முதல் வாசகம்

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 14: 1-9

ஆண்டவர் கூறுவது: இஸ்ரயேலே! உன் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வா; நீ உன் தீச்செயலால் வீழ்ச்சியுற்றாய். இம்மொழிகளை ஏந்தி ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்: ``தீவினை அனைத்தையும் அகற்றியருளும், நன்மையானதை ஏற்றுக்கொள்ளும்; நாங்கள் எங்கள் வாய்மொழியாம் கனிகளை உமக்கு அளிப்போம்; அசீரியர் எங்களை விடுவிக்கமாட்டார்கள்; குதிரைமேல் நாங்கள் ஏறமாட்டோம்; எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, `எங்கள் கடவுளே! ' என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் பரிவைப் பெறுகிறான்'' எனச் சொல்லுங்கள். அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்பு கூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்து விட்டது. நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்; அவன் லீலிபோல் மலருவான்; லெபனோனின் மரம்போல் வேரூன்றி நிற்பான். அவனுடைய கிளைகள் விரிந்து பரவும்; அவன் பொலிவு ஒலிவ மரம்போல் இருக்கும்; லெபனோனைப் போல் அவன் நறுமணம் பரப்புவான். அவர்கள் திரும்பி வந்து என் நிழலில் குடியிருப்பார்கள்; கோதுமை போல் தழைத்தோங்குவார்கள். திராட்சைக் கொடிபோல் செழிப்படைவார்கள். லெபனோனின் திராட்சை இரசம் போல் அவர்களது புகழ் விளங்கும். இனிமேல் எப்ராயிமுக்குச் சிலைகள் எதற்கு? நானே அவனுக்குச் செவி சாய்த்து, அவன்மேல் அக்கறை கொண்டுள்ளேன்; நான் பசுமையான தேவதாரு மரம் போன்றவன். உன் கனி எல்லாம் என்னிடமிருந்தே வரும். ஞானம் நிறைந்தவன் எவனோ, அவன் இவற்றை உணர்ந்து கொள்ளட்டும்; பகுத்தறிவு உள்ளவன் எவனோ, அவன் இவற்றை அறிந்து கொள்ளட்டும்; ஆண்டவரின் நெறிகள் நேர்மையானவை; நேர்மையானவர்கள் அவற்றைப் பின்பற்றி நடக்கிறார்கள்; மீறுகிறவர்கள் அவற்றில் இடறி விழுகின்றார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 51: 1-2. 6-7. 10-11. 12,15

பல்லவி: ஆண்டவரே, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.

1 கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப் படுத்தியருளும். -பல்லவி

6 இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே;
மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும்.
7 ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன்.
என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். -பல்லவி

10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்;
உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். -பல்லவி

12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்;
தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;
அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார்..

மத்தேயு 10:16-23

பொதுக்காலம் 14 வாரம் வெள்ளி


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 16-23

அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களை நோக்கிக் கூறியது: ``இதோ! ஓநாய்கள் இடையே ஆடுகளை அனுப்புவதைப் போல நான் உங்களை அனுப்புகிறேன். எனவே பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாயும் புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள். எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, `என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர். அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்கு முன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்கமாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

ஓசேயா 14: 1 – 9
வார்த்தைகளின் வழியில் இறைவனோடு பேசுவோம்

"மொழிகளை ஏந்தி, ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்"என்று, இன்றைய இறைவார்த்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அதாவது, கடவுளிடத்தில் வருகிறபோது, நம்முடைய வார்த்தைகளை ஏந்தி வந்து சொல்ல வேண்டும் என்பது இதன் பொருள். கடவுளிடத்தில் வருகிறபோது, நாம் வார்த்தைகளை ஏந்தி வருவது அவசியமானது. நம்முடைய உணர்வுகளோடு கடவுளிடத்தில் பேசுவது தவறல்ல. நாம் இறைவன் முன்னிலையில் அமைதியாக அமர்ந்திருக்கிறோம். உள்ளத்தளவில் நாம் ஆண்டவரோடு பேசுகிறோம். இந்த உணர்வுகளோடு பேசுவதோடு நாம் நின்றுவிடக்கூடாது. அதையும் கடந்து நாம் இறைவனிடத்தில் செல்ல வேண்டும். உணர்வுகளைக் கடந்து நாம் கடவுளிடத்தில் எப்படி செல்வது? வார்த்தைகள் வழியாக நாம் கடவுளிடத்தில் செல்ல வேண்டும்?

கடவுள் நம்முடைய உள்ளத்து உணர்வுகளை, நாம் அறிவார்ந்து சிந்திக்கிற எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அருமையான வார்த்தைகளைத் தந்திருக்கிறார். கடவுள் முன்னால் அமர்ந்து, அவருடைய அன்பை நாம் அனுபவிக்கிறேன் என்று சொல்வது மட்டும் போதாது. நான் கடவுளை அன்பு செய்வது உண்மை என்றால், "இறைவா! நான் உன்னை அன்பு செய்கிறேன்"என்று, வார்த்தைகள் வழியாக வெளிப்படுத்த வேண்டும். இறைவன் முன்னிலையில் நான் பாவம் செய்துவிட்டேன். நான் ஆண்டவரிடத்தில் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் என்றால், வெறுமனே உணர்வுகளை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது. "இறைவா! நான் தவறு செய்துவிட்டேன். என்னை மன்னியும்!" என்று, இறைவனுடைய மன்னிப்பை நாம் வார்த்தைகள் வழியாக வெளிப்படுத்தி, கேட்க வேண்டும்.

இறைவனோடு நம்முடைய நேரத்தை செலவிடுவது என்பது, நம்முடைய முதன்மையான தேவையாக இருக்க வேண்டும். அந்த நேரத்தில் வெறுமனே அமைதியிலும், உணர்வுளின் வழியாக வெளிப்படுத்துவதில் மட்டும் அல்லாமல், அதனையும் கடந்து, இறைவனை வார்த்தைகளில் வெளிப்படுத்த, முயற்சி எடுக்க வேண்டும். நம்முடைய எண்ணங்களை, சிந்தனைகளை வார்த்தைகளில் வெளிப்படுத்த இறைவனின் அருள் வேண்டி மன்றாடுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

பாவம் என்கிற அடிமைத்தனம்

கிறிஸ்தவர்கள் எதிர்கொள்கிற சவால்களை இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துக்காட்டுகிறது. ”ஓநாய்களிடையே அனுப்புவது போல, உங்களை நான் அனுப்புகிறேன்” என்று இயேசு சொல்கிறார். எதற்காக கிறிஸ்தவர்கள் அனைவராலும் வெறுக்கப்பட வேண்டும்? எந்த அரசு அமைந்தாலும், கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதன் காரணம் என்ன? இரக்கச்செயல்களிலும், நோன்பிலும், செபத்திலும் முழுமையாக தங்களையே ஈடுபடுத்திக்கொள்கிற கிறிஸ்தவர்களை, எதற்காக மற்றவர்கள் எதிரிகளாக பாவிக்க வேண்டும்?

மேற்கண்ட கேள்விகளுக்கு நாம் பல பதில்களை பார்க்கலாம். அந்த பதில்களில் முக்கியமான ஒன்று, அடிமைகளோடு தொடர்புடையது. அடிமைத்தனம் என்பது பரவலாக இருந்த காலகட்டம் அது. ஏராளமான அடிமைகள் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டனர். குறிப்பாக, உரோமையர்களின் அதிகாரத்திற்கு கீழே, ஏராளமானோர் அடிமைகளாக வாழ்ந்தனர். இந்த அடிமைகள் எந்த நேரத்திலும் தங்களுக்கு எதிராக கிளர்ந்தெழலாம் என்கிற, பயஉணர்வு, உரோமை ஆட்சியாளர்களிடையே இருந்தது. அவர்கள் கிளர்ந்தெழுந்தால், அவர்களை அடக்க முடியாது என்பது தெரியும். எனவே, அவர்களை கிளர்ந்தெழாதபடிக்கு, அவர்கள் பார்த்துக்கொண்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கிறிஸ்தவ மதம் அடிமைத்தனத்திற்கெதிராகப் போதித்தது. அடிமைகளுக்கு மறுவாழ்வு கொடுப்பதற்கு போராடியது. எனவே, அவர்கள் அதிகாரவர்க்கத்தினரால் வெறுக்கப்பட்டனர். துன்புறுத்தப்பட்டனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இந்த நற்செய்தி எழுதப்படுகிறது.

இன்றைக்கு நாமும் பாவத்திற்கு அடிமையானவர்களாக இருக்கிறோம். இந்த உலகம் நம்மை பாவத்திலிருந்து மீண்டு எழாதபடி, பல்வேறு வகையான தந்திரங்களால் நம்மை சிறைப்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த பாவம் என்னும் சிறையிலிருந்து நாம் விடுதலை பெற, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------

தெளிவான இலக்கு

இயேசு தனது சீடர்களை கடவுளின் பணிக்காக அனுப்பும்போது, பிற இனத்தவரின் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். இயேசு கடவுளின் மகன். இந்த உலகத்தையே படைத்து பராமரிக்கிறவர். இந்த உலகத்தில் உள்ள அனைவருமே அவரின் பிள்ளைகள். அப்படியிருக்க, இயேசு இப்படிப்பட்ட ஒரு குறுகிய எண்ணத்தை பறைசாற்றும் அறிவுரையைக்கூற வேண்டுமா? இயேசு குறுகிய மனம் கொண்டவரா? இயேசு சிதறிப்போன மக்களுக்காக மட்டும்தான் வந்தாரா? புறவினத்து மக்கள் கடவுளின் பிள்ளைகள் இல்லையா? என்ற கேள்விகள் நம் மனதில் நிச்சயமாக எழும்.

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள்: ”ஆழக்கால் வைத்தாலும், அகலக்கால் வைக்காதே”. இயேசுவின் இலக்கு இந்த உலகமெங்கிலும் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டுமென்பது. அந்த திட்டத்தை செயல்படுத்த பல முயற்சிகளையும், முன்னெடுப்புகளையும் மேற்கொள்கிறார். அதனுடைய ஒரு செயல்முறை திட்ட அடிப்படையில்தான், தனது எல்லையை சிறிது, சிறிதாக, படிப்படியாக விரிவுபடுத்துகிறார். யூத மனநிலையில் இருக்கிற தன்னுடைய சீடர்களையும் மெதுவாக பக்குவப்படுத்தும் பணியை இயேசு செய்தாக வேண்டும். ஒரேநாளில் இந்த உலகத்தை மாற்றிவிடுவேன் என்று சொல்லி, எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்வதை இயேசு விரும்பவில்லை.

இலக்கை நிறைவேற்ற பல வழிகளைப் பின்பற்றுகிறார். இலக்கு தெளிவாக இருக்கும்போது, தவறான வழிக்குச் செல்ல வாய்ப்பில்லை. நமது இலக்கை தெளிவாக வைத்துக்கொள்வோம். நமது இலக்கில் தெளிவாகவும், உறுதியாகவும் இருக்கிறபோது, வெற்றி நம் வசப்படும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உண்மையை துணிந்து பேசுவோம்

இயேசு எப்போதும் உண்மையைப் பேசுகிறவர். உண்மை மற்றவர்களுக்கு ஏற்றுக்கொள்வதற்கு கடினமாக இருக்கும் என்றாலும், அதை மூடி மறைக்கிறவர் அல்ல. விளக்கை ஏற்றி அனைவரும் விளக்குத்தண்டில்தான் வைப்பர். கட்டிலுக்கடியில் வைக்கமாட்டார்கள். அப்படி வைத்தால், அது யாருக்கும் பயன் தராது. உண்மையைத்துணிந்து எங்கும் பேசுகிறவர் இயேசு. தன்னுடைய பணியைத் தொடர இருக்கும் சீடர்களுக்கு, தன்னுடைய பணியின் விளைவுகள் தெரிந்திருக்க வேண்டும் என இயேசு ஆசைப்படுகிறார்.

இயேசுவின் பணியைச் செய்யும் சீடர்கள் எதிர்கொள்ளப்போவதைப்பற்றிய விளக்கத்தை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். உண்மையை உள்ளபடி உரைக்கும் ஆற்றலை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இந்த உலகத்தில் உண்மையைத்தவிர அனைத்தும் தலைதூக்கியிருப்பதை நாம் பார்க்கிறோம். பொய்மை இந்த உலகை நிரப்பிக்கொண்டிருக்கிறது. உண்மையைச் சொல்வதற்கு நமக்கு திரானியில்லை. எங்கே உண்மையைச் சொன்னால் அனைத்தையும் இழந்துவிடுவோமோ என்ற பயம் தான் நம்மை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறதே தவிர, உண்மைக்கு சான்று பகர வேண்டும் என்ற எண்ணம் நம்மிடம் அறவே இல்லை. அத்தகைய ஒரு துணிவை இயேசு நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.

உண்மைப்பேசக்கூடிய ஆற்றலை இயேசுவிடத்தில் நாம் கேட்போம். எத்தகைய இழப்புகள் வந்தாலும் அதைத்துணிந்து எதிர்கொள்ளத் தேவையான ஆற்றலை நாம் இறைவனிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

புனித கெஉறன்றி

ஓசே 14: 1-9
மத் 10: 16-23

ஓநாய்கள், ஆடுகள், பாம்புகள், புறாக்கள்...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நான்கு விலங்குகளை உவமேயமாகக் கையாளுவதைக் காண்கிறோம். இயேசு இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவர், இயற்கையிடமிருந்து கற்றுக்கொண்டவர், இயற்கையிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பவர். எனவே, இன்றைய வாசகத்தில் நான்கு விலங்குகள் பற்றிய செய்தி நமக்கு வியப்பைத் தருவதில்லை.

1. ஆடுகள்: இயேசு தம் சீடர்களை ஆடுகளுக்கு ஒப்பிடுகிறார். ஏற்கனவே தம்மை ஆயனாக முன்னிறுத்திய இயேசு, தம் சீடர்களை ஆடுகள் எனக் குறிப்பிட்டதில் வியப்பில்லை. ஆடுகள் மாசற்றவை, எளியவை, வலிமையற்றவை. உணவுக்கும் பாதுகாப்புக்கும் ஆயனைச் சார்ந்தே வாழ்பவை. அதுபோல, இயேசுவின் சீடர்களும் இயேசுவைச் சார்ந்தே வாழவேண்டும் என விரும்புகிறார் இயேசு.

2. ஓநாய்கள்: இந்த உலகும், உலகைச் சார்ந்த மனிதர்களும் ஓநாய்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆடுகளைத் தாக்கி, அழிக்கின்றன. அச்சுறுத்தி, விரட்டுகின்றன. இயேசுவின் சீடர்கள் இந்த ஓநாய்களைக் கண்டு அஞ்சாமல், இயேசுவின் துணையோடு அவற்றை எதிர்கொள்ளவேண்டும்.

3. பாம்புகள்: பாம்புகள் நுண்ணறிவுக்கும், முன் மதிக்கும் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன. இயேசுவின் சீடர்கள் அறிவாற்றலோடு, ஞானம் நிறைந்தவர்களாக, முன் மதியுடையவர்களாக, எதையும் திறனாய்வு செய்து, திட்டமிட்டுச் செயல்படுபவர்களாத் திகழ வேண்டும். குறிப்பாக, ஓநாய்கள் போன்ற மனிதர்களிடையே வாழும்பொழுது மிகவும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டும். தொலைக்காட்சி, திரைப்படம், அலைபேசி, நவீன சொகுசு சாதனங்கள்... முதலியன இறையாட்சியின் மதிப்பீடுகளைச் சிதைத்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

4. புறாக்கள்: புறாக்களைக் கபடற்ற பறவைகளாகச் சித்தரிக்கிறார் இயேசு. புறாக்களைப் போல இயேசுவின் சீடர்களும் எளியவர்களாக, கபடற்ற சிந்தனை உடையவர்களாக, குழந்தைகளைப் போன்ற மனநிலை உடையவர்களாக வாழ்ந்தால் விண்ணரசுக்கு உரிமையாளர்களாகலாம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் பாம்புகளைப் போல் முன்மதியுடையவர்களாகவும், புறாக்களைப்போல் கபடற்றவர்களாகவும் வாழ அருள்தாரும், ஆமன்.

அருள்பணி. குமார்ராஜா

 

துன்புறும் சகோதரருக்காக

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் சீடர்கள் சந்திக்க வேண்டிய சங்கடங்களை, சவால்களை, இன்னல்களை ஆண்டவர் இயேசு மிகத் தெளிவாகவே சொல்லிவிட்டார். அவரது சீடர்கள் என்பதற்காக எத்தனையோ துன்பங்களைக் கடந்த 21 நுhற்றாண்டுகளாகத் திருச்சபை சந்தித்து வந்திருக்கின்றது. உலகின் பல பகுதிகளிலும் இன்றும்கூட இயேசுவின் சீடர்களுக்கு நேரும் துன்பங்கள் சொல்ல முடியாதவை.

இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பேரிடர்கள் நாம் அறிந்ததே. அங்கே உள்ள பெரும்பான்மையான மக்கள் பழங்குடியினர், ஆதிவாசிகள், பாமரர்கள். கிறிஸ்தவர்கள் என்னும் ஒரே காரணத்துக்காக வீடுகளையும், உடைமைகளையும் விட்டுவிட்டு ஓட நேர்ந்தது. அவர்களில் பலரும் இன்னும்கூட அரசின் தற்காலிக முகாம்களில் தங்கியிருக்கிறார்கள் என்பது வேதனையான செய்தி.

கடந்த வாரம் அவர்களைச் சந்தித்த உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களைத் தங்களது ஊருக்குத் திரும்ப ஊக்குவித்திருக்கிறார்.

இன்றைய நாளில் அவர்களுக்காகவும், இன்னும் உலகம் முழுவதும் இயேசுவின் திருப்பெயருக்காகத் துன்பங்களைச் சந்திக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்காகவும் மன்றாடுவோமா!

மன்றாடுவோம்; ஆறுதலின் ஊற்றே இயேசுவே, இந்த நாளில் ஒரிசாவிலும், உலகின் இதரப் பகுதிகளிலும் கிறிஸ்தவர்கள் என்னும் பெயரைத் தாங்கியிருப்பதனால் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கும் எம் சகோதர, சகோதரிகளுக்காக மன்றாடுகிறோம். இறுதிவரை மன உறுதியுடன் இருப்போர் மீட்கப்படுவர் என்று சொன்னீரே. இவர்களுக்கு மன உறுதியையும், மீட்பையும், விடுதலை அனுபவத்தையும் வழங்கியருளும். மத சுதந்திரத்தோடு வாழ்கிற நாங்கள் துன்புறும் எம் சகோதர, சகோதரிகளுக்கு ஆறதலும். உதவிகளும் வழங்க எங்களை ஆசிர்வதியும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''இயேசு சீடரை நோக்கி, 'பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும் புறாக்களைப்போலக்
கபடு அற்றவர்களாகவும் இருங்கள்' என்றார்'' (மத்தேயு 10:16)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நற்செய்தி அறிவிக்க தம் சீடர்களை அனுப்பிய இயேசு அவர்களுக்குப் பல அறிவுரைகள் வழங்கினார். நற்செய்தி அறிவிப்போர் எதிர்ப்புகளைச் சந்திப்பர் என்பது உறுதி. ஏனென்றால் இறையாட்சியின் மதிப்பீடுகள் இவ்வுலகப் பாணியில் அமைந்த மதிப்பீடுகளைக் கேள்விக்கு உள்ளாக்கும்; அவற்றைப் புரட்டிப் போடும். அவ்வேளைகளில் எதிர்ப்புகள் எழும். இந்த எதிர்ப்புகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது இயேசுவின் சீடர்களை வாட்டுகின்ற ஒரு முக்கியமான பிரச்சினையே. இதற்கும் இயேசு வழிசொல்கிறார். அதாவது, சீடர்களுக்குத் துணையாக ''தந்தையின் ஆவியார்'' இருந்து செயலாற்றுவார் (மத் 10:20). இந்த ஆவியாரின் துணை கிறிஸ்தவ சமூகத்திற்கு என்றுமே உண்டென இயேசு தம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதி குறிப்பாக யோவான் நற்செய்தியில் விரிவாகக் காணப்படுகிறது (காண்க: யோவா 16:1-15). கடவுளின் துணை நமக்கு இருப்பதால் இயேசுவின் சீடர்களாகிய நாம் எதைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை.

-- இருப்பினும் இயேசு தம் சீடர்கள் மூடத் துணிச்சலோடு நடத்தலாகாது என்பதைக் குறிப்பிடும் விதத்தில், ''பாம்புகளைப் போல முன்மதி உடையவர்களாகவும், புறாக்களைப் போலக் கபடு அற்றவர்களாகவும் இருங்கள்'' என்னும் அறிவுரையை வழங்குகின்றார் (மத் 10:16). பாம்பு தனக்கு ஆபத்து வருகின்ற வேளையில் தப்பித்து ஓடப் பார்க்கும்; ஆனால் தப்பியோட வழியில்லாத நிலையில் தன்னைத் தாக்க வருகின்றவரை எதிர்த்துத் தாக்கத் தயங்காது. எனவே, ''முன்மதி'' என்னும் நற்பண்புக்குப் பாம்பு உருவகம் ஆயிற்று. அதுபோல, புறா பொதுவாக அமைதியின் சின்னமாகக் கருதப்படுவது. மாபெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உலகமே மூழ்கவிருந்தபோது கடவுள் நோவாவையும் அவருடன் இருந்தவரையும் காப்பாற்றிய கதை தொடக்க நூலில் கூறப்படுகிறது. அப்போது வெள்ளப் பெருக்கு முடிவுற்று ஆபத்து நீங்கியது என அறிந்துகொள்ளும் விதத்தில் புறா தன் அலகில் ஒலிவ இலையைக் கொணர்ந்ததை நோவா புரிந்துகொண்டார் (தொநூ 8:6-12). எனவே அமைதியையும் கபடற்ற தன்மையையும் நல்லிணக்கம் கொணர உழைப்பதையும் காட்டுகின்ற சின்னமாகப் புறா உள்ளது. சீடர்களிடம் இப்பண்புகளும் துலங்க வேண்டும். எனவே, நாம் அமைதியை நிலைநாட்டும் மனிதர்களாகக் கபடற்ற உள்ளத்தோடு செயல்பட அழைக்கப்படுகிறோம். அதே நேரத்தில் கால இடச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முன்மதியோடு செயல்படுகின்ற பண்பும் நம்மில் துலங்கிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, அமைதியின் தூதுவர்களாக நாங்கள் முன்மதியோடு செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

இறுதிவரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இறைபணியாளர்கள் பணிவாழ்வு எவ்வளவு கடினமானது என்தை இயேசு கூறுகிறார். ஆட்டுக்குட்டிகளுக்கிடையே ஓநாயை அனுப்பவது போல் அல்ல ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவது போல் என்கிறார். ஆட்டுக்குட்டிகள் என்ன பாடுபட வேண்டும்! கடித்துக் குதறி நார்நாராக்கிவிடும். ஆனால் எதைப்பற்றியும் கவலைகொள்ள வேண்டாம், எந்த துன்பம் வந்தாலும் கவலை கொள்ளத் தேவை இல்லை என்கிறார். தேவையானது எல்லாம் கடவுளால் அருளப்பபடும் என்ற மனஉறுதியையும் கொடுக்கிறார். ஒன்றே ஒன்றை இறைபணியாளர்களிடம் எதிர்பார்கின்றார். இறுதி வரை நிலைத்து நிற்கவேண்டும்.

இந்த இறைவாக்குகள் இயேசு தன்னுடைய சீடர்களுக்கு மட்டும் கொடுத்ததல்ல. கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்கும் கொடுத்த இறைவாக்குகள். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு வாழ்வெதென்பது மிகவும் கடினமான ஒன்றுதான். இந்த அறநெறியில் வாழ்வது ஓநாய்கிடையே ஆட்டுக்குட்டிகள் படும் பாடாகத்தான் இருக்கும். பலர் இந்த கடினமான கிறிஸ்தவ வாழ்கை நெறியில் பலம் இன்றி தத்தளிப்பதையும் நெறியில் தடம் மாறுவதையும், தவறிப்போவதையும் கண்கூடாகக் காண்கிறோம் அல்லது நாமே அவ்வகையில் வாழ்ந்தும் இருக்கிறோம். இறுதிவரை நிலைத்து நின்றால் நிச்சயம் வெற்றிவாகை சூடுவோம் என்பதில் ஐயமில்லை. பலசூழ்நிலைகளில் நாம் கிறிஸ்தவ நன் நெறியில் வாழ்வதற்கு தொடர்து முயற்சிப்பதில்லை.

அன்பு இறைவா, உண்மையான கிறிஸ்தவ நெறியில் நாங்கள் வாழ்வதற்கு போதிய வலிமையயையும் ஆற்றலையும் எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் எங்கள் பலகீனத்தால் தவறும் போது நீரே எம்மை கைதூக்கி நன்நெறியில் வழிநடத்தும். துன்பம் நிறைந்த கிறிஸ்தவ வாழ்கை நெறியில் நாங்கள் மனவலிமையுடன் இறுதிவரை நிலைத்து நிற்க அருள்தாரும்.

--அருட்திரு மரியதாஸ்

ஒரு அறிவுரை! ஒரு அறிமுகம்! ஓரு உண்மை!

அறிவுரை:
இயேசுவுக்காக பணியாற்றும் போதும், நற்செய்தி மதி;ப்பிட்டின் படி வாழும் போதும், விழி;ப்போடு செயல்பட வேண்டும். ஏனெனில் எதிரி யாரை விழுங்கலாம் என்று கர்ச்சித்து அலைகி;ன்றான். ஆகவே துன்பங்கள் , வேதனைகள், அவமானங்கள் ஏராளம், ஏராளம்.

அறிமுகம்:
அறிவுரை வழங்கும் போது, எதிரி எப்படிப்பட்டவன் என்பதையும் அறிமுகம் செய்கிறார்.இயேசுவுக்காக நாம் பணியாற்றும் இச்சமூகம் எப்படிப்பட்டது என்பதையும் உணரமுடிகிறது. கடினமனம் கொண்டது, வணங்கா கழுத்துள்ளது, கொடூர மனம் கொண்டது. கேவலப்படுத்தும், அவமானப்படுத்தும,; காவல் நிலையம், மக்கள் மன்றம், நீதி மன்றம், கொலைக்களம் வரை இழுத்தச்செல்லும் வன் மனம் கொண்டது .

உண்மை:
நற்செய்தியை முழக்கமிட்டு அறிவிக்கும்போது, பேசுவது நாம் அல்ல தந்தையின் ஆவியாரே. பேசும் பொருளும் நம்முடையது அல்ல . பேசும் முறையும் நமது அல்ல . என்ன பேசுவது எப்படி பேசுவது என கவலை வேண்டாம். என்ன பேச வேண்டும்,; எப்படி பேசவேண்டும் என்பது அந்நேரத்தில் அருளப்படும். நற்செய்திப்பணியாளர்கள் இறைவனி;ன் பணியாளார்கள். இறைபணிகளுக்கும் பணியாளர்களுக்கும் துன்பங்கள் தடைகள்; தடங்கள்கள் கொடுக்கும் போதெல்லாம் இறைவனோடு போராடுகிறோம்.

இறைவனோடு போராடி வென்ற மனிதன் இல்லை, அழிந்தவர்கள் ஏராளம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்