முதல் வாசகம்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 25-31

`யாருக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? எனக்கு நிகரானவர் யார்?' என்கிறார் தூயவர். உங்கள் கண்களை உயர்த்தி மேலே பாருங்கள்; அவற்றைப் படைத்தவர் யார்? வான் படையை எண்ணிக்கை வாரியாய் வெளிக்கொணர்ந்து ஒவ்வொன்றையும் பெயர் சொல்லி அழைப்பவர் அன்றோ? அவர் ஆற்றல்மிக்கவராயும் வலிமை வாய்ந்தவராயும் இருப்பதால் அவற்றில் ஒன்றேனும் குறைவதில்லை. "என் வழி ஆண்டவருக்கு மறைவாய் உள்ளது; என் நீதி என் கடவுளுக்குப் புலப்படவில்லை'' என்று யாக்கோபே, நீ சொல்வது ஏன்? இஸ்ரயேலே, நீ கூறுவது ஏன்? உனக்குத் தெரியாதா? நீ கேட்டதில்லையா? ஆண்டவரே என்றும் உள்ள கடவுள்; அவரே விண்ணுலகின் எல்லைகளைப் படைத்தவர்; அவர் சோர்ந்து போகார்; களைப்படையார்; அவரது அறிவை ஆய்ந்தறிய இயலாது. அவர் சோர்வுற்றவருக்கு வலிமை அளிக்கின்றார்; வலிமையிழந்தவரிடம் ஊக்கம் பெருகச் செய்கின்றார். இளைஞர் சோர்வுற்றுக் களைப்படைவர்; வாலிபர் நிலைதடுமாறி வீழ்வர். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்திருப்பவர்களோ புதிய ஆற்றல் பெறுவர். கழுகுகள்போல் இறக்கை விரித்து உயரே செல்வர்; அவர்கள் ஓடுவர்; களைப்படையார்; நடந்து செல்வர்; சோர்வடையார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 103: 1-2. 3-4. 8,10
பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!

1 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2 என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே! -பல்லவி

3 அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்;
உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார்.
4 அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்;
அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார். -பல்லவி

8 ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்;
நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
10 அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை;
நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, ஆண்டவர் தம் மக்களை மீட்க வருகிறார். அவரை எதிர்கொள்ள ஆயத்தமாயிருப்பவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

மத்தேயு 11:28-30

திருவருகை காலம்-இரண்டாம் வாரம், புதன்

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

சோர்ந்திருப்பவர்களே! – உங்கள் சோகம் மாறும்
மத்தேயு 11:28-30

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

கணக்கெடுப்பு நடத்தி எத்தனை மனிதர்கள் சோர்வில்லாமல் இருக்கிறார்கள் என்று பார்த்தால் மிகவும் குறைவானவர்களே நம் கண்களில் தென்படுவார்கள். சோர்வை தவிர்த்து சுறுசுறுப்போடு வாழ இன்றைய நற்செய்தி வாசகம் நல்லாலோசனைகளை வழங்குகிறது. அவற்றில் இரண்டு மிக மிக முக்கியமானது.

1. கடவுளை பிடித்தல்
கடவுளை நெருங்கி வர வர நம் உள்ளத்தில் பிரகாச ஒளி எரிய ஆரம்பிக்கிறது. அந்த பிரகாச ஒளி நம்மிடம் நெருங்கி வரும் சோர்வை விரட்டுகிறது. நம் உடல் முழுவதும் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் செல்கள் வளர்கின்றன. உடல், மனம், ஆன்மா இவையனைத்தும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பிக்கின்றன. கடவுளைப் பற்றி பிடிக்கும் போது ஆற்றலும், ஆனந்தமும் அவைகளாகவே வந்து தங்குகின்றன.

2. கழிவானதை விடுதல்
நம் மனசாட்சி ஒருசில தவறான செயல்களை நாம் செய்யும்போது நமக்கு நன்கு அறிவுறுத்தும் இது கழிவு இதை தொடாதே என்று. அப்படி மனசாட்சி அறிவுறுத்தும் நிலையில் நாம் அந்த தவறான அதாவது கழிவான செயல்களை செய்யவில்லை என்றால் நாம் நலமாக இருப்போம். சுறுசுறுப்பாக இயங்குவோம். எப்போது மனசாட்சியின்படி செயல்டவில்லையோ நாம் கழிவை தொடுகிறோம். தொட்ட பிறகு ஆபத்துதான். அந்த கழிவான செயல் கண்டிப்பாக நமக்கு சோர்வையும், மனஅழுத்தத்தையும் கொண்டுவந்தே தீரும்.

மனதில் கேட்க…
1. கடவுளின் கரம் பிடித்தால் சோகம் என்னை தீண்டாது இது தெரியுமா?
2. கழிவானது எனக்கு கண்டிப்பாக சோர்வையும், மனஅழுத்தத்தையும் கொண்டு வந்தே தீருமல்லவா?

மனதில் பதிக்க…
பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்(மத் 11:28)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எசாயா 40: 25 – 31
இறைவனின் ஆற்றல்

இறைவனுடைய மகிமையும், மாட்சிமையும், அவருடைய வல்லமையும் இன்றைய வாசகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ”எனக்கு நிகரானவர் யார்?” என்கிறார் படைகளின் ஆண்டவர். இந்த உலகம், இந்த உலகத்திலுள்ள அனைத்தும் கடவுளால் படைக்கப்பட்டது. இந்த உலகத்தின் தொடக்கமாக இருக்கிறவர் கடவுள். அவர் வலிமைமிக்கவர். அவரை, அவருடைய மாட்சிமையை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. இந்த பகுதி, இறைவன் ஒருவரே என்கிற செய்தியை வலியுறுத்திக்கூறுவதாக அமைந்திருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்களை நாடிச் சென்றனர். ஆனால், வல்லமையுள்ள, உயிருள்ள தேவன் ஒருவரே என்கிற செய்தி இங்கே உறுதியாகச் சொல்லப்படுகிறது. இஸ்ரயேல் மக்கள் தேடிச் செல்கிற தெய்வங்கள் அனைத்துமே, உண்மையான இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள். அவருடைய படைப்புக்கள் மட்டுமே.

இந்த பகுதியில் மற்றொரு செய்தியும் வெளிப்படையாகச் சொல்லப்படுகிறது. அது ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்பவர்களைப் பற்றியது ஆகும். வாழ்க்கையில் எவ்வளவு ஏமாற்றங்கள், சோதனைகள், சோர்வுகள் வந்தாலும், ஒருவர் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்திருந்தால், அவர்களை இறைவன் காப்பாற்றுவார். ஏனென்றால், அவர்கள் இறைவனின் ஆற்றலைப் பெற்றவர்களாக விளங்குவார்கள். கழுகுகள் போல் இறக்கை விரித்து உயரே செல்வார்கள். எதுவும் அவர்களைத் தீண்டாது. எதுவும் அவர்களைத் தாக்க முடியாது. அவர்கள் எவ்வளவு வேகமாகச் சென்றாலும், களைப்படையாது இருப்பார்கள். இறைவனின் துணை அவர்களோடு இருக்கும்.

நாம் அனைவரும் ஆண்டவர் மீது நம்பிக்கை உள்ளவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். அப்படி வாழ்வதனால், நாம் நம்முடைய வாழ்க்கையில் எந்த நேரமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும். சோதனைகளுக்கு மத்தியிலும், நாம் ஒருபோதும் நம்பிக்கை இழக்காது வாழ முடியும். அப்படிப்பட்ட நம்பிக்கை வாழ்வு வாழ்வதற்கு, நாம் உறுதி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

திருப்பாடல் 103: 1 – 2, 3 – 4, 8 & 10
”ஆண்டவர் நீடிய பொறுமையும், பேரன்பும் உள்ளவர்”

இந்த திருப்பாடல் இறைவனை உடல், உள்ளம் மற்றும் ஆன்மாவோடு இணைந்து போற்றுவதற்கு அழைப்புவிடுக்கிற திருப்பாடலாக அமைகிறது. பொதுவாக, திருப்பாடல்களின் அமைப்பைப் பார்க்கிறபோது, இறைவனின் வல்லமையைப் போற்றுகிற வண்ணம் தொடங்குகிறது. பல்வேறு விண்ணப்பங்களை இறைவனிடம் எடுத்துச் சொல்கிறது. இறுதியில், மீண்டும் அவரைப் போற்றி, நிறைவுறுகிறது. இறைவனைப் போற்றுகிறபோது, அவர் செய்த எல்லா வல்லமையான செயல்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறது.

இந்த திருப்பாடலில், இறைவனின் பேரன்பு நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. இறைவன் நீடிய பொறுமை உடையவராய் இருக்கிறார். அவருடைய அன்பிற்கு எல்லையே இல்லை. ஒருவர் எவ்வளவு தான், குற்றமுள்ளவராக இருந்தாலும், கடவுளிடத்தில் தான் செய்த தவறுகளுக்காக மனம் வருந்தி, திருந்தி, திரும்புகிறபோது, அவர் அவர்களை மன்னிக்கிறவராக இருக்கிறார். ஒரு மனிதராக நம்முடைய வாழ்க்கையோடு இதனைப் பொருத்திப் பார்க்கிறபோது மட்டும் தான், அதில் இருக்கிற ஆழத்தை நம்மால் உணர முடியும். நமக்கு எதிராக பல தவறுகளைச் செய்த ஒருவர், நம்மிடத்தில் மன்னிப்பு கேட்கிறபோது, நம்மால் மன்னிக்க முடியுமா? என்றால், அது மிக மிக கடினமான ஒன்று. ஆனால், கடவுள் நம்மை எளிதாக மன்னிக்கிறார். இதிலிருந்து கடவுள் நம் மீது வைத்திருக்கிற அன்பின் ஆழத்தை நம்மால் உணர முடியும்.

இறைவனின் அன்பை எண்ணி நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். இறைவன் எப்போதும் நம்மோடு இருந்து நம்மை வழிநடத்துகிறவராக இருக்கிறார். அவருடைய வல்லமையை, பேராற்றலை, நம்முடைய வாழ்விற்காகப் பயன்படுத்துகிறார். அந்த அன்பின் ஆழத்தை நாம் உணர்ந்து வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

இயேசு நம் மீது காட்டும் பரிவு

முடிவில்லாத ஒழுங்குகள் தான் சமயம் என்று யூத மக்களால் கருதப்பட்டது. சடங்குகள், சம்பிரதாயங்கள், மத ஒழுங்குகளுக்கு மத்தியில் தான் மக்கள் வாழ்ந்து வந்தனர். எதைச்செய்ய வேண்டும் என்பதற்கு அவர்கள் செவிசாய்ப்பதை விட, எதைச்செய்யக்கூடாது என்பதை, அவர்கள் கட்டாயம் அறிந்திருக்க, சமயத்தலைவர்கள் ஆவணசெய்திருந்தார்கள். எதைச்செய்தாலும், கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், இதையெல்லாம் செய்யக்கூடாது என்று, மக்களை சமயத்தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். இப்படி கட்டுகளுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு, இயேசுவின் இன்றைய நற்செய்தி வாசகம் மிகுந்த ஆறுதலைத் தருகிறது.

நுகம் என்கிற வார்த்தையின் பொருள், “அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்“ என்கிற ஒப்பந்தத்திற்குள்ளாக நுழைவது. பாலஸ்தீனத்தில் மாடுகளுக்கான நுகம் மரத்தால் செய்யப்பட்டது. அதைச் செய்வதற்கு முன்னதாக, மாடுகளையும் கூட்டிவந்து, சரியான அளவை எடுத்து, அதற்கேற்றாற்போல வடிவமைத்தனர். அந்த நுகம் மாட்டிற்கு சரியாகப் பொருந்துகிறதா? என பார்க்கப்பட்டு, பின்னர் தான், அது மாட்டப்பட்டது. அது மாட்டிற்கு, காயத்தை ஏற்படுத்தாத வண்ணம், நேர்த்தியாகப் பொருத்தப்பட்டது. இதன்மூலம், மாட்டிற்கும் வலி தெரியாமல் இருக்கிறது. அதேபோல, மாட்டின் பயன்பாடும் நமக்குக் கிடைக்கிறது. சரியான அளவில் செய்யப்படும் நுகம் தான், இதற்குக் காரணம். இயேசுவின் நுகமும் இதேபோலத்தான். நாம் தாங்குவதற்கு ஏற்ற, சரியான அளவுகோலாக இருக்கிறது.

இயேசு நமது நுகத்தைத் தாங்கிக்கொண்டார் என்பது, ஏதோ வெறும் கருத்தியல் அடிப்படை அல்ல. அது உண்மை. அது வரலாறு. உண்மையாகவே நம் பிணிகளை அவர் தாங்கிக்கொண்டார் என்கிற வார்த்தைகள், இதற்கு வலுசேர்க்கின்றன. நமது துயரங்களைத் தாங்குவதற்கு கடவுள் இருக்கிறார், என்கிற நமது நம்பிக்கை, நமக்கு மிகப்பெரிய பலம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இயேசுவே நமது வாழ்வின் அருமருந்து

கடவுளை பலவிதமான வழிகளில் களைப்புறாமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்வில் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலாக அமைகிறது. கிரேக்கர்கள், ”கடவுளைக்காண்பது அரிது. கடவுளைக்கண்டாலும் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக்கூறுவது அரிதிலும் அரிது” என்று சொல்வார்கள். யோபு புத்தகத்திலே சோப்பார், யோபுவிடம் கேட்பதும் இதுதான், ”கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா?”      (யோபு 11: 7). அப்படியென்றால், கடவுளைக்காணவே முடியாதா? நன்மை செய்கிறவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான் கிடைக்குமா? அவர்கள் ஆறுதல் கூட பெற முடியாதா? என்கிற கேள்விகள் நமக்குள்ளாக எழலாம். அதற்கு பதில்தான் இயேசுவின் அமுதமொழிகள்.

கடவுளைப்பற்றிய தேடல் இயேசுவில் நிறைவடைகிறது. வாழ்வில் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு நிறைவு இயேசுவில் கிடைக்கிறது. இயேசு சொல்கிறார், ”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. இந்த வார்த்தைகள் கடவுளைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்வில் நன்மையே செய்ய வேண்டும் என எண்ணுகிறவர்களுக்கும் ஆறுதல் தருகின்ற வார்த்தைகள். 1பேதுரு 5: 7 சொல்கிறது: ”உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”. ஆக, இயேசுவை நமது வாழ்வில் பற்றிக்கொண்டால், வாழ்வின் அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான விடைகிடைக்கும்.

நமது வாழ்வில் விடைகாண முடியாத பல கேள்விகளுக்கு இயேசுவில் நிச்சயம் பதில் கிடைக்கும். இயேசுவை உணர்ந்து, அவரை முழுமையாக அறிந்து கொண்டால், அனுபவித்தால் நமது வாழ்வில் கவலை என்பதே இல்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------
அன்பில் வேரூன்றுவோம்

அன்பு உள்ள இடத்தில் மலைச்சுமையும் மாலைச்சுமையாகிவிடும், அன்பில்லா இடத்தில் மாலைச்சுமையும், மலைச்சுமையாகிவிடும் என்று சொல்வார்கள். காரணம், அன்பு உணர்வு கொண்டு சுமக்கிற எதுவும் பளுவாகத் தெரிவதில்லை. நம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக நமது சுமைகள் இயேசுவுக்கு கடினமானதாகத் தெரியவில்லை. நமது சுமைகளை நாம் சுமக்க இயலாமல், வருந்துகிறபோது, உண்மையாக, நேர்மையாக வாழ்வதனால் சந்திக்கும் துன்பங்களைப் பார்த்து நாம் பயப்படுகிறபோது, சோர்வுறுகிறபோது, ஆண்டவரின் இரக்கம் நமக்கு நிறைவாகக் கிடைக்கிறது. எனவே தான், இயேசு சொல்கிறார்: ”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”.

கடவுள் நம்மீது கொண்டிருக்கிற அன்பினால், நமது சுமைகளைச் சுமக்க தயாராக இருப்பதுபோல, நாமும் மற்றவா்களின் சுமைகளைத் தாங்குவதற்கு தயாராக இருப்பதற்கு நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். இந்த உலகத்திலே நோயுற்றிருக்கிற, கைவிடப்பட்டிருக்கிற, வாழ்வையே வெறுத்துப்போயிருக்கிற உள்ளங்களுக்கு ஆறுதலாகவும், அவர்களுடைய சுமைகளை பகிர்ந்து கொள்ளக்கூடியவர்களாகவும் வாழ்வதுற்கு ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் அழைக்கப்படுகிறோம். அதற்கு நாம் அன்பின் வடிவமாக மாற வேண்டும். ஏழைகள் மட்டில் அதிகமாக அன்பு காட்டி, அன்பின் வடிவமாகத் திகழ்ந்தவர் அன்னை தெரசா. அன்பு ஒன்றையே தனது வாழ்வின் முழுநோக்கமாகக் கொண்டு வாழ்ந்து, மக்கள் மத்தியில் பணிசெய்தவர். மற்றவர்களின் சுமைகளைத் தானே சுமந்தவர். இயேசுவின் அடிச்சுவட்டை இறுதிவரை பின்பற்றியவர்.

நம் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா முழுவதையும் அன்பினால் நிரப்ப வேண்டும். அன்பு நம்மை ஆட்கொள்ள வேண்டும். மானிட சமூகம் உருவானதே கடவுளன்பின் வெளிப்பாடுதான். நம்மிலிருந்து அன்பு என்னும் ஆறு பெருக்கெடுத்து ஓடட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் அன்பு

கடவுளைத்தொடர்ச்சியாக விடாமுயற்சியோடு தேடுவோர்க்கும், நல்லவராக வாழ முயற்சி செய்தும் பலவீனத்தில், மனித குறைபாடுகளில் தொடர்ந்து தவறிக்கொண்டிருக்கிறவர்களுக்கும், அதனால் சோர்வுற்றவர்களுக்கும் இயேசு இந்த நற்செய்தியைத் தருகிறார். அவருடைய அழைப்பு, ”பெருஞ்சுமை சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்பதாகும். இந்த அழைப்பு உண்மையைத்திறந்த உள்ளத்தோடு தேடி, அதனால் சந்தித்த துன்பங்களினால், துயரங்களினால் களைப்படைந்தவர்களுக்கான அழைப்பு. நம்முடைய அறிவை கசக்கிப்பிழிந்தால் கடவுளை அடைந்து விடலாம் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. மாறாக, இயேசுவின் மீது நமது பார்வையைத்திருப்பி, அவர் மீது நமது முழுமையான நம்பிக்கை வைத்தால் கடவுளை அடைந்து விடலாம்.

ஒரு பாரம்பரிய யூதருக்கு, மதம் என்பது அவன் மீது சுமத்தப்பட்ட சுமை. ஏனென்றால் சட்டம் என்ற பெயரில் பல சுமைகளை பரிசேயர்களும், சதுசேயர்களும் பாமரர்களுக்கு நடுவில் விதை்திருந்தனர். எனவே, ஒரு யூதனுக்கு மதம் என்பது முடிவில்லாத சட்டங்களைக் கொண்டது. “என் சுமை எளிதாயுள்ளது“ என்று இயேசு சொல்வது வெறும் சுமையைக்குறிப்பது அல்ல, மாறாக, அன்புச்சுமையைக் குறிப்பது. யார் மீதாவது நாம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தால், அவர்களுக்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்போம். அது கடினமானதாக இருந்தாலும், அந்த நபரை நாம் மிகுதியாக அன்பு செய்வதால், அது நமக்கு பெரிய வேதனையைக்கொடுக்காது. நமது அன்புக்குரியவருக்காக செய்கிறோம் என்ற எண்ணமே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதைத்தான் இயேசு இங்கு குறிப்பிடுகிறார்.

இயேசு நம்மை மிகுதியாக அன்பு செய்யக்கூடியவர். அந்த அன்புதான் நமக்காக சிலுவைச்சாவை ஏற்றுக்கொள்ளச் செய்தது. அந்த அன்புதான் நமக்காக உயிரைத்தியாகம் செய்ய தூண்டுகோலாக இருந்தது. இயேசுவின் அன்பில் நம்மை இணைத்துக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

 

எளியோருக்கான அழைப்பு !

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்னும் இயேசுவின் அழைப்பு அனைவருக்குமானது. சமயம் கடந்த, கத்தோலி;க்க அழைப்பு. அந்த அழைப்புக்காக நன்றி கூறுவோம்.

நாம் வாழும் இன்றைய நாள்கள் மன அழுத்தம், உளைச்சல், அமைதியின்மை நிறைந்த நாள்கள். செல்வமும், வசதியும் பெருகினாலும், அமைதியின்றி, மனதில் பாரத்துடன் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இயேசுவின் அழைப்பு பொருள் நிறைந்த ஒன்று. நமது கவலைகள், கலக்கங்கள், சுமைகள் அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் இறக்கி வைப்போமா?

அத்துடன், இயேசுவின் சீடர்களான நாம், அவரைப்போல இந்த அழைப்பை நமது அயலாருக்கு விடுத்தால் என்ன? நமக்கு அறிமுகமான, அருகில் வாழ்வோரின் சுமைகளை நாம் அறிவோம். நம்மால் இயன்ற அளவு அவர்களின் சுமைகளைக் குறைக்க, ஆறுதல் அளிக்க முயன்றால் என்ன?

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் சுமைகளைத் தாங்கிக்கொள்வதற்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் பிறரின் சுமைகளைத் தாங்க முன்வரும் தாராள உள்ளத்தைத் தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

----------------------------------------------

 

நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று இயேசுவே கூறிய இன்றைய நற்செய்தி. என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார் ஆண்டவர் இயேசு. துன்பமே இல்லாத வாழ்வை, சிலுவைகளே இல்லாத பயணத்தை, முட்களே இல்லாத வழித்தடத்தை இயேசு வாக்களிக்கவில்லை. ஒரு சில மந்திரவாதிகளும், போலி இறைவாக்கினர்களும்தான் இத்தகைய போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். ஆனால், இயேசு அப்படிப்பட்ட போலி வாக்குறுதி எதையும் தரவில்லை. மாறாக, என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்கள் சிலுவையைச் சுமந்துகொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார். ஆனால், இயேசு வேறொரு வாக்குறுதியை நமக்குத் தந்துள்ளார். என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது என்பதுதான் அது. என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அது உங்களை அழுத்தாது என்பதுதான் இயேசுவின் அழைப்பு.

எனவே, நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் நுகங்களாகிய துன்பங்கள், நோய்கள், அறைகூவல்கள், தோல்விகள் ஆகியவற்றை இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வோம். அப்போது அவை எளிதானவையாக மாறும்.

மன்றாடுவோம்: இளைப்பாறுதல் தரும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். எனது வாழ்வின் நுகங்களை முறுமுறுக்காமல் ஏற்றுக்கொள்ளவும், அவற்றை உமது அருளால் எளிதாகச் சுமக்கவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

---------------------------------------

சுகமான சுமைகள்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பல்வேறு சுமைகளால் சோர்ந்துபோன அனைவருக்கும் ஆறுதல் தரும் அருமையான வாக்குறுதியை இன்றைய நற்செய்தி வாசகமாகப் பெற்றிருக்கிறோம்.

வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இருகரம் விரித்து அழைக்கிறார் நம் ஆண்டவர். எனவே, உடல் நோயா, மன அழுத்தமா, கவலைகளா, அச்சமா, துயரமா, அவமானமா? எத்தகைய சுமை நம்மை அழுத்தினாலும், இயேசுவின் அருகில் வந்து அவரிடம் நம் பாரங்களை இறக்கி வைப்போம். உலகம் தர இயலாத மன ஆறுதலை, உடல் நலத்தை, ஆன்ம வலிமையை அவர் தருவார்.

அத்துடன், இன்னொரு அழைப்பையும் இன்றைய வாசகம் மூலமாக இயேசு விடுக்கிறார். நம் வாழ்வின் சில சுமைகளை நாம் ஒருவேளை சுமந்தே தீரவேண்டும் என்கிற நிலை நம்மில் பலருக்கு இருக்கலாம். தீராத நோய், கடினமாக வாழ்க்கைத் துணைவர், ஊனமுற்ற குழந்தை, ... போன்ற ஏதேனும் ஒரு சுமை இறக்கி வைக்க முடியாததாக, என்றும் நம்மோடு உடன் வருகிற சுமையாக இருந்துவிட்டால் என்ன செய்வது?

இத்தகைய சுமைகளை எளிதாக, இனியவையாக மாற்றுவதாக இயேசு வாக்களிக்கிறார். ஆம், இறக்கி வைக்க முடியாத சுமைகள் இயேசுவின் அருளால் இனிய சுமைகளாக, எளிய சுமைகளாக மாறுகின்றன. காரணம், நம்மோடு சேர்ந்து இச்சுமைகளை இயேசுவும் சுமக்கிறார். அதற்காக நன்றி கூறுவோம். சுமைகளை மகிழ்வுடன் சுமப்போம்.

மன்றாடுவோம்; சுமை தாங்கியான இயேசுவே, எங்கள் சுமைகளையெல்லாம் போக்கி ஆறுதல் தருவதற்காக நன்றி கூறுகிறேன். எனது வாழ்வின் தீராத, மாறாத சுமைகளை உமது அருளால் இனிய, எளிய சுமைகளாப் பார்க்கின்ற புதிய பார்வையை எனக்குத் தந்தருளும். என்னோடு வாழ்கின்றவர்களை சுமைகளாகக் கருதாமல், உறவுகளாக ஏற்கும் மனநிலையை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

------------------------

''இயேசு, 'ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது' என்றார்'' (மத்தேயு 11:30)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ள ''சீராக்கின் ஞானம்'' என்னும் நூலின் இறுதியில், கடவுளிடமிருந்து வருகின்ற கொடையாகிய ஞானம் ஒரு நுகத்திற்கு ஒப்பிடப்படுகிறது. கடவுளைப் பற்றிய அறிவை நமக்கு அளித்து, கடவுளின் கட்டளைகளையும் நமக்குத் தெரியப்படுத்துகின்ற ஞானம் நம்மை அழுத்துகின்ற சுமையல்ல, மாறாக நமக்கு வழிகாட்டுகின்ற பயணத் துணை (காண்க: சீஞா 53:26). எகிப்து நாட்டில் அடிமைப்பட்டிருந்த இஸ்ரயேலரை அழுத்தியது ஒரு ''நுகத்தடி'' (காண்க: லேவி 26:13). அதுபோலவே, பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மக்களும் ஒரு நுகத்தைச் சுமந்தனர் (காண்க: எசா 47:6). இத்தகைய சுமைகளைச் சுமந்து, களைப்புற்று அவதிப்பட்ட மக்களுக்குக் கடவுள் அளித்த ஒரு ''நுகம்'' இருந்தது (காண்க: எரே 2:20). அது கடவுள் வழங்கிய ''திருச்சட்டம்'' ஆகும். நீதியையும் உண்மையையும் நாடிச் செயல்படுத்துவதே அச்சட்டம் மனிதருக்க அளிக்கின்ற பொறுப்பு (காண்க: எரே 5:1,5).

-- இயேசு நமக்கு அளிக்கின்ற ''நுகம்'' நம்மீது சுமத்தப்படுகின்ற பளு அல்ல. மாறாக, திருச்சட்டத்திற்கு இயேசு அளிக்கின்ற புதிய விளக்கமே அவர் நமக்கு அளிக்கின்ற ''நுகம்'' (காண்க: மத் 5:17-20). இயேசுவின் நுகம் ''அழுத்தாது''; அதன் சுமை ''எளிது'' (மத் 11:30). இதனால் இயேசு திருச்சட்டத்தை அழித்துவிட்டார் என்று பொருளாகாது. மாறாக, திருச்சட்டத்திற்கு இயேசு வேரோட்டமான ஒரு புதிய விளக்கம் தருகிறார் (காண்க: மத் 5:21-48; 10:16-23). இயேசு நமக்குத் தருகின்ற கட்டளைகள் பழைய ஏற்பாட்டுத் திருச்சட்டத்தைவிட ''கடினமாக'' இருக்கலாம். ஆனால், அவை நம்மை அடிமைப்படுத்துவதில்லை; மாறாக, நமக்கு சுதந்திரம் அளிக்கின்றன; நம்மை எல்லாவித அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கின்றன. பரிசேயர் திருச்சட்டத்திற்கு அளித்த விளக்கங்கள் மக்களை அடிமைப்படுத்தின (காண்க: மத் 23:4). மாறாக, இயேசு நமக்கு ''இளைப்பாறுதல்'' தருவதாக வாக்களிக்கிறார் (மத் 11:28). இந்த ''ஓய்வு'' படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஓய்வெடுத்ததை நமக்கு நினைவூட்டுகிறது. கடவுளுக்கும் மனிதருக்கும் படைப்புப் பொருள்களுக்கும் இடையே நல்லுறவு நிலவும்போது இந்த ஓய்வு நமதாகும். அப்போது கடவுளின் ஓய்வில் நாமும் பங்கேற்று அந்த அமைதியில் மகிழ்ந்திருப்போம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் சுமைகளை எளிதாக்குபவர் நீரே என உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------------------------------

இதோ ஒரு மாற்றுச் சுமை

சும்மாதெருவில் உள்ள சுமையை இழுத்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு,நொந்து நொடிந்து அறுந்த பட்டமாக அல்லாடுகிறான் மனிதன். ஆறிவியல் பொருட்கள், நுகர்வு கலாச்சாரம், பொழுதுபோக்கு அம்சங்கள், கலாச்சார சீரழிவு, ஆன்மீக வெற்றிடம் என்னும் பெருஞ்சுமைகளைச் சுமந்து சுமந்து சோர்ந்துபோயுள்ளான்.

இளைப்பாறுதல் தேடி எங்கெங்கோ அலைந்து அதிலும் சோர்ந்துபோயுள்ளான்.பணம் கொடுத்து வாங்கும் முயற்சியில் பலர். மதுவில். மாதுவில் தேடும் ஒரு கூட்டம், போதை. சுpனிமா, ஊடகம் இவறடறில் தேடும். இன்னெரு கூட்டம். அந்த இடம், இந்த ஆள் என்று அலைமோதும் பிறிதொரு கூட்டம். ஆனாலும் இளைப்பாறுதல் கண்டடைந்தார் யாருமில்லை.

"என்னிடம் வாருங்கள், இளைப்பாறுதல் தருவேன்". ஊன் பெருஞ்சமையை என் தோள்மேலட இறக்கி வை. அவற்றை நான் உனக்காக சுமக்கிறேன். உன் குற்றங்களுக்காக நான் தண்டனை அனுபவிக்கிறேன். உன் தவறுகளுக்காக நான் தண்டனை பெற தயாராகயிருக்கிறேன். உனக்கு சுகம் கிடைக்க நான் காயப்பட காத்திருக்கிறேன்

நமது பெருஞ்சுமையை ஆண்டவர்மேல் போட்டுவிட்டு சும்மா அலைவதல்ல சுகம். அது சோம்பலுக்கும், சோதனைக்கும் அதனால் அழிவுக்கும் ஆதாரமாகிவிடும். எனவே, "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள். அது அழுத்தாது, எளிதானது,இளைப்பாற்று தருவது" என்று ஒரு மாற்றுச்சுமையை நமக்குத் தருகிறார்.

இயேசுவே, நீர் தரும் சுமையைச் சுமந்து உம்மோடு நடந்து என் வாழ்வில் மகிழவேன்

--அருட்திரு ஜோசப் லீயோன்

------------------------------------------------

எளியோருக்கான அழைப்பு !

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்னும் இயேசுவின் அழைப்பு அனைவருக்குமானது. சமயம் கடந்த, கத்தோலி;க்க அழைப்பு. அந்த அழைப்புக்காக நன்றி கூறுவோம்.

நாம் வாழும் இன்றைய நாள்கள் மன அழுத்தம், உளைச்சல், அமைதியின்மை நிறைந்த நாள்கள். செல்வமும், வசதியும் பெருகினாலும், அமைதியின்றி, மனதில் பாரத்துடன் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இயேசுவின் அழைப்பு பொருள் நிறைந்த ஒன்று. நமது கவலைகள், கலக்கங்கள், சுமைகள் அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் இறக்கி வைப்போமா?

அத்துடன், இயேசுவின் சீடர்களான நாம், அவரைப்போல இந்த அழைப்பை நமது அயலாருக்கு விடுத்தால் என்ன? நமக்கு அறிமுகமான, அருகில் வாழ்வோரின் சுமைகளை நாம் அறிவோம். நம்மால் இயன்ற அளவு அவர்களின் சுமைகளைக் குறைக்க, ஆறுதல் அளிக்க முயன்றால் என்ன?

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் சுமைகளைத் தாங்கிக்கொள்வதற்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் பிறரின் சுமைகளைத் தாங்க முன்வரும் தாராள உள்ளத்தைத் தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

எசாயாவின் திருப்பாடல் ! (முதல் வாசகம்)

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய முதல் வாசகப் பகுதி ‘எசாயாவின் திருப்பாடல்’ என்று அழைக்கப்படுகிறது. திருப்பாடல்களில் காணக் கிடக்கும் உள்ளத்து உணர்வுகளை இந்தப் பகுதி பிரதிபலிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. “உமது திருப்பெயரும், உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன. என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது. எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது” என்னும் வரிகள் மனித இதயங்களின் ஏக்கத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன. அத்துடன், துயர வேளையில் இறைவனிடம் அடைக்கலம்  புகுந்து, ஆறுதல் தேடும் வகையிலும் அதன் இறுதிப் பகுதி அமைந்திருக்கின்றது. எசாயாவின் இத்திருப்பாடலையே நம் வாழ்வின் பாடலாக, உணர்வுகளாக மாற்றுவோம். அவரையே ஆர்வமுடன் நாடுவோம். துன்ப வேளைகளில் அவரிடம் அடைக்கலம் புகுவோம்.

மன்றாடுவோம்: எங்களின் இதயங்களின் ஏக்கமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலக இன்பங்களுக்காக, செல்வத்துக்காக நாங்கள் ஏங்காமல், உம்மையே ஆவலுடன் எதிர்நோக்கும் அருளைத் தாரும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

--------------------------------

 

நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று இயேசுவே கூறிய இன்றைய நற்செய்தி. என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார் ஆண்டவர் இயேசு. துன்பமே இல்லாத வாழ்வை, சிலுவைகளே இல்லாத பயணத்தை, முட்களே இல்லாத வழித்தடத்தை இயேசு வாக்களிக்கவில்லை. ஒரு சில மந்திரவாதிகளும், போலி இறைவாக்கினர்களும்தான் இத்தகைய போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். ஆனால், இயேசு அப்படிப்பட்ட போலி வாக்குறுதி எதையும் தரவில்லை. மாறாக, என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்கள் சிலுவையைச் சுமந்துகொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார். ஆனால், இயேசு வேறொரு வாக்குறுதியை நமக்குத் தந்துள்ளார். என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது என்பதுதான் அது. என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அது உங்களை அழுத்தாது என்பதுதான் இயேசுவின் அழைப்பு.

எனவே, நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் நுகங்களாகிய துன்பங்கள், நோய்கள், அறைகூவல்கள், தோல்விகள் ஆகியவற்றை இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வோம். அப்போது அவை எளிதானவையாக மாறும்.

மன்றாடுவோம்: இளைப்பாறுதல் தரும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். எனது வாழ்வின் நுகங்களை முறுமுறுக்காமல் ஏற்றுக்கொள்ளவும், அவற்றை உமது அருளால் எளிதாகச் சுமக்கவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''இயேசு, 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்,
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்றார்'' (மத்தேயு 11:28)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஞானத்தைத் தம் சீடர்களோடு பகிர்ந்துகொள்கிறார். அவர் கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டிருந்ததால் கடவுளை நமக்கு வெளிப்படுத்துகிறார். கடவுளறிவை நாம் இயேசு வழியாகப் பெற்றுக்கொள்கிறோம். இந்த அறிவை நமக்கு அளிக்க விரும்புகின்ற இயேசு நம்மைப் பார்த்து, ''பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்'' என அன்போடும் கரிசனையோடும் அழைக்கின்றார். சீராக் நூலில் இத்தகையதோர் அழைப்பு உளது. கடவுளைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற நம்மை ஞானம் அழைக்கின்றது: ''என் அருகே வாருங்கள்; நற்பயிற்சியின் இல்லத்தில் தங்குங்கள்'' (சீராக் 51:23). இயேசு கடவுளின் ஞானம் என்பதால் அவரை அணுகிச் செல்வோருக்குக் கடவுளறிவு கிடைக்கும். அது பெரும் சுமையாக இராது. இயேசுவின் காலத்தில் மறைநூல் அறிஞர் போன்றோர் மக்களின் தோள்களில் பெருஞ்சுமைகளை ஏற்றிவிட்டிருந்தனர். சட்டம் என்பது தாங்கவியலா சுமையாயிற்று. ஆனால் இயேசுவின் போதனை என்னும் நுகம் எளிதானது, இனிமையானது. இயேசு நமக்கு இளைப்பாறுதல் தருகின்றார். ஓய்வு நாள் என்பதன் உண்மைப் பொருளை இயேசு நமக்கு உணர்த்துகிறார். கடவுள் பற்றிய அறிவைப் பெற்று, கடவுளின் இதயத்தில் நாம் ஓய்வு கொள்வதே இயேசு நமக்கு வாக்களிக்கின்ற இளைப்பாறுதல்.

-- மனிதர் தாங்கவியலா சுமைகள் பலவற்றைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. இயற்கைச் சீற்றத்தால் ஏற்படுகின்ற அழிவுகள் ஒருபுறம், மனிதர் மனிதப்பண்பின்றி நடந்துகொள்வதால் ஏற்படுகின்ற சுமைகள் மறுபுறம் என்று நம்மை வாட்டுகின்ற சுமைகளின் பளுவைக் குறைக்க இயேசு வருகிறார். அவரோடு சேர்ந்து நாமும் சிலுவையைச் சுமந்தால் அது இனிய சுமையாக மாறிவிடும். ஓய்வில்லாத இதயத்தை நமக்குத் தந்த கடவுள் நாம் அவரிடத்தில் ஓய்வுபெற வேண்டும் என்றே நம்மைப் படைத்துள்ளார் என தூய அகுஸ்தீன் அழகாகக் கூறுகிறார். இயேசுவை நாம் அணுகிச் சென்றால் நம் சுமைகள் எளிதாகிவிடும்; நம் உள்ளமும் ஆறுதலைக் கண்டடையும்.

மன்றாட்டு
இறைவா, இயேசுவிடத்தில் துலங்கிய கனிவும் பணிவும் எங்கள் வாழ்வில் ஒளிர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்