முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 11-17

``எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு?'' என்கிறார் ஆண்டவர். ``ஆட்டுக்கிடாய்களின் எரிபலிகளும், கொழுத்த விலங்குகளின் கொழுப்பும் எனக்குப் போதுமென்றாகிவிட்டன: காளைகள், ஆட்டுக் குட்டிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள் இவற்றின் இரத்தத்திலும் எனக்கு நாட்டமில்லை. நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றை எல்லாம் கொண்டு வந்து என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டும் என்று கேட்டது யார்? இனி, காணிக்கைகளை வீணாகக் கொண்டு வர வேண்டாம்; நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையே தருகின்றது; நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும் அமாவாசை, ஓய்வு நாள் வழிபாட்டுக் கூட்டங்களை நான் சகிக்க மாட்டேன். உங்கள் அமாவாசை, திருவிழாக் கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது; அவை என் மேல் விழுந்த சுமையாயின; அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன். என்னை நோக்கி உங்கள் கைகளை நீங்கள் உயர்த்தும்போது, பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்; நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும் நான் செவிகொடுப்பது இல்லை; உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன. உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 50: 8-9. 16bஉ-17. 21,23

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை;
உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின்
ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. -பல்லவி

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி?
என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்;
என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். -பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்;
நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்;
ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்;
உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.
23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர்.
தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப் படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

மத்தேயு 10:34-11:1

பொதுக்காலம் 15 வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 34-11: 1

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன். தந்தைக்கு எதிராக மகனையும் தாய்க்கு எதிராக மகளையும் மாமியாருக்கு எதிராக மருமகளையும் நான் பிரிக்க வந்தேன். ஒருவருடைய பகைவர் அவரது வீட்டில் உள்ளவரே ஆவர். என்னை விடத் தம் தந்தையிடமோ தாயிடமோ மிகுந்த அன்பு கொண்டுள்ளோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். என்னை விடத் தம் மகனிடமோ மகளிடமோ மிகுதியாய் அன்பு கொண்டுள்ளோரும் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் சிலுவையைச் சுமக்காமல் என்னைப் பின்பற்றி வருவோர் என்னுடையோர் எனக் கருதப்படத் தகுதியற்றோர். தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்துவிடுவர். என் பொருட்டுத் தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர். உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார். இறைவாக்கினர் ஒருவரை அவர் இறைவாக்கினர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் இறைவாக்கினருக்குரிய கைம்மாறு பெறுவார். நேர்மையாளர் ஒருவரை அவர் நேர்மையாளர் என்பதால் ஏற்றுக்கொள்பவர் நேர்மையாளருக்குரிய கைம்மாறு பெறுவார். இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.'' இயேசு தம் பன்னிரு சீடருக்கும் அறிவுரை கொடுத்து முடித்ததும் பக்கத்து ஊர்களில் கற்பிக்கவும் நற்செய்தியை அறிவிக்கவும் அவ்விடம் விட்டு அகன்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

கார்மல் அன்னை திருவிழா
உங்கள் கட்டிடத்தை கட்டியது கடவுளா?

அனைவருக்கும் கார்மல் அன்னை திருவிழா நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். கார்மல் அன்னையின் பாதுகாப்பும் பரிந்துரையும் உங்களுக்கு என்றென்றும் கிடைப்பதாக!

அன்னை மரியாள் என்ற கட்டிடத்தை கட்டியது கடவுள். அவர் ஒரு கட்டிடக் கலைஞர். அன்னை மரியாளின் கனவுகள், எதிர்காலம், தேவைகள், சாதனைகள் என அனைத்தையும் கட்டியது கடவுளே. அதற்கான முழு பொறுப்பையும் அன்னை மரியாள் கடவுளிடத்தில் கொடுத்துவிட்டார்கள். அதைத்தான் லூக் 1:38 ல் "நான் ஆண்டவரின் அடிமை உமது விருப்பப்படி எனக்கு நிகழட்டும்" என்கிறார் அன்னை மரியாள். ஆண்டவரே நான் உம்மிடம் என்னை தந்துவிட்டேன் நீர் என் உடலாகிய கட்டிடத்தை கட்டும் என்கிறார். அவர் கொடுத்ததால் கடவுள் மிகவும் எழில்மிக்கதாய் கட்டினார். எல்லோரும் போற்றும் வண்ணம் கட்டினார்.

நம்முடைய வாழ்வில் ஏன் முன்னேற்றம் இல்லை? காரணம் நாம் நம் உடலாகிய கட்டிடத்தை, கடவுளின் பொறுப்பில் ஒப்படைக்கவில்லை. நம் வாழ்க்கையின் பொறுப்பை கடவுளிடத்தில் கொடுக்கவில்லை. மாறாக நாமே எடுக்கிறோம். முடிவில் முட்டி மோதி கீழே விழுகிறோம். நாம் நம் வாழ்க்கையின் பொறுப்பை எடுத்ததால் சம்பாதித்தது என்ன? மனஅழுத்தம், அமைதியின்மை, நிம்மதியின்மை, தனிமை, வெறுமை, பகைகை இவைகளே.

உங்கள் கட்டிடத்தை கட்டி முடிக்க கடவுளுக்கு அனுமதி கொடுத்து பாருங்களேன். பின் என்ன நடக்கிறது என்பதை எண்ணிக் கொண்டே இருங்கள். கார்மல் அன்னை அனைத்தையும் ஆண்டவரிடமிருந்து அனுபவித்தார்கள். நம்மை அன்போடு அழைக்கிறார்கள். வாருங்கள் வாழ்வோம் வளமாக.

மனதில் கேட்க:

• கார்மல் அன்னையிடமிருந்து நான் பெறுவது என்ன?
• கடவுள் என்னை கட்ட நான் அனுமதி கொடுப்பேனா?

மனதில் பதிக்க:

ஆண்டவரே வீட்டைக் கட்டவில்லையெனில் அதைக் கட்டுவோரின் உழைப்பு வீணாகும்(திபா 127:1)

- அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

இறையடியார்களுக்கு உங்களாலான உதவி செய்தீர்களா?
மத் 10:34-11:1

கடவுளின் பணியை சிறப்புடன் செய்யும் இறையடியார்களான குருக்கள், அருட்சகோதரிகள் அவரால் உருவாக்கப்பட்டவர்கள். அவரால் அலங்கரிக்கப்பட்டவர்கள். அவர்கள் பணி மக்களை ஆசீர்வதிப்பது. கடவுளிடம் மன்றாடி ஆசீர்வாதங்களை அவரிடமிருந்து பெற்றுக்கொடுப்பது. மக்கள் நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக தியாகமாய் எரியும் சுடர்விளக்கு அவர்கள். அகவிருள் அகற்றும் அகல்விளக்கு அவர்கள். குடும்பங்கள் குதூகலமாய் வாழ்வதற்கு வழிகாட்டும் குத்துவிளக்கு அவர்கள்.

அப்படிப்பட்ட மேன்மைமிக்க இறையடியார்களை ஒருவர் உபசரிக்கும் போது என்ன நடக்கும் என்பதை நற்செய்தி வாசகம் நயமாய் அறிவிக்கிறது. இறையடியார்களை நன்கு உபசரிக்கிற ஒருவர் அல்லது  ஒரு குடும்பம் அல்லது ஒரு பங்கு கைம்மாறு கண்டிப்பாக பெறும். அவர்கள் தலைமுறை தலைமுறையாய் செழித்தோங்குவர். ஆண்டவரின் ஆசீர் அவர்களுக்கு வந்து குவிந்துக்கொண்டே இருக்கும்.

இறையடியார்களுக்கு இன்னல் கொடுக்க  விளைந்தால் அது இறைவனுக்கு பிடிக்காத செயல் ஆகும் என்பதையும் நாம் அறிந்துக்கொள்ள வேண்டும். இயன்றவரை நம் இறையடியார்களை இன்முகத்தோடு வரவேற்போம். நன்முறையில் உபசரிப்போம். மாண்போடு நடத்தி அவர்களிடம் குவிந்து கிடக்கும் ஆசீர்களை நமக்கு வாங்கிக்கொள்வோம்.

மனதில் கேட்க…

  • இறையடியார்களை பற்றி குறைகூறும் எனக்கு ஆசீர் உண்டா?
  • இறையடியார்களை கவனிப்பது கடவுளை கவனிப்பதற்கு சமம் இதில் நம்பிக்கை எனக்கு இருக்கிறதா?

மனதில் பதிக்க…
இச்சிறியோருள் ஒருவருக்கு அவர் என் சீடர் என்பதால் ஒரு கிண்ணம் குளிர்ந்த நீராவது கொடுப்பவரும் தம் மைம்மாறு பெறாமல் போகார் (மத் 10:42)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எசாயா 1: 11 – 17
இறையருள் வேண்டுவோம்

இஸ்ரயேல் மக்களுடைய வழிபாட்டு நிகழ்வுகளுக்கு இறைவனுடைய பதில் என்ன? என்பதை, அழகாக இன்றைய வாசகத்தில் இறைவன் தருகிறார். "எண்ணற்ற உங்கள் பலிகள் எனக்கு எதற்கு? நீங்கள் என்னை வழிபட என் திருமுன் வரும்போது, இவற்றையெல்லாம் கொண்டு வந்து, என் கோவில் முற்றத்தை மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்?".இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில், தாங்கள் எவ்வளவு குற்றங்கள் செய்தாலும், தங்களுக்கு எவ்வளவுக்கு குற்ற உணர்ச்சிகள் இருந்தாலும், இறைவனுக்கு பலிகள் செலுத்தினால், அவர்களுடைய குற்றங்களும், குற்ற உணர்ச்சிகளும் அகன்றுவிடும் என்று நம்பினார்கள். எனவே, எப்போதெல்லாம் குற்ற உணர்ச்சியினால் ஆட்கொள்ளப்பட்டார்களோ, அப்போதெல்லாம் அவர்கள் எரிபலிகளைச் செலுத்தினார்கள். இதனால், அவர்கள் குற்றம் மன்னிக்கப்படும் என்று நம்பினார்கள்.

இன்றைய வாசகத்தில் வரும் இறைவாக்கு, அவர்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால், குற்றங்களைச் செய்துவிட்டு, இறைவனுக்கு செலுத்தப்படும் பலிகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று, இறைவாக்கினர் சொல்கிறார். அது ஏற்கப்படாதது மட்டுமல்ல, அதனை கடவுள் வெறுக்கிறார் என்பது, இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கிறது. அப்படியென்றால், இறைவனை எப்படி மகிழ்விப்பது? இறைவனுக்கு மகிழ்ச்சி தருவது எது? நன்மை செய்ய வேண்டும். ஏழைகளுக்கு,எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். இறைவனுடைய உதவியை மட்டுமே எண்ணி வாழும் மக்களுக்கு, உறுதுணையாகஇருந்து, உதவிக்கரம் நீட்ட வேண்டும்.

இறந்தவர்களுக்கு சிலை வைத்து மாலை போடுவதை விட, இல்லாதவர்களுக்கு இலை வைத்து சோறு போடுவது சிறப்பு என்று சொல்வார்கள். உண்மைதான். நாம் ஏழைகளுக்கு, எளியவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இறைவனுடைய அன்பை இந்த உலகத்தில் வாழும் அனைவரும் உணரச் செய்ய வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் வாழ்வதற்கு இறையருள் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

==================================

உடனிருப்பும், ஒத்துழைப்பும்

இயேசுவின் போதனைகளை நாம் கேட்கிறபோது, நம்மால் அவரைப் பின்தொடர முடியுமா? அவருடைய போதனையில் நிலைத்து நிற்க முடியுமா? என்கிற சிந்தனைகள் நமது உள்ளத்தில் ஓட ஆரம்பிக்கிறது. நிச்சயம் இயேசுவின் போதனைகளை நமது வாழ்வில் ஏற்று, வாழ முயற்சிப்பது சவாலான ஒன்றுதான். ஆனாலும், நாம் அனைவரும் அப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டும், கடவுளுக்கு ஏற்புடையதாக நமது வாழ்வு அமைய வேண்டும் என்று நற்செய்தி நமக்கு கற்றுக்கொடுக்கிறது.

நாம் போதனைகளை வாழ முயற்சி எடுத்து, அதில் நம்மால் வாழ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், கிறிஸ்துவின் போதனைகளை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும் நமது உடனிருப்பையும், ஒத்துழைப்பையும் முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பது நமது விருப்பமாக இருக்கிறது. ஒரு ஓட்டப்பந்தயத்தில் பல வீரர்கள் ஓடுகிறார்கள். ஓடக்கூடிய அனைத்து வீரர்களையும் மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதோ, தோல்வியடைவதோ, அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு தடையாக இருப்பது இல்லை. அதேபோலத்தான், கடவுளின் வார்த்தையை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும் நமது ஒத்துழைப்பையும், உடனிருப்பையும், வாழ்த்துக்களையும் கொடுக்க வேண்டும்.

உடனிருப்பு என்பது கடவுள் பார்வையில் மிகச்சிறந்ததாக இருக்கிறது. துன்பத்தில் உடனிருப்பதும், ஆறுதல்கூறுவதும் மிகப்பெரிய விழுமியங்களாக மதிக்கப்படுகிறது. அது கடவுளின் கொடையையும், ஆசீரையும் பெற்றுத்தரக்கூடியவைகளாக போற்றப்படுகிறது. அத்தகைய உடனிருப்பை நாமும் மற்றவர்களுக்கு வழங்குவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளின் வார்த்தை

”உங்களை ஏற்றுக்கொள்கிறவர் என்னை ஏற்றுக்கொள்கிறார்” என்ற இயேசுவின் சொல்லாடலின் பொருள் யூதர்கள் அனைவரும் அறிந்த ஒன்று. மக்களுக்குப்புரிகிற மொழியிலும், பொருளை அறிந்து கொள்கிற வகையிலும் இயேசு போதித்தார். ஒரு தூதரை ஏற்றுக்கொள்வது என்பது அவரை அனுப்பியவரை ஏற்றுக்கொள்வதற்கு சமம். அரசரின் தூதரை ஏற்றுக்கொள்வது என்பது அந்த அரசருக்கு கொடுக்கும் மரியாதையாகும். அந்த தூதுவரை அவமதிப்பது அரசரையே அவமதிப்பது போலாகும்.

இயேசு தன்னுடைய தூதுவர்களாக சீடர்களை அனுப்புகிறார். அவர்கள் கடவுளின் தூதுவர்களாக, கடவுளின் நற்செய்தியை அறிவிப்பவர்களாக செல்கிறார்கள். அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை கடவுளுக்கு செலுத்தும் மரியாதை. அவர்களையோ, அவர்களின் வார்த்தையையோ புறக்கணிப்பது கடவுளையே புறக்கணிப்பதாகும். சொல்கிற மனிதர்கள் யாராக இருந்தாலும், சொல்லப்படுகிற வார்த்தை கடவுளுடையது. அந்த கடவுளின் வார்த்தைக்கு நாம் செவிமடுக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான தண்டனையை நாம் அனுபவிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

கடவுளின் வார்த்தை நமக்குத் தரப்படுகிறபோது, அதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளக்கூடியவர்களாக வாழ்வோம். அது எவரிடமிருந்து வந்தாலும், கடவுள் நமக்கு உணர்த்த விரும்புவதாக அதனை ஏற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைஊழியர்களாக மாற….

இன்றைய நற்செய்தியில் இயேசு யூதர்களின் வழக்கத்தில் உள்ள ஒரு பண்பாட்டு முறையோடு தனது இறைச்செய்தியை அறிவிக்கிறார். யூதர்களைப் பொறுத்தவரையில் ஒரு தூதுவருக்கு கொடுக்கும் மரியாதை அவருக்கானது மட்டுமல்ல, அவரைத் தூதுரைக்க அனுப்பியவருக்கு உரியது. நண்பனின் தோழரை வரவேற்று உபசரிப்பது என்பது, நண்பரையே உபசரிப்பதற்கு சமமாகும். அதேபோல கடவுளின் தூதுவர்களை ஏற்றுக்கொள்வது கடவுளையே ஏற்றுக்கொள்வதாகும்.

மீட்பின் சங்கிலியில் இது நான்கு வகையான தொடர்புகளை நமக்குத்தெரியப்படுத்துகிறது. 1. கடவுள் இருக்கிறார். அவருடைய அன்பின் வெளிப்பாட்டில் தான் மீட்பின் திட்டம் தொடங்கியது. 2. அந்த மீட்புத்திட்டத்தை இயேசு இந்த உலகத்திற்கு கொண்டு வந்தார். 3. அந்த மீட்பின் செய்தியை இறைவாக்கினர்களும், சீடர்களும் உலகத்திற்கு தொடர்ந்து அறிவிக்கிறார்கள். 4. இந்த இறைவாக்கினர்களை ஏற்றுக்கொள்கின்ற இறைமக்கள். அதாவது, நாம் அனைவருமே போதகர்களாகவோ, இறைவாக்கினர்களாகவோ வாழ முடியாது. ஆனால், அந்தப்பணியைச் செய்கின்றவர்களை வரவேற்று, ஏற்றுக்கொள்வதன் வழியாக நாமும் அந்தப்பணியில் பங்கேற்கிறோம். கடவுளை ஏற்றுக்கொள்கிறோம்.

திருச்சபையின் முக்கியமான கட்டளைகளுள் ஒன்று: நமது ஞான மேய்ப்பர்களுக்கு நம்மாலான உதவியைச் செய்வது. இறைத்திட்டத்தை நமக்கு வெளிப்படுத்தி, இறைவனின் பணி நல்லபடியாக நடக்க உதவிபுரியும் இறைஊழியர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச்செய்து, இறைத்திட்டத்தின் ஊழியர்களாக மாறுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

போலி வழிபாடுகளுக்குச் சாட்டையடி ! (முதல் வாசகம்)

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இறைவாக்கினர் எசாயா வழியாக போலி வழிபாடுகளுக்கு எதிராகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறார் இறைவன். பலிகள், காணிக்கைகள், வழிபாடுகள் அனைத்தும் இறைவனுக்கு ‘ அருவருப்பையே’ தருகின்றன என்பது மிகவும் கடினமான ஒரு செய்தி. இறைவன் விரும்புவது துhய்மையான இதயத்தையே. #8220;நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள். நீதியை நாடித் தேடுங்கள். ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள். திக்கற்றோருக்கு உதவி செய்யுங்கள். கைம்பெண்ணுக்காக வழக்காடுங்கள்” என்பதே இறைவனின் தெளிவான அழைப்பு. மத்தேயு 25ஆம் அதிகாரத்தில் இயேசு விடுக்கின்ற இதே அழைப்பு ஏழைகளுக்கு, ஒடுக்கப்பட்டோருக்கு, தேவையில் உழல்வோருக்கு உதவுவதே மிகச் சிறந்த இறைவழிபாடு என்று எடுத்துச் சொல்கிறது. எசாயா இறைவாக்கினரின் இந்த எச்சரிக்கையை எப்போதும் இதயத்தில் கொள்வோம்.

மன்றாடுவோம்: ஒடுக்கப்பட்டோரின் புகலிடமான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தைகளை மனதில் ஏற்று, போலி வழிபாடுகளைத் தவிர்த்து, எளியேரின் வடிவில் உம்மைக் கண்டு உமக்குப் பணிவிடைபுரிய அருள்தாரும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

--------------------------------

 

யேசு கொணர்ந்த வாள்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் வார்த்தைகள் பன்முகம் கொண்டவை. அமைதியும், ஆறுதலும் தருகின்ற வார்த்தைகளும் உண்டு. அதிர வைக்கும், அறைகூவல் விடுக்கும் வார்த்தைகளும் உண்டு.

இன்றைய நற்செய்தி வாசகம்; இரண்டாம் வகையைச் சேர்ந்தது.

இயேசுவின் போதனையும், கொள்கைகளும் ஒரு குடும்பத்திற்குள், ஒரு குழுமத்திற்குள், ஒரு சமுதாயத்திற்குள் பிளவை உருவாக்கும் தன்மை கொண்டவை. அவரது வார்த்தையின்படி வாழ விரும்புகிறவர்கள் சில நேரங்களில் தம் சொந்த குடும்பத்தினரைக்கூட இழக்க வேண்டியிருக்கும். பிரிய வேண்டியிருக்கும்.

இயேசுவின் பொருட்டு உறவுகளையும் இழக்க ஒருவர் அணியமாக இருக்க வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு.

இயேசுவின் கொள்கை சமரசம் செய்வதல்ல. தேவைப்பட்டால், எதிர்த்து எழுவது. கிளர்ச்சி செய்வது. நீதி, பரிவு, ஓய்வு நாளிலும் குணமாக்கல், ஒதுக்கபட்டோருடன் உறவு போன்றவற்றில் இந்த சமுதாயம் என்ன நினைக்கும், எனது சீடர்கள் என்ன நினைப்பார்கள், என் உறவினர்கள் என்ன சொல்வார்கள் என்றெல்லாம் எண்ணவில்லை. எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளவில்லை. கொண்ட மதிப்பீடுகளுக்காக, நம்பிக்கைக்காக இறுதியில் உயிரையும் கொடுத்தார்.

நமது அன்பு, நம்பிக்கை, விசுவாசம் சமரசம் அற்றதாக அமையட்டும். இதுவே இயேசு கொணர்ந்த வாள்.

மன்றாடுவோம்; அன்பின்; இயேசுவே, உம் பொருட்டு தம் உயிரை இழப்போர் அதைக் காத்துக்கொள்வர் என்று மொழிந்தீரே. உமக்கு நன்றி. என்னுடைய நம்பிக்கையில், மதிப்பீடுகளில் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் வாழ அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

 

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''இயேசு, 'தம் உயிரைக் காக்க விரும்புவோர் அதை இழந்து விடுவர். என் பொருட்டுத்
தம் உயிரை இழப்போரோ அதைக் காத்துக் கொள்வர்' என்றார் (மத்தேயு 10:39)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் தீர்க்கமான முடிவெடுத்து, உறுதியான உள்ளத்தோடு அவரைப் பின்தொடர வேண்டும். இயேசுவின் பொருட்டுத் துன்பங்களை ஏற்கவும் அவர்கள் தயங்கக் கூடாது. ஏன், தம் உயிரையே இயேசுவுக்காகக் காணிக்கையாக்கிட அவருடைய சீடர்கள் முன்வரவேண்டும். இவ்வாறு தம் உயிரை இழப்போர் உண்மையில் ''அதைக் காத்துக்கொள்வர்'' என இயேசு கூறுவது முன்னுக்குப் பின் முரண்பாடாகப் படலாம். ஆனால் உண்மை அதுவன்று. இவ்வுலகில் நமக்குத் தரப்படுகின்ற உயிர் ஒருநாள் நம்மைவிட்டுப் பிரிந்துவிடும். ஆனால் மனித வாழ்வு இவ்வுலகத்தோடு முடிந்துவிடுவதல்ல. மனித வாழ்வின் நிறைவு இம்மண்ணக வாழ்வைத் தாண்டிச் செல்கின்ற ஒன்று. நிலையான வாழ்வைப் பெற வேண்டும் என்னும் ஏக்கம் மனித உள்ளத்தில் எப்போதும் இருக்கவே செய்யும். அந்த நிலையான வாழ்வு ஒருநாளும், ஒருபோதும் அழியாத ஒன்றாக இருக்கும் என இயேசு நமக்கு வாக்களிக்கிறார்.

-- இவ்வுலகக் கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு, இவ்வுலகத்தைச் சார்ந்தவற்றையே விடாது பிடித்துக்கொள்ள விரும்புகின்ற மனிதர் ஏமாற்றமே அடைவர். அவர்கள் நிலையானது என நினைப்பது உண்மையிலேயே நிலையற்றது என இறுதியில் அவர்கள் உணர்ந்துகொள்வர். இதனால் நாம் மறுவுலக வாழ்வு நமக்கு உண்டு என்னும் நினைப்பில் இவ்வுலக வாழ்வை வெறுக்க வேண்டும் என இயேசு கேட்கவில்லை. இவ்வுலக வாழ்வு கடவுள் நமக்கு அளிக்கின்ற கொடையே. ஆனால் இவ்வுலகம் நம் இதயத்தில் கடவுளின் இடத்தைப் பிடித்துக்கொள்ளக் கூடாது. கடவுளுக்கே உரிய மாட்சியையும் வணக்கத்தையும் நாம் இவ்வுலகு சார்ந்த எப்பொருளுக்கும் அளிப்பது ''சிலைவழிபாடு'' போன்றதுதான். உண்மையான கடவுளை நாம் மறந்துவிட்டு மனம் போன போக்கில் நம் வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பினால் நம் உள்ளத்தில் அமைதி தோன்றாது. எனவே, இயேசுவின் பொருட்டு நாம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராக இருக்க வேண்டும். அப்போது நாம் நம் வாழ்வின் நிறைவைக் கண்டுகொள்வோம். இதுவே நம் ஆன்ம வேட்கையைத் தணிக்கின்ற நீரூயஅp;ற்றாக நம்மில் வந்து பாய்ந்து வழிந்தோடும். அப்போது அலைந்து குலைந்து நாம் கலங்காமல் உள்ளத்தில் அமைதி காண்போம்.

மன்றாட்டு
இறைவா, நீரே எங்கள் வாழ்வின் நிறைவு என நாங்கள் உணர்ந்து செயல்பட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"உங்களை ஏற்றுக்கொள்பவர் என்னை ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக்கொள்பவரோ என்னை அனுப்பினவரையே ஏற்றுக்கொள்கிறார்"(மத்தேயு 10:40)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசுவின் சீடருக்கும் இயேசுவை நம் மீட்பராக அனுப்பிய கடவுளுக்கும் இடையே பாலமாக அமைபவர் இயேசுவே. கடவுள் இயேசுவை அனுப்பியதும் இயேசு சீடரை அனுப்பியதும் நெருங்கிய தொடர்புடைய நிகழ்வுகள். செய்தியைக் கொண்டுவருகின்ற தூதரை ஏற்போர் தூது அனுப்பியவரை ஏற்கிறார் என்பது தெளிவு.

எனவே, இயேசுவின் தூதர் இயேசுவின் சாயலாக, இயேசுவை மக்களுக்கு அறிவிப்பவராக மாற வேண்டும். அப்போது, கடவுள் - இயேசு - சீடர் - உலக மக்கள் ஆகிய நால்வருக்கும் இடையே நிலவுகின்ற, நிலவ வேண்டிய ஆழமான உறவு கண்கூடும் வகையில் வெளிப்படும்.

மன்றாட்டு
இறைவா, நீர் அனுப்பிய உம் மகன் இயேசுவை நாங்கள் ஏற்கவும், அவர் அறிவித்த செய்தியைத் தொடர்ந்து மக்களுக்கு அறிவிக்கவும் எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

அமைதியா? வாளா?

நிச்சயமாக அமைதிதான். அதற்காக சுடுகாட்டு அமைதி அல்ல. துப்பாக்கி சத்தம் கேட்கும் சுதந்திர பூமி நல்லது. மயான அமைதி அல்ல. மனிதம் மதிக்கப்படும் மண் பெரிது. வாயும் வயிறும்தான் வாழ்வு என்ற ஐந்தறிவு அமைதியை விட, அறிவும் ஆனந்தமும் உள்ள ஆறறிவு போராட்ட வாழ்வு மேலானது. என்ன நடந்தாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் நடைபிணங்களாக, ஜடங்களாக அலையும் அமைதியை விட, தொட்டால் சுருங்கியாக, பற்றி எரியும் பாஸ்பரமாக, உணர்வோடு உறிமையோடு வாழ்வதல்லவா வாழ்வு.

இத்தகைய மனிதமும் மனிதமாண்பும் நற்செய்தி மதிப்பீடுகளும் மதிக்கப்படும் சூழலில்உள்ள அமைதியையே இயேசு இவ்வுலகிற்குக்கொண்டுவந்தார். இந்த அமைதி உருவாக்கும் உன்னத பணியில் ஒரு வாளாகப் பயன்படவும் இயேசு தயங்கவில்லை.

ஆமைதி என்ற சாக்கில், சந்தடியில், அநீதியோடு, அவமானத்தோடு, அதிகாரத்தோடு சாமரம் வீசி சமரசம் செய்துகொள்ள வந்தவர் அல்ல இயேசு. இதற்காக உறவோடும் கூட ஒப்புரவு செய்துகொள்ள தயாராக அவர் இல்லை. உண்மைக்காக உறவைப் பிறிக்க, பிளக்க, வாளைப் பயன்படுத்த தயாராக வந்தவரே நம் இயேசு.

அநீதியை வெட்டி வீழ்த்தி அதிலே உருவாகும் உன்னதமான உயர்ந்த நிலையான தெய்வீக அமைதியை உலகிற்கு வழங்கவே இயேசு வந்தார்.

அவரது அமைதிப் படைக்கு நீ வேண்டும்.

--அருட்திரு ஜோசப் லீயோன்