முதல் வாசகம்

எஸ்ரா நூலிலிருந்து வாசகம் 9: 5-9

மாலைப்பலி நேரத்தில் நோன்பை முடித்துக் கிழிந்த ஆடையோடும் மேலுடையோடும் முழந்தாளிட்டு என் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி கைகளை விரித்து நான் கூறியது; "கடவுளே; உம்மை நோக்கி என் முகத்தைத் திருப்ப வெட்கி நாணுகிறேன். ஏனெனில், எங்கள் பாவங்கள் எங்கள் தலைக்கு மேல் பெருகிவிட்டன. எங்கள் குற்றங்கள் விண்ணைத் தொட்டு விட்டன. எம் முன்னோர் காலமுதல் இதுவரை நாங்கள் பெரும் பாவம் செய்துள்ளோம். எங்கள் பாவங்களினால், நாங்களும் எங்கள் அரசர்களும், குருக்களும் வேற்று நாட்டு மன்னர்களின் கைக்கும், வாளுக்கும் அடிமைத்தனத்திற்கும் கொள்ளைக்கும் வெட்கக் கேட்டுக்கும் இதுவரை ஒப்பவிக்கப்பட்டோம். ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளும் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது; எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்; உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்; எம் கடவுளாகிய நீர் என் கண்களுக்கு ஒளி தந்தீர்; எமது அடிமைத் தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர். நாங்கள் அடிமைகளாக இருந்தும், எம் கடவுளாகிய நீர் எங்களை அடிமைத்தனத்திற்குக் கையளிக்கவில்லை. மாறாக நாங்கள் உயிர் பிழைக்கவும், எங்கள் கடவுளின் கோவிலை எழுப்பவும், பாழடைந்ததைப் பழுதுபார்க்கவும் யூதேயாவிலும் எருசலேமிலும் பாதுகாப்பு அளிக்கவும் பாரசீக மன்னர்களின் முன் எமக்கு உமது தயை கிடைக்கவும் செய்தருளீர்!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

தொபித்து 13:2, 3, 6, 7, 8
பல்லவி : என்றும் வாழும் கடவுள் போற்றி.

2 என்றும் வாழும் கடவுள் போற்றி!
ஏனெனில் அவருடைய ஆட்சி எக்காலத்துக்கும் நிலைக்கும்.
அவர் தண்டிக்கிறார்; இரக்கமும் காட்டுகிறார்.
பாதாளத்தின் ஆழத்திற்கே தள்ளுகிறார்;
பேரழிவிலிருந்து மேலே தூக்குகிறார்.
அவரது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. - பல்லவி

3 இஸ்ரயேல் மக்களே, வேற்றினத்தார்முன் அவரது புகழை அறிக்கையிடுங்கள்.
ஏனெனில் அவர் அவர்களிடையே உங்களைச் சிதறடித்துள்ளார். - பல்லவி

6 நீங்கள் உங்கள் முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும்
அவர்பால் திரும்பி அவர் திருமுன் உண்மையுடன் ஒழுகினால்
அவர் உங்கள்பால் திரும்புவார்;
தமது முகத்தை உங்களிடமிருந்து என்றுமே திருப்பிக்கொள்ளார். - பல்லவி

7 உங்களுக்கு அவர் செய்துள்ளவற்றை இப்பொழுது எண்ணிப்பாருங்கள்;
நீதியின் ஆண்டவரைப் போற்றுங்கள்; வாயார அவரை அறிக்கையிடுங்கள்.
என்றுமுள மன்னரை ஏத்திப் போற்றுங்கள். - பல்லவி

8 நான் அடிமையாய் வாழும் நாட்டில் அவரைப் போற்றுவேன்;
அவருடைய ஆற்றலையும் மேன்மையையும் பாவ நாட்டமுள்ள இனத்தார்முன் அறிக்கையிடுவேன்.
பாவிகளே, மனந்திரும்புங்கள்;
அவர் திருமுன் நேர்மையுடன் ஒழுகுங்கள்.
ஒருவேளை அவர் உங்கள் மீது அருள்கூர்வார்; உங்களுக்கு இரக்கங்காட்டுவார். - பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! காலம் நிறைவேறி விட்டது; இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள். அல்லேலூயா.

லூக்கா 9:1-6

பொதுக்காலம், வாரம் 25 புதன்

நற்செய்தி வாசகம்

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 1-6

அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, பேய்களையெல்லாம் அடக்கவும் பிணிகளைப் போக்கவும் வல்லமையும் அதிகாரமும் அவர்களுக்குக் கொடுத்தார். இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும் உடல் நலம் குன்றியோரின் பிணி தீர்க்கவும் அவர்களை அனுப்பினார்.
அப்போது அவர்களை நோக்கி, ``பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போகவேண்டாம். ஓர் அங்கி போதும். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும் அங்கேயே தங்கியிருங்கள்; அங்கிருந்தே புறப்படுங்கள். உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரை விட்டுப் புறப்படும்போது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்றார். அவர்கள் ஊர் ஊராகச் சென்று எங்கும் நற்செய்தியை அறிவித்து நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

தோபித்து 13: 2, 3, 6, 7, 8
”என்றும் வாழும் கடவுள் போற்றி”

தோபித்து கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்த ஒரு மனிதர். குறிப்பாக, உடல் ஒவ்வொன்றும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டது. உடலுக்குரிய மதிப்பை வழங்க வேண்டுமென்று, இறந்த உடலை நல்லடக்கம் செய்வதற்காக தன்னுடைய வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர். அவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால், அவர் செய்யக்கூடிய காரியங்களால் அவருக்கு பிரச்சனை வரும் என்று தெரிந்தாலும் கூட, அதனைப் பற்றி கவலைப்படாமல் கடவுளைவிடாது பற்றிக்கொண்டவர். அவருடைய வாழ்வில் தான் செய்கிற ஒவ்வொரு செயலும் கடவுளைப் போற்றுவதாக அமைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டு வாழ்ந்தார்.

கடவுளைப் போற்ற வேண்டும் என்கிற எண்ணம் தான் இன்றைய பதிலுரைப்பாடலில் இடம்பெற்றிருக்கிற வரிகளில் வெளிப்படுகிறது. தோபித்தை பொறுத்தவரையில் கடவுள் இரக்கமும், நீதியும் உள்ளவர் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். கடவுள் ஒரு மனிதன் செய்கிற செயல்களுக்கு ஏற்ப, நீதி வழங்குகிறவர் என்பதை அழுத்திச் சொல்கிறார். கடவுள் எப்போதும் தன்னை நம்பி வரக்கூடிய பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறார். அதேவேளையில் தீமை செய்கிறவர்களை அவர் தண்டிக்கிறார். எனவே, கடவுளின் கோபத்திற்கு ஆளாகாமல், கடவுளையும், அவரது பெயரையும் புகழ்ந்து உண்மையுள்ளவர்களாக வாழ, நமக்கு அழைப்புவிடுக்கின்றார்.

நம்முடைய வாழ்வில் கடவுளைப் போற்றுகிறவர்களாக வாழ்கிறோமா? கடவுள் நம்முடைய வாழ்வில் செய்கிற செயல்களுக்கேற்ப, நன்றியுணர்வோடு வாழ்கிறோமா? என்று சிந்தித்துப்பார்ப்போம். உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டிய அருள் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

பணிவாழ்வு

இன்றைய நற்செய்தியிலே, இயேசு கிறிஸ்து தனது சீடர்களை பணிவாழ்விற்கு தயாரிப்பாக, அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள அனுப்புகிறார். இயேசு அவர்களை அனுப்புகிறபோது, பயணத்திற்காக எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்று சொல்கிறார். எதற்காக பயணத்திற்காக எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்று இயேசு சொல்கிறார்? ஒரு வழிப்பயணத்தில் நமக்கு பல தேவைகள் நிச்சயம் இருக்கும். அந்த தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில் சென்றால், அந்த பணியை இன்னும் அதிக ஆர்வத்தோடு, நேர்த்தியோடு செய்து முடிக்கலாம். அப்படியிருக்கிறபோது, இயேசு ஏன் பொருள் இல்லாத பயணத்தை ஊக்குவிக்கிறார்.

இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்ல முடியும். முதலாவது, பணிவாழ்வில் தன்னை இணைத்துக்கொள்கிற ஒவ்வொருவரும், கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை வைக்க வேண்டும். செய்வது நாமாக இருந்தாலும், நம் வழியாகச் செய்து முடிப்பவர், தந்தையாகிய கடவுள். நாம் வெறும் ஊழியர்கள். அவ்வளவுதான். நமக்கே கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை இல்லையென்றால், நாம் எதைப்பற்றி மக்களிடையே போதிக்கப்போகிறோம்? நமது அனுபவமே போதனையாக இருக்க வேண்டும். அந்த அனுபவத்தைப்பெறுவதற்காக, அவர்களை வெறுமனே அனுப்புகிறார். இரண்டாவது, நாம் நமது பணிக்காக கொண்டு செல்கிற பொருட்களே, நமது பணியைச் செய்வதற்கு தடையாய் அமைந்து விடுகிறது. நாம் அதைப்பயன்படுத்துவதில் தேங்கிவிடுகிறோம். அதில் ஈர்ப்பு உடையவர்களாக மாறிவிடுகிறோம். எதற்காக வந்தோமோ, அந்த நோக்கத்தை மறந்துவிடுகிறோம். நமது பணிக்கு இடறலாக, சோதனையாக நாம் கொண்டுவந்த பொருட்கள் அமைந்து விடுகிறது. நமது வாழ்வே, நமது போதனைக்கு எதிரியாய் மாறிவிடுகிறது. ஆகவே தான், இயேசு தனது சீடர்களை, போதிக்க அனுப்புகிறபோது, எதையும் தங்களோடு எடுத்துச்செல்ல வேண்டாம் என்று கட்டளையிடுகிறார்.

போதிக்கக்கூடிய கடமை திருமுழுக்குப் பெற்றிருக்கிற அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இருக்கிறது. நாம் இருக்கக்கூடிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப, நமது போதனை வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும். அப்படி வாழ்கிறபோது, கடவுளின் பராமரிப்பில் நம்பிக்கை உள்ளவர்களாகவும், பொருட்களின் மீது பற்றற்றவர்களாகவும் வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறைப்பணி அன்பின் பணி

இயேசு வாழ்ந்த காலத்தில் போதனை என்பது வாய்மொழியாகவே தரப்பட்டது. செய்தித்தாள்கள் அப்போது கிடையாது. புத்தகங்களாக எழுதுவது மிகவும் சிரமமானது. போதிப்பதற்கான ஒரே வழிமுறை: வாய்மொழிப் போதனை. அதிலே பல சிரமங்கள் இருந்தன. பல மைல்கள் தூரம் நடந்து செல்ல வேண்டும். மக்கள் அவர்களை நம்ப வேண்டும். அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும். காலமோ, நேரமோ சொற்பம் தான். அதற்குள்ளாக அவர்கள் சில இடங்களிலாவது தங்களது பணியைச்செய்திருக்க வேண்டும். இத்தனை சிரமங்களுக்கு நடுவில், இயேசு தனது சீடர்களை போதனைப்பணிக்கு அனுப்புகிறார்.

போதிக்கின்ற செல்கின்ற தனது சீடர்கள் எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்பது, இயேசு சொல்கிற அறிவுரையாக இருக்கிறது. இது இரண்டு சிந்தனைகளை நமக்குத்தருகிறது. 1. எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம் என்பது, கடவுள் தருவார் என்கிற நம்பிக்கையை பறைசாற்றுகிறது. பழைய ஏற்பாட்டில், ஆபிரகாம், தனது மகன் ஈசாக்கைப் பலியிடச் சென்றபோது, ஈசாக்கு எரிபலிக்கான ஆட்டுக்குட்டியைக் கேட்டபோது, ”கடவுளே பார்த்துக்கொள்வார்” என்று ஆபிரகாம் பதிலளிக்கிறார். இயேசு “எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம்” என்று சொன்னபோது, சீடர்கள் திருப்பி எதையும் கேட்கவில்லை. கடவுளின் பராமரிப்பில் நாங்கள் நம்பிக்கை வைக்கிறோம் என்பதை இது எடுத்துச்சொல்கிறது. கடவுளின் பணியைச்செய்கின்றவர்களுக்கு கடவுளின் பராமரிப்பின் மீது முதலில் நம்பிக்கை இருக்க வேண்டும்.

2. கடவுளின் பணிக்கு பற்றில்லா தன்மை கொண்டிருக்க வேண்டும். உலக நாட்டங்களின் மீது உள்ள ஆசையை நாம் விலக்கி வைக்க வேண்டும். பொருட்கள் நம்மோடு இருக்கிறபோது, நமது எண்ணங்களும் பொருட்களோடு இணைந்திருக்கிறது. அதைவிட்டு வெளியே வர மறுக்கிறது. ஆசைகளை உதறித்தள்ளுகிற பக்குவம் நமக்கு வேண்டும். சீடர்கள் இதனைப்பின்பற்றுகிறார்கள். நாமும், நமது வாழ்வில் கடவுளைப்பற்றிக்கொண்டு, உலகநாட்டங்களி் ஆசையை விடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தூசியை உதறிவிடுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தம் சீடர்களை நற்செய்திப் பணிக்கு அனுப்பும் முன்னர் இயேசு அவர்களுக்கு வழங்கிய அறிவுரைகளை இன்று வாசிக்கிறோம். அதன் இறுதிப் பகுதியில் உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய நகரைவிட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள் என்னும் கருத்து இன்று நம் கவனத்தைக் கவர்கிறது.

இந்த அறிவுரை தரும் செய்திகள்: 1. நற்செய்தி அறிவிக்கப்படும்போது அனைவரும் அதை ஏற்றுக்கொள்வர் என்று எதிர்பார்க்க வேண்டாம். ஒருசிலர் அதை ஏற்க மறுப்பர். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். 2. நற்செய்தியை ஏற்றுக்கொள்ளாதவர்களிடம் நேரத்தையும், ஆற்றலையும் அதிகமாகச் செலவழி;க்க வேண்டாம். அவர்களுடைய நகரை விட்டுப் புறப்படுங்கள். 3. அவ்வாறு புறப்படும்போது கால்களிலுள்ள தூசியை உதறிவிடுங்கள். அதாவது, அவர்களுடைய ஏற்றுக்கொள்ளாமையைப் பொருள்படுத்த வேண்டாம். புறக்கணியுங்கள். அலட்சியப்படுத்துங்கள்.

நமது வாழ்வுக்கு இந்த செய்திகள் அவசியமானவை. நமது இல்லத்தில், பணியிடத்தில் நமது சொல்லாலும், செயல்பாடுகளாலும் நல்ல மதிப்பீடுகளை, நல்ல செய்திகளை, நியாயங்களை எடுத்துரைக்க வேண்டியது நமது கடமை. ஆனால், எல்லாரும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவர்களிடம் அதிக வாக்குவாதங்கள் செய்து நேரத்தைப் பாழாக்க வேண்டாம். அவர்களைப் புறக்கணித்துவிட்டு, தொடர்ந்து பிறருக்கு நற்செய்தி அறிவிக்கும் பணியில் ஈடுபடுவோம்.

 

மன்றாடுவோம்: நற்செய்தியின் நாயகனே இயேசுவே, எங்களையும் உமது நற்;;செய்தி அறிவிப்புப் பணிக்கு அழைத்ததற்காக, ஏற்றுக்கொண்டதற்காக நன்றி கூறுகிறோம். உமது சீடர்களுக்கு நீர் அளித்த அறிவுரையை, நாங்களும் ஏற்று, மனம் தளராமல் தொடர்ந்து நற்செய்திப் பணியாற்ற எங்களுக்கு ஊக்கமும், ஆற்றலும் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

''இயேசு பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்து, ... இறையாட்சி பற்றிப் பறைசாற்றவும்
உடல் நலம் குன்றியோரின் பிணிதீர்க்கவும் அவர்களை அனுப்பினார்'' (லூக்கா 9:1-2)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம் பணியைத் தொடர்வதற்காகப் பன்னிரு திருத்தூதர்களை அனுப்பிய செய்தியையும், எழுபத்திரண்டு சீடர்களை அனுப்பிய செய்தியையும் லூக்கா பதிவுசெய்துள்ளார் (காண்க: லூக் 9:1-6; 10:1-12). இந்த இரண்டு பதிவுகளும் ஒரே நிகழ்வின் இரு வடிவங்களாக இருக்கலாம் என அறிஞர் கருதுகின்றனர். எவ்வாறாயினும், இயேசுவின் பணியைத் தொடர்வதற்காக அனுப்பப்பட்ட சீடர்களின் வரலாற்றில் தொடக்க காலத் திருச்சபையின் அனுபவம் பிரதிபலிப்பதை நாம் காணலாம். இயேசு தம் சீடர்களை அனுப்புவது இரண்டு முக்கிய குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்காக. அவர்கள் ''இறையாட்சி பற்றிப் பறைசாற்ற வேண்டும்''; ''நற்செய்தியை அறிவிக்க வேண்டும்'' (லூக் 9:2,6). இவ்வாறு பணியாற்றும்போது சீடர்கள் ''உடல் நலம் குன்றியோரின் பிணிகளையும் போக்குவார்கள்'' (காண்க: லூக் 9:2). அன்று சீடர்களுக்கு அளித்த பணியை இன்றைய திருச்சபையும் தொடர வேண்டும். இறையாட்சி நம்மிடையே வந்துள்ளது என்னும் நல்ல செய்தியை அறிவிக்கின்ற அதே நேரத்தில் திருச்சபை மக்களின் பிணிகளையும் போக்க வேண்டும். இந்த பிணிகள் பல வகை: உடல், உளம், ஆன்மா சார்ந்த எல்லாவித ஊனங்களும் குறைபாடுகளும் ''பிணிகள்'' எனலாம். கொடிய வறுமையில் வாடுவோர், சமுதாயத்தால் ஒடுக்கப்படுவோர், மனித உரிமைகள் மறுக்கப்பட்டு சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்பட்டோர் ஆகிய எல்லா மக்களுமே ஒருவிதத்தில் ''பிணி''களால் அவதிப்படுகிறவர்களே. இவர்களுக்கு இயேசுவின் சீடர்கள் அறிவிக்கும் நற்செய்தி என்ன? எல்லாவித அநீதிகளிலிருந்தும் மக்களை விடுவிக்க இயேசு வந்தார் என்னும் நற்செய்தியை அறிவிக்காமல் திருச்சபை இயேசுவின் நற்செய்திப் பணியைத் தொடர்ந்து ஆற்ற இயலாது.

-- மேலும் இயேசு ''பயணத்திற்குக் கைத்தடி, பை, உணவு, பணம் போன்ற எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம்'' என்றார் (லூக் 9:3). இந்த அறிவுரை இன்றைய வாழ்க்கைச் சூழமைவுகளுக்குப் பொருந்திப் போகாது என நாம் நினைக்கலாம். ஆனால் இயேசு வழங்கிய அறிவுரையின் உட்பொருளை நாம் மறந்துவிடலாகாது. இயேசுவின் பணியைத் தொடர்வோர் உலகப் பார்வையில் செயல்படாமல் கடவுளிடத்தில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும் என இயேசு அறிவுறுத்துகிறார். அக்காலத்தில் பயணம் சென்றவர்கள் கைத்தடி வைத்துக்கொண்டார்கள். நடக்கும்போது ஊன்றிக்கொள்வதற்கும், வழிப்பறிக்காரர்களிடமிருந்தும் காட்டு விலங்குகளிடமிருந்தும் தங்களைக் காத்துக்கொள்வதற்கும் அது பயன்பட்டது. பையில் உணவுப் பொருள் மற்றும் பணம் போன்றவற்றை வைத்திருந்தார்கள். மாற்று உடையாக ஓர் உள்ளாடையும் பயன்பட்டது. ஆனால் இயேசுவின் சீடர்கள் மற்ற வழிப்போக்கர்கள் போலத் தங்களைக் கருதாமல் தங்கள் தேவைகளை நிறைவேற்ற கடவுளையே நம்பியிருக்க வேண்டும். அதுபோல, வீடுவீடாகச் சென்று உதவி கேட்காமல் பிறர் கொடுப்பதைப் பெற்று நிறைவடைய வேண்டும். ஆக, பற்றற்றான் பற்றினைப் பற்றிக் கொண்டவர்கள் பிற பற்றுகளிலிருந்து விடுதலை பெறும்போதுதான் கடவுளின் பணியை நன்முறையில் ஆற்ற இயலும் என்பது இன்று வாழும் நமக்கு விடப்படுகின்ற சவால்.

மன்றாட்டு
இறைவா, உம் பணியை ஆற்றுவதில் மன உறுதியோடு நாங்கள் செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

--------------------------------

''பயணத்திற்கு...எதையும் எடுத்துக்கொண்டு போக வேண்டாம்'' (லூக்கா 9:3)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பயணம் போவது சில வேளைகளில் மகிழ்ச்சியான ஓர் அனுபவமாக இருக்கும்; வேறு சில வேளைகளில் அது துயரமானதாகவும் இருக்கலாம். எத்தகைய பயணமாக இருந்தாலும் தாங்க முடியாத அளவுக்கு சுமைகளைக் கட்டிச் சென்றால் அந்தப் பயணம் இனிமையாக இராது. சுமையைக் கவனிப்பதிலேயே சக்தியெல்லாம் வீணாகிப் போனால் பயணத்தின் நோக்கம் நிறைவேறியது எனக் கூற முடியுமா? வாழ்க்கை முழுவதுமே ஒரு பயணம் எனலாம். இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லாத போதும் பெரிய சுமைகளை நாம் நம்மோடு கொண்டுபோவதாக இருந்தால் அச்சுமைகள் நம்மை அழுத்திவிடக் கூடும். எனவே, ''கைத்தடி, பை, உணவு, பணம்'' போன்ற பொருள்களைப் பயணத்திற்கென எடுத்துச் செல்ல வேண்டாம் (காண்க: லூக்கா 9:3) என்று இயேசு பன்னிருவருக்குக் கூறிய சொற்கள் நமக்கும் பொருந்தும். நம் உடைமைகளே நம் வாழ்க்கையை நிறைத்துவிட்டால் கடவுளுக்கு அங்கே இடமில்லாமல் போகும். அதே நேரத்தில் நம் வாழ்க்கை முற்றிலும் வெறுமையாக மாறிவிட்டால் நாம் கடவுளைப் பழிக்கத் தொடங்கிவிடுவோம்.

-- ஆக, அளவுக்கு மீறிய செல்வமும் ஆபத்து, தேவைக்கு மிஞ்சிய வறுமையும் ஏற்கத் தகாதது எனலாம். விவிலிய நூலாகிய ''நீதிமொழிகள்'' கூறுவதுபோல, ''எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்'' (நீமொ 30:8) என நாம் மன நிறைவு கொண்டிருப்பதே உயர்ந்த அறிவு.

மன்றாட்டு
இறைவா, உலகம் வழங்குகின்ற செல்வத்தில் நம்பிக்கை கொள்ளாமல் உம் நிறைவிலிருந்து நாங்கள் நிறைவுபெற எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

__________________________________

ஒன்றாக வாருங்கள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நாம் நமது கத்தோலிக்க திருச்சபையில் இருப்பதை நினைத்து பெருமைப்பட வேண்டும்.மகிழ்ந்து கொண்டாட வேண்டும். இன்று இயேசுவின் பெயரால் எத்தனை பரிவினை. என்னைன்ன விதவிமான கொள்கைகள். அறநெறிக்கும், இயேசுவின் போதனைக்கும் மாறுபட்ட போதனைகள். ஒரே சபைக்குள் ஒன்றுபட்ட இறையியல் கோட்பாடு, செயல்பாடு இல்லாததால் மக்களிடையே குழப்பங்களையும் மன நிம்மதியற்ற நிலையையும் காண்கிறோம்.

ஒரு தலைமையின் கீழ் ஒற்றுமையோடு செயல்பட்டு மக்களுக்கு நற்பணியாற்ற இயேசு விரும்பினார். ஆகவே பன்னிருவரையும் ஒன்றாக வரவழைத்தார் (லூக் 9'1). அதன் பின்னரே பணியை ஒப்படைத்தார் ( லூக்9' 2-5).நம் கத்தோலிக்க திருச்சபையில் நம் திருத்தந்தையின் தலைமையோடு ஆயர்களும் ஆயர்களோடு குருக்களும் இறைமக்களும் ஒன்றாக ஒன்றிணைந்து செயல்படுவதே இயேசுவின் திருச்சபைக்குச் சான்று.

போதிக்கும் பணி, பனிதப்படுத்தும் பணி, வழிநடத்தும்பணி என்னும் முப்பெரும் பணிகளை தூய ஆவியின் துணையோடு ஒன்றாக, ஒரே ஆயரின் தலைமையில் ஒரே மந்தையை உருவாக்கி அனைவரும் ஒரே தந்தையின் மக்களாக வாழும்பொருட்டே தம் சீடர்களை அனுப்புகிறார்.

இயேசுவின் விருப்பம் நிறைவேற செபிப்போம், உழைப்போம்.

 

 

--அருட்திரு ஜோசப் லீயோன்