கார்மெல் அன்னையின் விழா
இறை இயேசுவிலும் அவரைப் பெற்றுத்தந்த மரியிலும் பிரியமானவர்களே!
கார்மெல் அன்னையின் விழாவைக் கொண்டாடும் ஜூலை மாதத்தில் (ஜூலை 16) நம் மறைமாவட்டத்தில் பணிபுரியும் கார்மெல் மாதா சபை அருள்தந்தையர்கள், அருள்சகோதரிகளுக்காகச் செபிப்போம்.
உண்மை இறைவனை இஸ்ரயேலருக்கு உணர்த்திட போலி இறைவாக்கினர்களுக்கு சவால் விட்டு அவர்களை எலியா இறைவாக்கினர் வெற்றி கொண்ட கார்மெல் மலையை இவ்விழா நமக்கு நினைவுபடுத்துகிறது.
சிலுவைப்போர் நடைபெற்ற போது புனித பூமிக்கு சென்ற ஒரு சில துறவிகள் எலியாவின் வழியைப் பின்பற்றி வாழ இந்த மலையில் தங்கினர். இவர்களே கார்மெல் மலைத் தூய துறவிகள் என அழைக்கப்பட்டனர்.
கார்மெல் சபையின் தலைமைத் தந்தையாய் இருந்த சைமன் ஸ்டாக் எனும் அருள்பணியாளருக்கு அன்னை மரியாள் 1251, ஜூலை 16 அன்று காட்சி கொடுத்தார். அக்காட்சியில் சைமன் ஸ்டாக் அவர்களிடம் உத்தரியம் ஒன்றைக் கொடுத்து “உத்தரியத்தை பக்தியோடு அணிபவர்கள் இம்மையிலும் மறுமையிலும் எவ்வித துன்பத்திலும் நரக நெருப்பிலும் அல்லலுற மாட்டார்கள்” என்று மரியன்னை கூறினார். அதை அடியயாற்றியே உத்தரியம் அணியும் பழக்கமும் உருவானது. அதனால்தான் கார்மெல் அன்னையின் சுரூபத்திலும் (மறைமாவட்ட தலைமைக் கோயிலில் உள்ளது) மரியாள் உத்தரியத்தை வழங்குவது சித்தரிக்கப்பட்டுள்ளது.
இத்தகைய மேலான சிறப்புக்களைத் தன்னகத்தே கொண்ட கார்மெல் அன்னையின் விழா மாதத்திலே மரியாளின் சீடர்களாகிய நாம் துறவு வாழ்வை மேற்கொண்டோருக்காக செபிப்போம். துன்பம், வறுமை சூழலிலும், மரண வேளையிலும் நம்மைக் காக்க வல்ல மரியாளின் பரிந்துரையை இன்னும் அதிக நம்பிக்கையோடு செபித்து பெற்றுக் கொள்வோம்.
- அருள்பணி. பென்சிகர் லூசன்
