கிறிஸ்தவ ஒன்றிப்பு உட்புகுமுன் ஒற்றுமை திருச்சபையின் இன்றியமையாத ஓர் இயல்புக்கூறு கடவுள் ஒருவNர் அவர் மகன் இயேசு கிறிஸ்துவும் ஒருவNர் திருச்சபை ஒன்றே; அதன் நம்பிக்கையும் ஒன்றே. ஆனால் இன்று கிறிஸ்தவம் பிளவுபட்டு நிற்கின்றது. அதிலுள்ள பல்வேறு சபைகள் கோட்பாடுகள், வழிபாட்டு முறைகள், ஆட்சி அமைப்புகள் செயல்பாடுகள் என்பவற்றில் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டு நிற்பன மட்டும் அன்று; பலவேளைகளில் அவை ஒன்றிற்கு ஒன்று முரணாகவும் எதிராகவும் கூடச்செயல்படுகின்றன. கிறிஸ்தவத்தின் இந்தப் பிளவுபட்ட நிலை அதன் உண்மை இயல்பிற்கும் உயரிய நோக்கத்திற்கும், அனைத்திற்கும் மேலாக அதை நிறுவியவரின் விருப்பத்திற்குமே முரணானது. உலக மக்கள் அனைவரும் ஒரே இறைத்தந்தையரின் பிள்ளைகள் எனும் உண்மைக்குத் திருச்சபை அடையாளம். அவர்களை ஒரேகுடும்பமாகச் சகோதர உறவுடன் வாழவைக்கும் கடவுளின் கருவி அது. இவ்வாறு மக்கள் அனைவரின் ஒற்றுமைக்கும் சகோதர உறவிற்கும் சிறந்த ஒரு சின்னமாகவும்செயல்திறமுள்ள கருவியாகவும் விளங்கவேண்டிய கிறிஸ்தவமே தன்னுள் ஒற்றுமை இன்றிப் பிளவுபட்டு இருப்பது அதன் இயல்பிற்கு எதிரானது. மேலும் கிறிஸ்தவத்தின் பிளவுபட்ட நிலை அதன் ந்செய்தி அறிவிப்புப் பணிக்கு ஒரு பெரும் தடை. இயேசுவின் ஒரேநற்செய்தியைப் பல்வேறு சபைகளின் பணியாளர்கள் வெவ்வேறு பொருள்பட போதிப்பதும் மக்களைத் தங்கள் தங்கள் சபைகளிலேயே சேர அழைப்பதும் ஒருவருக்கொருவர் போட்டிமனப்பான்மையுடன் பணிகளில் ஈடுபடுவதும் இன்றும் பல இடங்களில் நாம்காஞம் நிகழ்வு. இது மக்களின் மனங்களில்குழப்பத்தை ஏற்படுத்துகிறது; நற்செய்தியை அவர்கள் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் கேட்டுக் கடைப்பிடிப்பதற்கும் தடையாக உள்ளது. |
கிறிஸ்தவத்தில் நிலவும் இத்தகைய பிளவுகள் இயேசு கிறிஸ்துவின் விருப்பத்திற்கு முற்றிலும் முரணானவை. ''இக்கோட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன... அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே அவையும் எனது குரலுக்குச் செவிசாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்'' (யோவா 10:16) என்பது அவரது கனவு. ''எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்'' (யோவா 17:210 என்பது தமது இவ்வுலக வாழ்வின் இறுதியில் இயேசு செய்த மன்றாட்டு.
பிளவுகளும் ஒன்றிப்பு முயற்சிகளும்
கிறிஸ்தவச் சமூகத்தில் பிளவுகள் இன்றோ நேற்றோ திடீரென ஏற்பட்டவை அல்ல. புதிய ஏற்பாட்டுக் காலத்திலிருந்தே திருச்சபையில் பிளவுகள் தோன்றியுள்ளன (காண் 1 கொரி 1:10 தொ). காலப்போக்கில் ஆரியுசு, நெஸ்தோரியுசு போன்றோர் சிலருடைய திரிபுக் கொள்கைகள் காரணமாகவும் பல பிளவுகள் ஏற்பட்டன. 11ஆம் நுற்றாண்டில் கிறிஸ்தவத்தில் ஏற்பட்ட கிரேக்க சபை, உரோமை சபை எனும் பிளவு மிகப்பெரியது மட்டும் அன்று; நிரந்தரமாக இன்றுவரை நிலைப்பதும்கூட. அது போல் 16ஆம் நூற்றாண்டில் சமயச் சீர்திருத்தம் காரணமாக ஐரொப்பாவில் நிகழ்ந்த சீர்திருத்த சபைகளின் பிரிவும் இங்கிலாந்தில் ஆங்கிலிக்கச் சபையின் பிரிவும் இன்றுவரை தொடருபவை. இன்னும் பல நூறு சபைகள் தோன்றிப் பிளவுபட்டு நிற்பதே கிறிஸ்தவத்தின் நிலை.
இவ்வாறு பிளவுகள் தோன்றித் தொடர்ந்தாலும் இயேசுவின் ஒற்றுமைக் கனவு கிறிஸ்தவத்தில் ஒருபோதும் மறைந்துவிடவில்லை. ''எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!'' எனும் அவரது இலட்சிய நெருப்பு திருச்சபையில் எப்போதுமே பற்றி எரிந்துள்ளது. அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அவருடைய ஆவியாரின் செயல்பாடு அதில் புதுப்புது ஒற்றுமை முயற்சிகளை எப்போதுமே பிறப்பித்துள்ளது. இவ்வாறு கொரிந்துத் திருச்சபையில் நிலவிய பிளவுகளுக்கு எதிராக ''கிறிஸ்து இவ்வாறு பிளவுபட்டுள்ளாரா?'' (1 கொரி 1:13) என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தூய பவுல் சவால் விடுகிறார். அதைத் தொடர்ந்து திரிபுக்கொள்கையினரை ஒரே திருச்சபையின் ஒன்றிப்பிற்குக் கொணரும் முயற்சிகள் எப்போதுமே முக்கியத்துவம் பெற்றுள்ளன. ''பெரும் பிளவு'' எனப் பெயர் பெறும் கீழைத் திருச்சபையின் பிரிவை ஒழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் மிகப் பெரியன. ஆனால் சீர்திருத்த சபைகளின் பிரிவுக்குப் பின்பு அந்தச் சபையினரை மனமாற்றி மீண்டும் கத்தோலிக்கச் சபைக்குக் கொணரும் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டாலும் கிறிஸ்தவச் சபைகளுக்கு இடையே நான்கு நூற்றாண்டுகளாகப் பெரிதும் நிலவியது தங்களைப்பற்றிய பாதுகாப்புணர்வும் பிற சபைகள் பால் பகையுணர்வுமே. சபைகளுக்கு இடையே நிலவிய எதிர்வாதப் போக்கு இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் சிறிது சிறிதாகக் குறைந்து மறையத் துவங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தது கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம்.
ஒன்றிப்பிற்கு ஓர் இயக்கம்
கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம் 1910 ஆம் ஆண்டு ஆங்கிலிக்க, சீர்திருத்த சபைகள் இணைந்து எடின்பர்க் நகரில் நடத்திய அனைத்துலக நற்செய்தி அறிவிப்பு மாநாட்டிலிருந்து பிறப்பெடுத்தது எனலாம். எனினும் அதற்கு முன்பே கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காக இறைவேண்டல் செய்யும் வழக்கம் பல்வேறு சபைகளில் ஆங்காங்கே அரும்பியிருந்தது. இவற்றுள் குறிப்பிடத்தக்கது 1908 ஆம் ஆண்டு ஆங்கிலிக்க சபைப் பணியாளர் பவுல் வாட்சன் துவக்கிய ''கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரம்'' (ஜனவரி 18-25) என்பது. கிறிஸ்தவ ஒன்றிப்புக்காகக் கிறிஸ்தவர்கள் எட்டு நாள்கள் சிறப்பாகக் கடவுளை வேண்டும் இவ்வழக்கம் 1916 ஆம் ஆண்டு திருத்தந்தை 15ஆம் பெனதிக்துவால் ஏற்கப்பட்டு கத்தோலிக்கச் சபை முழுவதற்கும் உலகெங்கும் விரிவாக்கப்பட்டது. கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்தின் அடுத்த சிறப்பான வளர்ச்சி இந்த நூற்றாண்டில் இடைப்பகுதியில் நிகழ்ந்தது. இதில் குறிப்பிடத்தக்கவை பின்வரும் முப்பெரும் நிகழ்ச்சிகள்: 1947 ஆம் ஆண்டு தென்னிந்தியாவில் உள்ள ஆங்கிலிக்கச் சபையும்பல சீர்திருத்த சபைகளும் சேர்ந்து வந்து தென்னிந்தியத் திருச்சபையாக ஒன்றிணைந்தது உலகெங்கும் கிறிஸ்துவ ஒன்றிப்பிற்கு ஒரு பெரும் தூண்டுதலாகவும் மாதிரியாகவும் அமைந்தது. அடுத்து 1948 இல் திருச்சபைகளின் உலகப் பேரவை உருவாக்கப்பட்டது. கிறிஸ்தவ திருச்சபைகளின் உலகப் பேரவை உருவாக்கப்பட்டது. கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு இது புதிய ஊக்கம் கொடுத்தது. கத்தோலிக்கச் சபை இதில் உறுப்பினர் ஆகவில்லை. எனினும் 1949ல் உரோமையிலுள்ள நம்பிக்கைக் கோட்பாட்டுப் பேராயம் ''ஒற்றுமை இயக்கம் பற்றிய அறிவுரையை'' வெளியிட்டுச் சபைகளுடன் உறவுக்கும் உரையாடலுக்கும் வித்திட்டது.
கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான புதிய ஆர்வத்தையும் ஆழமான ஈடுபாட்டையும் கத்தோலிக்கத் திருச்சபையில் ஏற்படுத்தியவர் ''கிறிஸ்தவ ஒன்றிப்பின் திருத்தந்தை'' எனப் பெயர்பெற்ற 23ஆம் யோவான் ஆவார். தமது ஆட்சியின் துவக்கத்திலிருந்தே அவர் கிறிஸ்தவ ஒன்றிப்பில் தனிப்பெரும்அக்கறை காட்டினார். ஒன்றிப்புப் பணிகளை ஊக்குவித்து நெறிப்படுத்த உரோமையில் அவர் ''கிறிஸ்தவ ஒன்றிப்புச் செயலகத்தை'' நிறுவினார். தமது எளிமை, இனிமை, மனத்தாழமை எனும் பண்புகளால் ''எதிர்பாளர்கள்'' எனக் கருதப்பட்ட ஏனைய சபைக் கிறிஸ்தவர்களையும் ''சகோதரர்களாக'' அணைத்துக் கொண்டார். அவர் இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்யபோது அதன் முக்கிய ஒரு நோக்கமாக கொண்டிருந்தது கிறிஸ்தவ ஒன்றிப்பே.
அவருக்குப் பின்பு திருத்தந்தை 6ஆம் பவுல் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காகப் பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். தமது ஆட்சியின் துவக்கத்திலேயே கீழைச் சபை மறைத்தந்தை அத்தனாகோரசைச் சந்தித்தார். சங்கத்தின் இரண்டாவது அமர்வின் தொடக்கவுரையில் ''எவ்வகையிலேனும் நாங்கள் (கத்தோலிக்கர்) இப்பிரிவினைகளுக்குக் காரணமாய் இருந்திருந்தால் தாழ்மையுடன் கடவுளிடம் மன்னிப்பைக் கேட்பதுடன் எங்களால் புண்பட்டவர்களாகத் தங்களைக் கருதும் சகோதரரின் பொறுத்தலையும் வேண்டுகிறோம்'' என்றார். கத்தோலிக்கச் சபையின் இத்தகைய ஒன்றிப்பு முயற்சிகள் அனைத்திலும் முக்கியமானதாக அமைவது இரண்டாம் வத்திக்கான் சங்கம் தந்த கிறிஸ்தவ ஒன்றிப்பு பற்றிய விதித் தொகுப்பு.
ஏட்டின் வரலாறு
சங்கத்தின் முதல் அமர்வு (1962) துவங்கியபோது அதில் விவாதிக்கப்பட்டு வெளியிடப்படுவதற்கென கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றி இருவேறு விவாத ஏடுகள் ஏற்கெனவே தனித்தனியாகத் தயாரிக்கப்பட்டிருந்தன. கீழைச் சபைகள் பற்றிக் கீழைச் சபைகளுக்கான பணிக்குழு ஒரு விவாதக் கோப்பு தயாரித்திருந்தது. பிற சபைச் சகோதரர்கள் பற்றிய ஓர் இயலை இறையியல் பணிக்குழுதான் தயாரித்த திருச்சபை பற்றிய விவாதக்கோப்புடன் இணைந்திருந்தது. அவற்றுடன் கிறிஸ்தவ ஒன்றிப்புச் செயலகம் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய விவாதக் கோப்பு ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருந்தது. இவற்றுள் முதல் இரண்டும் சங்கத்தின் முதல் அமர்வில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. கண்டிக்கும் மனோபாவத்தைக் களைந்து அன்புறவையே ஏட்டில் அதிகமாக வெளிப்படுத்தவேண்டும்; திருச்சபை பற்றிய புதிய ஆக்கப் பூர்வமான இறையியல் கருத்துகளை உள்வாங்கி ஏட்டின் ஆணுகுமுறை விரிவாக்கப்பட வேண்டும்; மேற்குறிப்பிட்ட மூன்று ஏடுகளையும் இணைத்துக் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய ஒரே விவாதக் கோப்பாகத் தரவேண்டும் எனச் சங்கத்தந்தையர் கிறிஸ்தவ ஒனந்றிப்புச் செயலகத்தைக் கேட்டுக்கொண்டனர்.
சங்கத்தின் இரண்டாவது அமர்வில் (1963) கிறிஸ்தவ ஒன்றிப்புச் செயலகம்கீழைச் சபைகளுக்கான பணிக்குழுவையும் இறையியல் பணிக்குழுவையும் கலந்து தயாரித்த ஏடு ஒன்றைச் சங்கத் தந்தையர் கையில் தந்தது. அது 5 இயல்களைக் கொண்டிருந்தது. இவற்றுள் முதல் மூன்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பின் கொள்கைகள், நடைமுறைகள், சீர்திருத்த, கீழைச்சபைகளுடன் உள்ள உறவு என்பன பற்றியவை. நான்காம் இயல் யூதர்களுடன் உள்ள உறவு பற்றியும் ஐந்தாம் இயல் சமயச் சுதந்திரம் பற்றியும் எடுத்துரைத்தன. இவற்றுள் முதல் மூன்றை மட்டும் எடுத்துக் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றிய தனியொரு ஏடாக வெளியிடலாம் எனும் பரிந்துரை சங்கத்தந்தையர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மூன்றாம் அமர்வில் (1964) அந்த மூன்று இயல்களும் விரிவாக விவாதிக்கப்பட்டுத் திருததங்களுக்கான ஆயிரத்திற்கு அதிகமான பரிந்துரைகளின் அடிப்படையில் மாற்றியமைக்கப்பட்டன. இறுதி வாக்கெடுப்பிற்கு முந்திய நாள் திருத்தந்தை 6ஆம் பவுல் மேலும் 19 மாற்றங்களைச் செய்தார். இறுதியாக நவம்பர் 21ஆம் நாள் 2137 வாக்குகள் ஆதரவாகவும் வெறும் 11 வாக்குகள் மட்டுமே எதிராகவும் பெற்று இவ்வேடு சங்கத்தால் ஏற்கப்பெற்றது. அன்றே திருத்தந்தையால் அது அதிகாரப் பூர்வமாக வெளியிடவும் பெற்றது.
சிறப்புகள் பல
இந்த விதித்தொகுப்பு கிறிஸ்தவச் சபைகளுக்கு இடையே ஒன்றிப்பின் ஒளிமயமான ஒரு புதுக் காலத்தின் துவக்கமாக அமைந்தது எனலாம். சங்கம் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு ஏற்ற ஒரு சூழலை உருவாக்கும், புதிய ஒரு பாதையைக் காட்டும் என எல்லாக் கிறிஸ்தவர்களின் மனதிலும் அரும்பியிருந்த எதிர்பார்ப்புகளை இந்த ஏடு மிகச் சிறப்பாக நிறைவேற்றியது எனலாம். ஆஸ்கார் கூல்மான் எனும் சீர்த்திருத்த சபை அறிஞர் கூறுவது போல் ''இது ஒற்றுமைக்கு வழிதிறந்துவைக்கும் ஓர் ஏடு மட்டும் அல்ல் இது ஒரு புதிய சாதனை. கத்தோலிக்கர் அல்லாதாரைப்பற்றி இது வரை வேறு எந்த ஏடுமே இதுபோல் பேசியது இல்லை.''
இந்த ஏட்டின் சிறப்புகள் பல. அவற்றுள் மிக முக்கியமானவை என மூன்றினை நாம் குறிப்பிடலாம். ஒன்று, ஏனைய சபைகளுக்கும ;அவற்றைச் சார்ந்த கிறிஸ்தவர்களுக்கும் இது காட்டும் அன்பும் மதிப்பும். இதுவரை திரிபுவாதச் சமூகங்களாகவும் பிரிவினைச் ;சபைகளாகவுமே கருதப்பட்ட ஏனைய சபைகளை இவ்வேடு திருச்சபைகள், திருச்சபைகச் சமூகங்கள் என ஏற்றுக்கொள்கிறது. இயேசுவின் உண்மையான திருச்சபையின் பல பண்புகள் இச்சபைகளிலும் இருக்க முடியும்; எனவே ''மீட்பின் மறைத்திட்டத்தில் அவைகள் தங்கள் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் இழந்து விடவில்லை'' (எண் 3) என இவ்வேடு வெளிப்படையாக அறிக்கையிடுகிறது. அதுபோல இச்சபைகளின் உறுப்பினர்பால் இவ்வேடு காட்டும் அன்பு பெரிது. இதுவரை எதிர்ப்பாளர்கள். பிரிவினையாளர்கள் என வருணிக்கப்பட்ட அவர்களை இவ்வேடு ''ஆண்டவரில் சகோதரர் சகோதரிகள்'' (எண் 3) என அன்புடன் அழைக்கிறது.
இரண்டாவது, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றி இதற்கு முன்பு கத்தோலிக்கத் திருச்சபையில் நிலவிய கண்ணோக்கிலிருந்து இவ்வேடு முன்வைக்கும் கருத்து வியப்பளிக்கும் முறையில் வேறுபடுகிறது. உரோமைத் திருச்சபையே ஒன்றிப்பின் மையம், ஏனைய சபைகள் அதில் வந்து இணைவதே கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பதுவே முன்பு பரவலாகக் கத்தோலிக்கச் சமூகங்களில் பெரிதும் பரவியிருந்த பார்;வை. அத்தகைய பார்வை இவ்வேட்டில் மாற்றம் கண்டுள்ளது. ஏனைய சபைகளிலும் இயேசுவின் ஆவி செயல்படுகிறார் (எண் 4) என்பது ஏற்கப்பட்டு, கிறிஸ்துவே அனைத்துச்; சபைகளின் ஒன்றிப்பின் மையம் எனும்கருத்து இவ்வேட்டில் வலியுறுத்தப்படுகிறது (எண் 2).
மூன்றாவது, கிறிஸ்தவத்தில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு ஏனைய சபைகளை மட்டுமே குறைகாஞம் போக்கு இவ்வேட்டில் கைவிடப்பட்டுள்ளது. மாறாக, பிளவுக்கு இரு சாராருமே பொறுப்பு என்பது வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது (எண் 3). எனவே தொடர் சீர்திருத்தம் எல்லாச் சபைகளுக்கும் தேவை. அதுவே கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கு முக்கிய வழி என்பதை இவ்வேடு வலியுறுத்துகிறது. ''இந்தத் தொடர் சீர்த்திருத்தத்திற்குக் கிறிஸ்து ப ய ணம் செல்லும் திருச்சபையை அழைக்கிறார். மண்ணுலகில் உள்ள ஒரு மனித நிறுவனம் என்னும் வகையில் இச்சீர்த்திருத்தம் திருச்சபைக்கு எப்போதும் தேவை'' (எண் 6).
புதிய பல முயற்சிகள்
இவ்வேடு கிறிஸ்தவ ஒன்றிப்பிற்குப் புதிய ஒரு பாதை காட்டியது; உலக முழுவதும் புதிய பல முயற்சிகளுக்குத் தேவையான தெளிவும் தெம்பும் தந்தது. சிறப்பாத் தமிழகத்தில்இதன் தாக்கம் சிறப்பானது. பல்வேறு கிறிஸ்தவச் சபைகளுக்கு இடையே நிலவிய பகை, வெறுப்பு, சந்தேகம், போட்டி மனப்பான்மை, ஒன்றையொன்று பற்றிய இழிவான விமர்சனம் என்பன கடந்த முப்பது ஆண்டுகளில் பெரிதும் மறைந்துள்ளன. நல்லெண்ணமும் நல்லுறவும் சிறிது சிறிதாக அவற்றிற்கிடையே அரும்பத் துவங்கியுள்ளன.
இந்த நல்லுறவின் வெளிப்பாடாகப் பல துறைகளில் பல்வேறு சபைகளின் ஒத்துழைப்பும் கூட்டு முயற்சிகளும் மலர்ந்துள்ளன. கூட்டு இறை வேண்டல்கள், வழிபாடுகள், திருவிழாக் கொண்டாட்டங்கள் எனபன நடைமுறைக்கு வந்துள்ளன. வேறு சபைப் போதகர்களைத் தங்கள் சபைக் கூட்டங்கள், வழிபாடுகளுக்கு அழைப்பது ஆங்காங்கே நிகழ்ந்துள்ள நல்ல வளர்ச்சி. ஒரிரு இடங்களில் ஒரே ஆலயத்தை இரு சபையினர் பகிர்ந்து கொள்ளும் அளவுக்குச் சபைகளுக்கு இடையே நல்லுறவு நிலவுகிறது.
அண்மையில் புதிய தமிழ் மொழிபெயர்ப்பாகப் பொதுத் திருவிவிலியம் வெளியிடப்பட்டது. இது தமிழகத்தில் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்குக் கிடைத்த ஒரு பெரும் வெற்றி. அதைத் தொடர்ந்து திருவிவிலிய நூல்களுக்குப் பொது விளக்கவுரைள் எழுதும் முயற்சியும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கிறிஸ்தவர் ஐக்கியப் பேரவை நிறுவப்பட்டு ஆக்கப்பூர்வமான முறையில் செலய்பட்டு வருவது கிறிஸ்தவ ஒன்றிப்பின் இன்னொரு சாதனை. இதன் வழியாகத் தமிழகத்தில் உள்ள பல கிறிஸ்தவச் சபைகள் அரசிடமிருந்து தங்கள் பொது உரிமைகளைப் பெற ஒருங்கிணைந்து பலமுயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன.
தமிழக ஆயர் பேரவையின்கீழ்த் தமிழகக் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. சில மறைமாவட்டங்களிலும் கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காகப் பணிக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அவை திட்டமிட்டுக் கிறிஸ்தவ ஒன்றிப்பை வளர்க்கும் பல முயற்சிகளை முன்னின்று நடத்துகின்றன. பல சபையினர் வாழும் மையங்களில் அவை கிறிஸ்தவ ஒன்றிப்புக் குழுக்களை உருவாக்கி உரையாடலையும் உறவையும் பல்வேறு கூட்டுமுயற்சிகளையும் வளர்ப்பது குறிப்பிடத்தக்கது.
பயணம் தொடரட்டும்
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தை ஒட்டி நிகழ்ந்த மறுமலர்ச்சியின் வேகம் இன்று பலதுறைகளில் சற்று குறைந்துள்ளது என்பது எவரும் மறுப்பதற்கில்லை. அந்தத் துறைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்று கிறிஸ்தவ ஒன்றிப்பு. அனைத்துலகத் திருச்சபை எனும் நிலையில் மட்டும் அன்று, தமிழகத் திருச்சபைப் பொறுத்த வரையிலும் கூட இது உண்மையே. மூன்றாவது ஆயிரமாண்டின் வருகைக்காக மீண்டும் தன்னைப் புதுப்பிக்கும் முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டுள்ள திருச்சபை முக்கியத்துவம் தரவேண்டிய ஒரு துறை கிறிஸ்தவ ஒன்றிப்பு. இத்துறையில் பழைய பாதுகாப்புகளுக்குள் திருச்சபை தன்னையே சிறைப்படுத்திக் கொள்ளாது, தூய ஆவியின் துணையை நம்பிச் சற்று அதிக துணிச்சலுடன் புதிய பல முயற்சிகளை மேற்கொள்ளுவது இன்றியமையாதது.
இத்துறையில் இதுவரையில் செய்யப்பட்டுள்ள பல்வேறு முயற்சிகள் பெரும்பாலும் ஆங்காங்கே தனியார் சிலர் தங்கள் தங்கள் ஆர்சத்திற்கும் ஆற்றலுக்கும் ஏற்பத் தொடங்கி நடத்தியவையே. தமிழக அளவிலோ, மறைமாவட்ட அளவிலோ கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான பொதுவான திட்டமிடுதலோ இணைந்த முயற்சிகளோ அதிகம் இல்லை. இத்துறையில் தமிழக ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக்குழு ஆற்ற வேண்டிய பணி நிறைய உள்ளது.
பல்சமய உரையாடல், கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பன இந்திய, தமிழக சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இரு துறைகள். இவை ஒவ்வொன்றிற்கும் என தமிழக ஆயர் பேரவை அளவிலும் மறைமாவட்ட அளவிலும் தனித்தனிப் பணிக்குழுக்கள் அமைக்கப்படுவது கிறிஸ்தவ ஒன்றிப்புப் பற்றி அதிக ஆர்வம் காட்டி முயற்சிகள் மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் எனக் கருத இடமிருக்கிறது. இத்தகைய பணிக்குழுக்களின் செயலர்களாகப் பொறுப்பேற்று நடத்த இத்துறையில் நல்ல பயிற்சியும் அனுபவமும் உள்ளவர்கள் உருவாக்கப்படுவது இன்றியமையாதது.
தமிழகக் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக்கு மறைமாவட்டப் பணிக்குழுக்களின் செயல்பாடுகளை ஊக்குவித்து நெறிப்படுத்தி ஒருங்கிணைப்பது தேவை. மேலும் என்னென்ன சூழ்நிலைகளில் கூட்டு இறைவேண்டல், வழிபாடு, திருநாள் கொண்டாட்டங்கள் போன்றவை பல்வேறு சபையினரால் இணைந்து நடத்தப்படலாம், எவ்வாறு அவை நடத்தப்பட வேண்டும், பிற சபையினர் வழிபாடுகளில் கத்தோலிக்கர் எந்த அளவு பங்கேற்கலாம், ஏனைய சபையினரைத் தங்கள் வழிபாடுகளில் எந்த அளவுக்கு பங்கேற்க அழைக்கலாம் என்பன பற்றிய நெறிமுறைகளைக் கொண்ட ''வழிகாட்டி நூல்'' ஒன்று வெளியிடுவது மிக்கப் பயன் விளைவிக்கும். அதுபோல் பல்வேறு சபை இறையியலார்களை ஒன்றுசேர்த்து நம்பிக்கை அறிக்கையிலும் இறைவேண்டல், சடங்குமுறைகள், கோட்பாட்டு விளக்கங்கள், விவிலிய விளக்கங்கள் என்பவற்றிலும் ஒற்றுமை உருவாக்க முனையலாம்.
இன்று தமிழகத்திலுள்ள பல்வேறு சபைகளைச் சார்ந்த இறையியல் கல்லூரிகளுக்கு இடையே ஒத்துழைப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அவைகளுக்கு இடையே அதிக ஒத்துழைப்பும் முதுகலைப் பட்ட அளவிலாவது மாணவர் பரிமாற்றமும் வளர்க்கப்படவேண்டும்.
கலப்புத் திருமணங்கள் இன்று சகிக்கப்படும் நிலையே பல்வேறு சபைகளில் உள்ளது. இந்நிலை மாற்றப்பட்டு அவை வரவேற்கப்படும் நிலை உருவாக்கப்படவேண்டும்.
ஒரே இடத்தில் வெவ்வெறு சபையினர் தனித்தனிக் கோயில்களைக் கட்டுவதைத் தவிர்த்து பொதுக் கோயில்களைக் கட்டுவதற்கு மறைமாவட்டக் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணிக்குழுக்கள் முன்னின்று முயற்சிகள் செய்யலாம். அதுபோலவே கல்வி நிலையங்கள், சமூகசேவை நிறுவனங்களை கூட்டுமுயற்சிகளாக உருவாக்குவதில் பரிசோதனை அளவிலாவது சில முதல் முயற்சிகள் செய்யப்படுதல் தேவை.
இறுதியாக
கிறிஸ்தவ ஒன்றிப்பு இயேசுவின் கனவு, நமது கடமை. அதனை வளர்க்கும் பணி அதிகாரிகள், அறிஞர்களுக்கு மட்டும்உரியது அன்று. எல்லாக் கிறிஸ்தவர்களுமே கிறிஸ்தவ ஒன்றிப்பின் பணியாளர்களே. ஏனைய சபையினரைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ளுதல், அவர்களுடன் நல்லுறுவுடன் பழகுதல், அவர்கள் நம்பிக்கைகள் நடைமுறைகளைப்பற்றி அவர்கள் மனதைப் புண்படுத்தும் விமர்சனங்களைத் தவிர்த்தல், அவர்களுடன் நட்புறவை உருவாக்குதல், அவர்கள் குடும்ப, சமூ நிகழ்வுகளில் கலந்துகொள்ளுதல், சமயச்சடங்குகளிலும் விழாக்களிலும் அனுமதிக்கப்படும் அளவு பங்கேற்றல் என்பன எல்லாக் கிறிஸ்தவர்களும் ஒற்றுமைக்காகச் செய்யமுடிந்த சாhரண முயற்சிகளே. இவ்வாறு ஒரு மக்கள் இயக்கமாக மாறும்போதுதான் கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம் தன் இலட்சியத்தை இறையருளால் அடையமுடியும்.
பணி.தே.அல்போன்சு
கோட்பாட்டியல் பேராசிரியர்
தூய பவுல் இறையியல் கல்லூரி
திருச்சிராப்பள்ளி
15, நவம்பர், 1997
கிறிஸ்தவ ஒன்றிப்பு
பற்றி இறை அடியாருக்கு அடியார் ஆயர் பவுல்
திருச்சங்கத் தந்தையரோடு இணைந்து
நினைவில் என்றும் நிலைக்குமாறு அருளிய
விதித் தொகுப்பு
முன்னுரை
1. கிறிஸ்தவ அனைவரிழையிலும் ஒன்றுப்பு மீண்டும் ஏற்படுவதைழூ ஊக்குவித்தல் இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று. ஏனெனில் ஆண்டவர் கிறிஸ்து நிறுவிய திருச்சபை ஒன்றே. எனினும், பல கிறிஸ்தவ சமூகங்கள் தாங்களே கிறிஸ்து இயேசுவின் மரபுச்செல்வம் என மக்கள்முன் உரிமைகொண்டாடுகின்றன் தாங்கள் ஆண்டவரின் சீடர்கள் என அவை எல்லாம் அறிக்கையிடுகின்றன் இச்சமூகங்கள் வேறுபட்ட உணர்வுகளைக் கொண்டிருக்கின்றன் வெவ்வேறான பாதைகளில் நடக்கின்றன. இதனால் கிறிஸ்துவே பிளவுபட்டிருக்கிறார்1 என்றே தோன்றுகிறது. இப்பிளவு கிறிஸ்துவின் உளத்திற்கு வெளிப்படையாகவே முரண்படுகிறது; உலகிற்கு இடறலாக உள்ளது; படைப்பிற்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கும் தூய்மைமிகு பணிக்கும் தீங்கு விளைவிக்கிறது.
ஆனால் காலங்களின் ஆண்டவர் ஞானத்துடனும் பொறுமையுடனும் பாவிகளாகிய நமக்காகத் தமது அருள் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்துகிறார். தங்களுக்குள் பிளவுபட்டு நிற்கும் கிறிஸ்தவர்களுக்கு மன உறுத்தலையும் ஒன்றிப்புக்கான ஆவலையும் இக்காலத்தில் அவர் அதிகமாக அளிக்கத் தொடங்கியுள்ளார். எங்கும் மிகப்பல மக்கள் இவ்வருளால் தூண்டப்பட்டுள்ளனர். பிற கிறிஸ்தவச் சகோதரர், சகோதரிகளிடையிலும் கிறிஸ்தவர் அனைவரிடையிலும் ஒன்றிப்பை மீண்டும் ஏற்படுத்தத் தூய ஆவியின் துணையால் ஒரு இயக்கம் தோன்றி நாளும் வளர்ந்துவருகிறது. இது கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம் என அழைக்கப்படுகிறது. இதில் மூவொரு கடவுளைத் தொழுது, ஆண்டவரும் மீட்பரும் என இயேசுவை ஏற்றுக் கொள்பவர்கள் தனி மனிதர்களாக மட்டுமின்றிக் குழுக்களாகவும் இணைந்து பங்கேற்கின்றனர்; தாங்கள் நற்செய்திக்குச் செவிசாய்க்க உதவிய இக்குழுக்களைத் தங்கள் திருச்சபை, கடவுளுடைய திருச்சபை எனவும் அழைக்கின்றனர். வெவ்வேறு முறைகளில் என்றாலும், ஏறக்குறைய அனைவரும் கடவுளில் காணக்கூடிய ஒரே திருநச்சபையை விரும்பித் தேடுகின்றனர். இத்திருச்சபை உண்மையிலே பொதுமைப் பண்பு வாய்ந்ததாகவும் உலகம் நற்செய்தியை ஏற்று இறை மாட்சிக்காக நினைவாழ்வு பெருமாறு பாரனைத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் இருந்திட வேண்டுமென இவர்கள் விரும்புகின்றனர்.
இவையனைத்தையும் இத்திருச்சங்கம் மகிழ்வுடன் நோக்குகிறது. ஆகவே, திருச்சபையைப் பற்றிய போதனையை ஏற்கனவே அறிவித்த பின்னர் திருச்சங்கம் கிறிஸ்துவின் சீடர்கள் அனைவரிடையிலும் ஒன்றிப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என்னும் ஆவலால் தூண்டப் பெற்றுக் கத்தோலிக்கர் அனைவரும் இந்த இறை அழைத்தலுக்கும் அருளுக்கும் பதிலளிப்பதற்கு உதவும் வழி வகைகளை எடுத்தியம்ப விழைகிறது.
இயல் 1
ஒன்றிப்புப் பற்றிய கத்தோலிக்கக் கோட்பாடுகள்
திருச்சபையின் ஒருமையும் ஒன்றிப்பும்
2. கடவுளின் ஒரே பேறான மகன் மனிதராகி, மனித இனம் முழுவதையும் மீட்டு, மறுபிறப்பு அடையச்செய்து, அதை ஒன்றாய்ச் சேர்க்க2 தந்தையால் உலகுக்கு அனுப்பப்பட்டார். இதில்தான் கடவுள் நம்மீது கொண்டுள்ள அன்பு வெளிப்பட்டது. இந்த இறை மகன் தம்மையே மாசற்ற பலிப்பொருளாகச் ;சிலுவை எனும் பீடத்தில் ஒப்புக் கொடுக்கும் முன்பு தம்மை நம்புவோருக்காகத் தந்தையிடம் பின்வருமாறு வேண்டினார்: ''எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!'' (யோவா 17:21); இஃதுடன் அர் தமது திருச்சபையில் நற்கருணை எனும் வியத்தகு அருளடையாளத்தையும் ஏற்படுத்தினார். இது திருச்சபையின் ஒன்றிப்பைக் குறித்துக்காட்டி, விளைவிக்கிறது. மேலும் ஒருவர் ஒருவருக்கு அன்பு செய்ய வேண்டும் என்னும் புதிய கட்டளையும் அவர் தம் சீடர்களுக்கு அளித்தார்.3 ஆண்டவருடன் உயிரளிப்பவருமான ஆவி எனும் துணையாளர் அவர்களுடன் என்றும் இருப்பார் எனவும் அவர்களுக்கு வாக்களித்தார்.4
சிலுவையில் உயர்த்தப்பட்டு ஆண்டவராக மாட்சிமை பெற்றவர் இயேசு. அவர் தாம் வாக்களித்த ஆவியைப் பொழிந்தார். இந்த ஆவியின் வழி அவர் புதிய உடன்படிக்கையின் மக்களாகிய திருச்சபையை நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகியவற்றின் ஒருமைப்பாட்டிற்கு அழைத்து ஒன்று சேர்த்துள்ளார். இதையே தூய பவுல் பின்வருமாறு கற்பிக்கிறார்: ''நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே'' (எபே. 4:4-5). அவ்வாறெனில், ''கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்'' (கலா 3:27-28). நம்பிக்கை கொண்டோரிடம் குடிகொண்டுள்ள தூய ஆவி திருச்சபை முழுவதிலும் நிறைந்து நின்று அதை ஆண்டுவருகிறார்; அனைவரையும் கிறிஸ்துவில் எவ்வளவு நெருக்கமாக ஒருங்கிணைக்கிறார் என்றால், திருச்சபையின் ஒன்றிப்பிற்கு அவரே ஊற்று. ''திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும்'' (எபே 4:12) அவர் இயேசு கிறிஸ்துவின் பலவகையான பணிகளால் அதனை வளப்படுத்துகிறார். இதற்காக வெவ்வேறான கொடைகளையும் திருத்தொண்டுகளையும் அவரே அதற்குப் பகிர்ந்தளிக்கிறார்.5 தமது இத்தூயத் திருச்சபையைக் காலங்களின் இறுதி வரை உலகெங்கும் நிலைநாட்டும் பொருட்டு, போதித்து ஆண்டு தூய்மைப்படுத்தும் பணியைக் கிறிஸ்து பன்னிருவர் குழுவிடம் ஒப்படைத்தார்.6 அவர்களிள் பேதுருவைத் தேர்ந்தெடுத்து அவரது நம்பிக்கை அறிக்கைக்குப் பின் அவர் மீது தமது திருச்சபையைக் கட்டுவதாக முடிவு செய்தார்; விண்ணரசின் திறவு கோல்களையும் அவருக்குத் தருவதாக வாக்களித்தார்;7 அவர் தம் அன்பை அறிக்கையிட்ட பின் தம் ஆடுகள் யாவற்றையும் நம்பிக்கையில் உறுதிப்படுத்துமாறும்8 நிறைவான ஒற்றுமையில் அவற்றை ஊட்டி வளர்க்குமாறும் அவரிடம் ஒப்படைத்தார்.9 எனினும் கிறிஸ்து இயேசுவே மூலைக்கல்லாகவும்10 நம் ஆன்மாக்களின் ஆயனாகவும் எக்காலங்களுக்கும் விளங்குகிறார்.11
திருத்தூதர்களும் பேதுருவின் வழித்தோன்றலைத் தலைவராகக் கொண்ட ஆயர்களான அவர்களின் வழிமரபினரும் உண்மையுடன் நற்செய்தியைப் பறைசாற்றுவதாலும், அருள் அடையாளங்களை வழங்குவதாலும் அன்புடன் வழிநடத்துவதாலும் தூய ஆவியின் செயலாற்றலால் தம் மக்கள் வளரவேண்டுமென இயேசு விரும்புகிறார். அஃதுடன் ஒரே நம்பிக்கையை அறிக்கை இடுவதாலும் இறைவழிபாட்டை இணைந்து கொண்டாடுவதாலும் கடவுளின் குடும்பத்துக்குரிய சகோதர உணவர்வால் ஒருமனப்பட்டு இருந்தலாலும் அவர்களின் ஒன்றிப்பை அவர் நினைவு செய்கிறார்.
இவ்வாறு கடவுளின் ஒரே மக்கள் குழுவான திருச்சபை நாடுகளிடையே உயர்த்தப்பட்ட அருளடையாளமாகத் துலங்குகிறது;12 மனித இனம் முழுவதற்கும் அமைதியின் நற்செய்தியை அளிக்கிறது;13 தனது குறிக்கோளாகிய விண்ணகத் தாய்நாடு நோக்கி எதிர்நோக்குடன் பயணம செல்கிறது.14
தூய ஆவி தரும் வெவ்வேறு கொடைகளாலும் கிறிஸ்துவிலும் கிறிஸ்து வ ழியாகவும் அமையும் திருச்சபையினது ஒன்றிப்பின் தூய மறைபொருள் இதுவே. தந்தை, மகன், தூய ஆவி என்னும் ஒரே கடவுளின் மூன்று ஆள்களிடையே நிலவும் ஒன்றிப்பே இந்த மறைபொருளின் ஒப்பற்ற மாதிரியும் ஊற்றும் ஆகும்.
கத்தோலிக்கத் திருச்சபையும் பிற கிறிஸ்தவச் சபையினரும்
3. தொடக்கக் காலங்களிலிருந்தே கடவுளது இந்த ஒரே திருச்சபையில் பிளவுகள் சில தோன்றியுள்ளன.15 அவை கண்டிக்கத் தக்கவை எனத் திருத்தூதர் தூய பவுல் வன்மையாகக் கடிந்துரைத்துள்ளார்.16 எனினும் அதைத் தொடர்ந்த நூற்றாண்டுகளில் இன்னும் பெரிய கருத்து வேறுபாடுகள் தோன்றின் மிகப்பெரிய சமூகங்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் முழு ஒன்றிப்பிலிருந்து பிளவுபட்டன. இப்பிளவுகளுக்கான குற்றம் சில வேளைகளில் இருதிறத்தாரிடமும் இல்லாமலில்லை. எனினும் இந்தச் சமூகங்களில் இப்போது பிறந்து கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டிருப்போரைப் பிரிவினைக் குற்றத்திற்கக் காரணமானவர்கள் என நாம் குறை கூறுதல் சரியாகாது. கத்தோலிக்கத் திருச்சபை அவர்களைச் சகோதர மரியாதையுடனும் அன்புடனும் அரவணைக்கிறது. ஏனெனில், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டு திருமுழுக்கை முறையாகப் பெற்றுள்ள இவர்கள் நிறைவற்றதெனினும் ஓரளவான ஒன்றிப்பில் கத்தோலிக்கத் திருச்சபையுடன் இணைந்துள்ளனர். கோட்பாடு, சில வேளைகளில் ஒழுங்குமுறை அல்லது திருச்சபை அமைப்பு என்பவற்றில் அவர்களுக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையில் பல்வேறு அளவுகளில் வேறுபாடுகள் நிலவுகின்றன. இதனால் திருச்சபையின் முழுமையான ஒன்றிப்புக்குத் தடைகள் பல எழுகின்றன என்பது உண்மையே. இத்தடைகள் சிலவேளைளில் கடுமையானவையும் கூட. இத்தடைகளை மேற்கொள்ள முயலுகிறது கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம். இருப்பினும் நம்பிக்கையால் திருமுழுக்கில் சால்பு பெற்ற இவர்கள் கிறிஸ்துவின் உடலோடு இணைக்கப்பட்டுள்னர்.17 இதனால் கிறிஸ்தவர்கள் எனும் பெயரால் உரிமையுடன் அணி செய்யப்படுகின்றனர்; ஆண்டவரில் உடன் பிறப்புகள் எனக் கத்தோலிக்கத் திருச்சபையின் மக்களால் முறையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.18
மேலும் ஒன்றாக இணைந்து திருச்சபைக்கு வளர்ச்சியளித்து, உயிரூட்டும் மிக முக்கிய கூறுகள் அல்லது நலன்களுள் சில, ஏன் மிகப்பல, கத்தோலிக்கத் திருச்சபையின் காணக்கூடிய எல்லைகளுக்கு வெளியிலும் இருக்கமுடியும். எழுத்து வழவம் பெற்ற இறைவாக்கு, அருள்வாழ்வு, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு தூய ஆவியின் பிற உள்ளார்ந்த கொடைகள், காணக்கூடிய கூறுகள் என்பன அத்தகைய நலன்களே. இவையெல்லாம் கிறிஸ்துவினது ஒரே திருச்சபையின் உரிமைச் சொத்தாக உள்ளன.
மேலும், பிற கிறிஸ்தவச் சபைச் சகோதரர், சகோதரிகளும் கிறிஸ்தவச் சமயத்தின் பல வழிபாட்டுச் செயல்களை ஆற்றுகின்றனர். இச்செயல்கள் ஒவ்வொரு சபையின் அல்லது சமூகத்தின் மாறுபட்ட சூழமைவுக்கு ஏற்ப வெவ்வேறு வழிகளில் அருள் வாழ்வை உண்மையில் பிறப்பிக்க முடியும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. மீட்புச் சமூகத்தில் மக்களை ஒன்றாகச் சேர்க்க இவை வல்லவை எனக் கருதப்பட வேண்டும்.
இந்தப் பிற கிறிஸ்தவச் சபைச் சகோதரர், சகோதரிகளும் கிறிஸ்தவச் சமயத்தின் பல வழிபர்டுச் செயல்களை ஆற்றுகின்றனர். இச்செயல்கள் ஒவ்வொரு சபையின் அல்லது சமூகத்தின் மாறுபட்ட சூழமைவுக்கு ஏற்ப n வவ்வேறு வழிகளில் அரள் வாழ்வை உண்மையில் பிறப்பிக்க முடியும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. மீட்புச் சமூகத்தில் மக்களை ஒன்றாகச் சேர்க்க இவை வல்லவை எனக் கருதப்பட வேண்டும்.
இந்தப் பிற கிறிஸ்தவச் சபைகளும்19 சமூகங்களும் ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருக்கும் குறைகளைக் கொண்டவை என நாம் கருதினாலும், மீட்பின் மறைத் திட்டத்தில் அவை தம் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் இழந்துவிடவில்லை. ஏனெனில் இவற்றையும் மீட்பின் கருவிகளாகக் கையாள கிறிஸ்துவின் ஆவியார் திருளமானார். இக்கருவிகள் கத்தோலிக்கத்திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அருளினுடையவும் உண்மையினுடையவும் நிறைவிலிருந்து தம் ஆற்றலைப் பெறுகின்றன.
இருப்பினும், தம்மால் ஒரே உடலாகப் புதுவாழ்வுக்கு, மறுபிறப்பு அடைந்தவர்களுக்கும், ஒருங்கிணைந்து உயிரூட்டப்பட்டவர்களுக்கும் இயேசு கிறிஸ்து ஒன்றிப்பை அருளத் திருவுளமானார். விவிலியமும் மதிப்பிற்குரிய திருச்சபை மரபும் அறிக்கையிடுகிற அந்த ஒன்றிப்பைப் பிற கிறிஸ்தவச் சபைச் சகோதரர், சகோதரிகள் தனியார் எனும் முறையிலோ சமூகங்கள் அல்லது சபைகள் என்னும் முறையிலோ n காண்டிருக்கவில்லை. ஏனெனில் கிறிஸ்துவின் கத்தோலிக்கத் திருச்சபை நிறைவாழ்வு அடைய பொதுவான வழிவகைகளைக் கொண்டுள்ளது. அதன் வழியாக மட்டுமே நிறைபேற்றின் எல்லா வழிவகைகளும் முழுமையை அடைய முடியும். கிறிஸ்துவின் ஒரே உடலை உலகில் உருவாக்கப் பேதுருவைத் தலைவராகக் கொண்ட திருத்தூதர்களின் ஒரே குழுவிடமே புதிய உடன்பழக்கையின் நலன்களையெல்லாம் ஆண்டவர் ஒப்படைத்தார் என நாம் நம்புகிறோம். கடவுளின் மக்களுடன் எந்த வகையிலாவது ஏற்கெனவே சேர்ந்தவர்கள் எல்லாரும் கிறிஸ்துவின் இந்த உடலுடன் ஒன்றிப்பது தேவை. மண்ணுலகில் பயணம் செல்லும் இம்மக்கள்குலம் பாவத்தின் இடருக்கு உட்பட்டிருப்பினும், கிறிஸ்துவில் அது வளர்கின்றது; வானக எருசலேமில் முடிவில்லா மாட்சிமையின் நிறைவை மகிழ்வுடன் அடையும் வரை கடவுளின் அறிவுக்கு எட்டாத் திட்டங்களால் அது இனிதே நடத்திச் செல்லப்படுகின்றது.
கிறிஸ்தவ ஒன்றிப்பு
4. இன்று உலகின் பல பகுதிகளிலும் தூய ஆவியின் அருளால் தூண்டப்பட்டு, இயேசு கிறிஸ்து விரும்பிய ஒன்றிப்பின் நிறைவை அடையுமாறு இறைவேண்டல், சொல், செயல் போன்ற பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே, காலத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்து ஒன்றிப்புப் பணியில் ஆர்வமுடன் பங்குகொள்ள வேண்டுமென அனைத்துக் கத்தோலிக்கர்களுக்கும் இத்திருச்சங்கம் அறிவுறுத்துகின்றது.
''கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம்'' என்னும் சொல் திருச்சபையின் பல்வேறு தேவைகளுக்கும் காலம் தரும் வாய்ப்புகளுக்கும் ஏற்பக் கிறிஸ்தவர்களிடையே ஒன்றிப்பை வளரச்செய்வதற்கென மேற்கொள்ளப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகின்ற செயல்களையும் ஈடுபாடுகளையும் குறிக்கின்றது. அவற்றுள் கீழ்வருவன அடங்கும்: முதலில் பிற கிறிஸ்தவச் சபைச் சகோதரர், சகோதரிகளின் நிiயைச் சரியாகவும் உண்மையாகவும் எடுத்துக்காட்டாது இதனால் அவர்களுடன் உறவு ஏற்படத் தடையாய் அமைகின்ற சொற்கள், தீர்ப்புகள், செயல்களைத் தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள்; அடுத்து, வெவ்வேறு சபைகளை அல்லது சபைச் சமூகங்களைச் சார்ந்த திறமை வாய்ந்த வல்லுநர்களுக்கிடையில் நிகழும் உரையாடல். சமய உணர்வுடன் ஏற்பாடு செய்யப்படும் அவர்களுடைய சந்திப்புகளில் அவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் சபையின் படிப்பினைகளைக் கருத்தாழத்துடனும் இத்தகைய உரையாடலால் அனைவரும் இரு திறத்தாரின் படிப்பினைகள், வாழ்வு பற்றி உண்மையாக அறிகின்றனர்; அவற்றைச் சரியாக மதிப்பிடுகின்றனர். மேலும், உரையாடலால் மேற்கூறிய சமூகங்கள் பொது நலன் குறித்துக் கிறிஸ்துவ மனச்சான்றுன கோருகின்ற எல்லாப் பணிகளிலும் அதிக ஈடுபாட்டோடு ஒத்துழைக்கின்றன. அத்துடன் அவை அனுமதிக்கப்பட்ட இடங்களில் பொது இறைவேண்டலுக்காகக் கூடுகின்றன. இறுதியாக, இவ்வுரையாடல் மூலம், திருச்சபை பற்றியக் கிறிஸ்துவின் விருப்பத்தைத் தாங்கள் நேர்மையுடன் நிறைவேற்றுகின்றனரா என அனைவரும் தங்களையே ஆய்கின்றனர். தேவைக்கேற்றவாறு புதுப்பித்துச் சீர்ப்படுத்தும்பணியிலும் ஊக்கமுடன் ஈடுபடுகின்றனர்.
கத்தோலிக்கர் இத்தகைய சபைகளில் தங்கள் அயர்களின் வழிகாட்டலுக்கேற்ப முன்மதியோடும் பொறுமையோடும் ஈடுபமும்போது அவர்கள் நேர்;மை, உண்மை, உள ஒருமைப்பாடு, ஒத்துழைப்பு, சகோதர அன்பு, ஒற்றுமை உணர்வுகளையும் வளர்க்கிறார்கள். இவ்வழியாய்த் திருச்சபையின் முழு ஒன்றிப்புக்குத் தடையாய் இருப்பவை அனைத்தும் படிப்படியாக அகல, ஒரே நற்கருணை வழிபாட்டில் எல்லாக் கிறிஸ்தவர்களும் ஒரே ஒரு திருச்சபையின் ஒன்றிப்பில் ஒருங்கிணைவர். தொடக்கத்திலிருந்தே கிறிஸ்து தமது திருச்சபைக்கு அருளிய ஒன்றிப்பு இதுவே. இவ்வொன்றிப்பு இழக்கக்கூடாத ஒன்றாகக் கத்தோலிக்கத் திருச்சபையில் நின்று நிலவுகிறது என நாம் நம்புகிறோம்; மேலும் இது காலங்களின் இறுதிவரை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருமெனவும் எதிர்பார்க்கிறோம்.
முழுக் கத்தோலிக்க ஒன்றிப்பில் இணைய விரும்பும் தனி மனிதரைத் தயார் செய்து அவர்களை மீண்டும் ஒப்புரவாக்கும் அலுவல் கிறிஸ்தவ ஒன்றிப்பு முயற்சிகளிலிருந்து தன்னியல்பிலே வேறானது என்பது தெளிவு. எனினும் இவை இரண்டுக்குமிடையே எவ்வித முரண்பாடும் இல்லை. ஏனெனில் இவை இரண்டிற்கும் கடவுளின் வியத்தகு திட்டமே ஊற்றாகும்.
ஒன்றிப்பு முயற்சிகளில் ஈடுபடும்போது கத்தோலிக்கர், பிற கிறிஸ்தவ சகோதரர், சகோதரிகள் மட்டில் அக்கறை கொண்டிருக்க வேண்டும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. இவர்களுக்காகக் கடவுளை வேண்டுவதாலும் திருச்சபையைப் பற்றி அவர்களுக்கு எடுத்துச் சொல்லுவதாலும், அவர்களை நோக்கி முதல் அடியெடுத்து வைப்பதாலும் மேற்கூறிய அக்கறை எண்பிக்கப்படட்டும். யாவற்றிற்கும் மேலாக, கத்தோலிக்க நம்பிக்கை கொண்டோர் கத்தோலிக்கத் திருச்சபையாம் குடும்பத்திலேயே புதுப்பிக்கவும் செயல்படுத்தவும் வேண்டியவற்றைப் பற்றி நேர்மையோடும் கவனத்தோடும் ஆராய வேண்டும். இதனால் கத்தோலிக்கத் திருச்சபை கிறிஸ்துவிடமிருந்து திருத்தூதர்களின் வழியாகப் பெற்ற போதனையையும் அமைப்புகளையும் பற்றி அதிக உண்மையுடனும் தெளிவுடனும் சான்று பகர்கின்ற வாழ்வு வாழமுடியும்.
கத்தோலிக்கத் திருச்சபை கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையனைத்தாலும் எல்லா அருள் வழிகளாலும் வளப்படுத்தப் பெற்றிருக்கிறது. எனினும் உறுப்பினர்கள், தாங்கள் கொண்டிருக்க வேண்டிய அளவுக்கு ஆர்வத்தோடு அவைகளின்படி வாழத் தவறுகிறார்கள். இக்காரணத்தால், திருச்சபையின் முகம் பிற கிறிஸ்தவ சகோதரர், சகோதரிகளுக்கும் உலக முழுவதற்கும் ஒளி குன்றிக் காணப்படுகின்றது; இறையாட்சியின் வளர்ச்சி தடைபடுகிறது. எனவே, கத்தோலிக்கர் யாவரும் கிறிஸ்தவ நிறை வாழ்வை அடைய முயல வேண்டும்.20
தனது சொந்த உடலிலே இயேசுவின் மனத்தாழ்வையும் சாவுக்குரிய துன்பங்களையும் தாங்கியுள்ள திருச்சபை21 கறைதிரை ஏதுமின்றிக் கிறிஸ்து அதனைத் தம் திருமுன் மகிமையோடு துலங்கச் செய்யும்வரை.22 நாளுக்கு நாள் அதிகமாகத் தூய்மைப் படுத்தப்பெற்றுப் புதுப்பிக்கப்பெற வேண்டும். இந்நோக்கத்தை அடைவதற்கு ஒவ்வொரு கிறிஸ்தவரும் தமது நிலைக்கேற்ப உழைக்க வேண்டும்.
இன்றியமையாதவற்றைப் பொறுத்த மட்டில் திருச்சபையில் உள்ள யாவரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அவரவர்க்கு அளிக்கப்பட்ட அலுவலுக்கேற்ப அருள் வாழ்வையும் ஒழுங்கையும் சார்ந்தவற்றிலும், வேறுப்ட வழிபாட்டு முறைகளிலும், ஏன் இறைவெளிப்பாட்டு உண்மைகளை இறையியலில் விரிவுபடுத்துதலிலும்கூட ஒவ்வொருவருக்கும் உரிய சுதந்திரம் உண்டு. ஆனால் அனைத்திலும் அன்பை அடிப்படையாகப் பேண வேண்டும். இம்முறையில் செயல்படும்போது திருச்சபை உண்மையிலே பொதுவானது என்பதையும், திருத்தூதர் வழிவந்ததென்பதையும் அவர்கள் நாளுக்கு நாள் அதிக நிறைவாக வெளிக்காட்டுவார்கள்.
அதே நேரத்தில் பிற கிறிஸ்துவச் சபைச் சகோதரர், சகோதரிகளிடையே காணப்படுகின்ற பொது மரபுக் கருவூலத்திலிருந்து வந்த உண்மையான கிறிஸ்தவ நலன்களைக் கத்தோலிக்கர் மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளவும் மதிக்கவும் கடமைப்பட்டிருக்கிறார்கள். கிறிஸ்துவுக்குச் சான்று கூறுகின்ற பிறரின் வாழ்வில் கிறிஸ்துவின் செல்வங்களையும் நற்பணிபுகளிலிரு;நது பிறக்கும் செயல்களையும் ஏற்று மதித்தல் சரியானதும் நலம் பயப்பதுமான செயலாகும். சில நேரங்களிலே இச்சான்று இரத்தம் சிந்தும் அளவுக்கூடச் சென்றிருக்கின்றது. ஏனெனில், கடவுள் எப்போதுமே வியப்புக்குரியவர்; தம்முடைய செயல்களிலே நம்மால் வியக்கப்பட வேண்டியவர்.
பிற கிறிஸ்தவச் சகோதரர், சகோதரிகள் நடுவே தூய ஆவியின் அருளால் செயலாக்கப்பெறுகின்ற எல்லாமே நமது மேம்பாட்டிற்கும் உதவ முடியும் என்பதை நாம் மறந்து விடலாகாது. உண்மையான கிறிஸ்தவ பண்பு வாய்ந்த எதுவுமே நம்பிக்கையின் சீரிய நலன்களுக்கு ஒருபோதும் முரண் அன்று. மாறாக, கிறிஸ்துவினுடையவும் திருச்சபையினுடையவும் மறைபொருளை அதிக நிறைவான முறையில் உணர்ந்தறிய அது துணை செய்யக்கூடும்.
திருமுழுக்கின் வழியாகத் திருச்சபையோடு இணைந்திருந்தும் அஃதோடு முழுமையாக ஒன்றித்திராதவர்கள் உள்ளனர். திருச்சபைக்கே உரித்தான பொதுமைப் பண்பு இவர்களிடத்தில் முழுமையாக நடைமுறையில் செயலாக்கம் பெறுவதற்குக் கிறிஸ்தவர்களிடையே உள்ள பிளவுகள் தடையாக நிற்கின்றன. இதுமட்டுமன்று, திருச்சபையின் பொதுமைப் பண்பு நடைமுறை வாழ்வின் எல்லாக் கோணங்களிலும் வெளிப்படா வண்ணம்; இந்தப் பிளவுகள் தடுகின்றன.
கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணியில் கத்தோலிக்கர் நாளுக்கு நாள் அதிக ஈடுபாடு கொள்வதுபற்றி இத்திருச்சங்கம் மகிழ்வடைகிறது: இவ்வலுவலைத் திறமையுடன் ஊக்குவித்து முன்மதியுடன் வழிநடத்துமாறு உலகெங்குமுள்ள ஆயர்களிடத்தில் ஒப்படைக்கின்றது.
இயல் 2
நடைமுறையில் கிறிஸ்தவ ஒன்றிப்பு
கிறிஸ்தவ ஒன்றிப்பில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டும்
5. ஒன்றிப்பை மீண்டும் கொணரும் பணி திருச்சபை முழுவதையும் - அதாவது நம்பிக்கை கொண்டோரையும் அருள் பணியாளர்களையும் - சார்ந்ததாகும். மேலும், ஒவ்வொருவரின் அன்றாடக் கிறிஸ்தவ வாழ்விலும் இறையியல், வரலாற்று ஆராய்ச்சிகளிலும் அவரவர்களின் ஆற்றல்களுக்கேற்ப இப்பணியில் அவர்கள் ஆர்வம் கொள்ளவேண்டும். ஒன்றிப்புப் பற்றிய இந்த ஆர்வம் எல்லாக் கிறிஸ்தவர்களிடையிலும் சகோதர இணைப்பு ஒரு வகையில் ஏற்கனவே இருப்பதை வெளிப்படுத்துகிறது; கடவுள் அன்புடன் விரும்பும் முழு நிறைவான ஒற்றுமைக்கும் இட்டுச் செல்கிறது.
திருச்சபையின் மறுமலர்ச்சி
6. திருச்சபையில் நிகழும் மறுமலர்ச்சி எதுவும்23 அது தனது அழைத்தலில் அதிக நேர்மையுடையதாய் வளர்வதில்தான் அடங்கியுள்ளது. ஒன்றிப்பை நிலைநாட்டும் இயக்கத்திற்கும் இவ்வுண்மையே அடிப்படை என்பதில் ஐயம் ஏதுவுமில்லை. இந்தத் தொடர் சீர்த்திருத்தத்திற்குக் கிறிஸ்து ப யணம் செல்லும் திருச்சபையை அழைக்கிறார். மண்ணுலகில் உள்ள ஒரு மனித நிறுவனம் என்னும் வகையில் இச்சீர்த்திருத்தம் திருச்சபைக்கு எப்போதும் தேவை. எனவே, க hலம் அல்லது நிகழ்வுகளின் காரணமாகத் திருச்சபையின் வழக்கங்களிலோ ஒழுங்கு முறைகளிலோ, ஏன் கோட்பாடுகளை எடுத்துக்கூறும் முறையிலோ கூட, குறைகள் இருப்பின் இவற்றைத் தக்க தருணத்தில் சரியாகவும் முறையாகவும் புதுப்பித்தல் வேண்டும். இவவாறு செய்யும்போது கோட்பாடுகளை எடுத்துரைக்கும் முறைகளைக் கிறிஸ்தவ நம்பிக்கைக் கருவூலத்திலிருந்து கவனமாக வேறுபடுத்திப் பார்ப்பது தேவை.
ஆகவே இம்மறுமலர்ச்சி கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கத்தில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கெனவே திருச்சபையினது வாழ்வின் பல்வேறு துறைகளிலும் இந்த மறுமலர்ச்சி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விவிலியம், திருவழிபாட்டு இயக்கங்கள், இறைவார்த்தைப் போதனை, மறைக்கல்விப் பயிற்சி, பொதுநிலையினரின் திருத்தூதுப் பணி, துறவற வாழ்வில் புதுமுறைகள், திருமண அருள் நெறி, திருச்சபையின் சமூகப் படிப்பினை, சேவை என்பன போன்றவை இத்துறைகள். இவை எல்லாம் ஒன்றிப்பு இயக்கத்தின் வருங்கால வளர்ச்சிக்கு உறுதி மொழிகளாகவும் நல்ல அறிகுறிகளாகவும் கருதப்பட வேண்டும்.
இதய மாற்றம்
7. மனமாற்றம் இன்றி உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பு இருக்க இயலாது. ஏனெனில், ஒற்றுமைக்கான ஆர்வம் தோன்றி வளர்வது உள்ளத்தைப் புதுப்பித்தல்,24 தன்னையே ஒறுத்தல், அன்பைத் தாராளமாகப் பொழிதல் என்பவற்றால்தான். எனவே உண்மையான தன்னொறுத்தல், மனத்தாழ்மை, பணிசெய்வதில் நற்பண்பு, பிறரிடம் சகோதரப் பண்புடைய பெருந்தன்மை, என்பவற்றைச் சகோதரப் பண்படைய பெருந்தன்மை, என்பவற்றைக் கொண்டர்களாக நாம் விளங்குவதற்குரிய அருள் தர இறை ஆவியை நாம் மன்றாட வேண்டும். ''ஆதலால் ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும்நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து தூய ஆவி அருளும் ஒருமைப் பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்.'' (எபே: 4:1-3) எனப் பிற இனத்தாரின் திருத்தூதர் அறிவுரை கூறுகிறார். ''தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றுவதற்கு'' (மத்.20:28). நம்மிடை வந்து கிறிஸ்துவின் பணியைத் தொடரத் திருநிலை பெற்றவர்களுக்கு முக்கியமாக இவ்வறிவுரை பொருந்துகிறது.
''நாம் பாவம் செய்யவில்லை என்போமென்றால் அவரைப் பொய்யராக்குவோம். அவருடைய வார்த்தை நம்மிடம் இல்லை என்றாகும்.'' (1 யோவா 1:10) என்பது, தூய யோவானின் சான்று. அது ஒன்றிப்புக்கு எதிரான குற்றங்களுக்கும் பொருந்தும். ஆகவே, தாழ்மையான வேண்டதல் எழுப்பிக் கடவுளிடமும் பிற கிறிஸ்தவ சபைச் சகோதரர், சகோதரிகளிடமும் நாம் மன்னிப்புக் கோருகிறோம், நமக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாமும் மன்னிக்கிறோம்.
நற்செய்தி ஏற்பத் தூய வாழ்வு நடத்த முயலும் அளவுக்குத் தான் கிறிஸ்தவ ஒன்றிப்பை சிறந்த முறையில் வளர்த்து அதை உண்மையில் செயல்படுத்துகினற்னர் என்பதைக் கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோர் நினைவில் கொள்ளவேண்டும். ஏனெனில் தந்தை, வாக்கு, தூய ஆவியுடன் எவ்வளவுக்கு நெருங்கி ஒன்றித்திருக்கிறார்களோ அவ்வளவு நெருக்கமாகவும் எளிதாகவும் அவர்கள் ஒருவர் ஒருவருடன் உள்ள சகோதர உறவை வளர்க்க முடியும்.
இறை வேண்டலில் ஒன்றித்தல்
8. இந்த இதய மாற்றம், வாழ்வின் தூய்மை, கிறிஸ்துவ ஒன்றிப்புக்கான பொது, தனி இறை வேண்டல்கள் என்பவையே கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கம்முழுவதன் உயிர்நாடியாகக் கருதப்படவேண்டும். இவை அருள்நிலை சார்ந்த ஒன்றிப்பு இயக்கம் என அழைக்கப்படும் தகுதியுடையன.
''ஒற்றுமைக்காக'' நடத்தப்பெறும் இறை வேண்டல்கள், கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கக் கூட்டங்கள் போன்ற தனிப்பட்ட சில சூழ்நிலைகளில் கத்தோலிக்கர் பிற கிறிஸ்தவச் சபைச் சகோதரர், சகோதரிகளுடன் இணைந்து இறைவனை வேண்டுவது அனுமதிக்கப்படுவது மட்டுமன்று, விரும்பத் தக்கதும்கூட. ஒன்றிப்புக்கான அருளை வெண்ட இத்தகைய பொது இறை வேண்டல்கள் ஆற்றல் படைத்தவை என்பதில் ஐயமில்லை. அத்தோடு, இவை கத்தோலிக்கர்களைப் பிற கிறிஸ்தவச் சகோதரர், சகோதரிகளுடன் இதுவரை இணைந்திருக்கும் பிணைப்புகளைச் சீரிய முறையில் எடுத்துக் காட்டுகினற்ன. ஏனெனில், ''இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ, அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்'' (மத் 18:20) என்கிறார் ஆண்டவர்.
எனினும், ஒரே திருவழிபாட்டில் கலந்து கொள்ளுதல் கிறிஸ்தவ ஒன்றிப்பை மீண்டும் நிலைநாட்டுவதற்காக எப்போதும் கையாளப்பட கூடிய ஒரு வழிமுறையாகக் கருதப்படல் ஆகாது. சபைகள் கூடி வழிபடுவது முக்கியமாகக் கருதப்படல் ஆகாது. சபைகள் கூட வழிபடுவது முக்கியமாகக் கீழ்க்காணும் இரு தத்துவங்களின் அடிப்படையில் நிகழவேண்டும்: திருச்சபையின் ஒற்றுமை வெளிப்படுதல், அருள் வழிகளில் பங்கு கொள்ளுதல். ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்குச் சபைகளின் கூட்டு வழிபாடு பலகாறும்இடமளிப்பதில்லை. அருளை அடைவதற்குச் சபைகளின் கூட்டு வழிபாடு சில வேளைகளில் ஏற்றதாக அமைகிறது. தன் ஒழுங்குமுறைகளின்படி ஆயர் பேரவையோ திருச்சபை ஆட்சிப்பீடமோ வேறு விதமாகத் தீர்மானிக்காதிருக்கும்போது, காலம், இடம், ஆள்கள் சார்ந்த சூழமைவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு, மேற்கூறியது குறித்து நடைமுறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை முன்மதியுடன் தீர்மானிப்பது தல ஆயரின் உரிமை.
ஒருவர் ஒருவரைப் பற்றிய அறிவு
9. பிற கிறிஸ்தவச் சபைச் சகோதரர், சகோதரிகளின் உள்ளத்தை நாம் அறிதல் தேவை. அதற்கு ஆய்வு இன்றியமையாதது. அந்த ஆய்வு உண்மையின் அடிப்படையிலும் நல்லெண்ணத்துடனும் செய்யப்பட வேண்டும். தகுந்த ப யிற்சி பெற்ற கத்தோலிக்கர் பிற கிறிஸ்துவச் சபைச் சகோதரர், சகோதரிகளுக்கே உரிய கோட்பாடுகள், வரலாறு, அருள் வாழ்வு, திருவழிபாட்டு வாழ்வு, சமய உளவியல், பண்பாடு ஆகியவை பற்றிச் சிறந்த அறிவு பெறவேண்டும். முக்கியமாக, இறையியல் பிரச்சினைகள் பற்றி இருதரப்பாரும் கலந்து பேசுவதற்கான கூட்டங்கள் இவற்றிவைப் பெறப் பெரிதும் உதவுவன. இக்கூட்டங்களிலே ஒவ்வொருவரும் பிறர் மட்டில் சம்மதிப்போடு நடந்துகொள்ளுதல் அவசியம். ஆனால், ஆயர்களின் கண்காணிப்பின்கீழ் இக்கூட்டங்களில் பங்கு கொள்ளும் இவர்கள் உண்மையில் தகுதியுடையவர்களாய் இருக்க வேண்டும். இத்தகைய உரையாடலிலிருந்து திருச்சபையின் உண்மை நிலை என்ன என்பது அதிகத் தெளிவாகத் தோன்றும். இவ்வழியாகஈ பிற கிறிஸ்தவச் சகோதர, சகோதரிகளின் மனதை நாம் நன்கு அறிய முடியும்; அத்தோடு, நமது நம்பிக்கையும் அவர்களுக்கு அதிக ஏற்ற முறையில் விளக்கப் பெறும்.
கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான பயிற்சி
10. இறையியல், பிற அறிவுத்துறைகள், முக்கியமாக வரலாற்றுப் பாடங்ள் ஆகியவை கிறிஸ்தவ ஒன்றிப்புக் கண்ணோட்டத்தில் உண்மைக்குச் சரியாகப் பொருந்தும் வகையில் கற்றுத் தரப்பட வேண்டும்.
ஏனெனில் வருங்கால ஆயர்களும் திருப்பணியாளர்களும் மேற்கூறிய வகையில், விவாத மனப்பான்மை இன்றி நுட்பமாக உருவாக்கப்பட்ட இறையியலை நன்கு அறிந்திருத்தல் மிக முக்கியமானது. பிற கிறிஸ்துவச் சபைச் சகோதரர் சகோதரிகளுக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் உள்ள உறவைச் சார்ந்த மட்டில் இது மிகவும் பொருந்தும்.
இதற்குக் காரணம், கிறிஸ்தவ மக்களும் துறவறத்தாரும் பெறவேண்டிய அருள் பயிற்சியும் உருவாக்கமும் திருப்பணியாளர்களின் பயிற்சியை மிகவும் சார்ந்திருப்பதே.
மேலும், பிற கிறிஸ்தவச் சபைச் சகோதரர், சகோதரிகள் நற்செய்தி பணிபுரிகின்ற அதே இடங்களில் உழைக்கும் கத்தோலிக்கர், சிறப்பாக இன்று கிறிஸ்துவ ஒன்றிப்பு இயக்கம் தங்கள் நற்செய்தி பணிக்கு எழுப்பும் சவ h ல்களையும் கொணரும் பலன்களையும் அறிய வேண்டும்.
கத்தோலிக்க நம்பிக்கையை விளக்கும் முறை
11. கத்தோலிக்க நம்பிக்கையை நாம் எடுத்துரைக்கும் வகையும் முறையும் நம் சகோதரர், சகோதரிகளோடு உரையாடுவதற்குத் தடையாக ஒரு போதும் அமையக் கூடாது. முழுப் போதனையையும் தெளிவாக எடுத்துக் காட்ட வேண்டியது இன்றியமையாதது. பொய்யான சமரச நோக்கம் கத்தோலிக்கப் போதனையின் தூய்மையைக் கெடுத்து, அப்போதனையின் உண்மையான, உறுதியான பொருளைத் தெளிவற்றதாக்குகின்றது. இந்நோக்கத்தைப் போல கிறிஸ்துவ ஒன்றிப்பு உணர்வுக்குப் புறம்பானது எதுவுமில்லை.
அதே நேரத்தில், பிற கிறிஸ்தவச் சகோதரர், சகோதரிகளுக்கு உண்மையிலே புரியக்கூடிய முறையிலும், அவர்களுக்கு விளங்கக்கூடிய சொற்களிலும் கத்தோலிக்க நம்பிக்கையை அதிகக் கருத்தாழத்தோடும் சரியாகவும் அவர்களுக்கு விளக்கவேண்டும்.
மேலும், கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடலில் ஈடுபட்டிருக்கும் கத்தோலிக்க இறையியலார் திருச்சபைப் படிப்பினையில் உறுதியுடன் நிலைத்து நிற்க வேண்டும். அத்துடன் பிற கிறிஸ்தவச் சகோதரர், சகோதரிகளோடு இணைந்து கடவுளின் மறைத் திட்டங்களைப் பற்றி நடத்தும் ஆராய்ச்சியில் உண்மையின்மேல் பற்றோடும், அன்போடும், மனத்தாழ்மையோடும்நடந்து கொள்ளவேண்டும். கத்தோலிக்கக் கோட்பாட்டு உண்மைகளெல்லாம் கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையோடு வெவ்வேறு முறைகளிலே தொடர்பு கொண்டிருக்கின்றன. இதனால் கோட்பாடுகளை ஒத்துப் பார்க்கும் போது கத்தோலிக்கக் கோட்பாட்டு உண்மைகள் ஓர் ஒழுங்கு முறையை அல்லது 'பல நிலையுள்ள அமைப்பைக்' கொண்டுள்ளன என்பதைக் கத்தோலிக்க இறையியலார் மனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு ஒருவகைச் சகோதரப் போட்டியினால் அனைவரும் கிறிஸ்துவின் ஆழங்காணமுடியாச் செல்வங்களை ஆழ்ந்தறியவும் அதிகத் தெளிவாக அவற்றை வெளிப்படுத்தவும் தூண்டப் பெறுவதற்கான வழி பிறக்கிறது.25
பிற கிறிஸ்தவச் சபைச் சகோதரர், சகோதரிகளோடு ஒத்துழைத்தல்
12. மூவோரு கடவுளிலும் மனிதரான இறைமகனாகிய ஆண்டவராம் மீட்பரிலும் தங்களுக்குள்ள நம்பிக்கையை எல்லா இனத்தாருக்கும் முன்பாகக் கிறிஸ்தவர் அனைவரும்அறிக்கையிடுவார்களாக் இணைந்து முயன்று, ஒருவர் ஒருவருக்கு மதிப்பளித்து, நம் நம்பிக்கை நம்மை ஏமாற்றாது என்பதற்கு எல்லாரும் சான்று பகர்வார்களாக. சமூகச் செயல்பாடுகளிலே ஒத்துழைப்பு மிகப் பரவலாகி வரும் இந்நாள்களிலே எல்லா மக்களும் ஒன்றுகூடி உழைக்க அழைக்கப்படுகிறார்கள். சிறப்பாக, கடவுளை நம்பும் எல்லாருக்கும், அனைத்துக்கும் மேலாகக் கிறிஸ்துவின் பெயராலேயே குறிக்கப்பட்டவர்கள் என்னும் முறையிலே எல்லாக் கிறிஸ்தவர்களுக்கும், இவ்வழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. கிறிஸ்தவர் அனைவரின் ஒத்துழைப்பு அவர்களை ஏற்கெனவே இணைத்திருக்கும் இப்பிணைப்பை உயிர்த்துடிப்புள்ள முறையில் எடுத்துக்காட்டுகின்றது. அஃதோடு, ஊழியராகிய கிறிஸ்துவின் முகத்தோற்றத்தையும் தெளிவாக ஒளிரவைக்கிறது. ஏற்கெனவே பல நாடுகளில் தொடங்கியுள்ள இந்த ஒத்துடைப்பு இன்னும் அதிகமதிகம் வளர வேண்டும். சமூக, தொழில் நுட்பத் துறைப் பபுரட்சிகள் நடந்து கொண்டிருக்கின்ற பகுதிகளில் இந்த ஒத்துழைப்பு மேன்மேலும் வளர வேண்டும். மனிதரின் மேன்மையைச் சரியாக மதித்தல், அமைதி எனும் நலனை வளர்த்தல், நற்செய்தியைச் சமூக வாழ்க்கையிலே செயல்படுத்தல், கிறிஸ்தவ உணர்வோடு அறிவியல்களையும் கலைகளையும் முன்னேற்றுதல், பஞ்சம், இயற்கையின் பேரழிவுகள், கல்வியின்மை, வறுமை, வீடின்மை, சொத்தின் சமமற்ற பங்கீடு போன்ற இன்றைய துயர்களைக் களைவதற்கு வேண்டிய கூடுமான எல்லா வழிவகைகளையும் பயன்படுத்துதல் ஆகியவற்றில் அதிகமாக ஒத்துழைக்க வேண்டும். இத்தகைய ஒத்துழைப்பினால் கிறிஸ்துவை நம்பும் அனைவரும் ஒருவர் ஒருவரை நன்கு அறியவும் உயர்வாக மதிக்கவும் எளிதாகக் கற்றுக்கொள்கிறார்கள்; கிறிஸ்தவர்களின் ஒன்றிப்புக்கு இட்டுச் செல்லும் வழியை ஆயத்தப்படுத்தவும் எளிதாக அறிந்து கொள்கிறார்கள்.
இயல் 3
திருத்தூதர் பீடத்திலிருந்து பிரிந்து நிற்கும் சபைகளும் சமூகங்களும்
பல்வேறு பிளவுகள்
13. கிறிஸ்துவின் தையலற்ற ஆடையைப் பாதிக்கின்ற இருவகைப் பிளவுகளை நோக்கி நம் கவனத்தைச் செலுத்துவோம்.
எபேசு, கால்செதோன் சங்கங்களின் மறைக்கோட்பாட்டு வாய்பாடுகளையொட்டி எழுந்த சொற்களினாலும், பிற்காலத்தில் கீழைச்சபை மறைதந்தையரின் ஆட்சி வட்டாரத்திற்கும் உரோமை ஆட்சிப் பீடத்திற்குமிடையே திருச்சபை - உறவு முறிந்ததாலும் முதற் பிளவுகள் கீழை நாடுகளில் நிகழ்ந்தன.
நான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னர் 'சீர்திருத்தம்' எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் நிகழ்ச்சிகளிலிருந்து பிற பிளவுகள் மேலை நாடுகளில் நிகழ்ந்தன. இதனால், நாட்டளவிலோ, நம்பிக்கை அளவிலோ அமைந்த பல சமூகங்கள் உரோமை ஆட்சிப் பீடத்திலிருந்து பிரிந்து சென்றன. இவைகளுள் கத்தோலிக்க மரபுகளையும் அமைப்புகளையும் ஓரளவு கொண்டிருப்பவற்றில் ஆங்கிலிக்கச் சபை ஒரு தனி இடம் பெறுகின்றது.
எவ்வாறாயினும், இந்த வெவ்வேறான பிளவுகள், அவைகளின் தோற்றம், இடம்ஈ காலம் போன்றவற்றினால் மட்டுமின்றி, முக்கியமாக நம்பிக்கையையும் திருச்சபையின் அமைப்பையும் பொறுத்த அளவிலும் ஒன்றைவிட்டு ஒன்று பெரிதும் மாறுபடுகின்றன.
இக்காரணத்தின் பொருட்டு, திருச்சங்கம் வெவ்வேறு கிறிஸ்தவக் குழுக்களிடையே உள்ள வேறுபாடுகளைக் குறைவாய் மதிப்பிடவில்லை; வேறுபாடுகளிலிருப்பினும், அவைகளினூடே காணப்படுகின்ற பிணைப்புகளைப் புறக்கணிக்கவுமில்லை; முன்மதியுடன் கிறிஸ்தவ ஒன்றிப்புப் பணியை ஆற்றுவதற்கு அது கீழ்காணும் கருத்தாய்வுகளைத் தர முடிவு செய்கிறது.
1. கீழைச் சபைகளின் தனித்தன்மை
கீழைச் சபைகளின் தனிப் பண்பும் வரலாறும்:
14. கீழைச்சபைகளும் மேலைச் சபைகளும் பல நூற்றாண்டுகளாகத் தத்தம் தனிவழியே சென்றுகொண்டிருந்தன. இருப்பினும், நம்பிக்கையின் சகோதர ஒன்றிப்பாலும் அருளடையாள வாழ்வாலும் அவை இணைக்கப்பட்டிருந்தன. நம்பிக்கையிலோ ஒழுங்குமுறைகளிலோ அவற்றிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றியபோது உரோமை ஆட்சிப்பீடமே பொது ஒப்புதலோடு அவற்றிற்கு நடுவராய் இருந்தது. பலவற்றுள் ஒரு மிகமுக்கிய உண்மையை யாவருக்கும் நினைவூட்டுவதில் திருச்சங்கம் மகிழ்வு கொள்ளுகிறது. கீழை நாடுகளில் பல வட்டாரச் சபைகள் அவற்றுள் செழித்து வளருகின்றன. அவற்றுள் மறைத்தந்தையரின் சபைகள் முதலிடத்தைப் பெறுகின்றன் இம்மறைத்தந்தையர் சபைகளுள் பல திருத்தூதர்களிடமிருந்தே தாம் தோன்றியதாகப் பெருமை கொள்கின்றன. எனவே தமமக்குள் சகோதரிகள் போல் அமைந்த தலத் திருச்சபைளின் நடுவே நம்பிக்கை, அன்புறவின் அடிப்படையில் நிலவ வேண்டிய சகோதரப் பிணைப்புகளைக் காப்பதற்கான ஆர்வமும் அக்கறையும் கீழைச் சபைகளிடையே இருந்து வந்தது; இன்னும் இருந்து வருகின்றது.
அதுபோலவே, கீழைச்சபைகள் தொடக்கக் காலத்திலிருந்தே ஒரு கருவூலத்தைக் கொண்டிருந்தன என்பதை நாம் மறுத்தலாகாது. திருவழிபாட்டுத் துறையிலும் அருள் மரபிலும் சட்டதிட்டங்களிலும் பலவற்றை இதிலிருந்தே மேலைச் சபை எடுத்துள்ளது. கிழக்கு நாடுகளில் நடைபெற்ற பொதுச் சங்கங்களில்தான் மூவொரு கடவுள், கன்னிமரியாவிடம் மனிதரான இறைவாக்கு போன்ற கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படையான உண்மைகள் வரையறுக்கப் பெற்றன என்பதையும் நாம் குறைவாக மதிப்பிடக் கூடாது. இந்நம்பிக்கையைக் காப்பதற்காக இச்சபைகள் பல துன்பங்களை அனுபவித்தன் இன்றும் அனுபவிக்கின்றன.
திருத்தூதர் வழிவந்த மரபுச் செல்வம் பல வடிவங்களிலும் வழிகளிலும் திருச்சபைக்குக் கிடைத்திருக்கிறது; அது திருச்சபையின் தொடக்கக்காலத்திலிருந்தே மனப்பாங்கு, வாழ்க்கை நிலை போன்ற சூழமைவுகளின் வேறுபாடுகள் காரணமாக இங்கும் அங்கும் வெவ்வேறு முறைகளில் விளக்கப்பட்டது. இவைகளுள் பல புறக் காரணங்களும் ஒருவரு ஒருவரைப் புரிந்து கொண்டு அன்பு செய்வதில் நிகழ்ந்த குறைபாடும் பிளவுக்கு வழிவகுத்தன.
எனவே கீழைச்சபைகளின் தோற்றம், வளர்ச்சி ஆகியவற்றைச் சார்ந்த தனிப்பட்ட சூழமைவுகளையும், பிளவுக்குமுன் இவைகளுக்கும் உரோமை ஆட்சிப் பீடத்திற்கும் இடையே நிலவி வந்த உறவின் தன்மையையும் தகுந்த விதமாய் மனத்தில் கொள்ளுமாறு திருச்சங்கம் யாவருக்கும் அறிவுரை வழங்குகிறது. இவை அனைத்தையும் பற்றிய ஒரு சரியான எண்ணத்தைத் தமக்குத்தாமே உருவாக்கிக் கொள்ளுமாறும் இது எல்லாருக்கும் அறிவுரை அளிக்கிறது. சிறப்பாக, கத்தோலிக்கத் திருச்சபைக்கும்கீழைச் சபைகளுக்கும ;இடையே முழுஒன்றிப்பை மீண்டும் அடையும்படியாகத் தம் உழைப்பை அர்ப்பணிக்க முனைவோருக்குத் திருச்சங்கம், இவ்வறிவுரையை வழங்குகிறது. இவற்றை ஒழுங்காகக் கடைப்பிடிப்பின் நிகழவிருக்கும் உரையாடலுக்கு இவை மிகவும் உதவும்.
கீழைச்சபைகளின் திருவழிபாட்டு, அருள் மரபு
15. எத்துணை அன்போடு கீழைச்சபைக் கிறிஸ்தவர்கள் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை, சிறப்பாகத் திருச்சபை வாழ்வின் ஊற்றும் எதிர்கால மாட்சிமையின் முன்னுறதியுமான நற்கருணைப் பலியை நிறைவேற்றுகிறார்கள் என்பது யாவரும் அறிந்ததே. இந்த நற்கருணைப் பலியிலே தான் ஆயரோடிணைந்த நம்பிக்கை கொண்டோர் மனிதராகித் துன்புற்று இறந்து மாட்சிமைப்படுத்தப்பெற்ற வாக்காம் மகன் வழியாக இறைத் தந்தையின் சமூகத்திற்கு நுழைவுரிமை பெற்றுத் தூய ஆவியின் பொழிவால் ''இறைத் தன்மையில் பங்கு பெறும்படி'' (2பேது 1:4) தூய்மைமிகு மூவொரு கடவுளோடு ஒன்றித்து உறவாடுகின்றனர். எனவே, இந்த ஒவ்வொரு சபையிலும் நிகழும் ஆண்டவரின் நற்கருணைப் பலியின் வழியாக கடவுளின் திருச்சபை உருப்பெற்று வளர்ச்சியுறுகிறது;26 கூட்டுப்பலியின் வழியாக அவர்களது ஒன்றிப்பு வெளிப்படையாகிறது. விவிலியத்தின்படி கிறிஸ்து உண்மையாகவே இறை மகனும் மானிட மகனும் என ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக எபேசுப் பொருச்சங்கம் எப்போதும் கன்னியான மரியாவைக் கடவுளின் திருத்தாய் என ஆடம்பரமாக அறிக்கையிட்டது. இன்த கன்னி மரியாவைக் கீழைச்சபையார் திருவழிபாட்டிலே அழகான புகழ்ச்சிப் பாடல்களால் பெருமைப்படுத்துகின்றர்; பல தூயவரையும், அவர்களுள் அனைத்துலகத் திருச்சபைத் தந்தையரையும் போற்றுகின்றனர்.
இச்சபைகள் பிரிந்திருந்த போதிலும் உண்மையான அருளடையாளங்களைக் கொண்டுள்ளன. முக்கியமாக நம்மோடு அவர்களை நெருங்கிய பிணைப்பால் இணைக்கின்ற திருப்பணி நிலையையும் நற்கருணையையும் திருத்தூதர் வழி வருகையின் மூலம் கொண்டுள்ளன. எனவே, தகுந்த சூழ்நிலைகளில் திருச்சபை அதிகாரிகளின் ஒப்புதலுடன் இரு சபையினரும் ஒருங்கிணைந்து ஒரே வழிபாட்டில் பங்கெடுக்கலாம்; இவ்வாறு பங்கெடுப்பது ஊக்குவிக்கவும்படுகிறது.
மேலும், கீழைச்சபைகளில், சிறப்பாக ஆதீனத்துறவு வாழ்வு எடுது;துக்காட்டுகிற அருள்நெறி மரபுச் செல்வங்கள் காணக்கிடக்கின்ன. ஏனெனில், அங்குத் திருத்தந்தையரின் புகழ்மிக்க காலங்களிலிருந்தே ஆதீனத்துறவு அருள்நெறி செழித்திருந்தது. பின்னர் அது மேற்குப்பகுதிகளுக்கும் பரவியது. ஓர் ஊற்றிலிருந்து பிறப்பது போல இதிலிருந்து இலத்தீன் வழிபாட்டு முறையினரின் துறவற நிறுவனங்கள் பிறந்தன் பின்னர், எப்போதுமே இதனின்று அவை புத்துயிர்பெற்று வந்திருக்கின்றன. எனவே, இறை உண்மைகளைத் தியானிக்குமாறு முழு மனிதரையும் தூண்டியெழுப்பும் கீழைத் தந்தையரின் அருள்நெறிச் செல்வத்தை அதிகமாகப் பயன்படுத்துமாறு கத்தோலிக்கர்கள் மிக்க ஆர்வத்துடன் அழைக்கப்படுகிறார்கள்.
கீழைச் சபைகளின் மிகச் செழிப்பான திருவழிபாட்டு, அருள்நெறி மரபுச் செல்வத்தை அறிந்து மதித்துக் காத்துப் பேணி வளர்ப்பது கிறிஸ்தவ மரபின் முழுமையைப் பற்றுறுதியுடன் காக்கவும், மேலைக் கிறிஸ்தவர்களையும் கீழை கிறிஸ்தவர்களையும் நிறைவாக மீண்டும் உறவு கொள்ளச் செய்யவும் மிகவும் முக்கியமானது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
கீழைச்சபையினருக்கே உரித்தான ஒழுங்குகள்
16. மேலும், தொடக்கக் காலத்திலிருந்தே கீழைச்சபைகள் திருத்தந்தையர், சங்கங்கள் மற்றும் பொதுச் சங்கங்களால் அனுமதிக்கப்பட்ட தங்கள் சொந்த ஒழுங்கு முறைகளையே பின்பற்றி வந்தன. ஓரளவு வேறுபட்ட இப்பழக்கங்களும் வழக்கங்களும் திருச்சபையின் ஒன்றிப்புக்குத் தீங்கு விளைவிப்பதற்கு மாறாக, முன்பு கூறப்பட்டதுபோல், அதன் அழகையே கூட்டுகின்றன் அதனிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்றுவதில் பெரிதும் உதவுகின்றன. இவற்றைக் கருத்தில் கொண்டு, எல்லா ஐயங்களையும் அகற்றும் வண்ணம் திருச்சங்கம் கீழ்வருமாறு அறிக்கையிடுகிறது; தத்தம் சபைகளைச் சார்ந்த நம்பிக்கை கொண்டோரின் குணவியல்புகளுக்கு அதிகப் n பா ருத்தமானவையாகவும் அருள்நலனைப் பேணுவதற்குச் சிறந்தவையாகவும் அமைகின்ற ஒழுங்குமுறைகளுக்கு ஏற்பத் தம்மைத் தாமே ஆளும் ஆணையுரிமை கீழைச்சபைகளுக்கு உண்டு. இம்மரபுத் தத்துவம் எல்லாக் காலங்களிலும் கடைப்பிடிக்கப்படவில்லை. அதனை முழுமையாகக் கடைப்பிடித்தல் ஒன்றிப்பை மீண்டும் அடைவதற்கு முன் நிபந்தனையாகக் கட்டாயம் தேவைப்படுபவைகளுள் ஒன்று.
கோட்பாடுகளை விளக்குவதில் கீழைச் சபையாரிடம் துலங்கும் பண்பு
17. முறையான வேறுபாடுகளைப் பற்றி மேலே கூறப்பட்டவையகளையே கோட்பாடுகள் பற்றிய வேறுபட்ட இறையியல் விளக்கங்களைக் குறித்தும் கூற விரும்புகிறோம். ஏனெனில் இறைவெளிப்பாட்டு உ;ணமையை ஆராயுங்கால் கீழைச் சபைகளிலும் மேலைச்ச பைகளிலும் கடவுளைச் சார்ந்தவற்றைப் புரிந்து அறிக்கையிடுவதற்கு வெவ்வேறான முறைகளும் கண்ணோட்டங்களும் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. எனவேஈ வெளிப்படுத்தப்பட்ட மறை உண்மைகளின் சில பரிமாணங்களை ஒரு திறத்தார் சில வேளைகளில் மற்றவரைவிட அதிகப் பொருத்தமான விதத்திலே உணர்ந்து சிறந்த முறையிலே எடுத்துரைக்கின்றனர் என்பதில் வியப்பில்லை; எனவே, இத்தகைய இறையியல் வாய்பாடுகள் பொதுவாக ஒன்றுக்கொன்று எதிராக நிற்கின்றன என்பதைவிட ஒன்றை ஒன்று நிறைவு செய்கின்றன என்றே கூறவேண்டும். கீழைச்சபையாரின் உண்மையான இறையியல் மரபுகளைப் பொறுத்த மட்டில் கீழ்வருவனவற்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்: அவை மிகச் சிறந்த முறையில் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன் திருவழிபாட்டு வாழ்வில் பேணி வளர்க்கப்பட்டு வெளிப ;படுத்தப்பெற்றுள்ளன் உயிரோட்டமுள்ள திருத்தூதர் மரபாலும் கீழைத் தந்தையர், அருள்நெறி ஆசிரியர்களின் நூல்களாலும் ஊட்டம் பெற்றுள்ளன் சரியான வாழ்க்கை முறையை அளிப்பதற்கும், ஏன் கிறிஸ்தவ உண்மையை ஆழ்ந்து சிந்திப்பதற்கும் முயலுகின்றன.
அருள்நெறி, வழிபாட்டு, ஒழுங்குமுறை, இறையியல் ஆகிய இந்த முழு மரபுச் செல்வம் வேறுபட்ட மரபுகளில் இருப்பினும், இது திருச்சபையின் பொதுமையையும் திருத்தூதர்ப் பண்பையும் சார்ந்தது என இத்திருச்சங்கம் அறிக்கையிடுகிறது. இந்த மரபுச் செல்வத்தைக் காத்து அதன்படி அதிகத் தூய்மையாகவும் முழுமையாகவும் வாழ விழைகின்ற கத்தோலிக்கத் திருச்சபையினரான கீழைநாட்டு மக்கள் பலர், மேலைநாட்டு மரபைக் கைக்கொள்ளும் தம் சகோதரர் சகேதரிகளோடு ஏற்கெனவே முழுமையான ஒன்றிப்பில் வாழ்கிறார்கள் என்பதற்காகத் திருச்சங்கம் கடவுளுக்கு நன்றி கூறுகிறது.
முடிவுரை
18. இவையாவையும் பற்றி நன்கு எண்ணிப்பார்த்த பிறகு, ஒன்றிப்பையும் ஒற்றுமையையும் மீண்டும் கொணரவோ அவற்றைக் காக்கவோ எவர்மேலும் ''இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும்சுமத்தக்கூடாது'' (திப 15:28) என்று முன்னைய சங்கங்களும் உரோமை ஆயர்களும் அறிக்கையிட்டதையே மீண்டும் இத்திருச்சங்கம் வலியுறுத்துகிறது. மேலும் இவ்வொன்றிப்பைப் படிப்படியாக அடைவதற்காகத் திருச்சபையின் பற்பல நிறுவனங்களிலும் வாழ்க்கை முறைகளிலும் எல்லா முயற்சிகளையும் இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும் என்றும் சங்கம் விரும்புகிறது. இம்முயற்சிகள் முக்கியமாக இறைவேண்டலிலும் கோட்பாடு, இன்றைய அருள்பணி சார்ந்த அவசரப் பிரச்சினைகள் ஆகியவற்றைப் பற்றிய சகோதர உரையாடலிலும் அடங்க வேண்டுமென அது விழைகிறது. இது போலவே, கிழக்கு நாடுகளில் வாழாது, தங்களது சொந்த நாட்டிலிருந்து வெகு தூரத்தில் வாழ்வோரோடு கத்தோலிக்கத் திருச்சபையின் அருள்பணியாளர்களும் மக்களும் உறவு வைத்துக் கொள்ளுமாறு திருச்சங்கம் பரிந்துரைக்கிறது. இதனால் சண்டையை ஏற்படுத்தும் போட்டி மனப்பான்மை நீங்கி, அன்பு உணர்வில் ஏற்படுத்தும் போட்டி மனப்பான்மை நீங்கி, அன்பு உணர்வில் அவர்களோடு சகோதர ஒத்துழைப்பு வளரும். இந்த அலுவலை முழு மனத்தோடு செய்தால் கீழை, மேலைச் சபைகளைப் பிரித்து நிற்கும் சுவர் அகன்றுவிடும், இரண்டையும் ஒன்றாக்கும் மூலைக்கல்லாகிய இயேசு கிறிஸ்துவில்27 உறுதியாக நிலைநாட்டப் பெற்ற ஒரே ஒரு உறைவிடம் மட்டுமே இறுதியாக நிலைக்கும் எனத் திருச்சங்கம் நம்புகிறது.
2. மேலை நாடுகளிலுள்ள பிரிந்த சபைகளும் சபைச் சமூகங்களும்
இச்சபைகள், சமூகங்களின் நிலை
19. இடைக்காலத்தின் இறுதியிலே மேற்கு நாடுகளில் தொடங்கிய மிகப் பெரிய புரட்சியின் போது உரோமைத் திருத்தூதர் ஆட்சிப் பீடத்திலிருந்து சில சபைகளும் சபைச் சமூகங்களும் பிரிந்து சென்றன் வேறு சில அதன் பின்னர் பிரிந்தன. இச்சபைகளும் சபைச் சமூகங்களும் பையொன்றிப்புடன் நடத்திய நீண்ட காலக் கிறிஸ்தவ வாழ்க்கை காரணமாக ஒரு தனிப்பட்ட முறையில் கத்தோலிக்கத் திருச்சபையுடன் உறவு கொண்டு இணைந்துள்ளன.
இந்தச் சபைகளும் சபைச் சமூகங்களும் தோற்றம், கோட்பாடு, அருள் வாழ்க்கை ஆகியவற்றில் நம்மிடமிருந்து மட்டுமின்றி, தங்களுக்குள்ளேயும் மிகவும் வேறுபட்டிருப்பதால் அவற்றைச் சரியாக விவரிப்பது எளிதல்ல் அப்படி விவரிப்பதும் எம் நோக்கமல்ல.
கிறிஸ்தவ ஒன்றிப்பு இயக்கமும், கத்தோலிக்கத் திருச்சபையோடு ஒப்புரவுக்கான ஆவலும் இன்னும் எல்லா இடங்களிலும் வலிமை பெறவில்லை, எனினும் கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வும் ஒருவருக்கு ஒருவர் நன்மதிப்பளிக்கும் பண்பும் படிப்படியாக வளரும் என நாம் எதிர்ப்பார்க்கிறோம்.
எனினும், இந்தச் சபைகளுக்கும், சபைச் சமூகங்களுக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்குமிடையே பெரும் வேறுபாடுகள் உண்டு என்பதை யாவரும் ஏற்க வேண்டும். இவ்வேறுபாடுகள் வரலாற்று, சமூகவியல், உளவியல், பண்பாட்டு அடிப்படையில் எழுவன மட்டுமல்ல் முக்கியமாக வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளுக்குப் பொருள் விளக்கம் அளிப்பதிலும் எழுகின்றன. வேற்றுமைகள் இருந்த போதிலும், கிறிஸ்தவ ஒன்றிப்பிற்கான உரையாடலை எளிதாக நடத்துவதற்காகக் கீழே சில கருத்துகளைத் தர விழைகிறோம். இவை இந்த உரையாடலின் அடிப்படையாகவும் தூண்டுதலாகவும் அமைய முடியும், அமைய வேண்டும்.
கிறிஸ்துவை அறிக்கையிடுதல்
20. தந்தை, மகன், தூய ஆவி எனும் ஒரே கடவுளின் மாட்சிமைக்காக இயேசு கிறிஸ்துவைக் கடவுளாகவும் ஆண்டவராகவும் கடவுளுக்கும் மக்களுக்கும் இடையேயுள்ள ஒரே இணைப்பாளராகவும் வெளிப்படையாக அறிக்கையிடும் கிறிஸ்தவர்பால் முதலில் கவன் செலுத்துவோம். மனிதரான இறைவாக்காகிய கிறிஸ்துவைப் பற்றியும்கூட கத்தோலிக்கத் திருச்சபையின் கோட்பாடுகளுக்கும் இவர்களுடைய கோட்பாடுகளுக்குமிடையே பெரும் வேறுபாடுகள் உள்ளன என நாம் அறிவோம். எனினும் பிரிந்த சகோதரர்கள் கிறிஸ்துவையே சபை ஒன்றிப்பின் ஊற்றும் மையமுமாகக் கருதுவதைக் கண்டு அகமகிழ்கிறோம். அவர்கள் கிறிஸ்துவுடன் ஒன்றித்திருக்கும் ஆவலால் ஏவப்பட்டு ஒற்றுமையை அதிகமதிகமாய்த் தேடவும், எல்லா மக்கள் முன்பும் தங்களது நம்பிக்கைக்குச் சான்று பகரவும் தூண்டுதல் பெறுகிறார்கள்.
விவிலியத்தின் மேல் ஆர்வம்
21. விவிலியத்தின் மேல் நம் சகோதரர், சகோதரிகள் கொள்ளும் அன்பும், மதிப்பும், வழிபாட்டையொத்த மரியாதையும் அவர்கள் அதனை இடையறாது ஆர்வத்துடன் கற்குமாறு செய்கின்றன. ஏனெனில் நற்செய்தி ''கடவுளின் மீட்பளிக்கும் வல்லமை. முதலில் யூதருக்கும், அடுத்துக் கிரேக்கருக்கும் - அதாவது நற்செய்தியை நம்பும் ஒவ்வொருவருக்கும் - அந்த மீட்பு உண்டு'' (உரோ 1:16).
இச்சகோதரர் சகோதரிகள் தூய ஆவியை இறைஞ்சி மன்றாழ, கிறிஸ்துவில் தம்மிடம் பேசும் கடவுளை விவிலியத்தில் தேடுகின்றனர். இக்கிறிஸ்துவே இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்டவர்; நமக்காக மனிதரான இறைவாக்கு. விவிலியத்தில் கிறிஸ்துவின் வாழ்க்கையையும், இறையாசிரியர் மனித மீட்புக்காகக் கற்றுத் தந்தவை, செய்துகாட்டியவை, முக்கியமாக அவரது இறப்பு, உயிர்த் தெழுதல் மறைபொருள் ஆகியவற்றையும் இச்சகோதரர், சகோதரிகள் ஆழ்ந்து தியானிக்கின்றனர்.
ஆனால் பிற கிறிஸ்தவச் சபைச் சகோதரர் சகோதரிகள் விவிலியத்தின் தெய்வீக ஆணையுரிமையை உறுதியோடு உரைக்கும்போது விவிலியத்திற்கும் திருச்சபைக்கும் இடையேயுள்ள தொடர்பைப் பற்றி நாம் கூறுவதற்கு மாறாக - வெ வ்வேறு பிரிவினரும் வெவ்வேறாக - எண்ணுகின்றனர். கத்தோலிக்க நம்பிக்கையின்படி எழுத்து வடிவிலுள்ள இறைவாக்கை விளக்குவதிலும் போதிப்பதிலும் அதிகாரப்பூர்வமான ஆசிரியத்துக்கு ஒரு தனி இடமுண்டு.
இருப்பினும் மக்கள் அனைவருக்கும் மீட்பர் காட்டும் ஒன்றிப்பை உரையாடல் மூலம் அடைவதற்கு இறைமொழி அவருடைய ஆற்றல் மிக்க கைகள் பயன்படுத்தும் ஒரு மிகச்சிறந்த கருவியாகும்.
அருளடையாள வாழ்வு
22. திருமுழுக்கு என்னும் அருளடையாளம் ஆண்டவர் ஏற்படுத்தின முறையின்படி ஒழுங்காக அருளப்பட்டுத் தகுந்த ஆன்ம தயாரிப்போடு பெற்றுக் கொள்ளப்படும் போதெல்லாம் சிலுவையில் அறையப்பட்டு மாட்சிமை படுத்தப்பெற்ற கிறிஸ்துவுடன் மனிதர் உண்மையில் ஓருடலாகின்றார்; இறைவாழ்வில் பங்கெடுக்குமாறு மறுபிறப்புப் பெறுகின்றனர். நீங்கள் ''திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்ள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்ப்பெற்று எழுந்துள்ளீர்கள் (கொலோ 2:12) என்று தூய பவுல் வுறியிருக்கிறார்.28
எனவே, திருமுழுக்கு வழியாக மறுபிறப்படைந்த யாவருக்குள்ளும் அருளடையாள ஒற்றுமைப் பிணைப்பு எழுகின்றது. எனினும், தன்னிலே திருமுழுக்கு ஒரு தொடக்கமும் முதற்செயலும் மட்டுமே; ஏனெனில், வாழ்வின் நிறைவைக் கிறிஸ்துவில் அடைதலே அதன் முழு நோக்கம். இவ்வாறு, முழுமையாய் ந ம் பிக்கையை அறிக்கையிடச் செய்தலும், கிறிஸ்து விரும்பிய நிறைவாழ்வளிக்கும் நிறுவுன அமைப்பில் முற்றும் இணையச் செய்தலும், இறுதியாக நற்கருணை ஒன்றிப்பில் முழுமையாய் நம்மைப் புகுத்தலுமே திருமுழுக்கின் நோக்கங்கள் ஆகும்.
பிற கிறிஸ்தவச் சபை சமூகங்கள் திருமுழுக்கிலிருந்து பிறக்கின்ற முழு ஒன்றிப்பை நம்மோடு கொண்டிருக்கவில்லை. முக்கியமாக, திருப்பணிநிலை என்னும ;அருளடையாளததைக் கொண்டிராததால் நமது நம்பிக்கையின்படி நற்கருணை மறைபொருளின் உண்மையான, முழுமையான உட்பொருளை அவர்கள் பாதுகாக்கவில்லை. எனினும் திரு இராவுணவில் ஆண்டவரின் இறப்பையும் உயிர்த்தெழுதலையும் நினைவு கூர்ந்து வழிபடும்போது, கிறிஸ்துவோடு ஒன்றித்த வாழ்வை அவ்வழிபாடு குறிக்கிறதென்று அவர்கள் அறிக்கையிடுகிறார்கள்; அவரது மாட்சிமைமிக்க வரவையும் எதிர்பார்க்கிறார்கள். இறைவழிபாடு, திருச்சபையின் திருப்பணிகள் ஆகியவை பற்றிய கோட்பாடுகள் உரையாடலின் பொருளாக அமைய வேண்டும்.
கிறிஸ்துவோடு வாழ்வு
23. கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையினால் இச்சகோதரர், சகோதரிகளின் வாழ்வு ஊட்டம் பெறுகிறது; திருழுக்கின் அருளாலும் இறைவார்த்;தையைக் கேட்பதாலும் அவ்வாழ்வு வளர்க்கப்படுகிறது; தனி இறைவேண்டலிலும் விவிலிய தியானத்திலும் கிறிஸ்தவக் குடும்ப வாழ்விலும், இறை மாட்சிமைக்காகக் கூடும் சமூகத்தின் வழிபாட்டிலும் அது வெளிப்படையாகிறது. மேலும், சில நேரங்களில் அவர்களது வழிபாடு தொன்மையான திருவழிபாட்டின் பல சிறந்த கூறுகளைக் கொண்டுள்ளது.
கிறிஸ்துவை ஏற்கும் அவர்களுடைய நம்பிக்கை இறைப் புகழையும், கடவுளிடிருந்து பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கான நன்றியறிதலையும் விளைவிக்கிறது. உயிருள்ள நீதி உணர்வும், அடுத்திருப்பவர்மேல் உண்மையான அன்பும் அதனோடு இணைந்துள்ளன. இந்தச் செயலாற்றும் நம்பிக்கை ஆன்மீக ஏழ்மையையும் உடல் ஏழ்மையையும் நீக்குதல், இளைஞர்களின் கல்வியைப் பேணுதல், சமூக வாழ்க்கை நிலைகளை அதிக மனிதத் தன்மை உள்ளனவாக்குதல், உலகம் முழுமையிலும் அமைதியை நிலைப்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்கான பல அமைப்புகளை உருவாக்கியுள்ளது.
கிறிஸ்தவர்களில் பலர் சில நேரங்களில் ஒழுக்க நெறியைப் பொறுத்தமட்டில் நற்செய்தியைக் கத்தோலிக்கரிடமிருந்து மாறுபட்ட முறையில் புரிந்து கொள்கின்றனர். இன்றைய சமுதாயத்தின் பெரும் பிரச்சனைகளுக்கு ஒரே முறையிலான விடைகளை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. எனினும், நம்மைப்போல் கிறிஸ்தவ நற்பண்பின் ஊற்றாகக் கிறிஸ்துவின் வார்த்தையைப் பற்றிக் கொள்ள அவர்கள் விரும்புகிறார்கள். ''எதைச் சொன்னாலும் எதைச் செய்தாலும் அனைத்தையும் ஆண்டவர் இயேசுவின் பெயரால் செய்து அவர் வழியாய்த் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்'' (கொலோ 3:17) என்ற தூய பவுலின் ஆணைக்கு அவர்கள் கீழ்படியவும் விழைகிறார்கள். நற்செய்தியை ஒழுக்கநெறித் துறையோடு தொடர்புப்படுத்துவது பற்றிய கிறிஸ்தவ ஒன்றிப்பு உரையாடல் மேற்கூறிய கண்ணோட்டத்தைத் தொடக்கமாகக் கொண்டு அமையலாம்.
முடிவுரை
24. இவ்வாறு கிறிஸ்தவ ஒன்றிப்புச் செயல்பாட்டிற்குரிய நிபந்தனைகளையும் அதனை வழிநடத்துவதற்கான தத்துவங்களையும் சுருக்கமாக எடுத்துரைத்த பிறகு, நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்குகிறோம். உண்மையான ஒன்றிப்புக்கான முன்னேற்றத்திற்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய மேலோட்டமான நடத்தையையும் முன்மதியற்ற ஆர்வத்தையும் கொண்டிருக்கக் கூடாதென இத்திருச்சங்கம் கிறிஸ்தவ மக்களுக்கு அறிவுரை வழங்குகிறது. அவர்களது கிறிஸ்தவ ஒன்றிப்புச் செயல் முழுமையான, நேர்மையான கத்தோலிக்கப் பண்புடையதாக இருக்க வேண்டும். அதாவது, திருத்தூதரிடமிருந்தும் திருச்சபைத் தந்தையரிடம் இருந்தும் நாம் பெற்றுக் கொண்ட உண்மையில் அது நிலைத்ததாகவும், கத்தோலிக்கத் திருச்சபை எப்போதும் எடுத்தியம்பி வந்துள்ள நம்பிக்கைக்கு இயைந்ததாகவும் அமைய வேண்டும்; அதே நேரத்தில் காலத்தின் போக்கிலே நமது ஆண்டவர் விழையும் அவர் தம் உடலின் முழுமையான வளர்ச்சியை நோக்கிச் செல்வதாகவும் இது இருக்க வேண்டும்.
திருச்சபையின் மக்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பிற கிறிஸ்தவச் சகோதரர், சகோதரிகளோடு இணைந்து, இறை பராமரிப்பின் வழிகளுக்கு எந்தத் தடையும் விதிக்காத முறையிலும் தூய ஆவியின் வருங்காலத் தூண்டுதல்கள் பற்றி முன்தீர்ப்பு வழங்காத முறையிலும் தொடரவேண்டும். இது திருச்சங்கத்தின் உள்ளார்வமிக்க விருப்பம். மேலும், கிறிஸ்தவர்கள் எல்லாரையும் கிறிஸ்துவின் ஒரே திருச்சபையின் ஒன்றிப்பில் ஒப்புரவாக்கும் இத்தூய திட்டம்மனித ஆற்றலையும் திறனையும் கடந்தது என்பதுத்தான் உணர்வதாக அது அறிக்கையிடுகிறது. எனவே அது திருச்சபைக்காகக் கிறிஸ்து எழுப்பிய இறை வேண்டலிலும், நமது பேரில் தந்தைக்குள்ள அன்பிலும், தூய ஆவியின் ஆற்றலில் தனது எதிர்பார்ப்பு முழுவதையும் வைக்கிறது. ''அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; ஏனெனில் நாம் n பற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் ;கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் மொழியப்பட்டுள்ளது'' (உரோ 5:5).
இவ்விதித் தொகுப்பில் கூறப்பட்டுள்ள யாவும், அவை ஒவ்வொன்றும், திருச்சங்கத் தந்தையரின் இசைவைப் பெற்றுள்ளன. நாமும் கிறிஸ்து நமக்கு அளித்துள்ள திருத்தூது அதிகாரத்தால் வணக்கத்துக்குரிய தந்தையருடன் இணைந்து, தூய ஆவியில் அவைகளை ஏற்றுக்கொள்கிறோம், தீர்மானிக்கிறோம், நிலைநாட்டுகிறோம். சங்கம் நிலைநாட்டிய இவை யாவும் கடவுளின் மாட்சிமைக்காகச் செயல்படுமாறு ஆணையிடுகிறோம்.
தூய பேதுரு பேராலயம் | பவுல். |
உரோமை | கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர் |
நவம்பர் 21,1964 |
கீழே தந்தையரின் கையொப்பங்கள் தொடர்கின்றன.