முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-11

ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்'' என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள். குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார். �உரக்கக் கூறு'' என்றது ஒரு குரல்; �எதை நான் உரக்கக் கூற வேண்டும்?'' என்றேன். மானிடர் அனைவரும் புல்லே ஆவர்; அவர்களின் மேன்மை வயல்வெளிப் பூவே! ஆண்டவரின் ஆவி இறங்கி வரவே, புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; உண்மையில் மானிடர் புல்லே ஆவர்! புல் உலர்ந்து போம்; பூ வதங்கி விழும்; நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! `இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்றுசேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 96: 1-2. 3,10. 11-12. 13

பல்லவி: இதோ நம் கடவுள் ஆற்றலுடன் வருகின்றார்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்;
உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
2 ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்; அவர் பெயரை வாழ்த்துங்கள்;
அவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள். -பல்லவி

3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்;
அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள்.
10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: `ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்;
பூவுலகு உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது;
அது அசைவுறாது; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார்.' -பல்லவி

11 விண்ணுலகம் மகிழ்வதாக; மண்ணுலகம் களிகூர்வதாக;
கடலும் அதில் நிறைந்துள்ளனவும் முழங்கட்டும்.
12 வயல்வெளியும் அதில் உள்ள அனைத்தும் களிகூரட்டும்;
அப்பொழுது, காட்டில் உள்ள அனைத்து மரங்களும் அவர் திருமுன் களிப்புடன் பாடும். -பல்லவி

13 ஏனெனில் அவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்;
நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது; இதோ அவர் நம்மை மீட்க வரவிருக்கிறார். அல்லேலூயா.

மத்தேயு 18:12-14

திருவருகை காலம்-இரண்டாம் வாரம், செவ்வாய் கிழமை


நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 18: 12-14

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று வழி தவறி அலைந்தால், அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழிதவறி அலையும் ஆட்டைத் தேடிச் செல்வார் அல்லவா? அவர் அதைக் கண்டுபிடித்தால் வழிதவறி அலையாத தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பற்றி மகிழ்ச்சியடைவதைவிட வழி தவறிய அந்த ஓர் ஆட்டைப் பற்றியே மிகவும் மகிழ்ச்சியடைவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன். அவ்வாறே இச்சிறியோருள் ஒருவர்கூட நெறி தவறிப் போகக்கூடாது என்பதே உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

தேடி போ! உயரே கொண்டு வா!
மத்தேயு 18:12-14

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

இவ்வுலகில் பிறந்த அனைவரும் பயனுள்ளவர்கள். பயனற்றவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாரையும் கடவுள் தாயின் கருவறையில் அர்ச்சித்து அற்புதமான பணி செய்ய அழைக்கின்றார். யாரையும் ஒதுக்காதீர்கள், யாரையும் வெறுக்காதீர்கள் என்ற அன்பான வேண்டுகோளோடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம்.

குறைகள் உள்ளவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை உற்சாகப்படுத்தி உயரே கொண்டு வரை இந்த நாள் நம்மை அழைக்கிறது. குறைகள் இருந்தாலும் உற்சாகத்தினால் மேலே வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உயரே வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் இதோ இரண்டு சாதனையாளர்கள்:

1. நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக்
நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் (Nicholas James Vujicic) என அழைக்கப்படும், 36 வயது நிரம்பிய இவருக்கு திருமணமாகி மகிழ்வாக குடும்பம் நடத்திவரும் இவருக்கு, நான்கு குழந்தைகளும் உள்ளனர். தான் அன்புகூரும் மனிதரை அணைக்கவோ, எந்தப் பொருளையும் தூக்கவோ, எதையும் தொட்டு அனுபவிக்கவோ கரங்கள் இல்லை. நடக்கவோ, ஓடவோ, ஆடவோ கால்கள் இல்லை. ஆயினும், இவர், Life without Limbs என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை 2005ம் ஆண்டில் ஆரம்பித்து, உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கான மாற்றுத்திறனாளர்களுக்கு வாழ்வளித்து வருகிறார்.

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த இவர், ஒரு கட்டத்தில் தான் உயிர் வாழ வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தார். ஆயினும், தன் பெற்றோரை நினைத்து தனது முடிவை மாற்றிக் கொண்டு, தன்னால் என்ன செய்ய முடியும் என சிந்தித்தார். முதலில் கால்களாலேயே எழுதத்தொடங்கிய இவர், இப்போது, பல அசாத்திய செயல்களால் உலகினரை வியக்க வைத்து வருகிறார். வணிகவியல் மற்றும், கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர். தன்னுடைய தன்னம்பிக்கை உரைகளை ஒலி-ஒளி குறுந்தகடுகளாக வெளியிட்டுவரும் இவர், Life's Greater Purpose என்ற குறும்படத்தையும், Life without Limits என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். பல குறும்படங்களிலும் நடித்துவரும் இவர், The Butterfly Circus என்ற படத்துக்காக மூன்று விருதுகளையும் பெற்றுள்ளார். எல்லா மனிதருமே ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்களுக்கு பயனாக இருக்க முடியும். யாருமே பயனற்றவர்கள் இல்லை'என்பதையே, என் வாழ்க்கைச் செய்தியாக மற்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்!' என்கிறார், நிக் உஜிசிக்.

2. மிசிமி இசிமி
11 வயது நிரம்பிய மிசிமி இசிமி என்ற சிறுமி, லாகோஸ் நகர் சாலைகளில் வீசப்படும் குப்பைகளை, ஒவ்வொரு நாளும் சுத்தம் செய்து வருகிறார். இவர், தனது ஒன்பதாவது வயதிலேயே, பள்ளிகளில், சிறார்க்கென பசுமை அமைப்பை உருவாக்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இந்த தனது ஆர்வம் பற்றி ஊடகங்களிடம் பேசியுள்ள Misimi அவர்கள், நான் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர். லாகோஸ் நகரில் குப்பைகளை அகற்றி, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பணியில் இறங்கியுள்ளேன், சுற்றுச்சூழலையும், அதன் மாசுகேட்டினின்று மக்களையும், பாதுகாப்பது எனக்கு மிகவும் பிடித்த செயல், கழிவுப்பொருள்களை வைத்து, அழகான மலர்ச் சாடிகளைத் தயாரிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

குழந்தை பருவத்திலேயே வலது கரத்தை இழந்துள்ள சிறுமி மிசிமி இசிமி அவர்கள், ஒரு கரத்தால் ஆற்றிவரும் சேவை, காண்போர் அனைவருக்கும் தூண்டுதலாக அமைந்துள்ளது.

மனதில் கேட்க…
1. நான் எத்தனை நபர்களை உற்சாகப்படுத்தி உயரே கொண்டு சென்றிருக்கிறேன்?
2. உலகில் பிறந்த அனைவரும் பயனுள்ளவர்கள் என்பது இன்று எனக்கு தெளிவாக புரிகிறதா?

மனதில் பதிக்க…
ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுங்கள்; ஒருவரை ஒருவர் வளர்ச்சியடையச் செய்யுங்கள்(1தெச 5:11)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எசாயா 40: 1 – 11
ஆறுதலின் இறைவன்

இஸ்ரயேலின் ஆண்டவர் ஆறுதலின் ஆண்டவராக இருக்கின்றார் என்பதை, இன்றைய முதல் வாசகம் நமக்கு வலியுறுத்திக் கூறுகிறது. ஆறுதல் என்பது துன்பப்படுகிறவர்களுக்கு மனிதர்கள் தரும் அருமருந்து. காயம்பட்டவர்களுக்கு ஒருவர் செய்யும் நல் உதவி. எந்த தருணத்திலும் நான் உன்னோடு இருக்கிறேன் என்பதை உணர்த்துகிற ஆத்மார்த்தமான உணர்வு. அதை, இறைவன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்குகிறார். அதற்கான காரணம் என்ன? இஸ்ரயேலுக்கு எதிராக கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிற இறைவன், மீண்டும் அதன் மீது மனமிரங்குவது ஏன்?

இஸ்ரயேல் செய்த தவறுக்கு, ஆண்டவர் தண்டனை வழங்கியிருக்கிறார். அவர் அவர்களை தண்டிக்க வேண்டும் என்பதற்காக  தண்டனை வழங்கவில்லை. மாறாக, உண்மையை அறிந்து, திருந்தி வாழ வேண்டும் என்பதற்காகவும், உண்மையான கடவுளை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அந்த தண்டனையை வழங்கியிருக்கிறார். தண்டனையின்போது, இஸ்ரயேல் மக்கள் அனுபவித்த துன்பங்களின்போது, கடவுள் மகிழ்ந்திருக்கவில்லை. அவர்களை விட, அதிகம் வேதனைப்பட்டார். பிள்ளைகளுக்கு கசப்பு மருந்து வழங்குகிறபோது, அதனைக் குடிக்க பிள்ளை அழுவதைக் கண்டு, தாய் வருந்துவாள். ஆனால், அதை அவள் கொடுத்து தான் ஆக வேண்டும். அப்போது தான், குழந்தை நலம்பெறும். அது போலத்தான் கடவுள், இஸ்ரயேல் திருந்தி வாழ காத்திருந்தார். இப்போது, அதற்கு ஆறுதல் வழங்க, அவர் ஆயத்தமாயிருக்கிறார்.

நம்முடைய வாழ்வில் இறைவன் எப்போதும் நமக்கு ஆறுதல் தருவதற்கு காத்திருக்கிறார். நாம் அவரை நம்முடைய தந்தையாக, தாயாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய பிள்ளைகளா வாழ வேண்டும். தவறு செய்தாலும், தந்தையிடத்தில் மன்னிப்பு கேட்கிற, நல்ல பிள்ளைகளாக நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போது, கடவுள் நிச்சயம் நமக்கு உதவி செய்வார். நம்மை அவருடைய ஆறுதலில் நிலைத்திருக்கச் செய்வார்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

திருப்பாடல் 96: 1 – 2, 3, 10, 11 – 12, 13
”ஆண்டவர் தரும் மீட்பை அறிவியுங்கள்”

சாதாரண வார்த்தைகளுக்கும், அனுபவித்து அறிந்து சொல்கிற வார்த்தைகளுக்கும் நிச்சயமாக வேறுபாடு இருக்கிறது. சாதாரணமாக நாம் சொல்கிற வார்த்தைகள் நமக்கும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதேபோல மற்றவர்கள் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால், அனுபவித்துச் சொல்லப்படுகிற வார்த்தைகளில் இருக்கிற உணர்வுகள், கேட்பவர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. இன்றைய திருப்பாடல், இறைவனின் ஆற்றலை, மகிமையை அறிந்து, அனுபவித்துச் சொல்கிற ஒரு மனிதரின் பாடல் என்று சொன்னால், அது மிகையாகாது.

”ஆண்டவர் தரும் மீட்பை நாள்தோறும் அறிவியுங்கள்” என்று ஆசிரியர் சொல்கிறார். இறைவனின் வல்ல செயல்கள் நாள்தோறும் அறிவிக்கப்பட வேண்டும். அந்த அளவுக்கு இறைவனின் மகிமை அளப்பரியது. நெருக்கடியான எல்லா நேரத்திலும் ஆண்டவர் உடனிருந்து வழிநடத்தியிருக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட இனத்தின் பிள்ளைகள் ஒருவர் கூட, மீட்பைப் பெறாமல் போய்விடக்கூடாது என்பதில் இறைவன் கருத்துள்ளவராக இருக்கிறார். அவருடைய வல்லமை மூலமாக, எதிரிகள் அனைவரையும் அடிபணியச்செய்து, கடவுளின் பிள்ளைகளை காப்பாற்றுகிறவராக இருக்கிறார். இப்படி, ஒவ்வொரு மணித்துளியும் தன்னுடைய பிள்ளைகளை பராமாரித்து வரும் கடவுள், நம் அனைவரின் போற்றுதற்குரியவராக இருக்கிறார்.

இறைவனை வாழ்த்தவும், போற்றவும் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் நாம், ஆர்ப்பரித்து பாடுவோம். அவர் நம்முடைய வாழ்விலும், நம் முன்னோர் வாழ்விலும் செய்த மாட்சிமிகு செயல்களை எடுத்துக்கூறுவோம். இறைவனின் செயல்கள் நம் வாழ்வில் தொடர்ந்து நடைபெறட்டும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

நமது பணி யாருக்காக?

ஒரு அருட்பணியாளரின் வாழ்க்கையில் பங்கில் பணிபுரிவது என்பது சவாலான ஒன்றாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எல்லா பங்குகளிலும் பொதுவான ஒரு தோற்றம் இருக்கும். அது என்ன தோற்றம்? பங்கில் இரண்டு வகையான மக்கள் இருப்பார்கள். முதல் வகையான மக்கள் அருட்பணியாளரின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள். வழிபாட்டில் ஆர்வமுடன் பங்கெடுக்கிறவர்கள். இரண்டாவது வகையான மக்கள் மிகச்சிறிய விழுக்காடு உள்ளவர்கள். ஆலயத்தின் வழிபாடுகளில் நாட்டம் கிடையாது. ஆலயத்தின் பக்கமே திரும்பிப்பார்க்காதவர்கள். ஆனால், பங்கில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளிலும் தங்களை முதன்மைப்படுத்திக் கொண்டு இவர்களைப் பகைத்தால், பங்கில் அருட்பணியாளர் பணிபுரிய முடியாது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தங்களை வலிமையாகக் காட்டிக்கொள்கிறவர்கள். அருட்பணியாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறவர்கள்.

இவர்கள் செய்வது அநீதி என்று தெரிந்தாலும், மற்ற பெரும்பான்மையினர் இவர்களை எதிர்த்து நிற்பதில்லை. ஆனால், மறைமுகமாக அருட்பணியாளர்களைப் பார்த்துப் பரிதாபப்படுகிறவர்கள். இது எல்லா பங்கிலும் காணப்படக்கூடிய பொதுவான தோற்றமாக இருக்கிறது. இப்போது நம்மிடம் எழக்கூடிய கேள்வி: இவர்களுள் யாருக்கு நம்முடைய பணி தேவையாக இருக்கிறது? யாருக்கு பணிவிடை செய்யப் போகிறோம்? யார் எப்படி சொன்னாலும், வழிபாட்டில் ஆர்வமாக இருக்கிற முதல் வகை மக்கள் நமது இலக்கா? அல்லது கடவுள் பக்கமே வராமல், அருட்பணியாளர்களுக்கு தலைவலியாக இருக்கிற, இரண்டாவது வகையான மக்களுக்கு நமது பணியா? இது எல்லாருக்கும் எழக்கூடிய சாதாரண கேள்வி. இன்றைய நற்செய்தி நமக்கு இதற்கான பதிலைத் தருகிறது. இதனுடைய புரிதல், நமது கடமையை நாம் செய்ய வேண்டும் என்பதுதான். ஒருவர் திருந்துகிறார் அல்லது திருந்தவில்லை என்பது அவரைப் பொறுத்தது. அதற்கு அவர் கடவுளிடம் கணக்கு கொடுக்கட்டும். ஆனால், நமது கடமையை நாம் செய்வதற்கு இன்றைய நற்செய்தி அழைப்புவிடுக்கிறது.

நமது வாழ்வில் பெரும்பாலும் முதல் வகையான மக்களுக்கு பணிவிடை செய்வதை நாம் இலக்காகக் கொண்டிருக்கிறோம். பாராட்டுக்களுக்காக, நம்மை மக்கள் மத்தியில் உயர்வாகக் காட்டுவதற்காகத்தான் நமது பணி இருப்பது போல நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனையும் கடந்து சிந்திக்க இந்த வழிபாட்டில் பங்கெடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------

கடவுளின் அன்பு

இயேசுவின் காலத்தில் ஆட்டு மந்தைகள் தனிப்பட்ட நபருக்கு சொந்தமானவையாக இல்லை. அது ஓர் ஊரின் சொத்தாக இருந்தது. இரண்டு அல்லது மூன்று இடையா்கள் அதற்கு பொறுப்பாளர்களாக இருந்தனர். எனவே தான், ஓர் ஆடு காணவில்லையென்றவுடன், மற்ற ஆடுகளை இருக்கின்ற இடையர்களிடம் விட்டுவிட்டு ஒருவர் மட்டும் அதைத்தேடிச் செல்வார். பாலஸ்தீனத்தில் காணாமற்போன ஆடுகளைக் கண்டுபிடிப்பதில் இடையர்கள் கைதேர்ந்தவர்களாக இருந்தனர். ஓர் ஆடு காணவில்லை என்றாலும், அது ஊரில் மக்களுக்கு தெரிந்திருக்கும். ஆட்டைத்தேடிச் சென்ற இடையன் திரும்பிவரும்வரை, ஊரில் மக்கள் வழிமேல் விழிவைத்து காத்திருப்பார்கள். அவன் காணாமற்போன ஆட்டோடு வந்தவுடன், அங்கே நிலவும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையில்லை.

கடவுளின் அன்பு ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் இருக்கிறது என்பதை இந்த உவமை நமக்கு விளக்குகிறது. நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற்போனால், மற்ற தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருப்பதைப்பற்றி மகிழ்ச்சியடைபவர் இறைவன் அல்ல. ஒவ்வொரு தனிமனிதனையும் கடவுள் அன்பு செய்கிறார். எசாயா 49: 16 ல் ”இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன்” என்று ஆண்டவர் கூறுகிறார். நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட விதத்தில் ஆண்டவர் அன்பு செய்கிறார். நம்மீது இரக்கம் காட்டுகிறார். நம்மை கண்ணின் மணிபோல் பாதுகாத்து வழிநடத்துகிறார். நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள். ”என் பார்வையில் நீ விலையேறப்பெற்றவன்” என்கிற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகள் (43: 4) இங்கே நினைவுகூறத்தக்கவை.

கடவுளின் அன்பை நமது வாழ்வில் தனிப்பட்ட விதத்தில் உணர வேண்டும். எத்தனை புத்தகங்கள் படித்தாலும், மறையுரைகள் கேட்டாலும், தனிப்பட்ட விதத்தில் கடவுளின் அன்பை உணரவில்லையென்றால், அவையனைத்துமே வீணானது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

 

''இச்சிறியோருள் ஒருவர்கூட நெறிதவறிப் போகக் கூடாது என்பதே
உங்கள் விண்ணகத் தந்தையின் திருவுளம்'' (மத்தேயு 18:14)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- மனிதர் தம்முள்ளே வேறுபாடுகள் கற்பித்துக்கொள்வதுண்டு; ஒருவர் மற்றவரைவிட மேலானவர் எனக் கருதுவதுண்டு. இவ்வாறு வேறுபடுத்தி ஒதுக்குகின்ற செயல் ஏற்கத்தகாதது. கடவுளைப் பொறுத்தமட்டில் எல்லா மனிதரும் சமமே; அனைத்து மனிதருக்கும் சமமான மாண்பு உண்டு. இந்த உண்மையை உணர்த்த இயேசு காணாமற்போன ஆடு பற்றிய உவமையைக் கூறுகின்றார். நூறு ஆடுகள் இருக்கின்ற மந்தையை விட்டு ஓர் ஆடு தவறிச் சென்றாலும் அதைத் தேடிக் கண்டுபிடிக்கச் செல்கின்ற நல்ல ஆயர் நம் கடவுள். தவறிச் சென்ற ஆடு கிடைத்துவிட்டால் ஆயருக்குப் பெருமகிழ்ச்சி. அதுபோலவே, எந்த ஒரு மனிதருமே தவறிப் போய்விடலாகாது என்பதே கடவுளின் விருப்பம். அப்படியே தவறிச் சென்றுவிட்டாலும் அவர்களை அன்போடு அணுகிச் சென்று, அவர்களை நல்வழிப்படுத்துவது இயேசுவின் சீடருக்குத் தரப்படுகின்ற பொறுப்பு.

-- வழிதவறிச் செல்வது எந்த ஒரு மனிதரின் வாழ்விலும் நடக்கக் கூடும். தவறிச் சென்றவர்களை இழிச்சொல் கூறிப் பழிப்பதற்குப் பதிலாக, அவர்களை நல்வழியில் கொணர்வதற்கு நாம் முயற்சி செய்ய வேண்டும் என இயேசு நமக்கு உணர்த்துகிறார். நல்வழியில் மனிதரைக் கொண்டுவருவதற்குக் கடவுளின் துணை எப்போதுமே உண்டு. ஏனென்றால் கடவுளை விட்டு அகன்றோரைத் தேடி மீட்கவே இயேசு வந்தார். அவருடைய அன்புக்கும் கரிசகனைக்கும் உரிய மனிதர்கள் தங்கள் தவற்றினைத் தயங்காது ஏற்றுக்கொள்வார்கள்; அதே நேரத்தில் தாங்கள் தவறிச் சென்ற வழியை விட்டுவிட்டு நேரிய வழியில் நடந்திட முன்வருவார்கள். கடவுளிடமிருந்து பிரிந்து செல்ல முயல்கின்ற மனிதர் சில வேளைகளில் அறியாமையால் அவ்வாறு செய்யக் கூடும். ஆனால் தங்கள் தவற்றினை உணர்ந்த உடனேயே அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்; கடவுளின் வழியில் நடந்திட விரைந்திட வேண்டும். தந்தையின் திருவுளம் மனிதர் உயர வேண்டும் என்பதும் மாண்புடையோராய் வாழ வேண்டும் என்பதுமே. ஆகவே, கடவுளின் விருப்பம் நிறைவேற வேண்டும் என நாம் கருதினால் அந்த விருப்பத்தை நம் விருப்பமாக ஆக்கிக் கொண்டு அதன்படி ஒழுகுவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் சகோதர சகோதரிகளின் நலனை மேம்படுத்துவதில் நாங்கள் முனைந்து செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

தேடும் தெய்வம்

நம் இயேசு யார் என்பதை இப்பகுதி மேலும் விவரிக்கிறது. இப்பகுதியின் தொடக்கம் "பெரியவர் யார்" என்பதற்கு விளக்கம் கொடுப்பதோடு தொடங்குகிறது. முடிவில் மனமாற்ற மகிழ்ச்சியுடன் முடிவடைகிறது. இடைப்பட்ட பகுதிகளில் சிறு பிள்ளைகள்,(18'4) சிறியோர்(18'6, 18'10, 18'14)பற்றிய குறிப்புகள் உள்ளன. ஒட்டு மொத்தப் பார்வையில், இச்சிறியோரே விண்ணரசின் பெரியோர் என்பதையும், மனமாற்றம் (18'3) பெற்ற இச்சிறியோரே பெரியோர் என்றும், இவர்களில் எவரையும் இழக்க இறைவன் விரும்பவில்லை என்பதையும் இப்பகுதியில் அறிகிறோம்.

காணாமல்போன ஆடு யார், எப்படிப்பட்டவர் என்பதற்கான விளக்கங்கள் தெறிந்தால் மட்டுமே அந்த ஆடு திரும்ப கிடைத்ததால் உண்டாகும் மகிழ்ச்சியை கொண்டாட முடியும். காணாமல் போன ஆட்டினை "சிறியோர்"(18'14) என்று குறிப்பிடுகிறார். இச் சிறியோர் யாரெனில் மனந்திரும்பும் மனத்தினர்(18'3), கடவுள் மீது நம்பிக்கை கொண்டோர்(18'6). ஆகவே இத்தகையோர் காணாமல்போவதை நம் இறைவன் ஒருபோதும் விரும்பார். அவர்களுக்காகத் தன்னிடம் இருப்பதையும் (தொண்ணுற்றொன்பது ஆடுகளையும்) தன்னையும் இழப்பதற்கு தயங்கமாட்டார்.

இவ்வாறு தன்னை நம்பியோர் தவறினும், பாவத்தில் விழுந்தாலும், திசை மாறினும், தன்னையும் கொடுத்து இழந்து தேடி கண்டுபிடித்து தானும் மகிழ்வார், பிறரையும் மகிழ்விப்பார்.

--அருட்திரு ஜோசப் லியோன்