பொது நிலையினருக்கான
இறையியல் கல்வி

திருநிலைகள் (குருத்துவம்) அருளடையாளம்

அருட்பணி. தே. அல்போன்சு

as

சமயங்களின் வலிவும் நலிவும் அவற்றின் அருள்பணியாளர்களைப் பொறுத்தே பெரிதும் அமைகின்றன. கத்தோலிக்கத் திருச்சபைக்கு இது மிக அதிகம் பொருந்தும். ஏனெனில் அதில் அருள்பணியாளர்களின் பங்கும் பணியும் மிகப் பெரியவை. பாலஸ்தீன மண்ணிலே கல்வியோ செல்வமோ படைபலமோ எதுவும் இன்றி ஏழை மக்களின் எழுச்சியாக இயேசு தொடங்கிய கிறிஸ்துவ இயக்கம் இன்று இவ்வுலகின் கடைஎல்லைவரை பரவி ஒரு மாபெரும் சமயமாக வளர்ந்திருக்கிறது என்றால் அதற்கு முக்கிய ஒரு காரணம் அவருடைய திருத்தூதர்கள் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து அவரது இலட்சியத்திற்காகத் தங்களையே அர்ப்பணித்துள்ள அருள்பணியாளர்களே.

மேலும் கிறிஸ்துவ சமயத்தின், அதிலும் குறிப்பாக கத்தோலிக்கத் திருச்சபையின், அமைப்பும் பணிகளும் அண்மைக் காலம் வரை மக்களை அல்ல, மாறாக அருள்பணியாளர்களையே பெரிதும் மையப்படுத்தி ஆக்கம் பெற்றுள்ளன. மக்களே திருச்சபை' எனும் முழக்கம் இன்று மேலோங்கி ஒலிப்பது உம்மைதான். எனினும் அதில் அதிகாரம், பணம், படிப்பு, பயிற்சிகள் என்பன இன்னும் பெரிதும் அருள்பணியாளர்களுக்கு மட்டுமே உரியவையாக உள்ளன. எனவே திருப்பணிகளின் சீரமைப்பும் அருள்பணியாளர்களது சிறப்பான செயல்பாடும் இன்றி திருச்சபைக்கு வலுவோ வளர்ச்சியோ இல்லை எனலாம். அத்தகைய சீரமைப்புக்கும் சிறப்பான செயல்பாட்டிற்கும் அருள்பணியாளர் நிலை பற்றிய சரியான புரிதல் இன்றியமையாதது. எனவே தொடர்ந்து பழைய, புதிய ஏற்பாடுகளில் நாம் காணும் குருத்துவமும் ஏனைய திருப்பணிகளும் யாவை, திருச்சபையின் வரலாற்றில் திருநிலைகள் எவ்வாறு அரும்பிவளர்ந்தன, அருள்பணியாளர்களின் அழைப்பும் அலுவலும் இரண்டாம் வத்திக்கான் சங்கத்திலும் தொடர்ந்து இன்றும் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றன எனச் சுருக்கமாகக் காண்போம்.

1. பழைய ஏற்பாட்டில் திருப்பணிகள்

யூத இன வரலாற்றின் தொடக்க காலத்தில் குரு என எவரும் தனியாகப் பணிசெய்யவில்லை. வீட்டிலோ வழிபாட்டுத் தலத்திலோ குடும்பம் ஒன்றுகூடி வந்து இறைவனை வேண்டியபோதும் பலிகளைச் செலுத்தியபோதும் அக்குடும்பத்தின் தலைவராகிய தந்தையே குருவாகவும் செயல்பட்டார். இதையே நாம் ஆபிராகம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் வாழ்க்கையில் காண்கிறோம்.

இஸ்ரயேல் மக்கள் எண்ணிக்கையில் அதிகரித்து ஒரு பெரும் குலம் அல்லது தேசிய இனமாக வளர்ந்தபோதும் குடும்ப வழிபாட்டு நிகழ்ச்சிகளில் குடும்பத்தின் தந்தையே குருவாகச் செயல்பட்டார். ஆனால் குலம் அல்லது இனம் முழுவதும் பங்கெடுத்த வழிபாட்டு நிகழ்ச்சிகளில் குருவாக நின்று பலிகளையும் வேண்டுதல்களையும் செலுத்தியது குலத் தலைவர்கள்தாம். மோசே தொடங்கி நீதித் தலைவர்கள் வரை இதற்கு நாம் பல சான்றுகளைப் பார்க்கிறோம். (விப 24:4-8; 40:29; லேவி 8:14-17). நீதித் தலைவர்களுள் இறுதியானவரான சாமுவேலும் இறைவாக்கினராக மட்டும் அல்ல, பலிகளைச் செலுத்தும் குருவாகவும் செயல்பட்டார் (1 சாமு 7:9).

சாமுவேலுக்குப் பின் இஸ்ரயேல் மக்களை ஆண்ட முதல் இரு அரசர்களான சவுல், தாவீது என்போரும் குருக்களாகச் செயல்பட்டு பலி ஒப்புக்கொடுத்தனர் (1 சாமு 13:9; 2 சாமு 6:13, 17 - 18). அதுபோலவே தாவீதுக்குப் பின் அரசன் ஆன அவர் மகன் சாலமோனும் மக்கள் முன் குருவாக நின்று அவர்களுக்காக இறைவனை வேண்டிப் பலிகளும் ஒப்புக்கொடுத்தார் (1 அர 8:11 - 64).

அரசர்கள் காலம் தொடங்கி

சாலமோன் அரசர் காலத்தில்தான் எருசலேமில் கோயில் கட்டப்பட்டு உடன்படிக்கையின் பேழை அங்கு வைக்கப்பட்டது. கோயிலில் வழிபாடுகள், பலிகள் நிகழ்த்தவும் அதனைப் பராமரிக்கவும் முழுநேரப் பணியாளர்களாக குருக்கள் அதிக எண்ணிக்கையில் ஏற்படுத்தப்பட்டனர். அரசரின் ஆட்சிப் பொறுப்பு அதிகரித்ததால் மிகப்பெரும் திருநாள்களில் அவரே பலி செலுத்தும் வழக்கம் படிப்படியாக மறைந்து அத்தகைய நாட்களில் தலைமைக் குருவும் சாதாரண நாள்களில் ஏனைய குருக்களும் பலி செலுத்தும் நடைமுறை வழக்கத்திற்கு வந்தது. லேவி குலத்தைச் சார்ந்த ஆரோன் குடும்பத்தின் வழிதோன்றல்கள் மட்டுமே குருக்கள் ஆகும் உரிமை பெற்றிருந்தனர்; லேவி குலத்தைச் சார்ந்த வேறு குடும்பத்தினருக்கு கோயிலின் ஏனைய திருப்பணிகளை ஆற்றும் பொறுப்பு தரப்பட்டது. -

அரசர்கள் காலத்தில் குருக்கள். ஆற்றிய பணிகள் பல. கடவுளுக்கு மக்கள் கொண்டுவரும் காணிக்கைகளை ஏற்பது, பலிகளை ஒப்புக்கொடுப்பது, சீட்டுப்போட்டு அல்லது வேறுவகையில் இறைவனின் திருவுளத்தைக் கண்டுணர்ந்து எடுத்துரைப்பது, மேசேயின் திருச்சட்ட நூலை மக்களுக்குக் கற்பித்து விளக்கம் தருவது, கோயிலைப் பராமரிப்பது, கோயில் செல்வங்களைப் பாதுகாப்பது என்பன அவற்றுள் முக்கியமானவை. EL

. அரசர்கள் காலத்தில் குருக்கள் பெரிதும் அவர்களின் ஆதரவாளர்களாகவே செயல்பட்டனர். அரசர்களின் ஆதிக்கங்களும் அநீதிகளும் மலிந்துவிட்டபோதுகூட கடவுளின் சட்டத்தின் பெயரால் அவற்றிற்கு எதிராக அவர்கள் துணிந்து குரல் எழுப்பத் தவறி அவற்றிற்குத் துணைபோன அல்லது அவற்றிற்கு முன் மௌனம் காத்த காலங்களே அதிகம். அந்நிலையில்தான் அப்பணியை ஆற்ற கடவுள் பல இறைவாக்கினர்களை எழுப்பினர். இறைவனின் வார்த்தையை எடுத்துரைத்து அன்றைய சமூக அநீதிகளை எதிர்த்து அரசனும் குடிமக்களும் கடைபிடிக்கவேண்டிய நீதிநெறியை நிலைநிறுத்தும் பணியைக் குருக்கள் ஆற்றத் தவறிய போது அப்பணியை துணிந்து செய்தவர்கள் இறைவாக்கினர்களே..

நாடுகடத்தலுக்குப் பின்

கி.மு. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் பாபிலோனில் நாடு கடத்தப்பட்டிருந்த யூதர்கள் திரும்பிவந்த பின்பு இடிபட்டுக்கிடந்த கோயில் செப்பனிட்டுச் சீரமைக்கப்பட்டபோது அங்கு குருக்கள் மீண்டும் திருச்சட்ட முறைமைப்படி வழிபாடுகளும் பலிகளும் நடத்தத் தொடங்கினர். பாபிலோனிய நாடுகடத்தலின்போது அங்கு தோன்றத் தொடங்கிய செபக்கூட்டங்கள் இக்காலக்கட்டத்தில் பாலஸ்தீனத்தின் பல்வேறு ஊர்களிலும் பரவலாயின. அவற்றில் செபவழிபாடு நடத்துவது, திருச்சட்டத்தைப் படித்து விளக்கி உரைப்பது, அச்சட்டத்தின் அடிப்படையில் மக்களின் வழக்குகளைத் தீர்த்து வைப்பது எனும் பணிகளை ஆற்றியவர்கள் குருக்கள் அல்ல, மறைநூல் அறிஞர்களே. மேலும் அத்தகைய ஊர்களில் யூத சமூகத்தின் தலைவர்களாகவும் செபக்கூடத்தின் பொறுப்பாளர்களாகவும் மூப்பர்கள் குழுவாகச் செயல்பட்டனர்.

யூதக் குருத்துவம் என்பது பெரிதும் கோயில் குருத்துவமாகவும் குலவழிக் குருத்துவமாகவும் ஆணாதிக்கக் குருத்துவமாகவும் குறுகியே நின்றது. ஏனெனில் தலைமைக் குரு, முக்கிய குருக்கள் என்போரைத் தவிர ஏனைய குருக்களுடைய பணிகள் கோயிலையும் வழிபாட்டையும் மட்டுமே சார்ந்தவை. மேலும் ஆரோனது வம்சவழியில் வந்தவர்கள், அதிலும் ஆண்கள் மட்டுமே குருக்கள் ஆக முடியும் எனும் நிலையே அன்று இருந்தது. இவ்வாறு யூதக் குருக்கள் ஒரே குலத்தவராகவும் ஆண்பாலினராகவும் மட்டும் இருந்தாலும் அவர்கள் கோயிலில் வழிபாடும் செபங்களும் பலிகளும் செலுத்தியது யூத மக்கள் அனைவரது பெயராலேயே எனும் தெளிவான புரிதலும் இருந்தது. ஏனெனில் கோயில் குருக்களாக அவர்கள் மட்டுமே செயல்பட்டாலும் யூத இனத்தார் அனைவரும் இறைவனின் குருக்களே எனும் உறுதிப்பாடு பழைய ஏற்பாட்டில் உள்ளது. எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும் தூய மக்களினமாகவும் இருப்பீர்கள்” (விப 19 : 6) என இறைவனே அவர்களுக்குக் கூறியிருந்தார். வீடுகளில் நடந்த சமய நிகழ்வுகளில், குறிப்பாகப் பாஸ்கா விருந்தில், தலைமை ஏற்று நடத்திய குடும்பத் தந்தையர்கள் இல்ல வழிபாட்டுக் குருக்களாகவும் செயல்பட்டது இதை உறுதிப்படுத்துகிறது.

2. புதிய ஏற்பாட்டில் திருப்பணிகள் -

இயேசுவின் - குருத்துவத்தை நாம் யூதக் குருத்துவத்தின் இயல்பான தொடர்ச்சியாகவோ வளர்ச்சியாகவோ கருத இயலாது. ஏனெனில் யூத சமயத்தில் இயேசு ஒரு பொதுநிலையினரே அன்றி குரு அல்ல. மேலும் அன்றைய யூத சமயக் குருக்களையோ அவர்களுடைய பணிகளையோ பற்றி இயேசு அதிக. உயர்வான எண்ணம் கொண்டிருந்தவராகத் தெரியவில்லை. அவர்களை அவர் கடுமையாக விமர்சித்தார், எதிர்த்தார் என்பதற்கு நற்செய்தி நூல்களில் சான்றுகள் பல உள்ளன. நல்ல சமாரியன் உவமையில் கள்வர்களால் குற்றுயிராய் விடப்பட்ட வழிப்போக்கனுக்கு உதவிச்செய்யும் அளவுக்குக்கூட மனிதநேயம் அற்றவராக இயேசு சித்தரிப்பது ஒரு யூதத் குருவையும் லேவியரையும்தான் (லூக் 10:25-35). தீண்டத்தகாதவனாகக் கருதப்பட்ட சமாரியனை அவர்களைவிட உயர்ந்தவனாக. அவர் காட்டுவது நாம் கவனிக்கத் தக்கது. மேலும், அன்றைய யூத சமூகத்தில் இயேசுவை மிகத் தீவிரமாக எதிர்த்தவர்களும் அவரது கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களும் அன்றைய யூத சமயத் தலைவர்களான தலைமைக் குருவும் முக்கிய குருக்களுமே என்பது நாம் கருத்தில் கொண்டிருக்க வேண்டிய மெய்மை.

இயேசுவே நிலையான, நிறைவான தலைமைக் குரு

எபிரேயருக்கு எழுதப்பெற்ற திருமுகம் இயேசுவை பழைய ஏற்பாட்டுத் தலைமைக் குருவுடன் ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டி அவரையே நிலையான, நிறைவான தலைமைக் குரு எனக் கருதுகிறது. அவரே தனிப்பெரும் தலைமைக் குரு (எபி 4 :14).

யூதத் தலைமைக் குருவைப் போலவே இயேசுவும் ஒரு மனிதர்; ஏனைய மனிதர்களைப்போல எல்லா வகையிலும் சோதிக்கப்பட்டவர்; இதனால் அவர் நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல" (எபி 4:15). எனினும் ஏனைய மனிதர்களையும் யூதத் தலைமைக் குருவையும் போல் அன்றி அவர் பாவம் செய்யாதவர்” (எபி 4:16). யூதத் தலைமைக் குருவைப்போல் இயேசு தம்மையே குருவாக உயர்த்திக் கொள்ளவில்லை; மாறாக, அவர் இறைத்தந்தையால் தேர்ந்தெடுக்கப்பட்டு பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாக கடவுள்முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்” (எபி 5:1). யூதத் தலைமைக் குரு ஒரு சில ஆண்டுகளே பணிபுரிபவர். ஆனால், இறைமகனாகிய இயேசுவோ தந்தை, தாய், தலைமுறை வரலாறு அறியப்படாததால் தொடக்கமும் முடிவும் அற்றவராகத் தோன்றும் மெல்கிசதேக்கிற்கு ஒப்பாக என்றென்றும் குருவாக நிலைத்திருப்பவர் (எபி 5:6; 1:1-3) "அந்த (யூதத்) குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாக இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை .... இவரோ என்றென்றும் நிலைத்திருப்பதால் மாறாத குருத்துவப் பணியைப் பெற்றுள்ளார்” (எபி 7:23-24). யூதத் தலைமைக் குருக்கள் பாவம் செய்தவர்கள். எனவே அவர்கள் மக்களுடைய பாவங்களுக்காக மட்டும் அல்ல, தங்களுடைய பாவங்களுக்காகவும் மீண்டும் மீண்டும் பலிசெய்ய வேண்டியவர்கள். மேலும் பாவக்கறை படிந்த அவர்கள் தூயவரான கடவுளுக்கு உகந்த பலியாகத் தம்மையே தர இயலாது. ஆனால் இயேசுவோ தூயவர், கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரிந்தெடுக்கப்பட்டு வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர்” (எபி 7:26). எனவே அவர் "நாள்தோறும் பலிசெலுத்தத் தேவையில்லை . ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒரு முறைக்குள் செய்து முடித்தார்” (எபி 7:27).

இயேசு நிறைவேற்றிய இந்த நிலையான, நிறைவான பலியானது கோயில் சடங்கு ஆசார முறைப்படி நடந்த அடையாளப் பலி அல்ல. மாறாக "உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன் (எபி 10:9) என இறைத்தந்தைக்க அவர் தம்மையே அர்ப்பணித்த வாழ்க்கைப் பலி. அந்த வாழ்க்கைப் பலியை அவர் மனிதரால் கட்டப்பட்ட கோயிலில் உள்ள தூயகத்தில் நிகழ்த்தவில்லை. மாறாக, இறைவன் படைத்த இவ்வுலகம் எனும் கோயிலில் மக்கள் சமூகம் எனும் பீடத்தில் அவர் அதை என்றும் மனிதருடன் வாழும் கடவுளின் திருமுன்னியில் நிறைவேற்றினார் (எபி 10:23-28).

இறைஆட்சிக்கான அர்ப்பணமே குருத்துவம்

இயேசுவின் குருத்துவப் பணி புதிய ஒரு சமய கோயில் வழிபாட்டு முறையையோ, நிறுவனத்தையோ சார்ந்தது அல்ல. அவர் ஆற்றிய பணிகள் அனைத்தின் ஊற்றும் உயர் நோக்கமுமாக இருந்தது இறைஆட்சி ஒன்றே. மக்களுக்கு நிறைவாழ்வு தரும் ஆற்றல் உள்ளதாக இறைவனின் அன்பு இந்த மண்ணுலகிலும் மனித வரலாற்றிலும் செயல்படுவதே இறைஆட்சி. எனவேதான் இயேசு அன்றைய யூத சமய அமைப்பு சார்ந்த கோயில் குருக்களுள் ஒருவராகச் செயல்படவில்லை. மாறாக மனிதரை எல்லா சகோதரர்களாக ஒருங்கிணைத்து வாழவைக்கும் அன்பு சக்தியாக அப்பா கடவுள் அவர்களோடு இருக்கிறார் எனும் இறைஆட்சியின் நற்செய்தியை அவர்களுக்குப் போதித்தார்; இறைவனின் பிள்ளைகளாகவும் ஒருவருக்கு ஒருவர் சகோதரர்களாகவும் வாழ்பவதற்கு உரிய புதிய அறநெறியை அவர்களுக்குத் தந்தார். சமபந்திகள், அவற்றின் உச்சமான இறுதி இரவு விருந்து என்பவற்றின் வழியாக சகோதரத்துவ உறவுகளில் பரிமளிக்கும் இறைவனின் அன்பையும் அருளையும் கொண்டாடினர்.

இவ்வாறு இயேசுவின் பணி என்பது இறைஆட்சியை மக்களின் வாழ்வாகவும் மானிட வரலாறாகவும் ஆக்குவதே. அப்பணிக்கென அவர் தம்மை அர்ப்பணம் செய்ததே அவரது குருத்துவம். எனவே இயேசுவின் குருத்துவம் என்பது விண்ணில் எட்ட முடியாத தொலைவில் இருக்கும் கடவுளின் மறுஆளாகவும் பிரதிநிதியாகவும் மண்ணில் மனிதர் செயல்படுவது அல்ல, மாறாக மக்கள் உடனிருக்கும் கடவுளை அவர்களுக்கு உறவாக்குவது; அருகிலிருக்கும் தெய்வத்தை அவர்கள் அறிந்துகொள்ளச் செய்வது; அவருடைய அருளடையாளமாகத் திகழ்வது.

தொடக்கத் திருச்சபையில் திருப்பணிகள்

இறைஆட்சியை இவ்வுலகிலே கொணரத் தங்களையே முழுமையான அர்ப்பணிக்கும் இயேசுவின் சீடர் எல்லாருமே அவரது ஒரே நிலையான, நிறைவான குருத்துவத்தில் பங்குபெறுகின்றனர். இயேசுவின் நிலையான, நிறைவான அர்ப்பணக் குருத்துவத்தில் அவருடைய சீடர்கள் அனைவரும் பங்குபெறும் ஒரு திருநிலைப்பாட்டுக் கொண்டாட்டமாகவே தொடக்கத் திருச்சபையில் திருமுழுக்கு - உறுதிபூசுதல் எனும் அருளடையாளங்கள் அமைந்தன. இதனால்தான் புதிய ஏற்பாடு கிறிஸ்துவர்கள் அனைவரும் குருக்கள் எனும் உண்மையை அழுத்திச் சொல்லத் தயங்கவில்லை. நீங்களும் ..... கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக... நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர்" (1 பேது 2:9); "நாம் கடவுளுக்கும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினர்" (திவெ 1:6; 5:10; 20:6). திருச்சபையின் உறுப்பினர்கள் எல்லாரும் குருக்களே எனும் புரிதல் காரணமாகத்தான் தொடக்கத் திருச்சபையில் இன்று உள்ளதுபோல் குருக்கள் எனத் தனியாகச் சிலர் செயல்படவில்லை .

கிறிஸ்தவர்கள் அனைவரும் குருக்களே எனும் புரிதல் தொடக்கத் திருச்சபையில் இருந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே வகையில் அன்று செயல்படவில்லை. அவர்களுக்குத் தூய ஆவி அருளியிருந்த பல்வேறு அருங்கொடைகள், திறமைகளுக்கு ஏற்ப அவர்கள் இயேசுவின் இறைஆட்சிக் குருத்துவப் பணியை வெவ்வேறு வகைகளில் செயல்படுத்தினர். அன்றைய சமூகத்தில் உள்ள ஏதாவது ஒரு உலகிய தொழிலில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர்; சமயப் பணிகளிலும் பங்கெடுத்தனர். ஆனால் அவர்களுள் சிலரோ சபை சார்ந்த திருப்பணிகளிலேயே அதிகமாக ஈடுப்பட்டிருந்தனர். இவ்வாறு சபைசார்ந்த பணிகளில் அதிகமாக ஈடுபட்டிருந்தோரை நாம் இரு வகையினராகப் பிரித்து நோக்கலாம். நியமனத் திருப்பணியாளர்கள், தன்னார்வத் திருப்பணியாளர்கள் என்பனவே அப்பிரிவுகள்.

இயேசு நியமித்த திருப்பணியாளர்கள்

நியமனத் திருப்பணியாளர்களுள் முதலும் முக்கியமும் ஆனோர் பன்னிரு திருத்தூதர்கள். இவர்களே இயேசுவின் முதல் சீடர்கள். அவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள், முழுநேரப் பணியாளர்களாக அவருடைய பணிப் பயணங்களில் அவருடன் சென்று நற்செய்தியை அறிவித்தவர்கள் (லூக் 8:1), அவர்களே அவரது உயிர்ப்பிற்கு முக்கிய சாட்சிகள் (திப் 1:20). "தம்மோடு இருக்கவும் நற்செய்தியைப் பறைசாற்ற அனுப்பப்படவும் பேய்களை ஓட்ட அதிகாரம் கொண்டிருக்கவும் அவர் பன்னிருவரை நியமித்தார்” (மாற் 3:14-15) என அவர்களுடைய பணிகளையும் நியமனத்தையும் மாற்கு சுருக்கமாகச் சொல்கிறார். அனைத்திற்கும் மேலாக அவரது இறப்பிற்கு முந்திய இரவு அவர் தந்த இறுதி விருந்தில் உடனிருந்து, எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" (லூக் 22:19) என நற்கருணையைத் தொடர்ந்து கொண்டாட அவர் இட்ட ஆணையைப் பெற்றவர்களுள் இந்தப் பன்னிருவரையே புதிய ஏற்பாடு குறிப்பிடுகின்றது.

இயேசு திருத்தூதர்களை மட்டும் அல்ல, “வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து அவர்களைத் தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்பே இருவர் இருவராக அனுப்பினார்” (லூக் 10:1). இவர்களுடைய பணிகளும் பன்னிரு திருத்தூதர்களின் பணிகளும் ஒரே வகையானவையாகவே வர்ணிக்கப்படுகின்றன.

திருத்தூதர்கள் ஏற்படுத்திய நியமனப் பணிகள்

இயேசுவின் இறப்பு - உயிர்ப்புக்குப் பின்பு வேறு சில பணியாளர்களைத் திருத்தூதர்கள் நியமிக்கின்றனர். இவர்களுள் முதலில் வருபவர்கள் திருத்தொண்டர்கள். தொடக்கத் திருச்சபையில் கிரேக்க மொழி பேசும் சமதத்தினரின் கைபெண்கள் அன்றாடப் பந்தியில் சரியாகக் கவனிக்கப்படவில்லை எனும் முறைப்பாடு எழுந்தது. இதை அறிந்த திருத்தூதர்கள் "நாங்கள் கடவுளின் வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறையல்ல. ஆதலால்.... நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களான எழுவரைக் கவனமாய் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இறைபணியில் நியமிப்போம்” (திப 6: 2 3) என்றனர். அவ்வாறே மக்கள் தெரிந்தெடுத்த எழுவர்மீது திருத்தூதுர் தங்கள் கைகளை வைத்து இறைவனிடம் வேண்டி அவர்களைத் திருத்தொண்டர்களாக ஏற்படுத்தினர் (திப 6:6). இவ்வாறு கிறிஸ்துவர்களின் எண்ணிக்கையும் திருச்சபையின் தேவைகளும் அதிகரிக்க அச்சூழ்நிலைக்கு ஏற்ப வெவ்வேறு பணிகளுக்கு வெவ்வேறு பணியாளர்கள் எனும் பணிப் பிரிவு உருவானது.

இதே பாணியில் வேறு பணியாளர்களையும் திருத்தூதர்கள் நியமித்தனர். அவர்கள் மூப்பர்கள், மேற்பார்வையாளர்கள் என அழைக்கப்பட்டனர். பவுலும் பர்ணபாவும் பன்னிரு திருத்தூதர்களும் பல்வேறு நகர்களுக்கும் ஊர்களுக்கும் சென்று நற்செய்தியைப் போதித்து அங்கே கிறிஸ்துவ சபைகளை ஏற்படுத்தினர். தாங்கள் அவ்விடங்களைவிட்டுச் சென்றபோது அங்குள்ள சபைகளை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை அச்சபைகளில் உள்ள தகுதிவாய்ந்தவர்கள் சிலரிடம் ஒப்படைத்தனர். யூதத் கிறிஸ்துவ சபைகளில் இவர்கள் மூப்பர் எனவும் பிற இனக் கிறிஸ்துவ சபைகளில் இவர்கள் மேற்பார்வையாளர்கள் எனவும் அழைக்கப்பட்டனர் என ஆய்வாளர் கருதுகின்றனர். தொடக்கத்தில் இவை ஒரே பணிக்கு இடப்பட்ட இருவேறு பெயர்கள்தாம் (திப 20:17,18). ஆனால் சிறிது சிறிதாக மூப்பர் குழுவில் முதல்வராக விளங்கியவரை மேற்பார்வையாளர் என அழைக்கும் முறை வந்ததுபோல் தெரிகிறது. இந்த மேற்பார்வையாளர் பிற்காலத் திருச்சபையில் 'ஆயர்' எனவும் மூப்பர்கள் 'அருள்பணியாளர்கள்' எனவும் (குருக்கள்) ஆகினர். எனினும் முதல் நூற்றாண்டுத் திருச்சபையில் அவர்களுடைய பணிகளுக்கு இடையே அதிக வேறுபாடோ உயர்வு தாழ்வோ இருந்ததாகத் தோன்றவில்லை (1 பேது 5:1-5).

தழைத்திருந்த தன்னார்வத் திருப்பணிகள்

இயேசுவோ திருத்தூதர்களோ அதிகாரப்பூர்வமாக ஏற்படுத்தாத, ஆனால் அவர்கள் ஏற்றுக்கொண்ட வேறு பல பணிகளும் தொடக்கத் திருச்சபையில் தோன்றி வளர்ந்திருந்தன. இவை தூய ஆவியின் ஏவுதலுக்கு ஏற்பத் தனி ஆள்கள் சிலர் தாங்களாகவே முன்வந்து சபையின் வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஆற்றிய தன்னார்வப் பணிகள். விருந்தோம்பல், அன்பிரக்கப் பணிகள் என்பனவற்றை விதவைகள் சிலர் பொறுப்பேற்று நடத்தியது (1 திமோ 5:9-11), செபிக்கும்போது இறைவாக்கு உரைப்பது (திப 21:9; 1 கொரி 11:5), கற்றுக்கொடுப்பது (திப 18:26) என்பன அத்தகைய பணிகளுள் சில. மேலும் இறைவாக்கினர், போதகர்; வல்லசெயல் புரிவோர், பிணி தீர்ப்போர், தலைமையேற்று நடத்துவோர், பரவசப் பேச்சினர், விளக்கம் அளிப்போர் என பல தன்னார்வப் பணியாளர்களைத் தூய பவுல் வரிசைப்படுத்துகின்றார் (1 கொரி 12:8-11, 28-30; உரோ 12:6-8).

இத்தகைய பணிகள் அமைப்பு சார்ந்த நிரந்தரமான பணிகள் அல்ல. மாறாக அவை சபைகளின் தேவைகளுக்கு ஏற்ப தூய ஆவியின் அருங்கொடைகள் காரணமாக ஆங்காங்கே அவ்வப்போது ஆற்றப்பட்ட பணிகள். மேலும் தலைமீது கைவைத்து திருநிலைப்படுத்தும் சடங்கின் வழியாக இப்பணிகளை ஆற்றும் உரிமையும் பொறுப்பும் எவருக்கும் தரப்பட்டன என நாம் எண்ண இடமில்லை.

குருத்துவம் எங்கே?

இத்தனை பணிகள் தொடக்கத் திருச்சபையில் இடம்பெற்றிருந்தும் இன்று நாம் திருநிலைகள் அல்லது குருத்துவம் எனக் குறிப்பிடுவது அன்று தனி ஒரு நிலையாகவோ பணியாகவோ இல்லை என்பது இவண் நாம் கவனிக்கத் தக்கது. இன்று திருநிலைகள் என்பது அருளடையாளங்களை, அதிலும் குறிப்பாக நற்கருணையை, நிறைவேற்றும் பணிகளாகவே பெரிதும் பார்க்கப்படுகின்றன. ஆனால் தொடக்கத் திருச்சபையில் அருளடையாளங்களை நிறைவேற்றுவதற்கெனத் தனியாகப் பணியாளர் எவரும் நியமிக்கப்படவில்லை .

அப்படியெனில், அன்று அருளடையாளங்களை நிறைவேற்றியது யார் எனும் கேள்வி எழுகிறது. அதுபற்றிப் புதிய ஏற்பாடு தெளிவாக எதுவும் கூறவில்லை. எனினும் திருத்தூதர்கள் அவற்றை நிறைவேற்றினர் என்பதற்குப் பல சான்றுகள் புதிய ஏற்பாட்டில் உள்ளன. அவர்கள் இல்லாத இடங்களில் அல்லது நேரங்களில் சபையின் மூப்பர்கள் அல்லது மேற்பார்வையாளர்களுள் முதன்மையானவர், அவர் இல்லை என்றால் அவர்களுள் இன்னொருவர் வழிபாட்டில் தலைமை வகித்து அருளடையாளங்களை வழங்கியிருக்கவேண்டும்; ஏனைய சபைகளிலிருந்து மூப்பர்கள், மேற்பார்வையாளர்கள் அல்லது வேறு போதகர்கள் வந்தபோது அவர்களுக்குக்கூட வழிபாட்டில் தலைமை ஏற்று அருளடையாளங்களை வழங்கும் வாய்ப்பு தரப்பட்டிருக்கலாம்; கிறிஸ்தவ சமூகம் வீடுகளில் வழிபாட்டிற்கென கூடிவந்தபோது வீட்டுத் தலைவர்தாம் அப்பத்தைப் பிட்டு நற்கருணை அருளடையாளத்தை நிறைவேற்றியிருக்க வேண்டும் என்பன ஆய்வாளர்களது ஊகம். |

பொதுவாக நோக்கின், முதல் நூற்றாண்டுத் திருச்சபையில் திருப்பணிகள் என்பன ஒருசில திருநிலையினரிடம் மட்டும் குவிந்து கிடக்கவில்லை . எல்லாரும் பணியாளர்களே எனும் உணர்வும் உறுதிப்பாடும் பரவலாக இருந்தன. இதனால் அமைப்புமுறையிலான அடிப்படைத் திருப்பணிகளை ஆற்றச் சிலர் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பெற்றிருந்தாலும் பல தன்னார்வத் திருப்பணிகளும் தழைத்திருந்தன. மேலும் வளரும் திருச்சபையின் புதிய தேவைகளுக்கு ஏற்ப புதிய திருப்பணிகளை ஏற்படுத்தவும் தேவையற்ற பழைய திருப்பணிகளைக் கைவிடவும் தொடக்கத் திருச்சபை தயங்கவில்லை. இவ்வாறுதான் இயேசுவே எற்படுத்தியிருந்த எழுபத்திரண்டு சீடர்களின் திருப்பணி வழக்கொழிய விடப்பட்டது. திருத்தொண்டர், மூப்பர், மேற்பார்வையாளர் எனும் புதுத் திருப்பணிகள் ஏற்படுத்தப்பட்டன். அத்தகைய திருப்பணிகளுக்கு நியமிக்கப்பட்டோரும் தங்களைத் தனிஒரு உயர் வகுப்பினராக வேறுபடுத்திக்கொள்ளவில்லை; ஏனையோரும் அவ்வாறு அவர்களைக் கருதி தொலைவில் வைத்து தெய்வீக மனிதர்களாகக் கருதவும் இல்லை . அருள்பணியாளர்களின் ஆதிக்கம் என்பது தொடக்கத் திருச்சபையில் நாம் அறவே காண முடியாதது. ஏனெனில் அன்றைய திருச்சபையில் சகோதரத்துவ உணர்வு மேலோங்கி நின்றது; திருத்தூதர்களும் ஏமப்பர்களும் மேற்பார்வையாளர்களும் மக்களைக் கலந்தும் அவர்களுடன் இணைந்தும்தான் முக்கிய முடிவுகளை எடுத்தனர்.

 


image
sd
insert text