இயேசுவின் திருஇதயம் பெருவிழா

முதல் வாசகம்

இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 11: 1,3-4,8-9

ஆண்டவர் கூறியது: இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன் மேல் அன்புகூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன். எப்ராயிமுக்கு நடை பயிற்றுவித்தது நானே; அவர்களைக் கையிலேந்தியதும் நானே; ஆயினும், அவர்களைக் குணமாக்கியது நானே என்பதை அவர்கள் உணராமற் போனார்கள். பரிவு என்னும் கட்டுகளால் அவர்களைப் பிணைத்து, அன்புக் கயிறுகளால் கட்டி நடத்தி வந்தேன்; அவர்கள் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றினேன்; அவர்கள் பக்கம் சாய்ந்து உணவு ஊட்டினேன். என் உள்ளம் அதை வெறுத்து ஒதுக்குகின்றது, என் இரக்கம் பொங்கி வழிகின்றது. என் சீற்றத்தின் கனலைக் கொட்டமாட்டேன்; எப்ராயிமை அழிக்கத் திரும்பி வரமாட்டேன்; நான் இறைவன், வெறும் மனிதனல்ல; நானே உங்கள் நடுவில் இருக்கும் தூயவர், ஆதலால், நான் நகர்க்கு எதிராக வரமாட்டேன்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

எசா 12: 2-3. 4. 5-6

பல்லவி: மீட்பருளும் ஊற்றினின்று அகமகிழ்வோடு முகந்து கொள்வீர்.

2 இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.
3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள். -பல்லவி

4 உன ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே அவர் செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள். -பல்லவி

5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை அறிந்து கொள்வதாக. 6 சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரித்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார். -பல்லவி



இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-12, 14-19


சகோதரர் சகோதரிகளே, கிறிஸ்துவின் அளவற்ற செல்வத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிற இனத்தாருக்கு அறிவிக்கவும், எல்லாவற்றையும் படைத்த கடவுளுக்குள் ஊழிகாலமாக மறைந்திருந்த இந்த மறைபொருளின் திட்டம் இன்னதென யாவருக்கும் தெளிவுபடுத்தவும், இறைமக்கள் அனைவருள்ளும் மிகவும் கடையனாகிய எனக்கு இந்த அருள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பல வகையில் விளங்கும் கடவுளின் ஞானத்தை ஆட்சிபுரிவோர், வான் வெளியில் அதிகாரம் செலுத்துவோர் ஆகியோருக்கு இப்போது திருச்சபை வழியாக வெளிப்படுத்த முடிகிறது. இவ்வாறு கடவுள் ஊழிகாலமாகக் கொண்டிருந்த திட்டத்தை நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து வழியாய் நிறைவேற்றினார். கிறிஸ்துவின் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாகக் கடவுளை உறுதியான நம்பிக்கையோடு அணுகும் உரிமையும் துணிவும் நமக்குக் கிடைத்துள்ளது. இதன் காரணமாக, விண்ணுலகிலும் மண்ணுலகிலும் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உண்மையிலேயே குடும்பமாய் விளங்குவதற்குக் காரணமாய் இருக்கிற தந்தையிடம் நான் மண்டியிட்டு வேண்டுகிறேன். அவருடைய அளவற்ற மாட்சிக்கேற்ப உங்கள் உள்ளத்திற்கு வல்லமையும் ஆற்றலும் தம் தூய ஆவி வழியாகத் தந்தருள்வாராக! நம்பிக்கையின் வழியாக, கிறிஸ்து உங்கள் உள்ளங்களில் குடிகொள்வாராக! அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக! இறை மக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன் மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

யோவான் 19:31-37

இயேசுவின் திரு இருதயம்

நற்செய்தி வாசகம்

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 31-37

அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்துபோயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்பவேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். ``எந்த எலும்பும் முறிபடாது'' என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் ``தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்று நோக்குவார்கள்'' என்றும் மறைநூல் கூறுகிறது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

-------------------------

ஓசேயா 11: 1, 3 – 4, 8 – 9
இறைவன் நம்மீது காட்டும் அன்பு

முற்காலத்தில் பாரசீகம் மற்றும் கிரேக்க நாடுகள் அவ்வப்போது, கடுமையான போர்களில், ஒருவருக்கு எதிராக ஈடுபட்டனர். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், கிரேக்க வீரர்களே எப்போதும் வெற்றி பெற்றனர். இதுஎப்படி சாத்தியம்? பாரசீக வீரர்களில் பெரும்பாலானவர்கள் அடிமைகள். அந்த போரில் ஈடுபடும்படி கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டனர். வேறு வழியில்லாமல் அந்த போரில் அவர்கள் ஈடுபட்டனர். ஆனால், கிரேக்க வீரர்களோ தங்கள் நாட்டிற்காக, தங்கள் நாட்டு மக்களை காப்பாற்றுகிறோம் என்கிற, உணர்வோடு போரிட்டனர். எனவே தான், எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்கள் வெற்றி பெற்றனர். தங்கள் தாய்நாட்டின் மீது கொண்டிருந்த பாசம், அந்த போரில் எப்படியும் வெற்றி பெற்று தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் ஏற்படுத்தியது.

இந்த உவமையை நாம் இஸ்ரயேல் மக்களுக்கும், கடவுளுக்கும் இடையேயான உறவிற்கு பொருத்திப் பார்க்கலாம். கடவுள் தன்னை இஸ்ரயேல் மக்களோடு அன்புறவில் இணைத்திருக்கிறார். இஸ்ரயேல் குழந்தையாக இருந்தபோதே, இறைவன் அவர்களை அன்பு செய்தார். குழந்தையாக என்று சொல்வது, இஸ்ரயேல் மக்களின் தொடக்கநிலையைக் குறிக்கிறது. நாடில்லாமல், நாடோடிகளாய் வாழ்ந்த அந்த நிலைதான் இஸ்ரயேல் மக்களின் தொடக்கநிலை. அந்த குழந்தையை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கொடுத்து, நடைபயிற்றுவித்தது கடவுள். அவர்கள் காயம்பட்டபோதெல்லாம், மருந்திட்டு குணப்படுத்தியது இறைவன். ஆனாலும், இஸ்ரயேல் மக்கள் கடவுளை உதறித்தள்ளிவிட்டார்களே என்று, அவர்கள் மீது கடவுள் வேதனைப்படுவதை இறைவாக்கினர் இங்கே படம்பிடித்துக் காட்டுகிறார். இஸ்ரயேல் கடவுளின் செல்லக்குழந்தை என்பதால், தவறு செய்தாலும் தன்னுடைய கோபத்தைக் காட்ட மாட்டேன் என்று, ஆண்டவர் கூறுகிறார்.

இறைவனின் அதிகப்படியான அன்பை வெளிப்படுத்தும் பகுதியாக இது இருப்பதை நாம் பார்க்கிறோம். தவறுகளை மன்னிக்கின்ற தாராள குணத்தை நாம் பார்க்கிறோம். இறைவனுடைய இரக்கம் நமக்கு எப்போதும் இருக்கிறது என்பதை, இறைவாக்கினர் நம்முடைய வாழ்வின் செய்தியாக தருகிறார். இறைவனைப் பார்த்து நாம் பயப்பட வேண்டியதில்லை. தாயின் அன்பை உணர்ந்திருக்கிற குழந்தை தாயைப் பார்த்து பயப்பட தேவையில்லை. அதேபோல, இறைவனின் அன்பை உணர்ந்திருக்கிற நாம், கடவுளைப் பார்த்து பயப்படத்தேவையில்லை.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

இயேசுவின் திரு இருதயப்பெருவிழா

இயேசுவின் திரு உடல், திரு இரத்தப்பெருவிழாவிற்குப் பிறகு வரக்கூடிய வெள்ளிக்கிழமையில், இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இதயம் என்பது அன்பின் அடையாளம். கடவுள் நம் அனைவர் மேலும் கொண்டிருக்கக்கூடிய அன்பின் அடையாளம் தான் இயேசுவின் திரு இதயம். அந்த அன்பு இயேசுவின் பாஸ்கா மறைநிகழ்ச்சியில் வெளிப்பட்டதை, இந்த திருவிழா நமக்குக்கூறுகிறது. சிலுவையில் குத்தித்திறக்கப்பட்ட திருவிலாக்காயத்தையும், அவரது பாடுகளையும் குறிக்கும் வண்ணம், திருஇதயத்தில் ஒரு காயமும், அதற்கு சற்றுமேலே முள்முடியும், அதன்மேல் திருச்சிலுவையும் காணப்படுகிறது. திரு இதயத்தின் மேல் பற்றியெரியும் தீச்சுடர், இயேசுகிறிஸ்து நம்மேல் கொண்டிருக்கிற அதிகமான அன்பைக்குறிப்பதாகும்.

திரு இதய ஆண்டவர் பக்திமுயற்சி 13 மற்றும் 14 நூற்றாண்டுகளில் பரவத்தொடங்கியது. பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரே-லி-மோனியால் என்ற இடத்தில் வாழ்ந்த விசிட்டேஷன் துறவற சபையைச்சேர்ந்த அருட்சகோதரி மார்கரெட் மேரி என்பவர் 1673 முதல் 1675 வரை கண்ட, பல தெய்வீக காட்சிகளாகும். இந்தக்காட்சிகளில் ஆண்டவர் இயேசு, திரு இருதய விழாவை, திருவுடல் திரு இரத்தப்பெருவிழாவிற்குப் பிறகு உள்ள வெள்ளிக்கிழமையில் அறிமுகப்படுத்த, காட்சியில் சொன்னார். திருத்தந்தை 13 ம் கிளமெண்ட் இதை 1765 ல் அங்கீகரித்தார். 1865 ல் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் இவ்விழாவினை கட்டாய விழாவாக திருச்சபை முழுவதும் அறிமுகப்படுத்தினார்.

இறைவனுடைய அன்பை நாம் முழுவதுமாக உணர வேண்டும் என்பதுதான் இந்த விழா நமக்கு உணர்த்தும் செய்தியாகும். இயேசுவின் அன்பு நிறைவான அன்பு. நம்மேல் அதிகமான இரக்கம் காட்டுகிற அன்பு. இயேசுவின் திரு இதயத்திடம் நம்மையே கையளிப்போம். மகிழ்வோடு வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் இதயம் பரிவின் ஊற்று

இதயம் அன்பின் அடையாளம். எனவேதான், இயேசுவும் தமது இதயத்தை அவரது அன்பின் அடையாளமாக நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். புனித மார்கரட் மரியம்மாளுக்கு காட்சி தந்த இயேசு, அன்பினால் பற்றி எரிந்த தமது இதயத்தைக் காட்டி, மனுக்குலத்தின் மட்டில் தமது பரிவை, கனிவை உறுதிப்படுத்தினார்.

மனிதர்கள் மூளை, இதயம் என இரு தளங்களில் செயல்படுகிறோம், செயல்பட வேண்டும். மூளை என்பது அறிவுத் தளத்தைக் குறிக்கின்றது. எதையும் பகுத்தறிவோடு, காரண, காரியங்களோடு அணுகி, சிக்கல் தீர்க்கும், சிந்திக்கும் திறனைக் காட்டுகிறது. அறிவாற்றலோடு நமது பணிகள் திகழவேண்டும்.

அதே வேளையில், இதயம் உணர்வுத் தளத்தைக் குறிக்கின்றது. குறிப்பாக, உறவுகளில் நாம் காட்ட வேண்டிய பரிவு, கனிவு, நட்பு, தியாகம் போன்றவற்றின் அடையாளமாக இதயம் இருக்கின்றது. உறவுகளில் மென்மையும், நெகிழ்வுத் தன்மையும் இருக்கவேண்டும். உறவுகளில் சட்டம் பேசக்கூடாது, நீதி, நியாயம் பேசக் கூடாது. விட்டுக்கொடுத்து, ஏற்றுக்கொண்டு, மன்னித்து வாழும் மனநிலையை இதயம் குறிக்கின்றது.

இன்றைய பெருவிழாவில் இயேசு நம்மீது காட்டும் அளவற்ற பரிவுக்காக நன்றி செலுத்துவோம், அத்துடன், நமது உறவுகளில் மூளையின் ஆதிக்கத்தைக் குறைத்து, இதயத்தின் ஆளுமையை அதிகரிப்போமாக.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்கள்மீது கொண்ட பேரன்பால் உமது இதயம் பற்றி எரியச் செய்தீரே. நன்றி. நாங்களும் எங்கள் உறவுகளில் பரிவு, கனிவு மிக்கவர்களாய் வாழ அருள்தாரும். ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி'' (யோவான் 19:34-35)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- யூதரின் பாஸ்கா விழா தொடங்கவிருந்த சனிக்கிழமைக்கு முந்திய நாள் இயேசு சிலுவையில் இறந்தார் என யோவான் குறிப்பிடுகிறார். இந்த நாளை நாம் ''பெரிய வெள்ளி'' என அழைக்கிறோம். ஏற்கெனவே இறந்துவிட்டிருந்த இயேசுவின் விலாவைப் படைவீரர் ஒருவர் ஈட்டியால் குத்துகிறார். அப்போது ''இரத்தமும் தண்ணீரும்'' வடிந்தன (யோவா 19:34). இதை நற்செய்தி ஆசிரியர் (அல்லது அவருக்குச் செய்தியை வழங்கியவர்) நேரில் கண்டு, சாட்சியம் கூறுகிறார். இயேசுவின் விலாவிலிருந்து, அவருடைய இதயத்திலிருந்து வழிந்தோடிய இரத்தமும் தண்ணீரும் இயேசுவின் இறுதிக் காணிக்கையாக அமைந்தன. இரத்தம் என்பது நற்கருணைக்கும், தண்ணீர் என்பது திருமுழுக்குக்கும் அடையாளம் என்னும் விளக்கம் திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே உண்டு.

-- திருச்சபையின் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பவை திருமுழுக்கும் நற்கருணையும் எனலாம். இயேசுவின் சாவும் உயிர்த்தெழுதலும் நமக்கு வாழ்வளிக்கும் அருளடையாளமாக மாறின. அந்த அருளடையாளத்தின் வழியாக நாம் இயேசு கிறிஸ்துவோடு புதிய வாழ்வில் இணைகின்றோம். நம்மில் உருவெடுத்து வளர்கின்ற இறை வாழ்வு நற்கருணை என்னும் ஆன்மிக உணவால் ஊக்கம் பெறுகிறது. இயேசுவின் விலாவிலிருந்து வாழ்வு பிறந்தது என்பதை நாம் மனித இனத்தின் தொடக்க கால வரலாற்றுப் பின்னணியிலும் காணலாம். அதாவது, ஆதாம் என்னும் முதல் மனிதனின் விலாவிலிருந்து தோன்றியது ஏவா. அதுபோல, புதிய ஏவா என வருகின்ற திருச்சபை இயேசுவின் விலாவிலிருந்து தோன்றுகிறது. நாம் இயேசுவின் உடலிலும் இரத்தத்திலும் பங்கேற்கிறோம்; திருமுழுக்கின் வழியாக நமது பாவங்களும் போக்கப்படுகின்றன. இவ்வாறு நற்கருணையும் திருமுழுக்கும் நம்மைக் கிறிஸ்து வழியாகக் கடவுளோடு இணைக்கின்றன. இந்தப் புதிய வாழ்வுக்கு நாம் சாட்சிகள். பிறர்முன் நாம் இயேசு பற்றிச் சான்று பகர்கின்ற வேளைகளில் நம் வார்த்தைகளை எல்லாரும் ஏற்பர் எனக் கூறவியலாது. ஆனால் நாம் சாட்சி பகர்வதில் ஒருநாளும் தளர்ந்துவிடாமல், நாம் பெற்ற அன்பு அனுபவத்தைப் பிறரோடு பகிர்ந்திட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, திருமுழுக்கால் புத்துயிர் பெற்ற நாங்கள் நற்கருணையால் ஊட்டம் பெற்று வாழ்ந்திட அருள்தாரும்

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

இயேசுவின் திரு இருதயம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

இயேசுவின் திரு இதயம், அது எதையும் தாங்கும் இதயம். உன்னுடையவும் உலகின் எல்லா மக்களுடைய எல்லாச் சுமைகளையும் தாங்கும் இதயம்.உன் எல்லாச் சுமைகளையும் தாங்கும் சுமை தாங்கி அந்த இயேசுவின் திரு இதயம்.அடி தாங்கும் உள்ளம் இடி தாங்குமா என்றால், இயேசுவின் இதயம் உன் எல்லா அடியையும் இடியையும் தாங்க தயாராக இருக்கிறது."பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்."

இறைவனிடம் வந்து நம் சுமைகளை அவரிடம் இறக்கி வைத்து, இளைப்பாறுதல் என்பது நம் பொறுப்புக்ளைக்; கை கழுவிவிடுவதல்ல. மாறாக, நம்பெருஞ்சுமைகளை அவரிடம் இறக்கி வைத்து, சில சிறிய எளிய சுமையை, அழுத்தாத நுகத்தை நம் மீது ஏற்றுக்கொள்வது. இயேசு நமக்குத் தருவது ஒரு நுகம். பொதுவாக நுகம் இருவர் சுமக்கும் சுமை. இயேசு நமக்குத் தருவது நுகம் என்பதால் நம்மோடு சுமக்கும் இரண்டாது நபர் இயேசு.ஆகவே, வாழ்க்கைப் N;பாராட்டத்தில் இளைப்பாற்றி என்பது, இறைவனோடு பகிர்ந்து கொள்வதும் இறைவன் தருவதை இறைவனோடு இணைந்து சுமப்பதும் ஆகும்.

இயேசுவின்திரு இதயம், சோர்ந்து மனம் உடைந்து தன்னிடம் தஞ்சம் அடையும் அனைவருக்கும் புகலிடமாகி புது வாழ்வு வழங்குகிறது. இயேசுவோடு சேர்ந்து அவர் தரும் மாற்றுச் சுமையை மனமுவந்து சுமப்போம். நமக்கு நம் சுமை பெரிதாகத் தோன்றாது. சுமையாக இருக்காது. புதிய அனுபவமாக இருக்கும். வாழ்வு இனிதாக இருக்கும்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லீயோன்

 

:-- அருட்திரு ஜோசப் லியோன் --: