முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 10, 16-20


எருசலேமே, உன்னை ஆளுகிறவர்களும் உன் மக்களும், சோதோம் கொமோராவைப் போன்றவர்களாய் இருக்கின்றனர்; நம் ஆண்டவரின் அறிவுரையைக் கேளுங்கள்; அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள். உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்; தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள். ``வாருங்கள், இப்பொழுது நாம் வழக்காடுவோம்'' என்கிறார் ஆண்டவர்; " உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும்; இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும். மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தால், திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்; ஏனெனில் ஆண்டவர்தாமே இதைக் கூறினார்."

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 50: 8-9. 16-17. 21,23

பல்லவி: தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்.

8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை;
உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன.
9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ நான் ஏற்றுக்கொள்வதில்லை. -பல்லவி

16bஉ என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி?
என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை?
17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்;
என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். -பல்லவி

21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்;
நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக்கொண்டீர்கள்;
ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்;
உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக் கின்றேன்.
23 நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர்.
தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர். -பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்
எனக்கு எதிராக நீங்கள் இழைத்த குற்றங்கள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். புதிய இதயத்தையும், புதிய மனத்தையும் பெற்றுக் கொள்ளுங்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

மத்தேயு 23:1-12

தவக்காலம் -இரண்டாம் வாரம் செவ்வாய்

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 1-12

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: ``மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள். சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக்கூட முன்வரமாட்டார்கள். தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப்பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறாhர்கள். விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் `ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர் சகோதரிகள். இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்படவேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். தம்மைத் தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத் தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்."

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

27.02.2024 செவ்வாய்
செயல் வடிவம் பெற்றவர்களாய் ...
மத் 23 : 1 - 12

அமெரிக்க அதிபர் ஜோபைடன் பொறுப்பெடுப்பதற்கு முன்பாக கூறிய வார்த்தை ‘இனி எங்கள் நாட்டில் எந்தவித பாகுபாடும் இருக்காது. அனைவருமே ஒருதாய் வயிற்றின் பிள்ளைகளாகவே எண்ணப்படுவார்கள்”. இன்று சமத்துவம் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாய் அமெரிக்கா விளங்குகிறது. ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ஹாம்லட்” என்ற நாடகத்தில் தந்தை மகனுக்கு அறிவை கூறி தான் முதலில் அதனை செயலில் காட்டி கற்றுக்கொடுப்பது போன்று ஒரு பகுதி. மக்கள் மத்தியில் வரவேற்பு. இவ்வாறு சொல் வடிவமல்லாமல் செயல்வடிவம் பெற்றவர்கள் பலர்.

அதே சிந்தனையைத்தான் இன்றைய நாளில் இறைவார்த்தை நமக்கு கற்றுக்கொடுக்கின்ற பாடமாக அமைகிறது. ஏனென்றால் பரிசேயர்களின் மனநிலை முதலாளித்துவ அரசு போன்ற சிந்தனை கொண்டதாக அமைகிறது. எல்லாவற்றிலும் நாங்கள் முதன்மையானவர்கள். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் என்ற மனநிலையில் வாழக்கூடியவர்கள். இந்த மனநிலை எந்த அளவிற்கு என்றால் மக்கள் மீது அநியாய வரிகளை வசூலிக்க கூடிய அளவிற்கு அவர்களை இழுத்து செல்கிறது. இன்னொரு புறத்தில் பார்க்கின்றபோது கடவுளாக மக்களுக்கு காட்சி கொடுக்கின்றார்கள். அதனால்தான் இயேசு வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்ற முனைவர் பட்டத்தினை அவர்களுக்கு வழங்குகின்றார். அவர்களின் செயல்வடிவமானது முற்றிலும் முரண்பட்டதாக அமைகிறது.

நாம் சிந்திப்போம். கடவுள் நமக்கு சிறிய உறுப்பாகத்தான் வாயை கொடுத்திருக்கின்றார். ஆனால் செயல் வடிவம் பெற இரண்டு கை, கால்களை கொடுத்திருக்கின்றார். நாம் சிறிய உறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா (அ) பெரிய உறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோமா சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

மத்தேயு 23: 1 - 12
சொல்லும் செயலும்

மனித வாழ்விலே சொல்லும், செயலும் இணைந்து செல்வது கடினமான செயல்பாடு. ஆனால் யாரெல்லாம் தன் வாழ்வில் சொல்வதை செய்து காட்டினார்களோ அவர்கள் மாமனிதர்களாக போற்றப்படுகின்றார்கள். காமராசர் முதலமைச்சராக பொறுப்பெடுக்கும் போது கூறினாராம், “என் பணிவாழ்வில் ஏழ்மையை ஒழிப்பேன் மற்றும் விவசாயத்திற்கு வித்திடுவேன்”. பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு, அணைக்கட்டுக்கள் கட்டி தன் வார்த்தைகளைச் செயலாக்கிக் காட்டினார். நெல்சன் மண்டேலா “இனவெறியை அழிக்காது என் உயிர் அழியாது” என்று கூறி பொறுப்பெடுத்தார். இனவெறியை முற்றிலும் அழித்தார். அதனை தன் செயலில் காட்டினார். ஜோ பைடன் அமெரிக்க அதிபர். எல்லா மக்களுக்கும் சம உரிமை வழங்கப்படும் என்று கூறி பொறுப்பெடுத்தார். இப்போது அத்தகைய பிளவு இல்லாத சமுதாயமாக மாற்றிக் காட்டினார்.

ஆனால் பரிசேயர்கள் தாங்கள் மோசேயின் சட்டத்தை பின்பற்றுகிறோம் என்று கூறி திரிந்தார்கள். ஆனால் சட்டத்தின் அடிப்படையாக விளங்கிய மனித மாண்பின் சட்டத்தைப் பின்பற்ற தவறுகின்றார்கள். அதாவது சமுதாயத்தில் எளிமையோடு வாழ்கின்ற பாமர மக்களை கருத்தில் கொள்வதில்லை. அதனால் தான் இயேசு அவர்கள் செய்வது போன்று செய்யாதீர்கள் என்று கூறுகின்றார்.

நாம் யாரைப் போன்று செயல்பட விரும்புகிறோம்? சொல்லை செயலில் காட் விரும்புகிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்
=======================

திருப்பாடல் 50: 8 – 9, 16 – 17, 21, 23
”தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளின் மீட்பைக் கண்டடைவர்”

சரியான பாதையில் நடக்கிறவர், தமது வழியைச் செம்மைப்படுத்துகிறவர் யார்? என்பது தான், இந்த பல்லவியைக் கேட்டவுடன் நமது சிந்தனையில் உதிப்பதாக இருக்கிறது. ஏனென்றால், அந்த கேள்விக்கான பதில் நமக்கு கிடைக்கிறபோது, நம்மால், கடவுள் அருளும் மீட்பைக் கண்டடைய முடியும். எசாயா 40: 3 ல், ”ஆண்டவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்” என்ற வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இது மனமாற்றத்தைக் குறிக்கக்கூடிய சொல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்த இறைவார்த்தையை, திருமுழுக்கு யோவானுடைய பணியை மையப்படுத்திய நிகழ்விலும் நாம் பார்க்கலாம். ஆக, செம்மைப்படுத்துதல் என்பது, மனமாற்றத்தைக் குறிக்கிறது.

கடவுள் நமக்கு மீட்பை தர தயாராக இருக்கிறார். அந்த மீட்பை நாம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், நமது வாழ்வை நாம் மாற்ற வேண்டும். மாற்றம் என்பது நமது வாழ்க்கையில் மற்றவர்கள் பார்க்கக்கூடிய வகையில் அமைந்திருக்க வேண்டும். அது வெளிவேடத்தனமாக இருக்கக்கூடாது. மாறாக, மற்றவர்கள் நடுவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும். மத்தேயு 3: 8 ல் திருமுழுக்கு யோவான் உண்மையான மனமாற்றத்தைப் பற்றிச் சொல்கிறபோது, ”நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை செயலில் காட்டுங்கள்” என்று சொல்கிறார். அதுதான் உண்மையான மனமாற்றம். நாம் கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துவது நல்லது தான். ஆனால், அதைவிட மிகச்சிறந்தது, கடவுளுக்கு ஏற்புடையது, கடவுள் விரும்புவது நமது வாழ்க்கைப்பலியை. அதனை நாம் கடவுளுக்கு காணிக்கையாக்குவதற்கு முயற்சி எடுப்போம்.

எல்லாக் காலமும் நமது வாழ்வை சிறப்பாக வாழ முயற்சி எடுக்கக்கூடிய காலம் என்றாலும், தவக்காலம் அதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி தருகிறது. அதனை முழுமையாகப் பயன்படுத்தி, நமது வாழ்வை கடவுளுக்கு உகந்த பலிபொருளாக மாற்ற முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

நாம் வாழும் வாழ்க்கை

இன்றைய நவீன கால, அரசியல் வாழ்வை நாம் கேட்ட நற்செய்தி வாசகம் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இன்றைக்கு இரண்டுவிதமான வர்க்கங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, என்றுமே இருந்திருக்கிறது. 1. அடிமை வா்க்கம் 2. ஆளும் வர்க்கம். தொடக்க காலத்தில், முடியாட்சியில், அதிகாரவர்க்கமான அரசர்கள், மக்களை தங்களது அடிமைகளாக எண்ணினர். அதிகாரவர்க்கத்தினருக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என எண்ணினர். மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தாலும், காட்சிகள் மாறவே இல்லை.

தனிநபர் வழிபாடு எங்கும் காணப்படுகிறது. அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என்று, எங்கு பார்த்தாலும் தனிநபர் வழிபாடு இந்த சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நல்லவர்கள், பொதுநலனுக்காக உழைக்கிறவர்களுக்கு மதிப்பில்லை. அரசியல் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமாய் மாறிவிட்டது. மக்களும் அதற்கு ஏற்ப வாழ பழகிவிட்டார்கள். கோடிகளை வாரிஇறைத்து, கோடி இலட்சங்களை அள்ளக்கூடிய, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய், அரசியல் வியாபாரமாகிவிட்டது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ப, தங்களது அதிகாரத்தை மக்கள் மீது திணிக்கிறார்கள். இதற்கு, அவர்களின் கையில் இருக்கிற பத்திரிக்கைகள், தொலைக்காட்சி போன்றவை ஊதுகுழலாய் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தியாக உள்ளத்தோடு, நாட்டிற்காக உழைத்த தூய்மையான தலைவர்களின் இருக்கையை, இன்றைய தலைவர்கள் அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், நாமாவது அடுத்தவர்களை அதிகாரம் செய்ய நினைக்காமல், மற்றவர்களுக்கு பணிந்து நடக்க நாம் அழைக்கப்படுகிறோம். பொறுப்பு, பணி என்பது நாம் அனுபவிப்பதற்கு அல்ல. அது மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்கு பயன்படுவது. இந்த சமுதாயத்தையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உயர்த்துவதற்கு பயன்படுத்துவது. அப்படிப்பட்ட நல்ல குணங்களை நமது வாழ்வில் நாம் வெளிப்படுத்துவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

இயேசு காட்டும் சமயம்

சமயம் என்பது எப்படி இருக்க வேண்டும்? எப்படி இருக்கக்கூடாது என்பதை இன்றைய நற்செய்தி வாயிலாக இயேசு நமக்கு அறிவுறுத்துகிறார். சமயம் என்பது கடவுளுடனான உறவு மட்டுமல்ல, மனிதர்களுடனான உறவும் கூட. கடவுள் பத்துக்கட்டளைகளை மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்தார். அதனுடைய அடிப்படையே கடவுளுக்கும், மனிதர்களுக்கும் உண்மையான மதிப்பைக் கொடுக்கக்கூடிய செயல்பாடுதான். ஆனால், சமயம் என்ற பெயரில் பரிசேயர்களும், சதுசேயர்களும் செய்த அக்கிரமங்களை இயேசு கடுமையாகச் சாடுகிறார்.

சமயம் என்பது பள்ளத்திலே வீழ்ந்து கிடக்கிற மக்களை தூக்கிவிடுவதாக இருக்க வேண்டும். மேலும், மேலும் அவர்கள் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட காரணமாக இருக்கக்கூடாது. சமயம் என்பது சோர்வுற்ற மக்களை தேற்றுவதாக இருக்க வேண்டும். அவர்களை மேலும் தடுமாறுவதற்கு காரணமாக இருந்துவிடக்கூடாது. சமயம் என்பது அடிமைத்தளையை உடைத்தெறிந்து விடுதலை தருவதாக அமைய வேண்டும். அவர்களை அடிமைச்சிறைக்குள்ளாக வைப்பதாக இருக்கக்கூடாது. எப்படியெல்லாம் சமயம் இருக்கக்கூடாதோ, அப்படியெல்லாம் அதிகாரவர்க்கத்தினர் சமயத்தை தங்கள் கைப்பாவையாக்கி மாற்றியிருந்தனர். இந்த தவறான கண்ணோட்டத்தை இயேசு உடைக்கிறார்.

நாமும் கூட சமயம் என்பதன் பொருளை அறிந்து கொள்ளாதவர்களாகத்தான் இருக்கிறோம். அதனால் தான், சமயத்தின் பெயரால் அநீதிகளையும், சாதிச்சண்டைகளையும், அரசியல் குள்ளநரித்தனத்தையும் இங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். இவையனைத்துமே பரிசேயத்தனம். இயேசுவால் வெறுக்கப்படக்கூடிய செயல்பாடு. அந்த அடிமைத்தனத்திலிருந்து வெளியே வருவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

மக்கள் தரும் மதிப்பு

பரிசேயர்கள் எப்போதுமே தாங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தனர். எங்கு சென்றாலும் தாங்கள் மற்றவர்களால் மதிக்கப்பட வேண்டும், தங்களை மற்றவர்கள் உயர்வாக நடத்த வேண்டும் என்று விரும்பினார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், தொழுகைக்கூடங்களில் அவர்கள் முதன்மையான இடங்களை விரும்ப வைத்தது. முன்வரிசையில் உட்கார்ந்தால், கடவுளின் வார்த்தையை நன்றாகக் கேட்க முடியும், தகுதியான முறையில், பக்தியான முறையில் பங்கேற்க முடியும் என்பதற்காக அல்ல, மாறாக, மற்றவர்கள் பார்க்கும் வண்ணம், பக்தியாக இருப்பது போல நடிக்க முடியும் என்பதற்காககத்தான்.

அதேபோல, அவர்கள், மக்கள் கூடக்கூடிய இடங்களில் ”ராபி” என்று அழைக்கப்படுவதை விரும்பினார்கள். இது ஒரு குழந்தை பெற்றோருக்குக் கொடுக்கக்கூடிய மரியாதையைவிட அதிகமானது. ஏனென்றால், பெற்றோர் இந்த உலக வாழ்க்கைக்கான உடலைக்கொடுத்து இருக்கிறார்கள். போதகர்களோ, முடிவில்லாத வாழ்விற்கு அழைத்துச்செல்கிறார்கள் என்பதால். எனவே, பெற்றோரைவிட, மதிக்கப்பட வேண்டியவர்கள், போதகர்களே என்ற கருத்து மக்கள் மனதில் இருந்த காரணத்தினால் தான். அவர்கள் ”தந்தை” என்றும் அழைக்கப்பட விரும்பினார்கள். காரணம், தந்தை என்பது உயர்ந்த இடத்தைக்குறிக்கும் சொல். இஸ்ரயேல் மக்களின் தலைவர்களை, வழிநடத்தியவர்களைத் ”தந்தை” என்ற உரிமையோடு மக்கள் அழைத்தனர். எலிசா இறைவாக்கினர், எலியாவை தந்தை என்று அழைத்தது போல (2அரசர் 2: 12).

தங்களின் மதிப்பிற்காக, மரியாதைக்காக எதையும் செய்யத்தயாராக இருந்த பரிசேயர்களைப் போல நமது வாழ்வு அமைந்துவிடக்கூடாது. மதிப்பும், மரியாதையும் நாமாக விரும்பிக்கேட்டு வருவது அல்ல. நாம் வாழ்கிற வாழ்வைப்பார்த்து, அதுவாக நம்மைத் தேடி வர வேண்டும். அதுதான் உண்மையான மதிப்பும், மரியாதையும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------

சுமைகளை அகற்றுவோம்

மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தை மத்தேயு 5: 17 – 20 ல் நாம் பார்க்கலாம். அங்கே பத்துக்கட்டளைகளைப் பற்றிய செய்தி நமக்குத் தரப்படுகிறது. பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் நெறியாகக் கருதப்படுவது பத்துக்கட்டளைகள். பத்துக்கட்டளைகளின் அடிப்படை நெறியை இரண்டு வகைப்படுத்தலாம். கடவுளை நேசிப்பது, மனிதர்களை நேசிப்பது தான் அவை. இந்த கட்டளைகள் முடிவில்லாதது. இவற்றை மீறுவது மிகப்பெரிய பாவம். இவற்றை பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், விளக்கங்கள் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஒழுங்குகளாகப் பிரித்தனர்.

விளக்கங்கள் என்ற பெயரில் பிரிக்கப்பட்ட ஒழுங்குகள் உண்மையான அடிப்படைச் சட்டத்திற்கு எதிராகத்தான் பலவேளைகளில் விளக்கப்பட்டது. உண்மையான உள்ளர்த்தம் மறைக்கப்பட்டு, வேறு, வேறான விளக்கங்கள் கொடுக்கப்பட்டது. இறுதியில், மக்களைக் காக்க வேண்டிய சட்டங்கள், மக்கள் தூக்க இயலாத சுமையாகிப்போனது. மக்களை கடவுள்பால் அழைத்துவர வேண்டிய சட்டங்கள், கடவுளுக்கும், மக்களுக்கும் இடையேயான உறவை அறுப்பதற்கு வழிவகுத்தது. மன ஆறுதலுக்கு இடமான கடவுளின் இல்லம், மன வருத்தத்தைத் தரும் இடமாக மாறியது. இதைத்தான் இயேசு கடுமையாச்சாடுகிறார்.

மதங்கள், வழிபாடுகள் அனைத்தும் மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதாக இருக்க வேண்டும். மக்களுக்கு மன ஆறுதல் தரும் இடங்களாக ஆலங்கள் அமைய வேண்டும். ஒழுங்குமுறைகள் தேவை. அந்த ஒழுங்குமுறைகள் மக்களுக்கு சுமையாக, தூக்க இயலாத பாரமாக இருக்கக்கூடாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவனை மகிமைப்படுத்துவோம்

யூதர்களைப்பொறுத்தவரையில் அவர்களின் விசுவாச வாழ்வு என்பது தலைமுறை, தலைமுறையாக பரிமாறப்படுவது. தொடக்கத்தில் கடவுள் திருச்சட்டத்தை மோசேக்கு கொடுத்தார். மோசே அதை யோசுவாவிடம் ஒப்படைத்தார். யோசுவா அதை இஸ்ரயேலரின் பெரியவர்களிம் ஒப்படைத்தார். இஸ்ரயேலின் பெரியவர்கள் வாயிலாக திருச்சட்டம் இறைவாக்கினர்களிடம் கொடுக்கப்பட்டது. இறைவாக்கினர்கள் மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களிடம் ஒப்படைத்தனர். இயேசு வாழ்ந்த காலத்தில் விசுவாச வாழ்விற்கு பொறுப்பானவர்கள் இந்த மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும்தான். எனவேதான், இவர்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய மதிப்பையும், புகழையும் எதிர்பார்த்தனர். எந்த அளவுக்கு என்றால், தங்களை கடவுளுக்கு இணையாக காட்டிக்கொள்வதுபோல தோற்றத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தங்களை முன்னிறுத்தினர். இந்தப்பிண்ணனியில்தான் இயேசு இன்றைய நற்செய்தியில் இயேசு அவர்களுக்கு சாட்டையடி தருகிறார்.

பிரிந்து போன சபை சகோதரர் ஒருவர் கேட்டார்: நற்செய்தியிலே இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என அழைக்க வேண்டாம் என்றிருக்கிறதே? எதற்காக குருக்களை, உங்கள் மக்கள் ‘தந்தை’ என்று அழைக்கிறாhகள்;? என்று. இன்றைக்கு சம்பந்தமில்லாத, தொடர்பில்லாத கேள்விகளைக்கேட்பதில் பிரிந்துபோன சபைக்கு நிகர் பிரிந்துபோனசபையினர் தான். அரைகுறை விவிலியம்கூடத்தெரியாமல், விவிலியத்தின் ஆழம்புரியாமல், ஏதோ மேலோட்டமாக இரண்டொரு வார்த்தைகளை மனனம்செய்துவிட்டு, தனக்கு விவிலியம் முழுவதும் தெரியும் என்பது போன்ற மமதை, இன்றளவும் பிரிந்துபோன சபையினரிடத்தில் இருப்பது வேதனைக்குரியது. இயேசு சொல்வதன் பொருளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இயேசு மறைநூல் அறிஞர்களுக்கும், பரிசேயர்களுக்கும் இதைச்சொல்கிறார். காரணம்: அவர்கள் தங்களை கடவுளுக்கு நிகரானவர்களாக காட்டிக்கொண்டார்கள். எனவேதான், பந்தியிலும், தொழுகைக்கூடங்களிலும் முதன்மை இருக்கைகளையும், மக்களால் தங்களுக்கு அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதைத்தான் இயேசு கண்டிக்கிறார்.

நம்முடைய வாழ்வு கடவுளை மகிமைப்படுத்த வேண்டுமே தவிர, நம்மையே மகிமைப்படுத்துவதாக இருக்கக்கூடாது. தூய இஞ்ஞாசியாரின் ‘எல்லாம் இறைவனின் அதிமிகு மகிமைக்கே’ என்கிற விருதுவாக்கு இதற்கு சிறந்த உதாரணம். தூய பவுலடியாரைப்போல, நாம் வாழ்ந்தாலும், இறந்தாலும் கிறிஸ்து மகிமை பெறட்டும், என்ற எண்ணம் நமக்குள்ளாக மேலோங்கியிருக்கின்றபோது, கடவுள் நம்மை உயர்த்துவார்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

வாழ்வு கடவுளை மாட்சிமைப்படுத்தட்டும்

நற்செய்தியில் நாம் வாசிக்கிற ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொர பிண்ணனியில் எழுதப்படுகின்ற ஒன்றாகும். நாம் வாசிக்கும் நற்செய்தியின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், அதன் வரலாற்றுப்பிண்ணனியும், இயேசு கூறிய காலச்கமசூழலின் பிண்ணனியும் நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அதன் உண்மையான அர்த்தத்தைப்புரிந்து கொள்ளாமல், திரித்து தான் பொருள் அறிய முடியும். பிரிந்துபோன சபையினர் செய்யக்கூடிய வேலை இந்த திரித்துக்கூறுகிற செய்தி.

நற்செய்தியில், இந்த மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என அழைக்க வேண்டாம் என்று இயேசு சொல்கிறார். எதற்காக? இயேசு சொல்வதன் பொருளை தெளிவாக அறிந்து கொள்ளவில்லையென்றால், தவறான அர்த்தத்தைதான் நாமும் புரிந்துகொள்வோம். இயேசு மறைநூல் அறிஞர்களுக்கும், பரிசேயர்களுக்கும் இதைச்சொல்கிறார். காரணம்: இவர்கள் தங்களை கடவுளுக்கு நிகரானவர்களாக காட்டிக்கொண்டார்கள். எனவேதான், பந்தியிலும், தொழுகைக்கூடங்களிலும், முதன்மை இருக்கைகளையும், மக்களால் தங்களுக்கு அனைத்து மரியாதையும் கொடுக்கப்பட வேண்டும் எனறு வலிறுத்தினார்கள். இதைத்தான் இயேசு கண்டிக்கிறார்.

நம்முடைய வாழ்வு கடவுளை மகிமைப்படுத்த வேண்டுமே தவிர, நம்மையே மகிமைப்படுத்துவதாக இருக்கக்கூடாது. தூய இஞ்ஞாசியாரின் “எல்லாமே இறைவனின் அதிமிகு மகிமைக்கே“ என்கிற விருதுவாக்கு இதற்கு சிறந்த உதாரணம். தூய பவுலடியாரைப்போல, நாம் வாழ்ந்தாலும், இறந்தாலும் கிறிஸ்து மகிமை பெறட்டும், என்ற எண்ணம் நமக்குள்ளாக மேலோங்கியிருக்கின்றபோது, கடவுள் நம்மை உயர்த்துவார்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

அவர்கள் செய்வதுபோல் செய்யாதீர்கள்!

மறைநூல் அறிஞர்கள், பரிசேயர்கள் பற்றிய இயேசுவின் பார்வை எப்படி இருந்தது என்பதற்கு இன்றைய நற்செய்தி வாசகமே மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. "அவர்கள் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். ஆகவே அவர்கள் சொல்வதையெல்லாம் கடைப்பிடித்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள்" என்பதுதான் இயேசுவின் அறிவுரை. இதன்மூலம் பரிசேயர், மறைநூல் அறிஞருடைய அதிகாரத்தை, சமூகத்தில் அவர்களுக்குரிய இடத்தை இயேசு அங்கீகரிக்கின்றார், ஏற்றுக்கொள்கின்றார். ஆனால், அவர்களுடைய செயல்பாடுகள் இடறலாகவும், முரண் சான்றாகவும் அமைவதையும் கவனமுடன் சுட்டிக்காட்டுகின்றார். அவர்களைப் போல நமது வாழ்வும், பணிகளும் அமைந்துவிடக்கூடாது என்று எச்சரிக்கிறார்.

நமது வாழ்வையும், பணிகளையும் நாமே ஆய்வு செய்து நாம் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காண்போமா? நமது வாழ்வு பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைந்து, "இவர்களைப் போல் வாழுங்கள்" எனச் சொல்லும்படி அமைந்திருக்கிறதா? அல்லது பரிசேயர்களைப்போல, "இவர்களைப் போல் வாழாதீர்கள்" என இயேசு சொல்வதுபோல் அமைந்திருக்கிறதா? சிந்திப்போம்.

மன்றாடுவோம்: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது வார்த்தைகளை இதயத்தில் ஏற்று, பரிசேய மனநிலையையும், செயல்பாடுகளையும் களைந்து, நேர்மையாக, முரண்பாடின்றி வாழும் வரத்தை எங்களுக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

-------------------------------------------------------------------

இணையதள உறவுகளே

பெரிய மனிதர் என்று யாரை கணிக்கிறீர்கள்? என்ன தகுதி வேண்டும்.

விலை உயர்ந்த உடைகள் அணிய வேண்டும். பெரிய பங்களா மாதிரி வீடு இருக்க வேண்டும். வீடு நிறைய நவீன வசதிகள் பொருட்கள் இருக்க வேண்டும். விலை உயர்ந்த வாகனம்.உழைக்காமல் பணம் சம்பாதிக்க வேண்டும். கவர்ச்சியான உடை அணிய வேண்டும். ( வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களை அகலமாக்குபவர்கள்) குனிந்து வேலை செய்யக் கூடாது.முதலீடு இல்லாமல் முதலாளியாக இருக்க வேண்டும். (தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரக் கூடாது);. ஜால்ரா கூட்டம் சுற்றி இருக்க வேண்டும். (தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் பாராட்ட வேண்டும்) எங்கும் எதிலும் முதலிடம் கொடுக்க வேண்டும்.(விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளும் தேடுபவர்கள்). ஐயா, அம்மா என்று எல்லோரும் அழைக்க வேண்டும்.("ரபி" என அழைக்கப்பட வேண்டும். தந்தை என அழைக்கவேண்டும்)

இயேசுவின் பார்வையில் உள்ள எளிமையான மனப்பான்மையும் அணுகுமுறையும் உள்ள தலைவர்கள் நம்மிடையே தோன்றுவாரகளாயின் நம் சமுதாயம் வளரவும் முன்னேறவும் வாய்ப்புகள் அதிகம். இன்னும் சில நாட்களில் அத்தகைய தலைவர்களை அடையாளம் காண இருக்கிறோம். இயேசு சுட்டிக்காட்டும் தலைவர்களைத் தேர்ந்தெடுத்து முன்னேற்றப் பாதையில் நம் நாட்டை அழைத்துச் செல்வோம். அல்லது அவர்கள் தங்களை முன்னேற்றிக் கொள்வார்கள்.

-ஜோசப் லீயோன்

-------------------------

"கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இன்றய வாசகத்தில் கிறிஸ்து நமக்கு ஒரு நல்ல ஆசிரியர் தேவை என்கிறார். இன்றய வாசகத்தில் வருகின்ற ஆசிரியர்கள் சரியான வழியை மக்களுக்குக் காட்டவில்லை. தாங்கள் புகழ்பெறவும் மதிக்கப்படவுமே விரும்பினர். சுருங்கச் சொன்னால் 'பந்தா' பேர்வழிகள். இவர்களிடம் உண்மை இல்லை, நீதி நிலைபெறவில்லை, மக்கள் மேல் அக்கறை இல்லாத பேர்வழிகள், சொல்வது ஒன்று செய்வது வேறோன்று. இதுவே வெளிவேடம்.

இன்றய உலகில் நமக்கும் சரியான வழிகாட்டிகள் தேவைப்படுகின்றனர். மலிந்து கிடக்கும் முறைகேடுகள் நிறைந்த சமுதாயத்தில் நமக்கு வழிகாட்ட நல்ல ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். சிலருக்குப் பெற்றோர் வழிகாட்டிகள். சிலருக்கு நண்பர்கள் வழிகாட்டிகள். சிலருக்கு நடிகர்கள் வழிகாட்டிகள். சிலருக்கு அரசியல் தலைவர்கள் வழிகாட்டிகள். பள்ளி ஆசிரியர்கள் பாடத்தை (ளலடடயடிரள) முடிப்பதிலும், தேற்சி விகிதத்திலுமே கருத்தாய் இருக்கின்றனர். மாணவர்களுக்கு நல் வழிகாட்டியாக இருக்கின்றார்களா என்பது கேள்விக் குறி.

கிறிஸ்துவே நம் சிறந்த வழிகாட்டி, அவரே வாழ்வும் வழியும். கிறிஸ்து காட்டும் வழியில் நாம் நடந்தால் நிச்சயம் நமக்கு வாழ்வு உண்டு. எக்காலத்திலும் குறிப்பாக இத்தவக்காலத்தில் கிறிஸ்து காட்டிய வழியில் வாழ முற்படுவோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--பணி. மரியதாஸ்

 

மீண்டும் இறைவனின் மாட்சி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எசேக்கியேல் இறைவாக்கு நூலின் நிறைவான பகுதியாக இன்றைய வாசகத்தைக் கருதலாம். இஸ்ரயேல் மக்களின் சிலை வழிபாடு மற்றும் ஒழுக்கமற்ற வாழ்வால், எருசலேம் கோவிலிலிருந்து இறைவனின் மாட்சி வெளியேறுவதைக் காட்சியில் கண்டு, இறைவாக்குரைத்த எசேக்கியேல், அந்த மாட்சி திரும்ப கோவிலுக்குள் வருவதையும் காட்சியாகக் கண்டு மக்களுக்கு அறிவிக்கின்றார். இறைவன் மீண்டும் தம் மக்களுடன் உறையவிருக்கிறார். அவர்களின் மாட்சிமிகு கடவுளாக மீண்டும் எழுந்தருள விரும்புகிறார். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தங்களின் பழைய வாழ்வை ரூனெயளர் சிலை வழிபாடு மற்றும் ஒழுக்கக் கேடுகள் - விட்டுவிட்டு, புது வாழ்வு வாழ வேண்டியதுதான்.

நமது வாழ்விலும் இறைவன் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார் என்று சில வேளைகளில் நமக்குத் தோன்றலாம். இறைவனின் ஆற்றலும், மாட்சியும் நம்மோடு இல்லை என்று நாம் கருதலாம். அந்த நேரங்களில் எல்லாம் இறைவனின் மாட்சிக்காக நாம் மன்றாட வேண்டும்.

மன்றாடுவோம்: விண்ணக மாட்சியில் உறையும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமதாற்றலையும், உம் மாட்சியையும் நாங்கள் காண விரும்புகிறோம் (திபா 63). உம் தூயகம் வந்து, திருவடி பணிந்து உம்மை வேண்டுகின்றோம். மீண்டும் எங்களில் அருள்வாழ்வைப் புதுப்பித்தருளும். உமது தூய ஆவியின் கொடைகளால் எங்களை நிரப்பியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

 

ஆன்மீகத் தலைவர்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தம் காலத்தைய ஆன்மீகத் தலைவர்களைப் பற்றிய இயேசுவின் பார்வை மிகத் தெளிவானதாக இருக்கிறது. அவர்களின் முரண்பாடான வாழ்வை இயேசு கண்டித்தார். ஆனால், அதே வேளையில் அவர்களின் தலைமை அவர் மறுக்கவில்லை. எனவேதான், இயேசு கூறுகிறார்: “அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ, அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள்�?.

ஒரே நேரத்தில் இயேசுவின் தீர்ப்பும், பரிந்துரையும் இதில் அடங்கியுள்ளன. பரிசேயர்களும், மக்கள் தலைவர்களும் முரண்பாடான வாழ்க்கை வாழ்ந்தார்கள். அதை இயேசு கண்டிக்கிறார். புறக்கணிக்கிறார். அதே வேளையில், தம்முடைய சீடர்கள் மக்களுக்கு எடுத்துக்காட்டாக, மாதிரியாக, முரண்பாடற்றவர்களாக விளங்க வேண்டும் என்றும் மறைமுகமாக அறிவுறுத்துகிறார்;. நல்ல தலைவர்கள் சொன்னதைச் செய்கிறார்கள், செய்வதை பிறருக்கு அறிவிக்கிறார்கள். நாம் எப்படி?

மன்றாடுவோம்:  நல்ல தலைவரான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உமது அருள்வாக்கை ஏற்று, நாங்கள் எங்கள் சொல்லுக்கும், வாழ்வுக்கும் இடைவெளி இல்லாதபடி வாழ்கிற அருளை எங்களுக்குத் தந்தருள்வீராக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

அவர்கள் செய்வதுபோல் செய்யாதீர்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

மறைநூல் அறிஞர்களையும், பரிசேயர்களையும் இயேசு கடுமையான வார்த்தைகளால் சாடியிருக்கிறார். ஆனால், அவர்களைப் பற்றிய இயேசுவின் மிகப் பெரிய திறனாய்வு, தீர்ப்பு இதுவாகத்தான்; இருக்கவேண்டும்; அவர்கள் கூறுவதுபோல் நடந்து வாருங்கள். ஆனால், அவர்கள் செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள். பல பரிசேயர்களும் இதைக் கேட்டு மிகவும் அவமானம் அடைந்திருப்பார்கள்.

நம்முடைய வாழ்வையும் இந்தப் பார்வையில் கொஞ்சம் அலசினால் நல்லது. யாராவது நம்மைப் பற்றி இளையோரிடம் இந்த அறிவுரையைக் கொடுத்தால் நமக்கு எப்படி இருக்கும்? நம்முடைய வாழ்வு பிறருக்க எடுத்துக்காட்டானதாக இருக்க வேண்டுமேயொழிய, எதிர்சாட்சியாக இருக்கக் கூடாது. எனவே, நம்முடைய அறிவு, திறமைகள், ஆளுமை, பேச்சாற்றல் ... போன்ற பல இருந்தும் நம்மைப் பற்றி இத்தகைய ஒரு  திறனாய்வை பிறர் முன் வைத்தால், அது நமக்கு மிகப் பெரிய ஓர் அவமானம்.

எனவே, நம் வாழ்வைப் பற்றி, நம் நடத்தையைப் பற்றிக் கவனமாயிருப்போம். முடிந்தால், இவரைப் போல வாழுங்கள் என்று பிறர் நம்மைப் பற்றிச் சொல்லும் வண்ணம் நடப்போம். முடியாவிட்டால், இவர் செய்வதுபோல் செய்யாதீர்கள் என்று பிறர் சொல்லாத வண்ணமாவது நடக்க அக்கறை கொள்வோம்.

மன்றாடுவோம்; இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டிய இயேசுவே, இன்றைய நாளில் உமது பேரன்புக்காக நன்றி கூறுகிறேன். இறiவா, என் வாழ்வையும், நடத்தையையும் ஆசிர்வதியும். பிறருக்கு இடறல் இல்லாத, முரண்பாடுகள் இல்லாத நேர்மையான வாழ்வு வாழச் செய்யும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

---------------------------

''இயேசு, 'மறைநூல் அறிஞரும் பரிசேயரும்...செய்வதுபோல் நீங்கள் செய்யாதீர்கள்.
ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள்' என்றார்'' (மத்தேயு 23:2,3)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு. சிலர் மிகுந்த பேச்சு வன்மையோடு உயரிய கருத்துக்களை எடுத்து விளக்குவதில் தலைசிறந்தவர்களாக இருப்பார்கள். பிறர் என்னென்ன செய்ய வேண்டும் என அறிவுரை கூற எப்போதும் தயாராய் இருப்பார்கள். ஆனால் தங்கள் சொந்த வாழ்வில் அந்த அறிவுரையைக் கடைப்பிடிக்க மாட்டார்கள். அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் இடையே பெரிய முரண்பாடும் இடைவெளியும்தான் இருக்கும். இத்தகைய போக்கினை இயேசு கடுமையாகக் கண்டிக்கிறார். இயேசுவை எதிர்த்த பரிசேயர் யூத சமயத்தில் சீர்திருத்தம் கொணர விரும்பியவர்கள்தாம். சமய ஒழுங்குகளைப் பொறுத்தமட்டில் பொதுநிலையினருக்கு உரிய இடம் கொடுக்க வேண்டும் என அவர்கள் பாடுபட்டதுண்டு. எனவே, தூய்மைச் சடங்கு சார்ந்த சட்டங்கள் குருக்களுக்கு மட்டுமல்ல, பொதுநிலையினருக்கும் பொருந்தும் என அவர்கள் கற்பித்தனர். ஓய்வு நாளை எல்லாரும் துல்லியமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் அவர்களது போதனை. எனவே, பரிசேயர் மக்கள்மீது பெரிய பளுவைச் சுமத்தினார்கள் என்பது உண்மையே. இயேசுவும் கூட மக்கள் நன்னடத்தை கொண்டவர்களாக விளங்க வேண்டும் என போதித்தார். ஆயினும் இயேசுவின் போதனை தாங்கமுடியாத ஒரு பளு அல்ல. ''என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது'' என இயேசு விளக்குகிறார் (காண்க: மத் 11:30).

-- மக்கள் தம் வாழ்வை மாற்றியமைக்க வேண்டும் என்பதில் இயேசுவும் கருத்தாயிருந்தார். ஆனால், பரிசேயரைப் போல இயேசு சமயச் சடங்குகளுக்கு முதன்மையிடம் அளிக்கவில்லை. ஓய்வு நாளைக் கடைப்பிடிப்பதிலும் இயேசு அக்கறை காட்டவில்லை. மாறாக, சமயச் சட்டங்களும் ஓய்வு நாள் பழங்கங்களும் மக்களுடைய நன்மையைக் கருத்தில் கொண்டே விளக்கப்பட வேண்டும் என்பதில் இயேசு உறுதியாயிருந்தார். சட்டத்தைக் கடைப்பிடிக்காத சாதாரண மக்களைப் பரிசேயர் ''பாவிகள்'' என்றழைத்து ஒதுக்கினார்கள். ஆனால் இயேசுவோ ''பாவிகளைத் தேடி வந்தார்'' (மத் 9:13). கடவுளின் அன்பை எல்லா மக்களோடும் பகிர்ந்திட விழைந்தார். அவர் அறிவித்த இறையாட்சியில் ஏற்றத் தாழ்வுகளுக்கு இடம் கிடையாது. கடவுள் ஒருவரே அனைவருக்கும் தந்தையாக இருப்பார். மக்கள் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்னும் முறையில் ஒருவர் ஒருவருக்குச் ''சகோதரர், சகோதரிகளாக'' இருப்பார்கள் (காண்க: மத் 23:8-9). இவ்வாறு சமத்துவம் நிலவுகின்ற சமுதாயத்தை உருவாக்க வந்த இயேசு பணிசெய்வதிலேயே முனைந்திருந்தார். அவருடைய பணி வாழ்வு நமக்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாக உள்ளது. ''உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்'' என்று அறிவித்த இயேசுவின் சொற்கள் நமக்கும் பொருந்தும் (காண்க: மத் 23:11).

மன்றாட்டு
இறைவா, எங்கள் சொல்லும் செயலும் முரண்பட்டிருக்காமல் இசைவுடன் அமைந்திட எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

"இயேசு, 'உங்களுள் பெரியவர் உங்களுக்குத்
தொண்டராக இருக்கட்டும்' என்றார்" (மத்தேயு 23:11)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பணிசெய்வதையே தம் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டவர் இயேசு. அவர் பட்டங்களை எதிர்பார்த்துச் செயல்படவில்லை; பதவிகளைப் பெற வேண்டும் என்றோ, பிறர்மேல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்றோ பிரும்பவுமில்லை. மாறாக, இயேசு தம்மை ஒரு தொண்டனாக அறிமுகப்படுத்தினார். எனவே, உண்மையான சிறப்பு நாம் பிறருக்குத் தொண்டாற்றுவதிலிருந்து பிறக்கவேண்டும். ரபி (போதகர்), தந்தை, ஆசிரியர் போன்ற பட்டங்கள் தம்மிலே தவறு என இயேசு கூறவில்லை. ஆனால் இத்தகைய பெயர்களைச் சொல்லி மக்கள் நம்மை அழைக்கிறார்கள் என்பதால் தற்பெருமை கொள்வதோ அதனால் பிற மனிதரைவிடவும் நம்மை உயர்ந்தவர்களாகக் கருதுவதோ தவறு என இயேசு சுட்டிக்காட்டுகிறார். இயேசு விடுத்த எச்சரிக்கை திருச்சபைக்கும் திருச்சபையில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருப்போருக்கும் தனிப்பட்ட விதத்தில் பொருந்தும். மத்தேயு காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவ சமூகம் இதை அறிந்திருந்தது.

-- இன்றைய திருச்சபையும் பணிசெய்யும் சமூகமாகத் திகழவேண்டும். திருச்சபை பல பணிகளை ஆற்றுவது உண்மைதான். என்றாலும் அப்பணிகளில் ஈடுபடும்போது இயேசுவின் முன்மாதிரியை நாம் பின்பற்றவேண்டும். கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருப்பதை அறிவித்த இயேசு அந்த ஆட்சியில் நாம் புக வேண்டும் என்றால் பணிசெய்யும் மனநிலை கொண்டு நாம் வாழ வேண்டும் என நம்மிடம் கேட்கின்றார்,

மன்றாட்டு
இறைவா, பிறருக்குப் பணியாற்றும் மனநிலை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்