ஆண்டின் பொதுக்காலம் 32 வாரம் ஞாயிற்றுக் கிழமை

முதல் வாசகம்

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 6: 12-16

ஞானம் ஒளிமிக்கது; மங்காதது. அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்; அதைத் தேடுவோர் கண்டடைவர். தன்னை நாடுவோர்க்கு அது தன்னையே விரைந்து வெளிப்படுத்தும். வைகறையில் அதைத் தேடுவோர் தளர்ச்சி அடைய மாட்டார்கள்; ஏனெனில் தம் கதவு அருகில் அது அமர்ந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். அதன்மீது மனத்தைச் செலுத்துவதே ஞானத்தின் நிறைவு. அதன் பொருட்டு விழிப்பாய் இருப்போர், கவலையிலிருந்து விரைவில் விடுபடுவர். தனக்குத் தகுதியுள்ளவர்களை ஞானம் தேடிச் செல்கிறது; அவர்களுடைய வழியில் கனிவுடன் தன்னையே காட்டுகிறது; அவர்களின் ஒவ்வொரு நினைவிலும் அது அவர்களை எதிர்கொள்கிறது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 63: 1. 2-3. 4-5. 6-7
பல்லவி: என் இறைவா! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது.

1 கடவுளே! நீரே என் இறைவன்! உம்மையே நான் நாடுகின்றேன்; என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது;
நீரின்றி வறண்ட தரிசு நிலம் போல என் உடல் உமக்காக ஏங்குகின்றது. -பல்லவி

2 உம் ஆற்றலையும் மாட்சியையும் காண விழைந்து உம் தூயகம் வந்து உம்மை நோக்குகின்றேன்.
3 ஏனெனில், உமது பேரன்பு உயிரினும் மேலானது; என் இதழ்கள் உம்மைப் புகழ்கின்றன. -பல்லவி

4 என் வாழ்க்கை முழுவதும் இவ்வண்ணமே உம்மைப் போற்றுவேன்; கைகூப்பி உமது பெயரை ஏத்துவேன்.
5 அறுசுவை விருந்தில் நிறைவடைவதுபோல என் உயிர் நிறைவடையும்; என் வாய் மகிழ்ச்சிமிகு இதழ்களால் உம்மைப் போற்றும். -பல்லவி

6 நான் படுத்திருக்கையில் உம்மை நினைப்பேன்; இரா விழிப்புகளில் உம்மைப் பற்றியே ஆழ்ந்து சிந்திப்பேன்.
7 ஏனெனில், நீர் எனக்குத் துணையாய் இருந்தீர்; உம் இறக்கைகளின் நிழலில் மகிழ்ந்து பாடுகின்றேன். -பல்லவி


இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 4: 13-18

சகோதரர் சகோதரிகளே, இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்; எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது. இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார். ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே: ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம். கட்டளை பிறக்க, தலைமை வானதூதரின் குரல் ஒலிக்க, கடவுளுடைய எக்காளம் முழங்க, ஆண்டவர் வானினின்று இறங்கி வருவார்; அப்பொழுது, கிறிஸ்து மீது நம்பிக்கை கொண்ட நிலையில் இறந்தவர்கள் முதலில் உயிர்த்தெழுவர். பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக்கொண்டுபோகப்பட்டு, வான் வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம். எனவே, இவ்வார்த்தைகளைச் சொல்லி ஒருவரை ஒருவர் தேற்றிக்கொள்ளுங்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.

மத்தேயு 25:1-13

 

ஆண்டின் பொதுக்காலம் 32 வாரம் ஞாயிற்றுக் கிழமை

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 1-13

இயேசு தம் சீடர்களுக்குச் சொன்ன உவமையாவது: ``விண்ணரசு எவ்வாறு இருக்கும் என்பதைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாக விளக்கலாம்: மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப் பேர் தங்கள் விளக்குகளை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுள் ஐந்து பேர் அறிவிலிகள்; ஐந்து பேர் முன்மதி உடையவர்கள். அறிவிலிகள் ஐவரும் தங்கள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள்; ஆனால் தங்களோடு எண்ணெய் எடுத்துச் செல்லவில்லை. முன்மதியுடையோர் தங்கள் விளக்குகளுடன் கலங்களில் எண்ணெயும் எடுத்துச் சென்றனர். மணமகன் வரக் காலந் தாழ்த்தவே அனைவரும் தூக்க மயக்கத்தால் உறங்கிவிட்டனர். நள்ளிரவில், `இதோ மணமகன் வருகிறார். அவரை எதிர்கொள்ள வாருங்கள்' என்ற உரத்த குரல் ஒலித்தது. மணமகளின் தோழியர் எல்லாரும் எழுந்து தங்கள் விளக்குகளை ஒழுங்குபடுத்தினர். அப்போது அறிவிலிகள் முன்மதியுடையோரைப் பார்த்து, `எங்கள் விளக்குகள் அணைந்து கொண்டிருக்கின்றன; உங்கள் எண்ணெயில் எங்களுக்கும் கொடுங்கள்' என்றார்கள். முன்மதியுடையவர்கள் மறுமொழியாக, `உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் போதுமான அளவு இராமல் போகலாம். எனவே, வணிகரிடம் போய் நீங்களே வாங்கிக் கொள்வதுதான் நல்லது' என்றார்கள். அவர்களும் வாங்கப் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது மணமகன் வந்துவிட்டார். ஆயத்தமாய் இருந்தவர்கள் அவரோடு திருமண மண்டபத்துக்குள் புகுந்தார்கள். கதவும் அடைக்கப்பட்டது. பிறகு மற்றத் தோழிகளும் வந்து, `ஐயா, ஐயா, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும்' என்றார்கள். அவர் மறுமொழியாக, `உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எனக்கு உங்களைத் தெரியாது' என்றார். எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

களுக்குத் தெரியாது.

------------------------

திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 6 – 7
”கடவுளே! நீரே என் இறைவன்”

கடவுள் மீது தன்னுடைய நம்பிக்கையை, உறுதிப்பாட்டை ஆழமாக வெளிப்படுத்துகிற ஒரு பாடல் இந்த திருப்பாடல். எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், யாவே ஆண்டவர் ஒருவர் தான், தன்னுடைய தலைவர் என்கிற நம்பிக்கையை அறிக்கையிடும் பாடலாகவும் இது அமைகிறது. பொதுவாக, கடவுள் மீது நம்பிக்கை வைக்கிற மனிதர்களுக்கு பலவிதமான சோதனைகள் வருவதுண்டு. துன்ப காலத்தில் மற்றவர்கள், கடவுள் நம்பிக்கையுள்ளவர்களைப் பார்த்து கூறுவது, ”இந்த கடவுளை நம்பினாயே! நீ அடைந்த பலன் என்ன? துன்பங்கள் தான் உனக்கு மிஞ்சுகிறது. பேசாமல் அவரை விட்டுவிட்டு விலகிவிடு”.

நெருக்கடியான நேரத்தில் இப்படி சொல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும், மற்றவர்களின் தொடர் விமர்சனங்களுக்கு ஆளாகிற பலர், ”ஏன் நமக்கு வீண் பிடிவாதம்?” என்று, வெகு எளிதாக, கடவுளை விட்டுவிடுகிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிடும் திருப்பாடல் ஆசிரியர், கடவுள் மீது தனக்குள்ள ஆழமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். கடவுள் மீதான இந்த நம்பிக்கையை, அவர் எழுதுகிற ஒவ்வொரு வரிகளும் வெளிப்படுத்துகின்றன.

நம்முடைய வாழ்விலும், இன்னல்கள், நெருக்கடிகள் வருகிறபோது, நாம் அவற்றிற்கு பயப்படாமல், பலியாகிவிடாமல் நாம் கொண்டிருக்கிற விசுவாசத்தில் உறுதியாக இருக்குமாறு ஆண்டவரிடம் மன்றாடுவோம். ஆண்டவர் நமக்கு அதற்கான பதிலை தருவார்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

வாழ்வின் முக்கிய தருணங்கள்

ஒரு சில தருணங்கள் வாழ்வில் முக்கியமானவை, திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த தருணங்களை இழந்துவிட்டால், அது மீண்டும் கிடைக்காது. நமது வாழ்வில் நாம் உயர்வடைய கொடுக்கப்பட்ட வாய்ப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பை இழந்ததால், நமது வாழ்க்கை துன்பங்களோடு முடிந்துவிட்ட ஒன்றாகக்கூட மாறலாம். எனவே, வாழ்வைப் பற்றிய அக்கறை, உயர வேண்டும் என்கிற எண்ணம், எப்போதும் நமது சிந்தனைகளை கூர்மையாக வைத்திருக்கக்கூடிய உணர்வு நமக்கு இருப்பதற்கு இன்றைய வாசகம் அழைப்புவிடுக்கிறது.

மனிதர்களில் இரண்டுவிதமானவர்கள் இருப்பதை இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது. கிடைக்கிற சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேறிக்கொண்டிருக்கிறவர்கள். பெரிதாக வாய்ப்பு கிடைத்தாலும் வீணடிக்கிறவர்கள். இரண்டுவிதமான மணமகளின் தோழியர் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். மணமகன் வருகிறபோது, அவர்கள் தயாராக இருக்க வேண்டும், எண்ணெய் குறைவில்லாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும், விழிப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதது அல்ல. நிச்சயம் தெரியும். நிச்சயம் மணமகன் வந்தே தீருவார். ஆனால், விரைவில் வரலாம், சற்று தாமதமாக வரலாம் என்பதும் அவர்கள் அறிந்ததே. நேரத்திற்கு ஏற்றாற்போல, சூழ்நிலைக்கு தக்கபடி தங்களை தயார்படுத்திக் கொள்ள அவர்கள் மதியில்லாமல் இருந்து விடுகிறார்கள்.

முன்மதியில்லாத இந்த பெண்களைப் போலத்தான், நம்மில் பலர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விவேகமாக, அறிவாக நடக்கும் மனநிலை அற்றவர்களாக இருக்கிறோம். இவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நல்லமுறையில், நம்பிக்கையோடு வாழ்வை வாழ, கடவுளிடம் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

விண்ணக விருந்து

யூதர்களுடைய வாழ்க்கையில் திருமணம் என்பது முக்கியமான நிகழ்ச்சி. ஒரு இல்லத்தில் திருமணம் என்றால், அந்த கிராமம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். ஏனென்றால், அது ஒட்டுமொத்த சமுதாயத்திருவிழா. புதிய மணமக்களை வரவேற்க, ஊரே திரண்டிருக்கும். அவர்களது இல்லத்திற்குச் செல்வதற்கு எது நீளமான வழியோ, அந்த வழியாகத்தான் அவர்களை அழைத்துச் செல்வார்கள். பல மக்களின் ஆசீர்வாதங்களை மணமக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதின் அர்த்தம் தான் இது. சட்டம் படித்துக்கொண்டிருக்கக்கூடிய ஒருவன், திருமண மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள, நிச்சயம் செல்லலாம் என்று, யூதப்போதகர்கள் அனுமதி அளிக்கக்கூடிய அளவுக்கு, திருமணம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.

புதிதாக திருமணம் முடித்த தம்பதியர்கள் வேறு எங்கும் செல்வதில்லை. விருந்தினர்களோடு, ஊர் மக்களோடு அந்த மகிழ்ச்சியை கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக கொண்டாடினர். புதிய மணமகனும், மணமகளும் ராஜா, ராணியைப் போல உபசரிக்கப்பட்டனர். அதுதான் அவர்களது வாழ்வின் மகிழ்ச்சியின் உச்சகட்டம். இயேசு சொல்கிற உவமை, மக்களின் வாழ்வு முறையோடு இணைந்த ஒன்றாக இருந்தது. மணமகனை வரவேற்க, மணமகளின் தோழியர் காத்திருப்பர். எப்போது வேண்டுமானாலும் மணமகன் வரலாம். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் எல்லாவற்றிற்கும் தோழியர் தயாராக இருக்க வேண்டும் என்பதே இங்கு நாம் அறியக்கூடியது. அப்படிக்காத்திருக்க முடியாமல், தயாரிப்பு இல்லாமல் இருக்கக்கூடியவர்கள், மகிழ்ச்சியின் உச்சகட்டம் என்று சொல்லக்கூடிய அந்த விருந்தில் கலந்து கொள்ள முடியாது.

நமது கிறிஸ்தவ வாழ்க்கை விண்ணக விருந்திற்கான தயாரிப்பு காலம். அந்த விருந்தில் பங்கு கொள்வது தான், மகிழ்ச்சியின் உச்சகட்டம். அந்த விருந்தில் பங்குகொள்ள நம்மையே நல்ல முறையில் தயாரிக்க வேண்டும். அப்படி தகுந்த தயாரிப்பு இல்லையென்றால், அந்த விண்ணக விருந்தை இழந்துவிடுவோம். அதற்கு பிறகு வருந்தி ஒன்றும் பயனில்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவனின் வல்லமையும், ஞானமும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய முதல் வாசகப் பகுதி கொரிந்தியர் திருமடலிலேயே ஒரு சிறப்பான பகுதி. சிலுவையின் மேன்மையைப் புகழும் இந்த இறையியல் பகுதியில் பவுலடியார் இறைவனின் இயல்பு பற்றிய புதிய ஒரு புரிதலை நமக்கு வழங்குகிறார். பழைய ஏற்பாட்டில் இறைவனின் படைப்பு கடவுளின் வல்லமைக்கும், ஞானத்துக்கும் அடையாளமாக இருந்தது. இந்த உலகப் படைப்புகளைக் காணும்போதெல்லாம், நாம் இறைவனின் வல்லமையையும், ஞானத்தையும் கண்டு வியக்கிறோம். காரணம், ஒன்றுமில்லாமையிலிருந்து இறைவன் ஆற்றல் மிக்க படைப்புகளை உருவாக்கினார். அத்துடன், வியத்தகு முறையில் ஆறு, கடல், மலர்கள், மலைகள், இயற்கை அனைத்தையும் உருவாக்கினார். இறைவனின் ஞானம் அதில் வெளிப்படுகிறது. புதிய ஏற்பாட்டிலோ, சிலுவையில் அறையுண்ட மெசியாவான இயேசுதான் கடவுளின் வல்லமையும், ஞானமுமாய் இருக்கிறார். சிலுவை மனிதர்களுக்கு வலிமைக் குறைவானதாகவும் (தோல்வி), மடமையாகவும் (அவமானம்) தோன்றியது. ஆனால், “மனித ஞானத்தைவிட கடவுளின் மடமை ஞானம் மிக்கது. மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது”. எனவே, நமது சிலுவைகளை, துன்பங்களைக் கண்டு அஞ்சவேண்டாம். இயேசு அவைகளை வென்றுவிட்டார்.

மன்றாடுவோம்: இறைவல்லமையும், ஞானமுமான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள்; வாழ்வில் நாங்கள் சந்திக்கும் சிலுவைகளை உமது வல்லமையாக, ஞானமாக ஏற்றுக்கொள்ளும் அருளைத் தந்தருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

அருள்தந்தை குமார்ராஜா

முன்மதி உடையோராய்... !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

முன் மதி என்பது இறையாட்சியின் ஒரு மதிப்பீடு. இறையாட்சிக்கு உட்படுவோர் அந்தப் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். முன்மதி என்பது விழிப்புணர்வு, அறிவாற்றல், ஞானம், எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை, திட்டமிடுதல் போன்றவற்றின் கலவை. எப்போதும் தயாராக இருக்கும் நேர்த்தி.

இயேசுவின் சீடர்கள் முன்மதி உடையோராய் விளங்க வேண்டும் என்பதற்காகவே பத்து கன்னியர்களின் உவமையை இயேசு சொன்னார். அறிவிலிகள் விளக்குகளை எடுத்துச் சென்றார்கள். ஆனால், போதுமான எண்ணெய் எடுக்கவில்லை.

நமது வாழ்வையும் கொஞ்சம் ஆய்வு செய்து இறையாட்சிப் பார்வையில் நாம் முன்மதியுடையோராய் இருக்கிறோமா என்று ஆய்வு செய்வோம். ஒருவேளை எதிர்காலத்தைப் பற்றிச் சிந்தித்து வங்கியில் பணம் சேமித்து வைக்கிறவர்களாய் இருந்தால், அல்லது காப்பீடு திட்டத்தில் சேர்ந்திருந்தால், உலகியல் பார்வையில் நாம் முன்மதி உடையோர்தான்.

இறையாட்சிப் பார்வையில் நம் நிறைவாழ்வுக்குத் தேவையான சேமிப்பை, காப்பீட்டைக் கொண்டிருந்தால்தான், விவிலியப் பார்வையில் நாம் முன்மதி உடையோராய் இருப்போம்.
எனவே, செபம், செல்வப் பகிர்வு, அறப் பணிகள், பிறரன்புச் சேவைகள் இவற்றில் நம் நேரத்தை முதலீடு செய்வோம். முன் மதி உடையோராய் வாழ்வோம்.

மன்றாடுவோம்; நிறைவாழ்வின் செல்வமே இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். இந்த உலகின் பார்வையில் மட்டுமல்ல, இறையாட்சிப் பார்வையிலும் நான் முன்மதி உடையவனாய் வாழ விரும்புகிறேன்.  அருள் தாரும் ஆண்டவரே. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

-------------------------

''மணமகனை எதிர்கொள்ள மணமகளின் தோழியர் பத்துப்பேர்
தங்கள் விளக்குகளை எடுத்துக் கொண்டு புறப்பட்டுச் சென்றார்கள்.
அவர்களுள் ஐந்துபேர் அறிவிலிகள்; ஐந்துபேர் முன்மதி உடையவர்கள்'' (மத்தேயு 25:1-2)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இறையாட்சி நம்மிடையே வந்துகொண்டிருப்பதை நாம் அடையாளம் கண்டு, அதில் பங்கேற்றிட எப்போதும் ''விழிப்பாயிருக்க வேண்டும்'' என்னும் கருத்தை வலியுறுத்த இயேசு கூறிய கதை ''பத்துத் தோழியர் உவமை'' ஆகும் (மத் 25:13). இந்த உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே உள்ளது. இந்த உவமையின் பொருளை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அக்காலத் திருமணப் பழக்கம் பற்றி நாம் அறிவது தேவை. இந்திய நாட்டின் பல பகுதிகளில் இன்றும்கூட திருமணம் என்றால் இரு தனி ஆள்களுக்கு இடையே ஏற்படும் ஒப்பந்தம் என்றில்லாமல் இரு குடும்பங்களுக்கிடையே நிகழ்கின்ற உடன்பாடு என்றே உள்ளது. அதுபோலவே, இயேசு வாழ்ந்த காலத்திலும் பெற்றோரே தங்கள் பிள்ளைக்குப் பொருத்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வது வழக்கம். திருமண நிகழ்வு இரு கட்டங்களாக அமைந்தது. முதல் கட்டம் திருமண ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது. மணமகனின் தந்தை மணமகளின் தந்தையின் வீட்டுக்குச் சென்று, மணமகனிடமிருந்து திருமண ஒப்பந்த ஏட்டையும் வரதட்சணையையும் பெற்றுக்கொள்வார். மணமகள் தன் தந்தையின் வீட்டிலேயே ஏறத்தாழ ஒரு வருடம் தொடர்ந்து தங்கியிருந்த பின்னரே மணமகனின் வீட்டுக்குச் சென்று தாம்பத்திய வாழ்க்கை நடத்துவார். இயேசு கூறிய உவமையில் வருகின்ற பத்துத் தோழியர் மணமகனின் வருகைக்குக் காத்திருக்கின்றனர். அவர் மணப்பெண்ணின் வீட்டில் தன் வருங்கால மாமனாரைச் சந்தித்து, அவரோடு திருமண ஏற்பாட்டுக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார். அது நன்முறையில் முடிந்ததும், ''இதோ மணமகன் வருகிறார்'' என்று அறிவிக்கப்படுகிறது. திருமண ஊர்வலம் புறப்பட்டு, மணமக்களோடு மணமகனின் வீட்டை நோக்கிச் செல்வதற்குத் தயாராகிறது. அங்கே திருமணக் கொண்டாட்டங்கள் நிகழும். ஆனால் ஊர்வலத்தில் கலந்துகொள்ள வந்த தோழியர் பத்துப்பேரில் ஐவர் மட்டுமே தயாராக உள்ளனர். மற்ற ஐவரும் போதிய எண்ணெய் இல்லாததால் தங்கள் விளக்குகளை ஏற்ற இயலாதிருக்கிறார்கள். அவர்கள் எண்ணெய் வாங்கச் சென்ற நேரம் பார்த்து மணமகனும் வெளியே வருகிறார். ஊர்வலமும் புறப்படுகிறது.

-- ஆயத்தமாயிருந்தவர்கள் மட்டுமே திருமண மண்டபத்துக்குள் சென்று கொண்டாட்டத்தில் கலந்துகொள்கிறார்கள். பிந்தி வந்தவர்கள் ஏமாற்றத்தோடு வெளியே நிற்கிறார்கள். இந்த உவமை வழியாக இயேசு இரு கருத்துக்களை உணர்த்துகிறார். முதலில் ''விளக்கு'' என்பது நாம் செய்கின்ற நற்செயல்களைக் குறிக்கிறது. ''உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் புகழ்வார்கள்'' (மத் 5:16) என இயேசு கூறுகிறார். மேலும் யார் அறிவாளி யார் அறிவிலி என்பதை இயேசு ஏற்கெனவே விளக்கியிருந்தார். அதாவது, முன்மதியோடு உறுதியான அடித்தளம் இட்டு வீடுகட்டுபவர் அறிவாளி; ஆனால் உறுதியற்ற மணல்மீது வீடுகட்டுபவர் அறிவிலி (மத் 7:24-27). அதுபோல, அறிவோடு செயல்பட்ட தோழியர் இயேசுவின் சொற்களைக் கேட்டு அவற்றை வாழ்வில் கடைப்பிடிப்போருக்கு ஒப்பாவர். அறிவிலிகளாகச் செயல்பட்ட தோழியரோ நற்செயல்கள் புரியாதோருக்கு ஒப்பாவர். ஒருவர் புரிகின்ற நற்செயலை மற்றவரோடு பகிர்ந்துகொள்ள இயலாது. ஒவ்வொருவரும் கடவுள் முன்னிலையில் பொறுப்போடு செயல்பட்டு, அவர் சொற்படி நடக்க அழைக்கப்படுகிறார்கள்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் வாழ்க்கை ஒளிர்கின்ற விளக்காகத் துலங்கிட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

திருமணவீட்டு வாழ்வு

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம் வாழ்க்கை எப்பொழுதும் குதூகுலமாக, மங்களகரமாக இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், ஒரு திருமண வீடாக வைத்துக்கொள்ள வேண்டும்.அதற்கு,

1. முன்மதியோடு செயல்பட வேண்டும்.அறிவு வேண்டும். உலக அறிவு, அதைவிட மேலாக மறை அறிவு வேண்டும். சிறப்பாக, விவிலியத்தை வாசித்து இறை வெளிப்பாட்டை தன் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் உணரும் அறிவு பெறுவோமாயின், அவ்வீடு திருமண வீடாக இருக்கும்.

2. மணமகனோடு எப்போதும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். எண்ணை இல்லாமல் கடைகடையாக, தெருதெருவாக, வீடுவீடாக அலைந்தால் அவர்கள் மணமகனோடு இருக்கும் வாய்ப்பு இல்லை. மணமகணோடு இருந்தால் மட்டுமே மணவீட்டின் மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியும்.

3. விளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும். எரியும் விளக்கு வெளிச்சம் கொடுத்து பிறருக்கு உதவுகிது (ளநசஎiஉந). எரியும் திரி வெந்தழலில் தன்னை வேக வைத்தும், விளக்கு எரிய எண்ணை தன்னை இழந்தும் (ளயஉசகைiஉந) பலியாவதுபோல இருந்தால் அது திருமணவீட்டு அனுபவம்தான். "உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங் :35 ";துகட்டிக் கொள்ளுங்கள

4. விழிப்பாக நாம் இருக்கவேண்டும். எதிரியும் எதிர்ப்பும் குறைத்து மதிப்பிடக்கூடியவை அல்ல. "அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது." (1 பேதுரு5'8) எரியும் விளக்கு தயார்நிலையின் அடையாளம்.

நம் வாழ்வு இப்படி இருந்தால் வாழ்வே கொண்டாட்டம்தான்.

--அருட்திரு ஜோசப் லீயோன்