முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20

யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் ``வாருங்கள், எரேமியாவுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்வோம். குருக்களிடமிருந்து சட்டமும், ஞானிகளிடமிருந்து அறிவுரையும், இறைவாக்கினரிடமிருந்து இறைவாக்கும் எடுபடாது. எனவே அவர்மீது குற்றம் சாட்டுவோம். அவர் சொல்வதைக் கேட்கவேண்டாம்'' என்றனர். ஆண்டவரே, என்னைக் கவனியும்; என் எதிரிகள் சொல்வதைக் கேளும். நன்மைக்குக் கைம்மாறு தீமையா? என் உயிரைப் போக்கக் குழி பறித்திருக்கின்றார்கள்; அவர்கள்மேல் உமக்கிருந்த சினத்தைப் போக்குவதற்காக அவர்களைக் குறித்து நல்லதை எடுத்துச் சொல்வதற்கு நான் உம்முன் வந்து நின்றதை நினைவுகூரும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 31: 4-5. 13. 14-15

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.

4 அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்;
ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம். 5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்;
வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். பல்லவி

13 பலர் என்மீது பழிசுமத்தியது என் காதில் விழுந்தது;
எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது.
அவர்கள் ஒன்றுகூடி எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்;
என் உயிரைப் பறிக்கத் திட்டம் தீட்டினார்கள். பல்லவி

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்;
`நீரே என் கடவுள்' என்று சொன்னேன்.
15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது;
என் எதிரிகளின் கையினின்றும், என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்
`உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்,' என்கிறார் ஆண்டவர்.

மத்தேயு 20:17-28

தவக்காலம் -இரண்டாம் வாரம் புதன்

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 17-28

அக்காலத்தில் இயேசு எருசலேமை நோக்கிச் செல்லும் வழியில் பன்னிரு சீடரையும் தனியே அழைத்து, ``இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிடமகன் தலைமைக் குருக்களிடமும், மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார். அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதிப்பார்கள். அவர்கள் அவரை ஏளனம் செய்து, சாட்டையால் அடித்து, சிலுவையில் அறையும்படி பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள். ஆனால் அவர் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படுவார்'' என்று அவர்களிடம் கூறினார். பின்பு செபதேயுவின் மனைவி தம் மக்களோடு ஒரு வேண்டுகோள் விடுக்குமாறு இயேசுவிடம் வந்து பணிந்து நின்றார். ``உமக்கு என்ன வேண்டும்?'' என்று இயேசு அவரிடம் கேட்டார். அவர், ``நீர் ஆட்சி புரியும்போது என் மக்களாகிய இவர்கள் இருவருள் ஒருவன் உமது அரியணையின் வலப்புறமும் இன்னொருவன் இடப்புறமும் அமரச் செய்யும்'' என்று வேண்டினார். அதற்கு இயேசு, ``நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா?'' என்று கேட்டார். அவர்கள் ``எங்களால் இயலும்'' என்றார்கள். அவர் அவர்களை நோக்கி, ``ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவதோ எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்களை என் தந்தை யாருக்கு ஏற்பாடு செய்திருக்கிறாரோ அவர்களுக்கே அவை அருளப்படும்'' என்றார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப்பேரும் அச்சகோதரர் இருவர்மீதும் கோபங் கொண்டனர். இயேசு அவர்களை வரவழைத்து, ``பிற இனத்தவரின் தலைவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். உயர்குடிமக்கள் அவர்கள்மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்; இதை நீங்கள் அறிவீர்கள். உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர் உங்களுக்குப் பணியாளராக இருக்கட்டும். இவ்வாறே மானிடமகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

28.02.2024 புதன்
ஆசை ஆறாக அமையக்கூடாது
மத் 20 : 17 - 28

கடந்த வாரம் இறந்த ஒரு தொழிலதிபர் (ம) அரசியல்வாதியின் மகனை, வருகின்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட ஆவல்கொண்டதாக அவரின் தந்தையானவர் இறுதி அஞ்சலியின்போது கூறுகின்றார். சென்னையில் ஒரு விளையாட்டு வீராங்கனை தவறான அறுவை சிகிச்சையினால் தன் காலை இழக்கின்றார். ஆனால் இந்திய அளவில் வளர ஆசை என்று கூறியதாக வந்த செய்தி. இவ்வாறு ஆசைதான் நம்மை அழிவுக்கு இட்டுச்செல்கிறது.

அதுபோல இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு வகையான ஆசைகளை நாம் பார்க்கின்றோம். ஒன்று சிம்மாசன ஆசை. அதாவது சீடர்கள் இயேசுவோடு இறுதிவரை இருந்தாலே நாம் அனைத்துவிதமான சுகங்களையும் பெற்று, சந்தோஷமான வாழ்க்கை நடத்திவிடலாம் என்று எண்ணினர். அதனால்தான் உமக்கு ஒன்றும் எலியா, மோசேக்கும் ஒன்றும் கூடாரம் அமைத்து இருந்துவிடுவோம் என்று கூறினர். காரணம் சிம்மாசன ஆசை. இன்னொரு ஆசை பதவி ஆசை. செபதேயுவின் மனைவி நம் பிள்ளைகளுக்காக பரிந்து பேசுகின்றாள். இயேசுவின் அடிச்சுவட்டில் வாழ ஆசை இல்லை மாறாக வலது, இடது புறத்தில் அமர ஆசைப்படுகின்றனர். இந்த இரண்டு ஆசைகளையும் இயேசு நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய தகுதித்தேர்வு ஆசை நிறைவேற வேண்டுமென்றால் முதலில் சிலுவையை தூக்கி என் பின் வாருங்கள்.

நம்முடைய ஆசை எப்படிப்பட்டதாக இருக்கிறது? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

இயேசுவின் பாடுகள்

இயேசு தனது பாடுகளை மூன்றாம் முறையாக சீடர்களுக்கு அறிவிக்கிறார். மாற்கு மற்றும் லூக்காவும், இயேசு தனது பாடுகளை அறிவிக்கிறபோது இருந்த, ஒரு சோகமான, கவலையான சூழ்நிலையை தங்களுக்கே உரித்தான முறையில் விவரிக்கிறார்கள். திருத்தூதர்கள் இயேசுவோடு இருக்கிறார்கள். ஒருவிதமான அசாதரணமான நிலையை அவர்களும் உணர்கிறார்கள். இயேசுவின் முகம் வழக்கத்திற்கு மாறாக கவலையாக இருப்பது அவர்களுக்கு நிச்சயம் அதிர்ச்சியைத் தந்திருக்கும்.

மாற்கு இந்த பகுதியை விளக்குகிறபோது, திருத்தூதர்களின் உணர்வை வெளிப்படுத்துகிறார். அவர்களுக்கு ஆச்சரியமும், பயமும் கலந்த உணர்வு. ஏனென்றால், இயேசு வழக்கமான இயேசுவாக இல்லை. அவரது உள்ளத்தில் கலக்கம் இருப்பது, அவரது முகத்தில் வெளிப்படுகிறது. அகத்தின் அழகு நிச்சயம் முகத்தில் வெளிப்படும் தானே. ஆனால், அவர்களால் இயேசுவின் சோகத்திற்கான காரணத்தை உறுதியாக அறிந்துகொள்ள முடியவில்லை. லூக்கா இந்த பகுதியை விளக்குகிறபோது, சீடர்களுக்கு தனது பாடுகளின் வலியை விளக்க, இயேசு எடுக்கக்கூடிய முயற்சியை எடுத்துக்கூறுவதாக இருக்கிறது. மத்தேயு நற்செய்தியாளர் இயேசுவின் முழுமையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். அது வெறும் உடல் சம்பந்தப்பட்ட பாடுகளைப்பற்றியது அல்ல. உள்ள மற்றும் ஆன்மா சம்பந்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. அவமானம், சோகம், ஏமாற்றம், தோல்வி, அநீதி, கேலி என ஒட்டுமொத்த சோக உணர்வுகளை, இயேசுவின் பாடுகளின் முன்னறிவிப்பு வெளிப்டுத்துகிறது.

தவக்காலத்தில் கடவுளின் அருளை நிறைவாகப் பெறுகிறோம். இதனைச் சிறப்பாக பெற்றுக்கொள்ள, நாம் அனைவரும் இயேசுவின் பாடுகளை தியானிக்க வேண்டும். இயேசுவின் பாடுகளை தியானித்து, அதில் பங்கெடுக்கிறபோது, இறைவனின் அருளை சிறப்பாக நாம் பெற்றுக்கொள்கிறோம். ஆக, இயேசுவின் பாடுகளில் பங்கெடுக்க நமக்கு உதவியாக இருக்கும் சிலுவைப்பாதை வழிபாடுகளில் பக்தியாக பங்கெடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

நம்பிக்கை வாழ்வு

இயேசு தனது சாவை மூன்றாம் முறை முன்னறிவிக்கிறார். தான் சென்று கொண்டிருக்கின்ற வழியை அவர்கள் அறிந்துகொள்ள, சீடர்களை தயார்படுத்துகிறார். சீடர்களுக்கு இயேசுவின் போதனை புரியவில்லை என்றாலும், அவருடைய உணர்வுகள் புரிகிறது. இயேசு ஏதோ கலக்கத்தில் இருக்கிறார் என்பதும், அவரது மனம் வருத்தத்தை சுமந்துகொண்டிருக்கிறது என்பதும், அவர்களுக்கு நன்றாகத்தெரிகிறது. எனினும், அவர்கள் எதையும் கேட்கத்துணியவில்லை.

இயேசுவின் ஒவ்வொரு வார்த்தையும், அவரது பாடுகளை நினைவுபடுத்துகிறது. அதன் கொடூரத்தை உணர்த்துகிறது. சீடர்கள் இயேசுவை விட்டுவிட்டு ஓட இருக்கிறார்கள் என்பதையும், அவர் சுமக்கவிருக்கிற அவமானம், வலி, வேதனை இவற்றிற்கெல்லாம் மேலாக, தான் சந்திக்கவிருக்கிற இறப்பு ஆகிய அத்தனை உணர்வுகளையும் இயேசு வார்த்தைகளில் வெளிப்படுத்த விரும்புகிறார். இவ்வளவு வேதனைகளை வெளிப்படுத்திய இயேசு, இறப்பிற்கு எதிரான வெற்றியையும் பதிவு செய்கிறார். தோல்வி நிரந்தரமாக இருக்க முடியாது. அதுவும் மறைந்து போகும். வெற்றி ஒன்றுதான் நிலைத்திருக்கும் என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறார்.

வாழ்வில் நேர்மையோடு வாழுகிறவர்கள் சந்திக்கக்கூடிய துன்பங்கள் ஏராளம். அவற்றைவிட அவர்கள் அனுபவிக்கும் இழப்புக்களும் சொல்ல முடியாத அளவுள்ளவை. ஆனாலும், அவர்களின் துன்பங்களுக்கு, இழப்புகளுக்கு இறுதியில் நிச்சயம் வெற்றி உண்டு. அதுதான் இயேசுவின் உயிர்ப்பு காட்டும் நம்பிக்கைச் செய்தி.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நீங்கள் என்ன கேட்கிறீர்கள் ?

செபதேயுவின் மனைவி தம் மக்களோடு வந்து, அவர்கள் இயேசுவின் அரியணையின் வலப்புறமும், இடப்புறமும் அமரும் வரத்தைக் கேட்டபோது, இயேசு சொன்ன மறுமொழியை இன்று சிந்திப்போம்: "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை".

நமது மன்றாட்டுகளில், திருப்பயணங்களில் நாம் என்ன கேட்கிறோம் என நமக்குத் தெரிகிறதா? நாம் வேளாங்கன்னி போன்ற திருத்தலங்களுக்குத் திருப்பயணம் செல்கிறோம். சில வேண்டுதல்களை மனதில் கொண்டு நவநாள் செய்கிறோம். நேர்ச்சை செய்து வேண்டிக்கொள்கிறோம். நற்செய்தி, தியானக் கூட்டங்களில் கலந்துகொண்டு, நமது குறிப்பிட்ட தேவைகளை இறைவனிடம் ஏறெடுக்கிறோம். ஆனால், என்ன கேட்கிறோம் என உணர்ந்து கேட்கிறோமா?

ஒருவேளை வேலைவாய்ப்பு, சொந்த வீடு, சொந்த வாகனம், நல்ல பதவி உயர்வு... போன்ற தேவைகளை மனதில் கொண்டு மேற்சொன்ன வேண்டுதல்களைச் செய்தால், செபதேயுவின் மனைவிக்கு இயேசு சொன்ன பதில் நமக்கும் பொருந்தாதா? "நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை".

முதலில், தாம் கேட்பது தன்னலம் நிறைந்த ஒரு வேண்டுதல் என்பது செபதேயுவின் மனைவிக்கும், மக்களுக்கும் தெரியவில்லை. இரண்டாவது, இந்த வேண்டுதல் இறைவனின் திருவுளத்துக்கு ஏற்றதா என்பதுவும் தெரியவில்லை. மூன்றாவது, தாங்கள் கேட்டது உண்மையிலேயே தங்களுக்கு நிறைவான மகிழ்ச்சியைத் தருமா என்பதுவும் அவர்களுக்குத் தெரியவில்லை. எனவேதான், இயேசுவின் அந்த மறுமொழி.

நாமும் இந்த மூன்று கருத்துக்களையும் மனதில் கொண்டு, தெரிந்துகொண்டு நம் மன்றாட்டுகளை இறைவனிடம் தெரிவிப்போம். இறைவனுக்குத் திருவுளமானால், அது உண்மையிலேயே நமக்கு நன்மை தருவதாக இருந்தால், அது நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருந்தால், இறைவன் நிச்சயம் அதைத் தருவார். இல்லாவிட்டால், எது நல்லது என்பது அவருக்குத் தெரியுமோ, அதை அவர் நமக்குத் தரட்டும். "அவரது பார்வையில் எது நல்லதோ, அதை அவர் செய்யட்டும்" (1 சாமு 3:18) என்னும் ஏலியின் மனநிலையே நம்மிலும் நிலவட்டும்.

மன்றாடுவோம்: நன்மைகள் அனைத்தையும் நல்கும் நாயகனான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது பார்வையில் எது நல்லதோ, அதை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

-------------------

இணையதள உறவுகளே

ஒரு தாய் தன் மக்கள் இருவரும் ஒருவன் ஆட்சியில் வலப்பக்கமும் அடுத்தவன் இடப்பக்கமும் அமர்ந்து பதவிவகிக்க வேண்டும் என்று கேட்பதாக மத்தேயு சொல்கிறார். மக்கள் யாக்கோபும் யோவானும், “நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும்" யார் கேட்டாலும் சரி. கேட்டதில் தவறில்லை. பதவி என்றால் என்ன என்பதை அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் இயேசுவின் ஆதங்கம்.

அவர்கள்என்ன? இன்றைக்கு பதவிக்கு பறக்கும் உறுப்பினர்களும், மாண்புமிகுகளும், ஆயர்களும் அடியார்களும் இதற்கு விதிவிலக்கு இல்லையே! பதவி என்பது, பணிசெய்யவும் தொண்டு செய்யவும் என்கிறார் இயேசு. பணம் சேர்ப்பதும் சுகம் அனுபவிப்பதும் பதவியை தக்க வைப்பதும் வேண்டியவர்களுக்கு வரம்பு மீறி சலுகை செய்வதும் வேண்டாதவனை கசக்கி பிளிவதும் இன்றைக்கு பதவி என்று ஆகிவிட்டது. உண்மைக்குச் சான்று பகர்ந்து, நல்லதைச் செய்து, அதனால் பதவி இழந்து, துன்பக் கிண்ணத்தில் குடிக்க முன்வருவோருக்கு ஆதரவளியுங்கள், வாக்களியுங்கள். பதவியை பணியாக நினைப்போரை அடையாளம் காணுங்கள். சமுகம் செழிக்கும்.

-ஜோசப் லீயோன்

-------------------------

“துன்பக் கிண்ணம்”!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

செபதேயுவின் மனைவி தன் மக்களுக்காக இயேசுவிடம் பதவிகள் வேண்டியபோது, அவர் கேட்ட கேள்வி:    “ நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? யூதர்களின் நம்பிக்கையின்படி, அப்பத்தைப் பகிர்வது ஆசிர்வாதங்களைப் பகிர்வதற்குச் சமம். கிண்ணத்தைப் பகிர்வது என்பது துன்பங்களைப் பகிர்வதற்குச் சமம். இயேசு தம் சீடர்களிடம் தமது பாடுகளைப் பகிர்வதற்கு அவர்கள் ஆயத்தமா என்று வினவுகிறார். தாங்கள் சொல்வது என்னவென்று உணராமலே அவர்களும் “ஆம்” என்கின்றனர். இயேசுவோ அவர்களின் எதிர்கால பணிவாhழ்வை மனதில் கொண்டு, “ஆம், என் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள்” என்கிறார்.

யாக்கோபும், யோவானும் நல்ல சீடர்கள். அவர்கள் இயேசுவுடன் அப்பத்தையும் பகிர்ந்தனர். துன்பக் கிண்ணத்தையும் பகிர்ந்தனர். அவரது அன்பையும், ஆசிர்வாதங்களையும் பகிர்ந்து கொண்டனர். அதுபோல, அவரது பாடுகளிலும், துன்பங்களிலும் பங்கெடுத்தனர். உண்மையான உறவுகள் அப்படித்தான் இருக்க வேண்டும். இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொள்வதுதான் நல்ல உறவு. இன்று நமது உறவுகளை ஆய்வு செய்து நாம் துன்பக் கிண்ணத்திலும் குடிக்கத் தயாராக இருக்கிறோமா? என்று நம்மையே கேட்டுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: உறவின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது சீடர்கள் உமது இன்பத்தையும், துன்பத்தையும் பகிர வேண்டும் என எதிர்பார்த்தீரே. நாங்களும் எங்களது உறவுகளில் இன்பங்களை மட்டுமல்ல, துன்பங்களையும் பகிர்ந்துகொள்ள அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு, 'மானிட மகனும் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கும்
பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்' என்று கூறினார்'' (மத்தேயு 20:28)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு துன்பங்கள் அனுபவித்து, சாவுக்குக் கையளிக்கப்பட்டார். தமக்கு என்ன நேரப்போகிறது என்பதை அவர் தம் சீடருக்குப் பலமுறை எடுத்துரைத்தது உண்டு. ஆனால் அவருடைய சீடர்களோ இயேசு கூறியதைப் புரிந்துகொள்ளவில்லை. அவர்கள் இயேசுவை ஒரு மெசியா-அரசர் என்று பார்த்தார்கள். அவர் துன்புறும் மெசியா என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் துன்பத்தின் வழியாகவே நிறைவாழ்வை நாம் பெற முடியும் என்பதை இயேசு தம் வாழ்விலும் சாவிலும் தெளிவாகக் காட்டினார். அவருடைய வாழ்நாட்களில் அவருக்கு ஏற்பட்ட துன்பங்கள் பல உண்டு. அவற்றில் எல்லாம் மிகப்பெரிய துன்பம் அவருடைய உடலுக்கு ஏற்பட்ட வேதனை அல்ல, மாறாக, அவருடைய உள்ளத்தையும் இதயத்தையும் ஊடுருவிய துன்பங்களே அவை. இயேசுவின் உள்ளம் துயரத்தால் சோர்ந்திருந்ததை கெத்சமனித் தோட்டத்தில் ''இயேசு துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்'' (மத் 26:37) எனக் குறிப்பிடுகிறார் மத்தேயு.

-- இவ்வாறு துன்புற்று, சாவுக்குக் கையளிக்கப்பட்டு இயேசு இறந்தாலும் கடவுள் அவரைச் சாவிலிருந்து விடுவித்தார்; இயேசுவைப் புத்துயிர் பெற்றவராக உயிர்பெற்றெழவும் செய்தார். இயேசுவைப் பின்செல்வோரும் அவரைப் போல மக்களுக்குப் பணிசெய்வதில் ஈடுபடும்போது மக்கள் கடவுளின் அன்பை அனுபவித்து உணர்ந்து அறிந்துகொள்வார்கள். எனவே, இறையாட்சியில் நாம் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்னும் முறையற்ற வேண்டுகோளை இயேசுவிடம் கொண்டுசெல்வதே முறையல்ல என்பதை இயேசுவின் சொற்கள் காட்டுகின்றன. இயேசுவைப் பின்பற்றுவோர் தொண்டு ஆற்றுவதிலும் பிறருக்கு அன்புகாட்டி வாழ்வதிலும் நிலைத்திருக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு
இறைவா, கடவுளாட்சியின் பொருட்டு நாங்கள் துன்பத்தையும் தாங்கிக்கொள்கின்ற மனநிலையைத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"யார் பெரியவர்? "

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்றய நற்செய்தி வாசகம் நமக்கு ஒரு நல்ல கருத்தை கூறுகின்றது. செபதேயுவின் மனைவி இயேசுவிடம் வந்து தம் மக்கள் இருவருக்கும் விண்ணகத்தில் உயர் பதவி கேட்கின்றார். இயேசு அதைக் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்வை என்றே தோன்றுகிறது. ஆனால் மற்ற பத்து அப்போஸ்தலர்களும் இந்த ஒரு பதவியை கேட்ட தாயை விட்டுவிட்டு அந்த இரு அப்போஸ்தலர்கள் மேல் கோபம் கொள்கின்றனர். இதுதான் புரியவில்லை. ஒரு வேளை தாங்கள்தான் அந்தப் பேற்றினைப் பெறவேண்டும் என்று ஒவ்வொறு அப்பேஸ்தலரும் நனைத்தார்களோ என்னவோ!

இங்கே அவர்கள் கொண்டிருந்த கர்வமும் 'தான்' 'நான்' என்ற அகந்தை இருந்ததாலுமோ அல்லது அந்த தாய் கேட்ட வரத்திற்கு இந்த இரு அப்போஸ்தலர்களும் தகுதியற்றவர்கள் என்ற முடிவிற்கு வந்ததாலோ தான் மற்ற அப்போஸ்தலர்கள் கோபம் கொள்கின்றனர். ஆகவே தான் இயேசுவும் அவர்கன் அனைவருக்கும் தாழ்ச்சி என்கிற புண்ணியத்தைப் படிப்பிக்கின்றார். இவ்வளவு குறைபாடுள்ள சாதாரன மனிதர்களைகளையும் இயேசு நேசிக்கிறார் அதுவும் தாம் சாகும் வரை.

நம்மிடையே பணிபுரியும் சகோதர சகோதரிகளிடம் நாம் இதே பாணியைப் பன்பற்றுகிறோமா? அடுத்தவர்களளை விட நாம் நல்லவர்கள் என்ற தீhப்பை நமதாக்கிக்கொள்கிறோமா? எந்த சூழ்நிலையிலும் பிறரை மதித்து பெருந்தன்மையுடனும் பணிவுடனும் வாழ வரம் வேண்டுவோம் வாழ முயற்சிப்போம்.

--அருட்திரு மரியதாஸ்