முதல் வாசகம்

தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13, 17b-28

இஸ்ரயேல் முதிர்ந்த வயதில் தமக்கு யோசேப்பு பிறந்தமையால் அவரை மற்றெல்லாப் புதல்வரையும்விட அதிகமாக நேசித்து வந்தார். அவருக்கு அழகு வேலைப்பாடுகள் நிறைந்த ஓர் அங்கியைச் செய்து கொடுத்தார். அவருடைய சகோதரர்கள் தங்கள் தந்தை அவரை எல்லாரிலும் அதிகமாய் நேசிக்கிறாரென்று கண்டு அவரை வெறுத்தனர். அவர்களால் அவரோடு பாசத்துடன் பேச இயலவில்லை. அப்படி இருக்கையில் அவர் சகோதரர் செக்கேமில் தம் தந்தையின் மந்தைகளை மேய்க்கச் சென்றனர். இஸ்ரயேல் யோசேப்பை நோக்கி; ``உன் சகோதரர்கள் செக்கேமில் ஆடு மேய்க்கிறார்கள் அல்லவா? அவர்களிடம் உன்னை அனுப்பப்போகிறேன்'' என்றார். யோசேப்பு தம் சகோதரரைத் தேடிச் சென்று தோத்தானில் அவர்களைக் கண்டுபிடித்தார். தொலையில் அவர் வருவதைக் கண்ட அவர்கள் தங்களுக்கு அருகில் அவர் வருமுன் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர். அவர் சகோதரர்கள் ஒருவர் ஒருவரை நோக்கி, ``இதோ வருகிறான் கனவின் மன்னன்! நாம் அவனைக் கொன்று இந்த ஆழ்குழிகளுள் ஒன்றில் தள்ளிவிட்டு, ஒரு கொடிய விலங்கு அவனைத் தின்றுவிட்டதென்று சொல்வோம். அப்பொழுது அவனுடைய கனவுகள் என்ன ஆகும் என்று பார்ப்போம்'' என்றனர். ரூபன் இவற்றைக் கேட்டு, அவரை அவர்கள் கையிலிருந்து தப்புவிக்கும் எண்ணத்தில் அவர்களை நோக்கி, ``நாம் அவனைச் சாகடிக்க வேண்டாம்'' என்றார். ரூபன் அவர்களை நோக்கி, ``அவன் இரத்தத்தைச் சிந்தாதீர்கள். அவனைப் பாலை நிலத்திலுள்ள இந்த ஆழ்குழிக்குள் தள்ளிவிடுங்கள். அவன் மீது கை வைக்காதீர்கள்'' என்று சொன்னார். ஏனெனில் அவர் அவர்கள் கையிலிருந்து அவரைத் தப்புவித்துத் தம் தந்தையிடம் சேர்ப்பிக்கும் நோக்கம் கொண்டிருந்தார். யோசேப்பு தம் சகோதரரிடம் வந்து சேர்ந்தவுடன் அவர் அணிந்திருந்த அழகு வேலைப்பாடுகள் நிறைந்த அங்கியை உரிந்துவிட்டு, அவரை ஆழ்குழியில் தூக்கிப் போட்டனர். அது தண்ணீரில்லாத வெறும் குழி. பின்பு, அவர்கள் உணவு அருந்தும்படி அமர்ந்தனர். அப்பொழுது அவர்கள் கண்களை உயர்த்தி, கிலயாதிலிருந்து வந்துகொண்டிருந்த இஸ்மயேலரின் வணிகக் குழுவைப் பார்த்தனர். நறுமணப் பொருள்களையும், தைல வகைகளையும், வெள்ளைப் போளத்தையும் அவர்கள் ஒட்டகங்களின்மேல் ஏற்றி எகிப்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது யூதா தம் சகோதரர்களை நோக்கி, ``நாம் நம் சகோதரனைக் கொன்று அவன் இரத்தத்தை மறைப்பதனால் நமக்கு என்ன பயன்? வாருங்கள்; இஸ்மயேலருக்கு அவனை விற்றுவிடுவோம். அவன் மேல் நாம் கை வைக்க வேண்டாம். ஏனெனில் அவன் நம் சகோதரனும் நம் சொந்தச் சதையுமாய் இருக்கிறான்'' என்று சொல்ல, அவர்கள் சம்மதித்தனர். ஆகையால் மிதியான் நாட்டு வணிகர் அவர்களைக் கடந்து செல்கையில், குழியிலிருந்து யோசேப்பை வெளியே தூக்கி அந்த இஸ்மயேலரிடம் இருபது வெள்ளிக் காசுக்கு விற்றனர். அவர்களும் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டு சென்றனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 105: 16-17. 18-19. 20-21
பல்லவி: ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூருங்கள்!

16 நாட்டில் அவர் பஞ்சம் வரும்படி செய்தார்;
உணவெனும் ஊன்றுகோலை முறித்துவிட்டார்.
17 அவர்களுக்கு முன் ஒருவரை அனுப்பி வைத்தார்;
யோசேப்பு என்பவர் அடிமையாக விற்கப்பட்டார். -பல்லவி

18 அவர்தம் கால்களுக்கு விலங்கிட்டு அவரைத் துன்புறுத்தினர்.
அவர்தம் கழுத்தில் இரும்புப் பட்டையை மாட்டினர்.
19 காலம் வந்தது; அவர் உரைத்தது நிறைவேறிற்று;
ஆண்டவரின் வார்த்தை அவர் உண்மையானவர் என மெய்ப்பித்தது. -பல்லவி

20 மன்னர் ஆள் அனுப்பி அவரை விடுதலை செய்தார்;
மக்களினங்களின் தலைவர் அவருக்கு விடுதலை அளித்தார்;
21 அவர் அவரைத் தம் அரண்மனைக்குத் தலைவர் ஆக்கினார்;
தம் உடைமைகளுக்கெல்லாம் பொறுப்பாளராக ஏற்படுத்தினார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வசனம்

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு கொள்ளும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.


மத்தேயு 21:33-43

தவக்காலம் 2ஆம் வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43, 45-46

அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: ``மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து அதில் பிழிவுக் குழி வெட்டி ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேர வேண்டிய பழங்களைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களைவிட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், `இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?'' என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், ``அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேர வேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' என்றார்கள். இயேசு அவர்களிடம், " `கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்." தலைமைக் குருக்களும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்ட போது, தங்களைக் குறித்தே அவர் கூறினார் என்று உணர்ந்துகொண்டனர். அவர்கள் அவரைப் பிடிக்க வழிதேடியும் மக்கள் கூட்டத்தினர் அவரை இறைவாக்கினர் என்று கருதியதால் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

01.03.2024 வெள்ளி
புறக்கணிப்பற்றவர்களாய் ...
மத் 21 : 33 - 43, 45-46

புறக்கணிப்பு என்பது நம்முடைய சமுதாயத்திலே தொடர்ந்து நடைபெறக்கூடிய செயலாக மாறிவிட்டது. ஒருசிலர் மொழி, மதம், இனத்தினால் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இன்னொருபுறம் பொருளாதார அடிப்படையில் புறக்கணிக்கப்படுகின்றார்கள். மற்றொருபுறம் பார்க்கின்றபோது சமுதாய அடிப்படையில் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு புறக்கணிப்பு என்பது அன்றாட செயல்பாடாகவே மாறிவிட்டது. சிக்மண்ட் ப்ராய்டு உளவியல் சிந்தனையாளர் கூறுவார் ‘ஒருவன் மற்றவனை புறக்கணிக்க காரணம் ஏற்றத்தாழ்வு அல்ல மாறாக என்னைப்போன்று வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணம் என்பார்.

இத்தகைய புறக்கணிப்பைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. முதல் வாசகத்தில் யோசேப்பு தன் சொந்த சகோதரர்களால் புறக்கணிக்கப்படுகின்றார். அதனால் அவர்கள் எத்தகைய விளைவை சந்தித்தார்களென்று விவிலியம் நமக்கு சான்றுபகர்கிறது. நற்செய்தி வாசகத்திலே இயேசு புறக்கணிக்கப்படுகின்றார். இயேசு தன்னை சுட்டிக்காட்டியே இந்த உவமையை துவங்குகின்றார். ஏனென்றால் தான் எவ்வாறெல்லாம் இந்த மக்களால் புறக்கணிக்கப்பட இருக்கிறார் என்பதனை முழுமையாக இயேசு அறிந்திருந்தார். இவை அனைத்திற்குமே காரணம் நான் என்ற அகந்தை. ஏனென்றால் ஒருபுறம் தலைமைக்குருக்கள் தாங்கள் பெரியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் மிதக்கின்றார்கள். இன்னொருபுறம் பரிசேயர்கள். இத்தகைய நான் என்ற தீராத பசி இயேசு புறக்கணிக்கப்பட காரணமாக அமைகிறது.

நாம் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

மத்தேயு 21: 33 – 43, 45 - 46
புறக்கணிப்பு

நாம் வாழும் இந்த சமுதாயத்திலே புறக்கணிப்பு என்பது இருந்து கொண்டேயிருக்கிறது. பெண்கள் பலவீனமானவர்கள் என்பதனால், ஏழைகள் இல்லாவதர்கள் என்பதனால், விவசாயிகள் குறைவான மதிப்புள்ள தொழில் புரிபவர்கள் என்பதனால். ஆனால் இவற்றை மறு ஆய்வு செய்து பார்த்தால் இவர்கள் தான் கடவுளின் பார்வையில் விலையுயர்ந்த மனிதர்கள். இந்த உலகம் மீட்படைய கடவுள் முதலில் ஒரு பெண்ணைத்தான் தோ்வு செய்தார். பிறப்பின் முதல் செய்தி ஏழை. எளிய வாழ்வு நடத்திய இடையர்களுக்குத் தான் முதன் முதலில் அறிவிக்கப்பட்டது. மக்களுக்கு உவமையை எடுத்துரைக்க விவசாயத்தைத் தான் தெரிவு செய்தார். நாம் எவற்றை புறக்கணிக்கிறோமோ கடவுள் அவற்றைத் தான் தோ்வு செய்கிறார்.

அது போல தான் இன்றைய வாசகங்களிலும் இத்தகைய புறக்கணிப்பை நாம் பார்க்கின்றோம். முதல் வாசகத்தில் யாக்கோபை தன் சொந்த சகோதரர்கள், தன் சொந்த விருப்பங்களுக்காக புறக்கணிக்கின்றார்கள். ஆனால் கடவுள் பஞ்ச காலத்திலும் அவருக்கு உணவளித்து ஆசீர்வதிக்கின்றார். அது போல தான் நற்செய்தி வாசகத்தில் இயேசு புறக்கணிக்கப்படுகின்றார். ஏனென்றால் அவர் புதுமைகள் செய்கின்றார். உரோமை பேரரசை எதிர்க்கின்றார். மக்களுக்கு போதித்து அவர்களின் நெறிதவறிய வாழ்வை சீர்படுத்துகின்றார். எனவே தான் பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் அவரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என எண்ணி அவரை புறக்கணிக்கின்றார்கள். அவரை சிலுவைச் சாவுக்கு இழுத்துக் கொண்டு செல்கின்றார்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிர்பெறச் செய்து புதுவாழ்வினை கொடுக்கின்றார். இதனால் தான் கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று என்று இயேசு கூறி அவர்களுக்கு பாடம் புகட்டுகின்றார்.

நாம் சிந்திப்போம், நாம் கடவுள் முன்னிலையில் மதிக்கப்பட வேண்டுமென்றால், மற்றவர்களை ஏற்றுக் கொள்வோம். புறக்கணிக்கப்பட வேண்டுமென்றால், மற்றவர்களை புறக்கணிப்போம்.

- அருட்பணி. பிரதாப்

========================

மத் 21 : 33-43, 45-46
வெள்ளி
வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டம்

கொடிய குத்தகைதாரர் பற்றிய இவ்வுவமை பரிசேயர்களுக்கும், தலைமை குருக்களுக்கும் அவருடைய காலத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் இது இன்று நமக்கு மிகவும் பொருத்தமாக அமைகிறது. ஆண்டவர் பலவழிகளில் நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறார். ஆனால் நாம் தொடர்ந்து அவரை எதிர்க்கிறோம். அல்லது கண்டும் காணாதது போல் இருந்து அவரைக் கொலை செய்வதற்கு நாமும் காரணமாகி விடுகிறோம். மிக சுருக்கமாக இந்த உவமையின் விளக்கத்தினை அறிந்து கொள்வோம்.

 திராட்சைத் தோட்டம் – நம் ஒவ்வொருவரின் வாழ்க்கை
 சுற்றிலும் வேலி – திரு அவை (நம்மை பிற தப்பறைகளிலிருந்து பாதுகாக்க)
 பிழிவுக்குழி – நமக்குள் மிகச் சிறந்தவற்றை இறைவன் வைத்துள்ளார். இதனை வெளியே
கொண்டுவர சவால்களையும், தடைகளையும் நமக்குத் தருகிறார்.
 காவல் மாடம் – புனிதர்கள், ஆயர்கள், குருக்கள் இவர்களைக் கொண்டு தொலை தூரத்திலிருந்தும் நம்மைப் பாதுகாக்கிறார்.

நமது வாழ்க்கை என்னும் திராட்சைத் தோட்டத்தை இவ்வளவு பராமிப்புகளோடு குத்தகைக்கு நம்மிடம் விட்டவர் நமது கடவுள். குத்தகைக்கு விட்டவர் கண்டிப்பாகப் பலனை எதிர்பார்ப்பார் தானே? இது அவருடைய உரிமையன்றோ? ஆனால் நாம் அவரது திராட்சைத் தோட்டங்களில் அவரது மதிப்பீடுகளையும், வார்த்தைகளையும் கொலை செய்கின்றோம். ஒரு முறை அவரது மகனை அனுப்பியவர் இன்று தொடர்ந்தும் நாம் பலன், கனி தந்து விடுவோமா? என்ற எதிர்பார்ப்புடன் சில மனிதர்களையும் சில கருவிகளையும் அனுப்புகின்றார். இவற்றில் ஒன்றுதான் நம்மைக் கண்டிப்போடு வழிநடத்துகின்ற இத்தவக்காலம். இத்தவக்காலத்தின் முறைமைகளை (ஈதல், செபித்தல், நோன்பு) ஏற்று, அவரது மகனின் சாவிற்கு நாம் காரணமாகாமல் இருப்போம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 105: 16 – 17, 18 – 19, 20 – 21
”ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களை நினைவுகூறுங்கள்”

ஓபேதுஏதோம் இல்லத்திலிருந்து கடவுளின் பேழையை அனைவரும் தூக்கிக்கொண்டு வந்து, தாவீது அதற்கென்று அமைத்த கூடாரத்தில் வைத்தனர். அங்கே அனைவரும் இணைந்து ஆடிப்பாடி மகிழ்வதுதான், இந்த திருப்பாடலின் பிண்ணனி (1குறிப்பேடு 16: 1..). இது கடவுளுக்கு செலுத்தும் நன்றிப்பா. அங்கேயிருந்த மக்கள் அனைவரும் கடவுளை ஆடிப்பாடி மகிழ்விக்கின்றனர். கடவுள் அவர்களுக்குச் செய்திருக்கிற நன்மைகளை அறிக்கையிட்டு, எந்நாளும் கடவுளின் பிள்ளைகளாக வாழ உறுதி எடுக்கின்றனர்.

“நினைவுகூறுதல்” என்பது ஒருவர் செய்த செயல்களை எண்ணிப்பார்ப்பது. நல்லவற்றை திரும்பிப்பார்ப்பதும், கெட்டவற்றை மறப்பதும் இங்கு நமக்கு விடுக்கப்படுகிற அழைப்பு. ஆனால், மனிதர்களாகிய நாம் அதை அப்படியே மாற்றி கடைப்பிடிக்கிறோம். நல்லவற்றை மறந்துவிடுகிறோம். கெட்டவற்றை வாழ்வில் எண்ணிக்கொண்டிருக்கிறோம். இது நமது வாழ்விற்கு எப்போதுமே ஆபத்து விளைவிக்கக்கூடியதாகத்தான் இருக்கும். இதே சிந்தனையை நமது ஆன்மீக வாழ்விலும் தொடர்கிறோம். கடவுள் நமக்கு செய்து வந்திருக்கிற பல நன்மையான காரியங்களை நாம் வெகு எளிதாக மறந்துவிடுகிறோம். அதனை பொருட்படுத்துவது கிடையாது. அதனை கடவுள் நமக்கு கொடுக்க வேண்டிய கடமை இருக்கிறது என்கிற, இறுமாப்புமிக்க எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனை விடுத்து, நாம் எந்நாளும் கடவுளுக்கு நன்றி உணர்வு உள்ளவர்களாக வாழ முயற்சி எடுப்போம்.

கடவுள் நமக்கு நன்மைகளைச் செய்கிறவராக இருக்கிறார். தன்னுடைய படைப்பாம் மனிதர்களை வாழச்செய்வதற்கு பல வழிகளை ஏற்படுத்தித் தரக்கூடியவராக இருக்கிறார். அவர் நமக்கு செய்து வருகிற எல்லா நன்மையான செயல்களையும் நன்றியோடு நினைத்துப்பார்த்து, அவருடைய பிள்ளைகளாக நாம் வாழ்வோம். 

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

வெற்றி வசப்படும்

கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று – என்கிற இந்த வரிகள், திருப்பாடல் 118: 22 லிருந்து எடுக்கப்பட்டது. திருப்பாடல் ஆசிரியர் இந்த உருவகத்தை இஸ்ரயேல் மக்களுக்குப் பயன்படுத்துகிறார். இஸ்ரயேல் மக்கள் அனைவராலும் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்கள். யூதர்கள் இந்த உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலுள்ள மக்களாலும் வெறுக்கப்பட்டவர்கள். அவர்கள் நாடு முழுவதிலும் அடிமைகளாக, வேலையாட்களாக வாழ்ந்தவர்கள். ஆனால், அவர்களைத்தான் கடவுள் சிறப்பாக தேர்ந்து கொண்டார். இதனைத்தான், திருப்பாடல் ஆசிரியர் இந்த வரிகள் மூலமாக விளக்குகிறார்.

இந்த திருப்பாடல் வரிகளில் வருவதைப்போல, இயேசுவும் விலக்கப்பட்ட மனிதராகவே ஆதிக்கவர்க்கத்தாலும், அதிகாரவர்க்கத்தாலும் பார்க்கப்படுகிறார். அவர்கள் மக்களை தூண்டிவிட்டு அவரை, கொலை செய்ய நினைக்கிறார்கள். அவரை ஒதுக்க திட்டமிடுகிறார்கள். ஆனால், விரைவிலே, தாங்கள் யாரை ஒதுக்க நினைத்தோமோ அவர் தான், கடவுளின் திருமகன், கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர், கடவுளின் ஆவியைப்பெற்றவர் என்பதை அறிந்துகொள்வார்கள். தாங்கள் செய்த செயல்களை நினைத்து, மனம் வருந்துவார்கள்.

இந்த சமுதாயம் ஒதுக்கிவைத்த பலபேர் தங்களது கடின முயற்சியால், இடைவிடாத உழைப்பினால் வாழ்வில் முன்னேறி வந்துள்ளனர். பல சாதனைகளைப் படைத்துள்ளனர். நாம் மற்றவர்களால் வெறுக்கப்டுகிறபோது, ஒதுக்கப்படுகிறபோது மனம் உடைந்து போக வேண்டாம். சாதிக்க வேண்டும் என்கிற ஆவலோடு உழைப்போம். முயற்சி செய்வோம். நிச்சயம் வெற்றி நம் வசம் கிட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

கடவுளின் அன்பு

கொடிய குத்தகைக்காரர் உவமை மூன்று அருமையான செய்திகளை நமக்குத்தருகிறது. 1. கடவுள் மனிதர்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கை. கடவுள் நம்மீது அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார். மிகப்பெரிய உலகத்தைப் படைத்த கடவுள், நம்மீது வைத்த நம்பிக்கையின் காரணமாக நம்மிடமே அதைக்கொடுத்திருக்கிறார். சாதாரணமாக, நமக்கு வீடு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நாம் சிலகாலம் வெளியூரில் சென்று தங்க வேண்டியிருக்கிறது. யாரையாவது அந்த வீட்டை பாதுகாக்கச்சொன்னால், இன்றைய காலகட்டத்தில், நாம் திரும்பி வரும்போது அந்த வீடு நமக்கு திரும்ப வருமா? என்று நாம் கேட்கும் அளவுக்கு, யாரையும் இந்த உலகத்தில் நம்பிமுடியவில்லை. ஆனால், கடவுள் நம்மை நம்புகிறார். அதன் வெளிப்பாடு தான், இந்த உலகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை நம்மிடம் கொடுத்தது.

2. கடவுள் நம்மிடம் மிகப்பொறுமையாக இருக்கிறார். நாம் இந்த உலகத்தை பல விதங்களில், வடிவங்களில் சிதைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த பூமியை நாசமாக்கிக்கொண்டிருக்கிறோம். நம்மை தண்டித்து, இந்த பொறுப்பை நம்மிடமிருந்து எடுப்பதற்கு நாளாகாது. ஆனாலும், கடவுள் மிகப்பொறுமையாக இருக்கிறார். நாம் நிச்சயமாக நமது பொறுப்பு உணர்ந்து இதை நல்லமுறையில் பாதுகாப்போம், என்ற நம்பிக்கை உணர்வுடன் கடவுள் இருக்கிறார்.

3. கடவுள் நீதியுள்ளவராக இருக்கிறார். கடவுள் பொறுமையுள்ளவராக இருப்பதால், நம் மட்டில் அவர் மிகுந்த அக்கறை உணர்வு உள்ளவர்களாக இருப்பதை, நாம் தவறாகப் பயன்படுத்த முடியும் என்றால், அது தவறு. கடவுள் நீதி வழங்கக்கூடியவர். எப்படியும் அவர் நீதியை நிலைநாட்டுவார். நமக்கு பல வாய்ப்புகளைக் கொடுத்து நாம் திருந்தி வாழ்வதற்கு பலவழிகளில் முயற்சி எடுக்கிறார். திருந்தி வாழ்வதா? வேண்டாமா? என்பதை நிர்ணயிக்கும் பொறுப்பையும் நமக்குக் கொடுத்து, அவர் காத்திருக்கிறார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவன் தரும் சுதந்திரம்

இஸ்ரயேல் மக்கள் திராட்சைத்தோட்டத்தோடு தங்களை ஒப்பிடுவதை பழையஏற்பாட்டில் நாம் பார்க்கலாம். எசாயா 5: 7 “படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே”. பொதுவாக திராட்சைத்தோட்டங்கள் முள்வேலிகளால் பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருந்தது. கரடி போன்ற கொடூரமான காட்டுவிலங்குகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்து பாதுகாக்கவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு திராட்சைத்தோட்டத்திலும் அகன்ற, வாய்திறந்த தொட்டி, மேல் ஒன்றும், அதை ஒட்டி கீழேயும் அமைக்கப்பட்டிருந்தது. மேல் உள்ள தொட்டி திராட்சைப்பழங்களைப் பிழிவதற்கும், கீழே உள்ள தொட்டி பிழிந்த சாறுகளை எடுப்பதற்கும் பயன்பட்டது. இரண்டு தொட்டிகளையும் குழாய்போன்ற அமைப்பு இணைத்தது. அதுமட்டுமல்லாது, திராட்சைத்தோட்டத்தில் உயர்ந்த கோபுரம் ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கோபுரத்தினால் இரண்டு பயன்பாடுகள் இருந்தன. திருடர்கள் வருவதை முன்கூட்டியே பார்த்து எச்சரிக்கையாக தோட்டத்தைப் பாதுகாப்பதற்கும், திராட்சைத்தோட்டத்தில் வேலை செய்கிறவர்கள் தங்குவதற்கும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாலஸ்தீனம் ஆடம்பர வாழ்வுக்கு ஏற்ற இடமில்லை என்பதால், பொதுவாக திராட்சைத்தோட்ட உரிமையாளர்கள் தங்களின் திராட்சைத்தோட்டங்களை குத்தகைக்கு கொடுத்துவிட்டு, குத்தகைப்பணத்தைப் பெறுவதில் மட்டும்தான் கவனமாக இருந்தார்கள். இதுதான் இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த சூழ்நிலை.

இயேசு இந்த உவமையை தலைமைக்குருக்களுக்கும், மக்களின் மூப்பர்களுக்கும் கூறுகிறார். அதாவது கடவுள் மக்களை வழிநடத்தும் பொறுப்பைக்கொடுத்தவர்கள் தங்கள் பொறுப்பை மறந்து, கடவுளுக்கு கணக்கு கொடுக்க தவறிவிடுகின்றனர். கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பி அவர்களின் பொறுப்புக்களை நினைவூட்டுகிறார். அவர்களோ கண்டுகொள்ளவில்லை. இறுதியாக, தன்னுடைய மகனை அனுப்பினாலாவது திருந்திவிடுவார்கள் என நினைக்கிறார். ஆனால், அவர்களோ அவரைக்கொன்றுவிடுகிறார்கள். ஆனாலும், கட்டுவோர் விலக்கிய கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆனதுபோல, அவர்கள் கொன்ற அவருடைய மகன் வழியாக, இந்த உலகத்திற்கு கடவுள் வாழ்வுகொடுக்கிறார். இங்கே நமக்கு சிந்தனையாக தரப்படுவது, கடவுள் நமக்குத்தருகிற முழுமையானச்சுதந்திரம். கடவுள் எப்போதுமே நம்மை வற்புறுத்துவது கிடையாது. நமக்குத்தேவையான அனைத்தையும் கொடுத்து முழுமையானச் சுதந்திரத்தை அவர் எப்போதும் தருகிறார். ஆனால், நம்முடைய கர்வம், ஆணவம், அகந்தை நமது பொறுப்பை தவறாகப்பயன்படுத்த நம்மைத்தூண்டுகிறது. தொடக்கநூலில் நம்முடைய முதல்பெற்றோர் செய்த பாவமும் இதுதான்.

இந்த வாழ்வு கடவுள் கொடுத்தது. ஆனால், இந்த வாழ்வை எப்படி வாழ்வது? என்பது நம்மைப்பொறுத்தது. கடவுள் நமக்கு முழுமையான சுதந்திரத்தைக்கொடுக்கிறார். அந்த சுதந்திரத்தை பொறுப்போடு பயன்படுத்த நாம் அழைக்கப்படுகிறோம். இன்றைய உலகில் கொடுக்கப்பட்டிருக்கிற சுதந்திரத்தை நாம் பலவழிகளில் தவறாக, முறைகேடாகப் பயன்படுத்துகிறோம். அதை நல்லமுறையில் பயன்படுத்தி பயன்பெற முயற்சி எடுப்போம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

இறைவாக்கினரின் கதி...!

இயேசு சொன்ன நிலக்கிழார் பற்றிய உவமையை இன்றைய நற்செய்தி வாசகமாகத் தியானிக்கிறோம்.

திராட்சைத் தோட்டம் போட்டு, அதைக் குத்தகைக்கு விட்ட நிலக்கிழார் தமக்குச் சேரவேண்டிய பழங்களைப் பெற்றுவர பணியாளர்களை அனுப்பியபோது, தோட்டத் தொழிலாளர்கள் பழங்களைக் கொடுக்காததோடு, பணியாளர்களைத் தாக்கினார்கள், இறுதியில் நிலக்கிழாரின் மகனையும் கொன்றுபோட்டார்கள்.

அரசன் தாவீதிடம் இறைவாக்கினர் நாத்தான் இதுபோன்ற ஓர் உவமையைச் சொன்னபோது தாவீதுக்கு பெருஞ்சினம் ஏற்பட்டது. அதனைச் செய்தவன் சாகவேண்டும் என்று கூறினார், தாமே அம்மனிதன் என்பதை உணராமல்.

ஆனால், இயேசுவின் உவமையைக் கேட்ட தலைமைக் குருக்களும், பரிசேயரும் தங்களைப் பற்றியே அந்த உவமையை இயேசு கூறினார் என்று "உணர்ந்துகொண்டனர்" என்கிறார் மத்தேயு. ஆனால், மனம் மாறவில்லை, மாறாக அவரைப் பிடிக்க வழிதேடினார்கள்.

இந்த உவமையை இன்று கேட்கும் நமது பதில் என்ன? தாவீதைப் போல நாமே அம்மக்கள் என்பதை உணராமல் கோபம் கொள்கிறோமா? அல்லது பரிசேயர்கள் போல உணர்ந்துகொண்டும் மனம் மாறாமல் இருக்கின்றோமா?

தாவீதைப் போல, மனதுருகி இறைவனிம் மன்னிப்பு கேட்போம். இறைவன் எதிர்பார்க்கும் கனிகளை நம் வாழ்வில் வழங்குவோம்.

மன்றாடுவோம்: கனிகளைத் தேடும் தலைவரான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களிடம் எதிர்பார்க்கும் நற்செயல்கள் என்னும் கனிகளை நாள்தோறும் வழங்க எங்களுக்கு அருள்தாரும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

கொடிய தொழிலாளர்கள்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

கொடிய குத்தகைதாரர் உவமை என்று அழைக்கப்படும் இந்த உவமை வழியாக இயேசு தம்மை ஏற்க மறுத்த பரிசேயர்கள், குருக்கள் மற்றும் ய+தர்களின் நிலையை எடுத்துரைக்கிறார். உவமையில் வருகின்ற தொழிலாளர்கள் கண்மூடித்தனமாக வகையில் செயல்பட்டுள்ளனர் என்;பது கண்கூடு. அவர்களுடைய அறியாமை அவர்களை நிலக்கிழாருக்கெதிராக சதி செய்யத் துhண்டுகிறது. அவர்களின் நன்றியற்ற தன்மை நிலக்கிழாரின் மகனையே கொல்லத்துணிகிற அளவுக்கு அவர்களின் பார்வையைப் பறிக்கிறது. இறுதியில், அவர்கள் தண்டனை பெறுகிறார்கள்.

இந்த உவமையை நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் யார்? நாம்தான் அந்த கொடிய தொழிலாளர்கள். இறைவன் நமக்கு விடுக்கின்ற பல்வேறு செய்திகளையும், செய்தியாளர்களையும் நாம் புறக்கணிக்கிறோம். இறைத் திருவுளத்துக்கு எதிராக நடக்கிறோம். இறைவார்த்தையைப் புறக்கணிக்கிறோம். நன்றியற்ற முறையில் வாழ்கிறோம். இறைவனைப் புறக்கணிக்கிறோம். அதன் விளைவாக நிறைவாழ்வை இழக்கவிருக்கிறோம். இன்றே நாம் இதை உணர்ந்துகொள்வோமா?

மன்றாடுவோம்: நிறைவின் நாயகனே இறைவா, உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாகிய நாங்கள் உம்மைப் புறக்கணித்து, நன்றியற்ற வகையில் வாழ்வதற்காக வருந்துகிறோம். மன்னியும். அன்றாடம் நீர் தரும் செய்திகளை, அழைப்புகளை ஏற்று செவிசாய்த்து வாழ உமது ஞானத்தைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

----------------

 

''நிலக்கிழார் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களிடம் தோட்டத்தைக்
குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்'' (மத்தேயு 21:33)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- தோட்டத்தில் வேலை செய்து காய்கறிகளைப் பயிரிடுவதும் மலர்களை முகிழச் செய்வதும் மனத்திற்கு இதமான பொழுதுபோக்காகவோ தொழிலாகவோ இருக்கலாம். இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டில் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து பழங்களைக் கனியச் செய்யும் தொழில் சாதாரணமாக நடந்துவந்தது. அதுவே இயேசுவின் வாயில் ஓர் அழகிய உவமையாக உருவெடுக்கிறது. தோட்டத் தொழிலாளர்களிடம் தம் தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டுப் பயணமாகிச் செல்கிறார் நிலக்கிழார் ஒருவர். அவர் உரிய காலத்தில் பழங்களைப் பெற்றுவரும்படி அனுப்பிய தூதர்களை அக்குத்தகைக்காரர்கள் துன்புறுத்திக் கொன்றுபோடுகிறார்கள். ஏன், நிலக்கிழாரின் சொந்த மகனையே அவர்கள் கொலைசெய்துவிடுகின்றனர். இயேசு இந்த உவமையைத் தம்மைப் பற்றியே கூறினார். அவர்தான் அனுப்பப்பட்ட ''மகன்''. அவரைத்தான் மக்கள் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள் (மத் 21:39). இது இயேசு எருசலேம் நகருக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது. இவ்வாறு கொடிய மனத்தோடு செயல்பட்ட அக்குத்தகைக்காரர்களிடமிருந்து ''இறையாட்சி அகற்றப்பட்டு, வேறு மக்களினத்தாரிடம் கொடுக்கப்படும்'' என இயேசு கூறுகிறார்.

-- இஸ்ரயேல் மக்கள் பிரமாணிக்கமற்ற விதத்தில் நடந்துகொண்டதால் அவர்களிடமிருந்து இறையாட்சி எடுக்கப்பட்டு, பிற இனத்தாரிடம் கொடுக்கப்படும் என இயேசு கூறியதை நாம் நமக்குப் பொருத்திப் பார்க்கலாம். நம் கையில் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்துவிட்டு கடவுள் ''பயணம் போகிறார்'' என நாம் ஒருவிதத்தில் கூறலாம். ஆனால் கடவுள் நம்மைத் தேடி மீண்டும் வரவிருக்கின்றார். அப்போது நாம் என்ன கணக்கு ஒப்புவிப்போம்? நம்மிடம் பொறுப்பாகத் தரப்பட்ட ''தோட்டத்தை'' நாம் நல்முறையில் பண்படுத்தி, அதிலிருந்து பலன் கொணர்ந்தோமா? அல்லது நம் தோட்டத்தைத் தரிசாக விட்டுவிட்டோமா? நாம் கொணர்கின்ற பலன் கடவுளுக்கு உரியது. ஏனென்றால் அவருடைய அருளின்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இவ்வாறு நாம் பொறுப்புடைய மனிதராக வாழ்ந்தால் கடவுள் நமக்கு வாக்களிக்கின்ற பேரின்பம் நமதாகும்.

மன்றாட்டு
இறைவா, எங்களுக்குக் கொடைகள் பல அளித்த உமக்கு நாங்கள் எப்போதும் நன்றியறிந்திருக்கச் செய்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

''வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக்
குத்தகைக்கு விடுவார்'' (மத்தேயு 21:41)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளின் திராட்சைத் தோட்டம் பரந்து விரிந்த இப்பாருலகைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இத்தோட்டத்தின் பொறுப்பு மனிதரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தைப் பண்படுத்தி, அதில் தரமான செடிகளை நட்டு, அவற்றிற்கு உரமிட்டு, நீர்ப்பாய்ச்சிக் கண்காணித்து, செழிப்பான விளைச்சலைக் கொணர்கின்ற பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளது. பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவோர் தண்டனைக்கு உள்ளாவர்; ஆனால் பொறுப்பாகச் செயல்படுவோர் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறுவர். உலகத்தின் பொறுப்பு மனிதரிடம் உள்ளது என்றால் அவ்வுலகத்தை அவர்கள் தங்கள் விருப்பம்போல, மனம்போன போக்கில் சுறண்டலாம் என்று பொருளாகாது. இவ்வுலகத்தின் வளங்கள் எல்லைக்கு உட்பட்டவையே. நிலத்தின் கீழ் உள்ள தாதுப்பொருள்களும், எண்ணெய் வளங்களும் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கும் என நாம் நினைத்தலாகாது. அதுபோலவே, சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்ற நச்சுப் பொருள்களை நாம் உற்பத்திசெய்துகொண்டே இருக்கலாம் என நினைப்பதும் பொறுப்பற்ற சிந்தனையே.

-- இயற்கையைப் பொறுப்போடு பராமரிக்க வேண்டும் என்பதோடு மனித சமுதாயத்தையும் நாம் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்பது தெளிவு. மனிதரிடையே நிலவ வேண்டிய உறவுகள் அன்பு, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டுமே ஒழிய அதிகாரம் அடக்குமுறை போன்ற எதேச்சைப் போக்குக்கு அங்கே இடமில்லை. ''உரிய காலத்தில்'' கனி வழங்கும் பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளதால் அப்பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினால் நாம் திராட்சைத் தோட்ட உரிமையாளராகிய கடவுளின் ஆட்சியில் பங்கேற்கும் அருளைக் கடவுளே நமக்குத் தருவார் (மத் 21:43).

மன்றாட்டு
இறைவா, உம் தோட்டத்தில் பணிசெய்ய எங்களை அழைத்ததற்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்