முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 38: 1-6,21-22,7-8

அந்நாள்களில் எசேக்கியா நோய்வாய்ப்பட்டு சாகும் நிலையில் இருந்தார்; ஆமோட்சின் மகனான எசாயா இறைவாக்கினர் அவரைக் காணவந்து அவரை நோக்கி, ``ஆண்டவர் கூறுவது இதுவே: நீர் உம் வீட்டுக் காரியத்தை ஒழுங்குபடுத்தும்; ஏனெனில் நீர் சாகப் போகிறீர்; பிழைக்க மாட்டீர்'' என்றார். எசேக்கியா சுவர்ப் புறம் தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆண்டவரிடம் மன்றாடி, ``ஆண்டவரே, நான் உம் திருமுன் உண்மை வழியில் மாசற்ற மனத்துடன் நடந்து வந்ததையும் உம் பார்வைக்கு நலமானவற்றைச் செய்ததையும் நினைத்தருளும்'' என்று கூறிக் கண்ணீர் சிந்தித் தேம்பித் தேம்பி அழுதார். அப்போது ஆண்டவரின் வாக்கு எசாயாவுக்கு அருளப்பட்டது; ``நீ எசேக்கியாவிடம் சென்று கூறவேண்டியது: உன் தந்தை தாவீதின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே; உன் கண்ணீரைக் கண்டேன். இதோ நீ வாழும் காலத்தை இன்னும் பதினைந்து ஆண்டு மிகுதியாக்குவேன். உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன்.'' ``எசேக்கியா நலமடைய, ஓர் அத்திப்பழ அடையைக் கொண்டு வந்து பிளவையின்மேல் வைத்துக் கட்டுங்கள்'' என்று எசாயா பதில் கூறியிருந்தார். ஏனெனில், ``ஆண்டவரின் இல்லத்திற்கு என்னால் போக முடியும் என்பதற்கு எனக்கு அடையாளம் யாது?'' என்று எசேக்கியா அரசர் கேட்டிருந்தார். தாம் கூறிய இந்த வார்த்தையை ஆண்டவர் நிறைவேற்றுவார் என்பதற்கு அவர் உமக்களிக்கும் அடையாளம்: இதோ, சாயும் கதிரவனின் நிழல் ஆகாசின் கதிரவக் கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிடச் செய்வேன்.'' அவ்வாறே சாயும் கதிரவனின் நிழல் அக்கடிகையில் பத்துப் பாத அளவு பின்னிட்டது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்
எசா 38: 10. 11. 12. 16

பல்லவி: அழிவின் குழியிலிருந்து ஆண்டவரே, என் உயிரைக் காத்தீர்.

10 `என் வாழ்நாள்களின் நடுவில் இவ்வுலகை விட்டுச் செல்லவேண்டுமே!
நான் வாழக்கூடிய எஞ்சிய ஆண்டுகளைப் பாதாளத்தின் வாயில்களில் கழிக்க நேருமே!' என்றேன். -பல்லவி

11 `வாழ்வோர் உலகில் ஆண்டவரை நான் காண இயலாதே!
மண்ணுலகில் குடியிருப்போருள் எந்த மனிதரையும் என்னால் பார்க்க முடியாதே!' என்றேன். -பல்லவி

12 என் உறைவிடம் மேய்ப்பனின் கூடாரத்தைப் போல் பெயர்க்கப்பட்டு என்னை விட்டு அகற்றப்படுகிறது.
நெசவாளன் பாவைச் சுருட்டுவது போல் என் வாழ்வை முடிக்கிறேன்.
தறியிலிருந்து அவர் என்னை அறுத்தெறிகிறார். -பல்லவி

16 என் தலைவரே, நான் உம்மையே நம்புகின்றேன்;
என் உயிர் உமக்காகவே வாழ்கின்றது;
எனக்கு உடல் நலத்தை நல்கி நான் உயிர் பிழைக்கச் செய்வீர். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

மத்தேயு 12:1-8

பொதுக்காலம் 15 வாரம் வெள்ளி


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 1-8

அன்று ஓர் ஓய்வு நாள். இயேசு வயல் வழியே சென்றுகொண்டிருந்தார். பசியாய் இருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், ``பாரும், ஓய்வுநாளில் செய்யக் கூடாததை உம் சீடர்கள் செய்கிறார்கள்'' என்றார்கள். அவரோ அவர்களிடம், ``தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்தது இல்லையா? இறை இல்லத்திற்குள் சென்று அவரும் அவரோடு இருந்தவர்களும் அர்ப்பண அப்பங்களை உண்டார்கள். குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய அப்பங்களை அவர்கள் உண்டது தவறல்லவா? மேலும் ஓய்வு நாள்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வு நாளை மீறும் குற்றமாகாது என நீங்கள் திருச்சட்டத்தில் வாசித்ததில்லையா? ஆனால் கோவிலை விடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். `பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் அறிந்திருந்தால் குற்றமற்ற இவர்களைக் கண்டனம் செய்திருக்க மாட்டீர்கள். ஆம், ஓய்வு நாளும் மானிட மகனுக்குக் கட்டுப்பட்டதே'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

இரக்கப்படுவோருக்கு இறப்பில்லை
மத்தேயு 12:1-8

மனிதர்களாகிய நாம் பெரும்பாலும் இந்த உலகத்தை விட்டு போக விரும்புவதில்லை. இந்த உலகத்திலே நிலையாக வாழ வேண்டும் என்ற பேராசை அதிகமாக இருக்கிறது. இறப்பு வேண்டாம் என கடவுளிடம் போரட்டம் நடத்துபவர்கள் பலர் இருக்கிறார்கள்.

இறப்பில்லா வாழ்க்கை வேண்டும் என ஆசைப்படும் அத்தனை பேருக்கும் இன்றைய நற்செய்தி இனிப்புச் செய்தியாக வருகிறது. மனிதர்கள் இறக்காமல் வாழந்துக்கொண்டே இருக்கலாம். தலைமுறைதோறும் வாழ்ந்துக்கொண்டே இருக்கலாம். எப்படி? இரக்க உள்ளம் படைத்தவர்கள் வாழ்ந்துக்கொண்டே இருக்கலாம். அவர்கள் உடல் அழியலாம் ஆனால் அவர்களின் இரக்க உள்ளம் அழிவதில்லை. அவர்களுக்கு இறப்பில்லை.

வாழ்நாட்களில் நாம் அரக்கத்தனமாக பல வேளைகளில் நடக்கிறோம். பல வேளைகளில் அமைதியை அழிக்கிறோம். பகைமையை வளர்க்கிறோம். இப்படி வாழ்கிற நாம் வாழ்வதில்லை. இறந்து போகிறோம். இப்படி இருப்பது நல்லதல்ல. இரக்கத்தோடு இருப்போம். இறக்காமல் இருப்போம்.

மனதில் கேட்க…

• நான் அரக்கத்தனமாக இருப்பது எனக்கு அழகா?
• இறக்காமல் இருக்க ஆசை இருக்கிறதா?

மனதில் பதிக்க…

"உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்(லூக் 6:36)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

நீதிக்காக குரல் கொடுக்கும் இயேசு

இயேசு தன்னுடைய சீடர்களின் சார்பாக வாதாடுகிறார். இயேசுவின் சீடர்கள் ஓய்வுநாளில் கதிர்களை பறிக்கிறார்கள். குற்றம் கண்டுபிடிப்பதற்காகவே காத்திருக்கிற ஒரு கூட்டத்தினர், இயேசுவின் சீடர்கள் மீது குற்றம் சுமத்துகிறார்கள். ஏன் இயேசுவின் சீடர்கள் மீது அவர்கள் குற்றம் சுமத்த வேண்டும்? எவ்வளவோ குற்றங்களை இயேசுவின் மீது சுமத்தியாயிற்று. ஆனால், இயேசு தனது அறிவாற்றலால் வெகுஎளிதாக அதிலிருந்து மீண்டு வந்து விடுகிறார். எனவே, இயேசுவுக்குப் பதிலாக, அவருடைய சீடர்களை இப்போது தாக்க ஆரம்பிக்கிறார்கள். சீடர்களை குற்றவாளிகளாக மாற்ற, அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்களைச் சொன்னாலும், அவர்களின் இலக்கு என்னவோ இயேசுதான். ஆனால், அதையும் இயேசு தவிடுபொடியாக உடைத்து எறிகிறார்.

இயேசு தன்னுடைய சீடர்கள் தவறு செய்ததாக நினைக்கவில்லை. அவர்கள் தவறு செய்யவில்லை என்பதுதான் யதார்த்தம். அவர்கள் வேண்டுமென்றோ, சட்டத்தை மீற வேண்டுமென்றோ, கதிர்களைப் பறித்து தின்னவில்லை. அந்த கதிர்களை திருடி விற்று, இலாபம் சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. பசிக்காக, தங்களின் பசியை ஆற்றுவதற்காக அந்த கதிர்களைப் பறிக்கிறார்கள். இங்கே இயேசு தன்னுடைய சீடர்களின் உள்மனதை அறிந்தவராக, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவர்களுக்காக வாதாடுகிறார். யார் சரி? என்பதைக்காட்டிலும், எது சரி? என்பதை அடித்தளமாகக் கொண்டு வாதாடுகிறார்.

இன்றைக்கு, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பணத்திற்காக, பதவிக்காக, அதிகாரத்திற்காக நீதி, நியாயம் விற்கப்படுகிறது. சட்டத்தில் ஓட்டைகளை ஏற்படுத்தி, அதிகார மையத்தினர் தவறு செய்கிறபோது, அவர்களை தப்பிக்க ஏற்பாடு செய்ய நீதிமன்றங்களும், அதிகாரவர்க்கமும் கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கின்றன. சாதாரண பாமரனோ, ஒன்றுமில்லாதவற்றிற்கு தங்களது வாழ்வையே சிறையில் கழிக்கும்படி, இந்த அதிகாரவர்க்கம் செய்துவிடுகின்றன. எப்படி இந்த முரண்பட்ட சமுதாயத்தைச் சீர்திருத்தப் போகிறோம்? சிந்திப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

இயேசு கண்ட மனிதம்

லேவியர் 24: 5 – 9 ல், கடவுளுக்கான அப்பப் படையல் பற்றி சொல்லப்படுகிறது. தாவீதும், அவருடைய வீரர்களும் அப்பங்களை உண்ணும்போது, யெருசலேம் தேவாலயம் கட்டப்படவில்லை. திருத்தூயகத்தில் பசும்பொன் மேசையில் ஆறு அப்பங்கள் வீதம் இரண்டு வரிசையாக பன்னிரெண்டு அப்பங்கள் வைக்கப்படும். அது ஓய்வுநாள் தோறும் அடுக்கிவைக்கப்படும். ஒவ்வொரு வாரமும் அப்பங்கள் மாற்றப்படும். அதை மாற்றும்போது, பழைய அப்பங்களை குருக்கள் மட்டும்தான் உண்ண வேண்டும். அதையும் தூயகத்திலே உண்ண வேண்டும். ஏனென்றால் அது கடவுளுக்கு படைக்கப்பட்டது. புனிதமானது. கடவுளின் பணிக்காக சிறப்பாக நியமிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் அதை உண்ண வேண்டும் என்பது சட்டம்.

ஆனால், தாவீது, அவரோடு இருந்தவர்கள் குருக்கள் இல்லையென்றாலும், பசியாக இருந்ததால், அவர்களுக்கு அப்பங்களை உண்பதற்கு குரு அனுமதியளித்தார். தாவீது உண்பதும் தவறு. அதை மற்றவர்கள் உண்ணச்செய்ததும் அவர் செய்த தவறு. ஆனால், அத தவறாக அங்கே சுட்டிக்காட்டப்படவில்லை. ஏனெனில், இங்கே சடங்கு, சம்பிரதாயங்களை விட, மனிதத்தேவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை உணர முடிகிறது. இதைத்தான் இயேசுவும் வலியுறுத்துகிறார். மனிதம் அனைத்தையும்விட முக்கியத்துவமும், முதல்நிலையும் தரப்பட வேண்டும் என்பது இயேசுவின் போதனை.

சட்டங்கள் இருக்கவே கூடாது என்பது இயேசு போதனையும் அல்ல, அதை அவர் பறைசாற்றவும் இல்லை. இயேசு, மனிதத்தேவைக்கு முன்னுரிமை கொடுக்கிறார். பொதுவாக நாம் எதையும் சொல்ல முடியாது. குறிப்பிட்ட நிகழ்ச்சியின் அடிப்படையில் வைத்துதான் நாம் அதை, முடிவு செய்ய முடியும். எந்த நிகழ்வாக இருந்தாலும், மனிதத்தேவையின் அடிப்படையில் நாம் முடிவு செய்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கடவுளின் இரக்கம்

தன்னுடைய சீடர்கள் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுக்கு இயேசு மூன்று பதில்களைத்தருகிறார். 1. தாவீதின் செயலை முதல் பதிலாகத்தருகிறார். 1சாமுவேல் 21: 1 – 6 ல், தாவீதும், அவரோடு இருந்தவர்களும் செய்த செயல் விவரிக்கப்படுகிறது. அவர்கள் பசியாக இருந்தபோது, குருக்கள் மட்டுமே உண்ணக்கூடிய, ஆண்டவருக்கு காணிக்கையாக்கப்பட்ட அப்பங்களை சாப்பிடுகிறார்கள். அவர்கள் குற்றம் சாட்டப்படவில்லை. சடங்கு, சம்பிரதாயங்களை விட மனிதத்தேவை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் இங்கே சொல்லப்படுகிற உண்மை.

2. யெருசலேம் தேவாலயத்தில் ஓய்வுநாட்களில் குருக்களால் செய்யப்படும் பணிகளை இரண்டாவது பதிலாகத்தருகிறார். பலி செலுத்துவதற்காக விலங்குகளை பலியிடுவது, ஒளியேற்றுவது, பொருட்களை பீடத்தில் வைப்பது என பல வேலைகள் ஓய்வுநாட்களில் ஆலயத்தில் நடக்கிறது. வழக்கமான நாட்களை விட ஓய்வுநாட்களில் தான் இந்த வேலைகள் அதிகமாக நடக்கிறது. கடவுளுக்கான வழிபாடு ஓய்வுநாளை விட புனிதமானது என்பது குருக்களின் எண்ணம்.

3. மூன்றாவதாக இறைவாக்கினர் ஓசேயாவின் இறைவாக்கை மேற்கோள் காட்டுகிறார். ஓசேயா 6:6 ல் நாம் பார்க்கிறோம், ”பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்”. இரக்கச்செயல்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பது இறைவாக்கினர் தரும் செய்தி. கடவுள் மக்களிடமிருந்து எதிர்பார்ப்பது இத்தகைய இரக்கத்தை. அதை நாம் மற்றவர்களுக்கு காட்ட வேண்டும். கடவுள் என்றாலே இரக்கமுள்ளவர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அந்த கடவுளே இரக்கச்செயல்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறபோது, தனக்கு செலுத்தப்படும் பலிகளையும், காணிக்கைகளையும் விட இரக்கத்தை முன்னிறுத்தும்போது, நாம் எப்படி அதை புறக்கணிக்க முடியும். இரக்கத்திற்கு முதலிடம் கொடுப்போம் என்பது இயேசு நமக்கு விடுக்கும் அறைகூவல்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

பசியும், பாவமும் !

பசியாய் இருந்த தம் சீடர்கள் ஓய்வுநாளன்று கதிர்களைக் கொய்து தின்றதை இயேசு நியாயப்படுத்தும் காட்சியை இன்றைய நற்செய்தி வாசகம் நமக்குக் காட்டுகிறது.

"பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்" என்னும் முதுமொழியை இயேசுவின் சீடர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். பசியின் காரணமாக ஒய்வுநாள் சட்டத்தை மீறுவது தவறல்ல என்று வாதிடுகிறார் இயேசு. அதுமட்டுமல்ல, தமது வாதத்துக்கு ஆதாரமாக தாவீதையே மேற்கோள் காட்டுகிறார். மேலும், "கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார்" எனச் சொல்லி இன்னொரு வாதத்தையும் முன் வைக்கிறார் இயேசு. இயேசுவோடு இருக்கும்போது அங்கே தவறு நடக்க வாய்ப்பில்லை, இயேசுவின் அனுமதியோடு செய்வது குற்றமல்ல என்பது அதன் பொருள்.

இந்த நேரத்தில் கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி "களவு செய்யாதிருப்பாயாக" என்னும் ஏழாவது கட்டளைக்குத் தரும் விளக்கம் நம் கவனத்தை ஈர்க்கிறது. பசியைப் போக்குவதற்காக உணவை எடுப்பது ஒரு பாவமல்ல என்கிறது மறைக்கல்வி. இந்த துணிச்சலான திருச்சபையின் போதனை இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டதே. காரணம், "பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்" என்னும் இயேசுவின் போதனையைத் திருச்சபை நன்கு உள்வாங்கியிருக்கிறது.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, பசி, நோய், கடன்.. போன்றவை காரணமாக மக்கள் செய்யும் செயல்களைக் குற்றங்களாகப் பார்க்காத, பரிவின் பார்வையை எங்களுக்குத் தந்தருளும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

வாழ்நாளின் பொருள் என்ன ? (முதல் வாசகம்)

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அரசன் எசேக்கியா நோய்வாய்ப்பட்டு, சாகும் நிலையில் இருந்ததையும், அவனுக்கு எசாயா இறைவாக்கினர் இறைவாக்குரைத்து, அவனுக்கு நலம் தந்ததையும் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். நமது வாழ்வையும், சாவையும் எண்ணிப் பார்க்க அழைப்பு விடுக்கும் வாசகம் இது. இறைவன் நமக்குத் தருகின்ற ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு நாளும் அவரது கொடை. அந்தக் காலத்தை நாம் இறைவனின் மாட்சிமைக்காகப் பயன்படுத்த வேண்டும். “ ஆண்டவர் எனக்கு நலமளிக்க மனம் கொண்டார். ஆண்டவரின் இல்லத்தில் எம் புகழ்ப்பாக்களை வாழ்நாளெல்லாம் இசைக்கருவி மீட்டிப் பாடுவோம்” என்னும் எசேக்கியாவின் மனநிலையே நமதாகட்டும். ஆண்டவர் நமக்குத் தந்திருக்கிற வாழ்நாளால் எல்லாம் நாம் அவரது புகழைப் பாடவும், அவருக்குப் பணிவிடை புரியவும் பயன்படுத்துவோமாக.

மன்றாடுவோம்: வாழ்வின் நிறைவே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். வாழ்வு என்னும் கொடைக்காக நன்றி செலுத்துகிறோம். வாழ்நாளெல்லாம் உம்மைப் பாடவும், உமக்குப் பணிவிடை புரியவும் எங்களுக்கு வரம் தந்தருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

--------------------------------

 

பரிவின் பார்வை!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எந்த ஒரு நிகழ்வையும், மனிதரையும் ஒன்றுக்கு மேற்பட்ட பார்வைகளில் பார்க்கலாம். வியப்புக்குரிய இந்த உண்மை நமக்கு விடுதலை தரும். பொதுவாக, எந்த ஒரு நிகழ்வையும், நமது பார்வையில், அல்லது நமக்குப் பயன்தரும் வகையில் பார்க்க நாம் விரும்புகிறோம். அப்படிப் பழகிவிட்டோம்.

ஆனால், அதே நிகழ்வை பிறரது தேவை, உணர்வுகள், ஏக்கங்களின் பார்வையில் பார்க்கப் பழகிவி;ட்டால், அந்த நிகழ்வைப் பற்றிய நமது கணிப்பு, தீர்ப்பு நிச்சயம் வித்தியாசமாக இருக்கும்.

பசியாய் இருந்த சீடர்கள் கதிர்களைக் கொய்து தின்றபோது, பரிசேயர்கள் அதைச் சட்டத்தின் பார்வையில் பார்த்தனர். குற்றமாகக் கருதினர். ஆனால், இயேசுவின் பார்வை மாறானதாக இருந்தது. அவரது பார்வை பரிவின், பாசத்தின் பார்வை. எனவே, சீடர்களின் பசியை, அவர்களின் தேவையை அவரால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆகவே, அவர்களின் செயலைக் கண்டனம் செய்யாமல், நியாயப்படுத்தினார்.

நாமும் பிறரது செயல்களை, தவறுகள் என்று நாம் நினைக்கும் நிகழ்வுகளை நமது பார்வையில் பார்க்காமல், அவர்களது கண்ணோட்டத்தில், பரிவின் பார்வையில் பார்த்தால், பிறரைத் தீர்ப்பிடுவது குறையும். பரிவும், பாசமும் மலரும்

மன்றாடுவோம்; ;இரக்கத்தின் ஊற்றே இறைவா,  உம்மைப் போற்றுகிறேன். எங்களது தவறுகள், பலவீனங்களை உமது பரிவின் பார்வையால் கண்டு எங்கள்மீது இரக்கம் கொள்வதற்காக நன்றி கூறுகிறேன். எனது அயலாரின் செயல்களை நானும் பரிவின் பார்வையில் காண எனக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

--------------------------------

''அன்று ஓர் ஓய்வுநாள். இயேசு வயல்வழியே சென்றுகொண்டிருந்தார்.
பசியாயிருந்ததால் அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர்.
பரிசேயர்கள் இதைப் பார்த்து இயேசுவிடம், 'பாரும், ஓய்வுவு நாளில் செய்யக் கூடாததை
உம் சீடர்கள் செய்கிறார்கள்' என்றார்கள்'' (மத்தேயு 12:1-2)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு திருச்சட்டத்திற்குப் புது விளக்கம் அளித்தார். மக்களை ஒடுக்குகின்ற சக்தியாகச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தினர் பரிசேயர். ஆனால் இயேசுவோ சட்டத்தின் உண்மையான பொருளை விளக்கினார். இதை ஏற்றுக்கொள்ள மறுத்த பரிசேயரும் பிற யூத சமயத் தலைவர்களும் இயேசுவைக் கொல்லத் தேடினார்கள் (காண்க: மத் 12:14). இஸ்ரயேல் மக்களின் அன்றாட வாழ்க்கை பற்றிப் பல துல்லியமான வழிமுறைகள் திருச்சட்டத்தில் இருந்தன. எடுத்துக்காட்டாக, ''உனக்கு அடுத்திருப்பவனுடைய விளை நிலத்திற்குச் சென்றால், உன் கையால் கதிர்களைக் கொய்யலாம்; ஆனால் கதிர் அரிவாளை உனக்கு அடுத்திருப்பவனின் கதிர்களில் வைக்காதே'' என்பதைக் கூறலாம் (இச 23:25). இச்சட்டம் ஏழை மக்கள் பட்டினியால் வாடாமலிருக்க வழிவகுத்தது. அதே நேரத்தில் பிறருடைய சொத்திலிருந்து அளவுக்கு மீறி எடுக்காமலிருக்கவும் செய்தது. எனவே, இயேசுவின் சீடர்கள் கதிர்களைக் கொய்து தின்றது சட்டப்படி அனுமதிக்கப்பட்டதே. ஆனால் அவர்கள் ஓய்வுநாளன்று இதைச் செய்தது ஏன் என்பதுதான் பரிசேயருக்குப் பிரச்சினையாகப் பட்டது. இயேசு இரு எடுத்துக்காட்டுகள் தந்து, தம் சீடர்கள் தவறு செய்யவில்லை எனக்காட்டுகிறார்.

-- முதலில், வழிபாடு தொடர்பான சட்டங்கள் மனிதரின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதற்கு எதிராக இருந்தால் அச்சட்டங்கள் ஏற்கத்தக்கனவல்ல என இயேசு காட்டுகிறார் (காண்க: மத் 12:3-4; 1 சாமு 21:1-4). இரண்டாவது, குருக்களின் கடமைகள் என்னவென்று பழைய சட்டம் வரையறுத்திருந்தாலும் அதைப் புதிய முறையில் இயேசு விளக்குகிறார் (காண்க: மத் 12:5; எண் 28:9-10). கோவிலில் ஒப்புக்கொடுக்கப்படுகின்ற பலிகள் கடவுளுக்கு உகந்தவையே; அதே நேரத்தில், மனிதர் மட்டில் காட்ட வேண்டிய இரக்கமும் அன்பும் பலியைவிட மேலானது. இதை வலியுறுத்திய இயேசு ஓசேயா இறைவாக்கினரின் நூலிலிருந்து மேற்கோள் காட்டுகிறார்: ''உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்'' (ஓசே 6:6). கடவுள் மனிதரின் நலனில் அக்கறை கொண்டவர். சட்டங்கள் எல்லாம் மனிதரின் உண்மையான நலனுக்கு உதவ வேண்டுமே ஒழிய மனிதரை ஒடுக்குகின்ற சுமையாக மாறிவிடக் கூடாது.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் இரக்கமுடையோராய் வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"இயேசு, 'கோவிலைவிடப் பெரியவர் இங்கே இருக்கிறார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்"(மத்தேயு 12:6)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- எருசலேமில் அமைந்திருந்த எழில்மிகு கோவில் யூத மக்களின் வழிபாட்டு மையம் மட்டுமல்ல, அவர்களுடைய வாழ்வின் மையமாகவே துலங்கியது. அக்கோவிலில் கடவுளின் மாட்சி குடிகொண்டிருந்தது என்பது அவர்களுடைய நம்பிக்கை. எனவே, உலகம் முழுவதையும் எடுத்துக்கொண்டாலும் அதில் மிகச் சிறந்த இடமாக விளங்குவது எருசலேம் கோவிலே என அவர்கள் பெருமைப்பட்டுக்கொண்டார்கள். கோவிலில் கடவுள் உறைகிறார் என்பதை இயேசு மறுக்கவில்லை. ஆனால், யூத மக்களின் கருத்தைப் புரட்டிப் போடுகின்ற விதத்தில் இயேசு தம்மையே எருசலேம் கோவிலுக்கு ஒப்பாகக் காட்டியது மட்டுமன்று, அக்கோவிலுக்கும் உயர்ந்தவராகத் தம்மை அறிவித்தார்.

-- இயேசு தம்மைக் கோவிலுக்கு ஒப்பிட்டது ஏன்? கோவிலில் கடவுள் உறைவதுபோல இயேசு என்னும் கோவிலில் கடவுள் உறைவது மட்டுமன்று, இயேவின் வழியாகக் கடவுள் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார். எனவே, இயேசுவைக் காண்போர் கடவுளின் இல்லத்தை மட்டுமன்றி, கடவுளையே காண்கின்றனர் என்பது நம் நம்பிக்கை.

மன்றாட்டு
இறைவா, உம்மை இயேசுவில் கண்டுகொள்ளும் நாங்கள் தூய ஆவியின் உறைவிடமாக உள்ளோம் என உணர்ந்து உம் அன்பில் இணைந்து வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

தேவை திருடனை உருவாக்கும்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்று அவன் கொள்ளைக்காரன், கொலைகாரன். காரணம், அன்று அவன் பெற்றோரை இழந்து பசியில் வாடியபோது வயிற்றை நிரப்ப வழியில்லை. நிரப்புவார் யாருமில்லை. பசியின் கொடுமை, பார்த்த இடத்தில் இருந்ததை எடுத்து பசியாற்றினான். இந்த சமுதாயம் அவனுக்கு அளித்த இலவச பட்டம் "திருடன்".

பசியின் கொடுமையைப் பார்க்காத சமுகம் திருடனையும் கொலைகாரனையும் தீவிரவாதியையும் நக்ஸலைட்டுகளையும் உருவாக்குகின்றது.

இதை உணர்ந்த இயேசு, ஓய்வு நாளில் பசியாய் இருந்ததால் கதிர்களைக் கொய்து தின்ற சீடர்களின் சார்பில் குரல் கொடுக்கிறார். அடிப்படை தேவையும் அவசியத் தேவையும் நிறைவு செய்யாத சமூகத்தில், மனிதமும் மனிதாபிமானமும் மரணமடையும் மண்ணில் சமூகத்தின் மிகப்பெரிய தீமைகள் மலி;யும் என்ற சமூகச் சிந்தனையை அன்றே வெளிப்படுத்துகிறார்.

பலியை அல்ல இரக்கத்தையை விரும்புகிறேன் என்பது இயேசுவின் முற்போக்குச் சிந்தனையின் சுருக்கம்.

அடிப்படை தேவையின் நிறைவுக்காகப் போராடும் ஒரு மனிதனுக்கு இன்று நான் செய்யும் உதவி இது...

--அருட்திரு ஜோசப் லீயோன்