முதல் வாசகம்
லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18

ஆண்டவர் மோசேயிடம் கூறியது: நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது: தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்! களவு செய்யாமலும், பொய் சொல்லாமலும் ஒருவரை ஒருவர் வஞ்சியாமலும், என் பெயரால் பொய்யாணையிட்டு, உங்கள் கடவுளின் பெயருக்கு இழுக்கு ஏற்படுத்தாமலும் இருங்கள். நான் ஆண்டவர்! அடுத்திருப்பவரை ஒடுக்கவோ அவருக்குரியதைக் கொள்ளையிடவோ வேண்டாம்; வேலையாளின் கூலி விடியும்வரை உன்னிடம் இருத்தல் ஆகாது. காது கேளாதோரைச் சபிக்காதே! பார்வையற்றோரை இடறச் செய்யாதே! உன் கடவுளுக்கு அஞ்சி நட. நான் ஆண்டவர்! தீர்ப்பிடுகையில், அநீதி இழைக்காதே. சிறியோர் பெரியோர் என முகம் பாராது, உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. உன் இனத்தாருக்குள் புறங்கூறித் திரியாதே. உனக்கு அடுத்து வாழ்பவரின் குருதிப் பழிக்குக் காரணம் ஆகாதே! நான் ஆண்டவர்! உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கு அடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்துகொள். பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 14

பல்லவி: ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.

7 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது;
அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது;
எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. -பல்லவி

8 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை;
அவை இதயத்தை மகிழ்விக்கின்றன.
ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை;
அவை கண்களை ஒளிர்விக்கின்றன. -பல்லவி

9 ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது;
அது எந்நாளும் நிலைத்திருக்கும்.
ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை;
அவை முற்றிலும் நீதியானவை. -பல்லவி

14 என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே!
என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்;
என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வசனம்
இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!

மத்தேயு 25:31-46

தவக்காலம் -முதல் வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

+மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 25: 31-46

அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: ``வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக்கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக்கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்' என்பார். அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?' என்று கேட்பார்கள். அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக்கொள்ளவில்லை' என்பார். அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?' எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்' எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலைவாழ்வு பெறவும் செல்வார்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

19.02.2024 திங்கள்
நேர்மையாளரா நீங்கள்? ...
மத். 25 : 31 - 46

பணிபுரியும் இடங்களில் நேர்மையாளர்களின் மாண்பு உயர்ந்தே காணப்படும். ஆனால் உடன் பணியாளர்களிடம் இத்தகைய நேர்மைக்கு மதிப்பு இருக்குமா என்றால் இருக்காது. காரணம் தன்னைப்போலவே அனைவரும் இருக்கவேண்டும் என்று எண்ணுவது மனிதனின் இயல்பு. அதனால்தான் நேர்மையாக செயல்பட்ட காமராஜரை தோற்கடித்தார்கள். நேர்மையாளராக செயல்பட்ட சுபாஷ் சந்திரபோஸை காட்டிக்கொடுத்தார்கள். காரணம் தங்களால் நேர்மையாக வாழ இயலவில்லை. எனவே நேர்மையாக வாழ்ந்தவர்களின் வாழ்நாட்களின் எண்ணிக்கையை முடிவுக்கு கொண்டு வருகிறார்கள்.

இத்தகைய ஒரு சிந்தனையைத்தான் இன்றைய வாசகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. முதல் வாசகத்தில் மோசே நேர்மையாளராக செயல்படுகின்றார். ஆனால் இஸ்ரயேல் மக்கள் நேர்மையாக வாழ தவறுகின்றார்கள். எனவே தண்டனை பெறுகிறார்கள். நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் நேர்மையைக் கண்டு உரோமைப் பேரரசு கதிகலங்குகிறது. செம்மறியாடு, வெள்ளாடு என்பது உயர் குடிமக்களையும், பாமர மக்களையும் குறிக்க பயன்படுத்தப்பட்ட சொல் என்று விவிலிய பேராசிரியர்கள் கூறுவர். அவர்களின் நேர்மையை பாராட்டுவார், நேர்மையற்றவரோ தண்டனை பெறுவர் என்பதனை சுட்டிக்காட்டுகின்றார்.

நாம் நேர்மையாக இருக்கின்றோமா? படிக்கும் இடங்களில், பணிபுரியும் இடங்களில். சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

மத்தேயு 25: 31 – 46


முடிவில்லாத வாழ்வா? முடிவில்லாத நெருப்பா?

நாம் செய்யும் எல்லா சின்னஞ்சிறு செயல்கள் தான் நம்மை முடிவில்லா வாழ்வினை எட்டிப் பார்க்க செய்கிறது என்பார் புனித குழந்தை தெரசாள். பிறரைப் பார்த்துப் புன்னகைப்பது, வீணாக எரிந்து கொண்டிருக்கும் விளக்கினை அணைப்பது, வழி தெரியாத ஒருவருக்கு வழி சொல்வது, சாப்பாட்டை வீணாக்காமல் சாப்பிடுவது, மற்றவருக்கு உரிய மரியாதை கொடுப்பது, தேவையில் இருப்பவர்களோடு பகிர்ந்து கொள்வது, அலைபேசியில் உள்ள மிஸ்டு கால்களைத் திரும்ப அழைப்பது, நாம் வைக்கும் அலாமிற்கு சரியாக எழுவது இதில் தான் முடிவில்லா வாழ்வு அடங்கியிருக்கிறது. ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் அல்லது தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் இதனைத் தங்கள் சிந்தனையில் எடுத்துக் கொள்வதில்லை. அதனால் தான் எந்த அதிகாரியும் அல்லது தலைமைத்துவத்தில் இருந்து இறக்கிறவர்களின் முடிவு வித்தியாசமாக அமைந்து விடுகிறது.

இதனை தெய்வீகத் தன்மையோடு நாம் எப்படி முடிவில்லா வாழ்வு வாழ முடியும் என்று இயேசு நற்செய்தி வாசகத்தின் வழியாக கற்றுக் கொடுக்கிறார். அவர் பட்டியிடுகின்ற செயல்கள் அனைத்துமே சிறு செயல்கள் தான். ஆனால் பெறுகின்றவனின் தேவை பெரிதாக இருக்கிறது. அதனால் தான் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த மாதம் பசி, பிணியில் தவிப்பவர்களுக்காக செபித்தாலும், பொருளாலும் உதவிக்கரம் நீட்டுங்கள் என்று அறிக்கையிட்டுள்ளார். காரணம் இந்த சமுதாயத்தில் ஒருவன் தேவையில் சாகிறான் என்றால் அதற்கு காரணம் இன்னொரு மனிதன் தான். அதனால் தான் புனித நிக்கோலஸ் கூறுவார்: நீங்கள் ஆலயத்தில் ஆண்டவருக்கு பட்டாடை அணிந்து வழிபட்டு விட்டு, வெளியில் உணவின்றி தவிக்கும் ஏழைக்கு மனம் இரங்கவில்லை என்றால் நீங்கள் செய்வதில் என்ன பயன்?. அதுவும் நம்முடைய வீடுகளில் இருக்கிற நோயாளிகளை நாம் கவனித்து கொள்வதில்லை. ஆனால் அனாதை அல்லது முதியோர் இல்லங்களுக்கு சென்று உணவு கொடுப்போம். காரணம் தவக்காலம். முடிவில்லாத வாழ்வா? முடிவில்லாத நெருப்பா?

நாம் எத்தகைய வாழ்வைத் தோ்வு செய்ய போகிறோம்? வாழ்வா? நெருப்பா? சிறிய சிறிய செயல்களில் துவங்குவோம், பெரிய வாழ்வை பெறுவோம்.

- அருட்பணி. பிரதாப்

======================

இயேசுவின் சாயல் (மத்தேயு – 25 : 31-46)

இன்றைய நற்செய்தி பல்வேறு கருத்துகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், நான் உங்களோடு இரண்டு விடயங்களை மட்டும் பதிவு செய்து கொள்கிறேன். காரணம் இந்த தவக்காலம் நம்மிடையே இவ்விரண்டு மனமாற்றத்தை அழுத்தி எடுத்துரைக்கின்றது.

1. ‘எவரோ’ என்பதைவிட ‘இயேசுவே’ என்ற மனநிலை: நாம் ஒருவருக்கு உதவ முன்வந்தால் கூட நம்மில் சில சந்தேகங்கள் எழும். இவருக்குக் கண்டிப்பாக உதவ வேண்டுமா? இவர் உண்மையிலேயே துன்பத்தில் இருக்கிறாரா? இல்லை நம்மிடம் வந்து நடிக்கிறாரா? என்பது போன்ற பல கேள்விகள் எழும். இதனால் நாம் பலமுறை உதவி செய்ய முடிந்தும், உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தும் உதவி செய்யாமல் விட்டிருப்போம். ஆனால் இந்த நேரங்களில் நாம் வேறு எதையும் பார்க்காமல், சிந்திக்காமல், நமது உதவிக்காகத் தேவையோடு காத்திருப்பவரை ‘எவரோ’ என்று பார்க்காமல் அவரில் இயேசுவை மட்டும் கண்டோமெனில் உடனடியாக உதவி செய்ய முடியும்.

2. ‘எப்பொழுது’ என்பதைவிட ‘இப்பொழுதே’ என்ற மனநிலை: நற்செய்தியில் வலப்பக்கத்தில் உள்ளோரும் இடப்பக்கத்தில் உள்ளோரும் கேட்கும் ஒரே கேள்வி, ‘ஆண்டவரே எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அந்நியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்தோம்? அல்லது தொண்டு செய்யாதிருந்தோம்? என்பதுதான். இருவருமே ‘இப்பொழுது’ என்ற மனநிலையோடு உதவியிருந்தால் ‘எப்பொழுது’ என்ற கேள்விக்கே இடம் இருந்திருக்காது.
கடந்துவிட்ட நிமிடம், தவறவிட்ட வாய்ப்பு, வாய் தவறிய சொல் இம்மூன்றும் திரும்பக் கிடைக்காது என்பதை உணர்ந்து, ஒவ்வொரு வாய்ப்பிலும் தேவையில் இருக்கும் ஒவ்வொரு மனிதரிலும் இயேசுவின் சாயலைக் கண்டு நாம் செயல்பட்டால் எத்தீங்கும் நம்மை அணுகாது. எனவே இத்தவக்காலத்தினை வாய்ப்பாகக் கருதி செயல்படுவோம்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 19: 7, 8, 9, 14
”ஆண்டவருடை வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன”

நாம் உயிர் வாழ உணவு உண்கிறோம். அந்த உணவானது நமது வயிற்றுக்குள் சென்று, சக்தியாக மாற்றப்படுகிறது. அந்த சக்தி தான், நாம் வேலைகளைச் செய்ய, சிந்திக்க, எழுந்து நடமாட நமக்கு உந்துசக்தியாக இருக்கிறது. எப்படி உணவானது நமது உடலுக்குச் சக்தியாக மாற்றம் பெறுகிறதோ, அதேபோல, இறைவார்த்தையை நம்முடைய சிந்தனைக்குள்ளாக ஏற்றி, அதனை தியானிக்கிறபோது, அது நமது ஆன்மாவிற்குத் தேவையான ஆற்றலையும் சக்தியையும் தருகிறது, என்கிற சிந்தனையை இந்த வரிகள் நமக்கு உணர்த்துகின்றன. இது வெறும் கற்பனையல்ல. மாறாக, இறைவார்த்தையின் வழியாக வாழ்வுபெற்ற ஒரு மனிதனின் வாழ்க்கை அனுபவம். அந்த அனுபவத்தைத்தான், நாம் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நமக்குத்தருகிறார்.

மானிட சமுதாயத்திற்கு கடவுள் வழங்கியிருக்கிற இரண்டு மாபெரும் கொடைகளைப் பற்றி நமக்கு அதிகமாகக் கற்றுக்கொடுப்பதும், அவைகளுடைய மகத்துவத்தை நம்மைப் புரிந்து கொள்ள வைக்கின்ற பணியைச் செய்வதும், திருப்பாடலின் நோக்கமாக இருப்பதை, நாம் நிச்சயமாக உணர முடியும். அந்த இரண்டு மாபெரும் கொடைகள் 1. கடவுளின் படைப்பான இந்த உலகம் 2. கடவுள் வழங்கியிருக்கிற திருச்சட்டம். இந்த இரண்டு கொடைகளையும் தான், திருப்பாடல் ஆசிரியர் தன்னுடைய பாடல்களில் மையமாக வைத்து தன்னுடைய சிந்தனைகளை நம் உள்ளத்தில் பதிய வைக்கிறார். கடவுளுடைய வார்த்தையின்படி நாம் நடந்தால், எந்த அளவுக்கு நம்மால் ஆற்றலோடு சக்தியோடு நமது உலக வாழ்க்கையை வாழ முடியும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. கடவுளின் வார்த்தையை வாசிப்பதே, நமது உடல், உள்ளம், ஆன்மாவிற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது என்றால், அதனை தியானித்து, வாழ்ந்து காட்ட முயற்சி செய்வது, எந்த அளவுக்கு நமது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை, இந்த திருப்பாடல் வெளிப்படுத்துகிறது.

கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதற்கும், தியானிப்பதற்கும் நமது பிள்ளைகளுக்கு நாம் கற்றுக்கொடுக்க வேண்டும். வாசித்ததை அவர்களின் பார்வையில் சிந்திப்பதற்கும் நாம் உறுதுணையாக இருக்க வேண்டும். நிச்சயம், கடவுளின் வார்த்தைகள் மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

ஏழைகளுக்குச் செய்யும் உதவி

கடவுள் நமக்கு தந்தையாக இருக்கிறார். நாம் அவரது பிள்ளைகளாக இருக்கிறோம். எந்த ஒரு தந்தையும், தனது பிள்ளை தனக்கு மதிப்பையும், மரியாதையையும் மற்றவர்கள் மத்தியில் கிடைக்கக்கூடிய அளவுக்கு, தனது பிள்ளை நடக்க வேண்டும், என்றுதான் நினைப்பார். தன்னுடைய பிள்ளையினால், தனக்கு மதிப்பும், புகழும் வரும்போது, அதனுடைய பூரிப்பில், அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைவார். நமது தந்தையாக இருக்கிற கடவுள் மகிழ்ச்சியடைய நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதைத்தான், இன்றைய நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது.

இறைத்தந்தையின் பிள்ளைகளாக, அவரைப் பெருமைப்படுத்த நாம் செய்ய வேண்டிய காரியங்கள் கடினமானது அல்ல, மாறாக, மிக எளிதான காரியங்கள் தான். சின்னஞ்சிறிய சகோதர, சகோதரிகள் என்று இயேசுவால் அழைக்கப்படுகிற, ஏழைகள், எளியவர்கள், தேவையில் இருக்கிறவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை, கைம்மாறு கருதாமல் செய்வதுதான், இறைத்தந்தைக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செயல்கள். அதைச்செய்வதை, இந்த நற்செய்தி வாசகம் வலியுறுத்திக் கூறுகிறது. வானகத்தந்தையை மகிழ்ச்சிப்படுத்த, நம்மால் முடியாத, மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய வேண்டும், என்று இயேசு எதிர்பார்க்கவில்லை. அவர் விரும்புவது ஏழை, எளியவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு, உதவ முன்வர வேண்டும் என்பதுதான். அதனைச் சிறப்பாக செய்ய நமக்கு இயேசு அழைப்புவிடுக்கிறார்.

நமது வாழ்வில், நாம் செய்யக்கூடிய பல காரியங்கள் நிச்சயம் வீணான காரியங்கள் தான். தேவையில்லாமல் பல இலட்சம் ரூபாய்களை, வழிபாடு என்ற பெயரில், சடங்கு, சம்பிரதாயம் என்ற பெயரில் செய்துகொண்டு இருக்கிறோம். பணத்தை விரயமாக்குகிறோம். ஆனால், தேவையானதைச் செய்ய, நாம் மறந்துவிடுகிறோம். அதனை பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறோம். அதனைச் செய்வதற்கு நாம் முன்வருவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கொடுப்பவர்களாக வாழ்வோம்

தவக்காலம் என்பது நம்மைப் பண்படுத்துகின்ற காலம். நம்மைப் பக்குவப்படுத்துகின்ற காலம். நமது வாழ்வை செதுக்குகின்ற காலம். தவக்காலம் நமக்குக் கற்றுத்தரும் ஒரு முக்கியமான பாடம் ”கொடுத்தல்”. கொடுத்தல் நமது வாழ்வின் அங்கமாக இருக்க வேண்டும். கொடுத்தல் இயல்பானதாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்ப்பதாக இருக்கக்கூடாது. நாம் கொடுக்கிறபோது, அது நமக்குள்ளாக வலியை ஏற்படுத்த வேண்டும். வலியோடு கொடுப்பதுதான் உண்மையான கொடுத்தல்.

இன்றைய நற்செய்தியில் கொடுப்பவர்களுக்கு கடவுள் எப்படி கொடுக்கிறவராக இருக்கிறார் என்பது தெளிவாகச்சொல்லப்படுகிறது. மற்றவர்களுக்கு கொடுத்தவர்கள், தாங்கள் கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தோடு கொடுக்கவில்லை. தாங்கள் கொடுத்தால் தங்களுக்கு பிரதிபலன் கிடைக்கும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. கொடுத்தல் அவர்களுக்கு இயல்பாக இருந்தது. ஆனால், இடதுபுறம் உள்ளவர்கள் ஏதாவது கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், கொடுத்திருப்போம் என்று சொன்னவர்கள். அது உண்மையான கொடுத்தல் அல்ல. அவர்களுக்குரிய கைம்மாறை அவர்கள் நிச்சயமாகப் பெற்றுக்கொண்டார்கள்.

கடவுள் கொடுத்த இந்த வாழ்வில் மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதே, வாழ்விற்கு நாம் செய்கிற உண்மையான கைம்மாறாகும். வாழ்வு நமக்குக் கொடுத்திருக்கிற அனைத்து கொடைகளுக்கும் நன்றி செலுத்துவோம். அதை நமது வாழ்வை மற்றவருக்காக வாழ்ந்து செலுத்துவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைவனுடைய அரசில் இடம்பெறுகிறவர் யார்?

மத்தேயு 25 வது அதிகாரம், மத்தேயு நற்செய்திக்கே உரிய சிறப்பான பகுதி. தாலந்து உவமையைத்தவிர மற்ற இரண்டு பகுதிகளும் வேறு எந்த நற்செய்தியிலும் இல்லாதவை. இந்த அதிகாரம் முழுவதும் இறுதிக்காலத்தைப்பற்றி அதாவது, இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றிச் சொல்வதாக இருக்கிறது. இயேசுவின் இரண்டாம் வருகையின்போது நாம் இயேசுவை வரவேற்க தகுதியாக்கிக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? என்பதையும் இது கற்றுத்தருகிறது.

மேற்கூறிய பிண்ணனியில், இறைவனுடைய அரசில் இடம்பெறுகிறவர் யார்? என்ற கேள்விக்கு விடையாக வருவதுதான் இன்றைய நற்செய்தி. இறைவனுடைய அரசில் நுழைவதற்கு செல்வமோ, புகழோ, அதிகாரமோ தகுதியாக இருக்க முடியாது. மாறாக, தேவையில் இருக்கிறவர்களுக்கு உதவுவதுதான் கடவுளின் அரசில் நுழைவதற்கான தகுதியைப்பெற்றுத்தரும். விண்ணரசில் நுழைவதற்கு இயேசு கடினமான செயல்பாடுகளை நம்மிடம் எதிர்பார்;க்கவில்லை. பெரிய சாதனை செய்திருக்க வேண்டும் என்றோ, இறையியல் கோட்பாடுகளைக் கரைத்துக்குடித்திருக்க வேண்டும் என்றோ, இருப்பதை எல்லாம் விட்டுவிட்டு தரித்திரமாக வாழ வேண்டும் என்பதோ இயேசுவின் எண்ணமல்ல. இயேசு எதிர்பார்ப்பது அனைவராலும் செய்யக்கூடிய ஒன்று, அனைவரும் செய்ய முடிகின்ற ஒன்று. பசித்திருக்கிறவருக்கு உணவு கொடுப்பதோ, தாகமாய் இருக்கிறவர்களுக்கு தண்ணீர் கொடுப்பதோ, நோயுற்றவர்ளுக்கு ஆறுதல் சொல்வதோ கடினமானவை அல்ல. எளிய செயல்கள் தான். அப்படிப்பட்ட எளிய செயல்பாடுகளில் நாம் அக்கறையோடு இருப்பது, நம்முடைய வாழ்வையே மாற்றுவதாக இருக்கும் என்பதுதான் இயேசுவின் எதிர்பார்ப்பு. மலைமீது ஏறுகிறவர் பெரிய பாறாங்கற்கள் தடுக்கிக்கீழே விழுவதில்லை, சிறிய கூழாங்கற்கள்தான் கீழே விழ காரணமாகிவிடுகிறது. இந்த சிந்தனையை சற்று எதிர்மறையாக சிந்தித்தால், இறைவனுடைய அரசில் நுழைவதற்கு நாம் பெரிய காரியங்கள்தான் செய்ய வேண்டும் என்பதில்லை, நாம் செய்கின்ற சிறிய காரியங்கள்தான் நம்மை உயர்ந்த இடத்திற்கு அழைத்துச்செல்லும்.

எளிய இரக்கத்தை வெளிப்படுத்தும் செயல்கள் விண்ணரசிற்கு செல்லும் ஏணிப்படிகள். நாம் செய்கின்ற இரக்கச்செயல்கள் அனைத்தும் நம்மை விண்ணரசில் உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்பவை. எளிமையானவர்களாக, இரக்கமுள்ளவர்களாக, தேவையில் இருக்கிறவர்களுக்கு உதவுகிறவர்களாக வாழும் வரம் வேண்டி இறைவனிடம் மன்றாடுவோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

============================

இயேசுவே உண்மையான வழி

இன்றைய நற்செய்திதான் கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாக இருக்கிறது. இயேசுவால் மட்டும்தான் கடவுளை நமக்கு காட்ட முடியும், இயேசு வழியாக மட்டும்தான் நாம் கடவுளை காணமுடியும் என்பதுதான் அந்த நம்பிக்கை. யோவான் நற்செய்தியாளர் இதனை வேறு வார்த்தைகளில் கூறுகிறார். ”என்னைக்காண்பது தந்தையைக்காண்பது ஆகும்” (யோவான் 14: 9).

இயேசுவின் வார்த்தைகள் நமக்கு சொல்கின்ற செய்தி இதுதான்: நாம் கடவுளைப்பார்க்க வேண்டுமென்றால், கடவுளின் மனநிலையை அறிய வேண்டுமென்றால், கடவுளின் இதயத்தைப்புரிந்து கொள்ள வேண்டுமென்றால், கடவுளின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், இயேசுவோடு நெருங்கி வர வேண்டும். இயேசுவை உற்றுநோக்க வேண்டும். இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போது கடவுளை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். அவருடைய அன்பில் நாம் நிலைத்திருக்க முடியும்.

கடவுளின் அன்பை மக்களுக்கு எடுத்துரைப்பதுதான் இயேசுவின் போதனையாக இருந்தது. கடவுளை யாரென்று அறியாதவர்களுக்கு, கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்தியதுதான் இயேசுவின் வார்த்தைகள். நமது வாழ்வில் கடவுளை எனது வாழ்வு மூலம் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் அருள் வேண்டி இறைவனிடம் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இல்லாதவர்களுக்கு நமது பங்களிப்பு

இயேசு போதித்த உவமைகளில், இன்றைய உவமை தான் நீண்ட விளக்கத்துடன் போதிக்கப்பட்ட ஓர் உவமை. நமது இறுதிக்காலம் பற்றி வாசகம் நமக்குத்தரப்பட்டிருக்கிறது. வாசகத்தின் மையக்கருத்து, மனித தேவைகளுக்கு நாம் எப்படி பங்களிக்கிறோம்? என்கிற கேள்விதான்.

இயேசு நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது பெரிய, பெரிய காரியங்களை அல்ல. நாம் செய்யக்கூடிய, செய்ய முடிகின்ற சாதாரண காரியங்கள் தான். இன்றைய உவமையில் இயேசுவின் வலதுபக்கத்தில் இருக்கிறவர்களுக்கு, உண்மையில் தாங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறோம் என்பதும் தெரியவில்லை, தாங்கள் செய்த சிறிய காரியங்கள் இவ்வளவு மகத்துவம் மிக்கவை என்பதும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், அதைத்தான் கடவுள் பாராட்டுகிறார். இந்த நற்செய்தியைக்கேட்டு மனம்மாற்றம் அடைந்தவர்கள் இரண்டு பெரிய புனிதர்கள். புனித பிரான்சிஸ் அசிசி மற்றும் புனித மார்ட்டின். இரண்டுபேருமே செல்வந்தர்களாக, அதிகாரம் மிகுந்தவர்களாக இருந்தபோதிலும், இயேசுவின் வார்த்தை அவர்களைத்தொட்டு அவர்களின் வாழ்வை மாற்றியது.

கடவுள் நாம் செய்ய முடியாததை நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதில்லை. நாம் செய்ய முடிகின்றவற்றை மட்டும்தான் எதிர்பார்க்கிறார். அப்படி செய்யக்கூடியவைகளிலும், சிறிய எதிர்பார்ப்புதான், கடவுளுடைய எதிர்பார்ப்பு. அவற்றைக்கூட செய்ய முடியாத தருணத்தில், நமது அழிவுக்கு நாமேதான் பொறுப்பு.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

 

அன்புச் செயல்களே உரைகல் !

நமக்கு நன்கு அறிமுகமான இறுதிக் கால உவமை.

இயேசுவின் உவமைகளிலே வலிமையான உவமைகளில் இதுவும் ஒன்று. தெளிவான போதனைகொண்ட உவமையும்கூட.

இறுதிக் காலத்தில் நம்மைத் தீர்ப்பிடப் போவது நமது அன்புச் செயல்களே. நமது விசுவாசத்தைவிட, நமது எதிர்நோக்கைவிட அன்பே மேலானது. பவுலடியார் அன்பைப் பற்றிப் புகழ்ந்துரைத்த அந்தப் பாடலில், "இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருந்தாலும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம் பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும், என்னிடம் அன்பு இல்லையேல், நான் ஒன்றுமில்லை" (1 கொரி 13: 2) என்று அன்பின் சிறப்பைச் சொல்கிறார்.

அதன் இறுதிப் பகுதியில் "நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது" (1 கொரி 13: 13) என்று முத்தாய்ப்பு வைக்கிறார்.

இயேசுவின் இந்த உவமை இதைத்தான் உவமை வடிவில் பேசுகிறது. அன்புச் செயல்களே நம் வாழ்வின், நம் விசுவாசத்தின், நம் ஆன்மீகத்தின் உரைகல். வேறு எதுவும் இல்லை.

நமது இறை நம்பிக்கை, வழிபாடு, செபங்கள், எதுவுமே அன்பு இல்லையென்றால், பயனற்றுப் போய்விடுகின்றன. எனவே, அன்பால் நிறைவோமாக. அன்பை செயலில் காட்டுவோமாக.

மன்றாடுவோம்: அன்பின் நிறைவான இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது தூய ஆவியினால் எங்களை நிரப்பியருளும். உமது பேரன்பால் எங்களை நிறைத்தருளும். இதனால், நாங்கள் எங்கள் வாழ்வை அன்பால் அணி செய்வோமாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா
--------------------------------------------------

இணையதள உறவுகளே

தீர்ப்பு எல்லோருக்கும் ஒரே அடிப்படையில் அமைவது முறை. அவ்வாறுதான் இங்கு அமைந்துள்ளது. தீர்ப்பைக் கேட்ட வலப்பக்கம் உள்ளோர், அதை கேட்டு, ஓ அப்படியா என்று அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆட்சிக்குள் நுழைந்தார்கள். இடப்பக்கம் உள்ளேர், தீர்ப்பைக் கேட்டதும் வழக்கமான சந்தேகத்துடன் இன்னும் சில சந்தேகங்களை எழுப்பத் தொடங்கினர்.

ஆண்டவரே, சில சமயங்களில் இதை கேட்டிருக்கிறோம். ஆனால் சரியா புரியல. நாங்க யாருக்கும் அநியாயம் செய்யல. கஷ்டபடுகிற ஆட்களை பார்த்திருக்கிறோம். அது நீங்கதான்னு யாரும் விவரமாக சொல்லல. எங்க பங்கு சாமியாராவது பிரசங்கத்தில சொல்லியிருக்கலாம். அவரு தன் சொந்த கதையும் சோகக்கதையும்தான் பிரசங்கத்தில சொல்வதை கேட்டிருக்கிறோம். அல்லது ஏதாவது தவளை கதையோ குருவி கதையோ சொல்லுவார்.கட்டடம் கட்டுகிறேன். நன்கொடை தாருங்கள் என்று கேட்பார். அதுக்கெல்லாம் நிறையவே கொடுத்திருக்கிறோம். உங்களை மாதிரி விவரமா விளக்கமா சொல்லியிருந்தால் அந்த மாதிரி ஆட்களை விழுந்து விழுந்து கவனித்திருப்போமே!

இயேசுவின் தீர்ப்பு திருத்தப்படுவதில்லை. வாதங்கள் எடுபடுவதில்லை. வருத்தப்பட்ட பயன் இல்லை. வாழும் காலத்தில் நல்லது செய்வோம். நிலை வாழ்வைப் பெறுவோம்.

-ஜோசப் லீயோன்

-------------------------

 

''நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவுகொடுத்தீர்கள்;
தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்'' (மத்தேயு 25:35)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு நற்செய்தியின் இறுதிப் பகுதியில் ''மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு'' என்னும் பிரிவு உள்ளது (மத் 25:31-46). இயேசு வழங்கிய அன்புக் கட்டளையை வாழ்வில் கடைப்பிடிக்கும்போது இறையன்பும் பிறரன்பும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை இப்பகுதி காட்டுகின்றது. ஒவ்வொரு மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்பதை ''நல்ல சமாரியர்'' உவமை வழியாக எடுத்துரைத்த இயேசு (காண்க: லூக் 10:25-37), இங்கே நாம் பிறர் மட்டில் காட்டுகின்ற அன்பு கடவுளுக்கு நாம் காட்டுகின்ற அன்பின் மறுவடிவமே என்று எடுத்துரைக்கிறார். உலகத்தில் பசியாலும் தாகத்தாலும் வாடுகின்ற மனிதர் பலருண்டு; அன்னியராக நடத்தப்படுவோர் உண்டு; இருக்க இடமும் உடுக்க ஆடையும் இல்லாதோர் உண்டு; நோயினால் வாடுவோர் உண்டு; சிறைப்பட்டுத் துன்புறுவோர் உண்டு. இவர்களைப் பார்க்கும்போது இயேசுவே இவ்வாறு பசி பிணி நோய் போன்ற துன்பங்களை அனுபவிக்கிறார் என உணரவும், மனிதருக்குச் செய்வதையே அவருக்கே செய்கிறோம் என அறியவும் இயேசு நம்மை அழைக்கிறார்.

-- இங்கே ஒரு முரண்பாடு எழுவதுபோல் தெரிகிறது. அதாவது, இயேசு சாவை வென்று நம் ஆண்டவராக ஏற்கெனவே மகிமைப்படுத்தப்பட்டுள்ளார். அதே நேரத்தில் இயேசு இவ்வுலகில் மனிதராக நம்மிடையே நடமாடுகிறார். குறிப்பாக, ஏழை எளியவர்கள், ஒடுக்கப்பட்டோர் போன்ற ''மிகச்சிறியோர்'' (மத் 25:40,25) வடிவத்தில் அவர் நம்மிடையே உள்ளார். இந்த உண்மையைத் தூய பவுல் ''நாம் கிறிஸ்துவின் உடல்'' என விளக்குவார் (காண்க: உரோ 12:4). மனித குலம் முழுவதும் மனிதராக நம்மிடையே வந்த கிறிஸ்துவில் ஒன்றித்திருப்பதால் நாம் ஒருவர் ஒருவருக்குச் செய்வதை (நன்மையோ தீமையோ) கிறிஸ்துவுக்கே செய்கிறோம் எனலாம். ஆக, நம்மிடையே சகோதர அன்பு விளங்கும்போது அங்கே இறையன்பும் துலங்குகிறது; அதற்கு மாறாக, சகோதர அன்பு குறைபடுகின்ற வேளையில் இறையன்பும் குறைபடுகிறது. நேர்மையாளராக நாம் வாழ்ந்து ''நிலைவாழ்வு'' அடைவதும், தீயோராக நடந்து ''தண்டனை'' பெறுவதும் நாம் பிறரில் கடவுளைக் கண்டு அவர்களை அன்போடு நடத்தினோமா இல்லையா என்பதன் அடிப்படையில் அமையும்.

மன்றாட்டு
இறைவா, ஏழைகளில் உம்மைக் கண்டு அன்புசெய்ய அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

" தண்டனை.. .. .. ..நிலை வாழ்வு"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம் வாழ்வு ஒரு தண்டனையாக மாறுவதும் ரம்மியமான நிலை வாழ்வாக மாறுவதும் உங்கள் கையில் உள்ளது. இந்த உலகில் வாழும்போதும் இனிய இதய மகிழ்ச்சி நிறைந்த வாழ்வாக அதை மாற்றுவதும், வேதனையும் விரக்தியும் நிறைந்த நரக வாழ்வாக மாற்றுவதும் உங்களிடமே உள்ளது.

தனக்காக வாழும் எவரும் தங்கள் வாழ்வை ஒரு தண்டமாக, தண்டனையாக மாற்றிவிடுகின்றனர். பிறருக்காக வாழும் அனைவரும் தங்கள் வாழ்வை எல்லாம் பெற்ற நிறை வாழ்வாக அமைத்துவிடுகின்றனர். இன்னும் சிறப்பாக, சமுதாயத்தின் சின்னஞ்சிறியோர்க்காக நாம் வாழும்போது, அந்த நிறைவான வாழ்வின் உச்சத்திற்கே சென்றுவிடுகிறேரம்.

"நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்"

இத்தகைய சின்னஞ்சிறார்களுக்காக நீங்கள் செய்யும் ஒவ்வொரு இழப்பும் தியாகமும் உங்களுக்கு ஒரு முதலீடு. உங்கள் நிறை வாழ்வின் மூலதனம்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

:-- ஜோலி --: