image

புனித வார வழிபாட்டுப் பாடல் பகுதி

குருத்து ஞாயிறு

முழு வார்த்தை வழிபாடு மற்றும் பாடல்கள் es

தொடக்கச் சடங்குகள்:

பல்லவி: மத் 21:9

தாவிதின் மகனுக்கு ஒசன்னா! ஆண்டவர் பெயரால்
வருகிறவர் ஆ - - சி பெற்றவரே! இஸ்ரயேலின் அரசரே, 
உன்னதங்களிலே ஒசன்னா!
உன்னதங்களிலே ஒசன்னா!

 

அன்புமிக்க சகோதர சகோதரிகளே! இயேசுவைப் புகழ்ந்து ஆர்ப்பரித்து மக்கள் திரளைப் போன்று நாமும் அமைதியுடன் புறப்படுவோம்.

அல்லது

அமைதியுடன் புறப்படுவோமாக.

கிறிஸ்துவின் பெயரால். ஆமென்.

 

எபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக்கிளைகளைப்
பிடித்தவராய் உன்னதங் க ளி லே
ஒசன்னா என்று முழங்கி ஆர்ப்பரித்து ஆண்டவரை எதிர் கொண்டனரே.

தேவைக்கு ஏற்ப, இப்பல்லவியைத் திருப்பாடலின் அடிகளுக்கு இடையே பாடலாம்.

திருப்பாடல் 23

மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடையவை;
நிலவுலகும் அதில் வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
ஏனெனில் கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டவர் அவரே;
ஆறுகள் மீது அதை நிலைநாட்டியவரும் அவரே. பல்லவி

பல்லவி ஆண்டவரது மலையில் ஏறக் கூடியவர் யார்? 
அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர் யார்?
கறைபடாத கைகளும் மாசற்ற இதயமும் உடையவர்; 
பொய்யானவற்றை நோக்கித் தம் ஆன்மாவை உயர்த்தாதவர்; 
வஞ்சக நெஞ்சோடு ஆணையிட்டுக் கூறாதவர். பல்லவி

இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; 
தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர் எனத் தீர்ப்புப் பெறுவார். 
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; 
யாக்கோபின் கடவுளது முகத்தைத் தேடுவோர் இவர்களே. பல்லவி 

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; 
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்; 
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? 
வலிமையும் ஆற்றலும் கொண்ட ஆண்டவர் இவரே!
இவரே போரில் வல்லவரான ஆண்டவர். பல்லவி

வாயில்களே, உங்கள் நிலைகளை உயர்த்துங்கள்; 
தொன்மைமிகு கதவுகளே, உயர்ந்து நில்லுங்கள்;
மாட்சிமிகு மன்னர் உள்ளே நுழையட்டும்.
மாட்சிமிகு மன்னர் இவர் யாரோ? 
படைகளின் ஆண்டவர் இவர்; மாட்சிமிகு மன்னர் இவரே. பல்லவி

பல்லவி - 2

எபிரேயர்களின் சிறுவர் குழாம் வழியில் மேலுடைகள் விரித்தவராய்
உன்னதங்களிலே ஒசன்னா ஆண்டவர் பெயரால் வருகிறவர் 
ஆ - - - - சி பெற்றவரே என்று முழங்கி ஆர்ப்பரித்தார்.

தேவைக்கு ஏற்ப, இப்பல்லவியைத் திருப்பாடலின் அடிகளுக்கு இடையே பாடலாம்.

மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்: 
அக்களிப்புடன் கடவுளுக்குக் குரலெழுப்பி ஆர்ப்பரியுங்கள். 
ஏனெனில் உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; 
உலகனைத்தின் மாவேந்தர் அவரே. பல்லவி 

மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; 
அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 
நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்தளித்தார்; 
அது அவர் அன்புகூரும் யாக்கோபின் மாட்சி ஆகும். 
ஆரவார ஒலியிடையே ஏறிச் செல்கின்றார் கடவுள்; 
எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். பல்லவி 

பாடுங்கள், கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; 
பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். 
ஏனெனில் கடவுளே அனைத்துலகின் வேந்தர்; ஞானத்தோடு பாடுங்கள். பல்லவி 

கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; 
அவர் தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். 
மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; 
ஏனெனில் மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளுக்கு உரியவர்;
கடவுளே அனைத்துக்கும் மேலானவர். பல்லவி

கிறிஸ்து அரசருக்குப் பாடல்

பாடல் குழு:

கிறிஸ்து அரசே!
மீட்பரே! மாட்சி, வணக்கம், புகழ் உமக்கே;
எழிலார் சிறுவர் திரள் உமக்கு
அன்புடன் பாடினர்: ஒசன்னா!

எல். :கிறிஸ்து அரசே!

பாடல் குழு:

இஸ்ரயேலின் அரசர் நீர்,
தாவீதின் புகழ்சேர் புதல்வர் நீர்
ஆ - - சி பெற்ற அரசே நீர்
ஆண்டவர் பெயரால் வருகின்றீர்.

எல். :கிறிஸ்து அரசே!

பாடல் குழு:

வானோர் அணிகள் அத்தனையும்
உன்னதங்களிலே உமைப் புகழ்க; 
அழிவுறும் மனிதரும் படைப்பனைத்தும்
யாவும் ஒன்றாய்ப் புகழ்ந்திடுமே.

எல். :கிறிஸ்து அரசே!

பாடல் குழு:

எபிரேயர்களின் மக்கள் திரள் 
குருத்துகள் ஏந்தி எதிர்கொண்டார் 
வேண்டலும் காணிக்கையும் பாடலும்
கொண்டு உம்மிடம் இதோ வருகின்றோம். T .

எல். :கிறிஸ்து அரசே!


பாடல் குழு:
பாடுகள் படுமுன் உமக்கவர் தம்
வாழ்த்துக் கடனைச் செலுத்தினரே;
ஆட்சி செய்திடும் உமக்கின்றே
யாம் இதோ இன்னிசை எழுப்புகின்றோம்.

எல். :கிறிஸ்து அரசே!

பாடல் குழு:
அவர்தம் பக்தியை ஏற்றீரே,
நலமார் அரசே, கனிவுடை அரசே, 
நல்லன எல்லாம் ஏற்கும் நீர்
எங்கள் பக்தியும் ஏற்பீரே.

எல். :கிறிஸ்து அரசே!

10. பவனி கோவிலுக்குள் நுழைகையில் கீழுள்ள பதிலுரைப் பாடலையோ
ஆண்டவரின் நுழைவைப் பற்றிய வேறு பாடலையோ பாடலாம்.

முதல்: ஆண்டவர் புனித நகரத்தில்
நுழைகையில் எபிரேயச் சிறுவர் குழாம் 
உயிர்த்தெழுதலை அறிவித்தவராய்

பதில்: குருத்து மடல்களை ஏந்தி நின்று 
"உன்னதங்களிலே ஓசன்னா!' 
என்று மகிழ்வுடன் ஆர்ப்பரித்தார்.

முதல்: எருசலேம் நகருக்கு இயேசு வருவதைக் கேட்ட
மக்களெல்லாம் அவரை எதிர் கொண்டழைத்தனரே.

பதில்: குருத்து மடல்களை . . .

===============

தியானப்பாடல்: திருப்பாடல்: 22:8-9, 17-18, 19-20, 23-24

பல்லவி: என் இறைவா என் இறைவா ஏன் என்னை கை விட்டீர்

என்னைப் பார்ப்போர் எல்லோரும் என்னை ஏளனம் செய்கின்றனர்
உதட்டைப் பிதுக்கித் தலை அசைத்து
ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் இவனை மீட்கட்டும்
தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும் என்கின்றனர்

தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது
நாய்கள் என அவர்கள் என்னை சூழ்ந்து கொண்டார்கள்
என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள்
என் எலும்புகளை யெல்லாம் நான் எண்ணிவிடலாம்

என் ஆடைகளைகத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்
என் உடையின் மேல் சீட்டுப்போடுகிறனர்
நீரோ ஆண்டவரே என்னை விட்டுத் தொலையில் போய் விடாதேயும்
என் வலிமையே எனக்கு துணை செய்ய விரைந்து வாரும்

உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்
சபை நடுவே உம்மை புகழ்ந்து பாடுவேன்
ஆண்டவருக்கு அஞ்சுவோரே அவரைப் புகழுங்கள்
யாக்கோபின் மரபினரே அனைவரும் அவரை மாட்ச்சிமைப்படுத்துங்கள்
இஸ்ராயேல் மரபினரே அனைவரும் அவரைப் பணியுங்கள்

 

நற்செய்திக்கு முன் வசனம்: பிலிப் 2:8-9

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு,
அதுவும் சிலுவைச் சாவை ஏற்கும் அளவுக்குக்
கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி
எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

 

குருத்து ஞாயிறு தொடக்கஉரை

தொடக்கவுரை: ஆண்டவருடைய பாடுகள்

ஆண்டவரே, தூயவரான தந்தையே, 
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, 
எங்கள்

ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக 
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது 
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; 
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

மாசற்ற கிறிஸ்து பாவிகளுக்காகப் பாடுபடவும் 
தீயோரின் மீட்புக்காக அநீதியாகத் தீர்ப்பிடப்படவும் திருவுளமானார். 
அவரது இறப்பு எங்கள் பாவங்களைப் போக்கியது; 
அவரது உயிர்த்தெழுதல் எங்களை உமக்கு ஏற்புடையவர்கள் ஆக்கியது.

ஆகவே நாங்கள் வானதூதர் அனைவரோடும் சேர்ந்து 
உம்மைப் புகழ்ந்து போற்றி, அக்களித்துக் கொண்டாடி, 
ஆர்ப்பரித்துச் சொல்வதாவது: தூயவர்.

 

 

குருத்துவம், புனித எண்ணெய் திருப்பலி தொடக்கஉரை

12. தொடக்கவுரை: கிறிஸ்துவின் குருத்துவமும் அருள்பணியாளர்களின் பணியும்.

ஆண்டவரே, தூயவரான தந்தையே, 
என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா, 
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக 
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது 
மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும்; 
எங்கள் கடமையும் மீட்புக்கு உரிய செயலும் ஆகும்.

நீர் உம் ஒரே திருமகனைத் தூய ஆவியாரின் அருள்பொழிவால் 
புதிய, நிலையான உடன்படிக்கையின் 
தலைமைக் குருவாக நியமித்தீர்;
திரு அவையில் அவருடைய ஒரே குருத்துவம் தொடரச் 
சொல்லற்கரிய முறையில் நீர் ஏற்பாடு செய்யத் திருவுளம் கொண்டீர்.

ஏனெனில் அவர் தமக்கு உரிமையாக்கிக்கொண்ட மக்களை 
அரச குருத்துவத்தால் அணிசெய்தார்; 
அது மட்டும் அன்றி, அவர்கள் மீது தம் கைகளை வைத்து,
தமது புனிதப் பணியின் பங்கேற்பாளர்கள் ஆவதற்காக 
அவர்களைத் தம் சகோதர அன்பினால் தேர்ந்துகொண்டார்.

அவர்கள் அவர் பெயரால், மனித மீட்பின் பலியைப் புதுப்பிக்கின்றார்கள்; 
உம்முடைய பிள்ளைகளுக்குப் பாஸ்கா விருந்தைத் தயாரிக்கின்றார்கள்; 
உம்முடைய புனித மக்களை அன்பினால் வழிநடத்துகின்றார்கள்; 
வார்த்தையால் ஊட்டம் அளித்து, 
அருளடையாளங்களால் அவர்களுக்குப் புத்துயிர் அளிக்கின்றார்கள்.

அவர்கள் உமக்காகவும் 
தங்கள் சகோதரர் சகோதரிகளின் மீட்புக்காகவும் 
தங்கள் உயிரைக் கையளித்து, 
அதே கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்திருக்க முயலுகின்றார்கள். 
இடைவிடாமல் தங்கள் நம்பிக்கைக்கும் அன்புக்கும் 
உமக்குச் சான்று பகர்கின்றார்கள்.

ஆகவே ஆண்டவரே, வானதூதர், புனிதர் அனைவரோடும் 
நாங்கள் சேர்ந்து, உமக்குப் புகழுரைத்து, 
அக்களிப்புடன் சொல்வதாவது: தூயவர்.

 

 

image