முதல் வாசகம்

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-4

அன்புக்குரியவர்களே, கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சியும், வெளிப்படவிருக்கும் மாட்சியில் பங்குகொள்ளப் போகிறவனுமாகிய நான், உடன்மூப்பன் என்னும் முறையில் மூப்பர்களுக்குக் கூறும் அறிவுரை: உங்கள் பொறுப்பிலிருக்கும் கடவுளின் மந்தையை நீங்கள் மேய்த்துப் பேணுங்கள்; கட்டாயத்தினால் அல்ல, கடவுளுக்கேற்ப மன உவப்புடன் மேற்பார்வை செய்யுங்கள்; ஊதியத்திற்காகச் செய்யாமல், விருப்போடு பணி செய்யுங்கள். உங்களிடம் ஒப்படைக்கப்பட்டவர்களை அடக்கி ஆளாமல் மந்தைக்கு முன்மாதிரிகளாய் இருங்கள். தலைமை ஆயர் வெளிப்படும் போது, அழியா மாட்சியுள்ள முடியைப் பெற்றுக்கொள்வீர்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 23: 1-3. 4. 5. 6

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2 பசும் புல்வெளி மீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3 அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார். -பல்லவி

4 சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;
எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின் மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா, என்கிறார் ஆண்டவர்.

மத்தேயு 16:13-19

புனித பேதுரு தலைமைப்பீடம் திருவிழா

நற்செய்தி வாசகம்
+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 13-19

அக்காலத்தில் இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி, ``மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் எரேமியா அல்லது பிற இறைவாக்கினருள் ஒருவர் என்றும் சொல்கின்றனர்'' என்றார்கள். ``ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர் கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, ``நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ``யோனாவின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன். ஏனெனில் எந்த மனிதரும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை; மாறாக விண்ணகத்திலுள்ள என் தந்தையே வெளிப்படுத்தியுள்ளார். எனவே நான் உனக்குக் கூறுகிறேன்: உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றிகொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடை செய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

22.02.2024 வியாழன்
வழிநடந்து நடத்தப்பட ...
மத் 16 : 13 - 19

இன்னும் இந்த சமுதாயமானது ஒரு சிலரின் வழிகாட்டுதலை நினைத்து நினைத்து கௌரவப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. கிரிக்கெட் அணியினை வழிநடத்திய எம்.எஸ். தோனி, தமிழ்நாட்டினை வழிநடத்திய காமராசர், இங்கிலாந்து நாட்டு இளவரசி டயானா. காரணம் என்னவென்றால் தாங்கள் இந்த சமுதாயத்திலே எவ்வாறு வழிநடந்தார்களோ, அதுபோலவே மக்களையும் வழிநடத்தினார்கள். அதனால்தான் அவர்களின் தலைமைத்துவம் இன்னும் போற்றப்படக்கூடியதாகவே இருந்து வருகிறது.

இத்தகைய ஒரு வழிநடத்தலின் காரணமாக மற்றவர்களை (திருச்சபையை) வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட விழாவினைத்தான் திருஅவை இன்றைய நாளிலே கொண்டாடி மகிழ்கின்றது. எதற்காக இயேசு பேதுருவை திருச்சபை தலைவராக பொறுப்பேற்றினாரென்றால், மற்ற அனைத்து சீடர்களுமே இயேசுவிடமிருந்து பலனை எதிர்பார்த்தார்கள். ஆனால் எந்தவித கைமாறும் எதிர்பார்க்காத மனிதர் பேதுரு. அதனால்தான் இயேசுவை மெசியாவாக பார்க்கின்றார். மற்றவர்கள் அனைவருமே சாதாரண மனிதனாக பார்த்தார்கள். இதுதான் தலைமைத்துவத்தின் அடிப்படை பண்பு. இதனை உணர்ந்துதான் பேதுரு முதல் வாசகத்தில் தன் மடலில் எழுதுகின்றார். அதாவது எதிர்பாராமல் பணி செய்யுங்கள். இந்த வழிகாட்டுதல் திருச்சபைக்கு வேண்டுமென்றே பேதுருவை தேர்வு செய்கின்றார்.

நாமும் குடும்பம், இயக்கத்திற்கு தலைவராக இருக்கின்றோம். நமது வழிகாட்டுதல் எதன் அடிப்படையில்? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

மத்தேயு 16 : 13- 20
வேர்களைத்தேடி…

அதிகாரம் என்பது ஆட்டுவித்து ஒடுக்குவதற்கல்ல! அன்போடு வழிநடத்துவதற்கு!
அதிகாரம் என்பது வாட்டி வதைப்பதற்கல்;ல! வாஞ்சையோடு இருப்பதற்கு!
அதிகாரம் என்பது திட்டித் தீர்ப்பதற்கல்ல! தீர்க்கமான திட்டமிடுவதற்கு!

இன்றைய நாள் நம் தாய்த் திருஅவையின் முதல் திருத்தந்தை பேதுருவின் தலைமைப்பீடத்தினை நினைவு கூர்ந்து பெருமையோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந் நாளினை நாம் உண்மையிலேயே கொண்டாட வேண்டுமா என்ற கேள்வி பலரின் எண்ணத்தில் உதிப்பது இயற்கையே. ஆனால் இன்று, இக்கட்டான காலகட்டத்தில் இன்னும் சிறப்பாக கொண்டாடக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், வெளியிலிருந்து வரும் பிரச்சனையைக் காட்டிலும் கிறிஸ்தவர்களுக்குள் இருக்கின்ற சவால்கள் மிக அதிகம். இன்று நம் வேர்களை மறந்து வாழும் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் சிலர் நம் வேர்களை திட்டமிட்டு மூடி மறைக்கிறார்கள். வெட்டி அழிக்கிறார்கள். நம் வேர்களைத் தேடி இன்றைய கிறிஸ்தவர்களை அழைத்துச் சென்றாலே பல பிரிவினை சபையைச் சார்ந்தவர்களுக்கு உண்மை எது? என புலப்பட்டுவிடும். அவர்களின் சாயம் வெளுத்து விடும். பாமர மக்களை அவர்களால் ஏமாற்றி பிழைக்கவும் முடியாது. ‘பேதுரு’ என்ற பாறையின் மீது நம் ஆண்டவர் இயேசு கட்டிய இத்திரு அவையின் தலைமைப் பீடத்தை இன்று, “பாறை”யின் வாரிசாக, வாழையடி வாழையாக 266- ஆம் திருத்தந்தை பிரான்சிஸ் அலங்கரிக்கிறார்.

‘நான் கட்டுகின்ற இந்தத் திருஅவையைப் பாதாளத்தின் வாயில்களே வெற்றிக் கொள்ளா’ என்றார் இயேசு. அப்படியிருக்க இன்று பல பேர் கத்தோலிக்க திருஅவையின் சில துளிகளை உதரிவிட்டுவிட்டு கத்தோலிக்க திருஅவையினரை திசை திருப்புகிறார்கள். பாதாளத்தின் வாயில்களை விட இவர்கள் மோசமானவர்களோ? என எண்ணத் தோன்றுகிறது. காரணம் அந்த அளவிற்கு அரைகுறையாய் திருவிவிலியத்தை வாசித்துவிட்டு அவர்களுக்கு தேவைக்கு ஏற்றார்போல் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தூயபேதுருவின் மீது கட்டப்பட்ட திருஅவையை எப்படி இவர்கள் இடிக்க முயல்கின்றனர் என்பதே மிகப் பெரிய கேள்வி. ‘விண்ணரசின் திறவுகோலை நான் உனக்குத் தருவேன்’ என்று இயேசு சொன்னவர்களைப் பார்த்து உங்களுக்கெல்லாம் இரட்சிப்பு இல்லை. நீங்கலெல்லாம் விண்ணகம் செல்ல முடியாது என்று நம்மை எள்ளி நகையாடுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். இவர்களைப் பார்க்கும் போது ‘தந்தையே இவர்கள் செய்வது இன்னவென்று அறியாமல் செய்கிறார்கள், இவர்களை மன்னியும்’ என்பதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. ஒவ்வொரு கிறிஸ்தவனும் தாய் திருஅவையில் மீண்டும் இணைய, இந்த பேதுருவின் தலைமைபீடம் உதவுவதாக. நாம் அவைகளைத்தேடி அவற்றின் ஆழத்தினை அறிய முயல பயணிப்போம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 23: 1 – 3, 4, 5 – 6
”ஆண்டவரே என் ஆயர். எனக்கேதும் குறையில்லை”

தொடக்கநூல் 49: 24 ல், மோசே கடவுளை ”ஆயர்” என்று முதன்முதலாவதாகச் சொல்கிறார். இங்கு தான், இஸ்ரயேலின் ஆண்டவரை ஆயர்  என்று சொல்வதற்கு தொடங்கப்படுகிறது. ஒரு ஆயரின் பணியை தாவீது அரசர் முழுமையாக அறிந்தவர். ஏனென்றால், அவர் ஆடு மேய்க்கக்கூடிய பணியைத்தான் செய்து வந்தார். இறைவாக்கினர் சாமுவேல் ஈசாயின் புதல்வர்களை அணிவகுத்து நிற்கச்செய்து, கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவனை அடையாளம் காண முற்பட்டபோது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதை இறைவன் அவருக்கு அடையாளம் காட்டினார்.

பிற்காலத்தில் அரசராக அவர் அருட்பொழிவு பெற்றாலும், தன்னை ஆயராக மற்றவர்கள் அடையாளம் காண்பதில் பெருமை கொண்டார். ஏனென்றால், மக்களை ஆள்வதும் ஓர் ஆயர் போன்ற பணி தான். இந்த திருப்பாடலில், தாவீது கடவுளை தன் ஆயராகப் பாடுகிறார். அதாவது, கடவுளின் பராமரிப்பில் தான் இருப்பதாக வெளிப்படுத்துகிறார். யாரும் மற்றவர்க்கு கீழே இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அதுவும் அரசராக இருக்கிறவர், ஒரு நிலைக்கு வந்தவுடன், தன்னுடைய நிலையில் தான் இருப்பதை, வழக்கமாகக் கொண்டிருப்பார். ஆனால், தாவீதிடத்தில் அந்த பண்பை நாம் பார்க்க முடியவில்லை. அவர் அரசராக இருந்தாலும், கடவுளை ஆயராக ஏற்றுக்கொள்கின்ற அந்த மனநிலை, அவரது பணிவையும், கடவுள் மீது அவர் கொண்டிருக்கிற ஆழமான நம்பிக்கையையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

நாம் எந்த நிலையிலும் கடவுளுக்கு பணிந்து நடக்க வேண்டும் என்று இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நம் வாழ்வில் நாம் எப்போதுமே கடவுளின் மந்தையில் இடம்பெறக்கூடிய ஆடுகளாக இருக்க வேண்டும். அந்த பணிவை நமது வாழ்வில் வாழ, சிரத்தையுடன் முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------

இறைவனின் அழைத்தல்

கடவுளின் பணிக்காக தங்களையே அர்ப்பணித்திருக்கிற கடவுளின ஊழியர்களுக்கான அதிகாரம் எங்கிருந்து வருகிறது? என்பதை விளக்கக்கூடிய அருமையான பகுதிதான், இன்றைய நற்செய்தி வாசகம். பேதுருவை தலைவராக முடிவு செய்ய வேண்டும் என்று இயேசு நிச்சயமாக ஏற்கெனவே முடிவெடுத்திருக்க மாட்டார். கடவுள் அந்த பொறுப்பை யாருக்கு வைத்திருக்கிறாரோ, அவருக்கே உரியது என்பதில் இயேசு தெளிவாக இருக்கிறார். கடவுளின் திருவுளம் எது? என்பதை அறிவதற்காக இயேசு இந்த கேள்வியைக் கேட்கிறார்.

பேதுருவின் பதிலைக்கேட்டவுடன், இயேசுவுக்கு மகிழ்ச்சி வந்திருக்க வேண்டும். தன்னைப்பற்றி சொன்னதற்காக அல்ல, தனக்கு பிறகு திருச்சபைக்கு யார் தலைவர்? என்பதை, கடவுள் வெளிப்படுத்திவிட்டார் என்பதற்காக. அந்த பதிலை இயேசு நிச்சயமாக ரசித்திருக்க வேண்டும். உடனே இயேசு பேதுருவைப்பார்த்து, அதனை வெளிப்படுத்தியது இறைத்தந்தையே, என்று சான்றுபகர்கிறார். ஆக, கடவுளின் பணியாளர்கள் அனைவருமே, இறைவனால் ஏற்படுத்தப்பட்டவர்கள் என்பதை, இது தெளிவுபடுத்துகிறது. ஒருவருடைய திறமையினால் அல்ல, கடவுளின் அருளால் தான், அழைத்தலைப் பெறமுடியும், என்பது இங்கே நமக்கு தெளிவாகிறது.

கடவுளின் அழைப்பைப் பெற்றிருக்கிறவர்கள் மட்டில், நாம் எந்த அளவுக்கு மதிப்போடும், மாண்போடும் இருக்க வேண்டும் என்பது, இங்கே நமக்குச் சொல்லப்படுகிறது. கடவுளின் அழைப்பைப் பெற்றவர்களுக்கு கீழ்ப்படிந்து, அவர்களுக்கு நம்முடைய முழுமையான ஒத்துழைப்பைக் கொடுப்பதுதான், நமது கடமையாகும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

இயேசுவின் மனஉறுதி

இயேச பிலிப்பு செசரியா நகருக்கு வருகிறார். இதற்கு முந்தைய பகுதிகளைப் பார்த்தால், இயேசுவின் ஏமாற்றம் நன்கு நமக்குத் தெரியவரும். ஏனென்றால், மக்கள் இயேசுவை மெசியா என்று ஏற்றுக்கொள்ள அடையாளங்களைக் கேட்டனர். இயேசு அவர்களிடத்தில் ஏமாற்றமடைகிறார். அவர்களை விபச்சாரத் தலைமுறையினர், என தன்னுடைய ஏமாற்றத்தை, வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். அடுத்து அவருடைய சீடர்கள் அவரை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகின்றனர். ஆக, தொடர் ஏமாற்றங்கள் இயேசுவுக்கு மிகுந்த சோர்வைத்தருகிறது. இவ்வளவுக்கு கடினப்பட்டு உழைக்கிறேன், அதற்கான பலன் இல்லையே என்கிற ஏக்கம், சோர்வாக வெளிப்பட்டு, சற்று தனிமையான இடத்திற்கு தன்னுடைய சீடர்களோடு செல்வதற்கு இயேசுவைத் தூண்டுகிறது.

வடகிழக்குப் பகுதியிலிருந்த கலிலேயா கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 25 மைல்கள் தூரத்தில் பிலிப்பு செசரியா நீண்டு காணப்பட்டது. கலிலேயாவின் மன்னரான ஏரோது அந்திபாசின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டு இந்த நகர் அமைந்திருந்தது. குறுநில மன்னனான பிலிப்பு இதனை ஆண்டு வந்தான். இங்கே இருந்த மக்களில் பெரும்பாலானோர் யூதர் அல்லாத புறவினத்து மக்கள். எனவே, நிச்சயம் இயேசுவுக்கு தன்னுடைய சீடர்களோடு பேசுவதற்கு சரியான இடம். மக்கள் நெருக்கடியிலிருந்து அவருக்கு பாதுகாப்பு. தனது ஏமாற்றத்தைப் புதைத்துக் கொண்டு, சீடர்களுக்கு மீண்டும் தொடக்கத்திலிருந்து பயிற்சி கொடுக்க ஆரம்பிக்கிறார். தன்னை யார்? என்று மக்கள் சொல்வதாகக் கேட்கிறார். இந்த நிகழ்ச்சி, வாழ்வில் எவ்வளவுதான் ஏமாற்றங்கள் வந்தாலும், அதை இயேசு தாங்கிக்கொண்டு, அதனை சரிப்படுத்த எடுக்கக்கூடிய முயற்சிகளையும், இயேசுவின் உறுதியான மனநிலையையும் இது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

நமது வாழ்வில் சோதனைகள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கலாம். நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைக்காமல், தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டிருக்கலாம். ஆனால், உறுதியான உள்ளத்தோடு நாம் வெற்றி பெற, தொடர்ச்சியாக முயற்சி எடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதனை இயேசுவின் வாழ்விலிருந்து கற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

நற்செய்தி அறிவிக்கிற சீடர்களாக வாழ……

பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ரயேல் மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு தான் வாக்களித்த தேசத்தைத் தருகிறார். வாக்களிக்கப்பட்ட மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால், விரைவில் அவர்கள் தங்கள் கடவுளை மறந்துவிட்டு, கடவுளை விட்டு விலகிச்செல்கிறார்கள். அதற்கான பலனை விரைவில் அனுபவிக்கிறார்கள். அடிமைகளாக மாறுகிறார்கள். இந்த நேரத்தில் தங்களின் இந்த நிலைமைக்கு காரணம் தங்களுடைய பாவம் தான் என்பதை உணர்ந்து கடவுளிடம் மன்னிப்பு வேண்டுகிறார்கள். கடவுளும் அவர்களை மீட்பதற்கு மெசியாவை அனுப்புவதாக வாக்குறுதி தருகிறார். எனவே, இஸ்ரயேல் மக்கள் வாக்களிப்பட்ட மெசியாவிற்காக காத்திருக்கிறார்கள்.

இந்தப்பிண்ணனியில் தான் பேதுரு இயேசுவை “மெசியா” என்று சொல்கிறார். இயேசு கிறிஸ்து பேதுரு தன்னைப்பற்றி “தான் மெசியா, உலகிற்கு வரவிருந்தவர்” என்று கூறியதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால், அதேவேளையில் தான் மெசியா என்பதை எவருக்கும் சொல்ல வேண்டாம் என்பதைக் கண்டிப்பாகக்கூறுகிறார். எதற்காக இயேசு தான் மெசியா என்பதை மற்றவர்கள் அறிவதைத்தவிர்க்க வேண்டும்? இயேசுவுடனான நம்முடைய உறவு தனிப்பட்ட உறவு. மற்றவர்கள் சொல்வதனால் நாம் இயேசுவை ஏற்றுக்கொள்வதாக இருக்கக்கூடாது. ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் இயேசுவை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விருப்பம். அனுபவத்திலே வருகிற விசுவாசம் தான் வாழ்வை மாற்றக்கூடிய விசுவாசமாக இருக்கும்.

இயேசுவின் சீடர்களின் வாழ்வில் இதைத்தான் பார்க்கிறோம். இயேசுவோடு மூன்று ஆண்டுகள் இருந்திருந்தாலும் அவர்கள் இயேசுவை அனுபவிக்கவில்லை. எனவேதான், அவருக்கு ஆபத்து என்றதும் தங்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ஓடிவிடுகிறார்கள். ஆனால், என்றைக்கு அவர்கள் இயேசுவை அனுபவித்தார்களோ, அன்றே தங்கள் உயிரை இழந்தாலும் இயேசுவுக்காக வாழ முன்வருகிறார்கள். அப்படிப்பட்ட அனுபவத்தை நாம் பெறுவதே இயேசுவின் விருப்பம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

கடவுளின் கொடை

திருச்சபை என்றால் என்ன? திருச்சபையில் பேதுருவின் பணி என்ன? பேதுருவின் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலாக வருவதுதான் இன்றைய நற்செய்தி. எபேசியர் 2: 20 ல் பார்க்கிறோம்: ”திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட கட்டடமாய் இருக்கிறீர்கள்”. இங்கே திருச்சபையின் மூலைக்கல்லாக இயேசு சுட்டிக்காட்டப்படுகிறார். அவரில்லையென்றால், திருச்சபை உறுதியாக நிற்க முடியாது, என்று நாம் பொருள்படுத்தலாம்.

1பேதுரு 2: 5 ”நீங்கள் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக!” இங்கே ஒவ்வொரு கிறிஸ்தவர்களும், திருச்சபையின் கற்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கள் இல்லையென்றால், திருச்சபை இல்லை. எனவே தான், சவுல் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்தியபோது, தானே துன்புறுத்தப்படுவதாக இயேசு அவரிடம் சொல்கிறார். 1கொரிந்தியர் 3: 11 ல் பார்க்கிறோம், ”ஏற்கெனவே அடித்தளம் இட்டாயிற்று. இவ்வடித்தளம் இயேசு கிறிஸ்துவே. வேறோர் அடித்தளத்தை இட எவராலும் முடியாது”. மேற்சொன்ன அனைத்துமே, இயேசுதான் திருச்சபையின் ஆணி வேர் என்பதை வலியுறுத்திக்கூறுகிறது. அதாவது, இயேசு, பேதுருவின் மேல் திருச்சபையைக் கட்டுவேன் என்று சொன்னபோது, திருச்சபை பேதுருவைச்சார்ந்திருக்கிறது என்று பொருள்படுத்தவில்லை. ஏனெனில், திருச்சபை பாறை என்கிற ஆண்டவரில் அடித்தளம் பெற்றிருக்கிறது. பேதுருவில், திருச்சபை தொடங்கியதாக நாம் அதைப் புரிந்து கொள்ள வேண்டும். பேதுருவுக்கு அது கடவுளால் கொடுக்கப்பட்ட கொடை. அதை யாரும் எடுத்துக்கொள்ளவும் முடியாது. அதை நாம் கேள்விக்குட்படுத்தவும் முடியாது.

கடவுள் தன் பணிக்காக மனிதர்களை அழைக்கிறபோது, தகுதியின் அடிப்படையில் பார்த்தால், யாரும் அழைக்கப்பட முடியாது. அவர்களுக்கு அந்த தகுதியை அவரே தருகிறார். கடவுள் அந்த தகுதியை அவருக்குத்தருகிறபோது, அதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்வதுதான், கடவுளுக்கு மகிமை செலுத்துவது ஆகும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசு எனக்கு யார்?

இயேசுகிறிஸ்துவை எதற்காக திருமுழுக்கு யோவான், எலியா, எரேமியா அல்லது இறைவாக்கினருள் ஒருவர் என்று மக்கள் சொல்ல வேண்டும்? திருமுழுக்கு யோவான் ஏரோதால் கொல்லப்பட்டார். ஆனாலும், அவர் தான் உயிரோடு வந்திருக்கிறார் என்று மக்கள் நம்பினர். யூத மக்கள் மெசியாவின் வருகைக்கு முன்னால் எலியா வருவார் என்று நம்பினர். மலாக்கி 4: 5 கூறுகிறது, “இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன்”. எனவேதான் இன்றளவும், யூதர்கள் பாஸ்கா திருவிழாவைக் கொண்டாடும்போதும் எலியாவிற்காக ஒரு இருக்கையை காலியாக வைத்திருப்பர். எலியா மீண்டும் வருவார் என்று காத்திருந்தார்கள்.

எரேமியாவும் இஸ்ரயேல் மக்களிடையே ஒருவிதமான எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்தார். இஸ்ரயேல் மக்கள் நாடு கடத்தப்படுவதற்கு முன்பு எரேமியா உடன்படிக்கைப்பேழையையும், தூப பீடத்தையும் நெபோ மலையில் இருக்கிற ஒரு குகையில் வைத்து வாயிலை மூடி முத்திரையிட்டார். மெசியா வருவதற்கு முன்பு, அவர் அந்த குகையைத்திறந்து அவற்றை மீண்டும் மக்களிடம் ஒப்படைப்பார் என்று மக்கள் நம்பினர். எனவே தான் மக்கள் இயேசுவை இவ்வாறு பேசினர்.

இயேசு எனக்கு யார்? என்று நமக்குள்ளாக கேட்டுப்பார்ப்போம். அவர் நமக்கு சொல்வதை வாழ்வாக்குவோம். இயேசு நாம் விரும்புகிற உறவாக இருக்க விரும்புகிறவர். அந்த உறவாக இயேசுவை ஏற்றுக்கொண்டு மகிழ்வோடு வாழ்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

“உன் பெயர் பாறை”
22.02.14 - மத்தேயு 16: 13 – 19

கத்தோலிக்கத்திருச்சபையின் ஆதாரம், அடிப்படை இந்தப்பகுதி தான் என்றால் அது மிகையாகாது. இயேசு பேதுருவைப்பார்த்து பாறை என்றும், இந்தப்பாறையின் மேல் என் திருச்சபையைக்கட்டுவேன் என்றும் சொல்கிறார். பாறை என்ற வார்த்தையை இஸ்ரயேல் போதகர்கள் ஆபிரகாமுக்குப்பயன்படுத்தினார்கள். அதற்கும் மேலாக இறைவனே இஸ்ரயேல் மக்களுக்கு பாறையாக இருந்தார் என விவிலியத்திலே பார்க்கிறோம். மோசே இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க பாடும்போது, “அவரே பாறை” என்று புகழ்கிறார்.(இணைச்சட்டம் 32: 4). “நம் கடவுளைப்போன்ற வேறு பாறை இல்லை” (1சாமுவேல் 2: 2). “ஆண்டவர் என் கற்பாறை: என் கோட்டை: என் மீட்பர்” (2சாமுவேல் 22: 2). ஆக, பழைய ஏற்பாட்டை நன்கு அறிந்திருக்கிற எந்தவொரு யூதனும், பாறை என்ற சொல்லைக்கேட்டதும், அவனுடைய நினைவில் கடவுளின் நினைவு நிழலாடாமல் இருக்க முடியாது.

இயேசு ‘பாறை’ என்கிற இந்த வார்த்தையை பேதுருவுக்கு பயன்படுத்துகிறார். இந்த வார்த்தையை இயேசு பயன்படுத்திய விதத்திற்கு நான்கு அர்த்தங்களை யூகிக்கலாம். 1. தன்னையே அவர் பாறையாக சொல்லியிருக்கலாம். தன் மீது இயேசு கிறிஸ்து திருச்சபையைக்கட்டுகிறார். 2. பாறை என்பதை ‘உண்மை’ என்ற அர்த்தத்தில் பயன்படுத்தியிருக்கலாம். அது என்ன உண்மை? பாறை என்பது ‘இயேசுதான் வாழும் கடவுளின் மகன்’ என்ற உண்மை. இந்த உண்மை பேதுருவுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 3. பாறை என்பதை பேதுருவின் விசுவாசத்திற்கு ஒப்பிட்டு பேசியிருக்கலாம். எத்தனையோ பேர் இருந்தாலும், முதன்முதலாக பேதுரு, இயேசுவை மெசியா என அறிந்து, அதனை துணிவோடு அறிக்கையிட்ட பேதுருவை திருச்சபை என்கிற கட்டிடத்தின் மூலைக்கல்லாக இருப்பதாக அர்த்தப்படுத்தியிருக்கலாம். 4. பேதுரு தான் பாறை. அதாவது திருச்சபை என்கிற கட்டிடத்தின் முதல் கல்லாக பேதுருவை இயேசு உருவகப்படுத்தியிருக்கலாம்.

எது எப்படியிருந்தாலும், திருச்சபை என்கிற கட்டிடத்தில் நாம் ஒவ்வொருவருமே விசுவாசத்தின் கட்டியெழுப்பும் கற்களாக இருக்கிறோம். நாம் ஒவ்வொருவரும் விசுவாசத்தில் உறுதியாக இருந்து, இறையரசை என்கிற கட்டிடத்தை இந்த மண்ணில் கட்டியெழுப்ப உறுதி கொள்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=============================

இணையதள உறவுகளே

திருத்தூதர் பேதுரு, "நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்" என்று விசவாச அறிக்கையிட்ட பின், உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. விண்ணரசின் திறவுகோல்களை நான் உன்னிடம் தருவேன். மண்ணுலகில் நீ தடைசெய்வது விண்ணுலகிலும் தடைசெய்யப்படும். மண்ணுலகில் நீ அனுமதிப்பது விண்ணுலகிலும் அனுமதிக்கப்படும்" என்றார்.

ஏன் நீங்கள் விசுவாச அறிக்கை செய்யவில்லையா? ஆமாம். தினமும் செய்கிறீர்கள். ஆகவே நீங்களும் பாறைதான். அந்த பாறையின் ஒரு பகுதிதான்.உங்கள் விசுவாசம் உறுதியாக இருந்தால், நீங்களும் பாறைதான். உங்களை யாரும் எதுவும் அசைக்க முடியாது. எந்த தீங்கும் உங்களை அணுகாது. தீண்டாது. மேற்கொள்ளாது.அந்த பாறையிடம் வழங்கப்பட்ட ஆற்றல் அனைத்திலும் உங்களுக்கும் பங்கு உண்டு. அந்த பாறையிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு அனைத்திலும் உங்களுக்கும் பங்கு உண்டு.

விண்ணரசின் திறவுகோல்களை நான் உங்களிடம் கொடுத்துள்ளார். இறை ஆட்சியில் பங்கு கொள்வது முற்றலும் உங்கள்பொறுப்பு.அதே வேளையில் நாம் அனைவரும் ஒன்றாக ஒரே குடும்பமாக, ஒரே ஆட்சியின் பங்காளிகளாகவும் இருப்பதால் ஒருவருக்கொருவர்கூட்டுறவில் வாழ்வின் முழுமையை அடைகிறோம். இனிது வாழுங்கள்.

-ஜோசப் லீயோன்

-------------------------

 

“நீ பேறுபெற்றவன்” !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

யோவானின் மகனான சீமோனே, நீ பேறுபெற்றவன் என்று ஆண்டவர் இயேசு பேதுருவைப் பாராட்டுகின்றார். எதற்காக இந்தப் பாராட்டு? நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன் என்று இயேசுவைப் பற்றிய விசுவாச அறிக்கை இட்டதற்காக. ஆம், இயேசுவைக் கடவுளாக, வாழும் கடவுளின் மகனாக, மெசியாவாக ஏற்று, அதனை அறிக்கை இடுவது என்பது ஒரு பேறு. அந்தப் பேறு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. உலக மக்கள் தொகையில் இரண்டு பில்லியன் மக்களைத் தவிர, மற்ற அனைவருக்கும் அந்தப் பேறு கிடைக்கவில்லை. அந்தப் பேறு கடவுளின் கொடை. விசுவாசம் என்பது  இறைவன் வழங்கும் இலவசப் பரிசுதானே ஒழிய, மனித உழைப்பின் பயன் அல்ல. இத்தவக் காலத்தில் நாம் சிந்திக்க வேண்டியது: இறைவன் எனக்குத் தந்த விசுவாசம் என்னும் கொடைக்கு எனது மறுமொழி என்ன? இயேசுவை ஆண்டவர் என்று அறிக்கையிடும் பேற்றினை இறைவன் எனக்குத் தந்துள்ளார். எனது பொறுப்பு என்ன? இத்தவ நாள்களில் இயேசுவை ஆண்டவராக, வாழும் கடவுளின் மகனாக நம் வாழ்வின் மூலம் பறைசாற்றுவோமா!

மன்றாடுவோம்: வாழும் கடவுளின் மகனான இயேசுவே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை ஆண்டவராகவும், இறைமகனாகவும் அறிக்கையிடும் பேறுபெற்றவர்களாக எங்களையும் மாற்றினீரே. உமக்கு நன்றி. எங்கள் விசுவாச அறிக்கை செயல் வடிவில் மாற்றம் பெற அருள்தாரும். இந்த நாள் முழுதும் எனது ஒவ்வொரு செயலாலும் உம்மை என் ஆண்டவராக அறிக்கை இட அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

-------------------------

''இயேசு தம் சீடரை நோக்கி, 'நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்.
சீமோன் பேதுரு மறுமொழியாக, 'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'
என்று உரைத்தார்'' (மத்தேயு 16:15-16)

சிந்தனை
-- கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்துக்கொண்டே செல்கிறார் இயேசு. அப்போது மக்கள் அவரைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். ''யார் இவர்?'' என்னும் கேள்வி அவர்கள் உள்ளத்தில் எழுகிறது. அதற்கு ஒவ்வொருவரும் ஓரொரு பதில் கொடுக்கின்றனர். இதை இயேசு தம் சீடர்களிடம் கேட்டு அறிந்துகொள்கிறார். ஆனால் இயேசுவைப் பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைத் தவிர அவருடைய சீடர்களே அவரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று அறிய அவருக்கு விருப்பம். தம் சீடர்கள் தம்மைச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளார்களா என்பதை அறிய விழைந்த இயேசு அவர்களிடம், ''நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று கேட்கிறார் (மத் 16:15). வழக்கம்போல சீமோன் பேதுரு இயேசுவின் கேள்விக்குப் பதில் தருகிறார். அதாவது இயேசு ''மெசியா''; ''வாழும் கடவுளின் மகன்''. மெசியா மக்களைத் தேடி வந்து, அவர்களை உரோமை ஆதிக்கத்திலிருந்து விடுவித்து அவர்களுச் சுதந்திரம் நல்குவார் என்னும் நம்பிக்கை யூத மக்களிடையே நிலவியது. பேதுரு அதையே இயேசுவிடம் சொல்கிறார். அதே நேரத்தில் மாட்சியுடன் வருகின்ற மெசியா ''கடவுளின் மகனாகவும்'' இருப்பதை சீமோன் வெளிப்படுத்துகிறார்.

-- தம்மை மெசியா என அழைத்த சீமோன் பேதுருவுக்கு இயேசுவும் ஒரு புதிய பெயர் அளிக்கின்றார். அதாவது, இனிமேல் அவர் ''பேதுரு'' என அழைக்கப்படுவார். அதற்கு, பாறை, கல் என்று பொருள். அந்த உறுதியான கல்லின்மீது திருச்சபை கட்டி எழுப்பப்படும். இதன் பொருள் என்ன? பேதுரு திருச்சபையில் ஒரு முக்கிய பொறுப்பு வகிக்கிறார். பன்னிரு திருத்தூதர்கள் நடுவே பேதுருவை முதல்வராக ஏற்படுத்திய இயேசு தாம் உருவாக்கிய திருச்சபையை அன்புச் சமூகமாக வழிநடத்தும் பொறுப்பையும் அவர்களிடம் கொடுக்கிறார். இருப்பினும், திருச்சபை என்பது இயேசுவின் பெயரால் கூடி வருகின்ற அன்புச் சமூகம். சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்த இயேசுவின் ஆவியானவர் திருச்சபையின் உயிர்மூச்சாக இருக்கின்றார். அவருடைய தூண்டுதலுக்கு நாம் செவிமடுக்க வேண்டும்; நம் நடுவே உயிருடன் இருந்து செயலாற்றும் அவருடைய துணையோடு ''இயேசு யார்'' என்னும் கேள்விக்குப் பதில் இறுக்க வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் அன்பை எந்நாளும் துய்த்து வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு, பிலிப்புச் செசரியா பகுதிக்குச் சென்றார். அவர் தம் சீடரை நோக்கி,
'மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?' என்று கேட்டார்...சீமோன் பேதுரு...
'நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்' என்று உரைத்தார். அதற்கு இயேசு, ''யோனாவின் மகனான சீமோனே,...
உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்...' என்றார்'' (மத்தேயு 16:13,16-18)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பிலிப்புச் செசரியா என்னும் நகரம் இஸ்ரயேல் நாட்டுப் பகுதின் வடக்கில் இருந்தது. அகுஸ்துஸ் சீசர் என்னும் உரோமைப் பேரரசன் அந்நகரைப் பெரிய ஏரோதுக்குக் கொடுத்திருந்தார். ஏரோதின் மகன் பிலிப்பு அந்நகரை விரித்துக் கட்டி, அதற்குத் தன் பெயரையும் சீசரின் பெயரையும் இணைத்து ''பிலிப்புச் செசரியா'' என்று புதிய பெயர் வைத்தார் (மத் 16:13). இயேசு தம் சீடரை நோக்கி, ''மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?'' என்றொரு கேள்வியைக் கேட்கிறார் (மத் 13:13). இயேசு தம்மைப் பற்றிப் பேசும்போது ''மானிடமகன்'' என்கிறார். வேறு யாரும் அவரை அப்பெயர் சொல்லிக் கூப்பிடவில்லை. ''மானிடமகன்'' என்னும் சொல்லுக்கு என்ன பொருள்? மத்தேயு நற்செய்தியில் பல இடங்களில் இயேசு தம்மை இவ்வாறு அடையாளம் காட்டுகிறார். எடுத்துக்காட்டாக, மத் 9:6; 11:19; 12:8,32; 13:37; 16:13 ஆகிய பகுதிகளைக் காட்டலாம். இயேசு தாம் துன்புற்றுச் சிலுவையில் அறையப்படுவதை முன்னறிவித்த வேளைகளில் தம்மை ''மானிடமகன்'' என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார் (காண்க: மத் 12:40;17:9,12,22; 20:18;,28; 26:2;,24,45). இறுதிக் காலத்தில் தாம் நடுவராக வரப்போவதைக் குறிப்பிடும்போதும் ''மானிடமகன்'' பற்றிப் பேசுகிறார் (காண்க: மத் 10:23; 13:41; 16:27,28; 19:28; 24:27,30,37,39,44; 25:31; 26:64).

-- ''மானிடமகன்'' என்று தம்மை அழைத்த இயேசு தாம் மனித குலத்தோடு நெருங்கி ஒன்றித்திருப்பதை அப்பெயர் மூலம் வெளிப்படுத்தினார். உண்மையிலேயே அவர் மனித குலத்தின் பிரதிநிதியாகக் கடவுள்முன் நிற்கின்றார். மனித குலத்திற்குப் புதிய வாழ்வு வழங்க அவர் தம்மையை கையளிக்கின்றார். தாம் யார் என இயேசு கேட்ட கேள்விக்கு பேதுரு பதிலளிக்கிறார்: ''நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்'' (மத் 16:16-17). இயேசு பட்டம் பதவி தேடிவருகின்ற மெசியா அல்ல; மாறாக, துன்புற்று இறக்கப்போகின்ற மெசியா (மத் 16:21). இயேசு பேதுருவைப் ''பாறை'' என அழைக்கிறார். பேதுரு என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் அதுவே. அரமேய மொழியில் ''கேபா''. பேதுரு பாறைபோல உறுதியாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் நாம் பாறைபோல நிலைத்திருக்க வேண்டும். நம் நம்பிக்கை அசைவுற்றுக் குலைந்துவிடாமல் நாம் பிடிப்புடன் இருக்க அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளும் மக்கள் குழுவாகிய திருச்சபை இயேசு என்னும் பாறைமேல் கட்டப்பட்டிருப்பதால் நாமும் பாறைபோல் உறுதியாயிருக்க நமக்கு அருள் வழங்கப்படுகிறது.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் நம்பிக்கையில் தளராதிருக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

------------------------

 

கேள்வியும் பதிலும்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

சிறு குழந்தைகளின் கேள்விகள் விசித்திரமாக இருக்கலாம், ஆனால் விபரீதமானதல்ல. மாறாக வளர்ச்சியின் அறிகுறிகள். மூன்று வயது சிறுவன் ஒருவன் தன் தந்தையிடம் கேட்டுடான், " அப்பா,அது என்னது?. அது கழுகு. அதன் அப்பா,அம்மா எங்கே? . வீட்டில். வீடு எங்கே இருக்கிறது?. அந்த மலையில். அந்த மலைக்கு போவோமா? அப்பா சிரித்தார். இக்கேள்விகள் அக்குழந்தையின் அறிவு வளர்ச்சியின் அடையாளங்கள்.

சீடர்களிடம் இயேசு கேட்ட கேள்வியும் (" மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?" மத் 16:13);, காட்சியில் தோன்றிய ஆண்டவரிடம் சவுல் கேட்ட கேள்வியும்( "ஆண்டவரே நீர் யார்?" தி.பணி 9:5) இறை அறிவு பெருவதற்கான முயற்சிகள்.அதே வேளையில் இக் கேள்விக்கான பதில்கள் கடமையையும் பொருப்பையும் அவர்கள் மேல் சுமத்துகின்றன.

ஒவ்வொரு கிறிஸ்தவனும் புனித பவுலைப்போல கேள்வி கேட்கவும் புனித பேதுரு போல பதில் சொல்லவும் வேண்டும். வெறுமனே கேள்வி கேட்பவனாக மட்டுமிருந்தால், அது பொருப்பற்ற தன்மையின் அடையாளம். உங்கள் கேள்வியும் பதிலும் உங்கள் மேல் பெரும் பொருப்பினைக் கொண்டு வருகிறது. அந்தக் கேள்விக்குப் பின் பவுலடியார் எத்தகு ஆர்வத்தோடு கிறிஸ்துவுக்காகப் பணியாற்றினார் எனப் பாருங்கள். பேதுரு தன் பதிலுக்கு ஏற்ற பணியாற்றியதையும் நாம் அறிவோம். பங்குகளில் பலர் கேள்வி கேட்பதோடு நிறுத்திக்கொள்கிறோம். புனிதர்கள் பேதுருவையும் பவுலையும் முன் நிறுத்துவோம். திருச்சபையில் நம் பங்களிப்பை வழங்குவோம். அருளோடு வாழ்வோம்.இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்