28ஆம் வாரம் ஞாயிறு

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 25: 6-10

படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் துகிலைத் தூக்கி எறிவார். என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்து விடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம் மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்: ``இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.'' ஆண்டவரின் ஆற்றல் இம்மலையில் தங்கியிருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 23: 1-3. 3b-4. 5. 6
பல்லவி: நான் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

1 ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2 பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.3ய அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். -பல்லவி

3b தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்;
4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். -பல்லவி

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. -பல்லவி

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-14, 19-20

சகோதரர் சகோதரிகளே, எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். எனக்கு வலுவூட்டுகிறவரின் துணை கொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்கு கொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது. என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! கடவுளுடைய அழைப்பு உங்களுக்கு எத்தகைய எதிர்நோக்கைத் தந்துள்ளது என்று நீங்கள் அறியுமாறு உங்கள் அகக்கண்கள் ஒளியூட்டப் பெறுவனவாக! அல்லேலூயா.

மத்தேயு 22:1-14

போதுக்காலம் 28ஆம் ஞாயிறு,

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 1-14

அக்காலத்தில் இயேசு மீண்டும் தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: ``விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், `நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராய் உள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். பின்னர் தம் பணியாளர்களிடம், `திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்' என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்தபோது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து, `தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், `அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்றார். இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

திருப்பாடல் 23: 1 – 3a, 3b – 4, 5, 6
”என் தலையில் நறுமணத்தைலம் பூசுகின்றீர்”

நறுமணத்தைலம் என்பது அபிஷேகத்தைக் குறிக்கிற வார்த்தையாக இருக்கிறது. இறைவன் நம் ஒவ்வொருவரையும் அபிஷேகம் செய்திருக்கிறார். அதாவது நம் ஒவ்வொருவரையும் அவர் நினைவிற்கொண்டிருக்கிறார், அன்பு செய்கிறார், மிகுந்த பாசம் உடையவராய் இருக்கிறார் என்பதனை இதன் விளக்கமாக நாம் பார்க்கலாம். பழைய ஏற்பாட்டில் நறுமணத்தைலம் என்பது ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபரைக் குறிப்பதாக இருக்கிறது. இந்த திருப்பாடலை தனிப்பட்ட முறையில் நாம் வாசித்து பார்க்கிறபோது, நம் அனைவருக்குமான திருப்பொழிவு பாடலாக இருக்கிறது.

நறுமணத்தைலம் ஒருவர் மீது பூசப்படுகிறபோது, அவர் இறைவனுக்கு பணியாற்றக்கூடியவராக மாற்றம் பெறுகிறார். அதாவது தனது நலனை விடுத்து, இனி கடவுளின் விருப்பமே, தன் விருப்பம் என்ற குறிக்கோளுடன் வாழ ஆரம்பிக்கிறார். இறைவனின் மந்தையை, அவரது ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். இது ஒரு மனிதனுக்கான கடமையை, பொறுப்பை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. இந்த சமூகத்தில் பிறந்திருக்கிற ஒவ்வொரு மனிதனும் கடவுளின் கருவியாக விளங்க, இது நமக்கு நினைவூட்டலாக அமைகிறது. கடவுள் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பை வழங்கியிருக்கிறார். அந்த பொறுப்பை நாம் கடமை உணர்வோடு செய்து முடிக்க வேண்டும்.

நான் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்கிற எண்ணமே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத்தர வேண்டும். அந்த அனுபவத்தைத் தருவது தான் திருப்பாடல் ஆசிரியரின் நோக்கம். அந்த மகிழ்ச்சியில் திளைத்துவிடாமல், தேங்கி விடாமல், கடவுள் நமக்கு வழங்கியிருக்கிற பொறுப்பை நிறைவோடு செய்ய மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

தகுதியைத் தருகிறவர் கடவுள்

குறைகள் இல்லாத மனிதன் இந்த உலகத்தில் யாருமே இருக்க முடியாது. நம் எல்லோரிடத்திலும் குறைகள் உண்டு. ஆனால், கடவுளிடமிருந்து நமது குறைகளை மறைத்து விடலாம், கடவுளிடமிருந்து தப்பிவிடலாம் என்றால், அது இயலாத காரியம் என்பதற்கு இந்த வாசகம் சிறந்த சாட்சியாக இருக்கிறது. அப்படிப்பட்ட வாழ்வியலோடு, ஒப்புமை செய்து பார்க்கக்கூடிய பகுதியாக இன்றைய பகுதி அமைகிறது.

திருமண விருந்திற்கு பல மனிதர்கள் வந்திருக்கிறார்கள். வந்திருக்கிறவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்திருக்கும். ஏனென்றால், பாலஸ்தீனப்பகுதியில் திருமண விழா என்பது குடும்ப விழா போன்றது அல்ல. அது ஒட்டுமொத்த சமுதாய விழா. அது தனிநபர் விழா அல்ல. அனைவரின் விழா. மணமக்களின் மகிழ்ச்சியில் ஒட்டுமொத்த ஊரினரும் மகிழ்ச்சி அடைகிறார்கள். அப்படிப்பட்ட விழாவில் ஒட்டுமொத்த விருந்தினர்களும் பங்கேற்றிருக்கிறபோது, ஒரு மனிதர் மட்டும், தனியே பிரிக்கப்படுகிறார். அவ்வளவு எண்ணிக்கையில் இருக்கக்கூடிய மனிதர்களுக்கு நடுவில், அவர் மட்டும் தனியே தென்படுகிறார். வெளியே அனுப்பப்படுகிறார். குறைகளை வைத்துக்கொண்டு நாம் மற்றவர்களை ஏமாற்றிவிடலாம். ஆனால், கடவுளை ஏமாற்ற முடியாது. குறைகளோடு கடவுளின் அருளை, நாம் பெற்றுவிட முடியாது.

நமது நிலையை நாம் உணர வேண்டும். நமது தகுதியின்மையை உணர்ந்து, கடவுளிடத்தில் மன்றாடுகிறபோது, கடவுளே நமக்கு நிச்சயம் அந்த தகுதியைத்தருவார். அந்த மனிதன் திருமண விருந்திற்கான ஆடையை, நிச்சயம் வெளியே பெற்றிருக்கலாம். அதனையும் அவன் புறக்கணித்தான். இறுதியில் அவனும் புறக்கணிக்கப்படுகிறான். அவனிடமிருந்து நாம் கற்றுக்கொண்டு, நமது வாழ்வை மாற்றிக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அழைப்புக்கேற்ற வாழ்வு வாழுவோம்

யூதப்பாரம்பரியப்படி விருந்தினர்களுக்கு இரண்டு முறை அழைப்பு கொடுக்கப்படுகிறது. விருந்து ஏற்பாடு செய்யப்படுவதற்கு முன்பாக, பொதுவான ஒரு அழைப்பு முதலிலும், விருந்து ஏற்பாடு செய்யப்பட்ட பிறகு மற்றொரு முறையும் விருந்தினர்கள் அழைக்கப்படுவார்கள். முதல் முறையே அழைப்பு கொடுக்கப்படுவதால், விருந்தினர்கள் எந்த நேரமும் தயாராக இருக்க வேண்டியது அவா்கள் காட்டும் மரியாதையைக் குறிக்கிறது. தயார் இல்லையென்றால், அழைப்பை அவமதிப்பதாக பொருள்.

இந்த விருந்து உவமை யூதர்களை மையமாக வைத்துச் சொல்லப்படுகிறது. யூதர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம். கடவுள் அவர்களை தனது இனமாகத் தேர்ந்தெடுத்தார். ஆனால், கடவுளின் மகன் இந்த உலகத்திற்கு வந்தபோது, அவர் பின்னால் அவர்கள் செல்லவில்லை. மாறாக, உதாசீனப்படுத்தினார்கள். எனவே, அவர்கள் அதற்கான விளைவை நிச்சயமாக சந்திக்க வேண்டும். இங்கு, விருந்தை உதாசீனப்படுத்திய அழைக்கப்பட்டவர்கள் தலைவரின் கோபத்திற்கு ஆளாகி அழிந்து போகிறார்கள். விளைவு பயங்கரமானதாக இருக்கிறது. கடவுளின் மகனை அடையாளம் கண்டுகொண்டு, கடவுளைப்பற்றிக்கொள்ளவில்லை என்றால், யூதர்களும் இதே விளைவைச் சந்திக்க நேரிடும்.
ஒவ்வொருவருமே கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள். கடவுளின் வார்த்தையைப்பின்பற்றி கடவுளை பற்றிக்கொள்ள நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். கடவுளின் வார்த்தையை உதாசீனப்படுத்தினால் நாமும் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

புதிய இதயம், புதிய ஆவி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எருசலேம் நகர் அழிக்கப்பட்டது. எருசலேம் தேவாலயமும் வீழ்ந்தது. இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக நாடு கடத்தப்பட்டனர். இதனால், இறைவனின் திருப்பெயர் வேற்றினத்தாரிடையே தீட்டுப்படுத்தப்பட்டது. இறைவன் அந்தத் தீட்டிலிருந்து அவர்களை விடுவித்துத் தூய்மைப்படுத்த விரும்புகிறார். எனவே, அவரது வாக்குறுதி: “ உங்கள் சொந்த நாட்டுக்கு உங்களை மீண்டும் கொணர்வேன். நான் உங்களுக்குப் புதிய இதயத்தை அருள்வேன். புதிய ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்”. இவ்வாறு, இறைவனின் தெய்வீகத் தன்மை மீண்டும் நிலைநாட்டப்படும். “நானே ஆண்டவர்’ என்பதை அனைவரும் அறிந்துகொள்வார்கள்.

இதே வாக்குறுதியை இறைவன் நமக்கும் இன்று தருகிறார். நாம் இறைவனைவிட்டுப் ப பிரிந்து நம்மைத் தீட்டுப்படுத்தியிருக்கலாம். நமது தீய செயல்களால் இறைவனின் திருப்பெயரை மாசுபடுத்தியிருக்கலாம். இறைவன் நம்மீது தூய நீரைத் தெளித்து நம்மைத் தூய்மைப்படுத்துவார். நமக்குப் புதிய இதயமும், புதிய ஆவியும் தருவார். நம்மைப் புதுப் படைப்புகளாக மாற்றுவார். திறந்த மனதுடன் அவரை அணுகுவோமா? தூய ஆவி என்னும் கொடைக்காக மன்றாடுவோமா!

மன்றாடுவோம்: புதிய இதயமும், புதிய ஆவியும் அருளும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் நாங்கள் செய்த தீமைகளால் எங்களைத் தீட்டுப்படுத்தி, உமது திருப்பெயரையும் மாசுபடுத்தியுள்ளோம். எங்களை மன்னியும். உமது தூய ஆவியை எங்களுக்குத் தந்தருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

 

அவர்கள் வர விரும்பவில்லை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு கூறும் உவமையைக் கொஞ்சம் கூர்ந்து ஆய்வு செய்தால், நிச்சயம் நமக்கு வியப்பு மேலிடும். அரச மகனுக்குத் திருமணம். அந்தத் திருமணத்தில் பங்கேற்பது மிகவும் பெருமை வாய்ந்த ஒரு செயல். ஆனால், அழைக்கப்பெற்றவர்கள் வர விரும்பவில்லை என்று உவமை கூறுகிறது. என்னே ஒரு மனநிலை!மீண்டும் அவர் தன் பணியாளர்களை அனுப்பி விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். வாருங்கள் என்று அழைக்கிறார். அவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை.

இப்போது நமக்குப் புரிகிறது. இந்த உவமை கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டிருக்கிறது. அரச மகனின் திருமணத்திற்கு வரமாட்டேன் என்றோ, பொருட்படுத்தாமலோ யாரும் இருக்கப் போவதில்லை.ஆனால், இறையாட்சியின் பார்வையில் இத்தகைய மனிதர்களாக நம்மில் பலர் இருக்கிறோம் என்பதையே இந்த உவமை வழியாக இயேசு சுட்டிக்காட்டுகிறார்.

இறைவன் தருகிற நிறைவான மகிழ்ச்சி, ஆறுதல், நிறைவு.. இவற்றை வேறு யாரும், எதுவும் தரப்போவதில்லை. ஆனால், நாம் இறைவனின் அழைப்பை பொருட்படுத்தாமல் இருக்கிறோம். அவர் தரும் விருந்துக்கு வர விரும்பாமல் இருக்கிறோம். காரணம், இந்த உலகம் காட்டும் ஈர்ப்புகள். அன்றாட வாழ்வின் கடமைகள், பணிகள். அந்த உவமையில் வரும் மனிதர்களைப் பார்த்து வியக்கும் நாம், இப்போது நம்மைப் பார்த்தே கொஞ்சம் வியப்போமா?

மன்றாடுவோம்; விருந்தின் நாயகனே இயேசுவே, உலகம் தரமுடியாத இன்பங்களை, மகிழ்ச்சியை, நிறைவை நீர் ஒருவரே தருகிறீர் என்று நான் அறிவேன். இருப்பினும், உம்முடைய அன்பைச் சுவைப்பதற்கு எனக்கு நேரமில்லை. விருப்பமில்லை. உமது அழைப்பை நான் பொருட்படுத்துவதுமில்லை. அத்தகைய நேரங்களுக்காக நான் மனம் வருந்துகிறேன். இயேசுவே, உலகக் கடமைகளில் ஆழ்ந்துவிடாமல், உமது அழைப்பை ஏற்கும் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

-------------------------

''

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------|

''நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன்...திருமணத்திற்கு வாருங்கள்'' (மத்தேயு 22:4)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளாட்சி அல்லது விண்ணரசு என்றால் என்னவென்பதை இயேசு பல உவமைகள் வழியாக விளக்கினார். இத்தகைய உவமைகளில் சிறப்பான ஒன்று ''திருமண விருந்து உவமை'' ஆகும். விருந்து என்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி. இஸ்ரயேல் மக்களிடையே விருந்தோம்பல் மிக உயர்வாக மதிக்கப்பட்டது. அதிலும் விதவிதமான உணவுகளைப் பரிமாறி அறுசுவை உண்டி வழங்கி விருந்தினரை மகிழ்விப்பது சாலச் சிறந்ததாக எண்ணப்பட்டது. விவிலியத்திலும் விருந்து பற்றிய குறிப்புகள் பல உண்டு. கடவுள் மனிதருக்குத் தம் கொடைகளை வாரி வழங்குவது விருந்துக்கு ஒப்பிடப்பட்டது (காண்க: எசாயா 25:6; லூக்கா 5:29; 14:13; யோவான் 2:2; 1 கொரிந்தியர் 11:20). எனவே, கடவுளின் ஆட்சியில் மக்கள் அனைவருக்கும் சுவையான விருந்து வழங்கப்படும் என்று இயேசு போதித்தார். கடவுளின் அன்பில் நாம் திளைத்திருக்கும்போது ஏற்படுகின்ற மகிழ்ச்சி நம் உள்ளத்திற்கும் இதயத்திற்கும் நிறைவை அளிக்கும். இவ்வாறு, கொடை வள்ளலாகச் செயல்படுகின்ற கடவுளின் அழைப்பைச் சிலர் ஏற்காமல் இருப்பதும் உண்டு. முதலில் அழைக்கப்பட்டவர்கள் இஸ்ரயேலர். அவர்களில் பலர் இயேசுவை மெசியாவாக ஏற்கத் தயங்கினர். ஆனால் பிற இனத்தார் பலர் கடவுளின் அழைப்பை ஏற்று, இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். அழைப்பை ஏற்று இயேசுவைப் பின்செல்ல வருவோருக்கும் சில பொறுப்புகள் உண்டு. அழைப்புக்கு ஏற்ப நடக்காதவர்க்கு உருவகமாகத் ''திருமண ஆடையின்றி வந்தவர்'' (காண்க: மத்தேயு 22:11) குறிக்கப்படுகிறார்.

-- கடவுள் நமக்குத் தருகின்ற விருந்து நம் உடலை வளர்க்க உதவுகின்ற உணவு மட்டுமல்ல. மனிதரின் முழு வளர்ச்சிக்குத் தேவையான அனைத்தையும் நாம் கடவுளிடமிருந்து கொடையாகவே பெற்றுக்கொள்கிறோம். கடவுள் அளிக்கும் விருந்து வெறும் பொருள்கள் மட்டுமல்ல. இயேசுவின் வழியாகக் கடவுள் நமக்குத் தம்மையே விருந்தாக அளித்துவிட்டார். இதையே நாம் நற்கருணைக் கொண்டாட்டத்தின்போது நினைவுகூர்கின்றோம். தம்மையே விருந்தாகத் தரும் கடவுளுக்கு நாம் நன்றியறிந்திருக்க வேண்டும். நம்மையே விருந்தாகப் பிறருக்கு அளிக்க முன்வரவேண்டும். அப்போது நமக்காகக் கடவுள் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் நிறைவுக் கால விருந்து நம்மை மகிழ்ச்சியால் நிரப்பும்.

மன்றாட்டு
இறைவா, உம் அருள்கொடைகளை நன்றியோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்