முதல் வாசகம்

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 8: 4-7,11-13

ஆண்டவர் கூறுவது: இஸ்ரயேல் மக்கள் தாங்களே அரசர்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்; அது என்னாலே அன்று; அவர்களே தலைவர்களை நியமித்துக் கொண்டார்கள்; அதைப் பற்றியும் நான் ஒன்றுமறியேன். தங்கள் வெள்ளியாலும் பொன்னாலும் தங்களுக்கு எனச் சிலைகளைச் செய்தார்கள்; தாங்கள் அழிந்து போகவே அவற்றைச் செய்தார்கள். சமாரியா மக்கள் வழிபடும் கன்றுக்குட்டியை நான் வெறுக்கின்றேன்; என் கோபத் தீ அவர்களுக்கு எதிராய் எரிகின்றது. இன்னும் எத்துணைக் காலம் அவர்கள் தூய்மை அடையாது இருப்பார்கள்? அந்தக் கன்றுக்குட்டி இஸ்ரயேலிடமிருந்து வந்ததன்றோ! அது கடவுளல்லவே! கைவினைஞன் ஒருவன்தானே அதைச் செய்தான்! சமாரியாவின் கன்றுக்குட்டி தவிடுபொடியாகும். அவர்கள் காற்றை விதைக்கிறார்கள்; கடும் புயலை அறுப்பார்கள். வளரும் பயிர் முற்றுவதில்லை; கோதுமை நன்றாக விளைவதில்லை; அப்படியே விளைந்தாலும், அன்னியரே அதை விழுங்குவர். எப்ராயிம் பாவம் செய்வதற்கென்றே பலிபீடங்கள் பல செய்து கொண்டான்; அப்பீடங்களே அவன் பாவம் செய்வதற்குக் காரணமாயின. ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள். பலியை அவர்கள் விரும்புகின்றார்கள்; பலி கொடுத்து, அந்த இறைச்சியையும் உண்ணுகிறார்கள்; அவற்றின் மேல் ஆண்டவர் விருப்பம் கொள்ளவில்லை; அதற்கு மாறாக, அவர்கள் தீச்செயல்களை நினைவில் கொள்கின்றார்; அவர்கள் செய்த பாவங்களுக்குத் தண்டனை வழங்குவார்; அவர்களோ எகிப்து நாட்டிற்குத் திரும்புவார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 115: 3-4. 5-6. 7-8. 9-10

பல்லவி: இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

3 நம் கடவுளோ விண்ணுலகில் உள்ளார்; தம் திருவுளப்படி அனைத்தையும் செய்கின்றார்.
4 அவர்களுடைய தெய்வச் சிலைகள் வெறும் வெள்ளியும் பொன்னுமே, வெறும் மனிதக் கைவேலையே! -பல்லவி

5 அவற்றுக்கு வாய்கள் உண்டு; ஆனால் அவை பேசுவதில்லை; கண்கள் உண்டு; ஆனால் அவை பார்ப்பதில்லை;
6 செவிகள் உண்டு; ஆனால் அவை கேட்பதில்லை; மூக்குகள் உண்டு; ஆனால் அவை முகர்வதில்லை. -பல்லவி

7 கைகள் உண்டு; ஆனால் அவை தொட்டுணர்வதில்லை; கால்கள் உண்டு; ஆனால் அவை நடப்பதில்லை;
தொண்டைகள் உண்டு; ஆனால் அவை குரல் எழுப்புவதில்லை.
8 அவற்றைச் செய்கின்றோரும் அவற்றில் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவற்றைப்போல் ஆவர். -பல்லவி

9 இஸ்ரயேலரே! ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்;
அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
10 ஆரோனின் குலத்தாரே! ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்;
அவரே உங்களுக்குத் துணையும் கேடயமும் ஆவார். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அல்லேலூயா.

மத்தேயு 9:32-38

பொதுக்காலம் 14 வாரம் செவ்வாய்


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 32-38

அக்காலத்தில் பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தனர். பேயை அவர் ஓட்டியதும் பேச இயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, ``இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை'' என்றனர். ஆனால் பரிசேயர், ``இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்'' என்றனர். இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய்நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப் போல அலைக்கழிக்கப்பட்டுச் சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, ``அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

ஓசேயா 8: 4 – 7, 11 – 13
நன்றியுள்ள உள்ளம்

தன்னுடைய மணமகளாக தேர்ந்து கொண்ட இஸ்ரயேல், வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு, அவர்கள் பின் சென்று, தன்னுடைய மணமகனான யாவே இறைவனுக்கு உண்மையற்று இருப்பது தான், ஓசேயா நூலின் பிண்ணனியில் சொல்லப்படுகிற செய்தியாக இருக்கிறது. இந்த நூலில் மூன்று வகையான மக்களுக்கு இறைவாக்கு உரைக்கப்படுகிறது. ஓசேயா 5: 1 – 7: குருக்கள், இஸ்ரயேல் குடும்பத்தார், அரச குடும்பத்தார். இந்த மூன்று வகையான மக்களுக்குத்தான் கடவுளின் செய்தி வழங்கப்படுகிறது. ஆக, குறிப்பிட்ட மக்களுக்கு அல்ல, எல்லாருமே இந்த வரையறைக்குள் கொண்டு வரப்படுகிறார்கள்.

அரசர் என்பவர் இறைவனால் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறவராக இருக்க வேண்டும். அவரால் தான், உண்மையான கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, மக்களை வழிநடத்த முடியும். ஆனால், மக்களோ தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தங்களுக்குப் பிடித்தமானவர்களை அரசராக தேர்ந்தெடுத்து, தங்கள் விருப்பம் போல் வழிபாடுகளை மாற்றிக்கொண்டனர். இணைச்சட்டம் 4: 6, இறைவன் அவர்களுக்குக் கொடுத்த நியமங்களைப் பற்றியும், அதை இறைவன் கொடுத்ததன் காரணத்தையும் தெளிவாகக் கூறுகிறது. "நீங்கள் நியமங்களைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள் முன்னிலையில் உங்கள் ஞானமும், அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும், உண்மையில் இப்பேரினம் ஞானமும், அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர்". ஆக, இறைவன் மக்களை ஞானமும், அறிவாற்றலும் சிறந்து விளங்கிட அவர்களுக்குக் கட்டளைகளைக் கொடுக்கிறார். அவர்களோ, தங்கள் விருப்பம்போல், சட்டங்களையும், நியமங்களையும் மாற்றிக்கொண்டு, கடவுளுக்கு எதிரான செயல்பாடுகளி் ஈடுபடுகின்றனர். உண்மையில் அவர்கள் மகிழ்ச்சியடைகிற எரிபலிகளில் இறைவன் நாட்டம் கொள்ளவில்லை. இஸ்ரயேல் மக்கள் தங்களை வளர்த்த இறைவனை மறந்துவிட்டார்கள். பாவத்தின் மீது நாட்டம் கொண்டு, தங்களை ஏற்றிவிட்டவரை தூக்கி எறிந்து விட்டார்கள். எனவே, அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டம் என்று இறைவாக்கு வழங்கப்படுகிறது.

நன்றி மறப்பது நல்லதல்ல. இன்றைய சமூகம் நன்றி இல்லாத சமூகமாக இருக்கிறது. எனவே தான், பெற்று வளர்த்த பெற்றோரை, கடைசி காலத்தில் தங்களோடு வைத்துக்கொண்டு பராமரிப்பதற்கு, வக்கற்ற சமூகமாக, அவர்களை பாரமாக நினைக்கிற சமூகமாக இருக்கிறது. அதற்கான தண்டனையை ஒவ்வொருவரும் அனுபவித்து ஆக வேண்டும். காலம் மாறும், காட்சிகள் மாறும். அப்போது நாம் பதில் கொடுக்க வேண்டியதிருக்கும். நம்மை ஏற்றிவிட்ட அன்பு நெஞ்சங்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

கடவுளின் அழைப்பு

அழைப்பின் மகிமை இன்றைய வாசகத்தில் வெளிப்படுத்தப்படுகிறது. மக்கள் ஆயரில்லா ஆடுகள் போல இருப்பதைப்பார்த்து, அவர்கள் மீது அவர் பரிவு கொள்கிறார். அறுவடை மிகுதி, வேலையாட்களோ குறைவு என்று அவர் சொல்கிறார். ஆகையால், தேவையான வேலையாட்களை தமது அறுவடைக்கு அனுப்பும்படி, அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள், என்று இயேசு சொல்கிறார். இங்கு அழைப்பு எங்கிருந்து, யாரிடமிருந்து வருகிறது? என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது.

அழைப்பு கடவுளிடமிருந்து வருகிறது. அழைப்பு என்பது மனிதர்கள் தேர்வு செய்வது அல்ல. மாறாக, கடவுள் கொடுக்கிற கொடை. அவரது தாராள உள்ளத்தில் பொழியப்படக்கூடியது. ஆக, கடவுளே நம்மை அவரது பணிக்காக தேர்வு செய்கிறார் என்றால், அது எவ்வளவுக்கு மகிமைமிக்க பணி. ஒரு சாதாரண நிறுவனத்தில் நடக்கும் நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ளும் நாம், வெற்றி பெற்றால், தேர்ந்தெடுக்கப்பட்டால், எவ்வளவுக்கு மகிழ்ச்சியடைகிறோம். சாதாரண மனிதரின் தேர்வுக்கு நாம் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்றால், கடவுள் நம்மை தேர்ந்தெடுத்தால், எந்த அளவுக்கு நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். அதுதான் பெறுதற்கரிய சிறந்த பாக்கியம்.

நமது வாழ்வில் இந்த அழைப்பின் மேன்மையை நாம் உணர்ந்திருக்கிறோமா? அழைக்கப்பட்டவர்களுக்கு உரிய மரியாதையை, மாண்பை நாம் கொடுக்கிறோமா? அவர்களின் வார்த்தைகளுக்கு எந்த அளவுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்? சிந்தித்துப் பார்ப்போம். அழைப்பின் மகிமையை நாமும் உணர்ந்து, மற்றவர்களுக்கும் உணர்த்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

இயேசு நம்மீது கொண்டிருக்கிற பரிவு

இயேசு மக்களைப்பார்த்து அவர்கள் மீது பரிவு கொண்டார் என்று நற்செய்தியாளர் சொல்கிறார். இயேசு மக்கள் மீது கொண்ட பரிவை, நற்செய்தியாளர்கள் பல இடங்களில் வெளிப்படுத்துகிறார்கள். ”திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்” (மத்தேயு 9: 36). ”இயேசு அங்குச் சென்றபோது பெருந்திரளான மக்களைக்கண்டு அவர்கள் மீது பரிவுகொண்டார்” (மத்தேயு 14: 14). இயேசு தம் சீடரை வரவழைத்து, “நான் இம்மக்கள் கூட்டத்தின் மீது பரிவு கொள்கிறேன்” என்றார் (மத்தேயு 15: 32).

இயேசு மக்கள் மீது கொண்ட பரிவிற்கு பல காரணங்களைச் சொல்லலாம். அவற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம். மக்கள் அன்றாட வாழ்வில் அனுபவிக்கக்கூடிய வலிகளைப்பார்த்து அவர் பரிவு கொண்டார். குருடர்களைப்பார்த்து, நோயாளிகளைப்பார்த்து, தீய ஆவியினால் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறவர்களைப்பார்த்து, அவர் மிகவும் வருந்தினார். அவர்களது வலியைப்போக்கும் அருமருந்தாக அவர் விளங்கினார். மக்களின் துயரங்களைப்பார்த்து அவர்கள் மீது பரிவு கொண்டார். குறிப்பாக ஒருவரின் இறப்பினால், அவருடைய இழப்பினால் மற்றவர்கள் அடைகிற சொல்லொண்ணா துன்பங்கள் இயேசுவுக்குத் துயரத்தைத் தந்தது. அவர்களது கண்ணீரைத்துடைக்க திருவுளம் கொண்டார். உதாரணமாக, நயீன் ஊர் கைம்பெண்ணின் மகன் இறந்ததையும், அந்த இழப்பினால் அவர்பட்ட துன்பங்களும் இயேசுவுக்கு அளவுகடந்த துயரைத்தைத் தந்தது. அந்த துயரத்தை இயேசு துடைக்கிறார்.

இயேசு நமது வலிகளையும், துயரங்களையும் உணராதவர் அல்ல. நமது துயரங்களை அவரும் அறிந்திருக்கிறார். செய்யாத குற்றத்திற்கு தண்டிக்கப்படுகிறபோது, ஒரு மனிதன் அடைகிற துன்பங்கள் அவருக்குத் தெரியாதது அல்ல. அதேபோல, இளவயதில் தனது தந்தையை இழந்த துயரமும் இயேசு அறியாதது அல்ல. நம் அனைவரின் வலிகளையும், துயரங்களையும் அறிந்திருக்கிற இயேசு, நமக்கு நிச்சயம் சுகம் தருவார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

பார்வைகள் பலவிதம்

இயேசுவைப்பற்றிய இரண்டுவிதமான பார்வைகளை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். முதலாவதாக, மக்கள் கூட்டம். இயேசுவை அதிசயத்தோடு, ஆச்சரியத்தோடு, தங்கள் துன்பங்களிலிருந்து விடுதலை தருகிற வெற்றி வீரராக இயேசுவைப்பார்;த்தனர். அவர்கள் எளிய மக்கள். தேவையிலிருக்கிற மக்கள். அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகள், எண்ணங்கள், ஏக்கங்கள் அனைத்தையும் நிறைவேற்றுகிறவராக, இயேசுவைப்பார்த்தனர். அவர்களுக்கு இயேசுவின் உதவி தேவையாக இருந்தது.

இரண்டாவதாக, பரிசேயர்கள். இயேசுவை விரோதியாகப்பார்த்தனர். தீய ஆவிகளின் உதவியோடு புதுமைகளைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டினர். அவர்களைப்பொறுத்தவரையில் புதுமைகளுக்கு அங்கே இடமில்லை. பாரம்பரியத்தின் கைப்பாவைகளாக வாழ்ந்தனர். தாங்கள் சொல்வதுதான் சரி என்ற எண்ணம் அவர்களுக்குள் கரு கொண்டிருந்தது. அவர்களுக்கு இயேசு தேவையில்லை. அவர்களுக்கு எளிய மக்களின் கடினம் புரியவில்லை. ஒருவிதமான கனவுலகில் அவர்கள் வாழந்து கொண்டிருந்தனர்.

இரண்டுவிதமான பார்வைகளைக் கொண்டிருந்தவர்களை நாம் பார்த்தோம். இரண்டு பேரில் யார் கடவுளின் ஆசியைப்பெற்றுக்கொண்டார்கள் என்பது கண்கூடாக நாம் அறிகிற உண்மை. நாம் இயேசுவை எப்படி பார்க்கிறோம்? என்று சிந்தித்துப்பார்ப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

ஓசே 8: 4-7, 11-13
மத் 9: 32-38

பரிவுமிக்க ஊழியர்களே இன்றைய தேவை!

தலைவர்களிடம் இருக்க வேண்டிய முகாமையான நான்கு தலைமைப் பண்புகள்: அறிவு, பரிவு, துணிவு, பணிவு. இந்த நான்கு தலைமைப் பண்புகளிலும் ஏதேனும் ஒன்றை மிகவும் முதன்மையானது என்று குறிப்பிட வேண்டுமானால், சந்தேகமின்றி அது பரிவுதான்.

ஆண்டவர் இயேசுவிடம் இந்த நான்கு தலைமைப் பண்புகளும் நிறைவாக இருந்தன என்பதை நற்செய்தி நூல்கள் நான்கும் நன்கு பதிவுசெய்துள்ளன. அவற்றிலும், பரிவு என்னும் பண்பு மிகக் குறிப்பிடும் வகையில் இருந்தது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் அருமையாக எடுத்துரைக்கிறது. “திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள்மேல் பரிவுகொண்டார்”“. என்ன அருமையான செய்தி!

தம்மிடம் வந்த அத்தனை பேருக்கும் நலம் தந்த இயேசு, தமது பணியைத் தொடர ஆள்கள் தேவை என்பதை உணர்ந்து, அதற்காக மன்றாடப் பணிக்கிறார். “அறுவடை மிகுதி. வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்”“ எனப் பணித்துள்ளார். எனவே, பரிவு என்னும் தலைமைப் பண்பு நிறைந்த ஊழியர்களுக்காக மன்றாடுவோம். அறிவும், துணிவும் நிறைந்த ஊழியர்களைவிட பரிவும், பணிவும் மிக்க ஊழியர்களே திருமறைக்குத் தேவை. அதற்காக மன்றாடுவாம்.

மன்றாடுவோமாக: அறுவடையின் உரிமையாளரான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசுவின் பணியை இவ்வுலகில் தொடர்ந்து ஆற்ற, பரிவும், பணிவும் மிக்க ஊழியர்களைத் தந்தருள்வீராக, ஆமென்

அருள்பணி. குமார்ராஜா

 

அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

குருக்களின் ஆண்டாகிய இந்த ஆண்டில் குருக்களுக்காகவும், இறையழைத்தலுக்காகவும் சிறப்பாக செபிக்க நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகம் இந்த சிறப்பான அழைப்பை இன்று நமக்கு நினைவூட்டுகிறது.

இயேசு திரளான மக்களைக் கண்டபோது அவர்கள் ஆயனில்லா ஆடுகள் போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டதைப் பார்த்துப் பரிவு கொண்டார் என்று நற்செய்தி கூறுகிறது. ஒவ்வொரு குருவின் கடமையும், பணியும் இதுதான். வாழ்வின் பளுவினால் அலைக்கழிக்கப்பட்டு, சோர்ந்துபோயிருக்கும் இறைமக்கள்மீது பரிவு கொண்டு, அவர்களை இறைவார்த்தையாலும், அருள்சாதனங்களாலும் உணவிட்டுத் தேற்றுவது ஆயர்களாகிய குருக்களின் கடமை. இக்கடமையை நன்கு நிறைவேற்ற அவர்களுக்காக மன்றாடுவோம்.

நகர்கள், சிற்றுhர்கள் எங்கும் சுற்றி வந்து நற்செய்தியைப் பறைசாற்றினார் இயேசு. நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். இதுதான் இயேசுவின் இறையாட்சிப் பணி. இந்தப் பணியைத்தான் குருக்கள் ஆர்வமுடனும், அர்ப்பணிப்புடனும் செய்ய வேண்டும்.

இந்தப் பரிவின் பணியைச் செய்வதற்கு அதிகமான வேலையாள்கள் தேவை. எனவே, அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள் என்ற இயேசுவின் அழைப்பிற்கேற்ப இறையழைத்தலுக்காகவும் மன்றாடுவோம்.

மன்றாடுவோம்; அன்பின்; இயேசுவே, திரளான மக்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்கு நற்செய்தியைப் பறைசாற்றிய உமது பரிவுக்காக நன்றி செலுத்துகிறோம். உமது இந்தப் பரிவின் பணியில் பங்குகொண்டு இறையாட்சிப் பணி செய்யும் அனைத்து குருக்களுக்காகவும் உம்மைப் போற்றுகிறோம். குருக்கள் தங்கள் பணியை நன்கு ஆற்ற உமது துhய ஆவி என்னும் கொடையால் அவர்களைத் திடப்படுத்தும். உமது பணியில் பங்குபெற இன்னும் பல வேலையாள்களைத் தந்தை இறைவனிடமிருந்து பெற்றுத் தருவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''திரண்டிருந்த மக்களை இயேசு கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்;
அவர்கள் ஆயர் இல்லா ஆடுகைளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள்'' (மத்தேயு 9:36)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- வாழ்க்கையில் சோர்வு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். செய்து முடிக்க நினைத்த காரியம் முறையாக முடிவுபெறாவிட்டால் நமக்குச் சோர்வு ஏற்படலாம். நம் எதிர்பார்ப்புகள் நிறைவேறா நிலையில் சோர்வு வரலாம். நமக்குச் சிக்கல்கள் ஏற்படுகின்ற போது அவற்றிற்குத் தீர்வுகாண நம்மால் இயலவில்லையே என்னும் எண்ணம் எழும்போது சோர்வு நம்மைப் பாதிப்பதுண்டு. பிறரிடமிருந்து எதிர்பார்த்த உதவி நமக்குக் கிடைக்காதபோது நமக்குச் சோர்வு வரலாம். இயேசு ஊர் ஊராகச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, புதுமைகள் பல புரிந்துவந்த அச்சமயத்தில் திரளான மக்கள் கூடியிருக்கின்றனர். அந்த மக்கள் ''சோர்ந்து காணப்பட்டார்கள்'' (மத் 9:36). சோர்ந்து போய் இருந்த அந்த மக்களைக்; கண்டபோது ''இயேசு அவர்கள் மேல் பரிவுகொண்டார்'' (மத் 9:36). பரிவு என்னும் சொல்லுக்கு இரக்கம், அருள், பாசம், அன்புணர்வு போன்ற பல பொருள்கள் உண்டு. மக்கள் சோர்ந்திருக்க முக்கிய காரணம் அவர்களை வழிநடத்திச் செல்ல திறமையான, தகுதிவாய்ந்த தலைவர்கள் (''ஆயர்கள்'') இல்லாமல் போனதுதான் (காண்க: மத் 9:36).

-- இயேசு நம்மை வழிநடத்துகின்ற ஆயராக வந்தார். தம்மை ''நல்ல ஆயருக்கு'' ஒப்பிட்ட இயேசு, பழைய ஏற்பாட்டில் கடவுள் ஒரு நல்ல ஆயருக்கு ஒப்பிடப்பட்டிருப்பதை அறிந்திருந்தார் (காண்க: திபா 22; 100; எசா 40:11). அதுபோலவே யூத சமயத்தில் தலைவர்களாக இருந்தோரைக் குறிக்கவும் ஆயர் என்னும் உருவகம் பயன்பட்டது (காண்க: எசே 34:8-12). மத்தேயு நற்செய்தி இயேசுவை ''நல்ல ஆயர்'' என வேறு இரண்டு இடங்களிலும் அழைக்கிறது (காண்க: மத் 10:6; 18:12-14). இவ்வாறு நம் ஆயராக வந்த இயேசு நம்மை நல்வழியில் நடத்திச் செல்வதோடு, நாம் உயிர்வாழ நமக்கு உணவளிப்பார்; நம்முடைய பிற தேவைகளையும் நிறைவுசெய்வார் என்பது நம் நம்பிக்கை. நல்ல தலைவர்கள் இருந்தால் சமுதாயம் தழைக்கும். திருச்சபையில் பொறுப்பு வகிக்கின்ற தலைவர்களும் இயேசுவைப் போல பரிவுள்ளம் கொண்டோராக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை நன்முறையில் வழிநடத்திச் செல்வர்; நம் ஆயராம் இயேசுவைப் போல மக்களின் நலனை மேம்படுத்தத் தம்மையே ஈடுபடுத்துவர்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் நல்வழியில் நடந்து, பிறரையும் நல்வழியில் நடத்திச் சென்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

வாய்பேச இயலாத பேய்பிடித்தவனை அவரின் நண்பர்கள் இயேசுவிடம் கொண்டு வருகிறார்கள். இயேசு குணமாக்குவார் என்ற நம்பிக்கை அந்த நண்பர்களுக்கு இருந்தது. இந்த நண்பர்களுக்கு நேயுற்றிருந்த அம்மனிதர் மீது அக்கறையும் பரிவன்பும் இருந்தது. வாழ்கையில் எத்தகைய துன்பத்தை இத்தகைய மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந் நண்பர்கள் நன்றாக அறிந்திருக்க வேண்டும். இறைமகன் இயேசுவும் பேச இயலாத பேய்பிடித்தவருக்கு உடனடியாக முழு குணமளிக்கின்றார். மனிதராக மதிக்கப்படாதவரை முழு மனிதனாக்குகிறார். நம்பிக்கையோடு இயேசுவை அனுகிகின்றவர்களை இயேசு ஒருநாழும் கைவிடுவதில்லை. அதேவேளையில் மக்கள் மத்தியில் வியப்பும் இன்னும் சிலர் மத்தியில் குறைகாணும் பண்பும் வெளிப்படுகின்றது.

பரிசேயர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாததால் குறைகூற முற்படுகிறார்கள். தங்களுடைய மமதையால் இயேசுவை குற்றவாளியாக்க முற்படுகிறார்கள். அவர்களிம் உதவி செய்யும் மனப்பான்மை இல்லை உதவி செய்பவர்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் இல்லை.

அன்புள்ள இறைவா, துன்பப்படும் அயலார் மீது பரிவிரக்கம் கொள்ளும் நல் மனத்தையும் நல்மனத்தோடு உதவிசெய்யும் நல்லுள்ளம் படைத்தோரை போற்றவும், எங்கiளால் நற்செயல் செய்முடியாத பட்சத்தில் நற்செயல் புரிவோரை உற்சாகப்படுத்தும் நல் மனத்தையும் எங்களுக்குத் தந்தருளும்.

--அருட்திரு மரியதாஸ்

என் ஆயன் ஆண்டவர் எனக்கென்ன குறைவு...

மக்கள் தேவைகள் பல, நீயும் தேவை. இன்று மக்கள் கூட்டத்திற்குக் குறைவே இல்லை. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். பேருந்து நிலையத்தில் கூட்டம். மருத்துவ மனையில் கூட்டம். ரேசன் கடையில் கூட்;டம். வணிக வளாகத்திலும் கூட்டம். அரசியல்வாதிக்கு ஒரு கூட்டம். ஆன்மீகவாதிக்கும் ஒரு கூட்டம். கிராமத்திலும் கூட்டம், நகரிலும் கூட்டம்.

கூட்டம் கூடுவதெல்லாம் வேடிக்கை பார்க்கத்தானே? வேதனையில், தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று தேற்றுவார் யார் உளர்? பாதிக்கப்பட்டோர் மேல் பரிவு கொள்வோர் யாரேனும் உளரா? இயேசுவின் சிந்தனை இக்கூட்டத்தைத் தேடுகிறது. மக்கள் தேவைகளை நிறைவு செய்யும் நல்ல தொண்டர்கள் தேவை. தொண்டு செய்வதைத் தொழிலாகக் கொண்ட தலைவர்கள் தேவை. குடும்பத்தைப் பொறுப்புடன் ஏற்று நடத்தும் குடும்பத் தலைவர்கள் தேவை.

மக்களின் பிற எல்லாத் தேவைகளையும் குறைகளையும் விட ஆயனில்லா ஆடுகள் போல் இருந்தது தான் மிகப்பெரும் குறை என்பது இயேசுவின் கணிப்பு. நல்ல ஆயர்கள், தலைவர்கள், பொறுப்பாளர்கள் நம்மிடையே உருவாவார்களாயின், பாதிக்கப்பட்டோரின் கூட்டம் குறையும். பரிவு கொள்ளும் இதயம் கொண்டவர்கள் கூடுவார்களாயின் ஆதரவற்றோர், அபலைகள், துன்புறுவோர், நோயுற்றோர் இவர்களின் கூட்டம் தானாகவே குறையும்.

ஏன் நீ அந்த ஆயனாக இருக்கக் கூடாது

--அருட்திரு ஜோசப் லீயோன்