முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 8-10; 7: 54-60

அந்நாள்களில் ஸ்தேவான் அருளும் வல்லமையும் நிறைந்தவராய் மக்களிடையே பெரும் அருஞ்செயல்களையும் அரும் அடையாளங்களையும் செய்து வந்தார். அப்பொழுது உரிமையடைந்தோர் எனப்படுவோரின் தொழுகைக் கூடத்தைச் சேர்ந்த சிலரும் சிரேன், அலக்சாந்திரியா நகரினரும் சிலிசியா, ஆசியா மாநிலத்தவரும் ஸ்தேவானோடு வாதாடத் தொடங்கினர். ஆனால் அவரது ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, ``இதோ, வானம் திறந்து இருப்பதையும், மானிடமகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்'' என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர்மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல் எறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான் மீது கல் எறிந்தபோது அவர், ``ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்'' என்று வேண்டிக் கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், ``ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும்'' என்று சொல்லி உயிர்விட்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 31: 2-3. 5,7. 15-16
பல்லவி: ஆண்டவரே, உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.

2 எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்;
என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3 ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே;
உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். -பல்லவி

5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்;
வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளுவீர்.
7 உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன்; என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர். -பல்லவி

15b என் எதிரிகளின் கையினின்றும் என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும்.
16 உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்;
உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
திபா118: 26ய,27ய
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார். அல்லேலூயா.


டிசம்பர் 26, மத்தேயு 10:17-22

டிசம்பர் 26 புனித ஸ்தேவான் விழா

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-22

அக்காலத்தில் இயேசு தம் திருத்தூதர்களுக்குக் கூறியது: ``எச்சரிக்கையாக இருங்கள். ஏனெனில் மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக் கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள். என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள். இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள். இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, `என்ன பேசுவது, எப்படிப் பேசுவது' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். ஏனெனில் பேசுபவர் நீங்கள் அல்ல. மாறாக, உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார். சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும், தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள். பிள்ளைகள் பெற்றோர்க்கு எதிராக எழுந்து அவர்களைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர். இறுதி வரை மன உறுதியுடன் இருப்போரே மீட்கப்படுவர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருத்தூதர் பணி 6: 8 – 10, 7: 54 – 60
நீதிக்காக குரல் கொடுப்போம்

திருச்சபையின் முதல் மறைசாட்சி என்று அழைக்கப்படும் ஸ்தேவானின் இறப்பு இன்றைய முதல் வாசகத்தில் நமக்கு கொடுக்கப்படுகிறது. அவருடைய இறப்பு கொடூரமானது, கொடுமையானது. கல்லெறிந்து கொலை செய்யப்படுகிறார். அதே வேளையில், அவருடைய இறப்பு ஒருபுறத்தில் இயேசுவின் இறப்பை ஒட்டியதாக இருக்கிறது. இயேசு கொடுமையாக சிலுவையில் அறையப்பட்டார். அந்த தருணத்திலும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காக விண்ணகத்தந்தையிடத்தில் பரிந்து பேசுகிறார். அதே போல ஸ்தேவானும், தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்களுக்காக, விண்ணகத்தை நோக்கி மன்றாடுகிறார்.

இந்த நிகழ்வு, ஒரு சவாலான பாடத்தையும் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. ஆண்டவராகிய இயேசு இறந்து உயிர்த்தெழுந்து விட்டார். சாவை எதிர்த்து வெற்றி கொண்டுவிட்டார். ஆனாலும், பாவம் தொடர்கிறது. சாவுக்கும் வாழ்வுக்கும் இடையேயான போராட்டம் அவ்வளவு எளிதாக முடிந்து விடாது. இந்த போராட்டத்தில் ஒவ்வொருவரும் கடவுளின் பக்கம் நின்று போராட வேண்டும் என்பது தான் நம் முன்னால் இருக்கிற சாட்சி. இயேசுவின் இறப்போடு, மண்ணகத்தில் நேர்மையாளர்கள் இரத்தம் சிந்துவது நின்றுவிடப்போவதில்லை. வரலாற்றை நாம் திரும்பிப் பார்க்கிறபோது, இயேசுவின் இறப்பிற்குப் பின் வரலாற்றில் எத்தனையோ நேர்மையாளர்கள் நல்ல விழுமியங்களுக்காக தங்கள் உயிரைத் துறந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நாம் எப்போதுதும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

நம்முடைய வாழ்வில் நாம் நீதியின் பக்கம் நிற்கிறோமா? அநீதியின் பக்கம் நிற்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். தீமைக்கு எதிரான போராட்டத்தில் நம்முடைய பங்கு என்ன? என்று நம்மையே கேட்டுப் பார்ப்போம். எந்த வழிகளில் எல்லாம் நம்மால், சிறப்பாக இந்த போராட்டத்தில் பங்கெடுக்க முடியுமோ, அத்தனையிலும் நாம் சிறப்பாக பங்கெடுக்க இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

செபம்

கிறிஸ்துவின் பொருட்டு ஒருவர் என்னென்ன துன்பங்களையெல்லாம் அனுபவிக்க நேரிடும் என்பதையும், அதற்கு சிறந்த சான்றாக வாழ்ந்த புனித முடியப்பரையும் இன்றைய நாளில் தாய்த்திருச்சபை நினைவுகூர்கிறது. கிறிஸ்துவைப்பின்பற்றுவது அவ்வளவு எளிதானது அல்ல. கிறிஸ்துவை பற்றிப்பிடிப்பது சாதாரணமானது அல்ல. எல்லோராலும் அப்படியொரு வாழ்வை வாழ்ந்துவிட முடியாது. அப்படி வாழ வேண்டுமென்றால், நமது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை, நாம் இன்று நினைவுகூறும் புனிதரின் விழா நமக்கு எடுத்துரைக்கிறது.

புனிதர்களின் வெற்றிக்கு எது காரணம்? என்று, எல்லா புனிதர்களின் வாழ்வையும் நாம் அலசி ஆராய்ந்தால், நமக்கு கிடைப்பது ஒரு முக்கியமான செய்தி. அதுதான் “செபம்“. செபம் என்பது கடவுளின் திருவுளத்தையே மாற்றக்கூடிய வல்லமை படைத்ததாயும், கடவுளின் திருவுளத்தை நாம் ஏற்றுக்கொள்வதற்கு வலிமை தருவதாகவும் இருக்கிறது. அதைத்தான் இந்த புனிதரின் வாழ்விலும் பார்க்கிறோம். கடவுளுக்காக தனது வாழ்வில் எல்லா துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறார். கடவுளின் திருவுளத்தை ஏற்றுக்கொள்வதற்கு செபம் அவரை பக்குவப்படுத்துகிறது. அதிலும் மேலாக, தனது இறப்பிலும், தன்னுடைய பகைவர்கள் மட்டில், கடவுளிடம் அவர்களுக்காக மன்றாடுவது, அவரது ஆளுமையை செபம் எந்த அளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதற்கு சிறந்த அடையாளமாக இருக்கிறது.

நமது வாழ்விலும் செபம், கடவுளின் திருவுளத்தை ஏற்றுக்கொள்வதற்கு நம்மையே பக்குவப்படுத்த வேண்டும். அதேபோல, நாம் கடவுளிடத்தில் நம்பிக்கையோடு செபிக்கிறபோது, நிச்சயம் கடவுளின் அருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையை அது தருவதாக இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை செபம், நம்மில் வளர்க்கட்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளின் அருகாமை

இயேசு தன்னைப் பின்பற்றுவதால், இறையரசை அறிவிப்பதால் வரக்கூடிய துன்பங்களை, சித்திரவதைகளைப் பற்றி இங்கே அறிவிக்கிறார். இதற்கான மேற்கோள்களை ஏவப்படாத நூல்களிலும் நாம் காணலாம். ஏவப்படாத நூல்களில் எழுதப்பட்டுள்ள சாராம்சம் இதுதான்: கடவுளின் நாள் வருகிறபோது, உறவுகளுக்கிடையே பிரிவினைகள் தோன்றும். இயேசு இன்றைய நற்செய்தியிலே சொல்லக்கூடிய வார்த்தைகள் அனைத்தும், யூதர்கள் அறிந்திருந்த வார்த்தை. இவையனைத்துமே யூதர்கள் எழுதிய நூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை. யூதர்கள் முற்றிலும் தெரிந்திருந்தவை. பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாட்டிற்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இந்த நூல்களை, ஒவ்வொரு யூதனும் வாசித்திருந்தான்.

இந்த துன்பங்களை எல்லாம் பார்க்கிறபோது, மக்கள் கவலை கொள்ளத்தேவையில்லை என்பது இயேசுவின் செய்தி. துன்பம் வருகிறபோது ஒருவன் எப்படி கவலை கொள்ளாமல் இருக்க முடியும்? அது சாத்தியமா? நம்மோடு உறவில் நெருங்கியிருக்கிற ஒருவர், நமக்கு எதிராக பேசுகிறபோது, நம்மைப் பகைக்கிறபோது, எப்படி நம்மால் கவலைப்படாமல் இருக்க முடியும்? பின் ஏன் இயேசு இப்படிச் சொல்கிறார்? இயேசுவின் செய்தி இதுதான்: இதெல்லாம் நடக்கிறபோது, கடவுளின் நாள் வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதனால் மகிழ்ச்சி கொள்ளுங்கள் என்று சொல்கிறார்.

நமது வாழ்விலும் கவலை வருகிறபோது, வாழ்வே இருளாகத் தோன்றுகிறபோது, நாம் கவலை கொள்ளத்தேவையில்லை. ஏனென்றால் மீட்பு நமக்கு அருகாமையில்  இருக்கிறது. மீட்பர் நம் அருகிலே இருக்கிறார் என்கிற உணர்வுக்குள்ளாக நாம் செல்ல வேண்டும். தொடக்கத்தில் இயேசுவுக்காக துன்பங்களைத் தாங்கிக்கொண்ட அனைவருமே, இந்த உணர்வால் தான், ஆட்கொள்ளப்பட்டிருந்தார்கள். அதனால் தான், அவர்களால் அந்த துன்பங்களைத் தாங்க முடிந்தது. நாமும் கடவுள் நம் அருகில் இருக்கிறார் என்பதில் ஆனந்தம் கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இயேசுவைப்பின்தொடர்வோம்

இயேசுவைப் பின்தொடர்ந்தால் வருகிற துன்பங்களைக்குறித்து, இயேசு முதலிலே எச்சரிக்கிறார். தன்னைப்பின்தொடர்ந்தால், புகழும், பெயரும் கிடைக்கும் என்று ஏமாந்து விடக்கூடாது என்பதை தனது சீடர்களுக்கு இயேசு தெளிவுபடுத்துகிறார். ஏனென்றால், சீடர்கள் தங்களுக்குள்ளாக யார் பெரியவர்? என்று சண்டையிட்டுக்கொள்வதை இயேசு நிச்சயமாக விரும்பவில்லை. இயேசுவை பின்தொடர்கிறபோது, அடிப்படையிலே மற்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, ஒரு சவாலான வாழ்வு வாழ வேண்டும் என்பதும் இயேசுவின் அழைப்பு.

முதலிலே தாங்கள் சார்ந்திருக்கிற சமயத்திலிருந்து எதிர்ப்பு வருவதை இயேசு சொல்கிறார். சமயம் என்பது யூதர்களுக்கு தங்களது உயிரைவிட மேலான ஒன்று. யூதர்களின் அடையாளமே சடங்குகளும், சம்பிரதாயங்களும் தான். அப்படிப்பட்ட சமயத்திலிருந்து, இயேசுவைப் பின்தொடர்கிறவர்கள் பிரிக்கப்படுவார்கள். இரண்டாவது, ஆளுகின்ற அரசு. யூதர்களுக்கு ஒரே ஒரு அரசர் தான். யாவே இறைவன் தான் அந்த அரசர். யூதர்கள் உரோமையர்களுக்கு கீழாக இருந்தாலும், அரசால் துன்புறுத்தப்படுவது என்பது கடுமையான ஒன்று. அதையும் அவர்கள் தாங்கிக்கொள்ள வேண்டும். மூன்றாவதாக, குடும்பத்திலிருந்து வருகிற எதிர்ப்பு. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், நம்மோடு உடனிருந்து நமக்கு அரணாக இருப்பது, நமது உறவுகள் தான் அப்படிப்பட்ட உறவுகளே நம்மிடமிருந்து பிரிக்கப்படுவார்கள்.

இவ்வளவு பிரிவுகளையும் தாங்கிக்கொண்டு, நாம் இயேசுவைப்பின்தொடர வேண்டுமென்றால், அது எளிதான காரியம் அல்ல. ஆனால், அது முடியாததும் அல்ல. மன உறுதி நமக்கு வேண்டும். அப்படி மன உறுதியோடு நாம் இருந்தால், நிச்சயமாக இயேசுவைப் பின்தொடர முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கிறிஸ்துமஸ் மகிழ்விலும் சான்று பகர்வோம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

முதல் மறைசாட்சியான புனித ஸ்தேவானின் விழாவை இன்று கொண்டாடுகிறோம். இயேசுவுக்காக தன் உயிரையும் கையளித்து, மறைசாட்சிகளின் வரலாற்றில் முதல் இடம் பெற்ற பெருமையை அடைந்தவர் புனித ஸ்தேவான். அவரது இறப்பு இயேசுவின் இறப்பைப் போலவே இறைவனின் மன்னிப்பை வேண்டுவதாக அமைந்திருக்கிறது. வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும் நாம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஸ்தேவான் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.

கிறிஸ்து பிறப்பு விழாவின் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நாம் நம்முடைய வாழ்வு எப்போதும் ஆண்டவருக்கு சான்று பகர்வதாக அமையவேண்டும் என்பதை நினைவுகொள்வோம். எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லா வேளைகளிலும் நமது வாழ்வு இறைவார்த்தையின்படி, இறைத்திருவுளத்தின்படி அமைந்தால், அதுவே நமது சாட்சிய வாழ்வு. கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சியிலும், கொண்டாட்டத்திலும்கூட நாம் இயேசுவுக்கு சாட்சிகளாய் வாழ வேண்டும். நமது சொற்களும், கொண்டாட்டங்களும் இறைவனுக்குப் பிரியமானதாக அமையட்டும்.

மன்றாடுவோம்: அன்பே உருவான ஆண்டவரே, இந்தக் கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சி;க்காகவும், புனித ஸ்தேவானின் மறைசாட்சியத்திற்காகவும் உம்மைப் போற்றுகிறோம். நன்றி கூறுகிறோம். எல்லாச் சூழலிலும், எங்கள் துன்பங்கள், மற்றும் மகிழ்ச்சியின் வேளைகளிலும் நாங்கள் உமக்குச் சாட்சிகளாய் செயல்பட எங்களுக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்..

-- அருள்தந்தை குமார்ராஜா

 

--------------------

 

''என் பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச் செல்வார்கள்.
இவ்வாறு யூதர்கள் முன்னும் பிற இனத்தவர் முன்னும் சான்று பகர்வீர்கள்'' (மத்தேயு 10:18)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்வோர் துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பது வரலாறு கூறும் உண்மை. இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் ஆகிய நிகழ்வுகளுக்குப் பின் இயேசுவின் பெயரால் கூடி வந்த சமூகம் சந்தித்த கொடுமைகள் பல. யூதர்கள் பலர் இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு இயேசுவை ஏற்றவர்கள் யூத சமய அமைப்புக்குப் புறம்பாக்கப்பட்டார்கள். பிற இனத்தார் நடுவிலேயும் கிறிஸ்தவம் பரவலாயிற்று. ஆனால் அங்கேயும் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டனர். ஆக, கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்ட மனிதர்கள் தாங்கள் அனுபவித்த துன்பங்களின் நடுவே சான்று பகர அழைக்கப்பட்டனர். இச்சான்று அவர்களுடைய வாழ்வில் மட்டுமல்ல, சாவிலும்கூட வெளிப்பட்டது. இயேசுவே கடவுளுக்காக வாழ்ந்து, கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதில் நிலைத்துநின்று, இறுதிவரை ''சான்று பகர்ந்தார்''. அதுபோலவே, இயேசுவைப் பின்செல்வோரும் சான்று பகர அழைக்கப்படுகின்றனர்.

-- இன்றைய உலகில் ''சான்று பகர்தல்'' எதில் அடங்கியுள்ளது? ஒரு சிலர் கடவுள் தங்களுக்கு இன்னின்ன நோய்நோக்காடுகளிலிருந்து விடுதலை தந்தார், இன்னின்ன கவலைகளைப் போக்கினார் என்று பிறர் முன்னிலையில் வெளிப்படையாக அறிக்கையிடுவதை மட்டுமே ''சான்று பகர்தல்'' எனப் புரிந்துகொள்வர். இது முற்றிலும் தவறு என்பதற்கில்லை. ஆனால், சான்று பகர்தல் என்பது இதைவிடவும் விரிந்தது, ஆழமானது. அதாவது, கிறிஸ்தவ நம்பிக்கை கொண்டோர் தம் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் கிறிஸ்துவின் மன நிலையைப் பிரதிபலிப்பதுதான் உண்மையான சான்றுபகர்தல் ஆகும். இது எவ்வாறு நிகழும் என்று சிலர் கேட்கலாம். நம் வாழ்க்கை நிகழ்வுகளை நாம் சந்திக்கின்ற விதத்தில், அவற்றை எதிர்கொண்டு உள்வாங்குகின்ற முறையில் நமது ஆழ்ந்த மனப்பாங்குகளும் சிந்தனை முறைகளும் வெளிப்படுவதுண்டு. கிறிஸ்துவின் உணர்வால் நிறைந்தோர் கிறிஸ்துவையே தங்கள் வாழ்வின் ஊற்றாகக் கொள்வர். அப்போது அவர்களும் ''கிறிஸ்து என்னில் வாழ்கிறார்'' என்று உறுதியாகக் கூறிட இயலும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்க்கை முழுவதும் உம் அன்புக்குச் சான்றாக அமைந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

----------------------------

எல்லோரும் வெறுப்பர்

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

ஒரு இறை பணியாளர் ஒரு பங்கில் பணியில் வெறுக்கப்படுகிறார் என்றால் அது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடிய செய்தி அல்ல. ஒரு இடத்தில் திருச்சபை சில நெருக்கடிகளைச் சந்திக்கிறது என்றால் அதற்காக வருத்தப்பட அவசியம் இல்லை. திருத்தந்தையின் பேச்சு, அறிக்கை அதிர்ச்சியை உண்டாக்குகிறது என்றால் கவலைப்பட தேவை இல்லை.

துன்பமும் வேதனையும் இறைபணியோடு இணைந்தது. ஓநாய்களிடையே ஆடுகள் பணியாற்றுவதுபோன்றது. இயேசுவுக்காக, நற்செய்திக்காக, அதன் மதிப்பீடுகளுக்காக சான்று பகரும்போது, இத்தகைய இடைஞ்சல்கள் கட்டாயம் வரும் என்பது இயேசு முன்னறிவித்ததே. இதை அறிந்தே, தன் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை கொடுக்கிறார்.நம்பிக்கையும் ஆறுதலும் கொடுக்கும் செய்தியையும் சொல்லுகிறார்.

பணியின் போது பணியாளரில் செயல்படுவது இயேசுவே. பணியாளர் அல்ல. திருச்சபை அல்ல. திருத்தந்தை அல்ல. "பேசுவது நீங்கள் அல்ல. மாறாக. உங்கள் தந்தையின் ஆவியாரே உங்கள் வழியாய்ப் பேசுவார்"

"என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்." மத் 5:11-12.

--: அருட்திரு ஜோசப் லியோன்