முதல் வாசகம்
இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 26: 11-16,24

அந்நாள்களில் குருக்களும் இறைவாக்கினரும் தலைவர்களையும் மக்கள் அனைவரையும் நோக்கி, ``இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்; ஏனெனில் நீங்களே உங்கள் காதால் கேட்டதுபோல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்'' என்று முறையிட்டனர். அப்பொழுது தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரிடமும் எரேமியா கூறியது: ``நீங்கள் கேட்ட இச்சொற்களை எல்லாம் இக்கோவிலுக்கும் இந்நகருக்கும் எதிராக அறிவிக்குமாறு ஆண்டவரே என்னை அனுப்பி யுள்ளார். எனவே, இப்பொழுதே உங்கள் வழிகளையும் செயல்களையும் சீர்படுத்திக்கொள்ளுங்கள்; உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுங்கள். அப்பொழுது உங்களுக்கு அறிவித்திருந்த தண்டனை பற்றி ஆண்டவர் தம் மனத்தை மாற்றிக்கொள்வார். இதோ, நான் உங்கள் கையில் இருக்கிறேன். நல்லது எனவும் நேரியது எனவும் நீங்கள் கருதுவதை எனக்குச் செய்யுங்கள். ஆனால் ஒன்றை மட்டும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்; என்னை நீங்கள் கொல்வீர்களாகில், மாசற்ற இரத்தப்பழி உங்கள் மேலும் இந்நகர் மேலும், அதில் குடியிருப்போர் மேலும் உறுதியாக வந்து விழும். ஏனெனில் இச்சொற்கள் எல்லாம் உங்கள் செவிகளில் விழுமாறு உரைக்க ஆண்டவர் உங்களிடம் என்னை உண்மையாகவே அனுப்பியுள்ளார்.'' பின்னர் தலைவர்களும் மக்கள் எல்லாரும் குருக்களையும் இறைவாக்கினரையும் நோக்கி, ``கொலைத் தீர்ப்பு இந்த ஆளுக்கு வேண்டாம்; ஏனெனில் நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே இவன் நம்மிடம் பேசியுள்ளான்'' என்றார்கள். ஆனால், மக்கள் கையில் எரேமியா அகப்பட்டுக் கொல்லப்படாதவாறு, சாப்பானின் மகன் அகிக்காம் அவருக்கு உறுதுணையாய் இருந்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 69: 14-15. 29-30. 32-33
பல்லவி: எனது விண்ணப்பத்திற்கு கடவுளே பதில் மொழி தாரும்.

14 சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்;
என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்.
15 பெருவெள்ளம் என்னை அடித்துக் கொண்டு போகாதிருப்பதாக!
ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக!
படுகுழி தன் வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக! -பல்லவி

29 எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்;
கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!
30 கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்;
அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன். -பல்லவி

32 எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்;
கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33 ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்;
சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை. -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. அல்லேலூயா.

மத்தேயு 14:1-12

பொதுக்காலம் 17 வாரம் சனி

நற்செய்தி வாசகம்
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 1-12

அக்காலத்தில் குறுநில மன்னன் ஏரோது, இயேசுவைப் பற்றிய செய்தியைக் கேள்வியுற்றான். அவன் தன் ஊழியரிடம், ``இவர் திருமுழுக்கு யோவான்தான். இறந்த யோவானைக் கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார். இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்'' என்று கூறினான். ஏரோது தன் சகோதரனான பிலிப்பின் மனைவியாகிய ஏரோதியாவின் பொருட்டு யோவானைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான். ஏனெனில் யோவான் அவனிடம், ``நீர் அவளை வைத்திருப்பது முறையல்ல'' என்று சொல்லி வந்தார். ஏரோது அவரைக் கொலை செய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர் அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான். ஏரோதின் பிறந்த நாளில் ஏரோதியாளின் மகள் அவையினர் நடுவில் நடனம் ஆடி ஏரோதை அகமகிழச் செய்தாள். அதனால் அவள் எதைக் கேட்டாலும் அளிப்பதாக அவன் ஒரு வாக்குறுதியை ஆணையிட்டு அறிவித்தான். அவள் தன் தாய் சொல்லிக் கொடுத்தபடியே, ``திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இங்கேயே எனக்குக் கொடும்'' என்று கேட்டாள். இதைக் கேட்ட அரசன் வருந்தினான்; ஆனாலும் தான் விருந்தினர்முன் ஆணையிட்டதால் அதை அவளுக்குக் கொடுக்கக் கட்டளையிட்டான்; ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின் தலையை வெட்டச் செய்தான்; அவருடைய தலையை ஒரு தட்டில் வைத்துக் கொண்டு வரச் செய்து அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொண்டு சென்றாள். யோவானுடைய சீடர் வந்து அவருடைய உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்; பின்னர் இந்நிகழ்ச்சியினை இயேசுவிடம் போய் அறிவித்தனர்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

கனிவோடு கண்டிப்பது கடமையே!
மத்தேயு 14:1-12

நம்மோடு வாழும் ஒருசிலர் தவறான வழிகளில் நடக்கும் போது அவர்களுக்கு ஆழமான ஆன்மீக அறிவுரை வழங்கி அவர்களை ஆண்டவரின் அருகில் கொண்டு வர உதவி செய்ய வேண்டியது அவர் அருகில் இருக்கும் நம் கடமை. அறிவுரை சொல்லும் போது ஒருவேளை கேட்காமல் போனால் கனிவோடும் மிகுந்த அக்கறையோடும் கண்டிப்பது மிகவும் அவசியம்.

இன்றைய நற்செய்தி வாசகம் திருமுழுக்கு யோவானின் கனிவாக கண்டிப்பை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது. திருமுழுக்கு யோவான் தன் சகோதரனின் மனைவியை ஏரோது வைத்திருப்பது முறையல்ல என அவனை கனிவோடு கண்டிக்கிறார்.

திருமுழுக்கு யோவானின் இந்த கண்டிப்பு இரண்டு அவசியமான காரணங்களுக்காக.1) ஒருவனுக்கு ஒருத்தி என்ற ஒழுங்கை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், வருங்கால தலைமுறையினருக்கு அது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவும் 2) தவறு என்றால் அது யார் செய்தாலும் அது தவறுதான் என்பதை அழுத்தமாக அறிவிக்கவும்

இந்த இரண்டு காரணங்களை அவர் தெளிவாக மனதில் வைத்து அவர் ஏரோதை கண்டித்ததால் கிடைத்தது என்ன? மரணம். தலை வெட்டப்பட்டது. உண்மைக்காக, ஒழுக்கநிலையை உருவாக்கியதற்காக, நன்மை செய்ததற்காக அவர் உயிர் எடுக்கப்பட்டது. மரணம் தன்னை தழுவிக்கொள்ளும் என அறிந்தும் அவர் அந்த கண்டிப்பை ஏரோதுக்கு கொடுத்தார். அதை தன் தலையாய கடமை என உணா்ந்ததாலே அவ்வாறு செய்தார்.

மனதில் கேட்க…
• கனிவோடு கண்டிப்பது என் கடமைதானே?
• கண்டிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகளை ஏற்க தயாராக இருக்கிறேனா?

மனதில் பதிக்க…
"பிள்ளாய், ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாம் எனத் தள்ளிவிடாதே(எபி 12:5)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எரேமியா 26: 11 – 16, 24
நாம் பார்க்க வேண்டிய பார்வை

எரேமியாவின் இறைவாக்கு இரண்டு விதமாக பார்க்கப்படுகிறது. குருக்களும், இறைவாக்கினராக அதிகாரவர்க்கத்தால் அறியப்பட்டவர்களும், "இந்த ஆள் கொலைத் தீர்ப்புக்கு உரியவன்: ஏனெனில், நீங்களே உங்கள் காதால் கேட்டது போல, இந்நகருக்கு எதிராக இவன் இறைவாக்கு உரைத்துள்ளான்" என்றனர். ஆனால், இறைவாக்கினர் எரேமியாவின் வார்த்தைகளைக் கேட்ட தலைவர்களும், மக்களும், "நம் கடவுளான ஆண்டவரின் பெயராலேயே, இவன் நம்மிடம் பேசியுள்ளான்" என்று, அவருக்கு ஆதரவாகவும், கடவுளுக்கு எதிராக தாங்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறை தவறு என்கிற குற்ற உணர்ச்சியிலும் பேசுகிறார்கள். ஆக, இரண்டுவிதமான பார்வை, இறைவாக்கினர் முன் வைக்கப்படுகிறது.

சாதாரண மக்களின் விசுவாசம் உண்மையில் மிகப்பெரியது. அவர்கள் கடவுளை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். அவர்களின் விசுவாசத்திற்கு ஏன்? எப்படி? என்கிற கேள்விகளுக்கான பதில் தேவையில்லை. மாறாக, கடவுளை வெறுமனே நம்புகிறார்கள். அவர்களது இந்த நம்பிக்கை தான், அவர்களைப் பொறுத்தவரையில் விசுவாசம். ஆனால், இறைவார்த்தையை அறிவிக்கிற இறைவனின் ஊழியர்களில் ஒரு சிலர், தங்களது அறிவாற்றலால் விசுவாசத்தைக் காண முயல்கிறார்கள். கடவுளின் வார்த்தையை கடவுள் விரும்பியவாறு அறிவிப்பதை விட, தங்கள் அறிவாற்றலின் துணைகொண்டு, விளக்குவதற்கு முற்படுகிறார்கள். கடவுளை நம்புவதை விட, தங்கள் அறிவின் மீது அவர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். இது தவறான பார்வை. அழிவுக்கு அழைத்துச் செல்லும் பாதை என்பதை, அவர்களுடைய வார்த்தைகளே நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

இறைவனை நம்முடைய அறிவாற்றலின் துணை கொண்டு எப்போதுமே அறிந்து கொள்ள முடியாது. அனுபவிக்கவும் முடியாது. இறைவனை அறிய வேண்டுமென்றால், அனுபவிக்க வேண்டுமென்றால், எளிய மக்கள் கொண்டிருக்கிற அந்த விசுவாசத்தைக் கொண்டிருக்க வேண்டும். அந்த விசுவாசம் நம்மை உறுதிபட, இறையனுபவத்திற்கு அழைத்துச் செல்லும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

நன்மை செய்வதே வாழ்க்கை

”ஓய்வுநாளில் குணப்படுத்துவது முறையா? இல்லையா?” – என்பது கடினமான கேள்வி. பதில் சொல்ல முடியாத கேள்வியல்ல. ஆனால், பதில் சொல்ல தயங்கக்கூடிய கேள்வி. அப்படிப்பட்ட கேள்வியை இயேசு கேட்கிறார். நிச்சயம், பரிசேயர்களின் உள்ளத்தில், அதற்கான பதில் உடனே வந்திருக்கும். ”முறையல்ல” என்பதாகத்தான், அவர்களுடைய பதில் இருந்திருக்கும். ஆனாலும், சொல்லத் தயங்குகிறார்கள். ஏன்? அவர்களைப் பொறுத்தவரையில் அது சரியான பதிலாக இருந்தாலும், அவர்களின் பதில் மக்கள் மத்தியில் வெறுப்பைக் கொடுக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். எனவே தான், அமைதியாக இருந்தனர்.

சாதாரண மக்களுக்கு தெரிந்த மனிதநேயம் கூட பரிசேயர்களுக்கு தெரியாதது வேதனையிலும் வேதனை. அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசினார்கள். சாதாரண பாமர மக்கள், மனிதநேயத்தைக் காப்பாற்றுவதுதான், சிறந்த ஒன்றாக இருக்கும் என எண்ணுகிறபோது, படித்த, அறிவாற்றலோடு விளங்குகிற பரிசேயர்கள், அதைப்பற்றிய சிந்தனையே இல்லாமல் இருப்பது, நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அதிகாரத்தில் இருக்கிறவர்களும், ஆணவத்தில் இருக்கிறவர்களும் இத்தகைய மனநிலையோடு தான் இருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்திலிருந்து, இத்தகைய எண்ணங்கள் களையப்பட வேண்டும்.

இயேசு அதிகாரவர்க்கத்தினருக்கு பயந்தவர் அல்ல. நன்மை செய்ய வேண்டும் என்றால், நன்மை கிடைக்கும் என்றால், அதற்கான எத்தகைய கடினமான முயற்சியையும் எடுப்பதற்கு தயங்காதவர். அந்த துணிவு தான், சென்ற இடங்களில் எல்லாம் இயேசுவை நன்மை செய்ய தூண்டியது. நாமும், இயேசுவைப்போல நன்மை செய்ய தயங்காது வாழ அருள்வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

பலவீனங்களை வெற்றி கொள்வோம்

ஏரோது ஒரு பலவீனமான மனிதன் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்க முடிகிறது. சாதாரணமாக தான் கொடுத்த ஒரு வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக, உயிராக மதிக்கப்படும் சட்டத்தையே காவு கொடுத்தவர் இந்த ஏரோது. தான் செய்வது மிகப்பெரிய தவறு என்பது, ஏரோது அறியாதது அல்ல. ஆனால், ஏரோதியாவுடனான நெருக்கம், மயக்கம், பயம் அனைத்தும், இந்த தவறை அவர் துணிவோடு செய்வதற்கு உதவி செய்தது. தான் செய்யப்போவது தவறு என்று தெரிந்தும், எதைச்செய்தால் அது சரியாக இருக்கும் என்பதை அறிந்தும், தவறுக்கு துணைபோனால், அதுதான் பலவீனம். ஏரோது இந்த பலவீனத்திற்குச் சொந்தக்காரர்.

ஏரோதியாவுடனான இந்த தவறான உறவு எந்தவிதத்திலும் ஏதோதுவிற்கு நன்மையைத்தரவில்லை. தனது முதல் மனைவியை விலக்கியதால், முதல் மனைவியின் தந்தையான, நாப்தானியர்களின் அரசனான அரேற்றஸ், போரிலே ஏரோதுவைத் தோற்கடித்து தனது கோபத்தைத் தீர்த்துக்கொண்டான். உரோமையர்களின் உதவி இருந்ததால், தனது பதவியை, போரில் தோற்றாலும் தக்கவைத்துக்கொண்டான். கலிகுல்லா உரோமை அரசராகப் பதவியேற்றபோது, ஏரோதியாவின் நச்சரிப்பால், சிறப்புப்பட்டங்கள் பெறுவதற்கு முயற்சி எடுத்தான். இறுதியில் குற்றம்சாட்டப்பட்டு, நாடுகடத்தப்பட்டார். இவ்வாறு ஏரோதியாவின் உறவினால், தனது வாழ்க்கையே நாசமாகிக்கொண்டிருந்தாலும், அதையே அறிந்திருந்தாலும், அதைவிட்டு விலக முடியாமல் வாழ்ந்த ஏரோது உண்மையில் பலவீனமானவன் தான்.

பலவீனம் தவறல்ல. தனது பலவீனம் தெரிந்திருந்தும், அதனால் தனக்கு ஏற்படும் பாதகங்களை அறிந்திருந்தும், அந்த பலவீனத்திலே வீழ்ந்து கிடப்பதுதான் தவறு. நமது வாழ்விலும் நமது பலவீனங்களை அறிந்திருந்தாலும், அதனால் நமக்கு வரும் துன்பங்களைத் தெரிந்திருந்தாலும், அவற்றில் வீழ்ந்து கிடந்தால், நிச்சயம் அது தவிர்க்கப்பட வேண்டும். இயேசுவின் துணைகொண்டு, நமது பலவீனங்களை வெற்றிகொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

மனச்சான்றின் குரலுக்குச் செவிமடுப்போம்

பெரிய ஏரோதுக்கு பல பிள்ளைகள் இருந்தார்கள். தான் இறக்கும்போது உரோமையர்களின் ஒப்புதலுடன், தன்னுடைய நாட்டை மூன்று பிள்ளைகளுக்கு பிரித்துக்கொடுத்தார். அவர்கள் ஆர்க்கெலாஸ், பிலிப் மற்றும் இன்றைய நற்செய்தியில் வருகின்ற அந்திபாஸ் ஏரோது. ஏரோது அந்திபாஸ் தன் சகோதரன் பிலிப்பு பொறுப்பாளராக இருந்த உரோமை நகருக்குச்சென்றபோது, அவனுடைய மனைவியை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்து தனது மனைவியாக்கிக் கொள்கிறான். இதன்மூலம், ஏரோது இரண்டு தவறுகளைச் செய்கிறான். ஒன்று தன்னுடைய சகோதரன் மனைவியை தன்னுடைய மனைவியாக்கியது. இரண்டாவது, இப்படித்தவறான வாழ்வு வாழ தன்னுடைய மனைவியை எந்தக் காரணமும் இல்லாமல் விவாகரத்து செய்தது. திருமுழுக்கு யோவான் இதைத்தான் கண்டிக்கிறார்.

“அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்” என்பதைப்போல, தான் யோவானைக் கொன்றது தவறு என்கிற குற்ற உணர்ச்சி, ஏரோதுவைப் புலம்ப வைக்கிறது. தவறு என்று தெரிந்தும், தவறைச்செய்தால், நிம்மதியற்ற வாழ்வுதான் நமக்கு மிஞ்சும் என்பதை ஏரோதுவின் வாழ்வு நமக்கு எச்சரிக்கையாக இருக்கிறது. தவறுவது மனித இயல்பு என்று சொல்வார்கள். இது தவறு செய்கிற அனைவருக்குமே பொருந்தாது. நிச்சயமாக, தெரிந்தே தவறு செய்கிறவர்களுக்கு இது பொருந்தாது. நன்றாக வாழ வேண்டும், நிறைவாக வாழ வேண்டும் என்று நாம் முயற்சி எடுத்து வாழ நினைக்கின்ற போது, தவறினால், நாம் துவண்டுவிடக்கூடாது என்பதற்காக சொல்லப்பட்ட இந்த ஆறுதல் வார்த்தைகளை நாம் செய்கிற தவறுகளுக்கு நியாயம் கற்பிக்கின்ற வார்த்தைகளாக, மாற்றிவிடக்கூடாது.

ஏரோதுவுக்கு தான் செய்வது முழுக்கு, முழுக்க தவறு என்பது நன்றாகத் தெரியும். இருந்தும் தவறைத் துணிந்து செய்கிறான். இறுதியில் நிம்மதியற்ற வாழ்வு வாழ்கிறான். நிம்மதியற்ற வாழ்வு, கடவுள் கொடுத்த கொடையாகிய வாழ்வை சூன்யமாக்கிவிடும். எனவே தவறு செய்கிறவர்களுக்கு அஞ்சுகிறவர்களாக வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

இறைவாக்கினரின் அடைக்கலம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எரேமியா எருசலேம் நகருக்கும், கோவிலுக்கும் எதிராக இறைவாக்கு உரைத்ததால், மக்களும், குருக்களும் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தினர். அவருக்குக் கொலைத் தண்டனை அளிக்க வேண்டும் என்று வாதிட்டனர். எரேமியாவோ தான் கடவுள் தனக்கு இட்ட பணியை செய்வதாக பதில் தருகிறார். இயேசுவை எருசலேமில் விசாரணை செய்து கோவிலுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம் சாட்டியதையும், அதற்கு இயேசு தந்தை இறைவன் தந்த பணியையே தான் நிறைவேற்றுவதாகச் சொன்னதையும் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறோம். அனைத்து இறைவாக்கினர்களுக்கும் ஒரே முடிவுதான். அவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள். ஆனால், இறைவன் அவர்களைக் கைவிடுவதில்லை. எரேமியாவுக்கு இறைவன் வலிமையான மனிதர்களைப் பாதுகாப்பாளர்களாக, ஆதரவாளர்களாகத் தந்திருந்தார். சாப்பானின் மகன் அகிக்காம் எரேமியாவுக்கு உறுதுணையாக இருந்தார் என்று இன்றைய வாசகம் நிறைவுபெறுகிறது. ஆண்டவருக்காக வாழ்கிறவர்களை அவர் என்றுமே கைவிடுவதில்லை.

 

மன்றாடுவோம்: நம்பினோரைக் கைவிடாத நல்ல இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எரேமியா இறைவாக்கினரை சாவின் பிடியிலிருந்து காத்தீரே. உமது நற்செய்திப் பணியாளர்கள் அனைவரையும் உமது உள்ளங்கைகளில் பொறித்துவைத்து, உமது கண்ணின் மணி போலக் காத்தருள உம்மை வேண்டுகிறோம்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

ஏரோதும் யோவானும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு விதமான மனிதர்களைக் காண்கிறோம்;

நெற்றிக் கண் திறந்தாலும், குற்றம் குற்றமே என்று துணிவுடன் ஏரோதின் பாவத்தைச் சுட்டிக்காட்டிய இறைவாக்கினர் யோவான். யோவானின் வார்த்தைகளுக்கும் அஞ்சி, மனைவி ஏரோதியாவுக்கும் அஞ்சி, யோவானை இறைவாக்கினர் எனக் கருதிய மக்கள் கூட்டத்துக்கும் அஞ்சி, அஞ்சி வாழ்ந்த ஏரோது.

நன்றாகத்தான் சொன்னார்கள்; வீரன் ஒருமுறை சாகிறான், கோழையோ தினம் தினம் சாகிறான் என்று. இம்மொழி யோவானுக்கும், ஏரோதுக்கும் நன்றாகப் பொருந்துகிறது. கடவுளுக்கும், மனச்சான்றுக்கும் அஞ்சுபவர்கள் வேறு எதற்கும், யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை. கடவுளுக்கும், மனச்சான்றுக்கும் அஞ்சாதவர்கள் மற்ற அனைத்துக்கும், அனைவருக்கும் அஞ்ச வேண்டியதிருக்கிறது.

கடவுளுக்கு அஞ்சி, தீமையைத் துணிவுடன் சுட்டிக்காட்டும் அனைவரும் இறைவாக்கினர்களே. அத்தகைய இறைவாக்குப் பணிக்கு இன்று இறைவன் உங்களையும், என்னையும் அழைக்கிறார். நாம் யாருக்கும் அஞ்சவேண்டாம். இறைவனுக்கும், அவர் நம் இதயத்தில் பதித்துள்ள மனச்சான்றிற்கு மட்டும் அஞ்சும் வரத்தை இறைவனிடம் கேட்போம்.

மன்றாடுவோம்; அஞ்சாதீர்கள் என்று மொழிந்த இறைவா, அஞ்சா நெஞ்சுடன் இறைவாக்குரைத்து, உமக்கு சான்று பகர்ந்த திருமுழுக்கு யோவானுக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். தீமையைக் கண்டு அஞ்சவும், தீமை செய்வோரைக் கண்டு அஞ்சாதிருக்கவும் எங்களுக்கு உமது ஆவியின் ஆற்றலைத் தாரும். யோவானைப் போல நாங்களும் அச்சமற்ற இறைவாக்கினராக வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

''ஏரோது திருமுழுக்கு யோவானைக் கொலைசெய்ய விரும்பினான்; ஆயினும் மக்கள் கூட்டத்தினர்
அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்'' (மத்தேயு 14:5)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருமுழுக்கு யோவான் இயேசுவின் வருகையை முன்னறிவித்து, இயேசுவுக்குத் திருமுழுக்குக் கொடுத்தவர். அவருடைய வாழ்வும் சாவும் இயேசுவின் வாழ்வையும் சாவையும் பெரிதும் ஒத்திருப்பதை மத்தேயு கோடிட்டுக் காட்டுகிறார். கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கிறது என்னும் நல்ல செய்தியை இருவரும் துணிச்சலோடு அறிவித்தனர் (காண்க: மத் 3:1-10). இருவருமே மக்களின் எதிர்ப்பைச் சந்தித்தனர் (காண்க: மத் 11:18-19). அதிகார வர்க்கத்தின் அட்டூழியத்தின் காரணமாக இருவருமே கைதுசெய்யப்பட்டு அநியாயமாக் கொலைசெய்யப்பட்டனர். இவ்வாறே இயேசுவின் சீடர்களுக்கும் நிகழும் எனவும் இயேசு முன்னறிவித்தார் (காண்க: மத் 10:17-18).

-- திருமுழுக்கு யோவானைக் கொலைசெய்த ஏரோது (அந்திப்பா என்பதும் அவன் பெயர்) வரலாற்றில் வருகின்ற பெரிய ஏரோது என்னும் மன்னனின் மகன். தன் தந்தையின் சாவுக்குப் பிறகு கலிலேயாவின் தெற்குப் பகுதிக்குக் குறுநில மன்னன் ஆனான் (மத் 14:1). அங்குதான் இயேசு பெரும்பாலும் பணிபுரிந்தார். இக்குறுநில மன்னனான ஏரோது அந்திப்பா யூத சமய வழக்கத்தை மீறித் தன் சகோதரனான பிலிப்பின் மனைவியைத் தன் மனைவியாக்கிக் கொண்டிருந்தான். அதைக் கண்டித்த யோவானை எப்படியாவது ஒழித்துவிடத் திட்டமிட்டான். இன்றைய உலகிலும் இறைவாக்கு என்பது ''ஆபத்தானது''. உண்மையைத் துணிச்சலோடு எடுத்துரைப்போர் ஆளும் வர்க்கத்தின் சீற்றத்துக்கு ஆளாகின்றனர். அவர்களுடைய உயிருக்கே ஆபத்து எழுகிறது. ஆயினும் இறைவாக்கை யாரும் அணைத்துவிட முடியாது; அதன் வல்லமையை அழிக்கவும் முடியாது. உண்மையின் குரல் எந்நாளும் ஒலித்துக்கொண்டே இருக்கும். இயேசுவின் சீடர் இறைவாக்குப் பணியைத் துணிவுடன் தொடர்ந்திட அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு
இறைவா, உம் சக்தியே எங்களைத் தாங்குகிறது என நாங்கள் உணர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"ஏரோது...ஆள் அனுப்பிச் சிறையில் இருந்த யோவானின்
தலையை வெட்டச் செய்தான்" (மத்தேயு 14:10)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருமுழுக்கு யோவான் ஒரு தலைசிறந்த இறைவாக்கினர். கடவுளுடைய வார்த்தையை அறிவிப்பதில் அவருக்கு ஒருபோதுமே தயக்கம் இருந்ததில்லை. கடவுளின் ஆட்சி நெருங்கிவருகிறது என்னும் செய்தியை யோர்தான் நதிக்கரையில் மக்களுக்கு அறிவித்து, அவர்கள் மனம் திரும்பாவிட்டால் அழிந்தொழிவர் என அவர் முழக்கமிட்டதுண்டு. அதே துணிச்சலோடு அவர் ஏரோது மன்னனின் தவறான நடத்தையைச் சுட்டிக்காட்டி அவனைக் கண்டித்தார். ஏரோதுக்கு யோவானின் மட்டில் மதிப்பு இருந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், அவனோ ஒரு கோழைபோல நடந்துகொள்கிறான். தன் உண்மையான நிலையை யோவான் தனக்கு உணர்த்திக் காட்டியபிறகும் ஏரோது அந்த உண்மையை ஏற்க முன்வரவில்லை. மாறாக, பிறர் தன்னைப் பற்றிக் குறைகூறுவார்களோ என நினைத்து, விவேகமற்ற முறையில் வாக்குக் கொடுத்துவிட்டு, அந்த வாக்கை மீற முடியாது எனவும் தவறாக நினைக்கிறான். எப்படியாயினும், உண்மைக்குச் செவிமடுத்து, உண்மையின் வழியில் நடக்கவும், யோவான் சுட்டிக்காட்டிய உண்மையை ஏற்றிடவும் ஏரோதுக்கு மனமில்லை. அவன் ஒளியைவிட இருளையே தெரிந்துகொள்கிறான்; எனவே, இருளின் வல்லமை மேலோங்கி, ஏரோது தன் உண்மையான மனச் சான்றை உதறி எறிந்துவிட்டுக் கொடூரமான கொலைச்செயலில் ஈடுபடுகிறான்.

-- உண்மை எப்போதும் இனிப்பதில்லை. கசப்பான உண்மையைக் கேட்க நாம் விரும்புவதில்லை. நமக்கு சாதகமானவற்றைப் பிறர் சொன்னால், அல்லது நம்மைப் புகழ்ந்துரைத்தால் நாம் மகிழ்கின்றோம். ஆனால், உண்மையாகவே நம்மிடம் இருக்கின்ற குறைகளை நம் நண்பர்கள் அல்லது நமது நலனை விரும்புவோர் நமக்குச் சுட்டிக்காட்டி நம்மைத் திருத்த முனையும்போது நாம் பல தடவைகளிலும் மகிழ்வதில்லை. மாறாக, சில சமயங்களில் நம்மில் பழிக்குப் பழி என்னும் மனநிலையே மேலோங்கிவிடுகிறது. மேலும், பிறர் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்களோ எனத் தவறாக எண்ணிப் பிறருடைய குற்றத்தைச் சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்தவும் நாம் தயங்குகிறோம். யோவானிடம் துலங்கிய துணிச்சல் நம்மிடமும் துலங்க வேண்டும். அப்போது, உண்மையான இறைவாக்கினராக நாம் செயல்பட முடியும். நமது வாழ்வு கடவுளுக்கு உகந்ததாக இருக்கும்போது, நம்மைச் சூழ்ந்து நிகழ்கின்ற அநீதிகளைக் கண்டிக்கவும் நீதியான சமுதாயம் உருவாக நம்மையே அர்ப்பணிக்கவும் நாம் தயங்கமாட்டோம்.

மன்றாட்டு
இறைவா, உண்மையால் நாங்கள் வழிநடத்தப்பட எங்களை முழுமையாக உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

இறைவன் கொடுத்த வரம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

குற்றம் செய்த திருடனுக்கு யாரைப ;பார்த்தாலும் போலீஸ்காரனாகத்தான் தெரியும். பாவத்தில் வாழ்பவனுக்கும் பார்க்கும் அத்தனை பேரும் இறைவாக்கினராகத்தான் தெரியும்.பயம் வெளியே பிரதிபலிக்கும். "அவரை ஓர் இறைவாக்கினர் எனக் கருதியதால் அவர்களுக்கு அஞ்சினான்." 14:5

அந்த ஏரோது நல்லவன்தான். இறைவாக்கினரை மதிப்பவன். பாவத்துக்கு பயந்தவன். மனிதர்களை மதிப்பவன். கொடுத்த வாக்கைக் காப்பவன். ஆனால் கூட்டணி சரியில்லை. ஏரோதியாளோடு அவருக்குள்ள தொடர்பு அவரை ஒரு காமுகனாக, ஒரு கொலைகாரனாகக்கொண்டு நிருத்தியுள்ளது.

அந்த ஏரோதியாள் ஒரு சந்தர்ப்பவாதி. இறை உணர்வு அற்றவள். கொலையும் செய்வாள். குழந்தையையும் பயன்படுத்துவாள். இதுபோன்ற மனைவி, நண்பன், கூட்டணி அமையுமானால் அரசிழந்து அந்தஸ்திழந்து அலைய நேரிடும்.

நல்ல மனைவி, நண்பன்,உறவு, கூட்டணி அமையும்படி பார்த்துக்கொள். வாழ்வில் உயர்வாய். நல்ல மனைவியாக, நண்பனாக,உறவாக, கூட்டணியாக செயல்படு. உலகம் உன்னைப் பெருமைப்படுத்தும்.

--அருட்திரு ஜோசப் லீயோன்