முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 30: 19-21,23-26


இஸ்ரயேலின் தூயவராம் ஆண்டவராகிய இறைவன் கூறுவது: சீயோன்வாழ் மக்களே, எருசலேமில் குடியிருப்போரே, நீங்கள் இனி ஒருபோதும் அழமாட்டீர்கள்; அவர் உங்கள்மேல் திண்ணமாய் அருள்கூர்வார். நீங்கள் கூப்பிடும் குரலுக்குச் செவிசாய்த்து உங்களுக்கு மறுமொழி அளிப்பார். என் தலைவராகிய உங்கள் போதகர் உங்களுக்குத் துன்பம் எனும் அப்பத்தையும் ஒடுக்குதல் எனும் நீரையும் கொடுத்திருந்தாலும், இனித் தம்மை மறைத்துக்கொள்ளமாட்டார்; உங்கள் போதகரை நீங்கள் கண்ணால் காண்பீர்கள். நீங்கள் வலப்புறமோ, இடப்புறமோ எப்பக்கம் சென்றாலும் �இதுதான் வழி, இதில் நடந்து செல்லுங்கள்'' என்னும் வார்த்தை பின்னிருந்து உங்கள் செவிகளில் ஒலிக்கும். நீங்கள் நிலத்தில் விதைத்துள்ள விதைமீது ஆண்டவர் மழை பொழிவார்; நிலத்தின் விளைவான உணவு செழுமையாகவும் மிகுதியாகவும் இருக்கும்; அந்நாளில் உன் மந்தை பரந்த மேய்ச்சல் வெளியில் மேயும். முறத்தாலும் சுளகாலும் தூற்றப்பட்டுச் சுவையூட்டப்பட்ட தீனியை நிலத்தை உழும் காளைகளும் கழுதைகளும் தின்னும். கோட்டைகள் இடிந்து விழுகின்ற மிகப்பெரும் அழிவு நாளில் வானளாவிய மலைகள் அனைத்தின் மேலும் உயர்ந்த குன்றுகள் அனைத்தின் மேலும் கால்வாய்களும் நீரோடைகளும் தோன்றும். ஆண்டவர் தம் மக்களின் முறிவுகளைக் கட்டி, தாம் அடித்து ஏற்படுத்திய காயங்களைக் குணமாக்கும் நாளில், நிலவின் ஒளி கதிரவன் ஒளிபோலாகும்; கதிரவன் ஒளி ஏழு பகல்களின் ஒளி ஒன்றுதிரண்டாற் போல ஏழு மடங்காகும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 147: 1-2. 3-4. 5-6

பல்லவி: ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்.

1 நம்முடைய கடவுளைப் புகழ்ந்து பாடுவது நல்லது;
அவரைப் புகழ்வது இனிமையானது; அதுவே ஏற்புடையது.
2 ஆண்டவர் எருசலேமை மீண்டும் கட்டி எழுப்புகின்றார்;
நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக் கூட்டிச் சேர்க்கின்றார். -பல்லவி

3 உடைந்த உள்ளத்தோரைக் குணப்படுத்துகின்றார்;
அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,
அவை ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைக்கின்றார். -பல்லவி

5 நம் தலைவர் மாண்புமிக்கவர்; மிகுந்த வல்லமையுள்ளவர்;
அவர்தம் நுண்ணறிவு அளவிடற்கு அரியது.
6 ஆண்டவர் எளியோர்க்கு ஆதரவளிக்கின்றார்;
பொல்லாரையோ தரைமட்டும் தாழ்த்துகின்றார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்; ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்; ஆண்டவரே நமக்கு வேந்தர்; அவரே நமக்கு மீட்பு அளிப்பவர். அல்லேலூயா.

மத்தேயு 9:35-10:1,5-8

திருவருகைக் காலம் முதல் வாரம் சனி


நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35 - 10: 1, 6-8

அக்காலத்தில் இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார். திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, �அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்'' என்றார். இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். இயேசு பன்னிருவருக்கும் அறிவுரையாகக் கூறியது: "வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 147: 1 – 2, 3 – 4, 5 – 6
”ஆண்டவருக்காகக் காத்திருப்போர் நற்பேறு பெற்றோர்”

காத்திருத்தல் என்பது சுகமான அனுபவம். அது சுமையான அனுபவமாகவும் இருக்கலாம். ஒரு மாணவர் தேர்விற்காக தயாரித்துக்கொண்டிருக்கிறார். தன்னை முழுவதுமாக தயாரித்திருக்கிறார். அந்த மாணவருக்கு தேர்வு எப்போது வரும்? தான் தேர்வில் எப்போது கலந்துகொண்டு, என்னுடைய திறமையைக் காட்டுவேன் என்று நம்பிக்கையோடு காத்திருப்பார். அதேவேளையில், பேருந்துக்காக காத்திருக்கிற மனிதர், ஒரு மணி நேரம் ஆகியும் பேருந்து வரவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஏதாவது அவசர வேலை இருந்தால், அவரது மனம் பதைபதைத்துக்கொண்டே இருக்கும். ஆக, காத்திருத்தல் சுகமாகவும், சுமையாகவும் இருக்கிறது.

ஆண்டவருக்காகக் காத்திருப்பது இது போன்ற அனுபவம் தான். ஆண்டவர் என்னுடைய வாழ்க்கையில் செயலாற்றுவார் என்று காத்திருக்கிறோம். ஆனால், நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை. மீண்டும் இறைவனை நம்புகிறோம். அப்போதும் அது நடக்கவில்லை. பெரும்பாலான மனிதர்கள் இந்த தருணத்தில், நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு காத்திருத்தல் சுமையாகிவிடுகிறது. ஆனால், என்ன நடந்தாலும் சரி, கடவுள் மீது நான் வைத்திருக்கிற நம்பிக்கையில் நாம் அடிபிறழ மாட்டேன், என்று உறுதியாக இருப்பவர்கள் தான், நற்பேறு பெற்றவர்களாக மாறுகிறார்கள். அவர்கள் இறைவனின் முழுமையான அன்பிற்கு பாத்திரமானவர்களாக இருக்கிறார்கள்.

நம்முடைய விசுவாச வாழ்வில் நாம் எப்போதும் இறைவன் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கையிலிருந்து அடிபிறழக் கூடாது. உறுதியுள்ளவர்களாக, ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்கிற உணர்வுள்ளவர்களாக நாம் வாழ வேண்டும். அந்த நம்பிக்கையை இந்த திருப்பாடலிலிருந்து கற்றுக்கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இயேசுவின் முழுமையான பணி

இயேசு மக்கள் மீது வைத்திருந்த அளவுகடந்த அன்பின் அடையாளங்கள், இன்றைய நற்செய்தி மூலமாக வெளிப்படுத்தப்படுகிறது. பல இடங்களுக்கு அவர் கால்நடையாகச் செல்கிறார். கிராமங்கள், நகரங்கள் எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும் என்கிற ஆர்வம் இதில் வெளிப்படுகிறது. நற்செய்தி போதிக்க வாய்ப்புள்ள இடங்களையும் அவர் பயன்படுத்துகிறார். அதாவது தொழுகைக்கூடங்களுக்கும் செல்கிறார். போதனையோடு நின்றுவிடவில்லை. போதிப்பின் நிறைவாக, பிணிகளை அகற்றுகிறார். நோய்களைக் குணப்படுத்துகிறார்.

இயேசுவுக்கு அந்த கடினமான பணியாக இருந்தாலும், அவர்கள் கூட்டம், கூட்டமாக வர, வர, அவர்களின் நிலைமையை, கடினமான வாழ்வின் துன்பங்களை அறிந்து கொண்டு, இன்னும் அதிக உத்வேகத்தோடு, இயேசு செயல்படுகிறார். குறிப்பாக, அவர்களை வழிநடத்த ஏராளமான வழிகாட்டிகள் இருந்தாலும், அவர்களால் சூறையாடப்பட்டு, ஒளியிழந்து, களையிழந்து வாடுகின்ற மக்களாக அவர்கள் இருப்பதைப் பார்க்கிறார். அவர்களின் தேவைகளின் ஆழத்தையும், எண்ணிக்கையையும் பார்த்து, உடனடியாக, தனது சீடர்களுக்கு, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்கின்ற வல்லமையைக் கொடுக்கிறார். இயேசுவின் நோக்கம், தான் மகிமைப்படுத்த வேண்டும் என்பது அல்ல. மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுதான். அவர்களின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதுதான். அந்த எண்ணம் தான், இயேசுவை மக்கள் மத்தியில் உயர்ந்தவராகக்காட்டியது.

நமது வாழ்வு மக்களுக்காக இருக்க வேண்டும். எந்நேரமும் மக்கள் பணியே, நமது வாழ்வின் மூச்சாக இருக்க வேண்டும். நாம் செய்கின்ற, இந்த வல்ல செயல்களின் மூலமாக, ஏழைகளின் கண்ணீர் துடைப்பின் மூலமாக, கடவுளின் நாமம் புனிதப்படுத்தப்பட வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

உலகமெங்கும் நற்செய்தி அறிவியுங்கள்

புறவினத்தார் மற்றும் சமாரியர் பகுதிகளுக்குச்செல்ல வேண்டாம் என்றும், சிதறிப்போன இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள் என்று இயேசு சொல்வது நமக்கு வியப்பைத்தருகிறது. இயேசு உண்மையிலே இப்படிச்சொல்லியிருப்பாரா? என்ற சந்தேகமும் எழுகிறது. இயேசு எப்போதும் யாரையும் ஒதுக்கியதில்லை. பிற இனத்து மக்களும் தேவை என்று இயேசுவை நாடிவந்தபோது, அவர்களுக்கு அற்புதங்களைச்செய்திருக்கிறார். இயேசு தனது வாழ்வில் யாரையும் வெறுத்ததில்லை. அப்படி இருக்கையில் இயேசு எப்படி இதைச்சொல்லியிருக்க முடியும்?

வாழ்வை ஒட்டுமொத்தமாகப்பார்க்கின்றபோதுதான், நம்மால் கடவுளின் அளப்பரிய அன்பை உணரமுடியும். வாழ்வைப்பிரித்துப்பார்த்தால், நம்மால், கடவுளின் பிரசன்னத்தை, உடனிருப்பை உணர முடியாது. அந்த அடிப்படையில் இயேசுவின் நற்செய்தியையும் நாம் பார்க்க வேண்டும். மத்தேயு நற்செய்தியாளர் தனது நற்செய்தியை, யூதர்களுக்கு எழுதுகிறார். யூதர்களைப்பொறுத்தவரையில், தாங்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்ற எண்ணமும், மற்றவர்களுக்கு மீட்பு இல்லை என்ற எண்ணமும் மேலோங்கியிருந்தது. இந்தச்சூழ்நிலையில், அவர்களைப்பரந்த நோக்கத்திற்கு கொண்டு வரவேண்டுமென்றால், அவர்களை மெதுவாகத் தயார்படுத்த வேண்டும். அவர்கள் உணரும் வண்ணம் அவ்வப்போது, சரியான கருத்துக்களை வெளிப்படுத்தி, சரியான நேரத்தில், அவர்களுக்கு உண்மையை எடுத்துரைக்க வேண்டும். இந்தப்பிண்ணனியில் தான் நாம் இந்தப்பகுதியை அணுக வேண்டும். இறுதியாக மத்தேயு நற்செய்தியைப்பார்த்தோம் என்றால், “நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள்” என்று இயேசு சொல்கிறார். இவ்வாறு, தது உண்மையான செய்தியை அங்கே வெளிப்டுத்துகிறார்.

நாம் அனைவரும் வாழ்வை ஒட்டுமொத்தமாகப் பார்க்கப்பழக வேண்டும். சிலநேரங்களில் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள், கடவுள் நம் அருகில் இல்லையோ என்ற ஒரு மனநிலையை ஏற்படுத்துகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக வாழ்வை நாம் பார்த்தோமென்றால், நிச்சயம் கடவுள் நம் அருகில் இருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்..

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இந்த குருக்களின் ஆண்டில் குருக்களுக்காக மட்டுமல்ல, இறை அழைத்தலுக்காகவும் மன்றாட நாம் கடமைப்பட்டிருக்கிறோம். திருச்சபை ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தமது மீட்பரி;ன் பணி என்னும் சுற்றுமடலில் மூன்று விதமான நற்செய்தி அறிவிப்புப் பணிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 1.நற்செய்தி அறிவிக்கப்படாத இடங்களில் நற்செய்தி புதிதாக அறிவித்தல். 2. ஏற்கனவே நற்செய்தி அறிவிக்கப்பட்ட விசுவாசத்தைப் பெற்ற மக்கள் அந்த விசுவாசத்தை இழந்து வாழும் இடங்களில் மறுநற்செய்தி அறிவித்தல். ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த நிலையில்தான் இன்று இருக்கின்றன. ஒருகாலத்தில் ஆசிய நாடுகளுக்கு மறைரப்பாளர்களை அனுப்பிய ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இன்று புதிதாக நற்செய்தி அறிவிக்க வேண்டிய தேவை உள்ளது. பிற நாடுகளிலும் விசுவாசத்தை இழந்துகொண்டிருக்கிற மக்கள் ஏராளம் இருக்கின்றார்கள். அவர்களை வென்றெடுக்க வேண்டும். 3. கிறித்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்து வாழ்வோரை உறுதிப்படுத்தும் மேய்ப்புப் பணி. இன்றைய நுகர்வுக் கலாசார வெறியும், பெந்தகோஸ்து சபைகளும் விரிக்கின்ற வலையில் விழுந்துவிடாமல், இவர்களைக் காக்க வேண்டும்.

இந்த மூன்று விதமான நற்செய்தி அறிவிப்புப் பணிகளும் இன்றைய அவசியத் தேவைகளாக இருக்கின்றன. இவற்றைச் செய்வதற்கு ஏராளமான முழு நேர மற்றும் பகுதி நேர உழைப்பாளர்கள் தேவை. இவர்களைத் தரவேண்டும் என்று அறுவடையின் ஆண்டவரை நோக்கி மன்றாடுவோமா?

மன்றாடுவோம்: அறுவடையின் நாயகனே இறைவா, இருபத்தோராம் நூற்றாண்டின் புதிய சவால்களைச் சந்திக்கும் அளவுக்கு எங்களுக்கு ஆர்வமும், அர்ப்பணமும் நிறைந்த ஊழியர்களை வழங்குவீராக. அறுவடை மிகுதியாகவும். வேலையாள்கள் குறைவாகவும் இருப்பதால், எங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்த இன்னும் ஆர்வம் மிக்க ஊழியர்களை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''திரண்டிருந்த மக்களை இயேசு கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்;
அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு
சோர்ந்து காணப்பட்டார்கள்'' (மத்தேயு 9:36)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு மக்கள் மேல் ''பரிவுகொண்டார்'' என்னும் தகவல் நற்செய்தி நூல்களில் பல இடங்களில் உள்ளது. குறிப்பாக, இயேசுவின் போதனையைக் கேட்க அவரிடம் வந்த மக்கள் பசியால் வாடியதைக் கண்ட இயேசு அவர்கள் மேல் ''பரிவுகொண்டார்'' (காண்க: மாற் 6:34). இங்கே வருகின்ற ''பரிவு'' என்னும் சொல் ஆழ்ந்த பொருள் கொண்டது. அன்பு, இரக்கம், கனிவு, தயவு, கவலை, கரிசனை போன்ற உள்ளுணர்வுகள் இங்கே குறிக்கப்படுகின்றன. இதயத்தின் ஆழத்திலிருந்து எழுகின்ற அன்புணர்வு இயேசுவிடம் துலங்கியதை நற்செய்தியாளர்கள் குறித்துள்ளனர். இவ்வாறு மக்கள் மேல் பரிவுகொண்ட இயேசு ''ஆயர் இல்லா ஆடுகளைப் போல'' அவர்கள் சோர்ந்த நிலையில் இருப்பதைக் காண்கின்றார். இஸ்ரயேல் மக்களிடையே ''ஆயர்'' என்னும் சொல் ஆடு மேடு மேய்க்கின்றவர்களை மட்டும் குறிக்கவில்லை. மாறாக, மக்களை ஆண்டு வழிநடத்திய அரசர்களும் ஆயர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர். ஆகவே, மக்களுக்கு வழிகாட்டுகின்ற தலைவர்கள் இல்லாததைக் கண்டு இயேசு வருத்தம் கொள்கிறார்.

-- திருச்சபையில் ஆயர்கள் பணிப் பொறுப்புக் கொண்டுள்ளார்கள். ஆனால் ஆயருக்கு உரிய பணியை எல்லாக் கிறிஸ்தவர்களும் நிறைவேற்ற அழைக்கப்படுகிறார்கள். அதாவது, ஒருவர் ஒருவருக்கு வழிகாட்டிகளாக இருந்து செயல்படும் பொறுப்பு எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும் உண்டு. இவ்வாறு வழிகாட்டும் போது நம் அனைவருக்கும் தலைசிறந்த வழிகாட்டியாக இருப்பவர் இயேசுவே என்பதை நாம் மறந்துவிடலாகாது. இயேசு நம் ''தலைமை ஆயராக'' இருக்கின்றார். அவரிடமிருந்தே திருச்சபை ''ஆயர் பணி''யைப் பெறுகின்றது. எனவே, இயேசுவிடம் விளங்கிய தலைமைப் பண்பு திருச்சபையின் ஒவ்வோர் உறுப்பினரிடமும் துலங்க வேண்டும். மக்கள் சோர்வடைந்து தளர்ந்துபோகாமல் உறுதியோடு இயேசுவைப் பின்செல்ல வேண்டும் என்றால் அவர்களுக்கு நல்ல வழிகாட்டிகள் தேவை. அவர்களிடம் துலங்க வேண்டிய பண்புகள் யாவை என அறிய வேண்டும் என்றால் நாம் இயேசுவின் தலைமைப் பண்பைப் பார்த்தால் போதும். இயேசு மக்கள் மேல் ''பரிவு கொண்டார்'' என்பதே தலைமைப் பண்பின் உள்பொருள் ஆகும். அத்தகைய பரிவு எங்குள்ளதோ அங்கு இயேசுவின் தலைமைப் பண்பு வெளிப்படுகிறது என்பதே உண்மை.

மன்றாட்டு
இறைவா, எங்களை வழிநடத்துகின்ற ஆயராக உம்மை ஏற்று, உம் திருமகன் காட்டுகின்ற வழியில் நடந்துசெல்ல எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

''இயேசு பன்னிருவரையும் அனுப்பியபோது...கூறியது:
'...கொடையாகப் பெற்றீர்கள்;
கொடையாகவே வழங்குங்கள்''' (மத்தேயு 10:5அ,8ஆ)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு கலிலேயாவிலும் பிற பகுதிகளிலும் போதித்த வேளையில் பல மக்களைச் சந்தித்தார். பலர் அவரைப் பின்தொடர்ந்தனர். ஆனால் அவர்களுள் பன்னிருவரை இயேசு தனிப்பட்ட விதத்தில் தம் பணியைத் தொடர்ந்து ஆற்ற நியமித்தார். பேதுருவைத் தலைமையாகக் கொண்ட இப்பன்னிருவர் குழு முற்காலத்தில் இஸ்ரயேலில் தோன்றியிருந்த பன்னிரு குலமுதுவர்களுக்கு அடையாளம். இயேசு ஒரு புதிய இஸ்ரயேல் சமூகத்திற்கு வித்திட்டதுபோல, புதிதாகப் பன்னிருவரை நியமித்து அவர்கள் புதிதாக உருவாகிய சமூகத்திற்கு வழிகாட்டிகளாகச் செயல்பட நியமித்தார். இது ஒரு பெரிய பொறுப்பு என்பதில் ஐயமில்லை. ஆனால், இவ்வாறு இயேசுவின் தனிப்பட்ட அன்பிற்கு உரித்தான இப்பன்னிருவருக்கும் இயேசு அளித்த முக்கிய பணி அவர்கள் இறையாட்சி பற்றிய நற்செய்தியை இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்சென்று எல்லா மக்களுக்கும் அறிவிக்க வேண்டும் என்பதே. இப்பணி முதலில் இஸ்ரயேல் மக்களின் நடுவிலும் பின்னர் பிற இனத்தார் நடுவிலும் நிகழ்ந்தது. பன்னிருவரைப் பணியாளர்களாக அனுப்பியபோது இயேசு கூறியது: ''கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்''. பன்னிருவர் பெற்ற கொடை யாது? அவர்கள் இயேசுவின் தனிப்பட்ட அன்புக்கு உரியவர்களானார்கள்; அவர்களுக்கு இயேசு தலைமைப் பொறுப்புக் கொடுத்தார்; அவர்கள் தம்மைப் போல இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்றும், தாம் ஆற்றிய வியத்தகு செயல்களை மக்களின் நன்மைக்காக ஆற்ற வேண்டும் என்றும் அனுப்பினார். இதுவே பன்னிருவர் இயேசுவிடமிருந்து பெற்ற கொடை; இது அவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. தாம் பெற்ற கொடையைப் பிறரின் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டும் என இயேசுவின் சீடர் உணர்ந்தனர்.

-- இன்று இயேசுவைப் பின்செல்ல அழைக்கப்பட்ட நாமும் கொடைகள் பல பெற்றுள்ளோம். இவ்வுலகில் வாழ்வதற்குக் கடவுள் நம்மைப் படைத்தது முதல் கொடை. இயேசுவின் வாழ்வு, சாவு, உயிர்த்தெழுதல் வழியாக நம்மைப் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்டு நிலைவாழ்வுக்கு உரிமையாளராக்கியது மாபெரும் கொடை; கடவுளையும் அவர் பெயரால் நம்மைத் தேடிவந்த இயேசுவையும் அவர்களிடமிருந்து நமக்குக் கொடையாக வழங்கப்படுகின்ற தூய ஆவியையும் நாம் உள்ளத்தில் ஏற்று, கடவுளின் வழியில் நடப்பதற்காக அழைக்கப்படுவதும் கடவுள் நமக்குத் தருகின்ற கொடையே. இவற்றையெல்லாம் நமக்கென்று மட்டுமே வைத்துக்கொள்ளாமல் பிறரோடு பகிர்ந்துகொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். வானிலிருந்து பொழிந்து நிலத்தை வளப்படுத்துகின்ற மழை நிலத்திடமிருந்து கைம்மாறு எதிர்பார்ப்பதில்லை (குறள் 211). அதுபோல, கைம்மாறு எதிர்பாராமல் தம் நலன்களைப் பிறருக்குக் கொடையாக வழங்குவோருக்குக் கடவுள் தம்மையே கொடையாகக் கொடுப்பார்.

மன்றாட்டு
இறைவா, உம்மையே கொடையாக எங்களுக்கு வழங்கிய நன்மையை நினைந்து உம்மைப் போற்றுகின்றோம்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்