முதல் வாசகம்
இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20


ஆண்டவரே, உமது உரிமைச் சொத்தாய் இருக்கும் மந்தையாகிய உம்முடைய மக்களை உமது கோலினால் மேய்த்தருளும்! அவர்கள் கர்மேலின் நடுவே காட்டில் தனித்து வாழ்கின்றார்களே! முற்காலத்தில் நடந்தது போல அவர்கள் பாசானிலும் கிலயாதிலும் மேயட்டும்! எகிப்து நாட்டிலிருந்து நீங்கள் புறப்பட்டு வந்த நாளில் நடந்தது போல நான் அவர்களுக்கு வியத்தகு செயல்களைக் காண்பிப்பேன். உமக்கு நிகரான இறைவன் யார்? எஞ்சியிருப்போரின் குற்றத்தைப் பொறுத்து நீர் உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் தீச்செயலை மன்னிக்கின்றீர்; உமக்கு நிகரானவர் யார்? அவர் தம் சினத்தில் என்றென்றும் நிலைத்திரார்; ஏனெனில், அவர் பேரன்பு கூர்வதில் விருப்பமுடையவர்; அவர் நம்மீது இரக்கம் காட்டுவார்; நம் தீச்செயல்களை மிதித்துப் போடுவார்; நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்து விடுவார். பண்டைய நாளில் எங்கள் மூதாதையருக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது போல யாக்கோபுக்கு வாக்குப் பிறழாமையையும் ஆபிரகாமுக்குப் பேரன்பையும் காட்டியருள்வீர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 85: 1-3. 4-5. 6-7

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்.

1 ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்;
யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.
2 உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்;
அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர்.
3 உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்.
கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். -பல்லவி

4 எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;
எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்.
5 என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்?
தலைமுறை தோறுமா உமது கோபம் நீடிக்கும்? -பல்லவி

6 உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?
7 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்;
உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: ``என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம்.'' அல்லேலூயா.

மத்தேயு 12:46-50

பொதுக்காலம் 16 வாரம் செவ்வாய்


நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 46-50

அக்காலத்தில் மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருந்தபோது, அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். ஒருவர் இயேசுவை நோக்கி, ``அதோ, உம் தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்றுகொண்டிருக்கின்றார்கள்'' என்றார். அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, ``என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்?'' என்று கேட்டார். பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ``என் தாயும் சகோதரர்களும் இவர்களே. விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

உறவுகளோடு உறவாடுவதில் வித்தியாசம் நல்லதா?
மத்தேயு 12:46-50

நாம் எல்லா உறவுகளையும் சரிசமமாக பார்ப்பதில்லை. அறவே தெரியாதவர்களோடு நம் உறவு என்பது மிகவும் தூரமாக இருக்கும். ஓரளவு தெரிந்தவர்களோடு நமது உறவு ஓரளவு நெருக்கமாக இருக்கும். நண்பர்களோடு நம் உறவு பக்கமாகவே இருக்கும். நம் உடன்பிறப்புகளோடு நம் உறவைப் பற்றி சொல்லவே வேண்டாம் அது மிகவே நெருக்கமாக இருக்கும். நம் உறவுகளை வைத்து நம் பழக்கத்தில் வித்தியாசத்தை வெளிப்படுத்துகிறோம். இப்படிப்பட்ட வித்தியாசத்தை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதை சிறிது மாற்றலாம் என ஒரு வித்தியாசமான சிந்தனையைக் கொண்டு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருக்கும் போது அவருடைய தாய் மற்றும் சகோதரர்கள் வருகிறார்கள். அவர்களுடைய வருகையானது அவருக்கு சொல்லப்படுகிறது. அந்த நேரத்தில் அவரது உள்ளம் உயர்ந்து போகவில்லை, குரலில் ஆனந்த சத்தம் கேட்கவில்லை. அவர் இயல்பாகவே இருந்தார். ஒரு வித்தியாசத்தை வெளிப்படுத்தவில்லை. உறவுகளிலே எல்லாருக்கும் ஒரே முக்கியத்துவத்தை அவர் கொடுத்தார். அவருடைய குடும்பத்திற்கென்று சிறப்பான வரத்தையோ, மரியாதையையே, வேலைவாய்ப்பையோ அவர் பெற்றுக்கொடுக்கவில்லை.

நம்முடைய வாழ்க்கையை பரிசோதித்து பார்க்கும் போது அனைத்தையும் நாம் நம்முடைய குடும்பத்திற்கு மட்டுமே பெற்றுக்கொடுப்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். சிறப்பான வரத்தையும் மரியாதையையும், வேலைவாய்ப்பையும் நம் குடும்பத்திற்கு பெற்றுகொடுக்கவே நாம் ஓடுகிறோம். அந்த ஓட்டத்தை நிறுத்தி எல்லாருக்காவும் ஓடுவோம். உறவுகளில் வித்தியாசம் காண்பதை விரட்டுவோம்.

மனதில் கேட்க…
• என் நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டும் ஏன் தனி மரியாதை?
• இயேசு செய்ததை செய்து பார்க்கலாமா?

மனதில் பதிக்க…
உங்கள் கடவுளாகிய ஆண்டவர், தெய்வங்களுக்கெல்லாம் கடவுள், இறைவனுக்கெல்லாம் இறைவன். மாட்சியும் ஆற்றலும் உள்ள அஞ்சுதற்குரிய கடவுள் அவரே. அவர் ஓர வஞ்சனை செய்வதில்லை(எண்10:17)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

மீக்கா 7: 14 – 15, 18 – 20
"உமக்கு நிகரானவர் யார்?"

கடவுளுக்கு நிகரானவர் இந்த உலகத்திலும், மேலுலகத்திலும் எவருமில்லை என்பதை இறைவாக்கினர் மீக்கா மக்களுக்கு அறிவிக்கிறார். இந்த வார்த்தைகள் இஸ்ரயேல் மக்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தைகள். ஏனென்றால், இஸ்ரயேல் மக்கள் பல தெய்வங்களை வழிபட்டு வந்த மக்களிடையே வாழ்ந்து வந்தவர்கள். ஒவ்வொரு நாட்டினரும் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தை வழிபட்டு வந்தனர். அந்த தெய்வம் தங்களை ஆபத்துக்களிலிருந்து, எதிரிகளிடமிருந்து காப்பாற்றும் என்று முழுமையாக நம்பினர். இஸ்ரயேல் மக்களும் "யாவே" இறைவன் மீது இத்தகைய நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனாலும், மற்ற தெய்வங்களை விட, இஸ்ரயேல் மக்களின் கடவுளாகிய "யாவே" இறைவன் வல்லமை படைத்தவர் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள். அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவது தான் இந்த வார்த்தைகள்.

பணம், அதிகாரம், பதவி வருகிறபோது, இயல்பாகவே ஆணவமும் மனிதனிடத்தில் வந்துவிடுகிறது. தன்னை மிஞ்சியவர்கள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிடுகிறான். பணமும், அதிகாரமும் அவனுடைய கண்களை மறைத்து, யதார்த்தத்தை காணாமல் செய்துவிடுகிறது. கிட்டத்தட்ட இத்தகைய நிலையில் தான், இஸ்ரயேல் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். "இறைவன் தான் தங்களுக்கு எல்லாம்" என்று வாழ்ந்து கொண்டிருந்தவர்கள், பணமும், அதிகாரமும் கிடைத்தவுடன், தங்களை வாழ வைத்த இறைவனை மறந்து போயினர். தங்களால் எல்லாமே முடியும் என்கிற நிலைக்கு அவர்கள் வந்துவிடுகிறார்கள். தாங்களும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்கிற தலைக்கனம் அவர்களுக்குள் குடிகொண்டுவிடுகிறது. இறைவனுக்கு நிகரானவர் யாரும் இல்லை, என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டிய பொறுப்பை இறைவாக்கினர் செவ்வனே செய்து முடிக்கிறார். அவர்களின் உண்மைநிலையை அவர் அறியச் செய்கிறார்.

இன்றைக்கு நம்மை ஆளுகிறவர்களும் இதே மனநிலையோடு தான் ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அதிகாரமும், பணமும் கிடைத்தவுடன், தாங்கள் தான் இனி எல்லாம் என்கிற மனநிலைக்கு வந்துவிடுகின்றனர். தங்களால் இந்த உலகத்தில் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்கிற எண்ணம் அவர்களுக்குள் தோன்றிவிடுகிறது. இறுதியில் அதற்கான பலனையும் அவர்கள் அனுபவிக்கத்தான் போகிறார்கள். எப்போதும் இறைவனுடைய பிள்ளைகளாக, நம்முடைய நிலை உணர்ந்து, நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறைவார்த்தையின் மீது இயேசுவின் தாகம்

எங்கே செய்ய வேண்டும் என்கிற உந்துதல் இருக்கிறதோ, அங்கே நிச்சயம் அதைச்செய்வதற்கான வழி உண்டு – என்று பொதுவாகச் சொல்வார்கள். இயேசுவின் பணிவாழ்வு இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இயேசுவின் உறவுகள் கூட அவரைப்புரிந்து கொள்ளாத கடுமையான நேரம். இவ்வளவு நாட்கள், தொழுகைக்கூடத்தலைவர்களின் சிறந்த போதகராக வலம் வந்த இயேசுகிறிஸ்து, அவர்களாலே புறக்கணிக்கப்படுகிறார். காரணம், அதிகாரவர்க்கத்தினரின் அழுத்தம் தாங்காமல், அவர்கள் இயேசுவுக்கு தொழுகைக்கூடத்தில் போதிப்பதற்கு அனுமதி மறுக்கிறார்கள்.

இயேசு மனமுடைந்து விடவில்லை. சோர்ந்து போகவில்லை. ஆனால், இறைவார்த்தையைப் போதிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் அவருக்குள்ளாக மிகத்தீவிரமாக இருக்கிறது. இந்த உலகம் கடவுளின் அழகான இல்லம். நிச்சயம் எங்கு வேண்டுமானாலும் என்னால் போதிக்க முடியும் என்று சொல்லி, இறைவார்த்தையைப் போதிப்பதில் கருத்தாய் இருக்கிறார் இயேசு, இயேவை போதிக்க விடக்கூடாது என்பதின் அடுத்த அழுத்தம் தான், அவருடைய உறவினர்களை, அதிகாரவர்க்கத்தினர் தூண்டிவிடுவது. ஆனால், இயேசு இறைவார்த்தை ஒன்றையே தனது இலட்சியமாகக் கொண்டு வாழ்கிறார்.

இயேசுவிடத்தில் இருந்த, இறைவார்த்தையைப் பற்றிய தாகம் நம்மிடமும் இருக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அது நேர்மையானது என்றால், அதனைச்செய்வதற்கு நமக்கு பல தடைகள் வந்தாலும், கவலைப்படாமல், அதனை நிறைவோடு செய்வதற்கு, நாம் முயல வேண்டும். அதற்கு கடவுளின் துணை நிச்சயமாக நமக்கு கிடைக்கும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

உறவுகளின் முக்கியத்துவம்

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, அவருடைய உறவினர்களும், சகோதரர்களும் புரிந்து கொள்ளாதது நிச்சயம் மிகப்பெரிய வருத்தத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். நமக்கு எந்நாளும் உற்ற துணையாயிருக்கக்கூடிய நமது உறவுகள், நம்மை தவறாகப் புரிந்து கொள்கிறபோது, நிச்சயம் அது நமக்கு மிகப்பெரிய கவலையை உண்டாக்கும். இயேசுவும் இதற்கு விதிவிலக்காக இருந்திருக்க முடியாது. அவருடைய சகோதரர்கள் கூட அவரிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. மாற்கு நற்செய்தியாளரும் இதே கருத்தை வலியுறுத்துகிறார்.

மாற்கு 3: 21 ல் வாசிக்கிறோம்: ”இயேசுவுடைய உறவினர் இதைக்கேள்விப்பட்டு, அவரைப்பிடித்துக் கொண்டு வரச்சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர். பெரும்பாலான மக்கள் இயேசுவை மெசியாவாகவும், தங்களை மீட்க வந்தவராகவும், அதிசயங்கள், அற்புதங்கள் செய்கிறவராகவும், கடவுளின் மகனாகவும் பார்த்துக்கொண்டிருக்கிறபோது, தன்னுடைய உறவினர்கள் இவ்வளவு மோசமாக நடப்பதைப்பார்த்து, இயேசுவுக்கு நிச்சயம் கவலை வந்திருக்க வேண்டும். ஏனென்றால், உறவுகள் தான் மனித வாழ்வுக்கு அடிப்படை. உயரும்போது மகிழ்ச்சியடைவதும், கீழே விழும்போது தாங்கிப்பிடிப்பதும் இந்த உறவுகள். அந்த உறவுகளே தன்னை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பது உண்மையிலே வருந்ததக்க ஒன்றாகும்.

உண்மை, நேர்மை போன்ற உறவுகளுக்கு துணைபோகிறவர்களாக, அதனைத் தாங்கிப் பிடிப்பதற்கு எதையும் இழக்கத்தயாராக இருக்கிறவர்களாக மாறுவோம். அதற்கா எத்தகைய துன்பங்கள் வந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள நம்மையே தயார்படுத்தி, இறையருள் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------
யாருக்கு முன்னுரிமை ?...

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு தமது குடும்பம், தமது சீடர்கள் அடங்கிய குழுமம் இவற்றில் யாருக்கு முன்னுரிமை தருகிறார் என்பது நமக்குப் பாடமாக அமைகிறது. இரண்டு தரவுகளை நாம் மனதில் கொள்ளவேண்டும்.

1. இயேசு மக்கள் கூட்டத்தோடு பேசிக்கொண்டிருந்தபோது, அவரது தாயும், சகோதரர்களும் வந்து வெளியே நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களும் சரி, இயேசுவும் சரி குடும்பம் முன்னுரிமை பெறவேண்டும் என்று எண்ணவில்லை. எனவே, இயல்பாகவே அவர்கள் வெளியே காத்துக்கொண்டிருந்தார்கள்.

2. இயேசுவும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களே தமது குடும்பத்தினர் என்று சொல்லி, தம்மோடு இருந்து, தமது அருளுரையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றார்.

இறையாட்சியின் படிமுறையில் குடும்பத்தைவிட, சீடத்துவமே முதன்மை பெறுகிறது என்பதை நாம் கற்றுக்கொள்வோம். நமது இரத்த உறவுகளைவிட, இறையாட்சியின் உறவுகளுக்கு இயேசுவைப்போல நாமும் முன்னுரிமை கொடுக்க முன்வருவோம். நமது குடும்பத்தினரையும் இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுபவர்களாக மாற்றி. அவர்களை இறைநம்பிக்கையின் அடிப்படையிலும் நமது நெருங்கிய உறவுகளாக மாற்றுவோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, நாங்கள் உம்மைப் போல இறையாட்சியின் உறவுகளுக்கு முன்னுரிமை வழங்கும் அருளைத் தந்தருளும். ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

 

மீக்காவின் புகழ்ப் பாடல் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மீக்கா இறைவாக்கு நூல் கண்டனங்களோடு தொடங்கி, ஆறுதலில், இறைபுகழ்ச்சியில், இறைவன்மீது கொள்ளும் நம்பிக்கையில் நிறைவடைகிறது. இந்த இறுதிப் பகுதியில் “உமக்கு நிகரான இறைவன் யார்?â€? எனப் போற்றுகிறார். இறைவன் பேரன்பு கூர்வதில் விருப்பமுடையவர். நம்மீது இரக்கம் காட்டுபவர். நம் தீச்செயல்களை மிதித்துப் போடுபவர். நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுபவர் என இறைவனின் மாண்புறு செயல்கள் விவரிக்கப்படுகின்றன. இத்தனை மாண்பு நிறைந்த இறைவனின் பேரன்பையும், இரக்கத்தையும் நாமும் நாள்தோறும் உய்த்துணர்வோம். ஆண்டவரின் உரிமைச் சொத்தினராய் வாழ்வோம்.

மன்றாடுவோம்: ஆறுதல் மொழி வழங்கும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் குற்றங்களை எல்லாம் மன்னித்து, எங்கள் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவதற்காக நன்றி கூறுகிறோம். எந்நாளும் உமக்கு நன்றியுள்ளவர்களாக வாழ அருள் தந்தருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார

 

நாமே இயேசுவின் தாயும், சகோதரரும்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் தாய், மற்றும் சகோதரர், சகோதரிகள் என்னும் உயர்ந்த இடத்தை இயேசு நமக்குத் தர முன்வருவது ஒரு வியப்பான வாய்ப்பு.

யாரெல்லாம் இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்களோ, அவர்கள் அனைவருமே இயேசுவின் தாயும், உடன் பிறந்தோரும்தான். இந்த மகிழ்ச்சியான நற்செய்திக்காக நன்றி  கூறுவோம்.

சரி, இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவது எப்படி? பல வழிகள் இருக்கின்றன. இதோ, அவற்றுள் ஒன்று;

நமக்கு விருப்பமில்லாத, எதிர்பாராத நிகழ்வுகள் அவ்வப்போது நம் வாழ்வில் நடக்கின்றன. நமக்கு எரிச்சலையும், கசப்புணர்வையும் தருகின்றன. அந்த நேரங்களில் எல்லாம். #8220;இதுவும் இறைவனின் திருவுளமாக இருக்கலாம். இதன் வழியாகவும் இறைவன் எனக்க நன்மையைச் செய்யலாம். எனவே, இதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதற்காக நன்றி கூறுகிறேன்” என்று சொல்வது இறைத் திருவுளத்துக்குப் பணியும் ஒரு செயலாக மாறுகிறது.

இந்த நாள் முழுதும் இதை முயற்சி செய்வோமா?
 
மன்றாடுவோம்; தந்தையின் விருப்பப்படி வாழ்ந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உம்மைப் போலNவு நானும் இறைத் தந்தையின் விருப்பத்தை எப்போதும் நிறைவேற்றி, அவருக்கு மாட்சியளிக்க எனக்கு அருள்தாரும். இந்த நாளில் நான் சந்திக்கும் ஒவ்வொரு நிகழ்விலும், இறைவனின் விருப்பத்தை நிறைவேற்ற எனக்கு ஆற்றல் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

இறை உறவே உச் நிலை

வுhழ்வில் வசந்தம் வீச உறவின் உச்சிக்குச் செல்ல வேண்டும்.

புpறப்பால், இரத்த உறவால் உறவுகள் நிர்ணயம் செய்யப்படுகின்றன. சொந்தமும் பந்தமும் அதே உறவின் எல்லையை சற்று அகலமாக்குகிறது. பழக்கங்கள் நட்புகள் இந்த வட்டத்தை இன்னும் சற்று விரிவடையச் செய்கிறது.ஆனால் பரிதாபம். இன்று பணம்தானே அத்தனை உறவுகளுக்கும் அடித்தளம். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துவது பணம்தானே.

சொத்தைக் கொடுத்தால்தானே தந்தை. அனைத்தையும் அள்ளிக்கொடுத்தால்தானே அம்மா. கொண்டு வந்தால்தானே மனைவி. கொடுத்து வாங்கினால்தானே உறவுகள். உதவினால்தானே நண்பன். இவ்வாறு உறவை, இரத்தத்தை விலைபேசும் இந்தச் சமுதாயம் சந்திக்கும் இடர்கள் ஏராளம் ஏராளம். பெற்ற தாயை, தந்தையை, உடன்பிறப்புகளை, உறவுகளை, நட்பை உதறி ஊதாரியாய் அலைகின்றவர்கள் ஏராளம், அலையவைப்பவர்கள் ஏராளம் ஏராளம்.

இச் சூழலில் நம் இறைவன் இயேசு உறவின் உச்ச நிலையை நமக்கு அறிமுகம் செய்கிறார். கொள்வதும் கொடுப்பதும் அல்ல, பந்தமும் பாசமும் அல்ல. இறை வார்த்தையில் தந்தை இறைவனின் திருவுளத்தை கண்டு கடைபிடித்து வாழ்வதில்உருவாகும் ஆன்மீக உறவே உயரந்தது. அங்கே மனித மாண்பும் மதிப்புறும், இறை அருளும் பெருகும். இத்தகைய இறை உணர்வி;ல் உருவாகும் உறவு, மனிதனின் வாழவில் வசந்தத்தை எப்போதும் வீசச்செய்யும்.

தெய்வமே! இத்தெய்வீக உறவில் மனிதம் மலர்ந்து மணம்பரப்பும் நாள் வாராதோ!

--அருட்திரு ஜோசப் லீயோன்