முதல் வாசகம்

நீதிமொழிகள் நூலிலிருந்து வாசகம் 31: 10-13, 19-20, 30-31

திறமை வாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தை விடப் பெருமதிப்புள்ளவள். அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும். அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒருநாளும் தீங்கு நினையாள். கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலை அனைத்தையும் விருப்புடன் தானே செய்வாள். இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள். எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள். எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள். அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 128: 1-2. 3. 4-5
பல்லவி: ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழி நடப்போர் பேறுபெற்றோர்!

1 ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறுபெற்றோர்!
2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்! நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்! -பல்லவி

3 உம் இல்லத்தில் உம் துணைவியார் கனிதரும் திராட்சைக் கொடிபோல் இருப்பார்;
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். -பல்லவி

4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5 ஆண்டவர் சீயோனிலிருந்து உமக்கு ஆசி வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக! -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 1-6

சகோதரர் சகோதரிகளே, காலங்களையும் நேரங்களையும் குறித்து உங்களுக்கு எழுதத் தேவையில்லை. ஏனெனில் திருடன் இரவில் வருவது போல, ஆண்டவருடைய நாள் வரும் என்பதை நீங்களே திண்ணமாய்த் தெரிந்திருக்கிறீர்கள். `எங்கும் அமைதி, ஆபத்து இல்லை' என்று மக்கள் கூறிக்கொண்டிருக்கும் பொழுது, கருவுற்றிருப்பவருக்கு வேதனை வருவது போல, திடீரென அவர்களுக்கு அழிவு வரும்; யாரும் தப்பித்துக்கொள்ள இயலாது. ஆனால் அன்பர்களே! நீங்கள் இருளில் நடப்பவர்களல்ல; ஆகவே அந்த நாள் திருடனைப் போல் உங்களுக்கு வராது. நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்; பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல. ஆகவே மற்றவர்களைப் போல் நாமும் உறங்கலாகாது; விழிப்போடும் அறிவுத் தெளிவோடும் இருப்போம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். அல்லேலூயா.

மத்தேயு 25:14-30

ஆண்டின் பொதுக்காலம் 33 ஆம் வாரம் ஞாயிறு

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 14-30

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறிய உவமை: விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சி வாயிலாகவும் விளக்கலாம்: நெடும் பயணம் செல்ல இருந்த ஒருவர் தம் பணியாளர்களை அழைத்து அவர்களிடம் தம் உடைமைகளை ஒப்படைத்தார். அவரவர் திறமைக்கு ஏற்ப ஒருவருக்கு ஐந்து தாலந்தும் வேறொருவருக்கு இரண்டு தாலந்தும், இன்னொருவருக்கு ஒரு தாலந்தும் கொடுத்துவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். ஐந்து தாலந்தைப் பெற்றவர் போய் அவற்றைக் கொண்டு வாணிகம் செய்து வேறு ஐந்து தாலந்து ஈட்டினார். அவ்வாறே இரண்டு தாலந்து பெற்றவர் மேலும் இரண்டு தாலந்து ஈட்டினார். ஒரு தாலந்து பெற்றவரோ போய் நிலத்தைத் தோண்டித் தம் தலைவரின் பணத்தைப் புதைத்து வைத்தார். நெடுங்காலத்திற்குப் பின் அந்தப் பணியாளர்களின் தலைவர் வந்து அவர்களிடம் கணக்குக் கேட்டார். ஐந்து தாலந்து பெற்றவர் அவரை அணுகி, வேறு ஐந்து தாலந்தைக் கொண்டு வந்து, `ஐயா, ஐந்து தாலந்தை என்னிடம் ஒப்படைத்தீர்; இதோ பாரும், இன்னும் ஐந்து தாலந்தை ஈட்டியுள்ளேன்' என்றார். அதற்கு அவருடைய தலைவர் அவரிடம், `நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன், உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். இரண்டு தாலந்து பெற்றவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ பாரும், வேறு இரண்டு தாலந்து ஈட்டியுள்ளேன்' என்றார். அவருடைய தலைவர் அவரிடம், `நன்று. நம்பிக்கைக்குரிய நல்ல பணியாளரே, சிறிய பொறுப்புகளில் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தீர். எனவே பெரிய பொறுப்புகளில் உம்மை அமர்த்துவேன். உம் தலைவனாகிய என் மகிழ்ச்சியில் நீரும் வந்து பங்கு கொள்ளும்' என்றார். ஒரு தாலந்தைப் பெற்றுக்கொண்டவரும் அவரை அணுகி, `ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது' என்றார். அதற்கு அவருடைய தலைவர், `சோம்பேறியே! பொல்லாத பணியாளனே, நான் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவன். நான் தூவாத இடத்திலும் போய்ச் சேகரிப்பவன் என்பது உனக்குத் தெரிந்திருந்தது அல்லவா? அப்படியானால் என் பணத்தை நீ வட்டிக் கடையில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வரும்போது எனக்கு வரவேண்டியதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேன்' என்று கூறினார். `எனவே அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்து பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்று அவர் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

திருப்பாடல் 128: 1 – 2, 3, 4 – 5
”ஆண்டவர்க்கு அஞ்சி நடப்போர் பேறுபெற்றோர்”

மற்றவர்களுக்கு நாம் ஆசீர் வழங்க பயன்படுத்தப்படுகிற திருப்பாடல் இன்றைய பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. மற்றவர்களுக்கு ஆசீர் வழங்குவதற்கான தகுதி என்ன? யார் கடவுளின் ஆசீரை மற்றவர்களுக்குப் பெற்றுத்தருகிற வல்லமை பெற்றவராக இருக்கிறார்? ”ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிநடப்போர் பேறுபெற்றவர்” என்பதுதான், நாம் எழுப்பிய கேள்விகளுக்கான பதிலாக இருக்கிறது.

ஆண்டவர்க்கு அஞ்சி நடக்க வேண்டும் என்பது கடவுளின் முக்கியமான கட்டளைகளுள் ஒன்றாக இருக்கிறது. ஆண்டவர்க்கு அஞ்சி நடப்பது என்பது, அவரைப் பார்த்து பயப்படுவதற்காக சொல்லப்படவில்லை. மாறாக, அனைவரும் வாழ வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தோடு சொல்லப்படுகிறது. ஆண்டவர்க்கு பயப்படுவது என்பது, அவரது கட்டளையான அன்புறவில் வாழ வேண்டும் என்பதாகும். அதாவது, நம்மை அன்பு செய்வது போல நாம் மற்றவர்களை அன்பு செய்ய வேண்டும் என்கிற அடிப்படை எண்ணம் மனதில் இருக்கிறபோது, நிச்சயம் நாம் இறைவனின் ஆசீரை மற்றவர்களுக்குப் பெற்றுத்தருகிற வல்லமையைப் பெற்றவர்களாக மாறுகிறோம்.

நம்முடைய வாழ்வில் கடவுளின் கட்டளைகளை அதிலும் குறிப்பாக, கடவுள் தந்திருக்கிற அன்புக்கட்டளையை நாம் கருத்தாக கடைப்பிடிக்கிறோமா? அதனைக் கடைப்பிடித்து, அன்புநிறைந்தவர்களாக வாழ்கிறோமா? என்று சிந்தித்துப்பார்ப்போம். அதன்படி நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

வாழ்வு விலைமதிப்பில்லாதது

தாலந்து என்பது நாணயம் அல்ல, அது எடையைக்குறிப்பதாகும். எனவே, நாணயம் வெள்ளியா, தங்கமா, செப்புக்காசா என்பதைப்பொறுத்து, அதன் மதிப்பு அமையும். பெரும்பாலும் வெள்ளிக்காசுகளைத்தான் எடைபோடுவார்கள். அப்படிப்பார்த்தால் ஒரு தாலந்தின் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு தொழிலாளியின் 15 வருட உழைப்பால் பெற்ற வருமானத்திற்கு சமம். இந்த தாலந்து உவமையில், பூமிக்குள் புதைத்து வைத்த அறிவீனமான பணியாளர் பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் ஒப்பிடப்படுகிறார்.

எவ்வாறு அறிவீனனான பணியாளர் தான் பெற்றிருந்த அந்த தாலந்தை, மண்ணில் புதைத்து வீணாக்கினானோ, அதேபோல பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் சட்டத்தை ஒன்றுக்கும் பயனில்லாமல் மாற்றிவிட்டார்கள். சட்டத்தைக்காப்பாற்ற வேண்டும் என்ற போர்வையில், அதற்கு வேலிகளாக பல சட்டங்களை அமைத்து, அந்த சட்டத்தை முழுமையாகப்பயன்படுத்தாமல், தாங்களும் பயன்பெறாமல், மற்றவர்களுக்கும் பயனில்லாமல் மாற்றிவிட்டனர். இத்தகைய அறிவீனமான நிலையில் சட்டத்தைப்பேணிக்காக்கிறவர்கள் இருக்கிறார்கள் என்று இயேசு எச்சரிக்கிறார்.

இந்த தாலந்தை நமது வாழ்விற்கு ஒப்பிடலாம். வாழ்வு என்பது விலைமதிப்பில்லாத சொத்து. அந்த வாழ்வை நாம் இப்படித்தான் யாருக்கும் பயனில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கு காரணம் வாழ்வின் மகிமை, அதன் மகத்துவம் நமக்குத்தெரியவில்லை. வாழ்வின் மதிப்பை உணர்ந்து வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

''உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்...
இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்'' (மத்தேயு 25:29)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பயன்படுத்தாத செல்வம் பாழாய்ப்போகும் என்னும் உண்மையை இயேசு நமக்குக் கற்பிக்கிறார். வெவ்வேறு அளவில் தாலந்துகளைப் பெற்றவர்கள் அவற்றைப் பயன்படுத்தி மேலும் செல்வம் ஈட்டினார்கள். ஆனால் ஒருவர் மட்டும் தாலந்தைப் பயன்படுத்தாமல் நிலத்தில் புதைத்துவைத்தார். கடவுளிடமிருந்து நாம் பெறுகின்ற கொடைகள் பல. அவற்றை நாம் நன்முறையில் பயன்படுத்தி நன்மை செய்ய முன்வரவேண்டும். கடவுள் நமக்குத் தருகின்ற காலம் குறுகியது, நாம் பெற்றுள்ள கொடைகளும் சில இலட்சியங்களை அடைய வேண்டும் என நம் உள்ளத்தில் எழுகின்ற ஆர்வங்களும் எல்லைகளுக்கு உட்பட்டவை. இவற்றை அறிவோடு பயன்படுத்த வேண்டும். இதற்கு மாறாகச் சிலர் தாம் பெற்ற கொடைகளை மனம்போன போக்கில் செலவழித்து வீணடிக்கிறார்கள்; வேறு சிலரோ தம் கொடைகளைப் பத்திரமாகப் பொதிந்துவைத்து யாருக்கும் பயன்படா வண்ணம் அழிந்துபட விட்டுவிடுகிறார்கள். இந்த இரு போக்குகளுமே தவறானவை. எதிர்காலத்தைப் பற்றி யாதொரு கவலையும் இல்லாமல் இருப்பதும் தவறு, எதிர்காலத்தில் என்ன நிகழ்ந்துவிடுமோ என்னும் அச்சத்தால் வாழ்க்கையை வீணடிப்பதும் தவறு.

-- வாழ்க்கையில் நம்மைத் தேடி வருகின்ற சவால்களை நாம் துணிவோடு சந்திக்க வேண்டும். நன்மை செய்வதில் ஈடுபாடு வேண்டும். இத்தகைய துணிச்சலான செயல்பாடு இல்லாத இடத்தில் இலட்சியங்கள் படிப்படியாக மடிந்துபோகும். எனவே, இயேசு அறிவிக்கின்ற நற்செய்தியை உள்வாங்கி அதன்படி நடக்க விரும்புவோரிடத்தில் துணிந்து செயல்படுகின்ற மன நிலை வளர வேண்டும். கடவுள் நமக்கு அளிக்கின்ற கொடைகளை நன்முறையில் செலவிட்டு உலகம் உய்ந்திட நம்மை ஈடுபடுத்த வேண்டும் என்பதே இயேசு நமக்கு விடுக்கின்ற அழைப்பு.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் பெற்ற கொடைகளை நன்முறையில் பயன்படுத்தி நன்மை செய்வதில் எங்களை ஈடுபடுத்த அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

செய்து பாருங்க.. ..

காலம் பொன்போன்றது. பத்து தோழியர் உவமையிலும் தாலந்து உவமையிலும் காத்திருக்கிறார்கள், மணமகனுக்காக அல்லது தலைவனுக்காக. இந்த உவமையின் சிறப்பு செய்தி, காத்திருக்கும்போதும் உழைக்க வேண்டும் என்பதுதான்.

தன் வேலை உண்டு, தான் உண்டு என்று வேலையில் கவனம் இருக்கவேண்டும். அடுத்தவனைக் குறை சொல்லுகிறவன், அதிலும் பணம் பொருள் உதவிகள் கொடுக்கும் ஒருவரையே குறை சொல்பவன், வேலையைச் செய்யமாட்டான். குருக்குவழி ஏதாவது உண்டா என்று பார்ப்பான்.

விதைத்துப் பெருக்கவேண்டிய பணத்தை, பொருளை, திறமையை,மண்ணுக்குள் புதைத்து மக்கிப்போகவைத்தது மா பெருந்தவறு. ஆகவே, உழைக்காதவன், அடுத்தவனைக் குறைசொல்பவன், குருக்குவழியில் சம்பாதிக்க நினைப்பவன், கிடைத்ததையும் பயன்படுத்தத்தெறியாதவன்,கிடைத்ததைக் கெடுப்பவன், உள்ளதையும் இழந்து தண்டனையும் பெருவது சரியானதே.

இந்த குறைகள் இல்லாதவன் வாழ்க்கையில் எல்லாவிதத்திலும் உயர்வான். எல்லாம் சேர்ந்துகொண்டே இருக்கும்.அவனுக்கு எதுவும் குறையிருக்காது. செய்து பாருங்கரூhநடடip;..

 

--அருட்திரு ஜோசப் லீயோன்