முதல் வாசகம்

இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 2: 1-5

தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கை வலிமையினால் அவர்கள் அதைச் செய்து முடிக்கின்றார்கள். வயல்வெளிகள்மீது ஆசை கொண்டு, அவற்றைப் பறித்துக் கொள்கின்றார்கள்; வீடுகள்மேல் இச்சை கொண்டு அவற்றைக் கைப்பற்றிக் கொள்கின்றார்கள்; ஆண்களை ஒடுக்கி, அவர்கள் வீட்டையும் உரிமைச் சொத்தையும் பறிமுதல் செய்கின்றார்கள். ஆதலால் ஆண்டவர் கூறுவது இதுவே: இந்த இனத்தாருக்கு எதிராகத் தீமை செய்யத் திட்டமிடுகிறேன்; அதனின்று உங்கள் தலையை விடுவிக்க உங்களால் இயலாது; நீங்கள் ஆணவம் கொண்டு நடக்க மாட்டீர்கள்; ஏனெனில் காலம் தீயதாய் இருக்கும். அந்நாளில் மக்கள் உங்களைப் பற்றி இரங்கற்பா இயற்றி, `அந்தோ! நாங்கள் அழிந்து ஒழிந்தோமே; ஆண்டவருடைய மக்களின் உரிமைச் சொத்து கைமாறி விட்டதே! நம்முடைய நிலங்களைப் பிடுங்கிக் கொள்ளைக்காரர்களுக்குப் பகிர்ந்தளிக்கின்றாரே!' என்று ஒப்பாரி வைத்துப் புலம்புவார்கள். ஆதலால், நூல் பிடித்துப் பாகம் பிரித்து உங்களுக்குத் தருபவன் எவனும் ஆண்டவரின் சபையில் இரான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 10: 1-2. 3-4. 7-8. 14

பல்லவி: ஆண்டவரே, எளியோரை மறந்துவிடாதேயும்.

1 ஆண்டவரே, ஏன் தொலையில் நிற்கின்றீர்? தொல்லைமிகு நேரங்களில் ஏன் மறைந்து கொள்கின்றீர்?
2 பொல்லார் தம் இறுமாப்பினால் எளியோரைக் கொடுமைப் படுத்துகின்றனர்;
அவர்கள் வகுத்த சதித் திட்டங்களில் அவர்களே அகப்பட்டுக் கொள்வார்களாக. -பல்லவி

3 பொல்லார் தம் தீய நாட்டங்களில் தற்பெருமை கொள்கின்றனர்;
பேராசையுடையோர் ஆண்டவரைப் பழித்துப் புறக்கணிக்கின்றனர்.
4 பொல்லார் செருக்கு உள்ளவராதலால் அவரைத் தேடார்;
அவர்கள் எண்ணமெல்லாம் `கடவுள் இல்லை' என்பதே. -பல்லவி

7 அவர்களது வாய் சாபமும் கபடும் கொடுமையும் நிறைந்தது;
அவர்களது நாவினடியில் கேடும் தீங்கும் இருக்கின்றன.
8 ஊர்களில் அவர்கள் ஒளிந்து காத்திருக்கின்றனர்;
சூதறியாதவர்களை மறைவான இடங்களில் கொலை செய்கின்றனர்;
திக்கற்றவர்களைப் பிடிப்பதிலேயே அவர்கள் கண்ணாயிருக்கின்றனர். -பல்லவி

14 ஆனால், உண்மையில் நீர் கவனிக்கின்றீர்;
கேட்டையும் துயரத்தையும் பார்த்து, உதவி செய்யக் காத்திருக்கின்றீர்;
திக்கற்றவர் தம்மை உம்மிடம் ஒப்படைக்கின்றனர்;
அனாதைக்கு நீரே துணை. -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக உலகினரைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை அவரே எங்களிடம் ஒப்படைத்தார். அல்லேலூயா.

மத்தேயு 12:14-21

பொதுக்காலம் 15 வாரம் சனி


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21


அக்காலத்தில் பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார். இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின: ``இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

எதுக்கு சண்டை? எதுக்கு சச்சரவு?
மத்தேயு 12:14-21

கடவுள் படைத்த உலகம் சண்டையில்லா சத்தமில்லா சந்தோசமான உலகம். அவர் படைத்த அந்த உலகை நல்லது எனக் கண்டார். ஆனால் அவர் நல்லது எனக் கண்ட உலகம் இப்போது நல்லது என்று கூறும் தகுதியை இழந்து நிற்கின்றது. காரணம் என்ன? எங்கும் சண்டை. எங்குப் பார்த்தாலும் சத்தம். சந்தோசமில்லை சங்கடம் தான் அதிகம்.

சண்டையுடனும் சத்தத்துடனும் சந்தோசமில்லாமல் இருக்கும் இந்த உலகத்தில் மீண்டும் அமைதியை உருவாக்க ஒவ்வொருவரும் இயேசுவை பின்பற்ற வேண்டும் என அழைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம். இயேசுவைப் பற்றி நற்செய்தி வாசகம் ”இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார்” என அறிமுகம் செய்கிறது. இயேசுவைப் பின்பற்றி நாமும் சமாதானத்தை உருவாவோம். சச்சரவு இல்லாத சந்தோசமான உலகத்தை சமைப்போம்.

மனதில் கேட்க…

  • வாழும் குறுகிய காலத்தில் சண்டை எதற்கு?
  • என்னை விட்டு பிரிந்து போன உறவுளில் சமாதானத்தை கொண்டு வருவேன்?

மனதில் பதிக்க…
இவர் சண்டை சச்சரவு செய்யமாட்டார். கூக்கிரலிடமாட்டார் (மத் 10:42)

-அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

இயேசுவின் உண்மை

தேர்ந்து கொள்ளப்பட்ட ஊழியரைப்பார்த்து, இறைவாக்கினர் எசாயா உரைக்கிறபோது, அவர் ”கூக்குரலிட மாட்டார்” என்று சொல்கிறார். இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிற வார்த்தை, நாய் குரைப்பதற்கும், அண்டங்காக்கை கரைவதற்கும் பயன்படுத்தப்படுகிற சொல். அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிற ஊழியரின் குரல் இப்படி இருக்காது. மாறாக, அவர் அன்பினாலும், அமைதியினாலும், அதேவேளையில் உறுதியாகவும் கடவுளின் வார்த்தையைப் பறைசாற்றுவார் என்பதுதான் உண்மைச்செய்தி.

இயேசு இந்த உலகத்தில் இதைத்தான் நிலைநாட்டினார். அவர் மக்களுக்குப் போதித்தபோதும் சரி, அல்லது பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களோடு விவாதத்தில் ஈடுபட்டபோதும் சரி, தேவையில்லாமல் கூச்சலிடவில்லை. அவருடைய கருத்தை வெகு உறுதியாக வலியுறுத்தினார். அதேபோல அடுத்தவர்களின் கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மையையும் ஆதரித்தார். அதனையும் ஏற்றுக்கொண்டார். மற்றவர்கள் போல, வெறுமனே சுய இலாபத்திற்காக கூச்சல், குழப்பங்களை போட்டு, உண்மையை திரித்து, தங்களுக்கு ஏற்ற வகையில் அவர் சொல்ல விரும்பவில்லை.

இன்றைக்கு உண்மையை பெரும்பான்மை என்கிற மாயத்தோற்றத்தை உருவாக்கி, தங்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்கிற கூட்டங்கள் நம் மத்தியில் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. அதனுடைய உருவாக்கத்தில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. நீதி விலைபோகும்போது, அமைதியாக மூடி மெளனியாக இருக்கிறவர்கள், வாழும் வரையில், உண்மை இப்படித்தான் திரித்துச் சொல்லப்படும். மாற்றம் வேண்டுமென்றால், அந்த மாற்றம் நம்மிலிருந்து உருவாகட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------

நீதியின் கடவுள்

எசாயா 42: 1 – 4 பகுதியிலிருந்து, மத்தேயு இயேசுவின் பணிவாழ்வை ஒப்பிடுகிறார். பழைய ஏற்பாட்டில், முதலில் இது பாரசீக அரசர் சைரசுக்கு ஒப்பிடப்படுகிறது. சைரஸ் தொடர்ந்து நாடுகளை வெற்றி பெற்றுக்கொண்டிருந்தார். அவருடைய வெற்றியை கடவுளின் திட்டமாகவே இறைவாக்கினர் எசாயா பார்த்தார். சைரஸ் அறியாமலேயே, கடவுள் அவரைப்பயன்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று அவர் நினைத்தார். இந்தப் பகுதி சைரஸ் அரசரைப்பற்றி எழுதப்பட்டதாக இருந்தரலும், இயேசுவுக்கான, இயேசுவின் பணிக்கான இறைவாக்காகவே இது பார்க்கப்படுகிறது.

சைரஸ் குறிப்பிட்ட பகுதிகளை வெற்றி கொண்டார். இயேசுவோ இந்த அவனி முழுவதையும் வெற்றிகொண்ட வெற்றி வீரராக மதிக்கப்படுகிறார். இயேசுவின் முக்கியப்பணியாக இறைவாக்காகக் கூறப்படுவது, நீதியை அறிவிப்பது. நீதி என்கிற கிரேக்க வார்த்தையின் பொருள்: கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும், மக்களுக்குரியதை மக்களுக்கும் கொடுப்பது. இயேசு கடவுளுக்குரியதை கடவுளுக்கும், மக்களுக்கானதை மக்களுக்கும் கொடுப்பதற்காகவே வந்தார். எனவே தான், தங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டியது கிடைக்காமல் வாழ்ந்த, ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை உயர்வுக்காக, அவர்கள் சார்பாக இயேசு பேசினார்.

நமது வாழ்வில் நீதி உள்ளவர்களாக, நமது வாழ்வை அமைத்துக்கொள்ள நாம் அழைக்கப்படுகிறோம். நீதியின் பாதையில் நாம் நடந்து, மக்களை வழிநடத்துவதற்கு நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் திட்டம் இந்த மண்ணில் நிறைவேற நாம் முழுமையாக உடன்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் அப்பழுக்கற்ற வாழ்வு

இயேசு தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த தெரிந்து வைத்திருந்தார். பரிசேயர்களும், சதுசேயர்களும் தன்னைக் கோபப்படுத்தினாலும், தன்னுடைய நிதானத்தை இழப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும் அவர் அதைத் தகுந்த முறையில் எதிர்கொண்டார். முதலில் அவர் அவர்களிடமிருந்து பின்வாங்கினார். அவர்களிடம் சண்டை போட்டுக்கொண்டிருப்பதற்கு இது உகந்த நேரமல்ல. ஏனென்றால் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை. இரண்டாவது, தன்னோடு இருப்பவர்கள் தான் செய்த புதுமைகளைப்பற்றி மற்றவர்களிடம் பரப்புவதையும் இயேசு விரும்பவில்லை. தான் செய்த புதுமையை எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு சொல்வதை பல இடங்களில் நற்செய்தியை நாம் பார்க்க முடியும்.

ஏற்கெனவே, பல போலி இறைவாக்கினர்களால் பல்வேறு பிரச்சனைகள் தோன்றியிருந்தன. இயேசு செய்யும் ஆச்சரியங்களையும், அதிசயங்களையும் மக்கள் கேள்விப்பட்டால், நிச்சயம் தேவையில்லாத கலகங்கள் ஏற்பட வாய்ப்பிருக்கும். அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்க கடவுள் மெசியாவை அனுப்பி விட்டார் என்ற எண்ணம் மக்கள் மனதில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தும். இதை இயேசு விரும்பவில்லை. மெசியா பற்றிய மாயத்தோற்றத்தை உடைத்து, அதன் உண்மையான அர்த்தத்தை மக்களுக்கு கொடுப்பதற்கு முன்னால், தான் மெசியா என்பதை இயேசு காட்டிக்கொள்ள விரும்பவில்லை. இயேசுவைப்பொறுத்தவரையில் மெசியா என்பது அரியணை அல்ல, அது ஒரு சிலுவை.  அது அதிகாரம் அல்ல, மாறாக, தியாகம்.

இயேசு ஒருபோதும் புகழுக்கோ, அதிகாரத்திற்கோ ஆசைப்பட்டவர் கிடையாது. அவர் எப்போதும் பணிவாழ்வை அர்ப்பணத்தோடு வாழவே முற்பட்டார். ஆனால், நாம் கடவுள் கொடுத்த திறமைகளை நம்முடைய புகழுக்காகவும், அதிகாரத்தைப் பெறவும் பயன்படுத்துகிறோம். கடவுள் கொடுத்த கொடைகளை பொதுநலனுக்கு பயன்படுத்துவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

மீக் 2: 1-5
மத் 12: 14-21

இயேசுவின் மறைப்பணி உத்தி !

"பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்" என இன்றைய நற்செய்தி வாசகம் தொடங்குகிறது. "கூக்குரலிட மாட்டார். தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை நெரிந்த நாணலை முறியார்" என்னும் எசாயா இறைவாக்கினரின் வாக்கு நிறைவேறியதாக வாசகம் முடிகிறது.

ஒரு பக்கம் இயேசு பரிசேயரின் சூழ்ச்சியை அறிந்தவராய், அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுச் செல்கிறார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேசவேண்டாம் என்று தாம் குணமாக்கியவர்களிடம் கண்டிப்பாகச் சொன்னார். ஆனால், அதே வேளையில் தமது குணமாக்கும், நற்செய்தி அறிவிக்கும் பணியையும் சென்றவிடமெல்லாம் தொடர்ந்து ஆற்றினார். இதையே நாம் அவரது மறைப்பணி உத்தி என்று அழைக்கலாம்.

பரிசேயர்களுக்கு அஞ்சி, தமது பணியை இயேசு கைவிட்டுவிடவில்லை. ஆனால், இயன்றவரையில் அவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் தம்மைக் காத்துக்கொண்டார். தமது "நேரம் வரும்வரையில்" தாம் தொடர்ந்து பணியாற்ற வேண்டும், வீணாகச் சிக்கிக்கொண்டு, பணி செய்யும் காலத்தை இழக்க வேண்டாம் என்னும் அறிவார்ந்த சிந்தனையையே இது காட்டுகிறது. "பாம்புகளைப்போல் முன்மதி உடையவர்களாய் இருங்கள்" என்;னும் இயேசுவின் அறிவுரைக்கு அவரது இந்த உத்தியே சிறந்த எடுத்துக்காட்டு.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போலவே, நாங்களும் காலம், இடம், சூழல் அறிந்து, மறைப்பணியாற்றும் முன்மதியையும், ஞானத்தையும் எங்களுக்குத் தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

இயேசுவின் உத்தி!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

நற்செய்தி அறிவிப்புப் பணியில் இயேசு கடைப்பிடித்த உத்திகள் பல. அவை நமக்கு வியப்பையும், ஞானத்தையும் தருகின்றன. இன்றைய நற்செய்தி வாசகம் அத்தகைய உத்தி ஒன்றை நமக்கு விளக்குகிறது.

பரிசேயர் இயேசுவை ஒழித்துவிட வேண்டுமென்று சூழ்ச்சி செய்ததை இயேசு அறிந்தபோது என்ன செய்தார்? வறட்டுத் துணிவுடன் அவர்களை எதிர்கொள்ளவில்லை. மாறாக, அங்கிருந்து புறப்பட்டு வேறு இடத்துக்குச் சென்றார். இது ஒரு நற்செய்தி அறிவிப்பு உத்தி.

எங்கே எதிர்ப்பும் பகையும் இருக்கிறதோ, அவ்விடத்தை விட்டு அகன்று, வாய்ப்புள்ள பிற இடங்களில் நற்செய்தி அறிவிக்க வேண்டும். இயேசு அதைத்தான் செய்தார். வெற்றிபெறும்வரை மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார் என்று இறைவாக்கினர் எசாயா முன் அறிவித்த இறை வாக்கு இயேசுவில் நிறைவேறியது. தீயோரைவிட்டு அகன்று, பிற இடங்களில் இயேசு நற்செய்தி அறிவித்தார். அத்தகைய உத்தியை நமது பணி வாழ்விலும், மறைவாழ்விலும் நாமும் கடைப்பிடிப்போம்.

மன்றாடுவோம்; ஞானத்தின் ஊற்றே இயேசுவே, நீர் கற்றுத் தரும் நற்செய்தி உத்திக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். எனது பணி வாழ்வில் எதிர்ப்புகள் வந்தாலும், வாய்ப்புகளைப் பயன்படுத்தி நன்மைகளைத் தொடர்ந்து ஆற்ற எனக்கு வரம் தாரும். எனது மறைவாழ்விலும் நான் ஒரு நற்செய்தி அறிவிப்பாளனாக வாழ எனக்கு அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்

-- அருட்தந்தை குமார்ராஜா

''பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்'' (மத்தேயு 12:14-15)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருச்சட்டம் மனிதரின் நலனுக்காகவே அளிக்கப்பட்டது என்பது இயேசு அளித்த விளக்கம். ஆனால் சட்டத்தின் பிடியில் மக்களை அடக்கிவைக்க விரும்பிய பரிசேயரோ மக்களின் உண்மையான நலன் பற்றிக் கவலைப்படவில்லை. எனவே, அவர்கள் மனிதருக்காகப் பரிந்துபேசிய இயேசுவைத் தங்கள் எதிரியாகப் பார்த்தார்கள். அவரை ஒழித்துவிட வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள். இவ்வாறு செயல்பட்ட பரிசேயர் உண்மையைத் தேடிட மறுத்தார்கள். கடவுள் மனிதரிடமிருந்து எதிர்பார்ப்பது என்னவென்பதைப் பரிசேயர்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. மாறாக, தங்களுக்குக் கடவுளின் எண்ணம் தெளிவாகவே தெரியும் என அவர்கள் நினைத்து இறுமாந்திருந்தார்கள். ஆனால் இயேசுவோ கடவுளின் திருவுளத்தைத் தம் வாழ்வில் நிறைவேற்றுவதையே தம் குறிக்கோளாகக் கொண்டிருந்தார். மனிதருக்கு நலன் கொணர்வதே அவருடைய இலக்காக இருந்தது. அவர் மக்களுக்குக் குணமளித்தது அவருடைய இரக்கத்தின் வெளிப்பாடாக அமைந்தது (மத் 12:15).

-- இயேசு மக்களுக்குப் புரிந்த பணி கடவுளின் அன்பை அவர்களோடு பகிர்ந்துகொள்வதில் அடங்கியது. கடவுள் தம் மகனாகிய இயேசுவை அன்புசெய்து, அவரைத் தம் ஆவியால் வழிநடத்தினார். ''இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்'' என எசாயா நூலில் வருகின்ற கூற்று இயேசுவின் வாழ்வில் உண்மையாயிற்று என மத்தேயு காட்டுகிறார் (காண்க: மத் 12:18; எசா 42:1). இயேசு திருமுழுக்குப் பெற்றபோது அவர்மீது கடவுளின் ஆவி இறங்கினார்; இயேசு கடவுளின் மகன் என அறிவிக்கப்பட்டார் (மத் 3:17). அதுபோலவே, இயேசு உருமாற்றம் பெற்றபோது, ''என் அன்பார்ந்த மைந்தர் இவரே'' என்னும் முழக்கம் வானிலிருந்து வந்தது (மத் 17:15). கடவுளின் ஆவியால் இயக்கப்பட்ட இயேசுவின் வாழ்வில் தாழ்ச்சியும் எளிமையும் துலங்கியது (மத் 12:19-20; காண்க: மத் 11:29; 21:4-5). அதே பண்புகள் இயேசுவின் சீடர்களுடைய வாழ்விலும் துலங்கிட வேண்டும். துன்பங்கள் நம்மை எதிர்கொண்டு வந்தாலும் கடவுளின் துணை நமக்கு என்றுமே உண்டு என இயேசு நமக்கு உணர்த்துகிறார்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் உம் திருவுளத்திற்கு இசைய வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார்"(மத்தேயு 12:20)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- எசாயா இறைவாக்கினர் "துன்புறும் ஊழியர்" பற்றி எடுத்துரைத்த கருத்து இயேசுவில் நிறைவேறியது எனக் காட்டுகிறார் மத்தேயு நற்செய்தியாளர். காற்றில் அசைந்தாடும் நாணல் எளிதில் வளைந்திடும் தன்மையது. அவ்வாறு வளையும்போது அதை முறித்துவிடுவது பெரிய காரியமல்ல. அதுபோலவே, திரியைத் தூண்டும்போது ஒளி பரவும். ஆனால், நெருப்பு அமைந்துபோகும் நிலையில் திரி ஒளிதராமல் புகையத் தொடங்கும். அப்போது அத்திரியை முற்றிலுமாக அணைத்துவிடுவதும் கடினமான ஒன்றல்ல.

-- தம்மைக் கடவுளின் ஊழியருக்கு ஒப்பிட்ட இயேசு மக்களின் வலுவற்ற நிலையைப் பயன்படுத்திக்கொண்டு அவர்களைக் கீழே விழத்தாட்ட வரவில்லை. சக்தியற்ற மனிதர் வளைந்து குறுகி, ஒளி குன்றி நிற்கின்ற வேளையில் இயேசு அவர்களைத் தூக்கி நிறுத்த வருகிறார், அவர்களை ஒளிவீசச் செய்கிறார். இயேசுவைப் பின்செல்வோரும் அவரைப் போலச் செயல்படும்போது அனைத்து மக்களுக்கும் சக்தி ஊட்டுகின்ற மனிதராக மாறுவர். எல்லா மக்களும் ஒளி வீசுகின்ற விளக்குகளாகத் துலங்கிட அவர்களைத் தாங்கிநிற்பர்.

மன்றாட்டு
இறைவா, வலுவற்ற நிலையில் உள்ள மனிதரைக் கைதூக்கிவிட எங்களுக்கு உம் வல்லமை தந்தருளும்

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

தூண்டி துலக்குங்கள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

விளிம்பில் இருப்பதை விழத்தாட்ட நிறைய பேர். விழுந்துவிட்டால்போதும், மூடிப் புதைத்துவிட நிறைய பேர். சுற்று நெரிந்ததை முற்றிலுமாக முறித்துவிடுவதும்,திக்கித் திணரி எரியும் திரியைத் தூண்டி, துலக்காமல் உடனே அணைத்துவிடுவதும் பலருக்கு கைவந்த கலை. இன்றைய சமுதாயத்தில் எல்லோரும் எளிதாக இதைச் செய்துவிடுகின்றனர்.

சந்திக்கும், தேவையில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் உன் உறவாக, உன்னுடைய ஒரே ஆடாக (9'11) எண்ணி, உன்னால் முடிந்த அத்தனை முயற்சிகளையும், முறைகளையும் தாண்டி செய். இது மனிதம், இது கிறிஸ்தவம். கடவுள் உன்னை தூண்டி துலக்குவார்.

தினமும் தெரு வீதிகளில்,செய்தித் தாளில், தொலைக் காட்சியில், ஊடகங்களில் எத்தனை குழந்தைகள் உதவி கேட்டு குரல் கொடுக்கின்றனர். எத்தனை முதியவர்கள் உதவி கேட்கின்றனர். இந்த முறிந்த நாணல்களில் ஒன்றை நீ வலுப்பெறச்செய்யலாமே. இத்தகைய புகையும் திரிகளில் ஒன்றை நீ தூண்டி துலங்கச் செய்யலாமே.

இறைவா இன்று இந்த வாய்ப்பை நான் பயன்படுத்துவேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்