இரண்டாம் ஆண்டு

முதல் வாசகம்

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1-4, 8உ-9


ஆண்டவர் கூறியது: இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எவ்வளவுக்கு நான் அவர்களை வருந்தி அழைத்தேனோ, அவ்வளவுக்கு என்னை விட்டுப் பிடிவாதமாய் விலகிப் போனார்கள். பாகால்களுக்குப் பலியிட்டார்கள், சிலைகளுக்குத் தூபம் காட்டினார்கள். ஆனால் எப்ராயிமுக்கு நடைபயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன். என் உள்ளம் கோபத்தை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பி வரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவிலிருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 80: 1-2. 14-15

பல்லவி: கடவுளே, எம்மை மீட்குமாறு உம் முக ஒளியைக் காட்டியருளும்!

1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2 உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்;
இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 1: 15

அல்லேலூயா, அல்லேலூயா! இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

மத்தேயு 10:7-15

பொதுக்காலம் 14 வாரம் வியாழன்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 7-15

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: நீங்கள் சென்று `விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது' எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள். பொன், வெள்ளி, செப்புக்காசு எதையும் உங்கள் இடைக் கச்சைகளில் வைத்துக்கொள்ள வேண்டாம். பயணத்திற்காகப் பையோ, இரண்டு அங்கிகளோ, மிதியடிகளோ, கைத்தடியோ எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஏனெனில் வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே. நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள். அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள். வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள் மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும். உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரை விட்டு வெளியேறும் பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப் பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

ஓசேயா 11: 1 – 4, 8 – 9
இறைவனின் தாயுள்ளம்

இறைவாக்கினர் ஓசேயாவின் நூலில் "திருமணம்" என்கிற உறவைப்பற்றிய உருவகம் இருப்பதை நாம் இதுவரை பார்த்தோம். இஸ்ரயேலுக்கும், இறைவனுக்கும் உள்ள உறவு, இந்த திருமண உறவு போன்றது என்பதைத்தான், இறைவாக்கினர் தன்னுடைய இறைவார்த்தையில் பகிர்ந்துகொள்கிறார். ஆனால், 11 ம் அதிகாரம், சற்று மாறுபட்ட உருவகத்தை நமக்குக் கொடுத்து, இந்த அதிகாரத்திற்கான தனித்துவத்தை சிறப்பாக விளக்கிக் கூறுகிறது. இந்த அதிகாரத்தில், பெற்றோர்-பிள்ளை உருவகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அதிகாரம் தான், இறைவனுடைய ஆழ்மனத்தை நாம் அறிவதற்கு உதவியானதாக இருக்கிறது. இறைவன் என்றாலே, அன்பும், இரக்கமும் நிறைந்தவர் என்பதை, இந்த அதிகாரத்தில் நாம் கற்றுக்கொள்ளலாம்.

ஒரு குழந்தையை, அந்த குழந்தையின் தாய் எப்படியெல்லாம் வளர்க்கிறாள்? என்பது நாம் அறிந்த ஒன்று. அது பேசும் மழலைச்சொல், அதுநடைபயிலும் அழகு, அதன் வளர்ச்சி ஒவ்வொன்றிலும் தாய் அகமகிழ்கிறாள். குழந்தையின் உலகமாக இருக்கிறாள். குழந்தைக்கும் தாய் தான், உலகமாக இருக்கிறது. அதேபோல இஸ்ரலே் என்னும் குழுந்தையை இறைவன் வளர்க்கிறார். அதன் வளர்ச்சியில் பூரிப்பு அடைகிறார். இஸ்ரயேல் தனக்கு தாயாக இருந்து வழிநடத்துகிற இறைவன்பால், முழு அன்பு கொண்டதாக இருக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில், தன் தாயை விட்டு, அது விலகி தவறான பாதைக்குச் செல்கிறது. தவறான பாதைக்குச் செல்லும் குழந்தையை கண்டித்து திருத்துவது, ஒரு தாயின் கடமை அல்லவா? அது தவறு என்று யாராவது சொல்வார்களா? ஒருவேளை அந்த குழந்தையைக் கண்டித்து திருத்தவில்லை என்றால் சொல்வார்கள். அந்த தாய் கண்டிக்கிறாள் என்பதற்காக, அந்த குழந்தையின் மீது, அவளுக்கு அன்பு இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? நிச்சயமாக இல்லை. ஆக, இறைவன் இஸ்ரயேல் மீது கொண்டிருக்கிற ஆழமான அன்பை இது வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இறைவன் நம் மீது வைத்திருக்கிற அன்பின் ஆழத்தை நாம் உணர வேண்டும். நான் தவறு செய்தால் என்னை தண்டிப்பாரா? என்று கேட்பதை விட, இறைவன் எந்த அளவுக்கு என் மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை, நாம் உணர வேண்டும். அந்த நேர்மறை பார்வை தான், நம்மை இறைவனின் முழுமையான அன்பை உணரச்செய்வதாக இருக்கும்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

கடவுளின் வழிநடத்துதல்

கடவுளின் பணியைச் செய்கிறபோது, கடவுள் தாமே நம்மை வழிநடத்துகிறார். கடவுளே நம்மை முழுமையாக பேணிப்பாதுகாக்கிறார். அவரிடத்தில் நம்மை முழுமையாக ஒப்படைத்து, அவர் கரம் நம்மை வழிநடத்துவதன்படி நடப்பது தான், நமது வாழ்வின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கும். இந்த முழுமையான கடவுளின் பராமரிப்பையும், பாதுகாப்பையும் திருத்தூதர்கள் எந்த அளவுக்கு அனுபவிக்க இருக்கிறார்கள் என்பதை, இந்த வாசகத்தில் நாம் பார்க்கலாம்.

இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, நிச்சயமாக திருத்தூதர்கள் இதெல்லாம் சாத்தியமா? என்று நினைத்திருப்பார்கள். பயணத்திற்கென்று எதையும் வைத்துக்கொள்ளாமல், உணவுக்கும் வழிபார்க்காமல், இதையெல்லாம் நம்மால் சிறப்பாகச் செய்ய முடியுமா? என்றால், அது நிச்சயமாக சந்தேகத்தை ஏற்படுத்தும். திருத்தூதர்களுக்கும் இதே சந்தேகம் எழுந்திருக்கும். அந்த சந்தேகத்தோடு தான், அவர்கள் செல்கிறார்கள். ஆனால், உண்மையான அனுபவத்தைப் பெற்றபிறகு, கடவுளின் பாதுகாப்பை முழுமையாக அனுபவித்தபிறகு, அவர்களுக்கு அது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கும்.

நமது வாழ்விலும் கடவுளின் பணியைச் செய்கிறபோது, அவரது பாதுகாப்பை முழுமையாக அனுபவிப்போம். அவரது பராமரிப்பு நமக்கு முழுமையாகக் கிடைக்கும். அந்த நம்பிக்கையை நாம் சீடர்களிடமிருந்து பெற்றுக்கொள்வோம். கடவுளின் பணியை மிகுந்த நம்பிக்கையோடு, உறுதியோடு செய்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

எதிர்பார்ப்புகள்

சோதோம், கொமோரா ஆகிய இரண்டு நகர்களும் அழிக்கப்படுவதை தொடக்கநூல் 19: 23 – 29 ல் பார்க்கிறோம். இந்த இரண்டு நகர்களும் அழிக்கப்பட்டதற்கு காரணம் விருந்தோம்பல் பற்றிய சட்டத்தை மீறியதுதான். விருந்தோம்பல் என்பது இஸ்ரயேல் மக்களுக்கு முக்கியமானது. வருகிறவர்களை அழைத்து நல்லமுறையில் உபசரிக்க வேண்டும். ஆனால், வரவேற்கவேண்டியவர்களே, அவர்களை தங்களின் ஆசைக்கு இணங்கச்செய்ய முயற்சி செய்தபோது, அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். அந்த வேளையில் ஆபிரகாம் அவர்களுக்காக மன்றாடுகிறார் (தொடக்கநூல் 18: 16). ஆனாலும், மனம்மாறவேண்டியவர்கள் வாய்ப்பினைப் பயன்படுத்தவில்லை.

அந்த இரண்டு நகர்களில் உள்ளவர்களும் கடவுளின் செய்தி அவர்களுக்கு தரப்பட்ட போது அதை பொருட்படுத்தவில்லை. வாழ்வு தரும் வார்த்தைக்கு செவிமடுக்கவில்லை. ஒருவேளை கடவுளின் மகன் சென்றிருந்தால், அவர்கள் ஒருவேளை மனம் மாறியிருக்கலாம். ஆனால், இங்கே கடவுளின் மகனான இயேசுவே நற்செய்தி அறிவிக்கிறார். கடவுளின் மகனே மக்களைத்தேடி வந்திருக்கிறார். அவர்களோடு உணவருந்துகிறார். தங்குகிறார். புதுமைகளும் அற்புதங்களும் செய்கிறார். அப்படியிருந்தும் மக்கள் கடவுளின் செய்தியை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், அது கடுமையான தண்டனைக்குரியது.

யாருக்கு அதிகமாக கொடுக்கப்படுகிறதோ, அவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்க்கப்படும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது, அதற்கான விளைவுகளும் அதிகமாக இருக்கும் கடவுளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சி எடுப்போம். இன்றைய வாழ்வில் மிகப்பெரிய பொறுப்புக்களில் இருந்து பணியாற்றக்கூடிய அரசியல் தலைவர்களுக்கு, அதிகமான பொறுப்பு உள்ளது என்பதை இது நமக்கு வெளிப்படுத்துகிறது. அந்த பொறுப்பிற்கு ஏற்றபடி, தங்களது வாழ்வை அவர்கள் அமைத்துக்கொள்ள வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசு கற்றுத்தரும் வாழ்க்கைநெறிமுறைகள்

இயேசு தன்னுடைய சீடர்களை பணிக்காக அனுப்புகிறார். அனுப்புதல் என்கிற இந்த வார்த்தைக்கு கிரேக்க மொழியில் நான்கு வகையான அர்த்தம் தரப்படுகிறது. 1. இராணுவத்தில் இருக்கிற வீரர்களுக்கு அவர்களின் தலைவரால் கொடுக்கப்படுகிற கட்டளை. இயேசு படைகளின் தலைவர் போல, தன்னுடைய வீரர்களை பணிக்கு அனுப்பும்போது, கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைச் சொல்லி அனுப்புகிறார். 2. தேவையில் இருக்கிற ஒரு நண்பன் தன்னுடைய நண்பனிடம் செய்ய வேண்டியதைச் சொல்வது. இயேசு சீடர்களை நண்பர்களாக நினைத்து, அவர் நினைத்ததைச் செய்து முடிக்க அவர்களைப்பணிக்கிறார்.

மூன்றாவதாக, ஒரு ஆசிரியர் தன்னுடைய சீடர்களுக்குக் கற்றுத்தருகிற நெறிமுறைகளைக் குறிக்கிறது. இயேசு ஓர் ஆசிரியராக, தன்னுடைய மாணவர்களுக்கு கற்றுத்தருகிறார். உலகை எதி;ர்கொள்வதற்கான வாழ்க்கை அனுபவங்களைக் கற்றுக்கொடுக்கிறார். 4. ஓர் அரசர் தன்னுடைய தூதரை அனுப்புகிறபோது சொல்கிற கட்டளைகளை இது குறிக்கிறது. இயேசு மெசியாவாக, அரசராக, தன்னுடைய தூதுவர்களுக்கு இதைக்கற்றுத்தருகிறார்.

நாம் ஒவ்வொருவதும் இயேசுவின் சீடர்களாக, அவர் நமக்கு சொல்கிற வழிமுறைகளைப்பின்பற்ற, அதை செயல்படுத்த அழைக்கப்படுகிறோம். இயேசுவின் இந்த வழிமுறைகளை நாம் பின்பற்றுகிறபோது, இந்த உலகத்தில் இறையரசு பரப்பப்படுகிறது. அதற்கு நாம் துணைநிற்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

புனித ஜான் கால்பெர்ட்

ஓசே 11: 1-4, 8-9
மத் 10: 7-15

அனைவருக்கும் நற்செய்தி அறிவியுங்கள்!

நேற்றைய வாசகத்தின் தொடர்ச்சியாக இன்றைய நற்செய்தி வாசகம் அமைந்திருக்கிறது. “நற்செய்தியை ஏற்றுக்கொள்வார்களா, இல்லையா“ என்னும் தயக்கமின்றி, அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்க, அமைதியின் வாழ்த்தினை வழங்கப் பணிக்கிறார் இயேசு.

“வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால்,  நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்.  அவர்கள் தகுதியற்றவர்களாய் இருந்தால்,  அது உங்களிடமே திரும்பி வரட்டும்”“ என்கிறார் இயேசு.

எனவே, நற்செய்தியையோ, அமைதியின் வாழ்த்தையோ ஆள்களைப் பார்த்து நாம் வழங்காமல், அனைவருக்கும் வழங்க அழைக்கிறார் இயேசு. நற்செய்தியையும், அதனோடு கூட வரும் இறையாசியையும் ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாத்தும் அவரவருடைய மனநிலை, வாழ்வியல் பார்வைகளைப் பொறுத்தது. ஆனால், நற்செய்தி அறிவிக்கப்படவேண்டியதோ, நமது கடமை. இந்த உணர்வுடன் நமது சொல்லாலும், வாழ்வாலும் நாம் காணும் அனைவருக்கும் நற்செய்தி அறிவிப்போமாக, இறையமைதியை வழங்குவோமாக,

மன்றாடுவோமாக: நற்செய்தியான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் இன்று சந்திக்கின்ற அனைவருக்கும் உமது இறையாசியை இன்று பகிர்ந்தளிக்கும் அருள் தாரும். ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

வாழ்த்து என்னும் நற்செய்திப் பணி

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு தன் சீடர்களை நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பினார். விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என முழக்கமிடச் சொன்னார். அதன் வெளி அடையாளங்களாக குணமாக்கச் சொன்னார். அமைதியை வழங்கச் சொன்னார். பிறர் ஏற்றாலும், மறுத்தாலும் அமைதியை அறிவிக்கச் சொன்னார்.

இந்தப் பணி இன்றும் தொடர வேண்டிய பணி. நற்செய்தி என்பது இன்று பலருக்கும் கசப்பான செய்தி;யாக இருக்கிறது. இன்றைய நுகர்வு கலாசார வாழ்வில் விண்ணரசின் மதிப்பீடுகளைவிட, உலக இன்பங்களின் கவர்ச்சி பெரிதாகத் தோன்றுகிறது. எனவே, பலருக்கும் இறைவார்த்தையும், நற்செய்தி அறிவிப்பும் தேவையற்றவையாக மாறி விட்டன.

இந்தச் சூழலிலும் இயேசு நம்மை நற்செய்தியைப் பறைசாற்ற அழைக்கின்றார். குறிப்பாக, நாம் சந்திக்கின்ற அனைவருக்கும் இறைவனின் அமைதியை, ஆசியை, சமாதானத்தை அறிவிக்கவும், வாழ்த்தவும் இன்றைய நற்செய்தி வழியாக நமக்கு அறைகூவல் விடுக்கிறார்.

ஒவ்வொரு நாளும் காலையில் நாம் சந்திக்க ஒவ்வொருவருக்கும் ஆசியை, வணக்கத்தை, அமைதியை ஆசி மொழியாகச் சொன்னால் என்ன? அது ஒரு நற்செய்தி அறிவிப்பன்றோ! பிறர் செவி மடுத்தாலும், இல்லாவிட்டாலும் பிறரை வாழத்துவோம். அந்த வாழ்த்துக்கும், ஆசிக்கும் அவர்கள் தகுதி உடையவர்களாய் இருந்தால், அது அவர்களிடம் தங்கும். இல்லாவிட்டால், நம்மிடமே திரும்பி வரட்டும். நாம் செய்ய வேண்டியதெல்லாம், எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரையும் வாழ்த்துவோம், அனைவருக்கும் ஆசி வழங்குவோம்.

மன்றாடுவோம்; ஆசிகளின் நாயகன் இயேசுவே, இந்தப் புதிய நாளுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த நாளில் நான் சந்திக்கின்ற அனைவருக்கும் உமது ஆசியை, அமைதியை வழங்கியருளும். நான் எந்தப் பாகுபாடுமின்றி அனைவரையும் வாழ்த்தவும், அமைதி வழங்கவும் என்னைத் துhய்மைப்படுத்தியருளும். நான் இன்று முழுவதும் உமது அமைதியின் கருவியாய் செயல்படுவேனாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''இயேசு பன்னிருவரையும் அனுப்பியபோது கூறியது: '...
விண்ணரசு நெருங்கிவிட்டது எனப் பறைசாற்றுங்கள்...கொடையாகப் பெற்றீர்கள்;
கொடையாகவே வழங்குங்கள்...' என்றார்'' (மத்தேயு 10:5,7,8)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு எப்பணியை ஆற்றவந்தாரோ அதே பணியைத் தொடர்ந்து ஆற்றுவதே திருத்தூதரின் பொறுப்பு. இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, ''மனம் மாறுங்கள். ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' என்னும் அறிவிப்போடு அதைத் தொடங்கினார் (மத் 4:17). ''விண்ணரசு'' என மத்தேயு குறிப்பிடுவதையே மாற்கு, லூக்கா ஆகியோர் ''இறையாட்சி'' எனக் குறித்தனர் (காண்க: மாற் 1:14-15; லூக் 4:14-15). கடவுள் விரும்புகின்ற சமுதாயம், கடவுளின் மதிப்பீடுகளை அடித்தளமாகக் கொண்டு உருவாகின்ற மக்கள் குடும்பம் என்பதே இறையாட்சி. இத்தகைய புதிய சமுதாயத்தில் மனிதர் ஒருவர் ஒருவரை எதிரிகளாகக் கருதாமல் ஒரே குடும்பத்தின் உறுப்பினராக ஏற்பர். மனிதர் அனைவருக்கும் தந்தையும் தாயுமாகக் கடவுளை ஏற்று, அவருக்கே பணிந்து, அவரிடத்திலும் அவர் அனுப்பிய நம் மீட்பர் இயேசுவிடத்திலும் நம்பிக்கை கொள்வர். கடவுளிடமிருந்து வருகின்ற தூய ஆவியால் வழிநடத்தப்படுவர். இந்தப் புதியதோர் உலகம் மனிதர் நடுவே உருவாக வேண்டும் என்பதற்காக உழைப்பது இயேசுவின் சீடர்களின் பொறுப்பாகும். இப்புதிய உலகத்தின் நிறைவு மனித வரலாற்றில் நிகழாது என்றாலும் அதை இவ்வுலகில் இயேசு தம் சாவு, உயிர்த்தெழுதல் வழியாக ஏற்கெனவே தொடங்கிவிட்டார்.

-- இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிந்து ஏற்றுக்கொள்கின்ற நாம் கடவுளிடமிருந்து ஒரு பெரிய ''கொடை''யைப் பெற்றுள்ளோம் என்பதை மறக்கலாகாது. ஒருவிதத்தில் கிறிஸ்தவ வாழ்வு முழுவதுமே கடவுள் நமக்குத் தருகின்ற கொடைக்கு நாம் நன்றிசெலுத்துகின்ற செயல் என்றே கூறிடலாம். கொடை என்பது உரிமையின் அடிப்படையில் கோருகின்ற ஒரு பரிசல்ல; மாறாக, அக்கொடையைத் தருபவர் தாமே மனமுவந்து நமக்கு அளிக்கின்ற ஒன்று. நம்மை இவ்வுலகில் மனிதராகப் படைத்து, பராமரித்துக் காக்கின்ற கடவுள் நமக்குக் கிறிஸ்தவ நம்பிக்கை என்னும் அரும் கொடையையும் அளித்துள்ளார். அதை நாம் நன்றியோடு ஏற்கிறோம். நன்றியின் வெளிப்பாடு இறைபுகழாக வெளிப்படும்; அதே நேரத்தில் நாம் பெற்ற கொடையை நமக்கென்றே பூட்டி வைத்துக்கொள்ளாமல் அதைத் தாராள உள்ளத்தோடு நம் சகோதர சகோதரிகளாகிய பிற மனிதரோடு பகிர்ந்திட வேண்டும். எனவேதான் இயேசு சீடரை நோக்கி, ''கொடையாகப் பெற்றுக் கொண்டீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்'' என்றார் (மத் 10:8).

மன்றாட்டு
இறைவா, நன்றியுள்ள மக்களாக நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இறைபணியாளர்கள் பணிவாழ்வு பற்றியும் இறைமக்கள் கடமையும் பற்றி இன்றைய நற்செய்தியில் இயேசு குறிப்பிடுகிறார். இறைப்பணிக்காக் செல்லும் இறைபணியாளர் கடைப்பிடிக்கவேண்டிய செயல் குறிப்பீடுகளை கானும் போது பணியாளர் எவ்வித உலகப் பற்றுமில்லாமல் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் நற்செய்தித் பணிசெய்வதில் மட்டுமே கவனம் கொள்ளவேண்டும் என்று தெளிவாகக் கூறுகிறார். அதாவது பற்றற்ற வாழ்வு வாழ வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறார். "வேலையாள் தம் உணவுக்கு உரிமை உடையவரே"என்னும் இறைவாக்கு இறைப்பணியாளர்களுக்குத் தேவையான குறைந்த பட்ச உணவு உறைவிடம் பயணச்செலவு அனைத்தையும் இறைமக்கள் செய்யக் கடமைப்பட்டவர்கள் ஆகிறார்கள்.

இறைப்பணியாளர்கள் இத்தகைய எளிய வாழ்வு வாழ அழைக்ப்பட்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து தம்மிடம் ஒப்டைக்கப்பட்டிருக்கும் இறைமக்களை நல் வழிநடத்த முற்படவேண்டும். அதேவேளையில் இறைமக்களும் ஞான மேய்ப்பர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளைச் செய்ய முன்வரவேண்டும். "என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்"(மத்10:42) என்பதையும் இயேசு குறிப்பிடுகிறார். இதோடு மட்டும் பொறுப்புகள் நிறைவு பெறுவதில்லை. கடவுளின் நற்செய்தி இத்தனை இன்னல்களுக்கிடையில் நமக்கு கொடுக்கபட்டுக்கொண்டிருக்கும் போது அதை ஏற்று நம் வாழ்வில் கடைப்பிடிக்கவேண்டும். இல்லையென்றால் தண்டனை கடினமாக இருக்கும் என்றும் இயேசு கூறுகிறார்.

அன்பு இறைவா, இறைப்பணியாளர்கள் தங்கள் இறைஅழைப்பை உணர்ந்து எழிய வாழ்கை மூலம் நற்செய்தியை பிறருக்கு கொண்டு செல்லவும், கடவுளின் வார்த்தையை எங்கள் உள்ளத்தில் ஏற்று அவ்வார்த்தைக் கேற்ப எங்கள் வாழ்வை அமைத்திடவும் அருள்புரியும்.

--அருட்திரு மரியதாஸ்

பணியின் பெருமை

எந்த வல்லரசும் தன் பணியாளர்களுக்கு இவ்வளவு சலுகைகள், பாதுகாப்புக்கள் வழங்கியதாக வரலாறு இல்லை, இனிமேலும் இருக்காது.

குணமாக்கும் வல்லமை, இறந்தோரை உயிர்தெழச் செய்யும் ஆற்றல், பேய் ஓட்டும் வரம். மனிதனை மனிதனோடும் சமூகத்தோடும் ஆண்டனோடும் உறவாக்கும் ஒப்பற்ற கொடை. பணத்தை நம்பியோ, பொன் பொருளை நம்பியோ செல்லவேண்டாம். என்னை நம்பிச் செல்லுங்கள். உணவு, உடை, இடம் தேடி அலைய வேண்டாம். நாம் ஏற்பாடு செய்வோம். எந்த அரசு தன் பணியாளர்களுக்கு இப்படிப் பராமரிப்புக் கொடுக்கும்? செல்லும் இடமெங்கும், நாட்டிலும் வீட்டிலும் அமைதியை வாழ்த்தாக, வாழ்வாக வழங்குங்கள். உங்களை ஏற்றுக் கொள்ளாமலும், உபசரிக்காமலும், உங்களுக்குச் செவிகொடுக்காமலும், உங்களை எதிர்ப்பவர்களை நாம் கடைசி நாளில் கடுந்தண்டனைக்கு உள்ளாக்குவோம். ஆஹா! என்னே பாதுகாப்பு.

இறைவா, உம் அரசில் ஒரு பணியாளனாய் அல்லது பணியாளர்களைப் பராமரிப்பவனாய் வாழ எனக்கு ஒரு வாய்ப்பு வழங்கும்.

--அருட்திரு ஜோசப் லீயோன்