முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 13: 1-11

ஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: ``நீ உனக்காக நார்ப் பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக்கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.'' ஆண்டவர் சொற்படி நான் கச்சையை வாங்கி அதை என் இடையில் கட்டிக்கொண்டேன். எனக்கு ஆண்டவர் வாக்கு இரண்டாம் முறை அருளப்பட்டது: ``நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக்கொள்: எழுந்து பேராத்து ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்து வை.'' ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டபடி நான் சென்று பேராத்தில் அதனை மறைத்து வைத்தேன். பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: ``எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.'' அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்து வைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது. அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ``ஆண்டவர் கூறுவது இதுவே: இவ்வாறே யூதா, எருசலேமின் ஆணவத்தை அழிப்பேன். என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப் பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள். கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவிசாய்க்கவில்லை" என்கிறார் ஆண்டவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

இச 32: 18-19, 20-21

பல்லவி: உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்.

18 `உன்னை ஈன்ற பாறையைப் புறக்கணித்தாய்; உன்னை உருவாக்கிய கடவுளை மறந்துவிட்டாய்'.
19 தம் மைந்தரும் தம் மகளிரும் தமக்குச் சினமூட்டியதை, ஆண்டவர் கண்டு அவர்களை இகழ்ந்து ஒதுக்கினார். பல்லவி

20 அவர் உரைத்தார்: எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்;
அவர்களது முடிவு என்னவென்று நான் கவனித்துக் கொள்வேன்;
ஏனெனில், அவர்கள் கேடுகெட்ட தலைமுறையினர்; நேர்மை அறவே அற்ற பிள்ளைகள். பல்லவி

21 இல்லாத தெய்வத்தால் எனக்கு எரிச்சலூட்டினர்;
அவர்களின் சிலைகளால் எனக்கு சினமூட்டினர்;
ஒன்றுமில்லாத இனத்தால் அவர்களுக்கு எரிச்சலூட்டுவேன்;
மதிகெட்ட வேற்றினத்தால் அவர்களுக்குச் சினமூட்டுவேன். பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள் ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார். அல்லேலூயா.

மத்தேயு 13:31-35

பொதுக்காலம் 17 வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35

அக்காலத்தில் இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: ``ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.'' அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: ``பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.'' இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. ``நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்'' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

கடுகு, புளிப்பு மாவு : தைரியம் தரும் தைலங்கள்
மத்தேயு 13:31-35

மனிதர்களுக்கான பல பிரச்சினைகளில் தாழ்வு மனப்பான்மை என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. தாழ்வு மனப்பான்மை என்பது நான் சிறியவன், சிறந்தவன் அல்ல என்பதிலிருந்து உதயமாகிறது. இந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களுக்கு தைரியம் கொடுக்கும் தைலமாக வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

கடுகு உருவில் சிறியது ஆனால் சிறந்தது என்பதை தன் வாழ்க்கையில் எடுத்துக் காட்டுகின்றது. கடுகு தனக்குள்ளே இருக்கும் சக்தியை உணா்ந்ததால் வானத்துப் பறவைகள் தங்கும் அளவுக்கு தன்னுடைய பிரம்மாண்டமான சக்தியை அந்த சிறிய விதை வெளிக்கொணர்கின்றது.

புளிப்பு மாவு கண்ணுக்கு புலப்படாதது. ஆனால் சிறந்தது என்பதை தன் வாழ்க்கையில் எடுத்துக் காட்டுகின்றது. மாவு முழுவதையும் புளிப்பேற்றும் தன்னுடைய பிரம்மாண்டமான சக்தியை வெளிப்படுத்துகின்றது.

நமக்குள்ளே கடவுள் கொடுத்த பிரம்மாண்டமான சக்தி இருக்கிறது. அதை கண்டுபிடிப்போம். அதை உசுப்பிவிடுவோம். மிகவும் சிறியவைகள் இப்படி செய்கிறது என்றால் ஏன் நம்மால் செய்ய முடியாது? எல்லாமே முடியும். நம்மை ஆட்டிப்படைக்கும் தாழ்வு மனப்பான்மையை தரை மட்டமாக்குவோம். தரணி எங்கும் நம் ஆற்றலை பரப்பி விடுவோம்.

மனதில் கேட்க…
• கடுகு, புளிப்பு மாவு தரும் தைரியம் என்ற தைலத்தை தடவிக்கொள்ளலாமா?
• எனக்குள் இருக்கும் பிரம்மாண்டமான சக்திகள் என்னென்ன?

மனதில் பதிக்க…
என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன். மதிப்புமிக்கவன். நான் உன் மேல் அன்பு கூர்கிறேன்(எசா 43:4)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எரேமியா 13: 1 – 11
இறைவழியில் நடப்போம்

தவறான நடத்தை ஒருவரை அழிவுக்கு அழைத்துச் செல்லும் என்பதை, இன்றைய வாசகம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. கடவுள் இஸ்ரயேல் மக்களை தன் சொந்த மக்களாக தேர்ந்தெடுத்திருக்கிறார். அவர்களை கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுக்கிறார். அவர்கள் வழியாக இந்த உலகத்திற்கு மீட்பு கொண்டு வர வேண்டும் என்பதே, இறைத்தந்தையின் விருப்பமாக இருக்கிறது. தன்னுடைய எண்ணம் நிறைவேறுவதற்கு இஸ்ரயேல் மக்களின் ஒத்துழைப்பு அவசியமானதாக இருக்கிறது. அவர்களும் கடவுளுக்கு பிரமாணிக்கமாக இருக்கிறார்கள். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, அவர்களது வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட தொடங்குகிறது.

கடவுள் பயம் அவர்களிடத்தில் குறையத் தொடங்குகிறது. கடவுள் பயம் என்பது கடவுளைப் பார்த்து பயப்பட வேண்டும் என்கிற எண்ணமல்ல. மாறாக, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற செயல்பாடு. கடவுள் பொறுமையாக இருக்கிறார். எப்படியும் அவர்கள் தன்னிடத்தில் திரும்பி வருவார்கள் என்கிற எதிர்பார்ப்போடு இருக்கிறார். ஆனால், அவர்கள் கடவுளை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருக்கிறார்கள். கடவுள் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார். எனவே, அவர்களுக்கு நடக்க இருப்பதை, காட்சி வழியாக, இறைவாக்கினருக்கு விளக்கி, இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிக்கச் செய்கிறார். இது இஸ்ரயேல் மக்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்ல, மாறாக, அப்படியாவது அவர்கள் திருந்தி, தன்னிடம் திரும்பி வர மாட்டார்களா? என்பதற்காகத்தான். தான் இஸ்ரயேல் மக்கள் மீது வைத்திருந்த எதிர்பார்ப்பையும், அவா்கள் வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றதையும் அவர் எடுத்துரைக்கிறார். அதற்காக வருத்தப்படுகிறார். அவர்களை தன்னிடத்தில் திரும்பி வருவதற்கு அழைப்புவிடுக்கிறார்.

இறைவன் எப்போதும் அவருடைய பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். அவருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்று விரும்புகிறார். இறைவன் நம் மீது காட்டும் அன்புக்கு, குறைந்தபட்சம், அவருடைய கட்டளைகளை மதித்து நடப்பதற்கு நாம் முயற்சி எடுக்க வேண்டும். அவரது வழியில் நடப்பதற்கு நாம் முனைப்புகாட்டுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------


புளிப்பு மாவு

இயேசுவின் மிகப்பெரிய பலமாகச் சொல்லப்படுவது, அவருடைய எளியநடை மற்றும் எளிய கருத்துக்கள். அதிலும் சிறப்பாக மக்கள் வாழ்க்கை நிலையோடு இணைந்து செல்லக்கூடிய உருவகங்களைப் பயன்படுத்தி, அவர் வெளிப்படுத்தும் கருத்தாழமிக்கச் சிந்தனைகள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது. உதாரணமாக, விதைப்பவர் உவமையை விவசாயின் வாழ்க்கையிலிருந்து எடுத்துச்சொல்கிறார். அவர்கள் அன்றாடம் தாங்கக்கூடிய வேதனையை, களைகள் உவமையில் எடுத்துக்காட்டுகிறார். மீனவர்கள் அதிகம் வாழக்கூடிய பகுதிகளில் வலை உவமையை எடுத்துரைக்கிறார். வணிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்ற முத்தைப்பற்றி, முத்து உவமையில் பேசுகிறார். அந்த வரிசையில், மக்களின் அன்றாட உணவான அதிலும் குறிப்பாக சாதாரண மக்களின் உணவுமுறையான புளிப்பு மாவையும், இறையாட்சிக் கருத்துக்களை வெளிப்படுத்த பயன்படுத்துகிறார்.

யூதர்கள் புளிப்புத்தன்மையை தீயதாகப்பார்த்தனர். மத்தேயு 16: 6 ல் இயேசு பரிசேயரையும், சதுசேயரையும் புளிப்பு மாவுக்கு ஒப்பிடுகிறார். அவர்களிடத்தில் கவனமாக இருப்பதற்கு எச்சரிக்கை விடுக்கிறார். இத்தகைய புளிப்பு மாவை இயேசு இறையாட்சியோடு ஒப்பிடுவது உண்மையில் பலருக்கு இடறலாக, கோபமாக இருந்திருக்கலாம். புனிதமானது என்று கருதப்படும் இறையாட்சியை, தீயது என்று சொல்லப்படும் புளிப்பு மாவோடு இயேசு எப்படி ஒப்பிடலாம்? என்பதுதான் அவர்கள் உள்ளத்தில் கேள்வியாக எழுந்திருக்கும். ஆனால், இயேசு இங்கே சொல்ல வருவது, புளிப்புத்தன்மை மாவு முழுவதையும் புளிப்பாக்கிவிடுகிறது. மாவு முழுவதின் தன்மையையும் மாற்றிவிடுகிறது. அதே போல, இறையரசின் வருகை நமது வாழ்வை முற்றிலுமாக மாற்ற வேண்டும்.

இன்றைக்கு கிறிஸ்து இயேசுவில் நாம் வாழக்கூடிய நமது வாழ்வு, மற்றவர்களின் வாழ்வை புரட்டிப்போடுகின்ற அளவுக்கு மாற்றம் பெறத்தக்க வகையில் வாழப்பட வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. எத்தகைய காரணத்தைக்கொண்டும், மற்றவர்களுக்கு இடறலான வாழ்வாக அமையக்கூடாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

உண்மையும், பிரமாணிக்கமும் உள்ளவர்களாக…….

இஸ்ரயேல் மக்கள் மத்தியில் மோசே மிகப்பெரிய இறைவாக்கினராகக் கருதப்பட்டார். அவருக்கு மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு இருந்தது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவைப் புதிய மோசேயாக அறிமுகப்படுத்துவதை அவருடைய நற்செய்தியில் நரம் பார்க்கலாம். மோசேயின் குழந்தைப்பருவ நிகழ்ச்சிகளை இயேசுவின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளோடு ஒப்பிடுவதிலும் சரி, பத்து கொள்ளை நோய்களுக்கு மாற்றாக, இயேசு செய்த அற்புதங்களும் சரி, இயேசு “புதிய மோசே“ என்ற சிந்தனையை, மத்தேயு நற்செய்தியாளர் ஆணித்தரமாகத் தருகிறார்.

இந்த வரிசையில் பழைய ஏற்பாட்டை முழுமையாக்கவும், நிறைவேற்ற வந்தவராகவும் இயேசுவை அவர் சித்தரிக்கிறார். எனவே தான் மத்தேயு நற்செய்தியில் “இவ்வாறு மறைநூல் வாக்கு நிறைவேறியது” என்ற சொல்லாடல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களால் முன்சொல்லப்பட்டதை இயேசு எவ்வாறு நிறைவேற்றுகிறார் என்ற பாணியில், மத்தேயு நற்செய்தியாளர் உண்மையில் அதிக சிரத்தை எடுத்து தனது நற்செய்தியை எழுதியிருக்கிறார். மத்தேயுவின் இந்த நற்செய்தி நமக்கு தரும் செய்தி, கடவுள் தனது வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற கடவுளாக இருக்கிறார் என்பதுதான். கடவுள் தான் இறைவாக்கினர் வாயிலாகச் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளையும் காலம் கனிகிறபோது நிறைவேற்றுகிறார்.

இறைவன் வாக்குறுதி மாறாதவர். அவர் தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமும், உண்மையும் உள்ளவராய் இருக்கிறார். அந்த வகையில் நாம் எந்த அளவுக்கு கடவுளிடம் கொடுத்த  வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கத்தோடு நடக்கிறோம் என சிந்திப்போம். எத்தனையோ வாக்குறுதிகளை கடவுளின் திருமுன்னிலையில் கொடுக்கிற நாம் அதற்கு உண்மையாக நடக்கிறோமா? சிந்திப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நார்ப்பட்டுக் கச்சையின் அடையாளம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியாவை அடையாள முறையில் இறைவாக்குரைக்கப் பணிக்கிறார் ஆண்டவர். இஸ்ரயேல் மக்கள் ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்ந்தவரை, நலமோடும் வளமோடும் வாழ்ந்தார்கள். ஆனால், இறைவனைவிட்டுப் பிரிந்து, பேராத்து (யூப்ரடீஸ்) ஆற்றின்கரை வரை புலம் பெயர்ந்து, பிற இனத்தாரின் பழக்கவழக்கங்களை ஏற்று, அவர்களின் தெய்வங்களை வழிபடத் தொடங்கினர். எனவே, எரேமியா ஓர் அடையாளச் செயலைச் செய்கிறார்.

நார்ப்பட்டுக் கச்சை ஒன்றைச் செய்து, அதனை யூப்ரடீஸ் ஆற்றின் படுகையில் புதைத்து வைக்கிறார். சில நாள்கள் கழித்து, அதனை மீண்டும் எடுத்துப் பார்த்தபோது, அது ஒன்றுக்கும் உதவாத வகையில் இற்றுப்போயிருந்தது. இஸ்ரயேல் மக்களும் இவ்வாறே இற்றுப்போயினர் என்கிறார் ஆண்டவர். நமது வாழ்விலும் நாம் நவீன உலகின் ஆடம்பரங்கள், கலாசாரத்தில் மூழ்கி இறைவனை மறந்தால், நாமும் இற்றுப்போய்விடுவோம் என்று எச்சரிக்கிறார் எரேமியா. கவனமுடன் செவிமடுப்போம்.

மன்றாடுவோம்: எங்களை உமது கச்சை போல அழகுபடுத்தும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உம்மை விட்டுப் பிரிந்து, நாங்கள் இற்றுப்போகாதபடி உமது வார்த்தையாலும், திருவிருந்தாலும் எங்களை வலிமைப்படுத்துவீராக.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

கடுகு விதையும், புளிப்பு மாவும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இந்த உலகில் என்னால் எந்த மாற்றமும் செய்ய முடியாது என்ற சலிப்போ, விரக்தியோ உங்களுக்கு எப்போதேனும் ஏற்பட்டதுண்டா? வாருங்கள், ஆறுதல் கொள்வோம். நமக்காகத்தான் இயேசு இந்த உவமையைச் சொல்லியிருக்கிறார். கடுகு விதை எவ்வளவு சிறியது. ஆனாலும், அது வளர்ந்து பெரிய மரமாகிறது. வானத்துப் பறவைகளுக்கு நிழல் தருகிறது.

புளிப்பு மாவின் அளவு சிறியது. இருப்பினும், மாவு முழுவதையும் அது புளிப்பேற்றுகிறது. அதுபோலத்தான், ஒவ்வொரு சிறிய செயலும், ஒவ்வொரு சிறிய சொல்லும். அவை மௌனமாக இந்த உலகின்மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

நாமும் அப்படித்தான். ஒவ்வொரு சிறிய செயல், ஒரு புன்னகை, ஒரு பாராட்டு வார்த்தை, ஒரு அன்பான தொடுதல்... இவற்றின் வழியாக ஒரு சில மனிதர்களின் வாழ்வைத் தொட முயற்சிப்போம். இறுதியில், ஏராளமான மனிதர்கள் தொடப்படுவார்கள். இந்த உலகம் இறைவன் வாழும் இனிய பூமியாக மாறும்.

இன்றைய நாளில் ஒரு சிறிய முயற்சி எடுப்போமா?

மன்றாடுவோம்; இறையாட்சியின் வேந்தனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். இந்த நாளை ஆசிர்வதித்துத் தாரும். இந்த நாள் முழுவதும் எனது ஒவ்வொரு செயலும், சொல்லும், புன்னகையும், ஊக்க மொழிகளும் இந்த உலகிற்கு விண்ணரசின் மதிப்பீடுகளை அறிவிக்கட்டும். நானும் ஒரு நற்செய்தியாளனாக இன்று முழுவதும் வாழ்வேனாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

''இயேசு, 'ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார்...
விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்' என்றார்'' (மத்தேயு 13:31-32)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இறையாட்சி என்றால் என்னவென்பதை மக்களுக்கு விளக்கிக் கூற இயேசு பயன்படுத்திய ஓர் உருவகம் கடுகு விதை ஆகும். சிறியதொரு கடுகு விதை பெரியதொரு மரமாக வளர்ந்து ஓங்கும் எனவும் இறையாட்சியும் அவ்வாறே சிறிய அளவில் தொடங்கி மாபெரும் அரசாக உருப்பெறும் எனவும் இந்த உவமைக்குப் பொதுவாக விளக்கம் தரப்படுவதுண்டு. ஆனால் இயேசுவின் உவமைகளில் எதிர்பாராத திருப்பங்கள் வரும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த உவமையைப் புரிந்துகொள்ள வேண்டும் என அறிஞர் கூறுவர். இந்த உவமையின் பின்னணி பழைய ஏற்பாட்டில் உள்ளது. அங்கே எசேக்கியேல் இறைவாக்கினர் வானளாவ வளர்கின்ற கேதுரு மரம் பற்றிப் பேசுகிறார் (காண்க: எசே 17; 31). அதுபோலவே தானியேல் நூலிலும் மிக உயர்ந்து வளர்ந்த வலிமை மிக்க மரம் பற்றிப் பேசப்படுகிறது (காண்க: தானி 4:10-15). மிக உயர்ந்து வளர்ந்த அந்த மரங்களைப் போல கடுகுச் செடி ஒருநாளும் வளர இயலாது. இறையாட்சியைப் புகழ்மிக்க கேதுரு மரத்திற்கு ஒப்பிடாமல் மிகச் சாதாரணமான தோட்டப் பயிரான கடுகுச் செடிக்கு இயேசு ஒப்பிடுகிறார். இது வலிமை மிக்கதோ வானளாவ உயர்வதோ அல்ல. ஆனால் இயேசுவில் நம்பிக்கை கொள்வோரின் வாழ்வில் அதிசயமான மாற்றம் நிகழும். அவர்கள் ஒரு புதிய நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இந்த மாபெரும் மாற்றம் நம்மில் நிகழ வேண்டும் என்றால் நாம் இயேசுவிடத்தில் முழுமையான நம்பிக்கை கொண்ட மக்களாக வாழ்ந்திட வேண்டும். அப்போது நிகழ இயலாததும் நிகழும். சிறிய கடுகு விதையை மாபெரும் மரமாக வளர்ந்திடச் செய்யவும் கடவுளுக்கு வல்லமை உண்டு!

-- மேலும், கடுகுச் செடி கேதுரு மரம் போல வானத்தை நோக்கி நேராக வளர்வதல்ல. மாறாக, அதன் கிளைகள் இங்கும் அங்குமாகப் பல திசைகளில் வளர்ந்து செல்லும். பிற செடிகளின் ஊடேயும் நுழைந்து வளரும். தொடக்க காலத் திருச்சபையில் பிற இனத்தார் பலர் இயேசுவில் நம்பிக்கை கொண்டு, யூத கிறிஸ்தவர்களோடு சேர்ந்து வளர்ந்த செயல்பாடு இந்த உவமையில் உருவகமாக வெளிப்படுகிறது.

மன்றாட்டு
இறைவா, எங்கள் உள்ளத்தில் நீரே ஊன்றிய நம்பிக்கை என்னும் விதை வளர்ந்து எங்களுக்கு வாழ்வளிக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை" (மத்தேயு 13:34)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு மக்களுக்கு வழங்கிய போதனையில் பெரும்பகுதி உவமைகள் வழியாகவே வழங்கப்பட்டது என்பது உண்மை. மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய முதல் மூன்று நற்செய்தி நூல்களிலும் இயேசு கூறிய உவமைகள் பல அடங்கியுள்ளன. உவமைக்கும் கதைக்கும் இடையே சில ஒற்றுமைகளை நாம் காணலாம். ஆயினும் அவற்றிற்கிடையே பல வேற்றுமைகளும் உண்டு. இயேசு கூறிய உவமைகள் மக்களை மகிழ்விப்பதற்காகக் கூறப்பட்ட கட்டுக் கதைகளோ, கற்பனைச் சித்திரங்களோ அல்ல. இயேசுவின் உவமைகள் கடவுளாட்சி இவ்வுலகில் வருவது பற்றியும் அந்த ஆட்சியின் தன்மை பற்றியும் அமைந்திருந்தன. அன்றாட வாழ்க்கையில் மக்கள் சந்திக்கின்ற நிகழ்ச்சிகளை இயேசு கதையாக எடுத்துச் சொல்லி, அவற்றின் வழியாக மக்களுக்கு இறையாட்சி பற்றிய உண்மைகளை உணர்த்தினார். எனவே, இயேசுவின் உவமைகளைக் கேட்ட மனிதர்களை இயேசு சிந்திக்கத் தூண்டினார். கருத்தளவிலான உண்மைகளை வாழ்க்கையோடு எவ்விதத் தொடர்புமின்றி எடுத்துக் கூறுவதன்று இயேசுவின் பாணி. அவர் மக்களின் வாழ்க்கையைத் தொடுகின்ற விதத்தில், அவர்கள் எளிதாகக் கண்டுகொள்கின்ற ஆள், இடம், பொருள் போன்றவற்றை உள்ளடக்கிய கதைகளை எடுத்துச் சொன்னார். இயேசு சொன்ன உவமைகளில் சிறப்பு மிக்கவை பல உண்டு. எடுத்துக்காட்டாக, "நல்ல சமாரியர்", "காணாமற்போன மகன்" போன்ற உவமைகளைக் கூறலாம்.

-- இயேசுவின் போதனைகளில் மட்டும்தான் உவமைகள் உண்டு என்பது சரியல்ல. இயேசு புரிந்த அரும் செயல்களும் உவமைகளாக மாறின. எடுத்துக்காட்டாக, இயேசு தண்ணீரை இரசமாக மாற்றிய நிகழ்ச்சியை நம்முடைய பகுத்தறிவால் விளக்கமுடியாத ஒரு அதிசயச் செயலாக மட்டுமே பார்த்தால் அச்செயலின் உட்பொருளைக் காண நாம் தவறிவிடுவோம். யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான கல் தொட்டிகளைத் தண்ணீரால் நிரப்பி அத்தண்ணீரை இயேசு சுவையான இரசமாக்கினார். பழையன கழிந்து புதியன பிறக்கும் காலம் வந்துவிட்டது என இயேசு இச்செயல் வழியாக அறிவித்தார். இயேசுவின் வருகையால், அவருடைய போதனை மற்றும் செயல்களால் கடவுளின் ஆட்சி என்னும் புதுமை இவ்வுலகில் வரத் தொடங்கிவிட்டது என இச்செயல் காட்டுகிறது. எனவே, உவமைகள் இயேசுவின் சொல் மற்றும் செயல்களில் வெளிப்பட்டன எனலாம். இன்னும் துல்லியமாகப் பார்த்தால் இயேசுவே "கடவுளின் உவமை" என்றுகூட நாம் சொல்லலாம். அதாவது இயேசுவைப் புறக்கண்களால் மட்டுமே பார்த்தவர்கள் அவரிடத்தில் கடவுளின் வல்லமை துலங்கியதை உணரவில்லை. ஆனால், தம் அகக்கண்களைத் திறந்து, இதயக் கதவுகளை அடைத்து மூடாமல் இயேசுவை அணுகிய மக்கள் இயேசுவின் சொற்களிலும் செயல்களிலும் கடவுளின் உடனிருப்பைக் கண்டுகொண்டார்கள். அவர்கள்தான் இயேசுவை உண்மையாகவே "நம்பியவர்கள்". இவ்வாறு நம்பிக்கை கொள்ள இயேசு இன்று நம்மை அழைக்கிறார். நம்பிக்கையோடு இயேசுவை அணுகுவோர் கடவுளின் உவமையாகிய இயேசுவை அடையாளம் காண்பதோடு, அவரை நம் மீட்பராக நமக்களித்த தந்தையாம் கடவுளையும் நம்மோடு குடிகொண்டு நம்மை வழிநடத்தும் தூய ஆவியையும் அடையாளம் கண்டு, வாழ்க்கையில் அனுபவித்து உணர்வர்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் இயேசுவின் வெளித்தோற்றத்தைத் தாண்டிச் சென்று, அவர் வெளிப்படுத்துகின்ற உட்பொருளைக் கண்டுணர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

விசுவாசமே நமது வலிமை

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஒரு பெரிய காட்டைச் சுத்தம் செய்ய வெண்டும். அதில் நிறைய முட்செடிகள், புதர்கள்,குப்பைகள். "வாங்க, இவை எல்லாவற்றையும் எரிக்க சிவகாசியில் போய் நான்கு லாரி தீக்குச்சி வாங்கிவருவோம். பெரிய காடு அல்லவா, நிறைய தீக்குச்சி வேண்டுமல்லவா!" என்றேன். எல்லோரும் சிரித்தார்கள்.

ஒரு அழிக்கும் சக்திக்கு அவ்வளவு ஆற்றல் இருக்கிறது என்றால் ஒரு நல்லவனுக்கு அதே ஆற்றல் இல்லையா? இருக்கிறது. அதை அடையாளம் காணவேண்டும். அவனுக்குள் இருக்கின்ற ஆன்மீக சக்தியே அந்த ஆற்றல். இயேசுவோடு உள்ள உறவே அந்த வலிமை. நற்செய்தி காட்டும் மதிப்பீட்டின்படி வாழ்வதே அந்த சக்தி. மனிதத்தையும் மனித நேயத்தையும் மதித்துப் போற்றி வாழ்வதே அந்த வல்லமை. உண்மைக்காக, நீதிக்காக போராடும் உணர்வே அந்த பலம். இது ஒரு கடுகளவு இருந்தால்போதும் அதன் தாக்கம் ஒரு பெரிய ஆல மரத்தின் கிளைபோல பரந்து விரிந்து பல பறவைகள் தங்குவதற்கும் பல விலங்குகள் ஒதுங்குவதறகும் ஏற்ற இடமாகிறது.

நாம் பெற்றுள்ள ஆற்றல் அவ்வளவு வலிமை வாய்ததது என்பதால், அது அளவில் மிகச் சிறியதாயினும், எண்ணிக்கையில் மிகக் குறைந்ததாயினும்,கொஞ்சம் புளிப்புமாவு, மாவு முழுவதும் புளிப்பேற்றுவதுபோல் உலகின் எல்லா இடங்களிலும் எல்லா சூழலிலும் வாழ்வுக்குச் சுவையூட்டக்கூடியது.

எனவே,நாங்கள் கொஞ்சம் பேர். நான் ஏழை. நான் படிக்காதவன். நான் சிறியவன் என்றெல்லா காரணம் கூறுவது விசுவாச வாழ்வின் வல்லமையை உணராமை. கடுகு சிறிதாயினும் காரம் குறையாது. கடுகளவு விசுவாசம் இருந்தாலும்போதும் மலையையும் நகர்த்தலாம்.

இந்த வல்லமை உன்னிடம் உள்ளது. உலகை உருவாக்கு.

--அருட்திரு ஜோசப் லீயோன்