முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 1-9


யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிமுடைய ஆட்சியின் தொடக்கத்தில் ஆண்டவர் அருளிய வாக்கு: ``ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: `நீ ஆண்டவர் இல்லத்தின் முற்றத்தில் நின்றுகொண்டு, அங்கு வழிபாடு செலுத்த வரும் யூதாவின் எல்லா நகரினர்க்கும் சொல்லுமாறு நான் உனக்குக் கட்டளையிடும் எல்லாச் சொற்களையும் நீ அவர்களுக்கு அறிவி; அவற்றில் ஒன்றையும் விட்டுவிடாதே. ஒருவேளை அவர்கள் உனக்குச் செவிசாய்த்து அவரவர் தம் தீய வழிகளை விட்டுத் திரும்பலாம். அப்பொழுது அவர்களுடைய தீச்செயல்களை முன்னிட்டு அவர்களுக்கு நான் அளிக்க எண்ணியுள்ள தண்டனை பற்றி என் மனத்தை மாற்றிக்கொள்வேன்'. நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: `ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், உங்களுக்குக் கொடுத்திருக்கும் என் சட்டத்தின்படி நடவாமலும், நீங்கள் செவிசாய்க்காதபொழுதும், நான் மீண்டும் மீண்டும் உங்களிடம் அனுப்பிவைக்கும் என் ஊழியர்களான இறைவாக்கினர்களுடைய சொற்களைக் கேளாமலும் இருப்பீர்களாகில், இக்கோவிலைச் சீலோவைப்போல் ஆக்குவேன்; இந்நகரை உலகில் எல்லா மக்களினத்தார் நடுவிலும் சாபக்குறியாக மாற்றுவேன்.'' ஆண்டவர் இல்லத்தில் எரேமியா உரைத்த இச்சொற்களைக் குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் கேட்டனர். மக்கள் அனைவருக்கும் சொல்லும்படி ஆண்டவர் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றையும் எரேமியா கூறிமுடித்தபோது, குருக்களும் இறைவாக்கினரும் மக்கள் அனைவரும் அவரைப் பிடித்து, ``நீ கண்டிப்பாய்ச் சாகவேண்டும்'' என்று கூச்சலிட்டனர். ``இக்கோவில் சீலோவைப் போல் மாறும்; இந்நகர் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப்போகும் என்று ஆண்டவரின் பெயரால் நீ ஏன் இறைவாக்கு உரைத்தாய்?'' என்று கூறி, ஆண்டவர் இல்லத்திலேயே மக்கள் எல்லாரும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 69: 4. 7-9. 13

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பினால் எனக்குப் பதில்மொழி தாரும்.

4 காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியை விட மிகுதியாய் இருக்கின்றனர்;
பொய்க் குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர்.
நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்? -பல்லவி

7 ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
8 என் சகோதரருக்கு வேற்று மனிதன் ஆனேன்;
என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன்.
9 உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது;
உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச் சொற்கள் என்மீது விழுந்தன. -பல்லவி

13 ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்;
கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில்மொழி தாரும்;
துணை செய்வதில் நீர் மாறாதவர். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ``நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும்.'' இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.

மத்தேயு 13:54-58

பொதுக்காலம் 17 வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58

அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், ``எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், ``தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

உங்கள் உற்காசத்தால் உங்கள் ஊர்க்காரர் உயரட்டும்!
மத்தேயு 13:54-58

ஒரே ஊரில் வாழும் மனிதர்கள் தங்கள் ஊர்க்காரரின் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைவதில்லை. பெரும்பாலும் பொறாமை தான் பொங்கி வருகிறது. இப்படி இருப்பதனால் ஒருவருக்கொருவர் வளர்ச்சியை காண்பதில்லை. அதோடு மட்டுமல்லாமல் அந்த மொத்த ஊரிலும் வளர்ச்சி என்பது இல்லாமல் போகிறது. பல நல்ல காரியங்கள் நடக்காமலே போகிறது.

அதற்கு மிக சிறந்த உதாரணம் தான் இன்றைய நற்செய்தி வாசகம். ஆண்டவர் இயேசு கிறிஸ்து மிகச்சிறந்த திறமையுடன் மறைநூலை எடுத்துரைத்த போது அவர்கள் தன் சொந்த ஊார்க்காரன் தானே என்று அலட்சியமாக இருந்ததால் இயேசு தன்னுடைய ஆற்றலை அங்கு வெளிப்படுத்த ஆசைப்படவில்லை. அதனால் இயேசு கிறஸ்துவின் திறமை அங்கே வெளிப்படுத்தப்படவில்லை. ஆகவே அந்த ஊரின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலே தடை ஏற்படுகிறது.

நம் ஊார்க்காரன் என்ற உணர்வு நமக்குள் மேலோங்க வேண்டும். ஒருவருக்கொருவர் அன்பு கொள்ள வேண்டும். ஒருவரையொருவர் மனதார பாராட்ட வேண்டும். மிக அதிகமாகவே உற்சாகப்படுத்த வேண்டும். அதற்காகவே நாம் ஒரே ஊரில் வசிக்கின்றோம்.

பாராட்டினால்
 ஒவ்வொருவரின் திறமைகள் வளருகின்றன
 அற்புதங்கள் நடக்கின்றன
 ஊர் ஒற்றுமையை யாரும் அசைக்க முடியாது
 ஊரே வளருகின்றது

மனதில் கேட்க…
• என் ஊர்க்காரன் என்ற பாசம் எனக்கு உள்ளதா?
• என் ஊர்க்காரனுக்கு உதவி செய்கிறனோ அல்லது கெடுதல் செய்கிறேனா?

மனதில் பதிக்க…
சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது (திப 133:1)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எரேமியா 26: 1 – 9
கடின உள்ளம் வேண்டாம்!

இஸ்ரயேல் மக்கள் எந்த அளவுக்கு கடின உள்ளத்தினராய் வாழ்ந்தார்கள் என்பதற்கு இன்றைய வாசகம் ஒரு சான்றாக அமைகிறது. கடவுளுக்கு எதிராக அவர்கள் தீய வழிகளில் சென்றது உண்மையிலும் உண்மை. அதனால், கோபத்திற்கு ஆளானதும் உண்மை. இறைவாக்கினர்கள் வழியாக கடவுள் பலமுறை அவர்களோடு பேசியதும் உண்மை. இவ்வளவு நடந்த பிறகும், அவர்கள் தங்கள் மனங்களை மாற்றிக்கொள்ளவில்லை. தாங்கள் செய்வது சரிதான் என்கிற எண்ணத்திலேயே வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இறைவாக்கினர் எரேமியா வழியாக, அவர்களுக்கு வரப்போகிற தீங்கு, இறைவாக்காக அறிவிக்கப்படுகிறது.

கடவுளின் வாக்கை அறிவித்த இறைவாக்கினர் எரேமியா, மக்களின் கோபத்திற்கு ஆளாகிறார். இறைவாக்கினர் அறிவித்த வார்த்தையில் உண்மை இருக்கிறதா? என்று அவர்கள் எண்ணிப்பார்க்க விரும்பவில்லை. மாறாக, எப்படி தங்களைப் பற்றி தவறாக பேசுவது? தங்களுக்கு சாபமிடுவது? என்று, உண்மையை ஆராய்வதற்கு பதிலாக, அவர் மீது அவர்கள் கோபம் கொண்டனர். ஆண்டவரின் இல்லத்திலேயே அவரைச் சூழ்ந்து கொண்டனர். இது அவர்களின் கடின உள்ளத்தையே எடுத்துக்காட்டுவதாக அமைகிறது, அவர்கள் தங்கள் வாழ்வை மாற்றிக் கொள்வதற்கு ஆசைப்படவில்லை. அது அவர்களின் விருப்பமும் இல்லை. தாங்கள் வாழ்கிற வாழ்க்கை தான் சரியானது என்கிற மனநிலை அவர்களுக்கு நிறைய இருக்கிறது. அப்படியென்றால், நிச்சயம் அங்கே மனமாற்றத்திற்கு வேலையில்லை என்று தான் அர்த்தமாக இருக்க முடியும்.

நம்முடைய வாழ்வில், இப்படிப்பட்ட கடின உள்ளம் கொண்ட மக்களாக நாம் ஒருபோதும் இருக்கக்கூடாது. நம்முடைய தவறை மற்றவர்கள் சுட்டிக்காட்டுகிறபோது, அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை நாம் பெற வேண்டும். இறைவன் நம் மீது எப்போதும் கொண்டுள்ள அன்பை உணர்கிறவர்களாக வாழ்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

வாழ்வு என்பது கடவுளின் கொடை

இயேசு தனது சொந்த ஊரில் உள்ள தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். ஒருவர் எவ்வளவு பெரிய போதகராக இருந்தாலும், தான் பிறந்த மண்ணில் போதிப்பது என்பது ஒரு சவாலான செய்தி. சொந்த ஊரில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் கடினமான ஒன்று. அதற்கு பல காரணங்களையும் சொல்லலாம்? எதற்காக மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுவது கடினம்? நம்மோடு படித்தவர்கள், “இவனைப்பற்றித் தெரியாதா?” என்று, நம்மைப்பற்றி வைத்திருக்கக்கூடிய முன்சார்பு எண்ணம், மக்கள் மத்தியில் பெற்ற புகழினால் மற்றவர்களுக்கு பொறாமை, குடும்பத்தின் எளிய பிண்ணனி, அதிகார வா்க்கத்தின் பிண்ணனி போன்றவை இயேசு ஏற்றுக்கொள்ளாப்படாமைக்கான சில காரணங்கள்.

இந்த காரணங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தாலும்,  இயேசுவுக்கு சவால் என்றாலே அது ஒரு சுகம் தான். தடைகளைப்பற்றி அவர் ஒருபோதும் கலங்கியதும் கிடையாது. கவலைப்பட்டதும் கிடையாது. துணிவோடு போதிக்கிறார். துணிச்சலாகப் போதிக்கிறார். வாழ்வு என்னும் நமது வழியில் பல வலிகள் வந்தாலும், இயேசுவைப் போன்ற துணிச்சல் நமக்கு இருக்கிறபோதுதான், அவற்றை எதிர்கொள்ள முடியும். அதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், அதை நேர்மையான உள்ளத்தோடு, அதனால் வரக்கூடிய துன்பங்களைத் தாங்கிக்கொள்வதும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம்.

அத்தகைய துணிவை நமது ஆண்டவரிடமிருந்து கற்றுக்கொள்வோம். ஏனென்றால், இன்றைக்கு வாழ்வை துணிவோடு எதிர்கொள்ளத் துணிவில்லாமல், எத்தனையோ பேர், தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் வாழ்வை கொடையாக எண்ணாமல் கடமையாக வாழ்ந்தவர்கள். நாம் அப்படி இல்லாமல், வாழ்வை கடவுளின் கொடையாக ஏற்று வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தடைகளைத்தகர்த்தெறிவோம், இறையரசுக்கு தகுதிபெறுவோம்

இயேசுவின் காலத்தில் தொழுகைக்கூடங்களில் குறிப்பிட்ட நபர்தான் போதிக்க வேண்டும் என்ற ஒழுங்கு ஒன்றுமில்லை. அந்த தொழுகைக்கூடத்தின் தலைவர் வந்திருக்கிறவர்களில் நன்றாக போதிக்கக்கூடியவர் யாருக்கும் அந்த வாய்ப்பைத்தரலாம். இயேசுவுக்கு அங்கே போதிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததில் வியப்பேதுமில்லை. ஏனெனில், இயேசுவை மக்கள் சிறந்த போதகரென ஏற்றுக்கொண்டிருந்தார்கள். இயேசுவின் போதனையைக்கேட்டு அவருடைய சொந்த ஊர் மக்களும் வியந்துபார்த்தனர். ஆனாலும் அவரை ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். காரணம் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு பல தடைகள் இருந்தது.

இயேசுவின் குடும்பப்பிண்ணனி, இயேசுவின் கல்வியறிவு பற்றிய சந்தேகம், இயேசு அவர்களில் ஒருவராக இருந்ததால், அவரைப்பற்றிய குறைவான மதிப்பீடு போன்றவை இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தவைகளாகும். நல்லது என்று தெரிந்திருந்தும், நம் கண்முன்னே இதுபோன்று இருக்கக்கூடிய தடைகள் அதை ஏற்றுக்கொள்வதற்கு தடையாக இருந்தது. இதனால் இழப்பு என்னவோ நமக்குத்தான். அதை உணர்ந்து, நன்மையின் பக்கம் நாம் துணைநிற்போம். நம்பிக்கையோடு வாழ்வை எதிர்கொள்வோம்.

எனது வாழ்வில் நன்மையின் பக்கம் நிற்காமல் இருப்பதற்கு எவை எவை எனக்கு தடைக்கற்களாக இருந்திருக்கிறது? என சிந்தித்துப்பார்ப்போம். தடைகளைக் கடந்து செல்வதற்கு இறையருள் வேண்டி மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

வாழ்வு என்பது கடவுளின் கொடை

இயேசு தனது சொந்த ஊரில் உள்ள தொழுகைக்கூடத்தில் போதிக்கிறார். ஒருவர் எவ்வளவு பெரிய போதகராக இருந்தாலும், தான் பிறந்த மண்ணில் போதிப்பது என்பது ஒரு சவாலான செய்தி. சொந்த ஊரில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் கடினமான ஒன்று. அதற்கு பல காரணங்களையும் சொல்லலாம்? எதற்காக மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்படுவது கடினம்? நம்மோடு படித்தவர்கள், “இவனைப்பற்றித் தெரியாதா?” என்று, நம்மைப்பற்றி வைத்திருக்கக்கூடிய முன்சார்பு எண்ணம், மக்கள் மத்தியில் பெற்ற புகழினால் மற்றவர்களுக்கு பொறாமை, குடும்பத்தின் எளிய பிண்ணனி, அதிகார வா்க்கத்தின் பிண்ணனி போன்றவை இயேசு ஏற்றுக்கொள்ளாப்படாமைக்கான சில காரணங்கள்.

இந்த காரணங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தாலும்,  இயேசுவுக்கு சவால் என்றாலே அது ஒரு சுகம் தான். தடைகளைப்பற்றி அவர் ஒருபோதும் கலங்கியதும் கிடையாது. கவலைப்பட்டதும் கிடையாது. துணிவோடு போதிக்கிறார். துணிச்சலாகப் போதிக்கிறார். வாழ்வு என்னும் நமது வழியில் பல வலிகள் வந்தாலும், இயேசுவைப் போன்ற துணிச்சல் நமக்கு இருக்கிறபோதுதான், அவற்றை எதிர்கொள்ள முடியும். அதனை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், அதை நேர்மையான உள்ளத்தோடு, அதனால் வரக்கூடிய துன்பங்களைத் தாங்கிக்கொள்வதும் இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிகப்பெரிய பாடம்.

அத்தகைய துணிவை நமது ஆண்டவரிடமிருந்து கற்றுக்கொள்வோம். ஏனென்றால், இன்றைக்கு வாழ்வை துணிவோடு எதிர்கொள்ளத் துணிவில்லாமல், எத்தனையோ பேர், தங்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அவர்கள் வாழ்வை கொடையாக எண்ணாமல் கடமையாக வாழ்ந்தவர்கள். நாம் அப்படி இல்லாமல், வாழ்வை கடவுளின் கொடையாக ஏற்று வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கோவிலுக்கு எதிரான இறைவாக்கு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எரேமியா இறைவாக்கினரின் கடுமையான இறைவாக்கு மொழிகளைக் கேட்ட மக்கள், குருக்கள், இறைவாக்கினர் அனைவரும் கோபமும் வியப்பும் அடைந்ததில் வியப்பில்லை. அவர்கள் உள்ளத்தில் எழுந்த இயல்பான எண்ணம்: “எப்படி கடவுள் தமது கோவிலைத் தாமே அழிப்பார்? எருசலேம் நகரும், கோவிலும் மிகவும் பாதுகாப்பானவை. இறைவனே அவற்றைக் காப்பார்”. ஆனால், எந்த நோக்கத்திற்காக கோவில் கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறாமல், மக்கள் தீய வழிகளில் வாழ்ந்தால், இறைவன் எப்படி அந்நகரையும், கோவிலையும் காப்பார். எனவேதான், சீலோவைப்போல் அக்கோவில் ஆக்கப்படும் என எரேமியா முன் மொழிந்தார். யாரும் இறைவனின் அருளை, இரக்கத்தை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. “ஆண்டவரே, என்னை அழைத்து, அருள்பொழிவு செய்துள்ளார். எனவே, அவர் என்னை எப்போதும் பாதுகாப்பார்” என்று எந்தக் குருவும் எண்ணிவிட முடியாது. வாழ்வு நேர்மையானதாக இல்லாவிட்டால், இறைவன் அழிவுக்குக் கையளித்துவிடுவார் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள இன்றைய வாசகம் நம்மை அழைக்கிறது.

 

மன்றாடுவோம்: நீதியின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் தீய வழிகளை விட்டு, மனம் திரும்ப நீர் தரும் அழைப்புக்காகவும், வாய்ப்புகளுக்காகவும் நன்றி கூறுகிறோம். அவற்றைப் பயன்படுத்தி, எங்கள் வழிகளை மாற்றிக்கொள்ள அருள்  தந்தருள்வீராக.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

உழைப்பின் மேன்மை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்று உலகம் முழுவதும் உழைப்பாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. எனவே, திருச்சபையும் தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித சூசையப்பரின் விழாவைக் கொண்டாடுகிறது. இன்றைய நாளில் உழைப்பின் மேன்மையை நாம் உணரவும், உழைப்பாளர்களை மேன்மைப்படுத்தவும் திருச்சபை நமக்கு அழைப்பு விடுக்கிறது.

உழைப்பின் மேன்மையை விவிலியத்தின் பல பகுதிகளில் பார்க்கிறோம். தொடக்க நூலிலேயே இறைவனை ஓர் உழைப்பாளராகக் காண்கிறோம். எனவேதான், அவர் ஏழாம் நாளில் ஓய்வெடுத்தார். ஓய்வு நாளைப் புனிதமாக்கினார். புதிய ஏற்பாட்டில் இயேசு ஒரு தச்சராக, தொழிலாளியாகக் காட்சி தருகிறார். “இவர் தச்சருடைய மகன் அல்லவா?” என மக்கள் கேட்ட வியப்பின் குரலை இன்றைய நற்செய்தி வாசகத்தில் கேட்கிறோம். உடல் உழைப்பாளர்கள் மதிப்பு குறைந்தவர்கள், மூளை உழைப்பாளர்கள் மதிப்பிலும், பெறும் ஊதியத்திலும் உயர்ந்தவர்கள் என்னும் மனநிலை இயேசுவின் காலத்திலிருந்து, இன்றுவரை தொடரவே செய்கிறது என்பது அவலமானது. உழைக்கின்ற அனைவரையும், குறிப்பாக உடல் உழைப்பாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் போன்றோரை நாம் இறைவனின் பிரதிநிதிகளாக, இயேசுவின் வாரிசுகளாகப் பார்க்க வேண்டும். நாமும் இந்த சமூகத்தின் உயர்வுக்காக அயராது உழைக்க முன்வர வேண்டும்.

மன்றாடுவோம்: உழைப்பை மேன்மைப்படுத்திய தச்சரின் மகனான இயேசுவே, இறைவா, உம்மைப் போற்றுகிறோம்.  இந்த நாளில் உலகத் தொழிலாளர்கள் அனைவருக்காகவும் நன்றி கூறி, அவர்களுக்காக மன்றாடுகிறோம். நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து, இந்த உலகிற்கு உணவும், உற்பத்திப் பொருள்களும் உருவாக்கும் அனைவரையும் ஆசிர்வதித்தருளும். நாங்களும் ஓய்வின்றி உழைக்கின்ற ஆர்வத்தைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

இல்லத்திலே மதிப்பு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

சில வேளைகளில் ஒருவருக்குத் தம் சொந்த வீட்டில்கூட மதிப்பு இருப்பதில்லை. பெற்றோரும். உடன் பிறந்தோரும் ஒருவரின் கனவுகளை, ஆர்வங்களை, ஆற்றல்களைப் புரிந்துகொள்ளாமல் ஏளனம் செய்வதையும், ஊக்கப்படுத்தாமல், குறைகூறி சோர்வடையச் செய்வதையும் பார்த்திருக்கிறோம். ஒருவேளை நமக்கேகூட அப்படி நடந்திருக்கலாம்.

இறைமகன் இயேசுவின் வாழ்விலும் இந்த அனுபவம் நிகழ்ந்திருக்கிறது என்பது நமக்கு வியப்பைத் தருகிறது. ஆறுதலும் தருகிறது. இயேசுவுக்கே இந்தக் கதி என்றால், நமக்கு எந்தக் கதி?

இன்றைய வாசகம் இதனை மாற்றி அமைக்க அறைகூவல் விடுக்கிறது. நமது வீட்டில் நம்மோடு வாழும் சொந்தங்களைப் பற்றிச் சிறிது சிந்தித்து, முதலில் அவர்களை ஏற்கவும், மதிக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் கற்றுக்கொள்வோம். ஊhயசவைல டிநபiளெ யவ hழஅந
என்ற வாக்கிற்கேற்ப நம் சொந்த இல்லத்தில் உள்ளோரை அன்பு செய்யவும், மதிக்கவும் இன்று உறுதி பூணுவோமா?

மன்றாடுவோம்; தந்தையின் விருப்பப்படி வாழ்ந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். உமது சொந்த ஊரினர், உறவினர் உம்மை ஏற்றுக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் மறுத்த நிகழ்வு என் கண்களைத் திறப்பதாக. எனது சொந்தங்கள், உறவுகளை நிறை, குறைகளோடு ஏற்றுக்கொள்ளவும், பாராட்டி மதிக்கவும், அன்பு செய்யவும், ஊக்கப்படுத்தவும் எனக்கு அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

''இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக் கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார்...
அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்'' (மத்தேயு 13:54,57)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு நற்செய்தியில் வருகின்ற ஓர் அடிப்படையான கருத்து இயேசுவை ஏற்றவர்கள் சிலர் அவரை ஏற்க மறுத்தவர்கள் சிலர் என்பதாகும். இயேசுவின் போதனையில் ''ஞானம்'' வெளிப்பட்டது; அவர் செய்த புதுமைகளில் கடவுளின் ''வல்லமை'' தோன்றியது. இதை இயேசுவின் சொந்த ஊராரான நாசரேத்து மக்கள் நன்றாகவே அறிந்திருந்தார்கள் (மத் 13:54). ஆயினும் அவர்களுக்கு இயேசுவின் பெற்றோர் யார் என்றும், அவருடைய உறவினர் யார் என்றும் தெரிந்திருந்ததால் இயேசுவும் ஒரு சாதாரண மனிதர் தானே என முடிவுசெய்துவிடுகிறார்கள். ஆக, இயேசுவைப் பற்றிய ''வியப்பு'' ஒருபுறம், அவரைப் பற்றித் தமக்கு எல்லாம் தெரியுமே என்னும் அலட்சியப் போக்கு மறுபுறம் - இவை நாசரேத்து மக்களின் கண்களை மறைத்துவிட்டன. இயேசு உண்மையிலேயே யார் என்பதை அவர்கள் காணத் தவறிவிட்டார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் தங்கள் கண்களை மறைத்த திரையை அகற்ற முன்வரவில்லை.

-- இயேசுவைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? அவருடைய போதனை நம் உள்ளத்தைத் தொட்டு அதை உருகவைக்கிறதா? அவர் மக்களின் நன்மைக்காகப் புரிந்த அரும் செயல்கள் நம்மில் ''நம்பிக்கை'' என்னும் தீபத்தை ஏற்றிவைக்கிறதா? இயேசுவின் போதனையையும் சாதனையையும் கண்டு வியப்போர் எல்லாம் அவரில் நம்பிக்கை கொள்வதில்லை. அந்த நம்பிக்கை நம்மில் எழ வேண்டும் என்றால் நம்மைப் பற்றிக்கொண்டிருக்கின்ற முற்சாய்வுகளை நாம் களைந்திட வேண்டும். நம் உள்ளம் கபடற்றதாக மாறிட வேண்டும். அப்போது நாம் கடவுளின் அருளை நம் உள்ளத்தில் ஏற்றிட முன்வருவோம். நம்பிக்கை என்னும் ஒளி நம்மில் கதிர்வீசத் தொடங்கும். இயேசுவின் சீடர்கள் ''நம்பிக்கை குன்றியவர்களாக'' இருந்தார்கள் (காண்க: மத் 6:30; 8:26; 14:31; 16:8). ஆனால் அவருடைய சொந்த ஊர் மக்களோ ''நம்பிக்கை இல்லாதவர்களாக'' மாறிவிட்டார்கள் (மத் 14:58). நம்பிக்கை நம்மில் எழும்போது கடவுளின் வல்ல செயல்கள் நம் வாழ்வில் நிகழ்வதை நாம் கண்டு உணர்வோம்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனில் நம்பிக்கை கொண்டு வாழ எங்களுக்கு அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?" (மத்தேயு 13:54)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில், சாதாரண நிகழ்ச்சிகளில் கடவுளின் பிரசன்னத்தைக் காண நாம் தவறிவிடுவதுண்டு. இதுதான் இயேசுவின் கால மக்களுக்கும் நடந்தது. இயேசு மக்களுக்கு இறையாட்சி பற்றிய அரிய கருத்துக்களை வெவ்வேறு இடங்களில் போதித்துவிட்டுத் தம் சொந்த ஊராகிய நாசரேத்துக்கு வருகிறார். அங்கே தொழுகைக் கூடத்தில் மக்களுக்குக் கற்பிக்கிறார். அவர்களுக்கு ஒரே வியப்பு! நம் ஊரில் வளர்ந்த இவர் இவ்வளவு ஞானத்தோடு பேசுகிறாரே என்று அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். இந்த வியப்பை நாம் இரு கோணங்களிலிருந்து பார்க்கலாம். வியப்பு சில வேளைகளில் ஒரு நிகழ்ச்சியை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள முதல் படி ஆகலாம். வேறு தருணங்களில் வியப்பு ஒரு நிகழ்ச்சியின் உண்மைப் பொருளைக் கண்டுகொள்வதிலிருந்து நம்மைத் திசைதிருப்பிவிடலாம். நாசரேத்து ஊர் மக்களைப் பொறுத்தமட்டில் நடந்தது இதுதான். அவர்கள் இயேசுவின் ஞானத்தைக் கண்டு வியந்தபோதிலும் அந்த ஞானம் அவருக்கு எங்கிருந்து வந்தது என்னும் கேள்வியை எழுப்பியபோதிலும், அவர் சாதாரண மனிதர்தானே, நம்மில் ஒருவர்தானே என்ற எண்ணத்தில் உறைந்துபோனார்கள். அந்த மன நிலையிலிருந்து அவர்கள் விடுபடாததால் இயேசுவிடம் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் உள்ளது என்பதைக் காணத் தவறிவிட்டார்கள். ஒருவிதத்தில் நாசரேத்து மக்கள் இயேசுவை நன்கு தெரிந்திருந்ததால், அல்லது அவரை நன்கு தெரியும் என்று நினைத்துக்கொண்டதால், இறையாட்சி பற்றி அவர் அறிவித்த அரிய போதனையைத் திறந்த மனத்தோடும் நம்பிக்கையோடும் ஏற்க முன்வரவில்லை. எனவே, இயேசு அவர்களிடம், "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்று கூறினார்.

-- ஒவ்வொரு நாளும் நடக்கின்ற சாதாரண நிகழ்ச்சிகளில் கடவுளின் உடனிருப்பை நாம் எவ்வாறு காண்கிறோம்? நம்மைச் சந்திக்க வருகின்ற கடவுளை நாம் திறந்த மனத்தோடு ஏற்கும்போது நம் அன்றாட அனுபவத்திலும் அவருடைய செயல் துலங்குவதை நாம் காணலாம். நம் அகக் கண்களை மூடிக்கொண்டு, நம் அன்றாட அனுபவங்களை ஆழமாக நாம் நோக்காவிட்டால் கடவுள் ஆங்கிருந்து செயல்படுவதைக் காண நாம் தவறிவிடுவோம். வெளித்தோற்றத்தைக் கொண்டு மட்டும் நாம் தீர்ப்பிடாமல், புறப் பார்வையில் தெரிவதையும் தாண்டிச்சென்று நம் அனுபவத்தின் தொடுவானத்தைக் கருத்தில் கொண்டு சிந்தித்தால் அங்கே நம் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளுக்குப் பொருள்தருகின்ற கடவுளின் பிரசன்னம் ஒளிமயமாகத் தோன்றி மிளிர்வதைக் கண்டு உணர்ந்துகொள்வோம். இதுவே கடவுளிடம், இயேசுவிடம் நம்பிக்கை கொள்வதற்கு நாம் எடுத்துவைக்கும் முதல் அடி.

மன்றாட்டு
இறைவா, உம் உடனிருப்பைக் கண்டுகொள்ள எங்கள் அகக் கண்களைத் திறந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

பழகிவிட்டால் பால் புளிக்குமோ ?

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நதிமூலம் ரிஷிமூலம் இரண்டையும் பார்க்கக்கூடாது என்பார்கள். இந்த இரண்டையும் பார்த்தால் தாகம் -உடல் தாகம், ஆன்ம தாகம் - இரண்டும் தீராமல் தீங்குர நேரிடும்.

இந்த நதி எங்கே உற்பத்தியாகிறது,எங்கெல்லாம் ஓடுகிறது, என்னவெல்லாம் கலக்கிறது, யார் யார் கால்படுகிறது, என்ற கதையெல்லாம் ஆராய்ந்தால், உன் கதை ஒன்றும் நடக்காது. அதுபோலத்தான் துறவியும் குருக்களும். இவருக்கு எந்த ஊர்? எந்த சாதி ? என்னரூhநடடip;.. .. என்னரூhநடடip;.. ? இதுபோன்ற ஆய்வுகள் சரியான புறிதலைத் தராத காரணத்தால் பல இழப்புககளைச் சந்திக்க நேரிடுவது இயல்பு.

நடந்ததும் அதுதான். "எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோப்பு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?"
விழைவு, அங்கு அவர் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை. நல்லவைகள் மக்களுக்குக் கிடைக்கவில்லை. அடுத்தவரைப்பற்றிய தேவையற்ற ஆய்வுக்கு உட்படுவோமாயின் நம் நிலையும் இதுதான்.
அதற்கு மாராக, அடுத்தவரைப்பற்றிய நன்மைகள், நல்லவைகள், நற்பண்புகள் இவற்றை அறிந்துகொள்ள முற்படுவோம். அது உறவை வளர்த்து நன்மைகளைப் பெற்றுத் தரும்.
நல்லவைகளைக் காண்போம் நற்பலன் பெறுவோம்.

--அருட்திரு ஜோசப் லீயோன்