலை முழுமையாகக் கற்றுக்கொண்டதை, அவர் எழுதுகிற மேற்கோள்களிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். மத்தேயுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பண்பு, அவரது தாழ்ச்சி. தன்னுடைய நற்செய்தி நூலில் தன்னைப்பற்றிய சிறிய முன்னுரையை மட்டுமே தருகிறார். தன்னைப்புகழ்ந்தோ, போற்றியோ அவர் எங்கேயும் எழுதியிருக்கவில்லை. மாறாக, திருச்சபையின் தலைவராக இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட, பேதுருவிற்கு அதிக முக்கியத்துவத்தை அவர் கொடுக்கிறார். இது மத்தேயுவின் தாழ்ச்சியை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

மத்தேயுவைப்போல நாமும் தாழ்ச்சி நிறைந்தவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். நம்மைப்பற்றி மற்றவர்களிடம் உயர்வாக தம்பட்டம் அடிப்பதைக் குறைத்து, மற்றவர்களிடம் இருக்கக்கூடிய நல்ல பண்புகளை, நாம் உற்சாகப்படுத்துவோம். நாமும் அவரைப்போல தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு நாம் வாழப்பழகுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசு தரும் வாழ்வு

எங்கே இயேசு, பாவிகளோடும், வரிதண்டுபவர்களோடும் விருந்து உண்கிறார்? யாருடைய வீட்டில் இந்த விருந்து நடைபெற்றது? லூக்கா நற்செய்தியாளர் இந்த விருந்து, மத்தேயுவின் வீட்டில் நடைபெற்றதாக குறிப்பிடுகிறார். ஆனால், மத்தேயு மற்றும் மாற்கு, இந்த விருந்து இயேசுவின் இல்லத்திலோ அல்லது அவர் தங்கியிருந்த வீட்டிலோ நடைபெற்றிருக்கலாம் என்று சொல்கிறார்கள். ஒருவேளை, அவர்கள் சொல்வது போல், இயேசுவின் இல்லத்தில் என்றால், அது கூடுதலான சிந்தனையையும் நமக்குத்தருகிறது.

“அழைத்தல்“ என்கிற வார்த்தைக்கான பொருளாக, விருந்தினர்களை இல்லத்திற்கு அழைப்பது என்பது பயன்படுத்தப்படுகிறது. இயேசு சொல்கிறார்: நீங்கள் விருந்தினர்களாக தற்புகழ்ச்சி உள்ளவர்களையும், அதிகாரவர்க்கத்தினரையும் அழைக்கிறீர்கள். நானோ, தங்கள் குற்றங்களை நினைத்து வருந்துகிறவர்களையும், திருந்துவதற்கு வாய்ப்பிற்காக காத்திருக்கிறவர்களையும் அழைக்கிறேன். ஆம், இயேசு மற்றவர்களை தீர்ப்பிடுவதற்காக அல்ல. மாறாக, அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களை நல்வழி செல்ல, வாய்ப்பு வழங்கக்கூடியவராக இருக்கிறார். அதற்காகத்தான் அவர் வந்திருக்கிறார்.

இயேசுவை உண்மையாக நாம் தேட வேண்டும். உண்மையான உள்ளத்தை வெகுஎளிதாக இயேசு கண்டறிந்துவிடுகிறார். அவர் நாம் திருந்தி வாழ்வதற்கு பல வாய்ப்புகளை வழங்குவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார். அந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி மத்தேயு திருந்தி வாழ்ந்ததுபோல, நாமும் நமது பாவ வாழ்வை விட்டு, திருந்தி வாழ முயற்சி எடுப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

இழப்பும், ஆதாயமும்

ஏரோது அந்திபாஸ் அரசருடைய எல்கையில் தான் கப்பர்நாகும் இருந்தது. மத்தேயு ஏரோதுவின் அரச அலுவலராய் இருந்தார். அவர் நேரடியாக உரோமை அரசின் அலுவலராய் இல்லை. கப்பா்நாகும் அமைந்திருந்த இடம், பல இடங்களிலிருந்து வந்த சாலைகள், சேரும் இடமாய் அமைந்திருந்தது. எனவே, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல வேண்டுமென்றால், கட்டாயம் கப்பார்நாகும் வந்துதான் செல்ல வேண்டும். அப்படி பொருட்களை விற்க வரும்போதும், தொழிலின் பொருட்டு பொருட்களை ஏற்றிவரும்போதும், சுங்க வரி கட்ட வேண்டும். அந்தப் பணியைத்தான் மத்தேயு செய்து வந்தார்.

மத்தேயு இதற்கு முன் இயேசுவை சந்தித்து இருக்கவில்லை. ஆனால், நிச்சயம் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்க வேண்டும். அதிகாரத்தோடு தீய ஆவிகளையும் அடக்குவதற்கு வல்லமை பெற்றிருக்கிற இயேசுவின் புகழ் நிச்சயம் அவர் அறிந்த ஒன்றாகத்தான் இருந்திருக்க வேண்டும். இதுவரை பாவிகளையும், வரிவசூலிக்கிறவர்களையும் ஒதுக்கிவந்த போதகர்கள் மத்தியில், இயேசுவின் போதனை மத்தேயுவிற்கு புதிதான ஒன்றாக அமைந்திருக்க வேண்டும். எனவே தான், அவர் இயேசுவைப் பார்ப்பதற்கு ஆவல் கொள்கிறார். இயேசுவைப் பின்பற்றியதால் அவருக்கு ஆதாயமும் இருந்தது. இழப்பும் இருந்தது. இயேசுவைப்பின்பற்றியதால் அவர் தனது பதவியை, வருமானத்தை இழந்தார். ஆனால் மிகப்பெரிய மதிப்பைப் பெற்றுக்கொண்டார். தனது வசதி, வாய்பை, பாதுகாப்பை இழந்தார். ஆனால், சவாலான, பெயர் நிலைத்து நிற்கக்கூடிய வாழ்வைப்பெற்றுக்கொண்டார். இறுதியாக இந்த உலக இன்பத்தை இழந்தார். ஆனால், முடிவில்லாத நிலையான ஆனந்தத்தைச் சுவைத்தார்.

மத்தேயுவைப் போல நாமும் இழப்பதற்கு தயாராக இருக்கிறோமா? ஒன்றை இழந்தால் தான், மற்றொன்றைப் பெற முடியும் என்பது நமது பழமொழி. இயேசுவைப் பெற வேண்டுமென்றால், இந்த உலகம் காட்டுகிற நியதியை, ஆதாயத்தை இழந்துதான் நாம் பெற வேண்டும். அதற்கு நாம் தயாராக இருக்கிறோமா? சிந்திப்போம், வாழ்ந்து காட்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அழைத்தலும், அறிவிப்பும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று நற்செய்தியாளரும், திருத்தூதருமான புனித மத்தேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய அழைப்பையும், நற்செய்தி அறிவிப்பையும் இன்று நினைவுகூர்ந்து அவருக்காக இறைவனைப் போற்றுவோம். மத்தேயு சுங்கச் சாவடியில் வரி தண்டுபவராகப் பணியாற்றியவர். எனவே, பாவி என்று கருதப்பட்டவர். இருப்பினும், அவரையும் இயேசு தம் சீடருள் ஒருவராக அன்புடன் தேர்ந்துகொண்டார். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்று அறிக்கையிட்டார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மத்தேயு, அழைப்பிற்குத் தகுதியுள்ளவராக வாழ்ந்தார். நற்செய்தியை வார்த்தையாலும், எழுத்தாலும் அறிவித்தார். இன்றும் அவர் எழுதிய நற்செய்தி நமக்கெல்லாம் ஊக்க மருந்தாகத் திகழ்கிறது.

நமது அழைப்பும், அறிவிப்பும் பற்றிச் சிந்திப்போம். நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மை அழைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அழைப்பை ஏற்று நற்செய்தியாளர்களாய் வாழ்வோம். நமது வாழ்வே ஒரு நடமாடும் நற்செய்தி நூலாக அமையட்டும். நம்மையும், நமது பணியையும் பார்க்கிறவர்கள் இயேசுவின் மதிப்பீடுகளை நம்மிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும். இது நம்மேல் சுமத்தப்பட்ட கடமை என்று ஏற்றுக்கொள்வோமா?

மன்றாடுவோம்: நற்செய்தியின் நாயகனே இறைவா, சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவை நீர் அழைத்ததுபோலவே, தகுதியற்ற என்னையும் உமது சீடனாக அழைத்ததற்காக நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, என் வாழ்வையும், பணியையும் ஆசிர்வதியும். அதனால், பிறர் நற்செய்தி மதிப்பீடுகளை என்னிடமிருந்து கற்றுக்கொள்வார்களாக. இதனால், நீர் மாட்சிமை அடைவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

இறைவார்த்தையை கடைப்பிடிப்போம்

இறைவார்த்தையை நாம் ஏன் கடைப்பிடிக்க வேண்டும்? என்பதற்கு விடையாக வருவதுதான் இன்றைய நற்செய்தி பகுதி. இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசுவின் வார்த்தை மத்தேயுவுக்கு தரப்படுகிறது. அந்த வார்த்தையை அவர் அப்படியே ஏற்று கடைப்பிடித்ததால், அவர் வாழ்வின் நிறைவைப்பெற்றுக்கொண்டார். இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பதால் நமக்கு கிடைப்பவை என்ன? யோவான் 15: 7 ல், வாசிக்கிறோம். “நீங்கள் என்னுள்ளும், என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால், நீங்கள் விரும்பிக்கேட்பதெல்லாம் நடக்கும்”. இந்த உலகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்ற நமக்கு எத்தனையோ, தேவைகள் இருக்கிறது. நாம் விரும்புகிற செயல்கள் பல இருக்கிறது. நம்முடைய தேவைகளையும், விருப்பங்களையும் நிறைவேற்ற, ஆண்டவருடைய வார்த்தைகள் நமக்குள்ளே, நிலைத்திருக்கும்போது, நாம் கேட்பதெல்லாம் கிடைப்பதாக, நற்செய்தி கூறுகிறது.

இறைவார்த்தையைக்கேட்டு, அதன்படி செயல்படும்போது, இயேசுவினுடைய சகோதர, சகோதரிகளாக மாறுகிறோம். “இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுகிறவர்களே, என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள்”. (லூக்கா8:21). இயேசுவுக்கு, சொந்தமான பிள்ளைகளாக மாற வேண்டுமென்றால், இறைவார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். இந்த உலகத்திலே உள்ள, அனைத்து மனிதர்களும், கடவுளால் படைக்கப்பெற்றவர்கள். கடவுளின் பிள்ளைகள். அவருடைய சாயலைத்தாங்கி இருப்பவர்கள். ஆனால், தொடக்க மனிதன் செய்த தவறினால், நம்முடைய அருளை, இறைவனுடைய பிள்ளைகள் என்கிற மாண்பை இழந்து விட்டோம். அத்தகைய மாண்பை மீண்டும் பெற, கடவுளின் பிள்ளைகளாக மாற, இயேசுவின் சகோதர, சகோதரிகளாக மாற, இறைவார்த்தையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

“இறைவார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடிப்போர் இன்னும், அதிகம் பேறுபெற்றோர்”. (லூக்கா11: 28) இறைவன் முன்னிலையில், நம்மை பேறுபெற்ற மக்களாக, நாம் ஆண்டவருடைய வார்த்தையை கடைப்பிடிக்கும்போது, மாறுகிறோம். இறைவனுடைய அன்புக்குழந்தைகளாக, இறைவன் விரும்பும் பிள்ளைகளாக, இறைவனுடைய ஆசீரைப் பெறுகின்ற மக்களாக மாறுகிறோம். ஆக, இறைவனுடைய வார்த்தையை நாம் கடைப்பிடிக்கும்போது, நாம் விரும்பிக்கேட்பதெல்லாம் நடக்கிறது. இயேசுவினுடைய சகோதரர்களாக, சகோதரிகளாக மாறுகிறோம். இறைவனுடைய பார்வையில் பேறுபெற்ற மக்களாகிறோம். வாழ்வு தரும் ஆவியை, நம்முள் பெற்றவர்களாக, நற்செய்திக்கு சாட்சி வாழ்வை வாழ ஆரம்பிக்கிறோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

“கற்றுக்கொள்ளுங்கள்”!

இயேசு ஒரு நல்லாசிரியர். அவர் விண்ணரசின் பாடங்கள் பலவற்றையும் தம் சீடர்களுக்குக் கற்றுத் தந்தார். அவரிடமிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள அழைப்பும் விடுத்தார். இளைப்பாறுதலைப் பற்றிப் பேசும்போது,
“என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்” (மத் 11: 29) என்று சொன்னவர், இன்றைய வாசகத்தில் “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்” என்கிறார்.

காரணம், இந்த செய்தி அவர்களுக்குப் புதியதல்ல. இறைவாக்கினர் ஓசேயா நூலில் அவர்கள் கற்றறிந்த செய்திதான். ஓசேயா வழியாக இறைவன் “உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன். எரிபலிகளைவிட கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்” (ஓசே 6:6) என்று மொழிந்திருந்தார். ஆனால், பரிசேயர் இந்த உண்மையை உள்வாங்கவில்லை. எனவேதான், “உங்கள் மறைநூல் அறிவைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள், மீண்டும் கற்றுக்கொள்ளுங்கள்” எனச் சொல்லாமல் சொல்கிறார் இயேசு.

நமக்கு இதில் ஒரு பாடம் இருக்கிறது. நாமும் திருநூல், மறைக்கல்வி நூல்களைக் கற்றிருக்கிறோம். ஆனால், அவற்றின் அடிநாதமான மானிட நேயத்தை, பரிவை, இரக்கத்தை நாம் உள்வாங்கியிருக்கிறோமா? அல்லது மேலோட்டமான செய்திகளை மட்டுமே பெற்றிருக்கிறோமா? என ஆய்வு செய்யப் பணிக்கிறார் இயேசு. இறைச் செய்தியின் மையம் பரிவு, தீர்ப்பிடாத் தன்மை, இரக்கம், புரிந்துகொள்ளல் என்பதைப் “நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்” என்று நம்மிடமும் இயேசு இன்று சொல்கிறார்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் கற்றுத் தந்த இந்தப் பாடத்தை மறவாமல், பாவிகள், அறிவிலிகள், தாழ்த்தப்பட்டோர், பிற சாதியினர் என எவரையும் ஒதுக்காமல் அனைவரையும் ஏற்று அன்பு செய்யும் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும்,. ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சம் ! (முதல் வாசகம்)

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அநீத வழியில் பணம் ஈட்டுபவர்கள், வறியோரை ஒடுக்குபவர்கள் ஆகியோருக்கு எதிராக இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக ஆண்டவர் இன்று இறைவாக்கு உரைக்கின்றார். ‘உங்களது திருவிழாக்களை அழுகையாகவும், பாடல்களை எல்லாம் புலம்பலாகவும் மாற்றுவேன்’ என்கிறார் ஆண்டவர். அது மட்டுமல்ல, நாட்டில் பெரிய வறட்சி ஒன்று உருவாகும். அது என்னவென்றால், ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சம். ஆண்டவரின் வாக்கை எங்கு தேடினாலும், கிடைக்காத பஞ்சம்.

எனவே, இப்போதே நாம் இறைவாக்கின் மதிப்பை உணர்ந்து, அதற்கு செவி சாய்ப்போம். இறைமொழியை நம் வாழ்வாக்குவோம்.

மன்றாடுவோம்: இயேசுவே,  அழைத்தலின் நாயகனே, உம்மைப் போற்றுகிறோம். உமது வாழ்வு தரும் வார்த்தைகள் எங்களுக்குக் கிடைக்கின்ற இந்த நாள்களில் நாங்கள் வாய்ப்புள்ளபோதே இறைவாக்கை சுவைத்துப் பார்ப்போமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

அழைத்தலும், அறிவிப்பும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று நற்செய்தியாளரும், திருத்துhதருமான புனித மத்தேயுவின் விழாவைக் கொண்டாடுகிறோம். அவருடைய அழைப்பையும், நற்செய்தி அறிவிப்பையும் இன்று நினைவுகூர்ந்து அவருக்காக இறைவனைப் போற்றுவோம். மத்தேயு சுங்கச் சாவடியில் வரி தண்டுபவராகப் பணியாற்றியவர். எனவே, பாவி என்று கருதப்பட்டவர். இருப்பினும், அவரையும் இயேசு தம் சீடருள் ஒருவராக அன்புடன் தேர்ந்துகொண்டார். நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் என்று அறிக்கையிட்டார். அந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட மத்தேயு, அழைப்பிற்குத் தகுதியுள்ளவராக வாழ்ந்தார். நற்செய்தியை வார்த்தையாலும், எழுத்தாலும் அறிவித்தார். இன்றும் அவர் எழுதிய நற்செய்தி நமக்கெல்லாம் ஊக்க மருந்தாகத் திகழ்கிறது.

நமது அழைப்பும், அறிவிப்பும் பற்றிச் சிந்திப்போம். நாம் பாவிகளாய் இருந்தபோதே நம்மை அழைத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அழைப்பை ஏற்று நற்செய்தியாளர்களாய் வாழ்வோம். நமது வாழ்வே ஒரு நடமாடும் நற்செய்தி நுhலாக அமையட்டும். நம்மையும், நமது பணியையும் பார்க்கிறவர்கள் இயேசுவின் மதிப்பீடுகளை நம்மிடமிருந்து கற்றுக்கொள்ளட்டும். இது நம்மேல் சுமத்தப்பட்ட கடமை என்று ஏற்றுக்கொள்வோமா?

மன்றாடுவோம்: நற்செய்தியின் நாயகனே இறைவா, சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த மத்தேயுவை நீர் அழைத்ததுபோலவே, தகுதியற்ற என்னையும் உமது சீடனாக அழைத்ததற்காக நன்றி கூறுகிறேன். ஆண்டவரே, என் வாழ்வையும், பணியையும் ஆசிர்வதியும். அதனால், பிறர் நற்செய்தி மதிப்பீடுகளை என்னிடமிருந்து கற்றுக்கொள்வார்களாக. இதனால், நீர் மாட்சிமை அடைவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், 'உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும்
பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?' என்று கேட்டனர்'' (மத்தேயு 9:10-11)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு என்பவர் வரிதண்டும் தொழில் செய்துவந்தார் (காண்க: மத் 9:9; மாற் 2:13). அக்காலத்தில் வரிதண்டும் தொழில் இழிந்த ஒன்றாகக் கருதப்பட்டது. சமயப் பற்றுடைய யூதர்கள் வரிதண்டுவோரை வெறுத்து, ஒதுக்கினர். ஏனென்றால் வரிதண்டுவோர் பாலஸ்தீனத்தில் ஆதிக்கம் செலுத்திய உரோமையரின் கைக்கூலிகளாகக் கருதப்பட்டனர். இவ்வாறு நாட்டுப் பற்றில்லாதது மட்டுமல்ல, அவர்கள் பிற இனத்தாரோடும் தம் தொழில் காரணமாக நெருங்கிய தொடர்புகள் கொண்டிருந்தனர். அவர்கள் நேர்மையற்றவர்களாகக் கருதப்பட்டனர். குறிக்கப்பட்ட தொகைக்கு மேலாக வரி பிரித்து அதைத் தங்களுக்கென வைத்துக்கொண்டார்கள் என மக்கள் அவர்கள்மேல் குற்றம் கண்டனர் (காண்க: லூக் 3:13). இவ்வாறு இழிவாகக் கருதப்பட்ட ஒரு வரிதண்டுபவரை இயேசு தம் சீடராக அழைத்தது மட்டுமல்ல, அவருடைய வீட்டுக்குச் சென்று விருந்து உண்ணவும் செய்கின்றார். மேலும் வேறு பல வரிதண்டுவோரும் இயேசுவோடு விருந்தில் அமர்கின்றனர். இன்னொரு ''தாழ்ந்த'' இனத்தவரும் இயேசுவோடு விருந்தில் கலந்துகொள்கின்றனர். இவர்கள் ''பாவிகள்'' என அழைக்கப்பட்டார்கள். இவர்கள் பிற இனத்தவர்களாக இருக்கலாம்; அல்லது யூத சமய நெறிகளைத் துல்லியமாகக் கடைப்பிடிக்காத யூதராக இருக்கலாம்; அல்லது ''நேர்மையற்ற'' தொழில் செய்தவர்களாக இருக்கலாம் (எ.டு: வரிதண்டுதல், ஆடு மேய்த்தல், கம்பளிக்குச் சாயமேற்றுதல்). இத்தகைய ''தாழ்நிலை'' மக்களோடு உணவருந்தி உறவாடுவது மிக இழிந்த செயலாகக் கருதப்பட்டது.

-- எனவே சமயத்தில் மிகுந்த பிடிப்புடைய பரிசேயர்கள் இயேசுவிடம் குற்றம் காண்கிறார்கள். ஆனால் இயேசுவோ அவர்களைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவர் எல்லா மனிதரும் நலமடைய வேண்டும் என்பதற்காகத் தானே இவ்வுலகிற்கு வந்தார். எனவே, மனிதரிடையே தாழ்ந்தவர் உயர்ந்தவர் என அவர் வேறுபாடு காட்டவில்லை. கடவுள் வாக்களிக்கின்ற இறுதிக்காலப் பெருவிருந்தில் எல்லா மக்களுக்கும் இடம் உண்டு என்னும் உண்மையை முன்னுணர்த்துவதுபோல இயேசு வேறுபாடின்றி மக்களோடு கலந்து உறவாடினார்; அவர்களோடு கூட அமர்ந்து உணவு உண்டார் (காண்க: மத் 14:32-39; 22:1-14; 26:26-30). வெறுமனே உணவு உண்பது மட்டுமல்ல இயேசுவின் நோக்கம். விருந்துகளில் கலந்த அவர் மக்களுக்குக் குணமளிக்கவும் செய்தார் (காண்க: மத் 9:12); பாவ மன்னிப்பும் வழங்கினார் (மத் 9:13). ஓசேயா இறைவாக்கினரின் நூலிலிருந்து மேற்கோள் காட்டி (காண்க: ஓசே 6:6), இயேசு கடவுளின் இரக்கமும் பரிவும் பலிகளை விட மேலானவை என்றுரைத்தார் (மத் 9:13). இயேசு நிறுவ வந்த கடவுளாட்சியில் எல்லா மக்களுக்கும் இடம் உண்டு. குறிப்பாக, யார்யார் நீதி நிலைநாட்டுவதில் வேட்கை கொண்டுள்ளனரோ அவர்கள் இயேசு வழங்கும் கொடையை எளிதில் கண்டுகொள்வார்கள் (மத் 5:6). மாறாக, தங்களையே நேர்மையாளர்கள் என்று கருதி, பிறரை இழிவாக நோக்குவோர் கடவுளாட்சியில் புகுவதற்கு வழங்கப்படும் அழைப்பை ஏற்க மனமுவந்து முன்வரமாட்டார்கள் (மத் 9:13). மனிதரிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்காத இயேசுவைப் போல அவருடைய சீடராகிய நாமும் வாழ்ந்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உம்மை நாடி வந்து உம் அன்பையும் இரக்கத்தையும் நாங்கள் பெற்று அனுபவிக்க எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

பணியில் நிறைவு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

திருத்தூதர் மத்தேயு எப்படா சந்தர்ப்பம் கிடைக்கும், இடத்தைக் காலிசெய்யலாம் என்றிருந்ததுபோல உடனே இயேசுவைப் பி;ன் தொடர்கிறார்.

செய்யும் தொழிலே தெய்வம். தொழில் செய்யுமிடமே கோயில். உடன் உழைப்போர் அனைவரும் அந்த தெய்வத்தின் சாயல். புரளும் பணம் பொருளும் அவரது முலதனம். இத்தகைய உணர்வுகளோடு அலுவலகத்திலோ தொழிற்சாலையிலோ உழைப்பவன் கடவுளோடு இருக்கிறான். கடவுள் அவனோடு இருக்கிறார். அவன் மகிழ்ச்சியோடு இருப்பான். குடும்பம் செழிப்போடு வாழும்.

லஞ்சமும் ஊழலும் மலிந்த இடத்தில் தெய்வத்திற்கு இடமில்லை. சோம்பல், சாத்தானின் தொழிற்கூடம். பணமே இலட்சியமானால், பாவம் மலியும். மனதில் நிம்மதி இருக்காது.வாழ்வில் நிறைவு இருக்காது.அவன் ஒரு நடைபிணம். இப்படித்தான் இருந்தது மத்தேயுவின் வாழ்க்கை. எனவே இயேசு அழைத்ததும் எங்கெங்கோ தேடியும் இதுவரைக் காணாத தன் நிறை வாழ்வை இந்த இயேசுவில் கண்டதால் உடனே அவரைப் பின்தொடர்கிறார்.

நீயும் ஒரு நவீன மத்தேயு, நீ செய்யும் பணி, பணியாற்றுமிடம் எல்லாம் இயேசுவாக இருந்தால்.

--அருட்திரு ஜோசப் லீயோன்