முதல் வாசகம்

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 2: 14-16,19-20

ஆண்டவர் கூறுவது: ``நான் இஸ்ரயேலை நயமாகக் கவர்ந்திழுப்பேன்; பாலைநிலத்துக்கு அவளைக் கூட்டிப்போவேன்; நெஞ்சுருக அவளுடன் பேசுவேன். அவளுடைய திராட்சைத் தோட்டங்களை அவளுக்குத் திரும்பக் கொடுப்பேன்; ஆக்கோர் பள்ளத்தாக்கை நம்பிக்கையின் வாயிலாக மாற்றுவேன்; அப்போது அவள் அங்கே தன் இளமையின் நாள்களிலும், எகிப்து நாட்டினின்று வெளியேறிய காலத்திலும் பாடியது போல் பாடுவாள். அந்நாளில், `என் கணவன்' என என்னை அவள் அழைப்பாள்; `என் பாகாலே' என இனிமேல் என்னிடம் சொல்லமாட்டாள்'' என்கிறார் ஆண்டவர். ``இஸ்ரயேல்! முடிவில்லாக் காலத்திற்கும் உன்னோடு நான் மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; நேர்மையிலும் நீதியிலும் பேரன்பிலும் உன்னோடு மணஒப்பந்தம் செய்துகொள்வேன். மாறாத அன்புடன் உன்னோடு மண ஒப்பந்தம் செய்துகொள்வேன்; ஆண்டவராம் என்னை நீயும் அறிந்து கொள்வாய்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 145: 2-3. 4-5. 6-7. 8-9

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்.

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;
உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன்.
3 ஆண்டவர் மாண்புமிக்கவர்;
பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்;
அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. -பல்லவி

4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;
வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும்.
5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும்
வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். -பல்லவி

6 அச்சந்தரும் உம் செயல்களின் வல்லமையைப் பற்றி மக்கள் பேசுவார்கள்;
உமது மாண்பினை நான் விரித்துரைப்பேன்.
7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை நினைந்து கொண்டாடுவார்கள்;
உமது நீதியை எண்ணி ஆர்ப்பரித்துப் பாடுவார்கள். -பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்; எளிதில் சினம் கொள்ளாதவர்;
பேரன்பு கொண்டவர்.
9 ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்;
தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும் இரக்கம் காட்டுபவர். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நம் மீட்பராகிய கிறிஸ்து இயேசு சாவை அழித்து, அழியா வாழ்வை நற்செய்தியின் வழியாக ஒளிரச் செய்தார். அல்லேலூயா.

மத்தேயு 9:18-26

பொதுக்காலம் 14 வாரம் திங்கள்

 

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-26

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுடன் பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக் கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, ``என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்'' என்றார். இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தனர். அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார். ஏனெனில் அப்பெண், ``நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும், நலம் பெறுவேன்'' எனத் தமக்குள் சொல்லிக் கொண்டார். இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, ``மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று'' என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார். இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல் ஊதுவோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார். அவர், ``விலகிப் போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள். அக்கூட்டத்தினரை வெளியேற்றிய பின் அவர் உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள். இச்செய்தி அந்நாடெங்கும் பரவியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

-------------------------

ஓசேயா 2: 14 – 16, 19 – 20
இறைவனின் அளவு கடந்த அன்பு

இஸ்ரயேலுக்கும், கடவுளுக்கும் இருக்கும் உறவை திருமணம் என்கிற பந்தம் மூலமாக, இறைவாக்கினர் இங்கே வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மணமகளுக்கும், இஸ்ரயேலின் கடவுள் அவளுடைய கணவராகவும் ஒப்பிடப்படுகிறார்கள். இஸ்ரயேல் தன்னுடைய கணவரான "யாவே" இறைவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. வேறு கணவர்களோடு வாழ்ந்து வருகிறார். அதாவது விபச்சாரம் செய்கிறார். இந்த உவமையானது, இஸ்ரயேல் மக்கள், வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றதைக் குறிக்கிறது. குறிப்பாக, பாகால் தெய்வத்தை அவர்கள் வணங்கி, அந்த தெய்வத்திற்கு ஆராதனையும், வழிபாடும் செலுத்தி வந்ததை இது வெளிப்படுத்துகிறது.

இறைவன் அவளுக்கு வரச்செய்திருந்த துன்பத்தின்பொருட்டு, அவள் வேறு தெய்வங்களை நாடிச்சென்றிருக்கலாம். எனவே, அவளுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுப்பேன் என்கிற நம்பிக்கைச் செய்தியை, இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். கடவுள் எப்போதும் இஸ்ரயேல் மக்களின் நலம்விரும்பியாக இருக்கிறார் என்பது இங்கே நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு தான் பாவங்கள் செய்தாலும், அதற்கான தண்டனையை அவர்கள் பெற்ற பிறகு, மீண்டும் அவர்களைத் தேடி வந்து, அவர்களை தன் பிள்ளைகளாக அரவணைக்கிற பாசத்தை இங்கு நாம் பார்க்கிறோம். அந்த அளவுக்கு இறைவன் அவர்கள் மீது அன்பு வைத்திருக்கிறார்.

நம்முடைய வாழ்விலும் கூட, நாம் இறைவனோடு இருக்க வேண்டும் என்பதைத்தான் இறைவன் விரும்புகிறார். நாம் அவருடைய அன்பை உணர வேண்டும். அவர் காட்டுகிற வழியில் நடக்க வேண்டும். எப்போதும் அவருடைய நீதி, நெறிகளுக்கு ஏற்ப, நம்முடைய வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பும் ஆண்டவரின் குரலுக்கு நாம் செவிமடுப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவின் புரிதல்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு புதுமைகளை நாம் வாசிக்கக்கேட்டோம். இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது என்றால், அது மிகையல்ல. முதல் புதுமையில் தொழுகைக்கூடத்தலைவர் ஒருவர் தன் மகளுக்காகப் பரிந்து பேச வருகிறார். அவர் இயேசுவிடம் வந்தது அன்பினால் உந்தப்பட்டோ, அல்லது நம்பிக்கையினாலோ அல்ல. மாறாக, அவன் அனைத்து முயற்சிகளையும் செய்துவிட்டான். பிரபல மருத்துவர்களையும் பார்த்துவிட்டான். அனைத்துமே தோல்விகள். யாரும் அவனுடைய மகளை காப்பாற்ற முடியவில்லை. இறுதியில், ஒரு முயற்சியாக இயேசுவிடம் வருகிறான்.

பல ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற அந்த பெண்ணும் கிட்டத்தட்ட இதேநிலைதான். நமக்கு மனம் வருத்தமாக இருக்கிறபோது, விவிலியத்தை திறந்து, அந்த பக்கத்தில் வரக்கூடிய வார்த்தைகள், நமக்கு தரப்படுகிற வார்த்தையாக நினைப்போம். இது ஒருவகையான மூடநம்பிக்கை. அதேபோல, அந்த பெண்ணும் ஏதோ ஒருவகையான மூடநம்பிக்கையில், நான் அவருடைய ஆடையைத் தொட்டால் நலமாவேன், என்று இயேசுவின் ஆடைகளைத் தொடுகிறார். இந்த இரண்டுபேரும் நம்பிக்கையோடு வந்தார்களா? அல்லது மற்ற முயற்சிகளோடு இதுவும் ஒரு முயற்சி என்று வந்தார்களா? என்பது விவாதத்திற்கு உட்பட்டது என்றாலும், இவர்களது வாழ்க்கை நமக்கு அழகான இறையியலை கற்றுத்தருகிறது. நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே இயேசுவிடத்தில் செல்கிறபோது, அவர் நம்மை அரவணைக்கக் காத்திருக்கிறார் (Jesus is ready to bless us as we come to him exactly as we are).

நமது நிறைகுறைகளை கடவுள் அறிந்தவராக இருக்கிறார். நாம் புனிதத்தன்மையோடு இருந்தால் தான், கடவுளை அணுக முடியும் என்பது அல்ல. நம்முடைய நிறைகுறைகளை ஏற்றுக்கொண்டாலே, நாம் புனித வாழ்க்கைக்கான பாதையில் நடைபயில ஆரம்பித்துவிடுகிறோம். எனவே, நம்மை நாம் ஏற்றுக்கொள்வோம். கடவுளிடம் நம்மையே ஒப்படைப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

நம்பிக்கையின் வாழ்வு

மத்திய கிழக்குப்பகுதிகளில் இறப்பு நிகழ்ந்தவுடன் எவ்வளவு விரைவாய் அடக்கம் செய்ய வேண்டுமோ அவ்வளவு விரைவாய், இறந்த உடல் அடக்கம் செய்யப்பட்டது. காரணம், அங்கு நிலவிய பருவ காலநிலை. ஒருவர் காலையில் இறந்தால் எப்படியும் சூரியன் மறைவதற்கு முன்னதாகவே, அவரது உடல் அடக்கம் செய்யப்படும். ஒருவேளை மாலையில் இறந்தால், இரவிலும் உடலானது அடக்கம் செய்யப்பட்டது.

இப்படி விரைவாய் அடக்கம் செய்வதில், ஒரு சில வேளைகளில் கோமா நிலையில் இருக்கக்கூடியவர்களையும், அவசர, அவசரமாக தவறுதலாக, அடக்கம் செய்ய நேரிட்டிருக்கிறது. கோமா நிலை என்பது ஒருவகையான ஆழ்ந்த உறக்கம். அது இறப்பு என்று சொல்ல முடியாத துயில். இயேசு சிறுமியை வைத்திருக்கக்கூடிய அறைக்கு வந்ததும், ”சிறுமி சாகவில்லை, தூங்குகிறாள்” என்று சொன்னது, இப்படியாக இருக்கலாம். ஆனால், மற்றவர்கள் அர்த்தம் உணராமல், சிரிக்கிறார்கள். இவ்வாறு, இயேசு இறப்பின் விளிம்பிலிருந்து, ஒரு சிறுமியைக் காப்பாற்றுகிறார். அடிப்படையில் நாம் எவ்வளவுதான் இயேசுவின் புதுமைகளுக்கு, விளக்கங்கள் கொடுத்தாலும், இயேசு எல்லாச்சூழ்நிலையிலும் நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொண்டார் என்பதையே இது காட்டுகிறது.

வாழ்வின் எல்லாச்சூழ்நிலைகளிலும் நம்பிக்கையோடு வாழ வேண்டும் என்பதை, இந்த நற்செய்தி வாசகம் நமக்குக்கற்றுத்தருகிறது. ஒருபோதும் நாம் சோர்ந்து போகக்கூடாது. கடவுள் நம்மோடு இருக்கிறார் என்கிற அந்த உணர்வு நமக்குள்ளாக எப்போதும், இருக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கை, நமது வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்ள நமக்கு உதவியாக இருக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கை வழியாக இறையாசீர் பெறுவோம்

இன்றைய நற்செய்தியில் பல ஆண்டுகளாக இரத்தப்போக்கினால் அவதியுற்ற பெண்ணை இயேசு குணப்படுத்துகிறார். யூதர்களுடைய பார்வையில் இரத்தப்போக்கு சம்பந்தப்பட்ட நோய் கொடுமையானது மற்றும் அவமானத்துக்குரியது. மக்கள் மத்தியில் அது அருவருக்கத்தக்க நோயாகக் கருதப்பட்டது. நிச்சயம் அந்தப்பெண் தாழ்வு மனப்பான்மையோடு இருந்திருக்க வேண்டும். லேவியர் 15: 25 – 27 ல் இரத்தப்போக்கு சம்பந்தப்பட்ட சட்டம் விளக்கப்படுகிறது. “பெண் ஒருத்திக்கு உரிய மாதவிலக்கு நாள்கள் கடந்தும் உதிரப்பெருக்கு நீடித்தால், அந்த நாள்கள் எல்லாம் விலக்கு நாள்களைப்போல் தீட்டானவையே. அந்த நாள்கள் எல்லாம் அவள் படுக்கும் படுக்கை அனைத்தும், விலக்குக் காலப்படுக்கைக்கு ஒத்ததே: அவள் அமரும் அனைத்தும் தீட்டுக்காலத்தைப் போன்றே விலக்காய் இருக்கும்….”. ஒட்டுமொத்தமாக, இரத்தப்போக்குடைய பெண் தீட்டுள்ளவளாகக் கருதப்பட்டாள். அவள் தொட்ட அனைத்தும் தீட்டானதாகக் கருதப்பட்டது.

அந்தப்பெண் வழிபாட்டில் கலந்து கொள்வதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டாள். மக்களோடு மக்களாக அவள் செல்ல முடியாது. மக்கள் கூட்டத்தோடு இயேசு சென்றபோது, அவள் வந்ததே யாருக்கும் தெரிந்திருந்தால், அவளை கூட்டத்திலிருந்து வெளியேற்றியிருப்பார்கள். ஆனாலும் அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. ஏனென்றால், என்னென்ன மருத்துவம் பார்க்க முடியுமோ, அவையனைத்தையும் அவள் பார்;த்திருந்தாள். இப்படிப்பட்ட நெருக்கடி நிலையில் அவளுக்கு இயேசுவிடமிருந்து வல்லமை கிடைக்கிறது. அவள் கூட்டத்தில் தெரியாத நிலையில் இருந்தாலும், அவளிடத்தில் நம்பிக்கை இருந்ததால், இயேசுவின் அன்பு அவளுக்கு கிடைக்கிறது. அவள் கூட்டத்திலே தெரியாமல் போய்விடவில்லை. இயேசுவின் பார்வை அவளுடைய நம்பிக்கையின் வழியாக அவள் மீதும்படுகிறது.

நம்பிக்கையோடு கடவுளை அணுகுகின்றபோது, நாமும் கடவுளின் அருளை நிரம்பப்பெற்றுக்கொள்ள முடியும். நமக்கு இறையருள் கிடைக்குமா? என்ற தயக்கம் தேவையில்லை. கடவுளை நம்புவோம், இறையாசீர் பெற்றுக்கொள்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

ஓசே 2: 14-16, 19-20
மத் 9: 18-26

துணிவும் நம்பிக்கையும்!

பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப் போக்கினால் வருந்திய ஒரு பெண்ணை இயேசு நலப்படுத்தும் நிகழ்ச்சியை இன்று வாசிக்கிறோம். இயேசு ஏன் அந்தப் பெண்ணிடம் “மகளே, துணிவோடிரு. உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று””“ என்றார்?

காரணம், அந்தப் பெண் இயேசுவின் முன்னால் வர அஞ்சி, “அவருக்குப் பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்“. இயேசுவின் முன்னே வர நம்பிக்கையும், துணிவும் இல்லாத காரணத்தை இயேசு உணர்ந்து அவரை ஊக்குவிக்கும் வண்ணம் “துணிவோடிரு“ என்கிறார். அந்தப் பெண் தம்மைத் “தகுதியற்றவர்“ எனக் கருதியிருக்கலாம். ஆனால், இயேசு அவரது தயக்கத்தைப் போக்குகிறார்.

நாமும்கூட சில வேளைகளில் நம்பிக்கைக் குறைவினாலும், தயக்கத்தினாலும், பாவ உணர்வினாலும் இயேசுவின் முன் செல்லத் தயங்குகிறோம். நம் போன்றவர்களுக்குத்தான் எபிரேயர் திருமடல் பின்வரும் அறிவுரையை வழங்குகிறது: “நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்லர். மாறாக, எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர். எனினும், பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்ட்டையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக”“ (எபி 4: 15-16).

எனவே, நாமும் இயேசுவைத் துணிவுடனும், நம்பிக்கையுடனும் அணுகிச் செல்வோமாக!

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் அச்சத்தையும், தயக்கத்தையும் போக்குவதற்காக நன்றி கூறுகிறோம் ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

நலம்தரும் தொடுதல்

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் குணமாக்கும் தொடுதலை அருமையாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இயேசு பலரைத் தொட்டுக் குணமாக்கினார். பிறர் தன்னைத் தொட்டுக் குணம் பெறவும் அனுமதித்தார். பன்னிரு ஆண்டுகளாக இரத்தப் போக்கினால் வாடிய பெண் இயேசுவைத் தொட விரும்பியது அவரது நம்பிக்கையையும், துணிவையும் எடுத்துக்காட்டுகிறது. அவரது நம்பிக்கையின்படியே இயேசுவை அவர் தொட்டதும் அவர் நலமடைந்தார்.

இந்த அருங்குறியின் வழியாக தொடுதலுக்கெதிரான தடையை மட்டும் இயேசு உடைக்க வில்லை. பெண் சமத்துவத்துக்கு, பெண் மாண்புக்கெதிரான தடைகளையும் தவிடுபொடியாக்குகிறார். அப்பெண்ணை நலமாக்கி, சமுதாயத்தில் மாண்புடன் வாழ உரிமை தருகிறார். இந்த நலமாக்குதல் உடல்-சமூக நலமாக்கும் ஒரு நிகழ்வு.

தொடுவது நலம் தரும் அனுபவம் என்பதைக் குழந்தைப் பருவத்திலிருந்தே நாம் உணர்ந்திருக்கிறோம். நமது தொடுதல் பிறரை நலமடைய வைப்பதாக இருக்க வேண்டுமே தவிர, பிறரைத் துன்புறுத்துவதற்காக, இழிவு செய்வதற்காக அமையக்கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களை அடித்தல், கணவன் மனைவியை அடித்தல், காவல் துறையினர் பொதுமக்களை அடித்தல், பாலியல் தொந்தரவுக்காகத் தொடுதல் இவை அனைத்துமே மனித உரிமை மீறல்களாகவும், மனித மாண்பைக் குறைப்பனவாகவும் விளங்குகின்றன. எனவே, ஒவ்வொரு முறையும் நாம் பிறரைத் தொடும்போது அது நலம் தரும் அனுபவமாக அமையுமாறு பார்த்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்; அன்பின்; இயேசுவே, நீர் எங்களைத் தொட்டு எங்களை வளரச் செய்ததற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் பெற்றோர், உடன் பிறப்புகள், உறவினர்கள் எங்களைத் தொட்டு, அணைத்து, ஆசிர்வதித்து எங்களை உருவாக்கியதற்காக நன்றி கூறுகிறோம். பிறரால் தொடப்பட்டு நலம் பெற்ற நாங்கள், பிறரைத் தொடுவது நலம் தருவதற்காகவே என்று அமையட்டும். நாங்கள் பிறரைத் தொடும்போதெல்லாம் அவர்களை நலப்படுத்த எங்களுக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் இயேசுவுக்குப் பின்னால் வந்து
அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்... இயேசு அவரைத் திரும்பிப்; பார்த்து,
'மகளே, துணிவோடிரு. உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று' என்றார்'' (மத்தேயு 9:21-22)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இரண்டு பெண்கள் இயேசுவின் வல்லமைமிகு செயலால் புத்துயிர் பெறுகிறார்கள். முதல் பெண் இரத்தப் போக்கினால் 12 ஆண்டுகள் அவதிப்பட்டவர். மற்ற பெண் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்துபோகிறார். இயேசு அவரை மீண்டும் உயிர்பெற்றெழச் செய்கிறார். மாற்கு நற்செய்தியாளர் இயேசு புரிந்த இந்த இரு உவமைகளையும் விரிவாகத் தருகிறார் (காண்க: மாற் 5:21-43). இரத்தப் போக்கினால் துன்புற்ற பெண் இயேசுவின் அருகே செல்ல எவ்வளவோ முயல்கிறார். ஆனால் மக்கள் கூட்டம் இயேசுவை நெருக்கிக் கொண்டிருந்ததால் அவரால் இயேசுவிடம் சென்று தன் நோயைப் போக்க வேண்டும் என்று மன்றாட வாய்ப்புக் கிடைக்கவில்லை (காண்க: மாற் 5:25-34). இருந்தாலும், இயேசுவின் மேலுடையையாவது தொட்டுவிட்டால் போதும், தனக்குக் குணம் கிடைத்துவிடும் என அவர் உறுதியாக நம்புகிறார். அப்படியே இயேசுவின் ''மேலுடையின் ஓரத்தை'' தொடுகிறார் (மத் 5:20). அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. அவர் தம் நோய் நீங்கி நலம் பெறுகிறார்.

-- இயேசு நமக்காகத் துன்புற்றார். அவர் அனுபவித்த துன்பத்திற்கும் இப்பெண்ணின் நிலைக்கும் இடையே ஒற்றுமைகள் உள்ளன. இப்பெண் இரத்தப்போக்கினால் அவதியுற்றதுபோலவே இயேசுவும் துன்புறுகிறார், இரத்தம் சிந்துகிறார், உலகறிய தம் குரலை எழுப்பவில்லை, ஆனால் கடவுளிடத்தில் முழுமையாக நம்பிக்கை கொள்கிறார், இறுதிவரை உறுதியாக இருந்த அவர் சாவின் பிடியிலிருந்து ''மீட்கப்படுகிறார்''. அதுபோலவே இப்பெண்ணும் தனக்கு ஏற்பட்ட இரத்தப்போக்கின் காரணமாகத் துன்புற்றார். தன்னைக் காப்பாற்ற வேண்டும் என அவர் பிற மனிதரை அண்டிச் சென்று அவர்களைத் தொந்தரவு செய்யவில்லை. மாறாக, இயேசு தன்னை நலமாக்க முடியும் என உறுதியாக இப்பெண் நம்பினார். அந்த நம்பிக்கை எவ்வளவு உறுதியாக இருந்தது என்றால் அப்பெண் இயேசுவின் மேலாடையைத் தொட்டாலே தனக்குக் குணம் கிடைத்துவிடும் என நம்பினார். நம் வாழ்க்கையிலும் துன்பங்கள் பல உண்டு. சில வேளைகளில் பிற மனிதர் நம் துன்பங்களைப் புரிந்துகொள்வதில்லை. ஆனால் கடவுள் நம் உள்ளத்திலிருப்பதை அறிவார். நாம் அனுபவிக்கின்ற துன்பங்கள் உலகத்தின் கண்களுக்குத் தெரியாவிட்டாலும் கடவுள் அவற்றை நன்கே அறிவார். நாம் நம்பிக்கையோடு அவரை அணுகிச் செல்ல வேண்டும். அப்போது ''மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று'' (மத் 9:22) என்று இயேசு கூறிய சொற்கள் நமக்கும் ஆறுதல் தரும் சொற்களாக அமையும். நம் வாழ்விலும் கடவுளின் அருளையும் இரக்கத்தையும் நாம் அனுபவித்து, அவருடைய வல்லமையால் நலம் பெறுவோம்; மீட்படைவோம்.

மன்றாட்டு
இறைவா, உம் வல்லமையில் நம்பிக்கை கொண்டு வாழவும் புத்துயிர் பெறவும் எங்களுக்கு அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

தொடுவோம் .. பரிமாறுவோம்.. வாழ்வோம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

தாய் தன் குழந்தையைத் தொட்டு அணைக்கும்போது அக்குழந்தை அத்தாயின் அன்பில், அன்பின் கதகதப்பில் புதிய ஒரு வாழ்வைப் பெறுகிறது. கவலையோடு இருக்கும் மனிதன், அருகில் இருப்போரின் அன்பின் அரவணைப்பில் தன் கவலை மறந்து புது வலிமை பெறுகின்றான். மைக்கிள் ஆஞ்சலோ, இறைவனின் படைப்பை வரையும்போது,இறைவனின் வல்லமை உள்ள கை,மனிதனைத் தொடுவதாக வரைந்துள்ளார்; மனிதன் உயிரோட்டம் பெறுகிறான்.தொடும்போதெல்லாம் புதிய ஒரு வாழ்வு உதயதாவதைக் காண்கிறோம்.

கைகள் தொடுவதால் இரு வேறு நிகழ்ச்சிகளில் வல்லமை கைமாறுவதை இங்கு காண்கிறோம். "பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்" (மத்9:20).இயேசு சிறுமியின் கையைப் பிடித்தார் அவளும் உயிர்பெற்று எழுந்தாள்.(மத் 9:25) அப்பெண் இயேசுவைத் தொட்டதால், இயேசுவின் ஆற்றல் கைமாறியதால் அவள் குணமடைந்தாள். இயேசு அக்குழந்தையைத் தொட்டதால், இங்கும் அவரது ஆற்றல் கைமாறியதால்,இறந்த குழந்தை மீண்டும் உயிர் பெற்றது.

பிறரைத் தொடும் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு பரிமாற்றம். அன்பையும் ஆற்றலையும் வாழ்வையும் பகிர்ந்து கொள்ளும் இறை அனுபவம் அது. இத்தகைய புனித பரிமாற்றம் நாம் கடவுளைத் தொடும்போதும், கடவுள் நம்மைத் தொடும்போதும் நடைபெறுகிறது. நற்கருணை வாங்கும்போது மிகச் சிறப்பாக இப் புனித பரிமாற்றம் அரங்கேறுகிறது. ஒவ்வொரு முறை பிறரைத் தொடும்போதும், வாழ்வளிக்கும் இப் புனித பரிமாற்றத்தை நாம் செயல்படுத்துகிறோம். ஆகவே இறைவனையும் பிறரையும் நாம் தொடுவதன் சிறப்பை, மாண்பை, மகிமையை உணர்ந்து செயல்படுவோம். இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்