புனிதவாரம் - வியாழன்

மறையுரை பணி. ஜெரால்டு குருஸ்

மறையுரை பணி. அருள்குமார்



முழு வழிபாடு (வார்த்தை மற்றும் ஒலி வடிவில் பெற) இங்கே சொடுக்கவும்

இயேசு - ”குருத்துவம்” மற்றும் ”நற்கருனண” ஏற்படுத்திய நாள்
கடைசி இரா உணவுத் திருப்பலி

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 61:1-3, 6, 8-9

ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும், சீயோனில் அழுவோர்க்கு ஆவன செய்யவும், சாம்பலுக்குப் பதிலாக அழகுமாலை அணிவிக்கவும், புலம்பலுக்குப் பதிலாக மகிழ்ச்சித் தைலத்தை வழங்கவும், நலிவுற்ற நெஞ்சத்திற்குப் பதிலாகப் `புகழ்' என்னும் ஆடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பியுள்ளார். நீங்களோ, ஆண்டவரின் குருக்கள் என்று அழைக்கப்படுவீர்கள்; நம் கடவுளின் திருப்பணியாளர் என்று பெயர் பெறுவீர்கள்;அவர்கள் செயலுக்கு ஏற்ற கைம்மாற்றை உண்மையாகவே வழங்குவேன்; அவர்களுடன் முடிவில்லா உடன்படிக்கை செய்துகொள்வேன்; அவர்கள் வழிமரபினர் பிற இனத்தாரிடையேயும், அவர்கள் வழித்தோன்றல்கள் மக்களினங்கள் நடுவிலும் புகழ் அடைவார்கள்; அவர்களைக் காண்பவர் யாவரும் அவர்களை ஆண்டவரின் ஆசிபெற்ற வழிமரபினர் என ஏற்றுக்கொள்வார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திருப்பாடல் 89: 20-21. 24,26

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.

20 என் ஊழியன் தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் திருத்தைலத்தால் அவனுக்குத் திருப்பொழிவு செய்தேன்.
21 என் கை எப்பொழுதும் அவனோடு இருக்கும்; என் புயம் உண்மையாகவே அவனை வலிமைப்படுத்தும். -பல்லவி

24 என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும் அவனோடு இருக்கும்; என் பெயரால் அவனது வலிமை உயர்த்தப்படும்.
26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 1: 5-8

இயேசு கிறிஸ்துவிடமிருந்து உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென். இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர் பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்! ``அகரமும் னகரமும் நானே'' என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்க என்னை அனுப்பியுள்ளார்.

யோவான் 13:1-15

தவக்காலம் -புனித வாரம் வியாழன்

நற்செய்தி வாசகம்

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15

பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது. இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், ``ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?'' என்று கேட்டார். இயேசு மறுமொழியாக, ``நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்'' என்றார். பேதுரு அவரிடம், ``நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, ``நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை'' என்றார். அப்போது சீமோன் பேதுரு, ``அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்'' என்றார். இயேசு அவரிடம், ``குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மை யாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை'' என்றார். தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் `உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை' என்றார். அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: ``நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் `போதகர்' என்றும் `ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

இறப்புக்கு முன் !

ஆண்டவரின் இராவுணவு விழாவாகிய இன்று நாம் நற்கருணையை ஏற்படுத்திய நாள், குருத்துவப் பணி உண்டாக்கப்பட்ட நாள், பிறரின் காலடிகளைக் கழுவும் அன்புக் கட்டளை தரப்பட்ட நாள் என்னும் முப்பெரும் நிகழ்வுகளைக் கொண்டாடுகிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் "தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார்" என்றும், "தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய்" என்னும் இரு செய்திகளை வாசிக்கிறோம்.

தாம் இறக்கப் போகிறோம் என்பதை உணர்ந்துதான், இயேசு நற்கருணை, குருத்துவம், அன்புக் கட்டளை மூன்றையும் ஏற்படுத்தினார். யாரெல்லாம் தாங்கள் இறக்கப் போகிறோம் என்பதை அறிகிறார்களோ, அவர்கள் தமது இறப்புக்குப் பின்னால் என்ன நடக்கவேண்டும் என்னும் இறுதி விருப்பத்தைத் தெளிவாக அறிவித்துவிடுகிறார்கள். ஆனால், எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லையே.

நம்மில் பெரும்பான்மையோருக்கு நாம் எப்போது இறக்கப் போகிறோம் என்பது தெரியாது. எல்லாருமே சாவு வெகுநாள் கழித்தேதான் வரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல, சாவு எப்போதும் வரலாம், அதை நாம் அறியாமலும் போகலாம். எனவே, இப்போதே நாம் நமது சாவை எண்ணிப் பார்த்து, நமது அன்பை ஆழப்படுத்துவோம். "உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்புகொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்" என்னும் அழகான வரிகள் இயேசுவின் அன்பை எடுத்துரைக்கின்றன. நாமும் நம்மவர்மேல் சிறப்பான அன்பை இப்போதே வெளிப்படுத்துவோமா? நாளைக்கே நாம் இறப்பதாக இருந்தால் எப்படி நம்மவர்மேல் அன்பை வெளிப்படுத்துவோமோ, அப்படி இப்போதே அன்பை வெளிப்படுத்துவோமா! எப்படி நமது அன்புக்குரியவர்களுக்குப் பணிவிடை செய்ய விரும்புகிறோமோ, அதனை இப்போதே செய்வோமா!

நமது இறப்புக்கு முன்னால் நாம் என்னவெல்லாம் செய்ய விரும்புகிறோமோ, அவற்றையெல்லாம் இன்றே செய்தால் என்ன?

மன்றாடுவோம்: சாவுவரை எங்களை அன்புசெய்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். எங்களது உறவினர், நண்பர்கள், குடும்பத்தினர்மீது எங்களுக்குள்ள நிறை அன்பை இப்போதே வெளிப்படுத்த அருள்தாரும். நாங்கள் அன்புசெய்வோரின் காலடிகளைக் கழுவி அவர்களுக்கு இப்போதே பணிவிடை செய்ய எங்களுக்கு வரம் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

ஆண்டவரின் இராவுணவு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

ஆண்டவர் இயேசு நற்கருணை, குருத்துவம், அன்புக் கட்டளை என்னும் மூன்றையும் ஏற்படுத்திய சிறப்பான ஓர் இரவை இன்று கொண்டாடுகிறோம்.

  1. இயேசு தமது தன்மதிப்பை, மாண்பை ஒப்புக்கொடுத்தார்:

மனித ஆளுமையின் இன்னொரு பரிமாணம் தன் மதிப்பு. ஒவ்வொரு மனிதருக்கும் தன்னைப் பற்றிய மதிப்பு, மாண்பு இருக்கிறது. தன்னைப் பிறர் மதிக்க வேண்டும், மாண்புடன் நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அத்துடன், அந்த மாண்பு மீறப்படும்போது வருந்துகிறோம், கோபம் கொள்கிறோம்.

இயேசுவும் தன் மதிப்பு மிக்கவராக இருந்தார். தலைமைக் குருவின் காவலன் அவரைக் கன்னத்தில் அறைந்தபோது, அதைத் தட்டிக்கேட்டார் (யோவா 18:22-23). ஆனாலும், அவர் தன் சீடர்களின் கால்களைக் கழுவ முன் வந்தார். “நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே, ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்” (யோவா 13:14) என்றார். “தம்மைத் தாழ்த்துகிறவர், உயர்த்தப்படுவார்” என்று அவரே மொழிந்ததற்கேற்ப, தன்னை அவர் தாழ்த்திக்கொண்டார். அவருடைய தாழ்ச்சியைப் பவுலடியார் இவ்வாறு புகழ்கிறார்: “சாவை ஏற்குமளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்குமளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்” (பிலி 2:8). ஆகவேதான், கடவுள் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். “அவர் இறைமகனாயிருந்தும் துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்’ (எபி 5:8-9) என்று எபிரேயர் திருமடல் அவரது கீழ்ப்படிதலைப் புகழ்கிறது.

கீழ்ப்படிதலில், தாழ்த்திக் கொள்வதில் நாம் நம் ஆணவத்தை, அகந்தையை, இறுமாப்பை இறைவனுக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இயேசு நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். அவர் அடிமையின் தன்மை பூண்டு, சீடர்களின் கால்களைக் கழுவிய நிகழ்வை நினைவுகூரும் இன்று, நாமும் நம் ஆணவத்தை, பெருமையை, இறுமாப்பை இறைவனுக்கு ஒப்புக்கொடுப்போமாக!

மன்றாடுவோம்: எங்களுக்காக உம்மை முழுதும் ஒப்புக்கொடுத்த இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், இவற்றோடு உமது தன் மதிப்பையும், மாண்பையும்; இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, முற்றிலும் இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்ததுபோல, நாங்களும் முற்றிலும் உமக்கே சொந்தமானவர்களாய் வாழ்வோமாக ! எங்கள் தான்மையை, தன்னலத்தை, அகந்தையை ஒப்புக்கொடுத்து, பிறருக்குப் பணிவிடை செய்து வாழ்வோமாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

---------------------

 

''பின்னர் இயேசு ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி
இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்'' (யோவான் 13:5)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்திருக்கிறார். விருந்து அன்பின் அடையாளம். இயேசு தம்மை முழுவதும் மக்களின் நல்வாழ்வுக்குக் கையளிப்பதற்காக வந்தவர். அவர் தம்மையே உணவாக நமக்கு அளிப்பதன் அடையாளம் அவர் தம் சீடர்களோடு அருந்திய விருந்து. அந்நேரத்தில் இயேசு எதிர்பாராத ஒரு செயலைச் செய்கிறார். இயேசு தம் சீடர்களின் காலடிகளைக் கழுவுகிறார். விருந்தினரைத் தம் வீட்டுக்கு அழைப்பவர் அவர்களை நன்கு உபசரித்து அனுப்புவர். விருந்து என்பது அவர்களிடையே நட்பினை ஆழப்படுத்துகின்ற ஒரு தருணம். நம் நடுவே வருகின்ற விருந்தினருக்குக் கைகால் முகம் கழுவுவதற்கு நாம் தண்ணீர் கொடுப்பதுபோல, யூதரிடையே விருந்தினரின் காலடிகளைக் கழுவும் வழக்கம் இருந்தது. அச்செயலைப் பொதுவாக வேலையாட்கள் செய்வார்கள். இயேசுவோ சீடர் நடுவே ''ஆண்டவர்'', ''போதகர்'' என்னும் நிலையில் இருந்தவர் (யோவான் 13:13). ஆனால் அவர் தம்மை ஒரு வேலையாளுக்கு நிகராக மாற்றிக்கொண்டு, தம் சீடருடைய காலடிகளைக் கழுவித் துடைக்கின்றார். இது சீடர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. வழக்கம்போல பேதுரு இயேசுவிடம் அச்செயலுக்கு விளக்கம் கேட்கிறார். இயேசு தரும் பதில் என்ன?

-- சீடரின் காலடிகளைக் கழுவுகின்ற இயேசு அவர்களை ''இறுதிவரை அன்புசெய்கின்ற'' ஆண்டவர்; அன்பின் முழுமையை அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார். அந்த அன்புப் பலி கல்வாரியில் போய் முடியும். அதே நேரத்தில் இயேசு தம் சீடரின் காலடிகளைக் கழுவுவதன் வழியாகத் தம் சீடர் எவ்வாறு தம்மைப் பின்பற்றி அவ்வாறு ஒருவர் ஒருவருக்கு ஊழியராக மாற வேண்டும் எனவும் அறிவுறுத்துகிறார். பிறருக்குப் பணி செய்வது இயேசுவின் வாழ்க்கைக் குறிக்கோளாக இருந்ததுபோல, அவருடைய சீடர்களும் பணி மனப்பான்மை கொண்டவர்களாக விளங்கவேண்டும். சீடர் குழுவாகிய திருச்சபை தன் ஆண்டவராகிய இயேசுவைப் பின்சென்று உலக மக்களுக்குப் பணிபுரிவதில் ஈடுபடவேண்டும். இயேசுவின் பணி அதிகாரம் செலுத்துகின்ற பாணி அல்ல, மாறாக, பிறருடைய நலனை முதன்மைப்படுத்தி அவர்களுக்காகத் தன்னையே பலியாக்குகின்ற பணி. இதுவே திருச்சபையின் பணியாகவும் இருக்க வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, என் கடன் பணிசெய்து கிடப்பதே என்னும் மனநிலை எங்களில் வளர்ந்திட அருள்தாரும்.

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறுரூhநடடip;.. .."

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

கத்தோலிக்கத் திருச்சபையின் உயிர் நற்கருணை. மனிதனோடு வாழும் இறை இயேசுவின் குறையில்லா இறைப் பிரசன்னம் இவ்வுலகில் நற்கருணை. மனிதனை வாழவைக்கும் உள்ளுயிர் வலுப்பெற, உரமூட்டும் ஆன்மீக உணவு நற்கருணை. மனிதன்வாழ கல்வாரியில் பலியான, பலியாகும் ஒரே பலி நற்கருணை. இறை பிரசன்னமாம், ஆன்ம உணவாம், ஒரே பலியாம் இந் நற்கருணை, இரு இணை பிறியா தன்மைகளைத் தன்னுள்கொண்டது. தெய்வீகமும் மனிதமும்; வழிபாடும் வாழ்வும்; புனிதமும் பாவமும் இவ் இரு இணை பிறியா தன்மைகள். ஆனால்,தெய்வீகம், புனிதம், வழிபாடு இவற்றை நற்கருணையோடு நெருக்கி இணைத்துப் பார்ப்பதில் பரவசமடையும் நாம், மனிதம், பாவம், வாழ்வு இவற்றை நற்கருணையுடன் சேர்த்துப் பார்க்க பிரசவ வேதனைப்படுகிறோம்.

இறைவன் இயேசு இந்த இரண்டினையும் இணைத்துத்தான் நற்கருணையை ஏற்படுத்தினார். நற்கருணை ஒரு இரவில் (பெரிய வியாழன் ) ஏற்படுத்தப்பட்டதல்ல. மாறாக, பெரிய வியாழன், பெரிய வெள்ளி, புனித சனி, உயிர்ப்பு ஞாயிறு இவற்றின் நிகழ்வுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஏற்படுத்தப்பட்டது. மனித பார்வையில் இது பல நாட்களின், பல நிகழ்வுகளாகத் தோன்றலாம்; முன் பின் நிகழ்ச்சியாகலாம்; முக்கியமானது இரண்டாம்தரமானது என்ற எண்ணம் எழலாம்.ஆனால் எல்லாம் ஒரே நிகழ்வு, ஒரே தரம், ஒன்று.

"இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல்". "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை." " எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்று (லூக்22:19-20)நற்கருணையின் ஒரு பக்கத்திற்கு வடிவம் கொடுத்த இயேசு, அதே இரவில், அதே இடத்தில், 'ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன். நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்(யோவா 13:15-16) என்று நற்கருணையின் மறு பக்கத்திற்கும் வடிவம் கொடுத்தார். இதை ஏனோ மங்கலாகப் பார்க்கிறோம்.

இரு நிகழ்வுகளும் " எனது நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" "நான் செய்தது போல நீங்களும் செய்யுங்கள்" என்னும் ஒரே முத்திரையால் பத்திரப்படுத்தப்படுவது இரண்டின் சமநிலைக்கான சமாதானங்கள். அப்பத்தைப் பிட்கும் அன்புச் செயலும், அயலானுக்காக வியர்வை சிந்தி, உடலும் இரத்தமும் சிந்தி சிதைக்கப்படும் பலி வாழ்வும் ஒன்றை ஒன்று தாங்கிச் செல்லும் ஒரே செயலின் இரு பரிமாணங்கள்.

வாழ்வையும் வழிபாட்டையும் இணையுங்கள்.இறைவனையும் மனிதனையும் சேர்த்துப் பாருங்கள். பெரிய வியாழனையும் பெரிய வெள்ளியையும் ஒன்றாகக் காணுங்கள். அதுவே நற்கருணை. உயிர்ப்பின் நிறை வாழ்வு. இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்