முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 6: 1-8

உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது. அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர். அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து: `படைகளின் ஆண்டவர் தூயவர், தூயவர், தூயவர்; மண்ணுலகம் முழுவதும் அவரது மாட்சியால் நிறைந்துள்ளது' என்று உரத்த குரலில் கூறிக்கொண்டிருந்தார். கூறியவரின் குரல் ஒலியால் வாயில் நிலைகளின் அடித்தளங்கள் அசைந்தன; கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது. அப்பொழுது நான்: ``ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே'' என்றேன். அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப்பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக்கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார். அதனால் என் வாயைத் தொட்டு, ``இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது'' என்றார். மேலும், ``யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?'' என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, ``இதோ நானிருக்கிறேன், அடியேனை அனுப்பும்'' என்றேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 93: 1யb. 1உ-2. 5

பல்லவி: ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்.

1 ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; அவர் மாட்சியை ஆடையாய் அணிந்துள்ளார்;
ஆண்டவர் வல்லமையைக் கச்சையாகக் கொண்டுள்ளார். -பல்லவி

1 பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்; அது அசைவுறாது.
2 உமது அரியணை தொடக்கத்திலிருந்தே நிலைபெற்றுள்ளது; நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர். -பல்லவி

5 உம்முடைய ஒழுங்குமுறைகள் மிகவும் உறுதியானவை;
ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே உமது இல்லத்தை அழகு செய்யும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கிறிஸ்துவின் பொருட்டுப் பிறர் உங்கள்மீது வசை கூறும்போது நீங்கள் பேறுபெற்றவர்கள். ஏனெனில், கடவுளின் மாட்சிமிக்க தூய ஆவி உங்கள்மேல் தங்கும். அல்லேலூயா

மத்தேயு 10:24-33

பொதுக்காலம் 14 வாரம் சனி

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 24-33

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``சீடர் குருவை விடப் பெரியவர் அல்ல. பணியாளரும் தம் தலைவரை விடப் பெரியவர் அல்ல. சீடர் தம் குருவைப் போல் ஆகட்டும்; பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும். வீட்டுத் தலைவரையே பெயல்செபூல் என அழைப்பவர்கள் வீட்டாரைப் பற்றி இன்னும் தரக் குறைவாகப் பேச மாட்டார்களா? எனவே, அவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஏனெனில் வெளிப் படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல் தளத்திலிருந்து அறிவியுங்கள். ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்றுகூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள். மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

எசாயா 6: 1 – 8
உண்மையான அர்ப்பண வாழ்க்கை

இறைவாக்கினர் எசாயாவின் அழைப்பு இன்றைய வாசகமாக நமக்குத் தரப்படுகிறது. இறைவாக்கினர் எசாயா, விண்ணகத்தில் கடவுளின் அரியணையில் நடக்கும், விவாதத்தைக் காட்சியாகக் காண்கிறார். இங்கு கடவுள் நேரடியாக இறைவாக்கினர் எசாயாவை அழைக்கவில்லை. ஆண்டவர் தன்னுடைய விண்ணகத் தூதர்களோடு பேசிக்கொண்டிருப்பதைக் கேட்ட எசாயா, "இதோ நானிருக்கிறேன்" என வினவுகிறார். எசாயாவின் இந்த ஏற்பு, மற்ற இறைவாக்கினர்களின் அழைப்போடு பொருத்திப் பார்க்கையில் சற்று மாறுபட்டதாக இருக்கிறது. உதாரணமாக, மோசே இறைவனால் அழைக்கப்படுகிறார். ஆனால், அந்த அழைப்பை முதலாவதாக மறுக்கிறார். இறைவாக்கினர் எசேக்கியலின் அழைப்பும் இதேபோல, எசேக்கியலால் முதலில் மறுக்கப்படுகிறது. ஆனால், எசாயா இறைவாக்கினர் உடனடியாக இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொள்கிறார்.

மற்றவர்களைக் குறைத்து மதிப்பிட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. மாறாக, இறைவாக்கினர் எசாயாவின் ஏற்பு, அவர் தன்னை இறைவனுடைய பணிக்காக முழுமையாக கையளித்ததை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவர் சற்றும் தாமதிக்கவில்லை. இதுதான் கடவுளுக்கு விருப்பம் என்றால், அதற்கு குறுக்கே நிற்பதற்கு நான் யார்? ஏனென்றால், இந்த வாழ்க்கை கடவுள் பரிசாகத் தந்தது. இந்த வாழ்வை கடவுளுக்கு பரிசாகக் கொடுப்பது தான், வாழ்க்கைக்கான அர்த்தமாக இருக்கும் என்பதை, இறைவாக்கினர் உணர்ந்திருக்கிறார். இறைவன் தூய்மையானவர். ஆனால், தூய்மையற்ற நாவைக் கொண்ட மனிதராக இருக்கிற நான் கடவுளைப் பார்த்துவிட்டேனே? இது மிகப்பெரிய குற்றம் என்று, இறைவன் முன்னிலையில் தன்னை குற்றவாளியாக கருதுகிறார். இந்த தாழ்ச்சி தான், அவரை இறைவன் முன்னிலையில் உயர்த்துகிறது.

இறைவன் தன்னுடைய பணிக்காக மனிதர்களை அழைக்கிறார். இந்த உலகத்தை தன்பால் ஈர்ப்பதற்கு அவர் எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் மனித உதவி தேவைப்படுகிறது. இறைவன் அவருடைய பணிக்காக, மக்களை மீட்பதற்காக முயற்சி எடுக்கிறபோது, நாம் அதற்கு முழுமையாக, இறைவாக்கினர் எசாயாவைப் போல, கையளிக்க வேண்டும். அப்போது, நம்முடைய வாழ்க்கை நிறைந்த அர்த்தமுள்ளதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

வாழ்வின் சவால்களில் இறைப்பராமரிப்பு

கடவுளின் அன்பும், பராமரிப்பும் எந்த அளவுக்கு நம்மோடு இருக்கிறது என்பதை, எடுத்துரைக்கக்கூடிய அற்புதமான பகுதி. கடவுளுடைய பணியை நாம் செய்கிறபோது, பலவிதமான மனிதர்களைச் சந்திக்கிறோம். நம்மோடு கூட இருந்து, நம்மைக்காட்டிக்கொடுக்கிறவர்கள், நம்மோடு நயவஞ்சகமாகப் பேசிக்கொண்டு, மறுதலிக்கிறவர்கள், நம்மை எப்போது சாய்க்கலாம் என்று தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறவர்கள், என்று பலவகையான மனிதர்களை நாம் பார்க்கிறோம். இந்த மனிதர்களுக்கு நடுவில் தான், நாம் வாழ வேண்டும். இவர்களோடு தான் நமது வாழ்வும் இணைந்து இருக்கிறது. நாம் விரும்புகிறோமோ, இல்லையோ, இவர்களும் இந்த உலகத்தில் வாழ்கிறார்கள் என்பதை, நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வாழ்க்கை எப்போதும் நாம் நினைத்தது போல இருக்காது. நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், பல தடங்கல்களை சந்திக்கிறோம். பல மனிதர்களின் மோசமான முகங்களை பார்க்கிறோம். ஒருகட்டத்தில் நாம் சோர்ந்து போகிறோம். பேசாமல், ஊரோடு ஒருவராக வாழ்ந்து விடலாமே என்று நினைக்கிறோம். நாம் கொண்டிருக்கக்கூடிய மதிப்பீடுகளையும், விழுமியங்களையும் காற்றில் பறக்க விட்டுவிடுகிறோம். இப்படியான சோதனையான காலக்கட்டத்தில் தான், நாம் கடவுளின் பராமரிப்பை அதிகமாக உணர வேண்டும். அவரது வழிநடத்துதலை நாம் அனுபவிக்க வேண்டும். அதைத்தான் இந்த நற்செய்தி வாசகம் நமக்கு கற்றுத்தருகிறது.

கடவுளின் ஆழமான அன்பு எப்போதும் நமக்கு உண்டு. நாம் ஒருநிமிடம் கூட சோர்ந்து போகக்கூடாது. அவர் நம்மோடு இருக்கிறார் என்கிற அந்த நம்பிக்கை, வாழ்வில் துணிவோடு, மகிழ்வோடு நாம் இருக்க நமக்கு உதவியாக இருக்க வேண்டும். நல்ல நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாய் நாம் வாழ அருள்வேண்டி, ஆண்டவரிடத்தில் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

”அஞ்ச வேண்டாம்”

இன்றைய நற்செய்தியில் நாம் ”அஞ்ச வேண்டாம்” என்ற செய்தி நமக்குத்தரப்படுகிறது. ஏன் அஞ்சக்கூடாது? யாரைப்பார்த்து, எவற்றைப்பார்த்து அஞ்சக்கூடாது? என்ற கேள்விகள் நமக்குள்ளாக எழலாம். கடவுள் நம்மைப் பராமரிக்கிறார் என்ற எண்ணம் நமக்குள்ளாக இருக்க வேண்டும். கடவுளின் பராமரிப்பில் நாம் நம்பிக்கை வைத்தால், நாம் எதைப்பார்த்தும், அஞ்ச மாட்டோம். அதற்கு உதாரணமாக கடவுளின் பராமரிப்பில் வாழும் சிட்டுக்குருவிகள் சொல்லப்படுகிறது.

”காசுக்கு இரண்டு சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. லூக்கா நற்செய்தியாளர் இதையே வேறு வார்த்தைகளில் சொல்கிறார்: ”இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே” (லூக்கா 12: 6). பொதுவாக இரண்டு சிட்டுக்குருவிகள் ஒரு காசுக்கு விற்கப்பட்டது. ஒரு காசு என்று இங்கு சொல்லப்படுவது “அசாரியோன்“. இது தெனாரியத்தில் ஆறில் ஒரு பங்கு மதிப்பு உடையது. இரண்டு காசுகளுக்கு நான்கு சிட்டுக்குருவிகள் வாங்குகிறபோது, ஐந்து சிட்டுக்குருவிகளாகக் கொடுக்கப்படுகிறது. ஒரு சிட்டுக்குருவி இலவசம். அதற்கு மதிப்பு கிடையாது. அப்படி மதிப்பில்லாத சிட்டுக்குருவியையும் கடவுள் பராமரிக்கிறார் என்றால், எந்த அளவுக்கு கடவுளின் உருவத்தில் படைக்கப்பட்டிருக்கிற மனிதர்களை அவர் படைப்பார் என்பது நாம் அறிந்திருக்க வேண்டும்.

இறைவனின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்கிறவர்களால் தான், தங்களது பணிவாழ்வில் நிறைவாக சாதிக்க முடியும். எனக்கு திறமை இருக்கிறது, இதை என்னால் கையாள முடியும், இதை என்னால் நடத்த முடியாது என்று, நமது திறமையை ஒப்பிட்டுப் பார்த்து, நாம் சாதிக்க நினைத்தால் அது தோல்வியில் தான் முடியும். நமது பணிவாழ்வில் கடவுளின் ஆற்றலை, பராமரிப்பை நம்புவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

சீடத்துவ வாழ்வு

கி.பி. 70 ம் ஆண்டில் யெருசலேம் தரைமட்டமாக்கப்பட்டது. கடவுளின் நகர் தரைமட்டமாக்கப்பட்டபோது, யூதர்கள் தங்கள் உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக, உலகின் பல மூலைகளுக்கும் தப்பி ஓடினர். அவர்களில் பெரும்பாலானோர், தங்களின் இத்தகைய நிலையை எண்ணி, எண்ணி அழுது புலம்பினர். இத்தகைய சமயத்தில், யூதப்போதகர்களின் போதனை ‘ஆண்டவரின் இல்லமே அழிக்கப்பட்டபிறகு, நாம் எதை இழந்தால் என்ன?’ என்பதுதான். இந்தப்பிண்ணனியில் இயேசுவின் வார்த்தைகள் இரண்டு சிந்தனைகளைத்தருகிறது.

1. இயேசுவின் எச்சரிக்கை. இயேசுவைப்பின்பற்ற விரும்புகிறவர்கள், இயேசுவோடு இணைந்து சிலுவையைத்தூக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும். வெற்றியின் சுவையை சுவைக்க விரும்புகிறவர்கள் துன்பத்தைக்கண்டு தளரக்கூடாது, பயப்படக்கூடாது, உதறித்தள்ளக்கூடாது. துணிந்து தாங்க வேண்டும். 2. இயேசுவோடு சிலுவையைத் தூக்குவது துன்பம் அல்ல, மாறாக, இயேசுவின் பணியை நாம் பகிர்ந்து கொள்வது. கடவுளின் மகனாகிய இயேசுவின் பணியைப் பகிர்ந்து கொள்வது நமக்கு எத்தகைய மாட்சியை நமக்குத்தர வேண்டும். அதற்கு நாம் கொடுத்து வைத்திருக்கிறவர்களாக இருக்க வேண்டும்.

இயேசுவின் சிலுவையிலே பங்கெடுப்பது சாபம் அல்ல, நமக்கு கிடைத்த வாழ்வு. புனிதர்கள் அனைவரும் இதனை நன்கு அறிந்திருந்தனர். எனவேதான், இயேசுவின் பாடுகளில் தங்களையே முழுமையாக இணைத்துக்கொண்டனர். நாமும் இயேசுவின் பாடுகளில் நம்மை இணைத்துக்கொள்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

புனித கமில்லஸ் தெ லெல்லிஸ்

எசா 6:1-8
மத் 10: 24-33

இயேசுவைப் போல...

"சீடர் தம் குருவைப்போல் ஆகட்டும். பணியாளர் தம் தலைவரைப் போல் ஆகட்டும். அதுவே போதும்" என்னும் அருள்வாக்கை இன்று சிந்திப்போமா?

தமது பணியாளர்களுக்கு, சீடர்களுக்கு இயேசு தருகின்ற எதிர்பார்ப்பு அதிகமில்லை. இயேசுவைப் போல வாழவேண்டும், அவரைப் போல பணியாற்ற வேண்டும் என்பதுதான். அது குறைந்த ஓர் எதிர்பார்ப்பே என்பதை "அதுவே போதும்" என்னும் சொற்கள் சுட்டுகின்றன.

இயேசு தம் சீடர்களின் பாதங்களைக் கழுவியபோது, "நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" (யோவா 13: 15) என்று சொன்னார். எனவே, இயேசு செய்யாத எதையும் நாம் செய்யவேண்டியதில்லை. நமக்கு முன்பாக அவர் செய்துகாட்டியவற்றை நாம் செய்தாலே போதும். அவற்றில் துன்பங்களைப் பொறுத்துக்கொள்வதும், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதும் அடங்கும். நாம் நல்ல சீடர்கள் என்றால், இயேசுவைப்போலவே வாழ முயற்சி எடுப்போம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போலவே நாங்களும் வாழ அருள்தாரும், ஆர்வம் தாரும், ஆற்றல் தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

இறைவாக்கினரின் அழைப்பு ! (முதல் வாசகம்)

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றிலிருந்து எசாயா இறைவாக்கினரின் நுhலிலிருந்து முதல் வாசகங்களுக்கு செவி மடுக்க இருக்கிறோம். எசாயா இறைவாக்கினரின் அழைப்பு மிகவும் புகழ் பெற்ற ஒரு நிகழ்வு. அழைத்தலின் மூன்று படிகளை இந்த நிகழ்வில் காண்கிறோம்:

  1. இறைவனின் மாட்சி: இறைவனின் மகத்துவம் சொல்லில் அடங்காதது. விவரிக்க இயலாதது. அவர் துhயவர், மாட்சியும் வல்லமையும் மிக்கவர். அவரது மேன்மை உயர்ந்தது. எசாயா அந்த மாட்சியின் ஒரு துளியைக் கண்டு திகைப்படைகிறார். நமது வாழ்விலும் இறைவனின் பேராற்றலை அனுபவிக்கும் வாய்ப்புகள் நமக்கு அவ்வப்போது கிடைக்கின்றன.
  2. அழைக்கப்படுபவரின் தகுதியின்மை: இந்த அனுபவத்தால் திகைப்புறும் எசாயா, தன் தகுதியின்மையை உணர்கிறார். இந்தத் தகுதியின்மை அவரது சொந்த வலுவின்மையால் மட்டுமல்ல, அவர் வாழ்கின்ற சமூகத்தின் தாக்கத்தாலும் ஏற்படுகின்றது என்பதை அவரது வார்த்தைகள் எடுத்துரைக்கின்றன. எனவே, எசாயா ஆண்டவரின் பாதத்தில் சரண் அடைகின்றார்.
  3. துhய்மைப்படுத்தி அனுப்பும் இறைவன்: எசாயாவின் உள்ளத் தாழ்மையை ஏற்றுக்கொள்ளும் இறைவன் அவரைத் துhய்மைப்படுத்தித் தகுதிப்படுத்துகிறார். தனது பணிக்காக அவரை அனுப்புகிறார்.

மன்றாடுவோம்: இறைவாக்கினர்களைப் பெயர் சொல்லி அழைத்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். தகுதியற்ற என்னையும் நீர் அழைத்திருக்கிறீர் என்பதை உணர்ந்து நன்றி சொல்கிறேன். என் வலுவின்மையை நீக்கி, என்னைத் துhய்மைப்படுத்தி, உமது பணிக்காக என்னைப் பயன்படுத்தியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

--------------------------------

 

அஞ்சவா, வேண்டாமா?

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை என்றார் திருவள்ளுவர். அஞ்சுவதற்கு அஞ்ச வேண்டாம். அஞ்சத் தேவையற்றவற்றைக் கண்டு துணிவுடன் நிற்க வேண்டும். இது ஒரு அறிவுடைமை. இது ஒரு ஞானம்.

இந்த ஞானத்தைக் கற்றுத் தருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். உடலைக் கொல்வோருக்கு அஞ்ச வேண்டாம். பண பலம், படை பலம், ஆள் பலம் கொண்ட மனிதர்களுக்கு அஞ்ச வேண்டாம். மாறாக, இறைவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டாம். நமது மனச்சான்றின் குரலுக்கு அஞ்ச வேண்டும். ஏழை, எளியோரின் வயிற்றெரிச்சலுக்கு அஞ்ச வேண்டும். தீமை செய்வதற்கு, அநீதிக்குத் துணை போவதற்க அஞ்ச வேண்டும்.

திருச்சபையின் வரலாற்றில் இத்தகைய ஞானத்தைக் கொண்டிருந்த புனிதர்கள், மறை சாட்சியர், மாமனிதர்கள் பலரைச் சந்திக்கிறோம். இவர்கள் இறைவனுக்கு மட்டுமே அஞ்சினர். அரசர்களுக்கோ, உலக ஆற்றல்களுக்கோ அஞ்சா நெஞ்சர்களாக இருந்தனர். அத்தகையோருள் ஒருவர் இன்று நாம் நன்றியுடன் நினைவுகூரும் புனித பெனடிக்ட்.

இத்தகைய தெளிவை, ஞானத்தை நாமும் பெற்றுக்கொள்வோமாக. இந்த ஞானத்துக்காக இறைவனிடம் மன்றாடுவோமாக.

மன்றாடுவோம்; ஞானத்தின் ஊற்றே இயேசுவே, இறைவனுக்கு மட்டுமே அஞ்சி, பிற அனைத்துக்கும் அஞ்சாமல் வாழ்கிற நெஞ்சத் துணிவை எங்களுக்குத் தந்தருள்வீராக. தீமையின் முன் அஞ்சாத சான்று வாழ்வால் நாங்கள் உம்மை மாட்சிமைப்படுத்துவோமாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''இயேசு சீடரை நோக்கி, 'சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்.
எனவே அஞ்சாதிருங்கள்' என்றார்'' (மத்தேயு 10:31)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளாட்சி பற்றிய நற்செய்தியை அறிவிக்க இயேசு தம் சீடர்களை அனுப்புகிறார். அப்போது அவர்கள் சந்திக்கப் போகின்ற எதிர்ப்புகள் பல உண்டு எனவும் இயேசு கூறுகிறார். ஆனால் எந்த எதிர்ப்பைக் கண்டும் சீடர்கள் அஞ்ச வேண்டியதில்லை. மூன்று முறை இயேசு இவ்வாறு தம் சீடர்களுக்கு ஊக்கமூட்டுகிறார் (காண்க: மத் 10:26,28,31). சீடர்கள் நற்செய்திப் பணியில் ஈடுபடும்போது அவர்களைத் தரக்குறைவாகப் பேசுகின்ற மனிதரைக் கண்டு ''அஞ்ச வேண்டாம். ஏனெனில் உண்மை ஒருநாள் வெளிப்படத்தான் செய்யும். அப்போது சீடர் கடவுளின் வல்லமையால் உண்மையையே அறிவித்தனர் என்பது எல்லாருக்கும் தெரியவரும்'' (காண்க: மத் 10:25-26). இயேசு மக்களுக்கு வழங்கிய செய்தி ஒளிவுமறைவாக, காதோடு காதாய் ஊதப்பட வேண்டிய இரகசியச் செய்தி அல்ல. மாறாக, அது எல்லா மக்களுக்கும் வெளிப்படையாக அறிவித்து முழங்கப்பட வேண்டிய நல்ல செய்தி (மத் 10:27). இவ்வாறு சீடர்கள் துணிந்து செயலாற்றும்போது அவர்களைத் துன்புறுத்தவும், ஏன் கொன்றுபோடவும் தயங்காதோர் இருப்பார்கள். ஆனால் அவர்களால் சீடர்களின் உடலைத்தான் சிதைக்க முடியுமே ஒழிய அவர்களது ஆன்மாவை, உள்ளார்ந்த நம்பிக்கையைச் சிதைக்க இயலாது. எனவே, தங்களை எதிர்த்துநின்று, கொலைசெய்யவும் தயங்காதவர்களைக் கண்டு சீடர்கள் ''அஞ்ச வேண்டாம்'' என இயேசு கூறுகிறார் (மத் 10:28).

-- நற்செய்தியை அறிவிக்க அனுப்பப்படுகின்ற சீடர்களைக் கடவுள் அன்போடு பாதுகாத்துப் பராமரிப்பார் என்பதையும் இயேசு உணர்த்துகிறார். கடவுளின் பராமரிப்பு எத்தகையது என விளக்க இயேசு ஒரு சிறு உவமை கூறுகிறார். அதாவது, வானத்தில் பறக்கின்ற சிட்டுக் குருவி யாதொரு கவலையுமின்றி சுதந்திரமாகப் பறந்து மகிழ்வதை யாரும் காணலாம். அக்குருவிகளும் கடவுளின் படைப்புகளே. அவை கடவுள் படைத்த இயற்கைக்கு எழிலூட்டுகின்றன. சாதாரண குருவிகளுக்கும் கூட கடவுள் உணவளித்துக் காக்கிறார் என்றால் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதரை அவர் அன்போடும் கரிசனையோடும் பாதுகாக்க மாட்டாரா? கடவுளின் அன்பு பற்றிப் பிறருக்கு எடுத்துக் கூறி அவ்வன்பை மனமுவந்து பகிர்ந்துகொள்ளும் சீடர் மட்டில் கடவுள் அக்கறையின்றி இருப்பாரா? இதனால்தான் இயேசு சீடர்களிடம், ''சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்'' எனக் கூறுகிறார் (மத் 10:31). இன்று கிறிஸ்துவின் சீடர்களாக வாழ்ந்து பணிசெய்ய அழைக்கப்படுகின்ற நம்மையும் பார்த்து இயேசு ''அஞ்சாதீர்கள்'' எனக் கூறி ஊக்கமூட்டுகிறார். கடவுளையும் கடவுளாட்சியை அறிவிக்க நம்மை அனுப்புகின்ற இயேசுவையும் நாம் நம்பிக்கையோடு ஏற்று, உறுதியுள்ள நெஞ்சினராய் நற்செய்தியை முழங்கும்போது எந்த எதிர்ப்பைக் கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. அப்போது, ''அஞ்சாதிருங்கள்'' என இயேசு கூறுகின்ற ஊக்க மொழி நம் உள்ளத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் நற்செய்தியை அச்சமின்றி முழங்கிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இறைமகன் இயேசு கடவுளின் பராமரிப்பு பற்றி இன்றய நற்செய்தியில் கூறுகிறார். பறவை இனத்தில் மிகவும் சிறியது சிட்டுக்குருவி. இந்த சிட்டுக்குருவிகள் எப்பொழுதும் உற்சாகத்துடனும் மகிழ்சியுடனுமிருப்பதை காணலாம். அவைகள் எதைப்பற்றியும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இந்த சிட்டுக் குருவிகள் மிக மலிந்த விலையில் 1 காசுக்கு இரண்டு (2000 ஆண்டுகளுக்கு முன்) சிட்டுக் குருவிகள் கிடைத்திருக்கின்றன. இவ்வளவு மலிந்த, உருவத்தில் மிகச் சிறிய சிட்டுக்குருவிகளையே கடவுள் இவ்வாராக பராமரித்து வருகின்றார். ஆகவே கடவுளின் சாயலகப் படைக்கப் பட்ட நம்மை கடவுள் எவ்வளவாய் பராமரிக்கமாட்டார்?

இவ்வுலகில் மாய்ந்து மாய்ந்து பொருள் தேடுவேர் ஏராளம். இவ்வுலக செல்வத்தை சேர்க்க எத்தகைய வழியையும் பின்பற்றி எப்படியும் வாழலாம் என்று மனம் போன போக்கில் முற்படுகின்றனர். இவர்கள் கடவுளின் அன்பையும் பராமரிப்பையும் கண்டுணராதவர்கள். "அஞ்சாதீர்கள்"என்ற அறைகூவல் நமக்கு கடவுளின் பராமரிப்பையும், அன்பையும் உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் நேரிய வழியில் வாழ உற்சாகத்தைக் கொடுக்கின்றது.

"ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள்" என்ற இறைவாக்கிற்கேற்ப எந்த சூழ்நிலையிலும் தீய வழியை நாடாமல் கடவுள் காட்டிய நேரிய வழியிலும், உண்மையின் வழியிலும் வாழவும், நற்செய்திக்கு சான்று பகர்ந்து வாழக்கூடிய வாழ்வையும் ஆண்டவரிடம் கேட்போம்.

--அருட்திரு மரியதாஸ்

தேவை இறைவாக்கினர்

நற்செய்திப்பணி ஒளிவு மறைவு இல்லாதது. எல்லாம் வெளிப்படையானது. யாருக்கும் பயப்படாமல் செயல்படுவது. இருளில் சொல்வதை ஒளியில் கூறுவது. காதோடு காதாய் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவிப்பது. இந்த இறைபணியைச் செய்வதில் யாருக்கும் பயப்பட தேவையில்லை. யாருக்கும் கூஜா தூக்க அவசியம்இல்லை. ஓரு தலை முடி கூட விழாது.

இவ்வளவு சிறப்பும் பாதுகாப்பும் உள்ள நற்செய்திப்பணி இன்று தேக்கநிலையில் உள்ளது.
காரணம்,குறித்த காலத்தை பெருமையோடு நிறைவு செய்யவேண்டுமே என்ற சுய நலம், கூரை மீதிருந்து நக்கீர முழக்கமிட அவ்வளவு பயம். எல்லோரையும் திருப்திப்படுத்த நினைத்து யாரையுமே திருப்திப்படுத்தமுடியாத நிலையில் இப்பணியாளர்கள். ஏங்கே ஏணி இருக்கிறது, எப்பொழுது உயர போகலாம் என்பதே எண்ணம். இறைவாக்கினருக்கு இறைவாக்குப்பணியைவிட நிர்வாகத்திறமையே பெரிதென போற்றப்படும் அவலநிலை. பணம்படைத்தவன் முன்னும் அடியாள்பலமுடையவனிடம் திருமுழுக்கு யோவானாகிட கோழைத்தனம்.

இறைவாக்கு இல்லாத சமுதாயம் இறை ஆசீர் இல்லாத சமுகம். இறைவாக்கு இல்லாத சமுதாயம் ஒரு சதைப்பிண்டம். இதனால் நன்மையை விட தீமையே அதிகம். அங்கு அநீதியும் அழிவும் அதிகமாகவே இருக்கும். எங்கு இறைவாக்கினர் துணிவோடு இறைவாக்குரைக்கின்றாரோ அங்கு வாழ்வு கலையோடு இருக்கும்.

இறைவா இத்தகைய இறை பணியாளர்களை எம்மிடையே அனுப்பும்.

--அருட்திரு ஜோசப் லீயோன்