முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 14: 17-22

ஆண்டவர் எரேமியாவுக்குக் கூறியது: நீ அவர்களுக்கு இந்த வாக்கைக் கூறு: என் கண்கள் இரவு பகலாகக் கண்ணீர் சொரியட்டும்; இடைவிடாது சொரியட்டும்; ஏனெனில் என் மக்களாம் கன்னி மகள் நொறுங்குண்டாள்; அவளது காயம் மிகப் பெரிது. வயல்வெளிகளுக்குச் சென்றால், இதோ! வாளால் மடிந்தவர்கள்! நகரில் நுழைந்தால், இதோ! பசியால் நலிந்தவர்கள்! இறைவாக்கினரும் குருக்களும் தங்களுக்கு முன்பின் தெரியாத நாட்டில் அலைகின்றனர். நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா? சீயோனை உம் உள்ளம் வெறுத்துவிட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்; பயனேதும் இல்லை! நலம் பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்; பேரச்சமே மிஞ்சியது! ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம். உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்; உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்; நீர் எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்; அதனை முறித்துவிடாதீர். வேற்றினத்தாரின் தெய்வச் சிலைகளுள் மழை தரவல்லது எதுவும் உண்டா? வானங்கள் தாமாக மழை பொழிய முடியுமா? எங்கள் இறைவனாகிய ஆண்டவரே, நீர் அல்லவா அதைச் செய்யக்கூடியவர்; நாங்கள் உம்மையே எதிர்நோக்கியுள்ளோம்; ஏனெனில், இவற்றை எல்லாம் செய்பவர் நீரே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 79: 8. 9. 11,13

பல்லவி: ஆண்டவரே, எங்கள் பாவங்களை மன்னித்தருளும்.

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்!
உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக!
நாங்கள் மிகவும் தாழ்த்தப் பட்டிருக்கின்றோம். -பல்லவி

9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்;
உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்;
எங்கள் பாவங்களை மன்னித்தருளும். -பல்லவி

11 சிறைப்பட்டோரின் பெருமூச்சு உம் திருமுன் வருவதாக!
கொலைத் தீர்ப்புப் பெற்றோரை உம் புயவலிமை காப்பதாக.
13 அப்பொழுது உம் மக்களும், உமது மேய்ச்சலின் மந்தையுமான நாங்கள் என்றென்றும் உம்மைப் போற்றிடுவோம்!
தலைமுறைதோறும் உமது புகழை எடுத்துரைப்போம். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! இறைவனின் வார்த்தையே விதையாம், அதை விதைப்பவர் கிறிஸ்துவே; அவரைக் கண்டடைபவர் எல்லாம் என்றென்றும் நிலைத்திருப்பர். அல்லேலூயா.

மத்தேயு 13:36-43

பொதுக்காலம் 17 வாரம் செவ்வாய்


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 36-43

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, ``வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்'' என்றனர். அதற்கு அவர் பின்வருமாறு கூறினார்: ``நல்ல விதைகளை விதைப்பவர் மானிட மகன்; வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின் முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும் நெறி கெட்டோரையும் ஒன்றுசேர்ப்பார்கள்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப் போல் ஒளி வீசுவர். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

எது வேண்டும்: அங்கலாய்ப்பா? ஆசீர்வாதமா?
மத்தேயு 13:36-43

"விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!. உமது ஆட்சி வருக!" என நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஜெபித்தார். தந்தையின் ஆட்சியை இம்மண்ணுலகில் நிறுவுவதே இயேசுவின் திருவுளம். தந்தையின் ஆட்சிக்கு யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் இயேசுவிடம் இருந்து பாராட்டு பெறுவர். யாரெல்லாம் இடறலாக இருக்கிறார்களோ அவர்கள் தண்டனை பெறுவர்.

அங்கலாய்ப்பா?
நம் வாழ்க்கையில் அங்கலாய்ப்பையும், அழுகையையும் உருவாக்குவது அலகையே. அலகை ஆட்சி செய்வதால் இருளிலே ஒருசிலரின் பயணம் போகிறது. குணங்களும் பேய் குணங்கள் தான் இவர்களிடம் நிறைந்து காணப்படுகின்றன. அலகையின் பிடியில் சிக்கிக்கொள்பவா்கள் கடவுளின் ஆட்சிக்கு தங்கள் பங்களிப்பை தருவதில்லை. அலகையின் விருப்பப்படி இவர்கள் ஆடுவதால் வாழ்க்கை திண்டாட்டமாகவே இவர்களுக்கு அமைகிறது.

ஆசீர்வாதமா?
கடவுளின் ஆட்சிக்கு உதவி செய்கிறவர்கள் கதிரவனைப்போல் ஒளி வீசுவர். இறைவனிடம் நெருங்கி இருப்பதால் இவர்களுக்கு ஆசீர்வாதக்கதவுகள் திறந்தே இருக்கின்றன. நற்குணங்களால் இவர்கள் பலர் வாழ்வில் வெளிச்சமாக திகழ்கின்றனர். ஆண்டவர் விருப்பப்படி இவர்கள் செயல்படுவதால் இவர்களுக்கு வாழ்க்கை என்பது கொண்டாட்டமாக அமைகின்றது.

மனதில் கேட்க…
• அழுகையும், அங்கலாய்ப்பும் எனக்கு எதற்கு?
• கடவுளின் ஆட்சிக்கு என்னுடைய பங்களிப்பை இனி நிறைவாக கொடுக்கலாமா?

மனதில் பதிக்க…
நீங்கள் உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள் (கொலோ 3:24)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எரேமியா 14: 17 – 22
இறைவனுடைய ஏக்கமும், எதிர்பார்ப்பும்

இறைவன் தன் மக்களுடைய கண்ணீரையும், துன்பங்களையும் கண்டு மனமிரங்குகிறவராக இன்றைய வாசகத்தில் நமக்கு அறிவிக்கப்படுகிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறான வாழ்க்கை முறையிலிருந்து திருந்தி வர பல வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன. அவை யாவும் அவர்களால் நிராகரிக்கப்படுகிறது. அவர்களது வாழ்க்கை முறை மிக மோசமான நிலையை அடைகிறது. அவர்களுக்கான தண்டனையை அவர்கள் நிச்சயம் அறுவடைய செய்து தான் ஆக வேண்டும் என்கிற நிலை வருகிறபோது, வேறு வழியில்லை. கடுமையாக வேற்றுநாட்டினரால் தாக்கப்படுகிறது. எங்கும் மரண ஓலம், உயிருக்கான போராட்டம் என இஸ்ரயேல் சீரழிந்தநிலையில் காணப்படுகிறது. அவர்களின் நிலைகண்டு கடவுள் துவண்டு போகிறார்.

என்னதான் ஒரு தாய் தன் அறிவுரைக்கு விரோதமாக குழந்தை சென்றாலும், அது துன்பப்படுகிறபோது நிச்சயம் அவளுடைய உள்ளம் உடைந்து போகும் தானே! அந்த நிலையில் இங்கு கடவுளும் இருக்கிறார். "என் கண்கள் இரவு பகலாக கண்ணீர் சொரியட்டும். இடைவிடாது சொரியட்டும். ஏனெனில், என் மக்களாம் கன்னிமகள் நொறுங்குண்டாள்" என்கிற வார்த்தைகள், கடவுளின் வேதனையை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கின்றது. தாங்கள்படுகிற வேதனையில், இஸ்ரயேல் மக்கள் புலம்புகிறார்கள். கடவுள் தங்களை கைவிட்டு விட்டாரோ? என்று வேதனைப்படுகின்றனர். கடவுள் தங்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் பொருட்டு, தங்கள் மீது இரக்கம் காட்ட அவர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள்.

நாம் செய்கிற தவறான செயல்களுக்கு நிச்சயம் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். திருந்துவதற்கு வாய்ப்புக்கள் தரப்படுகிறபோது, அதற்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால், இஸ்ரயேல் மக்களின் நிலை, நம் நிலையாகிவிடும். கடவுள் அன்புள்ளவர். அதேவேளையில் நாம் நன்றாக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர். அவருடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வாழ்வை நாம் வாழ முற்படுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறைவன் படைத்த உலகம்

ஒரு விவசாயி நெல்லை விதைக்கிறான். அதற்கான காரணம் என்ன? அவனுடைய நோக்கம் என்ன? நல்ல அறுவடையைப் பெற வேண்டும் என்பதுதான். நல்ல அறுவடையைப் பெறுவதற்காக அவன் அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறான். மரங்கள் செழித்து வளர்கிறது. அவைகளின் நோக்கம் என்ன? நல்ல பழங்களை மக்களுக்குக் கொடுக்கிறது. இவ்வாறு இந்த இயற்கையில் காணப்படும் அனைத்துமே, பலன் கொடுப்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது.

மனிதன் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறான். படைப்பின் சிகரமாக படைக்கப்பட்டிருக்கிறான். இந்த உலகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறான். இந்த உலகத்திற்கே கடவுள் அவனை பொறுப்பாளனாக மாற்றியிருக்கிறார். அப்படியென்றால், நாம் எந்த அளவுக்கு பலன் தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும், என்பதை உணர்த்துகின்றது இன்றைய நற்செய்தி பகுதி. இந்த உலகத்தை அழகுபடுத்துவதற்கும், அதனைப் பயன்படுத்தி இன்னும் பல சாதனைகளைச் செய்வதற்கும் கடவுள் நமக்கு படைப்பாற்றலைக் கொடுத்திருக்கிறார். ஆனால், ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இதனைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நாம் அழிவுக்கு இட்டுச்செல்லக்கூடிய காரியங்களுக்கு இந்த உலகம் என்னும் பூமியை நாம் சிதைத்துக்கொண்டிருக்கிறோம். நமது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து நாம் மீள வேண்டும்.

இந்த உலகத்தைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். நாம் இந்த உலகத்தை மாசுபடுத்தக்கூடாது என்கிற எண்ணம் நமக்கு வேண்டும். இந்த உலகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வேண்டும். இந்த உலகத்தை தூய்மையாக வைக்க நாம் என்ன செய்ய முடியுமோ, அதனைச் செய்ய உறுதி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------

வாழ்வின் சுமைகளை பொறுமையோடு எதிர்கொள்வோம்

வயலில் விளையும் களைகள் விவசாயிகளின் சாபக்கேடு. அவை வளருகிற சமயத்தில் பிடுங்கவும் முடியாமல், வளரவிடவும் முடியாமல் ஒரு விவசாயிபடுகிற துன்பத்தைச் சொல்லிமாள முடியாது. ஏனென்றால், அவைகள் தொடக்கத்தில் கோதுமைப்பயிர்களையும், களைகளையும் அடையாளம் காண முடியாதபடி உருவ அமைப்பில் ஒத்திருக்கின்றன. களைகளை சிறியதாக இருக்கிறபோது பிடுங்குவது எளிது என்றபோதிலும், இரண்டுமே ஒரே போல இருப்பதால், தவறாக கோதுமைப்பயிர்களை பிடுங்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால், இரண்டையும் வளரவிடுவார்கள்.

வளர்ந்தபிறகு கோதுமைப்பயிருக்கும், களைகளுக்கும் நல்ல வித்தியாசம் தெரியும். ஆனாலும், இப்போது களைகள் நன்றாக தனது வேரை இறுகப்பாய்ச்சிருக்கும். இப்போது களைகளைப் பிடுங்கினால், அதோடு கோதுமையும் பிடுங்கப்பட்டுவிடும். எனவே, அறுவடை நேரம் வரை காத்திருந்து, பொறுமையாகக் களைகளையும், பயிர்களையும் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். இந்த உலகத்தில் களைகள் என்று சொல்லப்படும் அலகையின் ஆதிக்கம் எப்போதும் இருக்கும். நாம் அதைப்பார்த்து பதற்றப்படத் தேவையில்லை. பொறுமையோடு, நம்பிக்கையோடு, உறுதியாக அதைத்தவிர்க்கும் மனநிலையை வளர்த்துக்கொண்டோம் என்றால், காலம் கனிகிறபோது, அதை எதிர்த்து வெற்றி பெற முடியும்.

இன்றைய தலைமுறையினர் சோதனைத்தாங்குவதற்கு திடமற்றவர்களாக இருக்கின்றனர். வாழ்க்கை எப்போதும், ஒரேமாதிரி செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். வாழ்க்கை அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாகச் செல்கிறபோது, அவர்கள் அழுது அங்கலாய்க்கின்றனர். வாழ்வை அதன் வழியில் ஏற்றுக்கொண்டு, பொறுமையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வறட்சியின்போது மன்றாட்டு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

கடும் வறட்சியின் காரணமாக இஸ்ரயேல் மக்கள் பெரிதும் துன்புற்றபோது, இறைவாக்கினர் எரேமியா அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களது குற்றத்தை உணரச் செய்தார், மீண்டும் அவர்கள் இறைவனிடம் திரும்பி வர அழைத்தார். அவரே அவர்களுக்கு செபிக்கவும் கற்றுக்கொடுக்கிறார். அந்த மன்றாட்டின் ஒரு பகுதியைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்டு, மனம் உருகுகின்றோம். அவர்கள் தங்கள் குற்றங்களையும், தமது மூதாதையரின் தீமையையும் ஏற்றுக்கொள்கின்றனர். இறைவன் வான்மழை பொழிந்து, நிலத்தைக் குளிர்விக்க வேண்டுமென்று வேண்டுகின்றனர்.

உலகம் வெப்பமயமாகும் நிகழ்வை நம் கண்களால் காணுகின்ற நாமும் எரேமியாவின் இந்த செபத்தில் பங்கேற்கும் நிலையில் உள்ளோம். நமது முன்னோர் மற்றும் நமது சொந்த தன்னலத்தின் காரணமாக இந்த உலகையும், இயற்கையையும் மாசு படுத்தி, வறட்சிக்கும், வெப்பத்திற்கும் வழிவகுத்த நாம் அதற்காக மனம் வருந்துவோம். இறைவன் மீண்டும் தமது அருளால் நிலத்தையும், வான்வெளியையும் குளிர்விக்கவேண்டுமென்று நாமும் மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: அருள் மழை பொழிகின்ற நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலகை மாசுபடுத்திய எங்கள் குற்றங்களை எல்லாம் மன்னித்து, எம்மையும் இந்த உலகையும் புதுப்படைப்பாக மாற்றியருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

களைகளின் முடிவு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தீமையையே சிந்திக்கிறவர்கள், இழிவானதைப் பேசுபவர்கள், பிறருக்குத் தீங்கு செய்வதிலேயே குறியாக இருப்பவர்கள் என்று சில  மனிதர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்டவர் இவர்களுக்குக் கொடுத்திருக்கம் பெயர்தான் களைகள். அலகை விதைக்கும் விதைகளின் விளைவுதான் களைகள். இவர்கள் தீயோனைச் சார்ந்தவர்கள் என்று இயேசு கூறுகிறார்.
 
ஆனால், களைகளைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டிய தேவையில்லை. களைகளின் முடிவு அழிவுதான். ஆனால், அதற்கு ஒரு காலம் இருக்கிறது. இறைவன் அந்தக் காலத்தை அனுமதிக்கிறார். விதைகளோடு சேர்ந்து களைகளும் வளர்கின்றன. பயிர்களைப் போலவே காட்சி தருகின்றன. எனவே, களைகளைப் பற்றிக் கவலைப்படாமல், விதைகளாய் வாழ்வோம். நம்மோடு பணியாற்றுபவர்கள் நேர்மையின்றி நடந்து, நம்மைவிட அதிக வெற்றியும், செல்வாக்கும் பெற்றுவிட்டால், அதை எண்ணிப் புலம்ப வேண்டாம். இந்த உலகில் அநீதி புரிவோர் எந்தத் தண்டனையும் இன்றி, வாழ்வை நுகர்வதைக் கண்டும் பதைபதைக்க வேண்டாம்.

காலம் வரும்போது இந்தக் களைகள் வெட்டப்பட்டு, தீயிலிடப்படும்.

மன்றாடுவோம்; வார்த்தையான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். பல நேரங்களில் பிறரோடு என்னை ஒப்பிட்டு, எனக்கு நன்மைகள் நிகழவில்லையே, தீயவர்கள் செழிக்கின்றார்களே என்று புலம்பியிருக்கிறேன். அந்த நேரங்களுக்காக மனம் வருந்துகிறேன். காலம் நிறைவுறும்போது களைகளை அகற்றி நீர் நெருப்பில் இடுவீர் என்று நம்புகிறேன். எனவே, எனது கடமைகளை நேர்மையுடன், நேர்த்தியுடன் ஆற்ற விரும்புகிறேன். அருள் தாரும் ஆண்டவரே. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

''அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார்.
அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, 'வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை
எங்களுக்கு விளக்கிக் கூறும்' என்றனர் (மத்தேயு 13:36

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதிக்க உவமைகளைப் பயன்படுத்தினார். அவற்றுள் இரு உவமைகளுக்கு இயேசுவே விளக்கம் அளித்ததாக மத்தேயு பதிவுசெய்துள்ளார். விதை விதைப்போர் பற்றிய உவமைக்கு விளக்கம் அளித்த இயேசு (காண்க: மத் 13:18-23) வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமைக்கும் விளக்கம் தருகிறார் (மத் 13:36-43). இந்த விளக்கம் தொடக்க காலத் திருச்சபை இயேசு உரைத்த உவமையைப் புரிந்துகொண்டதைக் காட்டுகிறது. இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, தம் சீடருக்கு மட்டுமே விளக்கம் தருகிறார். இயேசுவோடு இருக்கவும் அவர் கூறியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் சீடர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அது கடவுளே அவர்களுக்கு அளிக்கின்ற ஒரு தனிக் கொடை (காண்க: மத் 13:16). அதே நேரத்தில், இயேசுவைப் பின்செல்வோர் திறந்த மனத்தோடு கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுக்க வேண்டும். அந்த வார்த்தை வழியாகக் கடவுள் தம்மோடு பேசி தம் வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதை அவர்கள் அறிந்திட வேண்டும்.

-- சீடர்களுக்கு வழங்கப்படுகின்ற இறைவார்த்தையை அவர்கள் ஏற்று அதற்கேற்ப வாழாவிட்டால் அவர்களும் ''தீயோனைச் சேர்ந்தவர்களாக'' (காண்க: மத் 13:38) மாறிவிடுகின்ற ஆபத்து உள்ளது. மாறாக, அவர்கள் ''கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்களாக'' வாழ்ந்திட அழைக்கப்படுகிறார்கள் (மத் 13:38). கடவுளின் ஆட்சி அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அங்கே பகைமைக்கும் வன்முறைக்கும் இடம் கிடையாது. மன்னிக்கும் மனிநிலையும் பிறரைக் கடவுளின் பிள்ளைகளாக மதிக்கும் பார்வையும் கடவுளின் ஆட்சியில் நிலவும் பண்புகள். இயேசுவின் சீடர்கள் இறைவார்த்தையை மையமாகக் கொண்டு வாழும்போது ''கதிரவனைப் போல் ஒளிவீசுவார்கள்'' (மத் 13:43). அவர்கள் ''ஒளியின் மக்களாக'' வாழ்வதைக் கண்டு பிறரும் கடவுளிடம் நம்பிக்கை கொள்வர். ''இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்ன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்'' (மத் 5:16) என இயேசு இன்றுவாழும் நம்மைப் பார்த்துக் கூறுவதை நாம் செவிமடுத்துக் கேட்க வேண்டும் (மத் 13:43).

மன்றாட்டு
இறைவா, உம் வார்த்தை எங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக இருப்பதை நாங்கள் உணர்ந்து அதன்படி வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

விதை விதைப்பவரும் அவரே. களையை அனுமதிப்பவரும் அவரே.

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

எல்லா விளக்கமும் தந்தவர், தூங்கப்போன வேலையாள் யார் என்று சொல்லவில்லை. அதுதான் நம் இறைவனின் பண்பு. யாரையும் குறை சொல்பவர் அல்ல நம் இறைவன். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுதான் அவரது பண்பு. மனிதனுடைய குறைகளையும் பலவீனங்களையும் பெரிதுபடுத்துபவர் அல்ல நம் இறைவன்.

இறைவன் தன் பெருந்தன்மையையும், இறை வார்த்தையின் ஆற்றலையும் இங்கு உணர்த்துகிறார்.நீடிய பொருமை உள்ளவர் இறைவன். கண்டிக்க காலம் தாழ்த்துபவர். மனிதன் பாவம் செய்தபோதிலும், இறைவன் இரக்கத்தோடும் பொருமையோடும் அவனது மனமாற்றத்திற்காகக் காத்திருக்கிறார.;

பொருமையும் இரக்கமும் உள்ள அதே இறைவன் நீதியின்படி தீர்ப்பும் தண்டனையும் வழங்கும் இறைவன் என்பதையும் இங்கு நினைவூட்டுகிறார். மனம் திரும்ப கொடுத்த காலத்தை பயன்படுத்தாமல், மனம் திரும்பாமல் இருந்தால் இறுதி நாளில் தீர்ப்பும் கொடிய தண்டனையும் உண்டு.

இறைவா என் இயேசுவே உம் அன்பில் நிறைந்து, பெருந்தன்மையில் மகிழ்ந்து இரக்கத்தை பயன்படுத்தி என்றும் உம்மோடு இருக்க அருள்தாரும்.

--அருட்திரு ஜோசப் லீயோன்