முதல் வாசகம்முதல் வாசகம்
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 1-11


ஆண்டவர் எரேமியாவுக்கு அருளிய வாக்கு: ஆண்டவரின் இல்ல வாயிலில் நின்று நீ அறிவிக்கவேண்டிய வாக்கு இதுவே: ஆண்டவரை வழிபட இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் மக்களே! நீங்கள் அனைவரும் கேளுங்கள். இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது: ``உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்ப்படுத்துங்கள். நான் இந்த இடத்தில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன். `இது ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்! ஆண்டவரின் கோவில்!' என்னும் ஏமாற்றுச் சொற்களை நம்ப வேண்டாம். நீங்கள் உங்கள் வழிகளையும் செயல்களையும் முற்றிலும் சீர்ப்படுத்திக் கொண்டால், ஒருவர் ஒருவரோடு முற்றிலும் நேர்மையுடன் நடந்து கொண்டால், அன்னியரையும் அனாதைகளையும் கைம்பெண்களையும் ஒடுக்காதிருந்தால், மாசற்றோரின் இரத்தத்தை இவ்விடத்தில் சிந்தாதிருந்தால், உங்களுக்கே தீங்கு விளைவிக்கும் வேற்றுத் தெய்வ வழிபாட்டை நிறுத்தி விட்டால், இந்த இடத்தில், முன்பே நான் உங்கள் மூதாதையர்க்கு எக்காலத்திற்குமென்று கொடுத்துள்ள இந்த நாட்டில் உங்களைக் குடியிருக்கச் செய்வேன். நீங்களோ, பயனற்ற ஏமாற்றுச் சொற்களை நம்புகிறீர்கள். களவு, கொலை, விபசாரம் செய்கிறீர்கள்; பொய்யாணை இடுகிறீர்கள்; பாகாலுக்குத் தூபம் காட்டுகிறீர்கள். நீங்கள் அறியாத வேற்றுத் தெய்வங்களை வழிபடுகிறீர்கள். ஆயினும், என் பெயர் விளங்கும் இந்தக் கோவிலுள் வந்து, என்முன் நின்றுகொண்டு, ``நாங்கள் பாதுகாப்பாய் உள்ளோம்'' என்கிறீர்கள். அருவருப்பான இவற்றைச் செய்யவா இந்தப் பாதுகாப்பு? என் பெயர் விளங்கும் இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ? நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்,'' என்கிறார் ஆண்டவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 84: 2. 3. 4-5, 7. 10

பல்லவி: ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!

2 என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது;
என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. -பல்லவி

3 படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே!
உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது;
தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. -பல்லவி

4 உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்;
அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
5 உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்.
7 அவர்கள் நடந்து செல்கையில் மேலும் மேலும் வலிமை பெறுகின்றார்கள். -பல்லவி

10 வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது;
பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும்,
என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. அல்லேலூயா.

மத்தேயு 13:24-30

பொதுக்காலம் 15 வாரம் சனி


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 24-30


அக்காலத்தில் இயேசு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கு இடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான். பயிர் வளர்ந்து கதிர்விட்டபோது களைகளும் காணப்பட்டன. நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, `ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், `இது பகைவனுடைய வேலை' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், `நாங்கள் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' என்று கேட்டார்கள். அவர், `வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக் கூடும். அறுவடை வரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், முதலில் களைகளைப் பறித்துக்கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள் என்று கூறுவேன்' என்றார்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

களைகளுக்கு தேவை மூன்று சுற்றுலாக்கள்
மத்தேயு 13:24-30

சிறு குழந்தையாய் நாம் இருந்த போது களைகள் நமக்குள் இருப்பதில்லை. ஆனால் நாம் வளர வளர களைகளும் நமக்குள்ளே வளருகின்றன. களைகள் வருவது இயல்பு. ஆனால் அந்த களைகளை விரட்டுவது தான் புத்திசாலித்தனம். ஒரு புத்திசாலி எப்படி களைகளை விரட்ட முடியும் என்பதை நற்செய்தி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. களைகளை மூன்று வழிகளில் நாம் விரட்டலாம்.

1. அமைதி சுற்றுலா
அமைதியாக இருக்கும் போது தான் நாம் நம்மைப் பற்றி அறிகிறோம். நமக்குள்ளே இலவசமாக சுற்றுலா செல்கிறோம். இந்த இன்பச் சுற்றுலா நம்மை பற்றிய முழு அறிவையும் கொடுக்கிறது. நம் களைகள் அனைத்தையும் அமைதி சுற்றுலா நமக்கு முன்னே எடுத்து வைக்கிறது.

2. இயேசுவோடு சுற்றுலா
அமைதி சுற்றுலாவில் களைகளை கவனமாய் கண்டறிந்த பிறகு தியானம் மேற்கொள்ள வேண்டும். அந்த தியானம் இயேசுவாடு சுற்றுலா செல்ல வாய்ப்பு கொடுக்கும். அதிலே நாம் இயேசுவிடம் மன்னிப்பு கேட்டு மனம் வருந்தி நல்ல பாவசங்கீர்த்தனம் செய்ய வேண்டும். நல்ல பாவசங்கீர்த்தனம் நம் பாதையை சீராக்கும்.

3. மகிழ்ச்சி சுற்றுலா
இயேசுவோடு சுற்றுலா சென்ற பிறகு மகிழ்ச்சியின் சுற்றுலா நமக்கு நிரந்தரமாக வேண்டும். அதற்காக களைகளை விரட்ட அனுதினமும் நாம் விடாமுயற்சியோடு போராட வேண்டும். அந்த போராட்டத்தில் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும். அப்படி விரட்டினால் தினந்தோறும் தித்திப்பு தான்.

மனதில் கேட்க…
• இந்த சுற்றுலாக்களுக்கு நான் செல்லலாமா?
• இனி களைகளை எப்படி பறிக்க வேண்டும் என்பதை பிறருக்கு சொல்லி கொடுக்கலாமா?

மனதில் பதிக்க…
ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துள்ளோர் சீயோன் மலைபோல் என்றும் அசையாது இருப்பர்(திபா 125:1)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எரேமியா 7: 1 – 11
"இது ஆண்டவரின் கோவில்"

இறைவாக்கினர் எரேமியா, ஆண்டவருடைய வார்த்தையை துணிவோடு அறிவித்த நிகழ்வு இன்றைய வாசகமாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இஸ்ரயேல் மக்களுக்கு எருசலேம் ஆலயம் என்பது முக்கியமான ஒன்று. அது ஆண்டவர் தங்கியிருக்கும் இல்லம் என்பது அவர்களுடைய ஆழமான நம்பிக்கை. ஆண்டவர் அவர்களோடு இருப்பதால், யாரும் அவர்களை அசைத்துப் பார்க்க முடியாது என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எது நடந்தாலும், "இது ஆண்டவரின் கோயில்" என்பதால், எந்த தீமையும் நெருங்க முடியாது என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களது நம்பிக்கை தவறானது அல்ல. ஆனால், அவர்களின் வாழ்க்கை முறை தவறாக இருந்தது.

அவர்கள் அநியாயம் செய்தார்கள். ஆட்சியாளர் முதல் அதிகாரத்தில் இருக்கிற கடைசிநிலை அரசு அலுவலர் வரை, ஏழை, எளிய மக்களைச் சுரண்டிப் பிழைத்தனர். அவர்கள் மீது வரிகளைச் சுமத்தி நசுக்கினர். நீதி விலைக்கு வாங்கப்பட்டது. ஆண்டவர்க்கு விரோதமான வாழ்க்கை முறையை வாழ்ந்தனர். இவ்வளவு வாழ்ந்து விட்டு, "இது ஆண்டவரின் கோயில்" என்று, தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர். இப்படிப்பட்ட நிலையில் தான், எரேமியா இறைவாக்கு உரைக்கின்றார். மக்கள் தங்களது தவறான வழிகளினின்று திரும்பி ஆண்டவரிடம் வர வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆண்டவரின் கோயில் என்று சொல்லி பயன் இல்லை. ஏனென்றால், அதுவே அவர்களுக்கு வினையாக முடியும். இப்படிப்பட்ட கேவலமான வாழ்வை வாழ்ந்து விட்டு, கடவுளை ஆலயத்தில் தேடுவது கேலிக்கூத்தானது. வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால், அவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்கிற எச்சரிக்கை இங்கே விடுக்கப்படுகிறது.

நாமும் தவறுகளுக்கு மேல் தவறு செய்துவிட்டு, நாங்கள் ஆலயத்திற்குப் போகிறோம், நேர்ச்சைகளை செய்கிறோம், எனவே, கடவுள் நம்மை மன்னித்து விடுவார் என்கிற தவறான எண்ணம் கொண்டிருக்கிறவர்களாக இருக்கக்கூடாது. நல்ல வாழ்க்கை முறையை வாழ வேண்டும். அதுதான் கடவுள் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது. அந்த வாழ்க்கை முறையை நாம் வாழ்வதற்கு முயற்சி எடுப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

நல்ல சிந்தனைகள்

வாழ்க்கை என்பது கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற நிலம். நிலம் பலனைக் கொடுக்க வேண்டும் என்று தான், நாம் எதிர்பார்ப்போம். அதேபோல, கடவுளும் நம்மிடமிருந்து பலனை எதிர்பார்க்கிறார். இந்த நிலத்தில் பலர் வந்து, தங்களது கருத்துக்களை, சிந்தனைகளை நாம் வாழக்கூடிய சமுதாயத்திலிருந்து விதைக்கிறார்கள். அந்த சிந்தனைகள் நல்ல சிந்தனைகளாகவும் இருக்கலாம். கெட்ட சிந்தனைகளாகவும் இருக்கலாம். ஆனால், இரண்டுபட்ட சிந்தனைகளும் நமது உள்ளத்தில் விதைக்கப்படுகிறது.

நமக்குள்ளாக விதைக்கப்படுகிற விதைகளில், களைகளும் காணப்படுகின்றன. அந்த களைகளை நாம் அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை கவனமாகப் பிடுங்கி எறிய வேண்டும். நமக்குள்ளாக விதைக்கப்படுகிற விதைகளை நாம் வடிகட்ட வேண்டும். நல்ல சிந்தனைகளையும், கெட்ட சிந்தனைகளையும் தரம் பிரிக்க வேண்டும். நல்ல சிந்தனைகளை நமது உள்ளத்தில் இன்னும் ஆழமாக வேரூன்றும் வண்ணம், தொடர்ந்து சிந்தித்து தெளிவு பெற வேண்டும். கெட்ட சிந்தனைகளை நம்முடைய சிந்தனைகளின் நினைவிலிருந்து முற்றிலுமாக அகற்ற வேண்டும்.

வாழ்வின் வெற்றி பெறுவதற்கான வழி, நமது சிந்தனைகளை நாம் காவல் காப்பதுதான். நல்ல சிந்தனைகள் என்றால், அவற்றை நாம் அனுமதிக்க வேண்டும். கெட்ட சிந்தனைகள் என்றால், நாம் தூக்கி எறிய வேண்டும். நல்ல சிந்தனைகளைக் கொண்டு, வாழ்வில் வெற்றி பெற, உறுதி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------

பொறுமை காப்போம்

களைகள் பற்றிய இந்த உவமை நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தருகிறது. 1. இறையாட்சியில் இருக்கிறவர்களையும், இல்லாதவர்களையும் நாம் அடையாளம் கண்டுபிடிப்பது வெகு கடினம். யார் நல்லவர்கள், கெட்டவர்கள் என்பது நம்மால் கண்டுபிடிக்க முடியாது. நல்லவர்கள் போல இருந்து கெட்டது செய்கிறவர்கள் இந்த உலகத்தில் அதிகம் பேர் இருக்கிறார்கள். இந்த உண்மையை அறிந்திருந்தும் பல வேளைகளில் நாம் மற்றவர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று தவறாக தீர்ப்பிட்டு விடுகிறோம். மற்றவர்களிடம் பழகுவதிலும், நெருங்குவதிலும் பொறுமையும், அறிவும் தேவை.

2. தீர்ப்புநாள் உடனடியாக, திடீரென்று வருகின்ற நாள் அல்ல. தாமதமாகலாம், ஆனால் கட்டாயம் வரும். நேர்மையாளர்கள் இந்த உலகத்தில் கஷ்டப்படுவது போலவும், அநியாயம் செய்கிறவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வது போலவும் ஒரு தவறான தோற்றம் இந்த உலகத்தில் நிலவுகிறது. தீர்ப்பு வரவே வராது என்ற பொய்யான தோற்றமும் இந்த உலகத்தில் நிலவுகிறது. ஆனால், தாமதமானாலும், தீர்ப்பு நிச்சயம் வரும். நேர்மையாளர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். அநியாயம் செய்கிறவர்கள் தண்டிக்கப்படுவார்கள். பொறுமையாக தீர்ப்புக்காக காத்திருப்போம்.

3. தீர்ப்பிடுவது இறைவன் மட்டும்தான் இருக்க வேண்டும். அவர் மட்டும் தான் உள்ளத்தையும் ஊடுருவக்கூடிய ஆற்றல் பெற்றவர். மனிதர்களாகிய நாம் ஒரு மனிதனின் வெளிப்புற செயல்பாடுகளை வைத்து தீர்ப்பிடுகிறோம். ஆனால், கடவுள் அனைத்தையும் அறிந்தவராக இருக்கிறார். எனவே, கடவுளின் தீர்ப்பிற்காக நாம் காத்திருக்க வேண்டுமே தவிர, நமது வாழ்வில் நாம் யாரையும் தீர்ப்பிடக்கூடாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

எருசலேம் கோவிலின் முன்பு எரேமியாவின் மறையுரை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எருசலேம் கோவிலின் முன்பாக நின்று, கோவிலுக்கு வருவோர் போவோர் அனைவரின் காதுகளிலும் விழும்படி எரேமியா உரைத்த இந்த இறைவாக்கு, ஆண்டவர் இயேசு எருசலேம் கோவிலைத் தூய்மைப்படுத்தி, வணிகர்களை விரட்டியடித்த நிகழ்ச்சியின் முன்னோடியாகத் திகழ்கிறது. வியத்தகு முறையில், உங்கள் பார்வையில் இக்கோவில்  “கள்வர் குகை” ஆக மாறிவிட்டது என்னும் வார்த்தைகளை எரேமியா முழங்கும்போது, இயேசு சொன்ன வார்த்தைகள் நம் நினைவுக்கு வருகின்றன. ஆண்டவர் ஆணையிட்டபடியே எரேமியா கோவிலின் வாயிலில் நின்றுகொண்டு இறைவாக்கு உரைக்கிறார். உண்மையான வழிபாடு என்ன என்று தெளிவுபடுத்துகிறார். நேர்மையற்ற, எளியோரை ஒடுக்குகின்ற, சிலை வழிபாடு செய்கின்ற மக்கள் செய்யும் வழிபாட்டை இறைவன் ஏற்க மறுக்கிறார். அந்த வழிபாடு தரும் பாதுகாப்பையும் கேள்விக்குட்படுத்துகிறார்.

காலங்கள் மாறிவிட்டன. ஆனால், காட்சிகள் மாறவில்லை. எரேமியாவின் காலத்தைப் போலவே, இயேசுவின் காலத்திலும் மக்கள் கோவிலைக் “கள்வரின் குகை”யாக்கினர். நமது காலத்திலும் நாமும் இறைவனின் வழிபாட்டுத் தலங்களை வாணிகக் கூடங்களாகவும், கள்வரின் குகைகளாகவும் மாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். நமது வழிபாடுகளைக் கொஞ்சம் ஆய்வு செய்து, நமது தவறுகளைத் திருத்திக்கொள்ள அழைப்பு விடுக்கிறார் எரேமியா.

மன்றாடுவோம்: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உயிருள்ள கோவிலில் வாழும் நீர், எங்கள் வழிபாடுகளை நேர்மையுடையதாக்க அழைக்கிறீர். நன்றி கூறுகிறோம். உமது ஆலயத்துக்கு வரும்போதெல்லாம், எங்களைத் தூய்மைப்படுத்திக்கொள்ள அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

'ஐயா, நீர் உம் வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி?' (மத்தேயு 13:28)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நிலத்தில் பயிரேற்ற விரும்புகின்ற உழவர் நல்ல விதைகளைக் கவனமாகத் தேர்ந்தெடுப்பது வழக்கம். நல்ல தரமான விதையாக இருந்தால்தான் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது அவர் எதிர்பார்ப்பு. நல்ல விதைகளை நிலத்தில் தூவிய பின்னர், அவ்விதைகள் நிலத்தில் வேரூன்றி, பயிர் முளைத்து, வளர்ந்து பலன் தரும் என்று காத்திருக்கின்ற வேளையில் நல்ல பயிரின் ஊடே களைகளும் தோன்றிவிட்டன, நல்ல விதை நம் இதயத்தில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற நல்ல சொற்கள், நல்ல செயல்கள் ஆகியவற்றைக் குறிக்கின்றன என வைத்துக்கொள்வோம். அதே நேரத்தில் நம் உள்ளத்தில் களை போலத் தோன்றுகின்ற தீய சிந்தனைகள், அவற்றிலிருந்து பிறக்கின்ற தீய சொற்கள், தீய செயல்கள் ஆகியவையும் நம் வாழ்வில் இருக்கத்தான் செய்கின்றன. இதை எப்படி விளக்குவது? கடவுளின் கைகளிலிருந்து நல்லதாகப் பிறந்த இவ்வுலகில் தீமை புகுந்தது எப்படி? இக்கேள்விக்குப் பதில் தேடுகின்ற முயற்சி பல நூற்றாண்டுகளாகவே நிகழ்ந்து வருகிறது.

-- கிறிஸ்தவ சமயம் இக்கேள்விக்குத் தருகின்ற பதில் என்ன? தீமை இவ்வுலகில் தோன்றுவதற்குக் காரணம் தொடக்க காலத்தில் மனித வரலாற்றில் நுழைந்துவிட்ட பாவம்தான். முதல் மனிதர் கடவுளுக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர்கள் வழியாகப் பாவம் உலகில் நுழைந்து வரலாற்றில் எல்லா மனிதர்களையும் பாதித்துவிட்டது. உலகில் நிலவும் பாவம் மனித உள்ளத்தில் பாவ நாட்டமாகத் தோன்றுகிறது; மனிதருக்கும்; கடவுளுக்குமிடையே உள்ள உறவினை முறிக்க பாவம் முயல்கிறது. என்றாலும், அறுவடைக் காலத்தில் நல்ல பயிரும் களைகளும் அடையாளம் காணப்பட்டு நல்ல பயிர் களஞ்சியத்தில் சேர்க்கப்பட, களை தீயிலிட்டு எரிக்கப்படுவது போல, மனித வரலாற்றின் இறுதியில் பாவம் என்னும் தீமையும் அதன் விளைவுகளும் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு, நன்மை வெற்றி பெறும். நன்மையே உருவான கடவுள் நம்மைத் தம்மோடு நிலையான அன்புறவில் இணைத்துக்கொள்வார். கிறிஸ்துவின் சிலுவைச் சாவினால் நாம் புத்துயிர் பெற்று, நல்ல பயிரைப் போல நற்பயன் நல்குவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் உமது வார்த்தையாகிய நல்ல விதையைப் பெற்றுக்கொண்ட நாங்கள் வளர்ந்து, முதிர்ந்து உலகின் வாழ்வுக்காக நற்பயன் நல்கிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

உடனே செய்

செய்யவேண்டிய நற்செயலை உடனே செய்யவேண்டும். காலத்தைக் கடத்தக்கூடாது. இதுபோன்ற நேரங்களில் தூங்குவது அதைவிட மோசமானது.தூங்குவது தவறல்ல. ஆனால் தூங்கக்கூடாத நேரத்தில் தூங்குவதால் இழப்புகள் பெரிது. தூங்கிக் கெடுத்தவர்கள் நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார். இத்தகைய தூக்கம் சோம்பேரித்தனம் ஆகும். அது சாத்தானின் அழிவுக்குறிய ஆயுதத்தொழிற்சாலை.

நற்செய்தியில் வரும் வேலையாட்கள், விதையை விதைத்துவிட்டு தூங்கச்சென்றுவிட்டனர். அதைக் கவனிக்கவில்லை. தண்ணீர் பாய்க்கவில்லை, உரமிடவில்லை, மருந்து தெளிக்கவில்லை. வரட்சியும் வலுவின்மையும் வியாதியும் பயிரைப் பாதித்ததால் களைகள் வளர வாய்ப்பாகிவிட்டது. திருமுழுக்குப் பெற்றுவிட்டோம், அருள்வாழ்வு கிடைத்துவிட்டது என்று, தொடர்ந்து அதைக் காப்பாற்ற, வளர்க்க முயற்சி செய்யவில்லை என்றால், அலகையின் ஆதிக்கம் அதிகரிக்கும்.

வேலை செய்யவேண்டிய நேரத்தில் தூங்கிவிட்டு களைகள் பெருகிய பின் |அப்டபாடோ ஐய்யோடா| என்று கூப்பாடு போடுவது அறிவீனம். அதன் பின் களைகளைப் பிடுங்க முயற்சிப்பது மதியீனம். அது பயிரை அழிக்கும் செயல்.

கொடுத்த காலத்தை நீ சரியாக, உடனே பயன்படுத்தவில்லை என்றால் கடைசி காலம்வரைக் காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே செய்யவேண்டிய நற்செயலை உடனே செய்.

நான் காலத்தைக் கடத்த மாட்டேன். உடனே செய்வேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்