முதல் வாசகம்

இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 1-2,9-13

ஆண்டவர் கூறுகிறார்: கலகம் செய்ததும் தீட்டுப்பட்டதும் மக்களை ஒடுக்கியதுமான நகருக்கு ஐயோ கேடு! எந்தச் சொல்லுக்கும் அவள் செவிசாய்ப்பதில்லை; கண்டிப்புரையை அவள் ஏற்பதுமில்லை; ஆண்டவர்மேல் அவள் நம்பிக்கை வைப்பதில்லை; தன் கடவுளை அண்டி வருவதுமில்லை. அக்காலத்தில் நான் மக்களினங்களுக்குத் தூய நாவினை அருள்வேன்; அப்போது அவர்கள் அனைவரும் ஆண்டவரின் பெயரால் மன்றாடி ஒருமனப்பட்டு அவருக்குப் பணிபுரிவார்கள். எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கும் அப்பாலிருந்து என்னை மன்றாடுவோர் - சிதறுண்ட என் மக்கள் - எனக்குக் காணிக்கை கொண்டு வருவார்கள். எனக்கு எதிராக எழுந்து நீ செய்த குற்றங்களை முன்னிட்டு அந்நாளில் அவமானம் அடையமாட்டாய்; ஏனெனில், அப்பொழுது இறுமாப்புடன் அக்களித்திருப்போரை உன்னிடமிருந்து அகற்றிவிடுவேன்; இனி ஒருபோதும் எனது திருமலையில் செருக்கு அடையமாட்டாய். ஏழை எளியோரை உன் நடுவில் நான் விட்டுவைப்பேன்; அவர்கள் ஆண்டவரின் பெயரில் நம்பிக்கை கொள்வார்கள். இஸ்ரயேலில் எஞ்சியோர் கொடுமை செய்யமாட்டார்கள்; வஞ்சகப் பேச்சு அவர்களது வாயில் வராது; அச்சுறுத்துவார் யாருமின்றி, அவர்கள் மந்தைபோல் மேய்ந்து இளைப்பாறுவார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 5-6. 16-17. 18,22

பல்லவி: இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்.

1 ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்;
அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2 நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்;
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். -பல்லவி

5 அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்;
அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6 இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்;
அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். -பல்லவி

16 ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது;
அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப் போகச் செய்வார்.
17 நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்;
அவர்களை அனைத்து இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார். -பல்லவி

18 உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்;
நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார்.
22 ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்;
அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார். -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாரும், ஆண்டவரே, காலம் தாழ்த்தாதேயும்; உம் மக்களின் பாவங்களைப் போக்கியருளும். அல்லேலூயா.

மத்தேயு 21:28-32

திருவருகை காலம்-மூன்றாம் வாரம், செவ்வாய்

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 28-32

அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: �இந்த நிகழ்ச்சியைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு மனிதருக்கு இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர் மூத்தவரிடம் போய், `மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்' என்றார். அவர் மறுமொழியாக, `நான் போக விரும்பவில்லை' என்றார். ஆனால் பிறகு தம் எண்ணத்தை மாற்றிக்கொண்டு போய் வேலை செய்தார். அவர் அடுத்த மகனிடமும் போய் அப்படியே சொன்னார். அவர் மறுமொழியாக, `நான் போகிறேன் ஐயா!' என்றார்; ஆனால் போகவில்லை. இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?'' என்று கேட்டார். அவர்கள் �மூத்தவரே'' என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், �வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை. மாறாக வரிதண்டுவோரும் விலைமகளிரும் அவரை நம்பினர். அவர்களைப் பார்த்த பின்பும் நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவும் இல்லை; அவரை நம்பவும் இல்லை'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

கடவுள் விரும்பும் திறந்த உள்ளம்

மருத்துவரை யார் தேடுவார்கள்? எப்போது தேடுவார்கள்? நோய்வாய்ப்பட்டிருக்கிற அல்லது தான் பாதிக்கப்பட்டிருக்கிறோமோ என்று நினைக்கிற ஒருவர் தான் மருத்துவரை நாடுவார். அதுவரை யாரும் மருத்துவரை நினைத்துக் கொண்டிருப்பதில்லை. தேவை எழுகிறபோது மருத்துவரின் உதவியை ஒருவா் நாடுகிறார். தன்னை நோயாளி என்று கருதாத, நினைக்காத, நம்பாத யாரும் மருத்துவரை தேடுவது கிடையாது. இதுதான் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருந்தது. அவர்கள் தங்களை தூய்மையானவர்களாக, புனிதமானவர்களாக கருதிக்கொண்டிருந்தனர். கடவுளின் இரக்கம் தங்களுக்கு தேவையில்லை என்ற எண்ணம் கொண்டிருந்தனர். அப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு இந்த உவமையை இயேசு சொல்கிறார்.

இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு பேரும் வேறுபாடான எண்ணங்களைக் கொண்டிருக்கிறவர்கள். இன்றைக்கு இந்த சமுதாயத்திலும் ஒவ்வொருவரும் வேறுபாடான கோணத்தில் சிந்திக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது நேர்மறையாக சிந்திக்கப்பட்டால் வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும். எதிர்மறையாகச் சிந்தித்தால் அழிவை நோக்கியதாக இருக்கும். இந்த இரண்டு பிள்ளைகளிடத்திலும் தந்தை ஒரே கோரிக்கையைத்தான் வைக்கிறார். பதில் முரண்பட்ட பதிலாக அவருக்கு கிடைக்கிறது. செயல்பாடும் முரண்பட்டதாகவே இருக்கிறது. “போகிறேன்” என்று சொல்கிற மகன் இறுதியாக போகவில்லை. ”போக மனம் இல்லை” என்று சொல்கிறவன் இறுதியில் போகிறான். இந்த மகன் தன் உள்ளத்தில் எண்ணுவதை பகிர்ந்து கொள்கிறான். அதை வெளிப்படுத்த, தந்தை என்ன நினைப்பாரோ? என்ற சிந்தனைகள் அவனுடைய உள்ளத்தில் எழவில்லை. இரண்டாவது மகன், தந்தையிடத்தில் நல்ல பிள்ளையாக நடிக்கக்கூடியவனாக இருக்கிறான். அது அவனுடைய செயலில் வெளிப்பட்டுவிடுகிறது.

கடவுள் முன்னிலையில் திறந்த உள்ளத்தினராக நாம் இருக்க வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். நமது பலவீனங்களை ஏற்றுக்கொள்கிறவர்களாக நாம் வாழ வேண்டும். அதற்கேற்ப நமது வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் கடவுள் விரும்புகிறார். அப்போதுதான் கடவுளின் அருளும் நம்மை வந்தடையும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------

வாக்குறுதிகள்

வாக்குறுதி என்பது நமது வாழ்வின் அங்கமாக இருக்கிறது. நாம் பல இடங்களில் வாக்குறுதி கொடுக்கிறோம். நமது வாழ்வின் தொடக்கத்திலிருந்து, இறுதிவரை வாக்குறுதி கொடுக்கிறோம். அருட்சாதனங்கள் நிறைவேற்றப்படுகின்றபோது நாம் இறைவனின் முன்னிலையில், நமது வாக்குறுதிகளைக் கொடுக்கிறோம். கொடுத்த வாக்குறுதிகளை அவ்வப்போது புதுப்பிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகமானது, வெற்று வாக்குறுதிகளால் நமக்கு நன்மை ஒன்றும் கிட்டாது என்பதையும், வாக்குறுதிகள் செயல்படுத்தப்படுகிறபோதுதான், அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

இன்றைக்கு வாக்குறுதி கலாச்சாரங்கள் மலிந்தும், நலிந்தும் விட்டன. ஏனென்றால், வாக்குறுதிகள் கவர்ச்சிப்பொருளாக மாறிவிட்டன. அரசியல் தளத்தில் எவ்வளவோ வாக்குறுதிகள் தரப்படுகிறது. அந்த வாக்குறுதிகள் நிச்சயமாக செயல்படுத்தப்பட மாட்டாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், அதைப்பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. ஆனால், நமது பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் இதுவல்ல. கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல், நாணிக்கோணி, மடிந்த வீரத்தலைமுறை நமது தலைமுறை. மீட்பின் வரலாற்றில், கடவுள் தான் கொடுத்த வாக்குறுதிகளுக்கு பிரமாணிக்கமாக இருப்பதைப் பார்க்கிறோம். அதே பண்பாடு நமக்கும் இருக்க வேண்டும்.

கடவுள் முன்னிலையில் நாம் கொடுக்கிற வாக்குறுதிகளுக்காவது நாம் பிரமாணிக்கமாய் இருக்கிறோமா? வாக்குறுதிகளை எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்கிற எண்ணம் நம்மிடையே இருக்கிறதா? வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் கண்ணும், கருத்துமாய் இருக்கிறோமா? சிந்திப்போம். செயல்படுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

கடவுளுக்கு ஏற்ற வாழ்வு

இயேசு சொன்ன இந்த உவமையில், யாரும் புகழப்படவில்லை. இரண்டு பேரில் யார் பரவாயில்லை என்பதுதான் கேள்வி. இரண்டு பிள்ளைகளுமே தந்தையின் சொல்லை, ஒரு வகையில் கேட்காதவர்கள்தான். முதல் மகன் “போக முடியாது” என்று சொல்லி, பின் மனம்மாறி அங்கே செல்கிறான். முதலில் தந்தையின் வார்த்தைக்கு மதிப்பளிக்காத நிலையை இங்கே பார்க்கிறோம். இரண்டாம் மகன் ”போகிறேன்” என்று சொல்லி, பின்னர் போகாமல் இருக்கிறான். இதுவும் தந்தையை உதாசீனப்படுத்துகிற ஒரு நிலைதான். ஆக, இரண்டு பேருமே தந்தையின் மனம் நோகும்படி நடக்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

இந்த உவமை யூத சமயத்தலைவர்களையும் பாவிகள் என்று முத்திரைக்குத்தப்பட்டவர்களையும் பற்றி கூறுவதாக அமைகிறது. யூத சமயத்தலைவர்கள் கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிவதாகக் கூறிக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களின் வாழ்க்கை கடவுளுக்கு விரோதமானதாக இரு்ககிறது. பாவிகளும், வரிதண்டுபவர்களும் கடவுளுக்கு விரோதமானவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்வை முழுமையாக மாற்றிக்கொண்டு, கடவுளுக்கு ஏற்ற வாழ்வை வாழ்கிறார்கள். நமது வாழ்வு கடவுளுக்கு ஏற்ற வாழ்வாக இருக்க வேண்டும்.

நம்மை நாமே நேர்மையானவர்களாக நினைத்துக்கொண்டால், அது தவறு. நான் கடவுளின் வார்த்தைக்கு ஏற்ப முழுமையாக வாழ்கிறோமா? என்று எண்ணிப்பார்க்க வேண்டும். கடவுளுக்கு ஏற்ற ஒரு வாழ்வு வாழ நாம் முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

சொன்னது ஒன்று... செய்தது இன்னொன்று !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவின் படைப்பாற்றலில் வெளியான அற்புதமான இன்னொரு உவமையை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். மூத்த மகன் போகவிரும்பவில்லை என்று சொன்னான். பின்னர் மனந்திருந்தி வேலைக்குச் சென்றான். இளையவனோ போகிறேன் என்று சொன்னான். ஆனால், போகவில்லை. கேட்போரின் வாயிலிருந்தே மூத்த மகனே தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர் என்னும் பதிலை இயேசு வரவழைத்தார்.

திருப்பலியிலும், வழிபாடுகளிலும், இறைவார்த்தையிலும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் விழிப்பூட்டும் ஓர் உவமையாக இது அமைகின்றது. நம்மைப் போன்றவர்கள் அந்த மூத்த மகனைப் போல அல்ல, இளைய மகனைப் போலவே செயல்படுகிறோம். இறைவனின் திருவுளத்தை நிறைவோற்றுவோம் என்று வாயால், மனதால் உறுதி கொள்கிறோம். ஆனால், சொன்னதுபோல, செயல்படுவதில்லை. மனித பலவீனத்தால், ஆர்வக்குறைவால், அ;ல்லது சோதனைகளின் சோர்வால் தடம் புரண்டுவிடுகிறோம். எனவே, ஆலயத்துக்கே வராதவர்கள், வழிபாடுகளில் ஆர்வம் காட்டாதவர்கள், இறைவார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்--- ஆனால், இறையாட்சியின் விழுமியங்களான நேர்மை, உண்மை, சமத்துவம் போன்றவற்றை இயல்பாகவே கடைப்பிடிப்பவர்கள்.. இத்தகையோரைவிட நாம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் குறைந்தவர்களே என்பது புலப்படுகிறது. எனவே, நாம் விழிப்பாயிருப்போம். நம் செயல்கள் நம் எண்ணங்கள், சொற்களுக்கிசைய அமையுமாறு பார்த்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: உண்மையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் சொல்லுக்கும், செயல்களுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வை எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் எப்போதும்; இறைத்தந்தைக்குப் பிரியமானவர்களாக வாழும் அருளைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

 

----------------------

''இயேசு தலைமைக் குருக்களிடமும் மக்களின் மூப்பர்களிடமும்,
'வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறையாட்சிக்கு உட்படுவர் என
உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்'' (மத்தேயு 21:31)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- கடவுளின் அன்பை மக்களோடு பகிர்ந்துகொள்ள வந்தார் இயேசு. அந்த அன்பு ஒருசில மனிதரை மட்டுமல்ல, உலகிலுள்ள எல்லா மனிதரையும் அரவணைக்கின்ற பண்புடையது. சமூகத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்கள், பாவிகள் எனக் கருதப்பட்டவர்கள் போன்ற மக்களும் கடவுளின் அன்புக்கு உரியவர்களே என இயேசு கற்பித்தார். இயேசு எந்த அதிகாரத்தோடு போதிக்கிறார் என்று கேள்வி கேட்டனர் யூத குருக்களும் மக்களின் மூப்பர்களும். அவர்கள் யூத சமய நெறிகளை அறிந்தவர்கள், யூத சட்டத்தைத் தெரிந்தவர்கள். ஆனால் இயேசுவின் வழியாகக் கடவுள் தங்களோடு பேசுகிறார் என அவர்கள் உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டார்கள். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வார்த்தைகளால் மட்டுமே கூறினால் போதாது, செயல்கள் வழியாக அதைக் காட்டவேண்டும். யூத சமயத் தலைவர்கள் சமய நெறிப்படி நடப்பதாகக் கூறிக்கொண்டார்கள்; ஆனால் உண்மையில் கடவுளின் விருப்பப்படி அவர்கள் நடக்கவில்லை. எனவே இயேசு அவர்களைப் பாhத்து: ''யோவான் நீதிநெறியைக் காட்ட உங்களிடம் வந்தார். நீங்களோ அவரை நம்பவில்லை'' என்று கூறினார் (மத் 21:32). ஆனால் மக்களால் பாவிகள் எனக் கருதப்பட்ட வரிதண்டுவோரும் விலைமகளிரும் திருமுழுக்கு யோவான் அறிவித்த செய்தியைக் கேட்டு மனம் மாறினார்கள். இவர்களை இயேசு போற்றுகிறார்.

-- கடவுளுக்குப் பணிவதாகக் கூறிக்கொண்டு உண்மையில் அவ்வாறு நாம் பணிந்து நடக்காவிட்டால் என்ன பயன்? பாவம் நிறைந்த இவ்வுலகில் குற்றம் செய்யாத மனிதர் யாருமே இல்லை. ஆனால் தவறு செய்தவர்களும் திருந்த முடியும் என நம் கடவுள் நமக்காகக் காத்திருக்கின்றார். ஒருவேளை கடவுளின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்பட்டிருந்தாலும் நாம் உண்மையாகவே மனம் மாறி, கடவுளிடம் திரும்பிச் செல்ல இயேசு நம்மை அழைக்கிறார். ஆக, பாவ வாழ்வைத் துறந்துவிட்டு, கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை முறையை நாம் தழுவ வேண்டும். அப்போது கடவுளுக்கு நாம் ஏற்புடையோர் ஆவோம்.

மன்றாட்டு
இறைவா, சொல்லாலும் செயலாலும் உம் திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

 

''மகனே, நீ இன்று திராட்சைத் தோட்டத்திற்குச்
சென்று வேலை செய்'' (மத்தேயு 21:28)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- ஒரு தந்தைக்கு இரு புதல்வர்கள். ஆனால் அவர்களுடைய பண்பும் போக்கும் முற்றிலும் மாறுபட்டிருந்தன. மூத்த மகன் முதலில் தந்தையை மதிக்காமல் பேசுவதுபோலத் தெரிந்தாலும் பின்னர் தந்தை கேட்டுக்கொண்டபடி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்தார். ஆனால் அடுத்த மகனோ முதலில் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதுபோலக் காட்டிக்கொள்கிறார்; ஆனால் உண்மையில் தந்தையின் விருப்பப்படி தோட்டத்திற்குச் சென்று வேலை செய்ய அவர் முன்வரவில்லை. இந்த இரு மகன்களும் நடந்துகொண்ட முறையை ஒரு கதையாகச் சொன்ன இயேசு நமக்கும் ஒரு பாடம் புகட்டுகிறார். அதாவது, கடவுளின் திருவுளம் என்னவென்று அறிந்த பிறகும் நாம் அதை நிறைவேற்றாமல் போய்விடுகிறோம். இது சரியல்ல என்பது இயேசுவின் போதனை. இயேசுவின் எதிரிகளின் நடத்தை அவ்வாறுதான் இருந்தது. அவர்களுக்குக் கடவுளின் திட்டம் மோசே வழங்கிய சட்டம் வழியாக வெளிப்படுத்தப்பட்டது. கடவுள் தாம் தேர்ந்துகொண்ட மக்களோடு நட்பின் அடிப்படையில் அமைந்த ஓர் உடன்படிக்கையைச் செய்துகொண்டார். அந்த அன்பு உறவுக்கு உரிய பதில் மொழியைத் தர அம்மக்களில் பலர் தவறிவிட்டார்கள். மாறாக, யூத சமூகத்திற்குப் புறம்பானவர்கள் எனக் கருதப்பட்ட பிற இனத்தார் முதல் கட்டத்தில் கடவுளின் விருப்பப்படி நடக்க முன்வராமல் இருந்தாலும், நற்செய்தியைப் பெற்றுக்கொண்ட பிறகு மனமுவந்து கடவுளின் பணியில் ஈடுபட்டார்கள். உண்மையிலேயே கடவுளின் தோட்டத்தில் பணிசெய்யச் சென்றார்கள்.

-- இயேசு நம் உதவியை நாடுகிறார். கடவுளின் பணி மனிதரின் துணையோடுதான் நிகழமுடியுமே தவிர வேறு வழியால் நடக்காது. ஆகவேதான் கடவுளின் திட்டத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. நம் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட அன்போடு கைவிரித்து ஏற்பவர் நம் கடவுள். இத்தகைய ஆழ்ந்த நட்பினை நம்மேல் பொழிகின்ற கடவுள் நம்மிடம் கேட்பதெல்லாம் நாம் அவருடைய தோட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்பதே. இத்தோட்டம் திருச்சபையைக் குறிக்கும்; பரந்து விரிந்த பாருலகில் வாழ்கின்ற மக்களைக் குறிக்கும். யாராக இருந்தாலும் மனிதர் அனைவரும் கடவுளின் படைப்புக்களே என்பதால் நாம் உலக மக்கள் அனைவருக்கும் பணியாளராகத் துலங்குவது தேவை. தோட்டத்தில் நன்கு வேலை செய்தால் அதன் பலன் நம் சிந்தனையெல்லாம் கடந்தது. கடவுளோடு நாம் என்றென்றும் இணைந்திருப்போம். இதுவே கடவுள் நமக்கு அளிக்கின்ற உயரிய மாண்பு.

மன்றாட்டு
இறைவா, உம் திருவுளத்தை மீறாமல் அதற்கு அமைந்து வாழ அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்