29bஉ நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும். மாற்கு 7:14-23 பொதுக்காலம், வாரம் 5 புதன்
நற்செய்தி வாசகம் ------------------------- 07.02.2024 புதன் தமிழ் பண்பாட்டிலே பல கலாச்சாரம் நடைமுறையில் இருக்கின்றன. இறந்தவர்களின் இறுதி சடங்கிலே பங்கெடுத்தால் நாம் உடனடியாக உடையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் தீட்டு என எண்ணுகிறோம். குறைந்த வகுப்பினைச் சார்ந்தவர்கள் வீட்டிற்குள் வந்து சென்றால் உடனே வீட்டினை தண்ணீரால் துடைத்துவிடுகின்றோம். இல்லையென்றால் தீட்டு என்ற மனப்பாங்கு கிராமப்புறங்களில் அதிகமாக இருக்கிறது. நல்ல காரியத்திற்கு செல்லும்போது குழந்தைபேறு பெறாதவர்களின் முகம் காணாமல் செல்ல வேண்டும். இல்லையென்றால் தீட்டு என எண்ணுகிறோம். இத்தகைய தீட்டு அட்டவணை மனித கிருமிகளால் உருவாக்கப்பட்டன. இத்தகைய சிந்தனை இயேசுவின் காலத்திலே அதிகமாக காணப்பட்டது. இதனை உடைத்து எரியவே இயேசு இதற்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கின்றார். பழைய ஏற்பாடு எவையெல்லாம் தீட்டு என்று பாடம் புகுத்தியதோ, இயேசு அந்த பாடத்திட்டங்களை புதிய மொழியில் வடிவமைக்கின்றார். அதாவது கை கழுவாமல் உண்ணுவது தீட்டு என்றால் தம் சீடர்கள் அதைச்செய்ய இயேசு அனுமதித்தார் என்று (மாற் 7 : 2) ல் பார்க்கின்றோம். இறந்தவர்களின் பாடையைத் தொடுவது தீட்டு என்றால் அதையும் செய்தார் இயேசு (லூக் 7 : 14) காரணம் தீட்டு பற்றிய இயேசுவின் பார்வை தெளிவாக இருந்தது. வெளியே இருந்து மனிதரின் உள்ளே செல்வது தீட்டு என்ற யூதர்களின் நடைமுறைக் கோட்பாட்டை இயேசு உடைத்து, மனிதரின் உள்ளே இருந்து வெளியே வருவதுதான் தீட்டு என்று பிரகடனப்படுத்துகிறார். நாம் பார்க்கும் தீட்டு நமக்குள் இருந்து வருகிறதா? (அ) வெளியே இருந்து வருகிறதா? சிந்திப்போம். - அருட்பணி. பிரதாப் =========================== புதன் மாற்கு 7:14-23 பாவம் தன்னகத்தே தீமையானது. இது வெளியிலிருந்து வருவதல்ல. மாறாக நம்முள்ளிருந்து வருகின்றது. ஆனால் இறைவன் படைத்த உணவும், பிறவும் தன்னிலே தூயது. அதனைத் தீயதாக கருதுவது நம் எண்ணத்திலும,; பயன்படுத்துகின்ற விதத்திலும் தான் இருக்கின்றது. இஸ்லாமியர்கள் பன்றியைத் தீட்டு எனக் கருதி உண்ணமாட்டார்கள். இந்துக்கள் மாட்டுக்கறியை உண்ணமாட்டார்கள். உண்ணுகின்ற இந்துக்களை கீழ்சாதியினர்; என ஒதுக்கி வைத்து தீண்டத்தகாதவர்கள் என கருதுகிறார்கள். ஆனால் கிருத்தவர்கள் நாம் மட்டும் இந்த வானிற்கு கீழ் உள்ள அனைத்தையும் உண்டு களிக்கிறோம். காரணம் இயேசுவின் இவ்வாக்கு உணவுப் பொருட்களில் தீட்டு என்பதே இல்லை என்பதை கொஞ்சம் கொஞ்சம் தொடக்கக்காலத் திருஅவைத் தொட்டே நாம் அனைத்தையும் உண்ண ஆரம்பித்து விட்டோம். காண்க 1திமோ 4: 4,5. “கடவுள் படைத்தது அனைத்தும் நல்லதே, நன்றி உணர்வுடன் கொண்டால் எதையும் விலக்க வேண்டியதில்லை, கடவுளின் வார்த்தையும் நமது மன்றாட்டும் அதைத் தூயதாகும்” தூய பேதுருவும் இதை ஒத்தக் கருத்தைக் கூறுகிறார். காண்க தி.ப 10:15 “தூய்மையானது எனக் கடவுள் கருதுவதைத் தீட்டாக கருதாதே”. இதனைப் பார்க்கும் போது “றுழற” என்று வாயினைப் பிளக்க தோனும். ஆனால் நம் கிருத்தவர்கள் சாதி பிளவுகளை கொண்டு மனிதர்களையே தீட்டு என்று தான் ஒதுக்கி வைத்திருக்கின்றோம். உண்மையில் இன்று ஆண்டவர் இச்சாதியில் தீயை வைக்க அழைக்கின்றார். பிறரைத் தீட்டு என்று ஒதுக்கி வைப்பதில் நம் உள்ளம் தான் தீட்டுப்பட்டுள்ளது. உணவிலிருந்து தீட்டை விரட்டியடித்த நாம் இன்று நம் உள்ளத்தில் இருக்கும் தீட்டினை விரட்டியடிப்போம். - திருத்தொண்டர்.வளன் அரசு ==================== திருப்பாடல் 104: 1 – 2, 27 – 28, 29 – 30 கடவுள் இந்த உலகத்தைப் படைத்தார். படைப்பின் சிகரமாக மனிதனைப் படைத்தார். ஒன்றுமில்லாமையிலிருந்து இந்த உலகத்தைப் படைத்தார். அதுதான் கடவுளின் சிறப்பு. அதுதான் கடவுளின் வல்லமையைக் குறிக்கக்கூடியது. மனிதன் கடவுளின் இயல்பில் படைக்கப்பட்டாலும், கடவுள் இந்த உலகத்தையே அவனது பராமரிப்பில் விட்டுவிட்டாலும், கடவுளின் துணை இல்லாமல், மனிதனால் ஒன்றுமே செய்ய முடியாது. கடவுள் நினைத்தால், மனித வாழ்வு அவ்வளவுதான். ஆனால், இந்த உண்மையை மனிதன் உணர்ந்து கொள்ளாமல், இந்த உலகமே தன் கையில் என்பதுபோல, தன்னுடைய வாழ்வை வாழ்ந்து வருகிறான். அப்படிப்பட்ட தவறான பார்வையிலிருந்து மாறிவாழ திருப்பாடல் ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். நமது வாழ்க்கையில் கடவுளை நாம் போற்ற வேண்டும். நமது உடல், உள்ளம், ஆன்மா என ஒட்டுமொத்தமும் இணைந்து கடவுளைப் புகழ வேண்டும். ஏனென்றால், அந்த அளவுக்கு கடவுளின் பராமரிப்பு நமக்கு கிடைத்துக்கொண்டிருக்கிறது. நாம் வாழ்வது, இயங்குவது, இந்த உலகத்தில் இருப்பது, நாம் செய்யக்கூடிய செயல்களைச் செய்வது என அனைத்தையும் ஒட்டுமொத்தமாக நாம் செய்வதற்கு உறுதுணையாக இருப்பது, இறைவனாகிய ஆண்டவர். அவரை நாம் எப்போதும் போற்றுவதற்கும், புகழ்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் பெயரை போற்றுவதும், புகழ்வதும் நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதம். அவர் நமக்குச் செய்துள்ள, செய்து வருகின்ற அனைத்தையும் பெறுவதற்கு நாம் தகுதியற்றவர்கள். நிச்சயம் கடவுளின் அன்பும், அருளும் நம்மோடு எப்போதும் இருக்கும்படி, நமது வாழ்வை நாம் அமைத்துக்கொள்ளும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
--------------------------------------------------- இயேசுவின் உண்மையான சீடர் யார்? இந்த நற்செய்திப்பகுதியில் இயேசுவின் வார்த்தைகள் நமக்கு பெரிதாகத்தோன்றவில்லை என்றாலும், இயேசு வாழ்ந்த பிண்ணனியில், இது உண்மையிலே எதிர்ப்புகளைத் தேடித்தருகிற வார்த்தைகள். இயேசு வாக்குவாதம் செய்தது சாதாரண மனிதர்கள் அல்ல. சட்டத்தை நன்கு கற்று, அந்த சட்டத்தை உடும்புப்பிடியாகப்பிடித்துக் கொண்டிருந்த சட்ட வல்லுநர்களிடம். எதனைப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்களோ, எது தங்களது வாழ்வின் நிறைவு என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்களோ, அவர்களிடத்தில் சட்டங்களைப்பற்றி, விளக்கத்தை எடுத்துச்சொல்வது எளிதானது அல்ல. அதை இயேசு செய்கிறார். இயேசு வாழ்ந்த காலச்சூழ்நிலையில் இந்த சட்டங்கள் எவ்வளவுக்கு மக்கள் வாழ்வில் தாக்கம் கொண்டிருந்தது என்பதற்கு பல விளக்கங்களைச் சொல்லலாம். சிரிய அரசன் அந்தியோக்கு எப்பிபான் யூதர்களின் நம்பிக்கையை வேரறுக்க முடிவு செய்து, அவர்களை பன்றி இறைச்சியைச் சாப்பிடச்சொல்லி கட்டாயப்படுத்தினான். பன்றி இறைச்சி தீட்டான உணவு. ”தாங்கள் பன்றி இறைச்சியை சாப்பிட்டு தீட்டாவதைவிட, இறப்பது மேல் என்று சொல்ல, பல யூதர்கள் உயிர்விட்டனர். 1மக்கபேயர் முதலாவது அதிகாரத்தில் இந்த நிகழ்வை நாம் பார்க்கலாம். இப்படி சட்டங்களுக்காக, மரபுகளுக்காக தங்கள் உயிரையே விடத்தயாராக இருந்த காலத்தில் தான், இயேசுவின் இந்தப்போதனை இருந்தது. உண்மை எப்போதும் உரைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பது இயேசு தரும் செய்தி. இந்த உலகமே எதிர்த்தாலும், உண்மையை உறுதியாக ஒளிவு மறைவின்றி சொல்கிறவரே, உண்மையான இயேசுவின் சீடர். நாமும் இயேசுவின் உண்மைச்சீடர்களாவோம்.
------------------------------------------------------- லேவியர் 11 ம் அதிகாரத்தில் தீட்டாகக்கருதப்படக்கூடிய விலங்குகளின் பட்டியல் கொடுக்கப்பட்டிருக்கிறது. யூதர்களுக்கு தூய்மை என்பது கண்ணும், கருத்துமாக கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று. எனவே, எவற்றை சாப்பிட வேண்டும்? எவற்றை சாப்பிடக்கூடாது? என்ற வரைமுறைகளை வகுத்திருந்தனர். எந்த அளவுக்கு இதில் கவனமாக இருந்தார்கள் என்றால், தீட்டான உணவைச் சாப்பிடுவதை விட சாவதே மேல் என்று பலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட நிகழ்வை நாம் மக்கபேயர் நூலில் பார்க்கலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் பன்றி இறைச்சியைச்சாப்பிடக் கட்டாயப்படுத்தப்பட்ட சகோதரர்கள் ஏழுபேர், பன்றி இறைச்சியைச்சாப்பிட்டு தங்களை தீட்டுப்படுத்துவதை விட சாவதே மேல் என்று தங்கள் உடலைப்பல்வேறு சித்திரவதைகளுக்குக் கையளித்ததையும், அவர்களை அவர்களின் தாய் ஊக்கப்படுத்தியதையும் நாம் வாசிப்பது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால், இயேசு வெளியிலிருந்து சாப்பிடக்கூடிய உணவு அல்ல, மாறாக, மனித எண்ணத்திலிருந்து தோன்றும் தீய சிந்தனைகள் தான் மனிதனைத்தீட்டுப்படுத்துகின்றன என்று சொல்கிறார். எண்ணங்கள் தான் செயல்பாடுகளுக்கு அடிப்படை என்று சொல்வார்கள். நம் எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக இருந்தால், நம் செயல்பாடுகளும் நல்ல செயல்பாடுகளாக இருக்கும். நம் எண்ணங்கள் கெட்ட எண்ணங்களாக இருந்தால் நம் செயல்பாடுகளும் கெட்ட செயல்பாடுகளாக இருக்கும். பரிசேயர்களுடைய எண்ணங்கள் கெட்ட எண்ணங்களாக, மற்றவர்களுக்கு கெடுதிவிளைவிக்கும் எண்ணங்களாக இருந்தன. எனவேதான், அவர்கள் செய்வது அனைத்தும் மக்களுக்கு கெடுதியை விளைவித்துக்கொண்டிருந்தன. அவர்கள் அதைப்பற்றிக்கவலைப்படாமல், வெறும் சடங்கு சார்ந்தவற்றைத் தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்தனர். இயேசு இதைக்கண்டித்து, உள்ளத்தில் தூய்மையானவர்களாக வாழ அழைப்புவிடுக்கிறார். நம் எண்ணங்களை தூய்மையான எண்ணங்களாக வைத்திருக்க இறையருள் வேண்டுவோம். இறைவனின் அருளும், நமது முயற்சியும் இருக்கும்போது, உண்மையிலேயே நம் எண்ணங்களையும், சிந்தனைகளையும் நம்மால் தூய்மையானதாக வைத்திருக்க முடியும். - அருட்பணி. தாமஸ் ரோஜர் ----------------------------------- தீட்டு மனிதருக்கு உள்ளேதான்... தீண்டாமை என்னும் பாவம் இன்றும்கூட நமது சமூகத்தில் பழக்கத்தில் உள்ளது. வெவ்வேறு வடிவங்களில் அது தன்னை வெளிப்படுத்துகிறது. குறிப்பிட்ட மனிதரைத் தொடுவதோ, அவர்களோடு உண்டு, உறவாடுவதோ நம்மைத் தீட்டுப்படுத்துகிறது என்று எண்ணும் மக்கள் இந்த நூற்றாண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். சாதிய வெறியும், சாதிய உணர்வும் (இரண்டும் அடிப்படையில் ஒன்றுதான், வெளிப்பாட்டில்தான் வேறுபாடு) கொண்ட கிறித்தவர்களும் இன்னும் இருக்கிறார்களே, பின் தீண்டாமையைக் கடைப்பிடிப்போரை நாம் எப்படிக் குறை சொல்ல முடியும். "வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது" என்கிறார் ஆண்டவர் இயேசு. எனவே, மனிதரில் சாதிய உணர்வோ, உணவில் விலக்கோ கொள்ளவேண்டிய தேவையில்லை. எல்லா உணவுப்பொருள்களும் தூயன என்று பொருள் கொள்கிறார் நற்செய்தியாளர். எல்லா மனிதருமே மாண்பு மிக்கவர்கள், சமத்துவம் மிக்கவர்கள் என்று இன்று நாம் பொருள்கொள்ள வேண்டும். "மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும்" என்கிறார் இயேசு. பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் உள்ளத்திலிருந்தே வருகின்றன என்று அவற்றைப் பட்டியல் இடுகிறார் இயேசு. காமவெறி போல சாதிவெறியும் மனிதரின் உள்ளத்திலிருந்துதான் வெளிவருகிறது. உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவோம். ஒற்றுமையோடு வாழ்வோம். மன்றாடுவோம்: உலகின் ஒளியாக உம்மை வெளிப்படுத்திய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உள்ளத்தைத் தொடும் உமது வார்த்தைகளுக்காக நன்றி. எங்கள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்தி சாதிவெறியிலிருந்தும், சாதீய உணர்வுகளிலிருந்தும் எங்களை விடுவித்தருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். --பணி. குமார்ராஜா ------------------------------------------------- இணையதள உறவுகளே உள்ளும் புறமும் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும். வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரே வாழ்க்கை. இந்த பூனை பால் குடிக்குமா, என்று நான்கு பேர் முன்னிலையில் சொல்லும்போது, தனிமையில் கள்ளும் குடிக்கும் என்றால், கதை கந்தலாகிவிடும் அல்லவா! வெளியே வெள்ளையும் சொள்ளையும். உள்ளே வெள்ளை அடிக்கப்பட்ட கல்லரையின் நிலவரம் என்றால், அதை என்ன சொல்வீர்கள். இயேசு இதைத்தான் இங்கு பட்டியலிடுகிறார். நம் உள்ளத்தின் ஆழத்தில் நல்ல எண்ணங்கள் கருவானால் அது நல்ல வாழ்க்கை என்னும் குழந்தையை பெற்றெடுக்கும். உள்ளத்தில் சுயநலம் இருந்தால், வெளியில் கொலை கொள்ளை என்று வெளிப்படும். காமம் இருந்தால் கற்பழிபாக வெளிப்படும். பொறாமை, கொலையில் முடியும். உள்ளத்தின் ஆழத்தில் சென்று பார்த்தால் மட்டுமே ஒரு மனிதனின் உண்மை நிலையை உணர முடியும். ஏன் கோபப்பட்டான், ஏன் தீவிரவாதம் காட்டுகிறான், ஏன் பிடிவாதம் செய்கிறான்? அவனின் உண்மை நிலையை அறிய அவன் உள் செல்லுங்கள். உங்கள் குழந்தை, மனைவி, கணவனின் உள்ளே மறைந்திருக்கும் அந்த மனிதனை அடையாளம் காணுங்கள். அந்த மனிதனை மனிதனாக்குங்கள். அவர்கள் எப்போதும் நல்லவர்களே. இயேசு இதைச் செய்தார். -ஜோசப் லீயோன்
உள் இருக்கும் தீமைகள் ! இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, இயேசுவின் காலத்தைப் போலவே, இன்றும் வெளியே இருந்து உள்ளே செல்பவைதான் மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன என எண்ணும் கூட்டம் இருக்கிறது. எனவேதான், சிலவற்றை உண்ணக்கூடாது, சிலரைப் பார்க்கக்கூடாது, சிலவற்றை அணியக்கூடாது, கட்டடங்கள் எந்தத் திசை நோக்கி இருக்க வேண்டும், எந்தத் திசையில் இருக்கக் கூடாது... எனச் சிந்திக்கின்ற, நம்புகின்ற, போதிக்கின்ற பலரை இன்றும் சந்திக்கிறோம். தொலைக்காட்சி அலைவரிசைகளில் விளம்பரம் செய்யும் அளவுக்கு இத்தகைய மூட நம்பிக்கையாளர்கள் துணிவுடன் இருக்கின்றனர். ஆனால், இயேசுவின் போதனை தெளிவானதாக இருக்கிறது. மனிதரின் உள்ளே இருந்து வெளியே வருபவைதான் மனிதர்களை மாசுபடுத்துகின்றன. குறிப்பாக, பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழி;ப்புரை, செருக்கு, மதிகேடு என பன்னிரண்டு தீமைகளை ஆண்டவர் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இவையே நம்மைத் தீட்டுப்படுத்துகின்றன. பாவத்திற்கு இட்டுச் செல்கின்றன. இவை நமது உள்மனத்தில் குடியிருக்கும் தீமைகள். இவை பற்றி எச்சரிக்கையாய் இருப்போம். பிறர் நம்மைக் கெடுத்துவிடுவார்கள் என்று அஞ்சாமல், நாமே நம்மைப் பாவத்தில் வீழ்த்திவிடாதபடி மன்றாடுவோம். மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களுக்குள்ளே இருந்து எங்களை மாசு படுத்துகின்ற தீமைகளிலிருந்து எங்களைக் காத்தருளும். நாங்கள் எங்களையும், பிறரையும் பாவத்தில் விழச்செய்யாதபடி பாதுகாத்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். --அருள்தந்தை குமார்ராஜா --------------------------------- . ''இயேசு, 'வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் சிந்தனை -- இரண்டாவதாக, தொடக்க காலத் திருச்சபையில் உணவு பற்றிய சர்ச்சை தொடர்ந்தது. யூத சமயத்திலிருந்து மனம் மாறி கிறிஸ்தவத்தைத் தழுவிய சிலர் பழைய உணவுப் பழக்கங்களைக் கைவிடாமல் இருந்ததோடு, பிற இனக் கிறிஸ்தவரும் யூத உணவுப் பழக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என வாதாடினர். எல்லா உணவுகளும் தூயனவே என கி.பி. 50ஆம் ஆண்டளவில் எருசலேமில் நிகழ்ந்த சங்கம் முடிவுசெய்தது (காண்க: திப 10:1-11:18; 15:22-29). ஆக, எந்த உணவை உண்பது எந்த உணவைத் தவிர்ப்பது என்பதன்று முக்கியம். மாறாக, ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் மன மாற்றம் நிகழ வேண்டும் என்பதே முக்கியம். இத்தகைய மன மாற்றம் ஏற்படும்போது தீய சிந்தனையையும் தீய நடத்தையையும் விட்டுவிட்டு அறநெறிக்கு அமைந்த வாழ்வை நடத்த மனிதர் முன்வருவார்கள். இதையே இயேசு அழுத்தமாக அறிவித்தார். மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
''இயேசு 'வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் இயேசுவின் அன்புக்குரியவரே! -- இயேசுவின் இப்போதனை உண்மையிலேயே புரட்சிகரமானது. அக்கால யூத முறைப்படி சில உணவுகள் தீட்டுப்பட்டவை என்றும் வேறு உணவுகள் அனுமதிக்கப்பட்டவை என்றும் கருதப்பட்டதால் தீட்டான உணவை உண்பது சட்டத்தை மீறுவதாகக்க கருதப்பட்டது (காண்க: லேவி 17-26). இது யூதர்களால் (குறிப்பாக பரியேர்களால்) துல்லியமாகக் கடைப்பிடிக்கப்பட்ட சட்டம். இயேசு இச்சட்டத்தைப் புரட்டிப்போடுகிறார். இயேசு கூறியதைக் கேட்ட பரிசேயரும் பிறரும் உண்மையிலேயே பெரும் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். அவர்களுடைய பார்வையில் இயேசு ஒரு புரட்சியாளராகவே தென்பட்டிருப்பார். மனிதரை மாசுபடுத்துவது மனிதருக்குப் புறம்பேயிருந்தோ வெளியேயிருந்தோ வருவதல்ல, மாறாக, மனித உள்ளத்திலிருந்து பிறப்பதே. -- மனித உள்ளத்திலிருந்து வெளிப்படுகின்ற தீமைகளை வரிசைப்படுத்தும்போது பிற மனிதருக்கு எதிராக நிகழ்கின்ற எல்லா தீமைகளுக்கும் ஊற்று மனிதருக்கு உள்ளேயே இருக்கிறது என இயேசுவின் போதனை வழங்கப்பட்டதாக நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார் (காண்க: மாற் 7:21-22). தீய எண்ணம் நம் உள்ளத்தில் உருவாகும்போது அது படிப்படியாகச் செயலாக வெளிப்பட்டுவிடும். சட்டம் என்பது மனிதரின் உள்ளத்தில் மாற்றம் கொணர்வதாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அச்சட்டம் பயனற்றுப் போகும். அதுபோலவே மனிதர் செய்கின்ற செயல்கள் எல்லாம் அவர்ளுடைய உள்ளத்திலிருந்தே புறப்படுகின்றன. எனவே நல்ல செயல்களை மனிதர் புரிய வேண்டும் என்றால் அவர்களுடைய சிந்தனை நல்ல சிந்தனையாக மாற வேண்டும். அவர்களுடைய எண்ணங்கள் நல்ல எண்ணங்களாக உருப்பெற வேண்டும். மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
|