முதல் வாசகம்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 1-9

இறைவனாகிய ஆண்டவர் கூறுகிறார்: பேரொலி எழுப்பிக் கூப்பிடு, நிறுத்திவிடாதே; எக்காளம் முழங்குவதுபோல் உன் குரலை உயர்த்து; என் மக்களுக்கு அவர்களின் வன்செயல்களையும், யாக்கோபின் குடும்பத்தாருக்கு அவர்களின் பாவத்தையும் எடுத்துக்கூறு. அவர்கள், நேர்மையானவற்றைச் செய்யும் மக்களினம்போலும், தங்கள் கடவுளின் கட்டளையைக் கடைப்பிடிப்போர் போலும் நாள்தோறும் என்னைத் தேடுகின்றார்கள்; என் நெறிமுறைகள் பற்றிய அறிவை நாடுகின்றார்கள்; நேர்மையான நீதித்தீர்ப்புகளை என்னிடம் வேண்டுகின்றார்கள்; கடவுளை அணுகிவர விழைகின்றார்கள். `நாங்கள் உண்ணா நோன்பிருந்த பொழுது, நீர் எங்களை நோக்காதது ஏன்? நாங்கள் எங்களைத் தாழ்த்திக்கொண்டபோது நீர் எங்களைக் கவனியாதது ஏன்?' என்கின்றார்கள். நீங்கள் நோன்பிருக்கும் நாளில் உங்கள் ஆதாயத்தையே நாடுகின்றீர்கள்; உங்கள் வேலையாள்கள் அனைவரையும் ஒடுக்குகின்றீர்கள். இதோ, வழக்காடவும், வீண் சண்டையிடவும், கொடும் கையால் தாக்கவுமே நீங்கள் நோன்பிருக்கிறீர்கள்! இன்றுபோல் நீங்கள் உண்ணா நோன்பிருந்தால் உங்கள் குரல் உன்னதத்தில் கேட்கப்படாது. ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணா நோன்பின் நாளாகத் தெரிந்துகொள்வது? ஒருவன் நாணலைப்போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்? கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்துகொடுப்பதும், தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும், உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக்கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! அப்பொழுது உன் ஒளி விடியல் போல் எழும்; விரைவில் உனக்கு நலமான வாழ்வு துளிர்க்கும்; உன் நேர்மை உனக்கு முன் செல்லும்; ஆண்டவரின் மாட்சி உனக்குப் பின் சென்று காக்கும். அப்போது நீ ஆண்டவரை மன்றாடுவாய்; அவர் உனக்குப் பதிலளிப்பார்; நீ கூக்குரல் இடுவாய்; அவர் `இதோ! நான்' என மறுமொழி தருவார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 3-4. 16-17

பல்லவி: நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். -பல்லவி

3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்;
என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;
உம் பார்வையில் தீயது செய்தேன். -பல்லவி

16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது;
நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே;
கடவுளே! நொறுங்கிய, குற்றம் உணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. -பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்
நன்மையை நாடுங்கள், தீமையைத் தேடாதீர்கள்; அப்பொழுது படைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு இருப்பார்.


மத்தேயு 9:14-15

தவக்காலம் - திருநீற்று புதனுக்குப்பின் வெள்ளி


நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 14-15


அக்காலத்தில் யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, ``நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?'' என்றனர். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, ``மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

16.02.2024 வெள்ளி
அழுக்கை அகற்றி ஆண்டவனை அடைய ...

பொதுவாக கிராமப்புறங்களிலே வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு உள்ளே வருகின்றபோது, வாசலிலே நம்முடைய கால்களை கழுவிவிட்டு உள்ளே வரக்கூடிய பழக்கம் இருந்தது. காரணம் அழுக்கை அகற்ற. ஒரு சமய வழிபாட்டு தலத்தின் வாயிலிலே தண்ணீர் வைக்கப்பட்டு, அதில் தங்களுடைய கரங்களையும், முகத்தையும் கழுவிய பின்பே வழிபாட்டு தலத்திற்கு செல்லவேண்டுமென்று விதிமுறை நடைமுறையில் இருக்கின்றது. காரணம் அழுக்கை நீக்கிவிட வேண்டும் என்ற கண்ணோட்டம்.

இத்தகைய ஒரு கண்ணோட்டத்தைத்தான் நோன்பு என்று இன்றைய நற்செய்தி வாசகத்தில் குறிப்பிடப்படுகின்றது. நோன்பு என்பது நம் அழுக்கை அகற்றி ஆண்டவனை  அடைய உருவாக்கப்பட்டது. ஆனால் பரிசேயர்கள் இதனை சட்டமாக பார்க்க முயல்கின்றார்கள். இந்த நோன்பு பற்றிய மோதலில் யூதர்கள் பழைய சம்பிராதயங்கள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றைத் தவிர்த்து புதிய இறையாட்சி மதிப்பீடுகளை ஏற்கும் மனநிலை அவர்களிடம் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். மெசியா தங்களோடு நல்ல உறவில் இருக்கின்றபோது, அவருடைய சீடர்கள் நோன்பிருத்தல் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும், அவர் அவர்களைவிட்டுச் சென்றபின், அவர்களுடைய வாழ்க்கையில் நோன்புக்கும், வேறுபல ஒறுத்தல்களுக்கும், துன்பங்களுக்கும் இடமிருக்கும் என்பதையும் இயேசு அறிவிக்கின்றார். அப்பொழுது தங்கள் வாழ்வில் உள்ள அழுக்கை அகற்ற நோன்பு இருப்பார்கள் என்ற வாதத்தை இயேசு முன்வைக்கிறார்.

நாம் மேற்கொள்கின்ற நோன்பு எவ்வாறு இருக்கிறது? மற்றவர்களின் பார்வையை பெறக்கூடிய நோன்பாக இருக்கிறதா? (அ) நம் அழுக்கை அகற்றக்கூடிய நோன்பாக இருக்கிறதா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

மத்தேயு 9: 14 – 15
நோன்(பா)

வளர்ந்து வரும் இந்த அறிவியல் உலகம் நோன்பின் உலகமாக மாறி வருகின்றது. ஒவ்வொரு மதங்களுமே அவரவர் பாணியில் இந்த நோன்பினை பின்பற்றி மக்களை வலியுறுத்துகின்றன. இஸ்லாமியர்களை பார்க்கின்ற போது ரமலான் மதம் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. 14 மணி நேரம் பசித்திருந்து விழித்திருந்து தன் வாழ்வை புடம்போட்டு சமுதாயத்திற்கு நன்மை செய்வார்கள். இது அவர்களின் நோன்பு முறை. இந்து மதத்தினர் மார்கழி மாதம் அதிகாலையில் பெண்கள் எழுந்து கோலமிட்டு விளக்கேற்றி பூஜை அறையில் வழிபாடு நடத்துவர். அந்த மாதம் மட்டும் தான் அனைத்து வீடுகளிலும் சிறப்பு வழிபாடு. இது தான் அவர்களின் வாழ்வு நோன்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. கிறிஸ்த்தவம் நம் குற்றம் குறைகளுக்காக நோன்பிருந்து மன்றாடுகிறோம். இது சமுதாய பார்வையில் நோன்பு.

ஆனால் யூதர்களின் பார்வையில் நோன்பு என்பது தங்களுடைய பாவ கறையிலிருந்து வெளிவர அவர்கள் நோன்பு இருந்தார்கள். இந்த மோதலில் பாதிக்கப்பட்டவர்கள் இயேசுவின் சீடர்கள். யூதர்கள் கடைப்பிடித்து வந்த பல்வேறு அர்த்தம் இழந்த மரபுகளை இயேசுவின் பாணியில் அவருடைய சீடர்களும் கைவிட்டனர். அதில் ஒன்று நோன்பு. இந்த நற்செயல் மெசியாவின் வருகையை முன்னிட்டு மக்கள் அனுசரித்து வந்த ஓர் அடக்கு முறை என்பதும், இனி மெசியா உலகில் தோன்றி விட்ட பிறகு இது காலாவதியாகி விட்டது என்றும் பொதுவாகக் கருதப்பட்டது. மெசியாவின் வருகை உருவாக்க வேண்டிய மகிழ்ச்சியும் ஆரவாரமும் ஒரு திருமண கொண்டாட்டத்திற்கே உரியவையாக கருதப்படும் நிலையில், நோன்பு பற்றி மக்கள் கவலைப்பட தேவையில்லை என்பது இயேசுவின் கருத்து. மெசியாவின் வருகை ஒரு திருமணத்திற்கு ஒப்பிடப்படப்படுகிறது என்பது யூத மக்கள் அறிந்ததே. தங்களோடு மெசியா ஒரு நெருக்கமான உறவைக் கொண்டிருந்த ஒரு காலக்கட்டத்தில் அவருடைய சீடர்கள் நோன்பிருத்தல் என்பது ஏற்றுக் கொள்ள முடியாது என்பதையும் அவர் அவர்களை விட்டுச் சென்ற பின் அவர்களுடைய வாழ்க்கையில் நோன்புக்கும் வேறு பல ஒறுத்தல்களுக்கும் துன்பங்களுக்கும் இடமிருக்கும் என்பதையும் இயேசு அறிவிக்கின்றார். இயேசு ஈடுபட்ட இந்த நோன்பு மோதலில் யூதர்கள் பழைய சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை தவிர்த்து புதிய இறையாட்சி மதிப்பீடுகளை ஏற்கும் மனநிலை அவர்களிடம் இல்லை என்பதனைச் சுட்டிக் காட்டுகின்றார்.

ஒரு வாழ்வில் எப்படிப்பட்ட நோன்பு? பழையதை விடாமல் பிடிக்கிறேனா? அல்லது புதிய இறையாட்சி மதிப்பீடுகளை பின்பற்றுகிறேனா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

=============================

மத்தேயு – 9 : 14-15
நோன்புடன் காத்திருப்போம்

இத்தவக்காலம் நமக்குத் தரப்பட்டதன் நோக்கமே நாம் நம் பாவங்களிலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்பதற்காகவே. இயேசுவின் பாடுகளையும் அவரது இறப்பையும் நாம் நினைவிற்குக் கொண்டு வரவேண்டிய காலம். அவரின் பாடுகளோடு நம்மை ஐக்கியப்படுத்துகின்ற காலம். அவரோடு ஐக்கியமாக இன்னும் கூடுதல் ஆற்றல் தேவைப்படுகின்றது. இவ்வாற்றல் நோன்பிருத்தலில் கிடைக்கிறது. ஒருசந்தியும், நோன்பும் சமயச்சடங்குகளின் ஓர் அங்கமாகவே யூதர்களிடம் இருந்தது. அவர்களின் நோன்புகள் வெறும் வெளிச்சடங்குகளாயின. சிலர் பிறரிடம் புகழையும் பெயரையும் பெற வேண்டும் என்பதற்காகவே நோன்பிருந்தனர். இதனைச் சாடும் விதமாக இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் வார்த்தைகள் அமைந்திருக்கின்றது.

நோன்பிருக்க அடிப்படையில் ஒரு காரணமும், ஒரு காலமும் தேவைப்படுகிறது. இதனை இன்றைய வாசகத்தில் இயேசு இன்னும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இன்றைய நற்செய்தியில் அவர் இவ்வாறு கூறுவதன் மூலம் அவர் பழைய உடன்படிக்கைக்கு எதிராகச் செல்லவில்லை. மாறாக அதனை இன்னும் அர்த்தமுள்ளதாக்கி நிறைவு செய்கிறார். அவரே புதிய ஏற்பாடாகவும், புதிய நற்செய்தியாகவும் மாறுகிறார். தவக்காலத்தைத் தவிர நோன்பு இருப்பதற்கு வேறு உரிய காலம் இல்லை என்பதை உணர்ந்து, நோன்பு வழி நம் உணவைச் சுருக்கி, உடலை ஒறுக்கக் கற்றுக் கொள்வோம்.
- திருத்தொண்டர் வளன் அரசு
========================

திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 16 – 17
”நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை”

நொறுங்கிய உள்ளம் என்பது என்ன? ஒருவர் செய்த நன்மைகளை மறந்து, அவருக்கு எதிராகச் செய்த தவறுகளை எண்ணிப்பார்த்து, மனம் வருந்துகின்ற உள்ளமே நொறுங்கிய உள்ளம். நன்மை செய்தவருக்கு எதிராகச் செய்த தவறுகளை நினைத்துப்பார்க்கிறபோது, குற்ற உணர்வுகள் மேலோங்கி, தன்னையே வெறுக்கக்கூடிய மனநிலை, இவ்வளவுக்கு கீழ்த்தரமாக இருந்திருக்கிறோமே என்று கழிவிரக்கம் கொள்கிற நிலை தான், நொறுங்கிய உள்ளம். தனக்கு மன்னிப்பு கிடையாதா? தான் தவறு செய்தவர், தன்னுடை பலவீனத்தைப் புரிந்துகொண்டு தனக்கு மன்னிப்பு வழங்கிட மாட்டாரா? என்று வேதனையோடு, மனத்தாழ்மையோடு, ஏக்கத்தோடு காத்திருக்கிற நிலை தான் நொறுங்கிய உள்ளம்.

திருப்பாடல் ஆசிரியர், நொறுங்கிய உள்ளத்தினராகக் காணப்படுகிறார். தன்னுடைய வாழ்வில் ஏராளமான நன்மைகளைச் செய்த இறைவனுக்கு எதிராக, தான் தவறுகளைச் செய்துவிட்டேனே, நன்றி உணர்வு இல்லாமல் வாழ்ந்துவிட்டேனே என்று வேதனைப்படுகிறார். அந்த நொறுங்கிய உள்ளத்தோடு கடவுளை ஏறெடுத்தும் பார்க்கத் துணியாமல், மன்னிப்பு வழங்குவதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்குமா? என்று ஏங்கிநிற்கிறார். என்ன ஆச்சரியாம்! இறைவன் அவருக்கு முழுமையான மன்னிப்பை வழங்கிவிட்டார். அவரது பாவங்களையெல்லாம் மன்னித்துவிட்டார். பழைய குற்றங்களையெல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே எண்ணாது விட்டுவிட்டார். அந்த இறையனுபவத்தைத்தான் பாடலாக வடிக்கிறார். இந்த மன்னிப்பு அனுபவத்தில் மற்றொரு செய்தியையும் பெற்றுக்கொள்கிறார். கடவுளுக்கு உகந்த பலி, எரிபலி அல்ல. மாறாக, நொறுங்கிய உள்ளம் தான் என்பதை, அறிந்துகொள்கிறார். கடவுளின் அன்பையும், அளவுகடந்த இரக்கத்தையும் வியந்துபார்க்கிறார்.

நமது வாழ்க்கையில் நாமும் கடவுள் முன்னிலையில் நொறுங்கிய உள்ளத்தினராக வருவதற்கு தயாராக இருக்கிறோமா? கடவுள் முன்னிலையில் நம்முடைய குற்றங்களையெல்லாம் அறிக்கையிட்டு, பாவமன்னிப்புப் பெற்று, உண்மையான இறையன்பைச் சுவைத்து, வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முயற்சி எடுக்கிறோமா? என்று சிந்தித்துப்பார்ப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

இயேசுவின் இலட்சிய வாழ்வு

இயேசு தான் யார்? என்பதுபற்றியும், எதற்காக வந்திருக்கிறேன்? என்பதையும், தன்னைப் பின்தொடர இருக்கிறவர்கள் எப்படிப்பட்ட வாழ்வைப்பின்பற்ற இருக்கிறார்கள் என்பதையும், இன்றைய நற்செய்திப் பகுதியில் மிகத்தெளிவாகச் சொல்கிறார். தன்னைப் பற்றி முழுமையாக அறிந்திருப்பது, தனது சாவை வெளிப்படையாக அறிவிப்பது அனைத்துமே மிகவும் துணிச்சலான செயல்கள். தனது இறப்பு இப்படித்தான் இருக்கும், இந்த காலத்தில் தான் இருக்கும் என்று தெரிந்தும், துணிவோடு மக்கள் மத்தியில் போதிப்பது மிகப்பெரிய சவாலான காரியம். ஆனால், இயேசுவுக்கு அது மிக எளிதாகத் தோன்றுகிறது.

இயேசு தனது சாவைப்பற்றி கவலையோ, வருத்தமோ தனது வார்த்தைகளில் வெளிப்படுத்தவில்லை. தனது சாவு எப்படி இருக்கும்? என்பது தெரிந்திருந்தாலும், அது அவருடைய வாழ்வின் பயணத்தையோ, வீரியத்தையோ மாற்றவில்லை, குறைக்கவில்லை என்பதுதான் உண்மை. தனது உள்ளக்கிடங்கை அப்படியே சீடர்கள் நடுவில் பிரதிபலிக்கிறார். இயேசுவின் இந்த துணிவிற்கு என்ன காரணம்? எப்படி இயேசுவால், வாழ்வின் சவால்களை எளிதாக எதிர்கொள்ள முடிகிறது? வாழ்வைப்பற்றிய சரியான புரிதல் தான், இயேசுவை எதனையும் சந்திப்பதற்கு துணிவோடு இருக்கச் செய்கிறது. வாழ்வு என்பது கடவுளின் கொடை. அதனை மற்றவர்களுக்குப் பயன் உள்ள வகையில் வாழ வேண்டும். வாழ்வு பற்றிய அந்த தெளிவு, இயேசுவிற்கு துணிவைக் கொடுக்கிறது.

நமது வாழ்வில், கடவுள் நமக்கு பரிசளித்திக்கிற வாழ்வைப் பற்றிய தெளிவு நம்மிடம் இருக்கிறதா? வாழ்வின் நோக்கத்தை நாம் அறிந்திருக்கிறோமா? இலட்சிய வாழ்வு வாழ்கிறபோது, அதனால் சந்திக்கிற சவால்களை நாம் எப்படி எதிர்கொள்கிறோம்? சிந்திப்போம், இயேசுவைப்போல, இலட்சியப் பாதையில், தடுமாறாமல், துணிவோடு வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இன்பமும், துன்பமும்

துன்பமும் இன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த உண்மையை அறிந்து, ஏற்று வாழ்ந்தால் வாழ்க்கை எப்போதும் மகிழ்ச்சியே. இன்பம் வரும்போது மகிழ்வதும், துன்பம் வரும்போது வாழ்வை வெறுப்பதும், வாழ்வைப்பற்றிய சரியான பார்வை அல்ல. இன்பமோ, துன்பமோ வாழ்வில் எப்போதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்த சிந்தனை தான், இன்றைய நற்செய்தி வாயிலாக நமக்குத்தரப்படுகிறது.

வாழ்க்கை என்பது சுழலும் சக்கரம். எப்போதும் ஒரே போல இருக்காது. யோவான் சிறையில் இருக்கிறார். அவரின் சீடர்களுக்கு இப்போது துன்பமான நேரம். ஆனால், இந்த துன்பமும் நிரந்தரமல்ல. காலம் மாறும். இந்த துன்பமும் நீங்கும். அதேபோல இயேசுவின் சீடர்களுக்கு இது மகிழ்ச்சியான காலம். காரணம், இயேசு அவர்களோடு இருக்கிறார். அவர்கள் துன்பத்தை சந்திக்கும் காலம் வரும். துன்பம் வரும் என்பதற்காக, இப்போதுள்ள இன்பமான நேரத்தை கவலையில் மூழ்கடிக்கக்கூடாது. மகிழ்ச்சியான நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

துன்பம் என்பது நமக்கு வாழ்வில் பல பாடங்களைக் கற்றுத்தரக்கூடியது. துன்பத்தை நேர்மறையான பார்வையோடு அணுகினால், நாம் கற்றுக்கொள்ளக்கூடிய அனுபவங்கள் ஏராளமானதாக இருக்கும். துன்பத்தைக்கண்டு துவண்டுவிடாமல், கடவுள் மட்டில் நம்பிக்கை கொண்டு, துணிவோடு வாழ்வை வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நோன்பு

யூதர்களுக்கு தர்மம், செபம் மற்றும் நோன்பு ஆகிய மூன்றும் சமயவாழ்வின் முக்கியமான நெறிகளான இருந்தன. இன்றைய நற்செய்தியில் நோன்பு பற்றிய கேள்வி இயேசுவின் முன் வைக்கப்படுகிறது. யோவானின் சீடர்கள் தாங்கள் நோன்பு இருப்பதாகவும், ஆனால் இயேசுவின் சீடர்கள் நோன்பு இருப்பதில்லை எனவும் கூறுகின்றனர். மணமகனோடு மணவிருந்தினர்கள் இருக்கும்வரை யாராவது நோன்பு இருப்பார்களா? என்பது இயேசுவின் கேள்வி. அதாவது, யோவான் தற்போது சிறையில் இருக்கிறார். சீடர்களைவிட்டுப்பிரிந்து விட்டார். எனவே, யோவானின் சீடர்கள் நோன்பு இருப்பது கட்டாயம். ஆனால், இயேசு அவர்களை விட்டுப்பிரிவதற்கு காலம் இருக்கிறது. இயேசு சீடர்களோடு இருக்கும்வரை அவர்கள் நோன்பிருக்கத்தேவையில்லை. இயேசு அவர்களை விட்டுப்பிரிகிற காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள் என்று இயேசு சொல்கிறார்.

நோன்பு என்பது சமயவாழ்வின் முக்கிய நெறிகளில் ஒன்றாக இருந்தாலும் கூட, ஆரோக்ய வாழ்விற்கும் அடிப்படைத்தேவையான ஒன்றாக இருக்கிறது. நோன்பு இருப்பது நமது உடலின் உணர்வுகளைக் கட்டுப்படுத்த உதவுகின்ற ஒன்று. ஏனென்றால், உணவுக்கும், நமது உணர்வுகளுக்கும் இடையே ஏராளமான தொடர்பு இருக்கிறது. நாம் உண்ணும் உணவைப்பொறுத்து, நம்முடைய உணர்வுகளும் மாற்றம் பெறுகிறது. கணிணி உலகம், இண்டெர்நெட் உலகம் என்று பிதற்றிக்கொள்கிற இந்தக்காலகட்டத்தில்தான், பத்து ரூபாய்க்காக உடன்பிறந்தவரையே வெட்டிக்கொள்கிற சம்பவங்களும், சாதீயத்திற்காக ஊரையே கொளுத்துகிற நிகழ்ச்சிகளும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. காரணம், உணர்வினால் உந்தப்பட்டு, தன்னையே மறக்கிற நிலை. இப்படிப்பட்ட உணர்வுகளால் தூண்டப்படுகிற நிலைமாறி, தன்னையே அடக்கி ஆள்கிற கட்டப்பாட்டுடனான வாழ்விற்கு நோன்பு உறுதுணையாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.

தவக்காலத்தை தொடங்கியிருக்கிற நாம் அனைவரும் தர்மம், செபம் மற்றும் நோன்பு முதலிய அறச்செயல்கள் நமக்காக, நம் வாழ்வைச் சீர்படுத்துவதற்காக திருச்சபை தருகிற வாய்ப்பு என்பதை உணர்ந்தவர்களாக நம் வாழ்வில் இவற்றை செயல்படுத்த முனைவோம். ஒழுக்கநெறிகளில் நம்மைப் பயிற்றுவிப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

-----------------------------------

“அவர்களும் நோன்பு இருப்பார்கள்”!

நோன்பைப் பற்றிய இயேசுவின் பார்வை என்ன? பரிந்துரை என்ன? என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் தெரிவிக்கிறது.

அதற்கு முன்னால் செபம், தர்மம் செய்தல், நோன்பு இருத்தல் ஆகியன பற்றி முன்னரே இயேசு மொழிந்த தெளிவுரைகளை நினைவில் கொணர்தல் நலம். மலைப்பொழிவின்போது இயேசு “நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்” (மத் 6:2) என்றும், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது வெளிவேடக்காரரைப்போல் (மக்கள் பார்க்க வேண்டுமென) இறைவேண்டல் செய்யவேண்டாம்” (மத் 6:5) என்றும், “நீங்கள் நோன்பு இருக்கும்போது மக்கள் பார்க்க வேண்டுமென்று முகவாட்டமாய் இருக்கவேண்டாம்” (மத் 6:16) என்றும் தெளிவாகப் போதித்துள்ளார்.

எனவேதான், யோவானின் சீடர்களும், பரிசேயர்களும் அதிகமாக நோன்பு இருக்க, இயேசு தம் சீடர் நோன்பு இருக்க வலியுறுத்தவில்லை. வெளிவேடமான நோன்பைவிட, உள்ளரங்கரமான தூய்மையும், பிறரன்புமே மேலானது என்பதைத் தம் சீடர்களுக்கு அனுபவ வாயிலாகக் கற்றுத் தந்தார் இயேசு.

அதே வேளையில் வெளிவேடமற்ற நோன்பை இயேசு ஆதரித்தார். “மணமகன் அவர்களைவிட்டுப் பிரியும் காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்” என்று உரைத்தார். அதன்படியே, இயேசுவின் விண்ணேற்றத்துக்குப் பின் தொடக்கத் திருச்சபை நோன்பிருக்கும் பழக்கத்தைத் தொடர்ந்தது. “அவர்கள் நோன்பிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்” (திப 13:3) என்னும் செய்தியை திருத்தூதர் பணிகள் நூலில் வாசிக்கிறோம்.

பாடம் இதுதான்: நமது வேண்டல், நோன்பு வெளிவேடமற்று அமையட்டும்!

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் செபம், நோன்பு, அறப் பணிகள் அனைத்தும், வெளிவேடமில்லாமல், உள்நோக்கமில்லாமல், உம்மை மாட்சிப்படுத்தும் ஒரே நோக்குடன் அமைவதாக, ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

நோன்புக்கும் ஒரு காரணம் !

எல்லா சமயங்களும் "உபவாசம்" என்னும் நோன்புக்கு முதன்மையான ஓரிடம் தந்திருக்கின்றன. நோன்பிருப்பதால் உடலுக்கும், உள்ளத்துக்கும் நலமும், வலிமையும் கிடைப்பதோடு, நோன்பு இறைவனின் இரக்கத்தைப் பெற்றுத்தரும் என்பதுவும் அனைவரது நம்பிக்கை.

ஆனால், இன்றைய நற்செய்தி வாசகத்தின் வழியாக நோன்புக்கும் ஒரு தேவையை, ஒரு காரணத்தைத் தருகின்றார் ஆண்டவர் இயேசு. "மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களைவிட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்" என்றார் இயேசு.

இயேசுவின் இந்த விளக்கம் நமக்குத் தரும் செய்திகள்:

1. உண்பதற்கு ஒரு காலம்; உண்டு. உண்ணாதிருப்பதற்கும் ஒரு காலம் உண்டு. காலமறிந்து பொருத்தமான வேளையில் உண்ணாநோன்பிருப்பதே சிறந்தது. தவக்காலம் நோன்பிருக்க ஏற்ற காலம். எனவே, இந்நாள்களில் மகிழ்வுடன் நோன்பிருப்போம்.

2. மணமகனை விட்டுப் பிரியவேண்டிய காலத்தில் மணவிருந்தினர் நோன்பிருக்கின்றனர். இறைவனை விட்டுப் பிரிகின்ற நேரமே பாவத்தின் நேரம். பாவத்தால் நாம் இறைவனைவிட்டு விலகிவிட்டோம் என உணர்கின்ற நேரமெல்லாம் நாம் நோன்பிருக்க வேண்டும். நோன்பு பாவத்திற்கான மன வருத்தத்தின் அடையாளம்.

3. பிறர் நோன்பிருக்கிறார்களா, தவ முயற்சிகளில் ஈடுபடுகிறார்களா என ஆய்வு செய்வது அவசியமற்றது, ஒரு வகையில் தீர்ப்பிடும் பாவமும்கூட. நாம் நமது பாவங்களுக்காக மனம் வருந்தி இறைவனிடம் திரும்பி வருவோம். மற்றவர்கள் நோன்பிருக்கிறார்களா, இல்லையா, தவம் செய்கிறார்களா, இல்லையா என்றெல்லாம் நாம் கவலைப்பட வேண்டாம். ஒருவேளை நோன்பிருக்காதவர்களின் வாழ்வு நோன்பிருக்கிறவர்களின் வாழ்வைவிட இறைவனுக்கு அதிக ஏற்புடையதாயிருக்கலாமே!

மன்றாடுவோம்: உள்ளத்தின் ஆழத்தில் நோன்பை எதிர்பார்க்கும் இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களுடைய நோன்பும், இதர தவ முயற்சிகளும் வெளி வேடங்களாக அமையாமல், உமக்கு ஏற்றவையாக அமைவதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

----------------------------------------------

இணையதள உறவுகளே

மணமகள்நம்மோடு இருக்கும்வரை மணவிருந்தினருக்கு மகிழ்ச்சி. மணவீடு எப்பொழுதும் விருந்தும் கொண்டாட்டமுமாக இருக்கும். நம் ஊர்களில் திருமண வீடு இப்படி, விருந்து, ஒலிபெருக்கியில் பாடல்கள், ஆட்கள் வருவதும் போவதுமாக களைகட்டி இருக்கும். மணமகன் இல்லாத வீடு ஒருவிதத்தில் இறந்த வீட்டுக்குச் சமம்.இறந்துபோன வீடு என்றால் சமையல் வாசனை அறவே இருக்காது. அது ஒரு நோன்பு இருக்கும் வீடுபோல இருக்கும்.

சற்று வித்தியாசமா சிந்திப்போமே. நோன்பு இருந்தால், ஒரு மணமகன் இல்லாத வீட்டை மணவீடாக்கலாம் அல்லவா! நோன்பு இருந்தால், ஒரு இறந்த வீட்டை விருந்து வீடாக்கலாம் அல்லவா! நோன்பு இருந்தால், துன்பம் சூழ்ந்த வாழ்க்னையை இன்பம் நிறைந்ததாக மாற்றலாம் அல்லவா! நோன்பு இருந்தால், எந்த குடும்பத்தின் எந்த பிரச்சனைக்கும் ஒரு முடிவு காணலாம் அல்லவா!

ஆம்.நோன்பு ஒரு மாற்று மருந்து.மருந்தை எப்போதும் சாப்பிடக் கூடாது. நோயுள்ள நேரம் தவறாமல், முறையாக, முழுமையாக சாப்பிட வேண்டும். நொன்பு என்னும் தெய்வீக வல்லமை நிறைந்த மருந்தை, நம் வாழ்வின் இருள் சூழ்ந்த நேரங்களில் நோன்பு இருப்போம். ஆன்மீகம் தளர்ந்து அலகையின் ஆதிக்கம் நம்மை ஆட்கொண்டு,நம் குடும்ப வாழ்வை சீர்குலைக்கும்போது, நோன்பு இருப்போம். அது மணமகனாம் இயேசுவை நம்மிடம் கொண்டு சேர்க்கும். மீண்டும் நம் வாழ்வில் களை கட்டும்.அப்புறம் விருந்தும் கொண்டாட்டமும் தொடரும். தொடரட்டும்.

-ஜோசப் லீயோன்

அவர்களும் நோன்பு இருப்பார்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தமது சீடர்கள் நோன்பிருக்காததை நியாயப்படுத்திப் பேசிய இயேசு, கடைசியாகச் சொன்ன சொற்கள்: “அவர்களும் நோன்பு இருப்பார்கள் ” என்பதுதான். எனவே, நாமும் நோன்பிருக்க வேண்டும். தவக்காலத் திருப்பலியின் நான்காம் தொடக்கவுரை இறைவனுக்கு இவ்வாறு நன்றி சொல்கிறது:  “எங்கள் ஒறுத்தல் முயற்சியால் மனத்தை மேலே எழுப்புகின்றீர். ஆணவத்தை அடக்குகின்றீர். நற்பலன்களையும், அதன் பரிசான நல்வாழ்வையும், எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக வழங்குகின்றீர்”. ஆம், நோன்பு இருப்பதால், பல நன்மைகள் நிகழ்கின்றன. அவற்றில் மூன்றைச் சொல்லி, நன்றி சொல்கிறது இத்திருப்பலிச் செபம். நோன்பிருப்பதால் நமது ஆணவம் அடங்குகிறது. மனம் இறைவனை நோக்கி எழும்புகிறது. இறைவனும் நமது நோன்பை, இழப்பை ஏற்று, நற்பலனைப் பரிசாகத் தருகின்றார் என்பதுதான் நமது நம்பிக்கை, இறையியல். எனவே, நாமும் நோன்பிருப்போம். நல்வாழ்வில் வளர்வோம்.

மன்றாடுவோம்: அன்பின் தெய்வமே இறைவா, அவர்களும் நோன்பிருப்பார்கள் என்று சொல்லி, எங்களை நோன்பிருக்க அழைப்பதற்காக உமக்கு நன்றி. நாங்கள் தாராள மனத்துடன் நோன்பை மேற்கொள்ள அருள்தாரும். எங்கள் நோன்பு உமக்கு ஏற்றதாக அமைவதாக. உமக்கு மாட்சி அளிப்பதாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு யோவானின் சீடர்களை நோக்கி, 'மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?' என்று கேட்டார்'' (மத்தேயு 9:15)

சிந்தனை
-- மனித வாழ்க்கை என்பது கால இட சூழ்நிலைகளுக்கு உட்பட்டது. கடவுள் மட்டுமே காலம் கடந்தவர்; எங்கும் நிறைந்திருப்பவர். மனித வாழ்க்கை காலம் என்னும் நீரோட்டத்தில் மிதந்துசெல்கின்ற படகு போன்றது. சில வேளைகளில் அது பாய்கின்ற தண்ணீரோடு கூடவே செல்லும்; வேறு நேரங்களில் நீரோட்டத்தை எதிர்த்துச் செல்லும். இயேசுவும் திருமுழுக்கு யோவானும் இந்த இரு போக்குகளுக்கும் எடுத்துக்காட்டாக அமைகிறார்கள். யோவான் நோன்பிருந்தார்; அவருடைய சீடர்களும் நோன்பிருந்தார்கள். இயேசுவோ யூத சமய நோன்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களோடு கூட அமர்ந்து பல தருணங்களில் உணவருந்தியதை நற்செய்தி நூல்கள் எடுத்துரைக்கின்றன. இங்கே இயேசுவுக்கும் திருமுழுக்கு யோவானுக்கும் இடையே நிலவிய ஒரு வேற்றுமையை நாம் காண்கின்றோம்.

-- இயேசு தம்மை மணமகனுக்கு ஒப்பிடுகிறார். திருமண விருந்து என்பது மகிழ்ச்சியான ஒரு தருணம். அப்போது கூடி வருகின்ற விருந்தினர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடி, கூடியிருந்து விருந்துண்டு மகிழ்வார்கள். மணமக்களின் மகிழ்ச்சியில் கலந்துகொள்வார்கள். அந்த நேரத்தில் நோன்புக்கு இடமில்லை. இயேசு நமக்கு மகிழ்ச்சிதரும் நல்ல செய்தியை, அதாவது கடவுளின் ஆட்சி பற்றிய செய்தியை அறிவித்தார். அவர் மக்களோடு இருந்த நேரம் மகிழ்ச்சியின் நேரம். ஆனால் ஒருநாள் அவர் மண்ணக வாழ்வை நிறைவுக்குக் கொணர்ந்து, தம் சீடரைவிட்டுப் பிரிவார். அந்த நேரம் சீடர்களுக்கு இக்கட்டானதும் இடர்நிறைந்ததுமாக இருக்கும். சீடர்களைத் துன்பங்கள் தேடிவரும். ஏன், அவர்கள் உயிருக்கே ஆபத்து வரும். அதையும் சீடர்கள் உறுதியான உள்ளத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இப்போது, இயேசுவின் உடனிருப்பு நமக்கு இருப்பதால் நம் உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்து இறைபுகழ் பாட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, நீர் எங்களோடு இருந்து எங்களை வழிநடத்துவதை நாங்கள் உணர்ந்து வாழ அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்-----------

 

''யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, '...உம்முடைய சீடர்கள்
ஏன் நோன்பு இருப்பதில்லை?' என்றனர்'' (மத்தேயு 9:14)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நோன்பு என்பது பல சமயங்களுக்கும் பொதுவானது. இந்திய நாட்டில் நோன்புகளுக்கும் விரதங்களுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்துக்கள் ஏகாதசி, மகாராத்திரி போன்ற நோன்புகளையும், இஸ்லாமியர் ரம்சான் நோன்பையும் கடைப்பிடிப்பர். யூத சமயமும் நோன்புக்கு முக்கியத்துவம் அளித்தது (காண்க: லேவி 23:27-32; எண் 29:7). ஆயினும் உண்மையான நோன்பு என்பது ஒறுத்தல் முயற்சிகளில் அல்ல, உள்ளத்தைத் தூய்மையாகக் கொண்டு, ஏழைகளுக்கு மனமுவந்து உதவுவதும் நீதியை நிலைநாட்ட உழைப்பதும்தான் நோன்பின் உட்பொருள் என்னும் கருத்து இஸ்ரயேலில் வலியுறுத்தப்பட்டது (காண்க: எசா 58:1-13). இயேசு நோன்பு பற்றி எடுத்துரைத்த கருத்து புரட்சிகரமானது. அவர் பல யூத பழக்கங்களைப் புரட்டிப்போட்டார். அதாவது அப்பழக்கங்களின் உண்மையான பொருளை எடுத்துரைத்தார். திருமுழுக்கு யோவானின் சீடர்கள் அக்காலத்துப் பரிசேயரைப் போல நோன்பைக் கடைப்பிடித்தனர். அப்படியானால் இயேசுவின் சீடர் ஏன் நோன்பிருப்பதில்லை என்னும் கேள்வி எழுந்தது. இயேசு அவர்களை விட்டுப் பிரிந்தபிறகு அவர்கள் நோன்பு இருப்பார்கள் என இயேசு பதிலிறுத்ததன் வழியாக நோன்பின் தன்மையைச் சுட்டிக் காட்டுகிறார் (மத் 9:15).

-- இயேசுவைப் பின்பற்றுவோர் துன்பங்களுக்கு ஆளாவர். அவர்கள் இயேசுவின் போதனையை ஏற்று வாழும்போது இவ்வுலக மதிப்பீடுகளைப் பின்பற்றாமல் இயேசுவின் மதிப்பீடுகளையே தம் வாழ்க்கையின் மையமாகக் கொள்வதால் உலகப் போக்குக்கு எதிராகச் செல்வார்கள். அப்போது அவர்களுக்குத் துன்பங்கள் வரும். அவற்றை மனமுவந்து ஏற்று, இயேசுவுக்காக வாழ்வதும் அவருக்காகச் சாகவும் துணிவதும் சீடரின் பண்பாக மாறும். இதுவே அவர்களின் நோன்பாக அமையும். ஆக, உணவைக் குறைத்து, உடலைச் சுருக்கும் நோன்பு தவறு எனக் கூறவில்லை இயேசு. மாறாக, அவரைப் பின்பற்றுவதில் நாம் நிலைத்திருக்கும்போது எழுகின்ற துன்பங்களை மனமகிழ்வோடு ஏற்க வேண்டும் எனக் கேட்கிறார்.

மன்றாட்டு
இறைவா, இயேசுவை மனமுவந்து பின்சென்றிட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------

"மணமகன் தங்களோடு இருக்கும்வரை .. .."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

கிறிஸ்தவ வாழ்வு ஒரு திருமண வாழ்வுக்குச் சமம். எப்போதும் அமர்க்களம், ஆடம்பரம், கொண்டாட்டம், விருந்து, ஆட்டம் பாட்டம் நிறைந்தது. கிறிஸ்தவனிடம் மகிழ்ச்சிக்கு குறைவே இருக்கக் கூடாது. கிறிஸ்து அவனிடம் இருக்கும்போது அந்த இடம் எப்போதும் திருமண வீடாகவே இருக்கும். அழுகைக்கும் கண்ணீருக்கும் நோன்பு, முகவாட்டம் இதற்கெல்லாம் இங்கு இடமே இல்லை.

ஆனால் எப்போது கிறிஸ்து அங்கே இல்லையோ, அப்போது அங்கே அழுகையும் கண்ணீரும் வந்துவிடும். அதுவரை மணவீடாக மங்கள ஒலி எழுப்பிய வீடு, மயானமாக, காடாக மாறிவிடும். பாவம் புகுந்த வீடு மயானமாகிவிடும். அது இயேசு இல்லாத இடம். மீண்டும் மணமகனாம் இயேசு அங்கே வந்து தங்கினால், அவ்வீடு மணக்கோலம் பூணும். மகிழ்ச்சி பொங்கிப் பெருகும்.

மீண்டும் மணக்கோலம் காண, பாவம் அகல, கிறிஸ்து மீண்டும் குடிகொள்ள மன்னிப்பு, மனமாற்றம் அவசியம். அதற்குத் தூண்டுதலாக, துணையாக இருப்பது நோன்பு. எனவேதான் அருள் உள்ள இடத்தில், மணமகன் இருக்கும்போது, இயேசுவோடு இருக்கும்போது நோன்பு அவசியம் இல்லை, பாவம் உள்ள இடத்தில், இயேசு இல்லாத சூழல்களில் மக்கள் மனமாற்றம் பெற நோன்பு அவசியம் என உணர்த்துகிறார்.

எப்போதும் மணமகனாம் இயேசுவோடு இருப்போம். நோன்புக்கு அவசியம், அவசரம் இல்லாது பார்த்துக்கொள்வோம். வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- ஜோலி --