முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 1-6


எரேமியாவுக்கு ஆண்டவர் அருளிய வாக்கு: ``நீ எழுந்து குயவன் வீட்டுக்குப் போ. அங்கு என் சொற்களை நீ கேட்கச் செய்வேன்.'' எனவே நான் குயவர் வீட்டுக்குப் போனேன். அங்கு அவர் சுழல் வட்டை கொண்டு வேலை செய்து கொண்டிருந்தார். குயவர் தம் கையால் செய்த மண் கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக் கொண்டிருந்தார். அப்போது ஆண்டவர் எனக்கு அருளிய வாக்கு: ``இஸ்ரயேல் வீட்டாரே, இந்தக் குயவன் செய்வது போல் நானும் உனக்குச் செய்ய முடியாதா? என்கிறார் ஆண்டவர். இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப் போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்
திபா 146: 1-2. 3-4. 5-6

பல்லவி: இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர். அல்லது: அல்லேலூயா.

1 என் நெஞ்சே! நீ ஆண்டவரைப் போற்றிடு;
2 நான் உயிரோடு உள்ளளவும் ஆண்டவரைப் போற்றிடுவேன்;
என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப் புகழ்ந்து பாடிடுவேன். -பல்லவி

3 ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்; உன்னை மீட்க இயலாத மானிட மக்களை நம்ப வேண்டாம்.
4 அவர்களின் ஆவி பிரியும்போது தாங்கள் தோன்றிய மண்ணுக்கே அவர்கள் திரும்புவார்கள்;
அந்நாளில்அவர்களின் எண்ணங்கள் அழிந்துபோம். -பல்லவி

5 யாக்கோபின் இறைவனைத் தம் துணையாகக் கொண்டிருப்போர் பேறுபெற்றோர்;
தம் கடவுளாகிய ஆண்டவரையே நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.
6 அவரே விண்ணையும் மண்ணையும் கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும் உருவாக்கியவர்;
என்றென்றும் நம்பிக்கைக்கு உரியவராய் இருப்பவரும் அவரே! -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் சொற்களை எங்கள் மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

மத்தேயு 13:47-53

பொதுக்காலம் 17 வாரம் வியாழன்


நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 47-53

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக்கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.'' ``இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' என்று இயேசு கேட்க, அவர்கள், ``ஆம்'' என்றார்கள். பின்பு அவர், ``ஆகையால் விண்ணரசு பற்றிக் கற்றுக்கொண்ட எல்லா மறைநூல் அறிஞரும் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர்'' என்று அவர்களிடம் கூறினார். இவ்வுவமைகளை இயேசு சொல்லி முடித்த பின்பு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

அழுகிய மீனா? அழகான மீனா?
மத்தேயு 13:47-53

இந்த அவனியில் பிறந்த அனைவரும் கடவுள் கொடுத்த மிக உயா்ந்த பரிசான வாழ்க்கையை வைத்து மிக சிறப்பான பணிகளை செய்ய வேண்டும் என்பதே நம் கடவுளின் எதிர்பார்ப்பு. மிகவும் உயரே பறப்பதற்கான அனைத்து ஆற்றலும், அருளும், ஆசீர்வாதமும் எல்லாம் வல்ல கடவுள் ஒவ்வொரு மாந்தருக்கும் நிறைவாகவே பொழிந்திருக்கிறார். ஆகவே கடவுளைப் போலவே நாம் சக்திமிக்கவர்களாக மாற முடியும். நடக்கும் இடமெல்லாம் நன்மையை செய்ய முடியும். அதிசயங்களை அனுதினமும் செய்ய முடியும். ஆனால் நடைமுயைில் இவைகள் ஏன் நடப்பதில்லை? ஏன் நம்மால் மாறமுடியவில்லை?

மேலே நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதாய் வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். காரணம் இரண்டு வகையான மீன்களாக மனிதர்கள் வலம் வருகிறார்கள். ஒன்று அழுகிய மீன்கள் மற்றொன்ற அழகான மீன்கள்.

அழுகிய மீன்கள் தங்கள் வாழ்வின் பொறுப்பை மறந்து கடமைகளை செய்யாமல் தண்ணீர் போகின்ற போக்கிலே அவர்களும் செல்வதால் அதாவது உலகின் போக்கிலே அவர்கள் கடந்து செல்வதால் தங்கள் வாழ்க்கையால் கடவுளுக்கு பலன் கொடுக்காமல் அழுகிய மீன்களாகவே நாற்றமெடுக்கின்றனர்.

அழகிய மீன்கள் வகையில் வருகின்றவர்கள் தங்கள் பிறப்பின் அவசியத்தை அறிந்திருப்பதால் அதிவேகமாக செயல்படுகிறார்கள். ஆற்றல் அனைத்தையும் அரவணைத்து அற்புதமான செயல்களை செய்கிறார்கள். ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற அதிசயமணி அவர்களுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.

மனதில் கேட்க…
• அழுகிய மீன் வகையில் நான் இருக்கிறேனா?
• கடவுள் கொடுத்த வாழ்க்கையை வெறுமையாக்கியது சரியா?

மனதில் பதிக்க…
உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர் (திபா 128:2)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எரேமியா 18: 1 – 6
குயவனும், மண்பானையும்

இறைவன் உருவகங்கள் வழியாக, தன்னுடைய செய்தியை, மக்களுக்கு அறிவிக்க வேண்டிய செய்தியை, இறைவாக்கினர் வழியாக அறிவிப்பதை இன்றைய வாசகத்தில் நாம் பார்க்கிறோம். குயவன், மண்பானை உருவகத்தை இறைவன் பயன்படுத்துகிறார். குயவன் மண்பானை செய்கிறான். அந்த மண்பானை என்பது, குயவனின் உருவாக்கத்தில் விளைந்தது. தன்னுடைய விருப்பத்திற்கேற்ப, தான் எண்ணியவற்றை, மண்பானையாக குயவன் வடிக்கிறான். அவர் செய்ய விரும்புவதையெல்லாம், அந்த மண்பானை செய்வதில் அவர் செய்து கொள்ளலாம். இந்த உவமையானது, இஸ்ரயேல் மக்களுக்கு அறிவிப்பதற்காகச் சொல்லப்படுகிறது.

கடவுள் அவர்களுக்குச் சொல்கிற செய்தி இதுதான்: ஒரு நாட்டையோ, அரசையோ எப்போது வேண்டுமானாலும் பிடுங்கி எறிவதற்கு கடவுளுக்கு ஆற்றல் இருக்கிறது. ஏனென்றால், அவர் இந்த உலகத்தைப் படைத்து பராமரிக்கிறவர். அதேவேளையில், சொல்லப்படுகிற செய்தியைக் கேட்டு, அவர்கள் தங்கள் தீய வழிகளிலிருந்து விலகி, தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்வாரென்றால், நிச்சயம் கடவுள் அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்வார். எல்லாமே கடவுளின் கையில் இருந்தாலும் கூட, கடவுள் அவர்களுக்கு வாய்ப்பு தருகிறார். அவர்களின் தவறான வழிகளிலிருந்து மீண்டு வர வேண்டும் என ஆசைப்படுகிறார். அதைத்தான் இங்கே அவர் உருவகத்தின் வழியாக வெளிப்படுத்துகிறார்.

கடவுள் நம்மை அழிந்து போக வேண்டும் என்று எப்போதும் விரும்புகிறவர் கிடையாது. நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார். அதேவேளையில், நாம் தவறுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தால், நாம் திருந்துவதற்கு பல சந்தர்ப்பங்களை ஏற்படுத்தித் தருகிறார். அதிலும் நாம் திருந்தவில்லை என்றால், நமக்கான தண்டனையைப் பெற்றுக்கொள்கிறோம். கடவுள் கொடுக்கிற வாய்ப்புக்களைப் பயன்படுத்தி நல்ல முறையில் வாழ கற்றுக்கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

உண்மைக்கு சான்று பகர…

மக்கள் இயேசுவிடம் திரளாக வந்தபோது, அவர்களுக்கு புதிதாகக் கற்றுக்கொடுக்க வேண்டும், புதிய சிந்தனைகளைக் கொடுக்க வேண்டும், தனது கருத்துக்கள் மட்டும் தான் மக்களின் உள்ளத்தில் பதிக்கப்பட வேண்டும் என்று, இயேசு ஒருபோதும் நினைத்தது இல்லை. அவர்களுக்கு சொல்லப்பட்டிருந்த, திருச்சட்டத்தைப் பற்றிய விளக்கங்களை முற்றிலுமாக மாற்றி, புதிய நெறிமுறைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியதில்லை. மக்களுக்கு எது நன்மையோ, அது ஏற்கெனவே அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தால், அதனையும் சேர்த்தே அவர்களுக்குப் போதிக்கிறார். இதிலிருந்து இயேசுவின் சிந்தனை, மக்கள் உண்மையை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப வாழ வேண்டும் என்பதுதான்.

இன்றைய உலகின் அறிவு வளர்ச்சி நாம் நினைக்காத வண்ணம் வளர்ந்திருக்கிறது. உண்மையை அறிந்து கொள்வதற்கு பல வாய்ப்புகள் நமக்கு தரப்படுகிறது. எது உண்மை? என்பதை அறிவது மிக எளிதானதாக இருக்கிறது. ஆனால், அந்த உண்மையை திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்கிறோமா? என்றால், அது கேள்விக்குறிதான். உண்மை என்ன? என்பது தெரிந்திருந்தாலும், அதனை நாம் ஒரு பொருட்டாக எடுப்பதில்லை. அதற்கு துணைநிற்பதுமில்லை. நமக்கு ஏன் தேவையில்லாத வம்பு? என்று ஒதுங்கிவிடுகிறோம். இந்த சூழ்நிலை மாற வேண்டும். உண்மையை நாம் ஏற்று, நமது வாழ்வில் உண்மை உள்ளவர்களாக நாம் வாழ வேண்டும்.

இந்த உலகம் பொய்யான மனிதர்களால் நிறைந்திருக்கிறது. அவர்கள் உண்மையை மறைத்து பொய்மையை விதைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், உண்மையை எப்படியாவது வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல மனிதர்கள் தங்களையே தியாகமாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் துணைநிற்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

நிறைவான பணிவாழ்வு

பொதுவாக பாலஸ்தீனத்தில் இரண்டு வகையான மீன்பிடிப்பு முறை வழக்கத்தில் இருந்தது. முதலாவதாக, கரையிலிருந்து தனியே ஒரு மனிதர், வலையை கடலில் வீசி, காத்திருந்து, அதனைக் கரைக்கு இழுத்து மீன் பிடிப்பது. நமது பகுதிகளில் “மணிவலை“ என்ற வலையைப் பயன்படுத்தி, மீன்பிடிக்கும் முறைக்கு இது ஒப்பானது. இரண்டாவது, ”இழுப்பு மடிவலை” மீன்பிடிப்பு முறை. இந்த முறையில் வலையில் சிக்குவது அனைத்தையும் அப்படியே இழுத்து கரைக்கு வருவது. இந்த பிண்ணனியின் அடிப்படையில் இயேசு தனது கருத்தை விளக்குகிறார்.

இயேசு தனது போதனைக்கு இங்கே பயன்படுத்துவது இரண்டாவது முறையை. கடவுளின் பணியைச் செய்கின்ற ஒவ்வொருவரும் யாரானாலும், எவரானாலும் சரி, நபரைப்பற்றிக் கவலைப்படாமல் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்க வேண்டும். அனைவரையும் அன்பு செய்ய வேண்டும். தீர்ப்பை கடவுளிடம் விட்டுவிட வேண்டும். அதைப்பற்றி நாம் கவலைப்படக்கூடாது. நமது வாழ்வில் நமக்கு கடவுள் தந்திருக்கிற பணியைச் சிறப்பாகச் செய்ய நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம்.

நமது பணியை திறம்பட, அர்ப்பண உணர்வோடு நாம் செய்துகொண்டே இருப்போம். முடிவு எப்படி இருக்குமோ? என்று கவலைப்படாமல், நமது பணியை நிறைவோடு செய்வதில், முழுமையாக ஈடுபடுவோம். அதையே, நாம் தொடர்ந்து செய்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நற்செய்திப்பணியாளர்களாக மாற….

எளிய மக்களின் வாழ்க்கை நடைமுறைகளுக்கு ஏற்ப, அவர்களின் புரிந்துகொள்ளும் திறனுக்கேற்ப, எந்த அளவுக்கு அவர்கள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்பாக இருக்குமோ, அந்தந்த வழிகளில் தன்னுடைய போதனையை மாற்றி அமைத்துக்கொள்வதில் இயேசுவுக்கு நிகர் இயேசுதான். மீன்பிடித்தொழில் அதிகம் செய்துவந்த மக்களுக்கு அவர்களுக்கு புரிகிற மொழியில் இயேசுவின் இந்தப் போதனை அமைகிறது. மீன்பிடிப்பில் பலமுறைகள் உண்டு. அதில் ஒன்று இன்றைய நற்செய்திப்பகுதியில் பயன்படுத்தப்படுகிறது. படகில் சென்று மொத்தமாக கடலில் இருப்பதை அரித்து, கரைக்குக்கொண்டு வந்து பிரித்தெடுக்கின்ற முறை. கரைக்குக் கொண்டுவந்தபிறகு தேவையானதையும், தேவையற்றதையும் பிரித்தெடுப்பது.

விண்ணரசு இந்த வலைக்கு ஒப்பாகும் என்று சொல்லப்படுகிறது. அதாவது, நல்லவை, தீயவை அனைத்துமே விண்ணரசுக்குள் இழுத்துவரப்பட வேண்டும். அதுதான் நமது கடமை. யாரையெல்லாம் ஆண்டவரின் பக்கம் நம்மால் கொண்டுவரமுடியுமோ, அவர்கள் வெளிப்போக்காக எப்படி இருந்தாலும் சரி, அதைப்பற்றி கவலைப்படாமல், அவர்கள் அனைவரையும் ஆண்டவர் பக்கம் கொண்டு வர நாம் முயற்சி எடுக்க வேண்டும். அதை நல்லதாக, கெட்டதாக பிரித்தெடுப்பது கடவுளின் பணி. அதைப்பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.

திருச்சபை நம்மிடமிருந்து பலவற்றை எதிர்பார்க்கிறது. அவற்றுள் முக்கியமான, முதன்மையான ஒன்று: நற்செய்தி அறிவிப்பது. நாம் ஒவ்வொருவரும் நற்செய்திப்பணியாளர்களாக மாறி, ஆண்டவரிடம் மக்களைக் கொண்டுவரவேண்டும் என்கிற திருச்சபையின் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுகின்ற நல்ல போதகர்களாக மாற உறுதி எடுப்போம். 

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

குயவன் கையில் நாம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று குயவர் தம் கையால் செய்த மண்கலம் சரியாக அமையாதபோதெல்லாம், அவர் அதைத் தம் விருப்பப்படி வேறொரு கலமாக வடித்துக்கொண்டிருந்தார் என்னும் வரிகளைத் தியானிப்போம். இறைவன் ஒரு குயவர். நாம் அவர் கையில் உள்ள களிமண். நம் ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அத்திட்டத்தின்படியே அவர் நம்மை வனைகிறார். ஆனால், சில வேளைகளில் நாம் அவரது திட்டத்தின்படி ஒத்துழைப்பதில்லை, வாழ்வதில்லை. எனவே, நமது வாழ்வு சரியாக அமையாதபோதெல்லாம், இறைவன் தமது விருப்பப்படி வேறொரு கலமாக நம்மை வடிக்கின்றார். இந்த மாபெரும்; உண்மையை நாம் உணர்ந்துகொண்டால், நம் வாழ்வில் என்ன நேர்ந்தாலும், நாம் கவலை கொள்ள மாட்டோம். நமது வாழ்வில் நாம் சந்திக்கின்ற விபத்துகள், தோல்விகள், நோய்கள் நம்மை அலைக்கழிக்கின்றன. நாமும் சோர்ந்துபோகின்றோம், மன உளைச்சலில் வாடுகிறோம். அப்போதெல்லாம், நாம் இந்த இறைமொழியை மனதில் கொள்ளவேண்டும். இறைவன் இந்த சூழ்நிலையையும் தமது விருப்பப்படி மாற்றி வேறொரு கலமாக, பயனுள்ள  விதத்தில் வடிப்பார். இந்த நம்பிக்கையை இன்று ஆழப்படுத்திக்கொள்வோம்.

மன்றாடுவோம்: தெய்வீகக் குயவனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது கையில் களிமண்ணாக எங்களைக் கையளிக்கிறோம். உமது விருப்பப்படி எங்களை வடித்தருளும். ஒருவேளை எங்கள் தவறுகளால் எங்கள் வாழ்வு சரியாக அமையாவிட்டால், உமது விருப்பப்படியே வேறொரு விதத்தில் எங்களை வடிப்பீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

புதியனவும், பழையனவும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இந்த உலகம் நாள்தோறும் மாறி வருகிறது. புதிய புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் அற்புதங்கள், வாழ்வை எளிதாகவும், இனியதாகவும் மாற்றி வருகின்றன. எனவே, புதிய வரவுகளுக்காக இறைவனைப் போற்றுவோம். புதியவைகளை ஏற்றுக்கொள்வோம்.

அதே வேளையில், பழைய அனுபவங்கள் கற்றுத் தந்த வாழ்க்கைப் பாடங்கள், காலம் காலமாக நாம் போற்றி வந்த மரபுகள், நல்ல நடைமுறைகள் இவற்றையும் நாம் மறந்துவிடக்கூடாது.

உண்மையான ஞானமென்பது பழையன, புதியனவற்றில் உள்ள நல்லவற்றை ஏற்றுக்கொண்டு, பழையன, புதியனவற்றில் உள்ள தீமைகளைத் தூர எறிந்துவிடுவது.

புனித மத்தேயு நல்ல மறைநூல் அறிஞர் என்பவர் தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும், பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல் இருக்கின்றனர் என்கிறார்.

இறைவார்த்தைமீது ஆர்வம் கொண்டுள்ள நாமும் பழையன, புதியன இரண்டையும் இணைத்து, ஞானத்தோடு வாழ்வோமாக.

 

மன்றாடுவோம்; பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு இரண்டையும் இணைக்கும் பாலமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். கடந்த கால அனுபவங்களிலிருந்து நல்ல பாடங்களை மறந்துவிடாதிருக்கவும், புதிய புதிய நிகழ்வுகளில் உமது பேரன்பை நன்றியுடன் ஏற்றுக்கொள்ளவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

-- அருட்தந்தை குமார்ராஜா

''இயேசு, 'இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா' என்று கேட்க,
சீடர்கள், 'ஆம்' என்றார்கள்'' (மத்தேயு 13:51)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை அறிவித்த இயேசு அதைப் பல உவமைகள் வழியாக மக்களுக்கு அறிவித்தார். குறிப்பாக, தம்மோடு நெருங்கிப் பழகி தம் போதனைகளை அருகிருந்து கேட்டு, தாம் புரிந்த அரும் செயல்களை நேரடியாகக் கண்டு அறிந்த தம் சீடர்களுக்கு இயேசு தம் உவமைகளின் உட்பொருளையும் விளக்கிக் கூறினார். இத்தகைய பேற்றினைப் பெற்ற சீடர்கள் இயேசு கூறியவற்றையும் அவர் செய்தவற்றையும் நன்றாக அறிந்து புரிந்திருப்பார்கள் என்றுதான் எண்ணத் தோன்றும். ஆனால் உண்மையில் அவர்கள் இயேசுவைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்பட்டார்கள். பல தடவைகளில் இயேசுவின் போதனை அவர்கள் காதுகளில் விழுந்தும் அவர்கள் அப்போதனையை உள்வாங்கித் தம் நடத்தையில் எண்பிக்கத் தயங்கினார்கள்.

-- அன்று இயேசுவின் சீடர்கள் இயேசுவை முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லையே என நாம் குறைகூறுகின்ற அதே தருணத்தில் நாம் இயேசுவை உண்மையிலேயே புரிந்துகொண்டுள்ளோமா என்னும் கேள்வியையும் எழுப்ப வேண்டும். இயேசு நம்மைப் பார்த்தும் அதே கேள்வியைக் கேட்கின்றார்: ''இவற்றையெல்லாம் புரிந்துகொண்டீர்களா?'' (மத் 13:51). இயேசு யார் எனவும் அவர் நமக்கு வழங்கிய செய்தி யாது எனவும் நாம் உண்மையிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்றால் நாம் திறந்த மனத்தோடு அவரை அணுக வேண்டும். அவரிடத்தில் நாம் முழுமையாக நம்பிக்கை கொள்ள வேண்டும். நம் இதயத்தைத் திறந்துவைத்து, அங்கே நம்மோடு பேசுகின்ற கடவுளின் குரலுக்கு நாம் கவனமாகச் செவிமடுத்தால் இயேசுவின் போதனைகளை நாம் அறிவளவில் மட்டுமன்றி, நம் இதய ஆழத்திலும் உணர்ந்து புரிந்துகொள்வோம். அப்போது அப்புரிதல் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் கொணரும். இவ்வாறு நாம் மனம் மாறிய மனிதராக வாழ வேண்டும் என்பதே இயேசுவின் போதனையின் நோக்கம். நாம் மரபு வழி பெறுகின்ற மதிப்பீடுகளைப் ''பழையது'' என்னும் ஒரே காரணத்திற்காக ஒதுக்கிவைத்துவிடாமல், அவற்றைப் புதுப் பார்வையோடு ஏற்று, இயேசு கொணர்ந்த புது வாழ்வின் ஒளியில் நாம் பெற்றுக்கொண்டால் ''தம் கருவூலத்திலிருந்து புதியவற்றையும் பழையவற்றையும் வெளிக்கொணரும் வீட்டு உரிமையாளரைப் போல'' (மத் 13:52) நாமும் அறிவோடு செயல்படுவோம்.

மன்றாட்டு
இறைவா, உம் மகன் வழியாக நீர் எங்களுக்கு அளிக்கின்ற நற்போதனையை நாங்கள் ஆழமாகப் புரிந்திட எங்களுக்கு அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும்
வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும்" (மத்தேயு 13:47)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம் சீடராகத் தெரிந்துகொண்டவர்களுள் பலர் மீனவர். பேதுரு, அந்திரேயா, யோவான், யாக்கோபு ஆகியோர் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில் இயேசுவால் அழைக்கப்பட்டு, அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். சீடர்கள் மீன்பிடித்த இடம் கடல்போல் விரிந்து பரந்த "கெனசரேத்து ஏரி" ஆகும் (லூக்கா 5:1). இதுவே மக்களால் "கலிலேயக் கடல்" என்றும் "திபேரியக் கடல்" என்றும் அழைக்கப்பட்டது. அந்த ஏரியில் வலைவீசி மீன்பிடித்தல் கலிலேயாவில் நடந்த முக்கிய தொழிலாகும். இந்தக் கலிலேயப் பகுதியில்தான் இயேசுவின் பணி பெருமளவு நிகழ்ந்தது. கலிலேயக் கடல் என்றழைக்கப்பட்ட அந்த ஏரியின் பரப்பளவு 166 சதுர கிலோமீட்டர்; ஆழம் சுமார் 30 மீட்டர். இந்த ஏரியில் மீன்பிடிக்க வலைவீசும்போது பல மீனவர் சேர்ந்து உழைப்பில் ஈடுபடுவர். அவர்கள் வீசிய வலையில் விழுகின்ற மீன்கள் பலவகையாக இருக்கும். சமைத்து உண்பதற்குத் தகுந்த நல்ல மீன்களும் சமையலுக்குப் பயன்படாத மீன்களும் பிற உயிரினங்களும் வலையில் அகப்படும். வலையைக் கரையில் இழுத்துக் கொண்டுவந்தபின் மீனவர் நல்ல மீன்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பயனற்றவற்றை வெளியே எறிந்துவிடுவர். இந்த நிகழ்ச்சியை இயேசு எத்தனையோ முறை நேரில் பார்த்திருந்தார். அது இயேசுவின் வாயில் இறையாட்சி பற்றிய ஓர் உவமையாக உருவெடுத்தது. வலையில் அகப்பட்ட நல்ல மீன்களை எடுத்துக்கொண்டு கெட்ட மீன்களை விட்டுவிடுவதுபோல கடவுளாட்சியின் இறுதியிலும் கடவுள் நல்லவர்களைத் தீயோரிடமிருந்து பிரித்துத் தீர்ப்பு வழங்குவார்.

-- இவ்வுலகில் கடவுளாட்சி படிப்படியாக வளர்கின்ற காலத்தில் வலையில் நல்ல மீன்களும் கெட்ட மீன்களும் படுவதுபோலவே கடவுளாட்சியிலும் நல்லவரும் இருப்பர், தீயவரும் இருப்பர். இவர்களை வேறுபடுத்திப் பார்த்து, ஒருசிலரை ஏற்றுப் பிறரை ஒதுக்கிவைப்பது நம் பொறுப்பு அல்ல. கடவுள்தாமே மக்களில் நல்லவர் யார் என்றும் தீயவர் யார் என்றும் இறுதிக்காலத்தில் தீர்ப்பு வழங்குவார். எந்தவொரு வேறுபாடும் காட்டாமல் அனைவரையும் அன்போடு ஏற்று வரவேற்பதே நம் கடமை. தீர்ப்பு வழங்கும் உரிமை கடவுளுக்கே உண்டு. இருப்பினும், நன்மை தீமை அறிவதற்கான திறமையை நாம் கடவுளிடமிருந்து இறைஞ்சிக் கேட்க வேண்டும். நன்மையைத் தேர்ந்துகொண்டு தீமையை நாம் தவிர்க்க வேண்டும். ஆனால், பிற மனிதரை நல்லவர் தீயவர் எனத் தீர்ப்பிடும் பொறுப்பைக் கடவுளிடமே விட்டுவிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, பிறர் மட்டில் யாதொரு வேறுபாடும் காட்டாமல் அன்போடு அவர்களை ஏற்றிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

கரையில் இருந்து.. ..

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

ஏம்பா! கஷ்டப்பட்டு கடலில் உழைத்து கௌரவமாக வாழாமல் இப்படி உடலையும் வாழ்க்கையையும் கெடுத்துக் குட்டிச்சுவராக்குகிறாயே ! கொஞ்சம் சேர்த்து சேமித்து செழிப்போடு வாழலாமே ! என்றார் அந்த பங்கு குருவானவர். "சாமி, கடல் வற்றவாபோகிறது" என்றார் நெத்தியடியாக.

நிலமும் நெருப்பும்;, கடலும் காற்றும், ஆகாயமும் கடவுள் மனிதனுக்குத் தந்த வற்றாத செல்வத்தின் ஊற்றுக்கள். இவற்றிலிருந்து நல்லவைகளை வாரி எடுத்து வாழ்க்கையை வளமாக்க வலையாகக் கொடுத்ததுதான் அறிவு. அறிவு என்ற வலையைப் பயன்படுத்தி, தெய்வீக அமைதி உள்ள வாழ்வை, விண்ணரசு வாழ்வை மனிதன் வாழவேண்டும் என்றே இத்தனை செல்வங்களையும் கடவுள் தந்துள்ளார்.

அறிவு வலை அத்தனையும் அள்ளி வந்தாலும், அறிவெல்லாம் கடந்த மெய்யறிவில், தியானத்தில், கரையில் அமர்ந்து, அள்ளி வந்தவற்றுள் நல்லவைகளை நமதாக்கி, அல்லவற்றை அப்புற எறிந்துவிடுவதே விண்ணக நிறைவைத் தரும்.

இன்று மனிதன் வான்வெளியில் வீசும் வலையால் (iவெநசநெவ ) வற்றாத வளங்களைப் வாரிக்கொண்டு வருகிறான். அனால் கரையில் உட்கார்ந்து நல்லவற்றைச் சேகரிக்கவில்லை. மாராக, வேண்டாதவற்றை, விபரீதமானவற்றைச் சேகரித்து வேதனையில் சிக்கித்தவிக்கிறான். மகிழ்ச்சியைத், விண்ணரசைத் தரவேண்டிய வலை இன்று வேதனையையும் விரக்தியையும் தருகிறது.

வலையைப் பயன்படுத்து. கரையில் அமர்ந்து நல்லவற்றை சேகரி. வாழ்வு தெய்வீகமாகும்.

 

--அருட்திரு ஜோசப் லீயோன்