முதல் வாசகம்
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 6: 1-4, 6-8

ஆண்டவர் கூறுவதைக் கேளுங்கள்: நீ எழுந்து, மலைகளுக்கு முன்னிலையில் உன் வழக்கைச் சொல்; குன்றுகள் உன் குரல் ஒலியைக் கேட்கட்டும். மலைகளே, மண்ணுலகின் நிலையான அடித்தளங்களே, ஆண்டவரின் வழக்கைக் கேளுங்கள்; ஆண்டவருக்குத் தம் மக்களோடு வழக்கு ஒன்று உண்டு; இஸ்ரயேலோடு அவர் வாதாடப் போகின்றார். என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? எதில் நான் உங்களைத் துயரடையச் செய்தேன்? எனக்கு மறுமொழி கூறுங்கள். நான் உங்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்தேன்; அடிமைத்தன வீட்டிலிருந்து மீட்டு வந்தேன்; உங்களுக்கு முன்பாக மோசேயையும், ஆரோனையும், மிரியாமையும் அனுப்பி வைத்தேன். ஆண்டவரின் திருமுன் வரும்போது உன்னதரான கடவுளாகிய அவருக்கு எதைக் கொண்டுவந்து பணிந்து நிற்பேன்? எரிபலிகளோடும் ஒரு வயதுக் கன்றுகளோடும் அவர் முன்னிலையில் வரவேண்டுமா? ஆயிரக்கணக்கான ஆட்டுக்கிடாய்கள் மேலும் பல்லாயிரக்கணக்கான ஆறுகளாய்ப் பெருக்கெடுத்தோடும் எண்ணெய் மேலும் ஆண்டவர் விருப்பம் கொள்வாரோ? என் குற்றத்தை அகற்ற என் தலைப்பிள்ளையையும், என் பாவத்தைப் போக்க நான் பெற்ற குழந்தையையும் பலி கொடுக்க வேண்டுமா? ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 50: 5-6. 8-9. 16bஉ-17. 21,23

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுள் தரும் மீட்பைக் கண்டடைவர்.

5 `பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்றுகூட்டுங்கள்.'
6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! -பல்லவி

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை;
உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின்
ஆட்டுக்கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. -பல்லவி

16 `என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி?
என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்;
என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். -பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்;
நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்;
ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்;
உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்து உரைக்கின்றேன்.
23 நன்றிப் பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர்.
தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இன்று உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். மாறாக நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! அல்லேலூயா.

மத்தேயு 12:38-42

பொதுக்காலம் 16 வாரம் திங்கள்


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 38-42

அக்காலத்தில் மறைநூல்அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, ``போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்'' என்றனர். அதற்கு அவர் கூறியது: ``இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத் தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்படமாட்டாது. யோனா மூன்று பகலும் மூன்று இரவும் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தார். அவ்வாறே மானிட மகனும் மூன்று பகலும் மூன்று இரவும் நிலத்தின் உள்ளே இருப்பார். தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவை விடப் பெரியவர் அல்லவா! தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக்கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

நீங்கள் நினைப்பதை விட பெரியவர்
மத்தேயு 12:38-42

பழைய ஏற்பாடு நாம் நினைப்பதை விட கடவுள் மிகவே பெரியவர் என்பதை பல இடங்கிளில் சொல்லித் தருகிறது. தொடக்கநூல் 1:1லே வெறுமையுற்று இருந்த உலகை ஒரே ஒரு வார்த்தையினால் அழகான பூஞ்சோலையாக்கினார். வானிலிருந்து மன்னாவை பொழந்து வியப்புக்குரிய கடவுள் யாவே என்பதை மக்களுக்கு அறிவிக்கிறார். செங்கடலை இரண்டாகப் பிரித்து இஸ்ரயேல் மக்களுக்கான பசுமை வழிச்சாலையாக அதனை மாற்றுகிறார். இப்போது உங்களுக்கு புரிந்ததா? உங்கள் கடவுள் நீங்கள் நினைப்பதை விட பெரியவர், அதிக ஆற்றல் நிறைந்தவர்.

புதிய ஏற்பாடு நாம் நினைப்பதை விட இயேசு கிறிஸ்து மிக மிக பெரியவர் என்பதை சொல்லித் தராமல் இல்லை. ஐயாயிரம் பேருக்கு அதிசய உணவளிக்கிறார், காலூனமுற்றவரை காலூன்றி நடக்கச் செய்கிறார். பேச்சிழந்தவரை பேச வைக்கிறார், ஆடையின் விளிம்பைத் தொட்டவர் அதிசயமாய் சுகம் பெறுகிறார். இதைவிட இன்னும் சான்றுகள் நமக்குத் தேவையா? உங்கள் கடவுள் நீங்கள் நினைப்பதை விட பெரியவர், அதிக ஆற்றல் நிறைந்தவர்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து நீங்கள் அரும்அடையாளங்களுக்காக என்னைத் தேடினால் என் ஆற்றலை கண்டுக்கொள்ளமாட்டீர்கள். மாறாக நம்பிக்கையினால் தேடினால் கண்டுக்கொள்வீர்கள் என்கிறார். அரும்அடையாளுங்காக நாம் தேடினால் எதிர்பார்த்து ஏமாற்றம் தான் கிடைக்கிறது. நமது நம்பிக்கையினால் சான்று பகறும் போது கடவுளின் மாபெரும் ஆற்றல் நமக்கு புரிகிறது.

மனதில் கேட்க…

  • கடவுளின் பிரம்மாண்டமான ஆற்றல் பற்றி எனக்கு புரிகிறதா?
  • புதுமைகளுக்காக தேடாமல் கடவுளைப் பற்றி புரிந்து தேடலாமே?

மனதில் பதிக்க…
இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா! (மத் 12:42)

-அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

கடவுளின் பிரசன்னம்

யோனா இறைவாக்கினர் நினிவே நகருக்கு ஆண்டவருடைய வார்த்தையை அறிவிக்கச் சென்றார். அவருடைய வார்த்தையை அறிவிக்கவும் செய்தார். இன்னும் நாற்பது நாளில் நினிவே அறிவிக்கப்படும் என்றார். மக்கள் மனம்மாறினர். கடவுளும் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார். அவர்களை அழிக்காது விட்டார். இது யோனாவுக்கு பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தியது. எனவே, கடவுளிடம் கோபித்துக்கொண்டு, அவர் தன் வழியே செல்கிறார். யோனாவின் வருத்தத்திற்கான காரணம் என்ன? அவர் ஓர் அருங்குறி, அதாவது அழிவு வரும் என்று எச்சரிக்கிறார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, கடவுள் மீது கோபம் கொள்கிறார். ஆனால், யோனா ஒன்றை மறந்துவிடுகிறார். அவர் தான் நினிவே மக்களுக்கு கொடுக்கப்பட்ட அடையாளமேயன்றி, அவர் சொன்ன வார்த்தைகள் அல்ல. மக்கள் யோனாவை நம்பியதால் தான், அவருடைய வார்த்தைகளை நம்புகிறார்கள். எனவே, யோனாவே ஓர் அடையாளம். இந்த உன்னதமான கடவுளின் கொடையை, யோனா இறைவாக்கினர் புரிந்துகொள்ள தவறி விடுகிறார்.

இந்த உதாரணத்தைப் போலத்தான், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள், சதுசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள். அவர்கள் இயேசுவின் போதனைகளிலும், அவருடைய நடவடிக்கைகளிலும் அருங்குறிகளைத் தேடுகிறார்கள். ஆனால், இயேசு தான் கடவுளின் அடையாளம் என்பதை, மறந்து விடுகிறார்கள். அருமையான கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒருமுறை முல்லா மாட்டுவண்டி நிறைய மண் எடுத்து, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு சென்று கொண்டிருந்தார். வழியில், எல்கையில் அவரை மறித்த காவலர்கள், வண்டி முழுவதும் ஏதாவது தென்படுகிறதா? என்று மணலை தோண்டி, தோண்டி பார்த்தனர். அவர்களுக்கு முல்லா, எதையோ ஒன்றை கடத்துகிறார் என்பது தெரிந்தது. ஆனால், என்னவென்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி பலமுறை நடந்தது. இறுதியில், முல்லாவுக்கும் வயதாகிப்போக, அந்த காவலர்கள் அவரிடத்தில் “இப்போதாவது என்ன கடத்தினீர்கள் என்று சொல்லுங்கள். எங்களால் கடைசி வரை கண்டுபிடிக்க முடியவில்லையே” என்று கேட்டார்கள். முல்லா சொன்னார், ”நான் கடத்தியது வண்டி மாடுகளைத்தான். ஒவ்வொரு முறையும் வெவ்வெறு மாடுகளை, கடத்திக்கொண்டு வந்தேன்”. கண்ணிருந்தும் இவர்கள் குருடர்கள் தான், என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.

நமது வாழ்விலும், கடவுளின் அடையாளங்கள், அருங்குறிகள் பலவிதங்களில் வெளிப்பட்டாலும், நாமும் கண்ணிருந்தும் குருடர்களாகத்தான் இருக்கிறோம். உண்மையை உணர முடியாதவர்களாகத்தான் இருக்கிறோம். கடவுளின் பிரசன்னத்தை எல்லாவிடத்திலும் உணர்வோம். கடவுளின் பிரசன்னம் எங்குமிருக்கிறது. அந்த பிரசன்னம் நம்மை வழிநடத்தட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

பிரமாணிக்கமாய் இருப்போம்

இயேசுவிடத்திலே அடையாளம் கேட்கக்கூடியவர்களைப் பார்த்து, இயேசு ”இந்தத் தீய விபசாரத் தலைமுறையினர் அடையாளம் கேட்கின்றனர். இவர்களுக்கு இறைவாக்கினரான யோனாவின் அடையாளத்தைத்தவிர வேறு அடையாளம் எதுவும் கொடுக்கப்பட மாட்டாது” என்று சொல்கிறார். ”விபசாரத்தலைமுறையினர்” என்கிற வார்த்தை இங்கே சற்று நெருடலை ஏற்படுத்துகிறது. இந்த வார்த்தையை வெறும் உடல் சார்ந்த விபசார பொருளாக நாம் புரிந்து கொள்ளக்கூடாது. மாறாக, நம்பிக்கைத்துரோகம் என்கிற அர்த்தமாக நாம் பார்க்கலாம். இதனை பழைய ஏற்பாட்டிலே இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இருந்த உருவகத்தில் நாம் புரிந்து கொள்ளலாம்.

பழைய ஏற்பாட்டில், இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்குமான உறவு திருமண உறவாக உருவகப்படுத்தப்பட்டிருந்தது. கடவுளை கணவராகவும், இஸ்ரயேல் கடவுளுக்கு மனைவியாக உருவகம் செய்திருந்தார்கள். ஆனால், நாளடைவில், இஸ்ரயேல் மக்கள் வேற்று தெய்வங்களை நாடியபோது, திருமண உறவில் தனது கணவரான, கடவுளுக்கு நம்பிக்கைத்துரோகம் செய்து விட்டதாகவே உணரப்பட்டது. கடவுளின் அன்பையும், அரவணைப்பையும் மறந்து, கடவுளைப் புறக்கணித்துவிட்டு வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றது, இப்படிப்பட்ட நம்பிக்கைத்துரோகமாகவே கருதப்பட்டது. அதேபோல, கடவுளின் அடையாளமாகிய இயேசு அருகிருந்தபோதிலும், வேறு அடையாளங்கள் கேட்பது நம்பிக்கைத் துரோகம் என்று இயேசு சொல்கிறார்.

கடவுள் நமக்கு தந்திருக்கிற கொடைகளையும், நம் வாழ்வில் செய்திருக்கிற வல்ல செயல்களையும் அனுபவித்து விட்டு, அவரைப்புறக்கணித்து விட்டுச்சென்றால், நாமும் கடவுளுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்கிறோம். கடவுளுக்கு, அவருடைய கட்டளைகளுக்கு பிரமாணிக்கமாய் இருப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்மில் ஒருவராக கடவுள்

1கொரிந்தியர் 1: 22 ல் தூய பவுலடியார், ”யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்” என்று சொல்கிறார். யூதர்களின் வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று இந்த அரும் அடையாளம். யாரெல்லாம் தங்களை கடவுளின் தூதுவர்களாக காட்டிக்கொண்டார்களோ, அதை நிரூபிக்க யூதர்கள் அவர்களிடம் அரும் அடையாளங்கள் காட்டச்சொன்னார்கள். இந்த வரிசையில் இயேசுவை மெசியா என்று ஒரு கூட்டம் சொல்லிக்கொண்டிருந்ததால், இயேசுவிடமும் அவரை நிரூபிக்க, அடையாளம் செய்யச்சொல்லிக் கேட்கின்றனர்.

யூதர்கள் அடையாளங்கள், அருங்குறிகள் தேடியதற்கு அடிப்படைக்காரணம், அவர்களின் தவறான நம்பிக்கை. அது என்ன தவறான நம்பிக்கை? கடவுளை அசாதாரணமான நிகழ்வுகளில் தான் அனுபவிக்க முடியும், பார்க்க முடியும் என்ற தவறான எண்ணம் அவர்களிடம் இருந்தது. கடவுள் அவர்களுக்கு அருகில் இருக்கிறார், அவர்களோடு இருக்கிறார், அவர்களில் ஒருவராக இருக்கிறார் என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள், அறியத்தவறி விடுகிறார்கள். கடவுளை சாதாரண நிகழ்வுகளிலும் உணர முடியும் என்ற அடிப்படை நம்பிக்கை அவர்களிடம் இல்லை.

இன்று நாமும் யூதர்களின் மனநிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடவுளை எங்கோ இருக்கிறவராக, நாம் பார்க்க முடியாதவராக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் கடவுள் நம் அருகில் இருக்கிறார். ஏழையரில் ஒருவராக, நமக்கு அருகாமையில் இருக்கிறவராக, நம்மில் ஒருவராக அவர் வாழ்ந்து வருகிறார். அவரை அடையாளம் காண முயற்சி எடுப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஆண்டவர் தொடுக்கும் வழக்கு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய முதல் வாசகம் விசித்திரமான ஒரு பகுதி. இறைவன் இஸ்ரயேல் மக்கள்மீது குற்றம் சுமத்தி வழக்காடுகிறார். நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன், சொல் என முறையிடுகிறார். பலிகள், வழிபாடுகள் தொடர்ந்து நடக்கின்றன, ஆனால் இதயங்கள் இறைவனைவிட்டு விலகிச் செல்கின்றன. இது தவறு. இக்குற்றத்தை நாம் ஏற்றுக்கொண்டு மனம் திரும்ப மீக்கா அழைப்பு விடுக்கின்றார். நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், கடவுளுக்கு முன்பான தாழ்ச்சியையும் அவர் விரும்புகிறார். இதுவே நமது பலியாக, காணிக்கையாக அமையட்டும். ஆண்டவர் தொடுக்கும் வழக்கில் நாம் குற்றவாளிகளாக எண்பிக்காதபடி காத்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என மொழிந்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தைகளை மனதில் ஏற்று, போலி வழிபாடுகளைத் தவிர்த்து, தாழ்மையான உள்ளத்தோடு உமக்குப் பணிவிடைபுரிய அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

யேசு காட்டும் அடையாளம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அடையாளங்கள் மனித வாழ்வுக்கு மிக அவசியமானவை. அவையின்றி உறவோ, தொடர்போ அமையாது.

இறைவன் நம் வாழ்வில் அவரது அன்புக்குப் பல அடையாளங்களைத் தந்துள்ளார். நமது வாழ்வு, கொடைகள், திறமைகள், ஆற்றல்கள், வாய்ப்புகள், நமது வெற்றிகள், சாதனைகள் ... அனைத்துமே ஆண்டவரின் அருளின் அடையாளங்கள்தான்.

அவற்றை அடையாளம் கண்டுகொள்ள விசுவாசப் பார்வை தேவை. நம்பிக்கைப் பார்வையின்றி இருப்போருக்கு எத்தனை அடையாளங்கள் தரப்பட்டாலும், அவற்றைக் காண இயலாது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞரும், பரிசேயரும் இத்தகையோராக இருந்தனர். எனவேதான், இயேசுவின் வாழ்வையும், பணிகளையும், குறிப்பாக அவரது அருங்குறிகளையும் கண்டபின்னும் வேறு அடையாளங்களைத் தேடினர்.

நமது வாழ்வைக் கொஞ்சம் ஆய்வு செய்து இறைவன் நமக்குத் தந்துள்ள அடையாளங்களை இனம் கண்டுகொள்வோம். அவற்றுக்காக நன்றி கூறுவோம்.

எண்ணிப் பார்த்தால், ஏராளமான அடையாளங்களை நாம் எளிதில் கண்டுகொள்ளலாம். ஏன், இந்த  இணையதள விவிலியப் பகிர்வுகூட இறைவனின் வியத்தகு அன்பின், ஆற்றலின் ஓர் அடையாளம்தானே!

மன்றாடுவோம்; அன்பின்; அருளடையாளமே இயேசுவே, எங்கள் வாழ்வில் நீர் பங்குபெறுகிறீர். எங்களை ஆசிர்வதிக்கிறீர் என்பதற்கு எத்தனையோ அடையாளங்களைத் தந்துள்ளீர், அதற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் உமது அன்பின் அடையாளமாகப் பார்க்கும் விசுவாசப் பார்வையை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

''

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

''அப்பொழுது மறைநூல் அறிஞர் சிலரும் பரிசேயர் சிலரும் இயேசுவுக்கு மறுமொழியாக, 'போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும் என விரும்புகிறோம்' என்றனர்'' (மத்தேயு 12:38)

சிந்தனை
-- இயேசு மக்களுக்குப் போதித்ததோடு நிறுத்தவில்லை. அவர் வல்லமை மிக்க அரும் செயல்களையும் செய்தார். அச்செயல்கள் எல்லாம் மந்திர மாயஜாலமாக அமைந்த போலிக் காட்சிகள் அல்ல; மாறாக, நோயுற்றோருக்கு நலம் கொணரவும், ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு வழங்கவும் இயேசு அரும் செயல்கள் புரிந்தார். அச்செயல்கள் அதிசயமான ''அடையாளங்கள்''. அவற்றைப் பார்த்தவர்கள் பலர் இருந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் துலங்கிய அதிசய சக்தியை அடையாளம் கண்டார்கள். அவர் வழியாகக் கடவுளின் வல்லமை வெளிப்பட்டதை அறிந்துகொண்டார்கள். ஆனால் யூத சமயத் தலைவர்கள் இயேசு புரிந்த அரும் செயல்களின் பொருளைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். எனவேதான் அவர்கள் இயேசுவைப் பார்த்து, ''போதகரே, எங்களுக்கு ஓர் அடையாளம் காட்ட வேண்டும்'' எனக் கேட்கின்றனர் (காண்க: மத் 12:38). இக்கோரிக்கை நல்ல மனத்தோடு கேட்கப்படவில்லை; மாறாக, இயேசுவின் எதிரிகள் அவரிடத்தில் குற்றம் காணும் பொருட்டே இவ்வாறு கேட்டனர். இயேசு ஏற்கெனவே புரிந்த அதிசயங்களைக் கண்டுகொள்ளத் தவறியவர்கள் இனிமேல் அதிசயங்கள் நிகழ்ந்தால் மட்டும் நம்பிவிடுவார்களா?
-- இறுதியாக இயேசு ஓர் ''அடையாளம்'' கொடுப்பார். அதுவே அவர் இறந்து மீண்டும் உயிர்பெற்றெழுகின்ற புதுமை. இதையும்கூட நம்ப மறுத்தவர்கள் இருந்தனர். இந்த அதிசய நிகழ்ச்சியைக் குறிப்பிடும் வகையில் ''யோனாவின் அடையாளத்தை'' அவர்களுக்குக் கொடுக்கிறார் இயேசு. யோனா இறைவாக்கினர் மீனின் வயிற்றில் மூன்று பகலும் மூன்று இரவும் இருந்த பின்னர் மீண்டும் உயிரோடு வெளிவந்ததுபோல, இயேசுவும் சாவிலிருந்து விடுதலை பெற்றவராக, புத்துயிர் பெற்று எழுவார் (மத் 12:40). பிற இனத்தைச் சார்ந்தவர்கள் கடவுளின் திட்டத்தில் சிறப்பிடம் பெறுவார்கள் எனவும் இயேசு அறிவிக்கிறார். யோனா அறிவித்த செய்தியைக் கேட்ட நினிவே மக்கள் மனம் மாறினர்; இஸ்ரயேலரைச் சாராத ''தென்னாட்டு அரசி'' சாலமோனின் அறிவுத் திறனைப் பாராட்டினார். இயேசு கடவுளிடமிருந்து வந்து இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்த மாபெரும் ''இறைவாக்கினர்''. அவருடைய போதனையில் கடவுளின் ''ஞானம்'' துலங்கியது. இவ்வாறு அவர் யோனா இறைவாக்கினருக்கும் சாலமோன் மன்னருக்கும் மேலானவர். இந்த உண்மையை யூதத் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தனர். இன்று இயேசுவிடம் நம்பிக்கை கொள்கின்ற நாம் திறந்த உள்ளம் கொண்டவர்களாக, நம் அகக் கண்களை அகலத் திறந்து பார்த்தால் மட்டுமே இயேசுவிடம் கடவுளின் வல்லமை துலங்குவதைக் கண்டுகொள்ள முடியும்.

மன்றாட்டு
இறைவா, உம்மில் நம்பிக்கை கொண்டு வாழ்ந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!...
இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!" (மத்தேயு 12:41-42)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம்மை யோனா இறைவாக்கினருக்கும் சாலமோன் மன்னருக்கும் ஒப்பிட்டுப் பேசியதோடு அவர்களைவிடத் தம்மைப் பெரியவராகக் காட்டுகிறார். விவிலிய வரலாற்றில் யோனாவுக்குச் சிறப்பிடம் உண்டு. கடவுளிடமிருந்து வந்த அழைப்பை ஏற்காமல் தட்டிக்கழிப்பதற்கு எவ்வளவோ முயன்றார் யோனா. ஆனால் கடவுள் அவரை விடவில்லை. யோனாவைத் தேடிச்சென்று கண்டுபிடித்து அவரை நினிவே நகருக்கு அனுப்பி அங்கிருந்த பிற இன மக்கள் கடவுளிடம் திரும்பிவர யோனா ஒரு கருவியாகச் செயல்பட்டார். சாலமோன் மன்னர் தலைசிறந்த ஞானியாகப் போற்றப்பெறுபவர். அவருடைய ஞானம் மிகுந்த சொற்களைக் கேட்க வெகுதொலையிலிருந்து மக்கள் வந்தனர். இந்த இருவரோடும் இயேசு தம்மை ஒப்பிட்டது எதற்காக? இயேசு கடவுளால் அனுப்பப்பட்ட இறைவாக்கினர் அனைவரையும்விட தலைசிறந்த இறைவாக்கினர். ஏனென்றால் அவர் கடவுளின் செய்தியை, கடவுளாட்சி பற்றிய செய்தியை நமக்கு அறிவித்தார். மேலும், இயேசு இவ்வுலகில் தோன்றிய ஞானியர் அனைவரையும் விஞ்சியவர். ஏனென்றால் அவர் இவ்வுலக ஞானத்தையல்ல, கடவுளின் ஞானத்தை நமக்கு அறிவித்தார்.

-- கடவுளின்ஞானம் மனிதருக்கு மடமையாகப் படலாம். கடவுளின் அழைப்பு மனிதருக்கு முரணாகத் தெரியலாம். ஆனால், திறந்த உள்ளத்தோடு கடவுளை நாம் அணுகிச் சென்றால் அவருடைய குரலை நம் உள்ளத்தின் ஆழத்தில் நாம் கேட்க முடியும். அதுபோல, கடவுளின் ஆவியால் நாம் நடத்தப்பட்டால் அவருடைய ஞானத்தில் நமக்கும் பங்குண்டு. ஒப்புயர்வற்ற இறைவாக்கினரும் ஞானியுமாகிய இயேசுவைப் பின்செல்வோர் இறைவாக்கினை ஏற்று, கடவுளின் ஞானத்தைப் பெற்ற மனிதராக வாழ வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, நீர் எங்களுக்கு அளித்துள்ள இறைவாக்குப் பணியை நாங்கள் ஞானத்துடன் செயல்படுத்த எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

அடையாளம் அலட்சியத்திற்கல்ல

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

வாழ்க்கை இலக்கைச் சென்றடையும் இனிய பயணமாகிட அடையாளங்கள் அவசியம். மறைநூல் அறிஞருக்கு மறுத்த இறைவன் இயேசு மீண்டும் மிகச் சிறந்த அடையாளம் ஒன்றை அவர்களுக்கு
வழங்குகிறார்.

இஸ்ராயேல்; மக்களின் வரலாற்றுப்பயணத்தில் பல்வேறு அடையாளங்களை வழங்கியுள்ளார். ஒளிரும்; மேகம், நிழல் தரும் மேகம், பாறையில் பெருக்கெடுத்த தண்ணீர், பாலையில் பொழிந்த மன்னா, செங்கடல் பயணம, பேழைப்பிரசன்னம், இறைவாக்கினர்கள்,அவர்களின் அருள் வாக்குகள், எழுந்த அரசுகள், வீழ்ந்த அரசுகள் எல்லாம் அடையாளங்களே. இத்தனை அடையாளங்களும் அலட்சியப்படுத்தப்பட்டன. எனவேதான் "விபச்சாரத் தலைமுறையே" என்னும் கடுஞ்சொல்லைப் பயன்படுத்திய இறைவன் மீண்டும் ஒரு அடையாளம் வழங்குகிறார். யோனா இறைவாக்கினரை ஒரு அடையாளமாக்கி வரலாற்றின் மிகப் பெரிய அடையாளமான இயேசுவின் பாடுகள்,மரணம், உயிர்ப்பு இவற்றை முக்காலத்துக்கும் எக்காலத்துக்கும் அடையாளமாக்கினார்.

இறைமயமாக்கும் இலட்சியப்பயணத்தின் நிறைவை அடைய இறைவனும் அவ்வப்போது நமக்கும் பல அடையாளங்களைத் தருகிறார். இன்றும் அதே உன்னத வெளிப்பாடடின் சாயல் உலகில் பல்வேறு விதங்களில் அடையாளங்களாக கொடுக்கப்படுகிறன.

வுpரிகின்ற பூவும் வாடி வதங்கும் மலரும் ஒரு அடையாளம், பிறப்பும் ஒரு அடையாளம், இறப்பும் ஒரு அடையாளம. கேட்கும் செய்தியும் பார்க்கும் காட்சியும், வீசும் காற்றும், வெள்ளமும் வரட்சியும் அடையாளமே.

உன் வாழக்கைப் பயணத்தில் இறைவன் உனக்கு வழங்கும் அடையாளங்களை அடையாளம் காண்.

--அருட்திரு ஜோசப் லீயோன்