யார் இந்த இயேசு?

தாவீதின் மகன்!

இயேசுவுக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயர்களுள் நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு பெயர் அவர் 'தாவீதின் மகன்' என்பது. இயேசு தாவீது வழிமரபில் வந்தவர் என்பது நாம் அறிந்ததே. அவர் தாவீதின் மரபைச் சேர்ந்தவர், மெசியா என்பவர் தாவீதின் மரபிலிருந்துதான் தோன்றுவார் என்பது யூதர்களின் நம்பிக்கை. இறைவாக்குகளும் அவ்வாறே முன்னறிவித்தன. எனவே இயேசுதான் மெசியா என்பதை உறுதிப்படுத்த மத்தேயு நற்செய்தியாளர் தம் நூலில் இயேசுவின் தலைமுறை அட்டவணையை முதலில் வைத்துள்ளார். இந்த அட்டவணை தாவீதில் தொடங்கி இயேசுவில் நிறைவடைவதை நினைவில் கொள்வோம் (மத் 1:1-17 )

இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பை ஆண்டவரின் தூதர் சந்தித்தபோது 'யோசேப்பே, தாவீதின் மகனே' (மத் 1:20)என்றுதான் அழைக்கிறார். எனவே, நற்செய்தியாளரின் நோக்கம் இயேசுவைத் தாவீதின் மரபில் வந்தவர் என்று எண்பிப்பது என்பது முதல் அதிகாரத்திலேயே புலப்படுகிறது.

இயேசுவின் பணியையும், வாழ்வையும் கண்ட மக்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொண்டனர். அவ்வாறு ஏற்றுக்கொண்டதன் ஓர் அடையாளமாக அவரைத் 'தாவீதின் மகன்' என்று அழைத்தனர்.

பார்வையற்றவரும், பேச்சற்றவருமான பேய் பிடித்த மனிதர் ஒருவரை இயேசு குணமாக்கியபோது, திரண்டிருந்த மக்கள் யாவரும் மலைத்துப்போய் 'தாவீதின் மகன் இவரோ?' என்று பேசிக்கொண்டனர்.(மத் 12:23)

பார்வையற்ற பர்த்திமேயு இயேசுவை நோக்கி, 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்;கு இரங்கும்'(லூக் 18:38,39)என்றே வேண்டினார். இயேசுவும் அவரது மன்றாட்டுக்கு செவி சாய்த்து, உடனே அவருக்குப் பார்வையளித்தார். இவ்வாறு, தாம் தாவீதின் மகன்தான் என்பதைத் தன் வல்ல செயலினால் எண்பித்தார்.

இயேசு யெருசலேம் நகரில் நுழைந்தபோது பெருந்திரளான மக்கள் அவரை வரவேற்றனர். அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர் 'தாவீதின் மகனுக்கு ஓசன்னா!ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக. உன்னதத்தில் ஓசன்னா!' என்று ஆர்ப்பரித்தனர்(மத் 21:9,15). மக்களின் பார்வையில் இயேசுவே 'ஆண்டவர் பெயரால்' வருகின்ற மெசியா, மீட்பர் என்பதை இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது.

இயேசு தாவீதின் மகன் என்று அழைக்கப்படுவது பொருத்தமானதே. ஒருவகையில்;, தாவீது இயேசுவின் முன்னோடியாக விளங்கியவர். இருவருக்கும் சில பொதுவான தன்மைகள் உள்ளன என்று விவிலிய அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தாவீது கடவுளால் சிறப்பான விதத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எளிய குடும்பத்தில் தோன்றி, பெரிய சாதனைகளைப் புரிந்தவர். இறைவாக்குகளின் நிறைவு. அமைதி மற்றும் நிலையான ஆட்சியின் அடையாளம். இவை இயேசுவுக்கும் பொருந்துகின்றன. இயேசுவும் நிலையான அமைதிளை அருள்பவர். இறையாட்சியை நிலைக்கச்செய்பவர். எனவே, இயேசு தாவீதின் மகன் என்று பெயர் பெறுவது சிறப்பானதே.

இருப்பினும், வேறொரு கோணத்தில் ஆய்ந்தால், இயேசு தாவீதைவிட மேலானவர். தந்தை இறைவனின் மகன் என்ற விதத்தில் அவரைவிட உயர்ந்தவர் என்று கூறலாம். இயேசுவே பரிசேயர்களுடன் உரையாடியபோது இது பற்றிய தன்னிலை விளக்கம் அளித்ததை நற்செய்தி நூலில் வாசிக்கிறோம்.

இயேசு பரிசேயர்களிடம் 'மெசியாவைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?' என்று கேட்டார். அவர்கள் 'தாவீதின் மகன்' என்று பதிலளித்தார்கள். இயேசு 110 ஆம் திருப்பாடலை மேற்கோள் காட்டி தாவீது மெசியாவைத் தம் தலைவர் என்று அழைத்துள்ளார். எனவே, அவர் தாவீதைவிட மேலானவர் என்று விளக்குகிறார். (மத் 22:41-45)

ஆம், இயேசு தாவீதைவிட மேலானவர். தாவீது யாருக்காக ஏங்கினாரோ, யாருடைய மாட்சியையும், ஆற்றலையும் காண விழைந்தாரோ (திபா 63), அவரே இயேசு. தாவீது பாவங்கள் பல செய்து இறைவனின் இரக்கத்தை இறைஞ்சிப் பெற்றவர். இயேசுவோ பாவமே அறியாத திருமகன். இருப்பினும், தன் மனித அவதாரத்தின் ஓர் உருவாக தாவீதின் மகன் என்ற பட்டத்தையும் ஏற்றுக்கொண்டார்.

அவரை நோக்கி நாமும் 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று மன்றாடுவோம். அப்போது அவர் நம் அகக் கண்களைத் திறந்து பார்வை பெறச் செய்வார்.

- தந்தை குமார்ராஜா –