முதல் வாசகம்

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 10: 1-3,7-8,12


இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக் கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது; எவ்வளவு மிகுதியாகக் கனிகளைக் கொடுத்ததோ, அவ்வளவு மிகுதியாய்ப் பலிபீடங்களை அமைத்தது; எத்தகைய சிறப்புடன் நாடு செழிப்புற்றதோ, அதற்கு இணையாய்ச் சிலைத் தூண்கள் சிறப்புப் பெற்றன. இருமனம் கொண்ட மக்களாகிய அவர்கள், தங்கள் குற்றத்திற்காகத் தண்டனை பெறுவார்கள்; ஆண்டவர் அவர்களுடைய பலிபீடங்களைத் தகர்த்திடுவார்; அவர்களுடைய சிலைத் தூண்களை நொறுக்கிடுவார். அப்போது அவர்கள், ``நமக்கு அரசன் இல்லை; ஆண்டவருக்கு நாம் அஞ்சி நடக்கவில்லை; அரசன் இருந்தாலும், நமக்கு என்ன செய்வான்?'' என்பார்கள். சமாரியாவின் அரசன் நீர்மேல் குமிழிபோல் அழிந்து போவான். இஸ்ரயேலின் பாவமாகிய சிலைவழிபாட்டின் உயர்ந்த இடமெல்லாம் அழிக்கப்படும்; முள்களும், முட்புதர்களும் அவற்றின் பலிபீடங்கள்மேல் வளரும்; அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து `எங்களை மூடிக்கொள்ளுங்கள்,' குன்றுகளைப் பார்த்து `எங்கள்மேல் விழுங்கள்' என்று சொல்வார்கள். நீதியை நீங்கள் விதைத்துக் கொள்ளுங்கள்; அன்பின் கனியை அறுவடை செய்யுங்கள்; உங்கள் தரிசு நிலத்தை உழுது பண்படுத்துங்கள்; ஏனெனில் ஆண்டவர் வந்து உங்கள்மேல் நேர்மையைப் பொழியுமாறு நீங்கள் அவரைத் தேடும் காலம் நெருங்கி வந்துவிட்டது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 105: 2-3. 4-5. 6-7

பல்லவி: ஆண்டவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!

2 அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்!
அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்!
3 அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்;
ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக! -பல்லவி

4 ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்!
அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்!
5 அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!
அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த
நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். -பல்லவி

6 அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே!
அவர் தேர்ந்து கொண்ட யாக்கோபின் பிள்ளைகளே!
7 அவரே நம் கடவுளாகிய ஆண்டவர்!
அவரின் நீதித் தீர்ப்புகள் உலகம் அனைத்திற்கும் உரியன. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

மத்தேயு 10:1-7

பொதுக்காலம் 14 வாரம் புதன்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-7

அக்காலத்தில் இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார். அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள் பின்வருமாறு: முதலாவது பேதுரு என்னும் சீமோன், அடுத்து அவருடைய சகோதரர் அந்திரேயா, செபதேயுவின் மகன் யாக்கோபு, அவருடைய சகோதரர் யோவான், பிலிப்பு, பர்த்தலமேயு, தோமா, வரிதண்டினவராகிய மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு, தீவிரவாதியாய் இருந்த சீமோன், இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து. இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ``பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம். மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.டது" எனப் பறைசாற்றுங்கள்.

-------------------------

ஓசேயா 10: 1 – 3, 7 – 8, 12
நேர்மை என்னும் அணிகலன்

"இஸ்ரயேல் தழைத்து வளர்ந்த திராட்சைக்கொடி, அது மிகுதியான கனிகளைத் தனக்கே தாங்கி நிற்கின்றது". இறைவன் இஸ்ரயேல் மக்களை பலவிதமான வளங்களால் நிரப்பியிருந்தார். குறிப்பாக, பொருட்செல்வத்தால் நிரப்பியிருந்தார். வளமையும், மகிழ்ச்சியும் நாட்டில் குடிகொள்ள செய்திருந்தார். எவ்வளவு அதிகமாக இறைவன் அவர்களை ஆசீர்வதித்தாரோ, அவ்வளவுக்கு வேற்றுத் தெய்வங்களுக்கு பலிபீடங்களை அவர்கள் அமைத்தனர். இது இறைவனுக்கு வருத்தத்தையும், கவலையையும் தந்தது. தான் தேர்ந்தெடுத்த மக்கள், தனக்கு எதிராக கிளர்ந்து, தன்னை மறந்து, தான் கொடுத்த செல்வங்களை சரியான வழியில் பயன்படுத்தாமல்,: வேற்றுத்தெய்வங்களை ஆராதிப்பதற்கும், தவறான வாழ்க்கை வாழ்வதற்கும் பயன்படுத்துகிறார்களே, என்று கோபம் கொள்கிறார்.

யாருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறதோ, அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும். அதுதான் இஸ்ரயேல் மக்கள் வாழ்க்கையிலும் நடந்தது. இஸ்ரயேல் மக்கள் இறைவனால் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு ஆசீரையும், மீட்பையும் வழங்க இறைவன் திட்டமிட்டிருந்தார். ஆனால், இஸ்ரயேல் மக்கள் தங்களை உயர்த்திய இறைவனை மறந்து, நன்றியில்லாதவர்களாக, இறைவன் முன்னிலையில் அருவருப்பான செயல்களைச் செய்கிறவர்களாக மாறினர். அடிப்படையில் அவர்களிடத்தில் நேர்மைத்தனம் இல்லாததே இதற்கு காரணமாக இருந்தது. அதுதான் இறைவனின் கோபத்திற்கு அவர்களை ஆளாக்கியது. நேர்மையாளர்கள் தாங்கள் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதத்திற்கு உண்மையுள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால், இஸ்ரயேல் மக்களிடத்தில் அடிப்படை நேர்மை இல்லாத காரணத்தினால், அவர்கள் இறைவனை புறக்கணித்தார்கள்.

இன்றைக்கு இந்த சமூகம் நேர்மையான மனிதர்களை எள்ளி நகையாடுகிறது. பிழைக்கத் தெரியாதவர்கள் என முத்திரைக் குத்தி, ஒதுக்கிவைக்கிறது. இதனால், நேர்மையாக வாழ்கிறவர்களுக்கு இழப்பு இல்லை. மக்களுக்குத்தான் இழப்பு என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாதவர்களாக மக்கள் இருக்கிறார்கள். நேர்மையானவர்கள் இருக்க வேண்டிய அதிகாரத்தில், நேர்மையற்றவர்கள் இருக்கிறார்கள். இதனால், இந்த சமூகம் சீரழிந்துகொண்டிருக்கிறது. நேர்மையானவர்களை ஆதரிப்போம். இந்த சமூகத்தை வளப்படுத்துவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

மக்களுக்கான இறைப்பணி

கொடையாகப் பெற்றுக்கொண்டீர்கள், கொடையாகவே வழங்குங்கள் என்று நம் ஆண்டவர் இன்றைய நற்செய்தியில் மொழிகிறார். இயேசு தன்னுடைய சீடர்களை பணிக்காக அனுப்புகிறார்? என்ன நோக்கத்திற்காக அனுப்புகிறார்? மக்களுக்கு கடவுளின் ஆசீரும், அருளும் நிறைவாகக் கிடைக்க வேண்டும் என்று அனுப்புகிறார். இங்கே, இரண்டு செய்திகளை நாம் பெற்றுக்கொள்ளலாம்.

முதலாவதாக, இயேசுவின் சீடர்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசவில்லை. தங்களைப்பற்றி உயர்வாக எண்ணவில்லை. மற்றவர்களின் வாழ்வைக் கெடுத்து, குழப்பங்களை உருவாக்க வேண்டும் என்று எண்ணவில்லை. அவர்கள் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பிரசன்னம் மற்றவர்களுக்கு கடவுளின் இருப்பை உணர்த்துவதாக இருக்கிறது. அவர்கள் கடவுளின் அன்பை, தங்களின் செயல்கள் வழியாக உரக்கச்சொல்கிறவர்களாக இருக்கிறார்கள். இரண்டாவதாக, சீடர்கள் கடவுளின் அருளை மக்களுக்கு, குறிப்பாக தேவையில் இருக்கிறவர்களுக்கு பெற்றுத்தரும் வாய்க்காலாக இருக்கிறார்கள். அவர்கள் கடவுளின் அருளைப் பெற்றுத்தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள். கடவுளின் மன்னிப்பையும், இரக்கத்தையும் ஒவ்வொருவருக்கும் எடுத்துச்செல்லும், இறைப்பணியை செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

நாம் அனைவருமே மற்றவர்களுக்கு கடவுளின் ஆசீரைப் பெற்றுத்தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும். கடவுளின் அன்பு, அருள், ஆசீர், இரக்கம், மன்னிப்பு அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். மக்களை முழுமையாக கடவுளிடம் கொண்டுவர, எல்லாவித உதவிகளையும் முழுமையாகச் செய்ய வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

வேறுபாடுகள் நம்மை வளப்படுத்தட்டும்

ஒரு மிகச்சிறந்த தலைவர் என்பவர் மக்களை வழிநடத்துவதற்கு முன்னால், தனக்குரியவர்களைத் தேர்ந்தெடுத்து தன்னோடு கூட வைத்திருக்க வேண்டும். போதனைகள் தலைவரோடு முடிந்து விடக்கூடாது. தொடரப்பட வேண்டும். இயேசு தனக்குப்பிறகும் தனது பணி தொடர வேண்டும் என நினைக்கிறார். அது வெறும் பெயரை நிலைநாட்டுவதற்கானது அல்ல. மாறாக, மக்கள் மீட்பு பெற வேண்டும் என்பதற்காக. மீட்புப்பணி தொடர்ந்தாற்றப்பட வேண்டும் என விரும்புகிறார். எனவே தனக்கான சீடர்களைத் தேர்ந்தெடுக்கிறார்.

இயேசு தனது சீடர்களாகத் தேர்ந்தெடுத்தது சாதாரணமானவர்களையும், வேறுபட்ட எண்ணம் உள்ளவர்களையும் என்கிற உண்மை பலரையும் வியக்க வைக்கலாம். இந்த சாதாரணமானவர்களால் கருத்து வேறுபாடு உள்ளவர்களால் என்ன செய்து விட முடியும், என்ற எண்ணமும் உள்ளத்தில் எழும். இயேசுவின் சீடர்கள் ஒவ்வொருவருமே, வித்தியாசமான குணம்கொண்டவர்கள். ஒருவரின் இயல்பு மற்றவரின் இயல்புக்கு எதிரான பண்பு கொண்டதாக இருந்தது. உதாரணமாக, மத்தேயு வரிதண்டுபவர்.  நாட்டை உரோமையர்களுக்கு விற்றுவிட்டு, சுயநலத்திற்காக அவர்களோடு உறவாடுகிறவர்கள் என்று யூத சமுதாயத்தினால் முத்திரைக்குத்தப்பட்டவர். அதேபோல், தீவிரவாதி என அறியப்பட்ட சீமோன். நாடு விடுதலை பெற வேண்டும் என்பதற்காக உயிரைக்கொடுக்கவும் தயாராக இருக்கிற தீவிரவாதி. கடவுள் மட்டும்தான் எங்களுடைய அரசர், வேறு யாரும் அரசராக இருக்க முடியாது என்ற சித்தாந்தத்தில் ஊறியவர். மத்தேயுவைப்பார்க்க, நிச்சயம் சீமோனுக்கு கடுமையான கோபம் வந்திருக்கும். ஆனால், இரண்டு பேருமே இயேசுவை அன்பு செய்கிறார்கள்.

நமக்குள் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும், இயேசுவின் அன்பு நம்மை இணைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். வேறுபாடுகள் நமக்குள்ளாக பிளவினை ஏற்படுத்தக்கூடாது. அது நம்மை இணைக்கின்ற பாலமாக இருக்க வேண்டும். வேறுபாடுகளை ஒன்றிணைக்கச்செய்து, அதனை வளப்படுத்துவதுதான் நம் அனைவரின் கடமையாகும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறையனுபவம் பெறுவோம்

இயேசு தன் பணிக்காக சீடர்களைத் தேர்ந்தெடுக்கிற நிகழ்வைப்பார்க்கிறோம். இயேசுவின் சீடர்களை ஒவ்வொருவராகப் பார்த்தால், அவர்கள் அனைவருமே வௌ;வேறான இயல்பைக்கொண்டிருந்தவர்கள் என்பது நமக்கு நன்றாகத்தெரியும். அவர்களின் பலவீனங்கள் நமக்குத் தெரியாததல்ல. ஆனால், அவர்கள் அனைவரையுமே ஒன்றாக இணைத்தது, அவர்கள் பெற்றுக்கொண்ட இறையனுபவம். இந்த இறையனுபவத்தைப் பெற்றுக்கொண்ட பிறகுதான் இயேசுவே அவர்களைத்தேர்ந்தெடுக்கிறார். லூக்கா 6: 12 ல் பார்க்கிறோம்: “இயேசு வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்”.

இத்தகைய இறையனுபவத்தைப் பெற்றுக்கொண்டபிறகு தான் சீடர்களின் வாழ்வு மாற்றம் பெறுகிறது. இறையனுபவத்தைப்பெற்றுக்கொண்ட பிறகும் அவர்களிடம் பலவீனம் இருந்தது. குறைபாடுகள் இருந்தது. இருந்தாலும், கிறிஸ்துவின் மேல் கொண்டிருந்த விசுவாசத்தில் தளர்ச்சி இல்லை. அவர்களின் அர்ப்பண வாழ்வில் குறையேதுமில்லை. அவர்களின் பணியில் சோகமோ, சோர்வோ இல்லை. இந்த உற்சாகத்தை அவர்களுக்குக் கொடுத்தது இறையனுபவம்.

சீடர்கள் பெற்றுக்கொண்ட இறையனுபவத்தை நாமும் பெற்றுக்கொள்ள அழைக்கப்படுகிறோம். அத்தகைய இறையனுபவத்தை நமக்குக்கொடுப்பது செபம். செபத்தின் மீது முழுமையான ஈடுபாடு உள்ளவர்களாக நாம் வாழும்போது, இந்த இறையனுபவத்தை நாம் பெற்றுக்கொள்கிறோம். இறையனுபவம் வேண்டி இறைவனிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

புனித பெனடிக்ட் ஆதீனத் தலைவர்

ஓசே 10: 1-3, 7-8, 12
மத் 10: 1-7

வழிதவறிப் போன இஸ்ரயேல் மக்களிடமே!

இயேசு தம் திருத்தூதர்களைப் பணிக்கு அனுப்பும் இந்த நிகழ்ச்சியில் இயேசுவின் அறிவுரையை இன்று நாம் சிந்திப்போம்.

“பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம்.  சமாரியாவின் நகர் எதிலும் நுழையவேண்டாம்.  மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்”“ என்கிறார் ஆண்டவர். இறையாட்சியில் முன்னுரிமை தெரிந்தெடுக்கப்பட்ட இனமாகிய இஸ்ரயேலுக்குத்தான். அவர்கள் இறையாட்சியைப் புறக்கணிக்கும்போது, புற இனத்தாருக்கும் நற்செய்தி அறிவிக்கப்படும் என்பதே இறைத்திட்டம்.

இன்றைய காலச் சூழலில் திருச்சபையின் நற்செய்தி அறிவிப்புப் பணியைப் பற்றிச் சிந்திக்கும்போது, இயேசுவின் அறிவுரை நமக்கும் பொருந்துகிறது. இன்று நமது முதல் கடமை வழி தவறிப்போன கத்தோலிக்கர்களுக்கு மறு நற்செய்தி அறிவிப்பதே. பெயரளவுக்குக் கிறித்தவராக இருப்போர் பலர், வழிபாடுகளில் பங்கேற்காத கத்தோலிக்கர், வேறு சபைகளில் அடைக்கலம் புகுந்துவிட்ட கத்தோலிக்கர் இவர்களிடமே நாம் மறுநற்செய்தி அறிவிப்பு செய்யவேண்டும். அப்பணியில் நம்மை ஈடுபடுத்திக்கொள்வோமாக!

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். திருச்சபையின் வாழ்வில் ஆர்வமின்றி இருக்கும் கத்தோலிக்கரிடையே புது ஆர்வத்தைத் தூண்டும் பணியை நாங்கள் அனைவரும் ஆற்ற அருள்தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

அழைப்பும் அதிகாரமும்

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்து அவர்களுக்குத் தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார் என்று வாசிக்கிறோம். அந்தப் பன்னிருவரின் பெயர்களையும் வாசி;க்கிறோம். அவர்களில் பெரும்பாலானோர் மிகவும் சாமானியர்கள். அதிக படிப்பறிவற்றவர்கள். அவர்களுடைய ஒரே வலிமை இயேசு அவர்களைத் தேர்ந்துகொண்டார் என்பதுதான். ஆம், அழைத்தல் என்பது இறைவன் தரும் ஒரு கொடை. அது நன்றிக்குரியது. நம்மையும் இறைவன் அவரது சீடராக வாழ அழைத்திருப்பதும் ஒரு கொடையே. பல வேளைகளில் நமது விசுவாசத்தை, இறைப் பற்றை, திருச்சபையை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நன்றி செலுத்துவதுமில்லை. இன்று ஒரு கணம் நன்றி சொல்வோம்.

இயேசு பன்னிருவருக்கும் தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அதிகாரம் அளித்தார் என்னும் இறைவாக்கும் நமக்குப் பொருந்துகிறது. நமது வாழ்வின் எந்தச் சூழ்நிலையிலும் இயேசு நமக்கு இந்த அழைத்தலையும், அதிகாரத்தையும் தந்திருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம்.

இந்தச் சமூகத்தில் நாம் காணுகின்ற அநீதிகளை, தீமைகளை, ஏற்றத்தாழ்வுகளை. சாதிய, நிற, இன வெறிகளைத் தீய ஆவிகளென ஓட்ட வேண்டியது நமது கடமை. அதற்கான அதிகாரத்தை, துhய ஆவியின் ஆற்றலை இயேசு நமக்குத் தருகிறார். எனவே, தீமையை அகற்றும் பணியில் நாள்தோறும் ஒரு சிறிதாவது ஈடுபடவோமா?

மன்றாடுவோம்; அன்பின்; இயேசுவே, என்;னையும் ஒரு பொருட்டாக மதித்து, தாயின் வயிற்றிலேயே என்னைப் பெயர் சொல்லி உம் சீடனாக, மகனாக, மகளாக அழைத்தீரே. நன்றி. என்னால் இயன்றவரை இந்தச் சமூகத்திலும், என்னைச் சுற்றியும் நான் காணுகிற அநீதிகளை, தீமைகளை ஓட்ட எனக்கு ஆற்றல் தந்திருக்கிறீரே. உமக்கு நன்றி. இந்த அதிகாரத்தை நான் பயன்படுத்தி தீமைகளை ஓட்ட என்னை உந்தித் தள்ளுவீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார்.
தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
அத்திருத்தூதர் பன்னிருவரின் பெயர்கள்...'' (மத்தேயு 10:1-2)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு நற்செய்தியில் ''சீடர்'' என்னும் சொல் 73 தடவை காணப்படுகிறது. திருத்தூதர் என்னும் சொல்லுக்கு ''அனுப்பப்பட்டவர்'' (''அப்போஸ்தலர்'') என்பது பொருள். இச்சொல் மத்தேயு நற்செய்தியில் ஒருமுறை மட்டுமே உண்டு (மத் 10:2). பேதுரு, அந்திரேயா போன்ற 12 சீடர்களுக்கும் இயேசு ''திருத்தூதர்'' என்னும் பெயரை ஏன் வழங்கினார்? இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்க அவர்களை இயேசு ''அனுப்பினார்''. கிறிஸ்தவ நம்பிக்கை அறிக்கைத் தொகுப்பில் (''விசுவாசப் பிரமாணம்'') நாம் ''ஏக, பரிசுத்த, கத்தோலிக்க, அப்போஸ்தலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்'' என்று நம் நம்பிக்கையை அறிக்கையிடுகிறோம். ஆக, திருச்சபையும் ''தூது அறிவிக்கும்'' (''அப்போஸ்தலிக்க'') பணியைப் பெற்றுள்ளது. இயேசு இப்பணியை ஆற்றவே இவ்வுலகிற்கு வந்தார். அவருடைய பணியைத் தொடர்வதுதான் திருச்சபையின் பொறுப்பு. திருத்தூதர்களுக்கு இயேசு ''தீய ஆவிகளை ஓட்டவும், நோய்நொடிகளைக் குணமாக்கவும் அதிகாரம் அளித்தார்'' (மத் 10:1). இது முற்காலத்தில் மோசே தம் அதிகாரத்தை எழுபது மூப்பர்களோடு பகிர்ந்துகொண்ட நிகழ்ச்சியை நமக்கு நினைவூட்டுகிறது (காண்க: எண் 11:24-25). இயேசு அனுப்பிய திருத்தூதர்கள் இயேசுவின் பெயரால் போதிக்கின்ற அதிகாரத்தையும் பெற்றனர் (காண்க: மத் 28:20).

-- இவ்வாறு இயேசுவின் பணியைத் தொடர்வதில் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் பொறுப்பு உண்டு. நாம் பெற்றுள்ள திருமுழுக்கு நம்மைத் திருத்தூதர்களாக மாற்றுகிறது. அதாவது, நாம் இயேசுவை ஏற்று நம்புவதுபோல, பிற மக்களும் அந்நம்பிக்கையைப் பெற்று நலம் பெறும்பொருட்டு உழைப்பது நம் கடமை. ஆனால் ''அனுப்பப்படுதல்'' என்பதை நாம் ஏதோ தொலை நாட்டிற்குச் சென்று நற்செய்தியை அறிவிக்க நாம் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்று பொருள் கொள்ளலாகாது. நாம் வாழ்கின்ற சூழ்நிலைகளில் கிறிஸ்துவுக்குச் சான்று பகர்தலே ''அனுப்பப்படுதல்'' என்பதன் அடிப்படைப் பொருள் ஆகும். நாம் வாழ்கின்ற சமுதாயத்தில் நிலவுகின்ற நோய்கள் பல. மனித உள்ளத்தில் உறைந்துகிடக்கின்ற தீய சிந்தனைகளிலிருந்து தொடங்கி, சமுதாயத்தில் நிலவுகின்ற அநீத அமைப்புகள் உட்பட பல்வேறு தீமைகள் நம்மிடையே நிலவுகின்றன. அவற்றைப் போக்கிட நாம் கடவுளின் கைகளில் கருவிகளாக மாறிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் நற்செய்தியை அறிவிக்க எங்களை அனுப்பியதற்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

பன்னிரு சீடர்கள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்றய நற்செய்தியில் இயேசு தம்முடைய சீடர்களை இறைபணி செய்ய, நற்செய்தியை பறைசாற்ற அவர்களுக்கு அதிகாரம் கொடுக்கின்றார். இந்த சீடர்களை நோக்கும் போது இயேசுவின் தேர்வு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது. பேதுரு எதற்கெடுத்தாலும் முந்திரிக்கொட்டை போன்று முந்திக்கொள்பவர். நினைத்ததை பட்டென்று சொல்பவர் செயல்படுத்துபவர். அதோடு மட்டுமல்ல இயேசுவை மூன்று முறை மறுதலித்தவர். மூக்கின் மேல் கோபம் வருகின்ற, பொரிந்து தள்ளுகின்ற இடியின் மக்கள் என்றழைக்கப்பட்ட யாக்கோபு மற்றும் யோவான். ஒருகாலத்தில் 'காசே தான் கடவுளடா' என்று லஞ்சத்தில் ஊறி வாழ்ந்த, வரிவசூலித்தவரான மத்தேயு. தீவிரவாதத்த குழுவோடு இணைந்து தீவிரவாதத்தில் ஈடுபட்டிருந்த சீமோன்.

இவர்களையெல்லாம் இயேசு தேர்ந்து கொண்டார். இத்தகையோரல்லாம் இயேசுவிற்குப் பின் திருச்சபையின் தூண்களாக திகழ்ந்தவர்கள். பெரிய படிப்பு படிக்காதவர்கள், அறிவில் ஆற்றல் பெறாதவர்கள், நிபுணர்கள் அல்லாத சாதார்ணமானவர்கள், பணபலம், பொருள்பலம், செல்வாக்கு இல்லாதவர்கள்தான் இயேசுவின் சீடர்களாய் இருந்தார்கள். கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை. கோணலானதை நேராக்கவும், அசுத்தமாய் இருக்கிறதை சுத்தம் பண்ணவும் கடவுளால் முடியும்.நோவாய் இருக்கிறதை குணமாக்கவும், தவறினதை செவ்வநே நடத்தவும் கடவுளால் முடியும். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று. இந்த அப்போஸ்தலர்கள் போல் இயேசுவின் கரங்களில் நம்மை ஒப்புவிக்கவேண்டும்.

அன்புள்ள இறைவா, எங்களில் இருக்கின்ற குறைகளைப் போக்கி நாங்கள் உம் வழியில் நடக்கவும், என்னையும் என் குடும்பத்தையும் உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். இறைபணி செய்கின்ற அனைவருக்காகவும் மன்றாடுகின்றோம். அவர்கள் புனித வாழ்வாலும் அவர்களின் முன்மாதிரியன வாழ்கையினாலும் அனேகரை உம் பாதையில் திருப்பியருளும். அவர்கள் தவறுகின்றபோது நீரே அவர்களை நல்வழிப்படுத்தி உமது கைகளில் சிறந்த கருவிகளாகும்படி செய்தருளும்.

--அருட்திரு மரியதாஸ்

அழைப்பும் விசுவாசமும்...

விசுவாசம் உனக்கும் எனக்கும் உள்ள உறவு ஐயோ, திருச்சபையில் இப்படி நடக்கிறதே! இந்தக் குருக்களால் கேவலமாக இருக்கிறதே! இந்த ஆயர்களும் துறவிகளும் இப்படி வாழ்கிறார்களே! பலரின் ஆதங்கம் இது. என்னமோ திருச்சபையைக் கட்டியெழுப்பும் வஜ;ஜிரத் துhண்கள் அச்சு முறிந்த வண்டி போல் ஆகிவிட்டதாக அலறுகிறார்கள்.

வயதில் முதிர்ந்த பெண் ஒருவர் சொன்னார், விசுவாசம் எனக்கும் ஆண்டவனுக்கும் உள்ள உறவு. திருச்சபையின் பணியாளர்கள் பற்றி எனக்குக் கவலையில்லை. தெரிந்து தானே தேர்ந்தெடுத்தார், பணியைப் பகிர்ந்தார். பன்னிரண்டு பேரைத் தேர்ந்துகொண்டார். ஒவ்வொருவரும் ஒருவிதம். ஒரு முதியவர் அந்திரையா, ஒரு இளையவர் யோவான். ஒரு உழைப்பாளி யாக்கோபு, ஒரு அரசுப்பணியாளர் மத்தேயு. ஒரு எளிய மனம் கொண்ட ததேயு, ஒரு பணக்கார யூதாசு. மறுதலித்தப் பேதுரு. காட்டிக்கொடுத்த யூதாசு. ஒர மிதவாதி யாக்கோபு, ஒரு தீவிரவாதி சீமோன். நம்ப மறுத்த தோமா, சிந்தனையாளர் பிலிப்பு.

ஏன் இப்படிப்பட்டவர்களைத் தேர்ந்துகொண்டார்? செயல்படுவது நீங்களல்ல, நான். தேர்ந்துகொண்டது நீங்களல்ல, நான். இப்படிப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சாதாரணப் பணியும் அல்ல, சாமானியமானதும் அல்ல. மனிதனை முழுமனிதனாக்கும் தெய்வீகப் பணி. விண்ணரசின் நெருக்கத்தை முழக்கமிட்டு அறிவிக்கும் பணி.

உங்கள் விசுவாசம் இறைவனிலும் இறைப்பணியிலும் ஊன்றியிருக்கட்டும்.

--அருட்திரு ஜோசப் லீயோன்